Thursday, January 21, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் -3 (முற்றும்)


வெறும் ரேடார்களை மட்டும் நம்பி இருக்கும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்கள், ஏவுகணைகள் தொடுவானப் பகுதியைத் தாண்டிய பின்னரே தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப் பட்ட மையங்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேடார்களை நிறுவி அனைத்தையும் ஒரு வலையமைப்பில் ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் தவறான எச்சரிக்கைகளை ஒரே நேரத்தில் அனைத்து ரேடார்களையும் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில்அனைத்துத் தகவல்களும் தவறானதாக இருந்தால், அது சரியான தகவலாகிவிடும் :D.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஏவுகணைகளின் பயணிக்கும் தூரம் மற்றும் வேகத்தின் காரணத்தினால் ரேடார்கள் கொடுக்கும் தகவல்கள் சுதாரித்துக் கொள்ள மிகக் குறைந்த கால அவகாசத்தையே கொடுக்கிறது. இதனைச் சமாளிக்கத்தான் செயற்கைக்கோள்கள் மூலமாக பூமியைக் கண்காணிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் எந்நேரமும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்துடன் தொடர்பில் இருக்கும். 'பாதுகாப்புப் பணிகளுக்கு இப்பொழுது நாங்கள் செலுத்தியிருக்கும் செயற்கைக்கோள் மிகவும் உபயோகமாக இருக்கும்' என்று சொல்லப்படுபவற்றில் அனேகம் இந்த வேலையைத் தான் செய்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையின் கீழ் பூமியில் எந்த இடத்தில் பெரிதாக வெடிவெடித்து ஒளிப்பிழம்பு தோன்றினாலும் முன்னெச்சரிக்கைத் தகவல் மையத்திற்கு தெரிவிக்கும்.போகி தினத்தன்று நம்மூரில் இருந்து கூட ஏகப்பட்ட எச்சரிக்கைத்தகவல்கள் செல்ல வாய்ப்புண்டு :D. ஏவுகணைகள் ஏவப்படும் போது தோன்றும் மிகப்பெரும் ஒளிப்பிழம்பின் மூலம், ' அது வந்துட்டு இருக்கு.. எல்லாரும் ஓடுங்க..' என்று கூவுவது இந்த செயற்கைக்கோள்கள் தான்.

இதன் காரணமாகத் தான் ஏவுகணைச் சோதனைகள் நடத்தும் நாடுகள் வெளிப்படையாக இந்த நாள், இந்த நேரத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு செய்கிறார்கள். அறிவிக்காமல் சோதனை செய்யும் பட்சத்தில், 'நம்ம வீட்டுக்கு வெடி வச்சிட்டாங்க' என்று எதிரிகள் பதிலடி தாக்குதலில் குமுறி விட வாய்ப்பிருக்கிறது. மேலும் ரகசியமாக செய்யப்படும் அணுகுண்டுச் சோதனைகளும் இத்தகைய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து தப்பும் பொருட்டே பூமி அல்லது கடலுக்குள் அடியில் வெளிச்சம் வராமல் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு இந்தியாவின் போக்ரான் சோதனை ஓர் உதாரணம்.

ஆண்ட்ரோபோவ்

தவறுவது மனித இயல்பு என்பதைப் போல எத்தனை தான் கவனமாக வடிவமைக்கப்பட்டாலும் தொழில்நுட்பங்கள் சமயத்தில் தவறுவது உண்டு. அதற்கு செயற்கைக்கோள்களும் தப்புவதில்லை. உதாரணத்திற்கு 1983ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா புதிய தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் உதவியுடன் புதிய வான் பாதுகாப்பு மையத்தினை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அப்போது அமெரிக்காவுடனான பனிப்போர் உச்சத்திலிருந்த நேரம். எந்த நொடியும் இரண்டு பக்கங்களுமே போருக்குத் தயாராக இருந்தன, ஆயிரணக்கான அணுகுண்டுகளுடன். அப்போதைய சோவியத் தலைவர் ஆண்ட்ரோபோவ் (andropov) ஒரு சுடுதண்ணி :), அதுவும் அமெரிக்கா என்று காதில் சொன்னாலே உடனடி கொதிநிலைக்கும் வரும் திறனை கைவரப்பெற்றவர்.

புதுமனைவிக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போல, மிகச் சிறந்த, நம்பகமான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து புதிய முன்னெச்சரிக்கை மையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதில் ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவும் (lt. col. stanislov petrov) அடக்கம். 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நள்ளிரவில் முன்னெச்சரிக்கை மையத்தில் பணியிலிருந்தார் பெட்ரொவ். அமெரிக்காவிலிருந்து சியோலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தை, ரஷ்யாவின் வான்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்ததாக 269 பேர்களுடன் சுட்டு வீழ்த்தி, அமெரிக்காவை வெறியேற்றிய சம்பவம் நடந்து மூன்று வாரங்களே ஆகியிருந்தது. பனிப்போரின் உஷ்ணம் வரலாற்றில் அதிகமாக இருந்த தருணங்கள். இரண்டு நாடுகளுமே மொத்த அணுஆயுதங்களுடன், போர் மூண்டால் இரண்டு பேருமே அழியும் வண்ணம் (Mutual Assured Destruction - MAD) தயார் நிலையில் இருந்தன. இரண்டு பேருமே அழிந்து போவோம் என்ற பயமே, கடைசி வரை நேரடிப் போர் நிகழாமல் காத்ததென்பது உபதகவல். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பணியிலிருந்த பெட்ரோவுக்கு வந்தது சோதனை. மொத்த எச்சரிக்கை மையமும் ஏவுகணைத் ஏவப்பட்டு விட்டது என்ற எச்சரிக்கை அலற ஆரம்பித்தது. திரையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகக் காட்டியது. திகைத்துப் போன பெட்ரோவ் என்ன செய்வது என்று யோசித்து முடிப்பதற்குள்ளேயே அடுத்தடுத்து புதிய எச்சரிக்கை ஒலிகள் அலறியது. கணினிக்குள் எட்டிப் பார்த்தால் ஒன்று, இரண்டு, மூன்று என்று அடுத்தடுத்து கூடிக்கொண்டே போய் மொத்தம் ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் காண்பித்தது. பெட்ரோவின் பணி இத்தகவலை மேலதிகாரிகளிடம் தெரிவித்து பதில் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதே. ஆனால் பெட்ரோவ் அது தவறான எச்சரிக்கை என்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார். ஏன்?.

சமபலம் பொருந்திய ஒரு நாட்டுடன் அணுஆயுதப் போர் தொடங்க எந்த புத்திசாலியும் வெறும் ஐந்து ஏவுகணைகள் மட்டும் அனுப்பி வைப்பான் என்று பெட்ரோவுக்குத் தோன்றவில்லை. அவர் எதிர்பார்த்தது நூற்றுக்கணக்கில். மேலும் அந்த வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் முற்றிலும் புதிய தொழில்நுட்பம், அதனால் அதன் நம்பகத்தன்மையின்பால் ஏற்பட்ட சந்தேகம். உண்மையிலேயே ஏவுகணைப் புறப்பட்டதாக இருந்தால், எச்சரிக்கைக்குப் பிறகு சில நிமிடங்களில் தொடுவானப் பகுதியைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனாலும் மற்ற ரேடார்கள் எந்த கூச்சலும் போடாமல் அமைதியாக இருந்தன. இவையனைத்துமே பெட்ரோவ் தவறான எச்சரிக்கை என்று முடிவு செய்து கமுக்கமாகிவிட்டதற்குக் காரணம். அந்த கணம் பெட்ரோவ் அம்முடிவை எடுக்காமலிருந்தால் மூன்றாவது உலகப்போர் தொடங்கியிருக்கும். அணுகுண்டுகளால் அனேக நாடுகள் குளியலாடியிருக்கும். காரணம் அந்த சூழ்நிலையில் போருக்குத் தயாராக இருந்தது மற்றும் ஆண்ட்ரோபோவின் மனநிலை, சட்டதிட்டங்கள் படி பதிலடி குறித்து முடிவெடுக்க அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம், செய்தி கிடைத்த பிறகு 2 நிமிடங்கள் மட்டுமே.

ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவ்

பின்னாளில் இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காததால் கடும் ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெட்ரோவ், மனமுடைந்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். விசாரணையில் சூரியனின் ஒளிக்கற்றைகள் அடர்த்தியான மேகக்கூட்டங்களால் பிரதிபலிக்கப்பட்டதில் செயற்கைக்கோளின் கண்கள் கூசிப்போன விஷயம் தெரியவந்தது. 1990 களில் பெட்ரோவின் மேலதிகாரி ஓய்வு பெற்ற பின், பாரம்பரிய வழக்கப்படி தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்ட பின்னரே வெளியுலகிற்கு இச்சம்பவம் தெரிந்தது. பெட்ரோவை அமெரிக்காவும், ஐரோப்பாவும் கொண்டாடின. ரஷ்யாவுக்குத் தன் தொழிநுட்பத் தவறுகள் குறித்து வெளிக்காட்டிக் கொள்ள முடியாத மானப்பிரச்சினை, முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபையில் விருதளித்து கவுரவிக்கப் பட்டார் பெட்ரோவ். வரலாற்றில் மிகப்பெரிய அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம் தள்ளாடிய தருணமாக இச்சம்பவம் நினைவுகூறப்படுகிறது.

தொழில்நுட்பத் தவறுகளால் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து இருந்தாலும், வான் பாதுகாப்பு மையத்தில் இருக்கும் பிரச்சினைகள், பணிபுரிபவர்களின் வேலைப் பளு மற்றும் மன அழுத்தம் குறித்த புரிதலுக்காகவே இப்பகிர்வு. வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்களை அமைப்பதென்பது தொழில்நுட்பத்துக்கு மட்டுமன்றி, பணப்பைக்குமே கொஞ்சம் சவாலான விஷயம் தான். சட்டைப்பையில் காசில்லை என்றாலும் கடன் வாங்கியாவது பந்தா காட்டும் மைனர்களைப் போல, மக்களுக்கு சாப்பிட ரொட்டியில்லையென்றாலும் நான்கு நாடுகளுடன் முறுக்கிக் கொண்டு 'நானும் ரவுடி தான்' என்று பாதுகாப்புக்கு பொருளாதாரத்தை வாரியிறைப்பது மட்டும் என்றும் மாறாமல் தொடர்கிறது என்ற தகவலுடன் இத்தொடர் நிறைவடைகிறது.

பின்னூட்டங்களாலும், வாக்குகளாலும் ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சுடுதண்ணி விடைபெறுகிறது.



Wednesday, January 20, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 2


சாலையில் நிற்கும் போது அதிவேகமாக ஒரு வாகனம் கடந்தாலே சட்டை படபடக்கும், நெஞ்சு திடுதிடுக்கும், தூசி வாரியடிக்கும். சுமார் மணிக்கு 150000 மைல் வேகத்தில் ஒரு ஏவுகணை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் எப்படி இருக்கும்?. அந்த நேரத்தில் செயல்படுவதா, வியர்வையைத் துடைப்பதா என்று யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடும்.

வான் பாதுகாப்புப் பணியில் உள்ள சவாலே, தாக்குதலின் அதிவேகம் தான். அதிவேக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் 5000 முதல் 10000 கிலோ மீட்டர் வரை 15000 மைல் வேகத்தில் ஆயிரம் கிலோ எடையுடன் பயணிக்கும் அசுரபலம் பெற்றது. கிட்டத்தட்ட பூமிப்பந்தின் சரிபாதியை ஒரு மணிக்குள், ஒலியை விட ஐந்து ம்டங்கு அதிகான வேகத்தில் கடக்கும் ஒரு வஸ்துவைச் சமாளிப்பது தான் குறிக்கோள். ஒரு நாடு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தவுடன் அதன் திறன்களை, பெருமைகளை முரசறிவிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு கிலியேற்படுத்ததான் இந்த ஏற்பாடு. இவ்வாறு அறிவித்தவுடன் அதன் எதிரி நாடுகள் உடனே ஒரு காகிதம், எழுதுகோலோடு சம்மணமிட்டு வீட்டுப்பாடம் செய்யும் குழந்தையைப் போல கணக்குப் போட ஆரம்பிப்பார்கள். என்ன கணக்கு?. அந்த ஏவுகணையால் நம் நாட்டில் இருக்கும் முக்கியமான இடங்களில் அடிவாங்க எவ்வளவு நேரமாகும் என்று தான்.

ஒரு உதாரணக் கணக்கு. இஸ்லாமாபாத்திலிருந்து மும்பைக்கு எப்படி கணக்கிடுவார்கள் என்று பார்ப்போம். முதலில் இரண்டு நகரங்களின் அகலாங்கு, நெட்டாங்கு (latitude & longitude) விவரங்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். இஸ்லாமாபாத் (33.6° N 73.1° E), மும்பை (18°55'N, 72°50'E). இந்த இரண்டு அகலாங்கு, நெட்டாங்குகளுக்கிடையே உள்ள தூரத்தினைக் கணக்கிட ஒரு சூத்திரம் (formula) இருக்கிறதென்றாலும், உற்றுப்பார்த்தால் தலைவலிக்கும் வாய்ப்பிருப்பதால் மக்கள் நலன் கருதி தவிர்க்கப்படுகிறது. தெரிந்து கொள்ள விருப்பம் மற்றும் துணிந்த மனமுள்ள அன்பர்கள் பின்னூட்டத்தில் தெரிக்கவும். இதற்கென்று கணினியில் நிரல் எழுதி வைத்திருப்பார்கள். உ.தா. http://www.nhc.noaa.gov/gccalc.shtml

மேலுள்ள சுட்டியின் பக்கத்திற்கு சென்று அகலாங்கு நெட்டாங்கு விவரங்களை அளித்தால் தூரத்தைக் கணக்கிடலாம். நாம் தேர்ந்தெடுத்த நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 851 வான்மைல்கள் (nautical miles). நிமிடத்திற்கு 140 வான்மைல்கள் பயணிக்கும் பாகிஸ்தானின் ஷாகின் வகை ஏவுகணைகளைக் கணக்கில் கொண்டால் 6 அல்லது 7 நிமிடங்களில் பத்திரமாக மும்பையில் தரையிறங்க வாய்ப்புகள் அதிகம். புள்ளிவிவரங்களின் படி பாகிஸ்தானிடம் பலவகை ஏவுகணைகள் இருந்தாலும், விமர்சகர்கள் பார்வையில் அவர்களிடம் உள்ளது இரண்டே வகைதான் என்பது கிளைக்கதை. ஒன்று சைனா பொங்கல் சீராகக் கொடுத்தது மற்றது வடகொரியாவில் தலைத்தீபாவளிக்கு வாங்கியது.

இவ்வாறு ஏவுகணைகள் அனுப்பும் போது எதிர்-ஏவுகணைகள் மூலம் வானிலேயே வானவேடிக்கை நிகழ்த்தப்படும் வாய்ப்பிருப்பதால் எப்போதுமே இவை சிங்கம் போல் தனித்து வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை. கூட்டமாக அனுப்பப்படுவதே வழக்கம். அதில் ஒன்று அல்லது இரண்டைத் தவிர மற்றதெல்லாம் புஸ்வாணமாக இருக்கும். இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசங்களை உணர்ந்து குறிபார்த்து அடிக்கும் கடமை வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்தின் பொறுப்பு. எப்படி கண்டுப்பிடிக்கிறார்கள்?. புஸ்வாண ஏவுகணைகள் (decoys) காற்று வெளியில் பயணிக்கும் போது உண்மையான ஏவுகணைகளை விட விரைவில் வெப்பம் குறைந்து விடும். அதனால் ரேடார் வானலைகளின் பிரதிபலிப்பில் ஏற்படும் வித்தியாசங்களை வைத்து புஸ்வாணங்களைத் தவிர்த்துவிட்டு எதிர் தாக்குதல் நடக்கும்.

இத்தனை பிரயத்தனப்பட்டு வான்பரப்புப் பாதுகாக்கப் பட்டாலும், நாடு முழுமைக்குமான பாதுகாப்பு இதுவரை எந்த நாட்டுக்கும் இல்லை. அமெரிக்கா மட்டும் அதற்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தாக்குதல் நடக்கும் சமயத்தில் அத்தனைத் தொழில்நுட்பங்களும் துருப்பிடித்து விடாமல் சரியாக செயல்பட வேண்டியது அதிமுக்கியம். அதற்காக இந்தியா போன்ற கைப்புள்ளைகள் அவ்வப்போது போர்ப்பயிற்சியிலும், அமெரிக்கா போன்ற மைனர் குஞ்சுகள் அவ்வப்போது தீவிரவாதம் அடக்கி, அமைதி பரப்பும் காரணம் காட்டி நேரடியாகப் போரிலும் ஈடுபடுவது வழக்கம் :).

வான் பாதுகாப்பு மையங்களுக்கும் சில குறைகள் உள்ளன. அரிதாக சில சமயங்களில் சூரியனோ, சந்திரனோ சரியாக ரேடாரின் நேர்க்கோட்டில் வரும்போது, மேகக்கூட்டங்களும் இருந்து அதிகமான ஒளியை ரேடாரை நோக்கி செலுத்தும் வண்ணம் சந்தர்ப்பங்கள் நேரலாம் (false alarm). இங்கு பணியில் இருப்போர் எச்சரிக்கைத் தகவல் கிடைத்ததும், வகுப்பில் தூங்குபவனை எழுப்பிய மறுவினாடி சிலிர்த்துக் கொண்டு வாத்தியாரைக் கவனிப்பது போல், உடனே பதில் தாக்குதலுக்குத் தயாராகி விடக் கூடாது. எச்சரிக்கைத் தகவல் உண்மை தானா, அல்லது பிழையான எச்சரிக்கையா என்றெல்லாம் ஆராய்ந்து விட்டே அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்.

இவ்வாறு பிழையான எச்சரிக்கையினை எவ்வாறு தவிர்க்கிறார்கள்?, இந்த பிழையான எச்சரிக்கை எவ்வளவு ஆபத்தானது ஆகியவை குறித்து விரிவாக இறுதிப் பகுதியில் காண்போம்.

Tuesday, January 19, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 1


மனதுக்கு இதமாக இரவு நேரங்களில் மொட்டை மாடியில் விண்மீன்களும், நிலாச்சோறும் ரசித்திருப்பீர்கள். பகலில் 'நீலவான ஓடையிலோ' அல்லது 'வானம் எனக்கு போதிமரமோ' முணுமுணுத்துக் கொண்டு மேகங்களை வெறித்திருப்பீர்கள். இது போன்ற சுகமான விஷயங்களை மறந்து 24 மணி நேரமும் ஆபத்தை எதிர்பார்த்து ஒரு கூட்டம் கொட்டாவி விடக் கூட மறந்து வானத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும். அவர்கள் யார்?, பயன்படுத்தும் தொழிநுட்பம் என்ன? அதில் உள்ள சவால்கள் குறித்து ஒரு பார்வை.

வான் பாதுகாப்பு என்பது ரேடார் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை வாடகை மிதிவண்டியில் ஊர்சுற்றுவதைப் போல போர் விமானங்களில் பறந்து திரிவது மூலமாகவே நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விமானத்தாக்குதல்கள் தந்த அனுபவத்தினாலும், தனது ஏவுகணைத் தொழில்நுட்பங்களால் தூக்கத்தைக் கெடுத்த ஜெர்மனியாலும் ரேடார் தொழில்நுட்பம் துரிதமாக மேம்படுத்தப்பட்டது. வான் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ரேடார்கள் தேடுவது அதிவேகமாக பயணிக்கும் ஆபத்தான ஏவுகணைகளை. ஏவுகணைகள் என்பது ராக்கெட் தொழிநுட்பத்தின் மூலம் வெடிகுண்டுகளை குறிப்பட்ட இடத்தை நோக்கி ஏவி விடுவது. செயற்கைக்கோள் ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கும் இதற்கும் மிகச்சில வித்தியாசங்கள் மட்டுமே. முன்னது புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்லும் (escape velocity), பின்னது செல்லாது. அந்த வெடிகுண்டுகள் என்பது பச்சைச் சணலில் சுற்றிய மான் மார்க் பட்டாசுகள் முதல் ஆயிரம் கிலோ உள்ள நிஜ அணுகுண்டாகவும் இருக்கலாம். ஏவுகணைகள் தாங்கிச் செல்லும் எடை, பயணிக்கும் தூரம், வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பலவகைப் படும். அவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்தது தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM - Inter continental Ballistic Missile).

இந்த வகை ஏவுகணைகள் தொடுவானப் பகுதியிலிருந்து (horizon) மேலுழும்பிய பிறகு தான் ரேடார் கண்களுக்குத் தட்டுப்படும். அதன் பிறகு நமக்குக் கொடுக்கப்படும் நேரம் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்குள் தாக்குதல் நடக்கும் நாட்டிற்குப் பதில் தாக்குதல் நடத்துவதும், அதனை முறியடிக்கும் எதிர்-ஏவுகணைகளை ஏவுவதும் அல்லது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் சொல்லுவதும் நேயர் விருப்பம். மேற்கண்ட சமாச்சாரங்கள் நடக்கும் இடம் தான் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் (air defense early warning system). முன்னெச்சரிக்கை மையத்தில் 24 மணி நேரமும் ரேடார் வல்லுநர்கள், கட்டுப்பாடு அறை அதிகாரிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலையில் இருப்பார்கள். ரேடார் மூலம் பெறப்படும் வானலைகளைக் காட்சிப் படுத்தும் கணினிகளும், உயர் அலைவரிசை ரேடியோக்களும், நாட்டின் தலைவரோ அல்லது ராணுவத் தளபதியோ எவருக்கு தாக்குதல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறதோ அவருக்கு ஒரு நேரடி இணைப்புக் கொண்ட தொலைபேசியும், மற்ற விமானப்படை மையங்களுக்கு தொடர்புகொள்ளும் வசதிகளும் இருக்கும். பணக்கார நாடுகள் அல்லது எதிரிகள் அதிகமுள்ள நாடுகள் (உ.தா. அமெரிக்கா) ரேடார்களோடு செயற்கைக்கோள்கள் மூலம் மொத்த பூமியையும் எங்காவது வெடி வைக்கிறார்களா என்று உற்றுப் பார்த்து கொண்டிருப்பார்கள்.

இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும்.இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (போர் விமானங்கள்/ஏவுகணைகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது, இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இவற்றை ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்தித் தருவது கணினிகள் மற்றும் மென்பொருட்களின் வேலை.

சரி, ஏவுகணை வருகிறது என்ன செய்வது?. எதிர்-ஏவுகணை (anti ballistic missile) தொழில்நுட்பம் கைவசம் இருந்தால் (உதா. பேட்ரியாட், பிரித்வி) அவற்றை உபயோகப்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பம் கைவரப்பெற்ற நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சைனா, இந்தியா) உலகில் ஐந்து மட்டுமே. மற்றவர்கள் வசதிக்கேற்ப விலைக்கு வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. தாக்க வரும் ஏவுகணையின் அகலாங்கு, நெட்டாங்கு கிடைத்தவுடன், எதிர்-ஏவுகணை ஏவுதளங்களின் அகலாங்கு நெட்டாங்கு மூலம் இரண்டுக்கும் இடையேயான தொலைவு வான்மைல்களில் (nautical miles) கணக்கிடப்பட்டு அவற்றின் பயணப்பாதையில் குறுக்கிடுவதற்கேற்ப எதிர்-ஏவுகணைகள் ஏவப்படவேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, மேற்படி வேலைகள் அனைத்தையும் மிகச் சொற்ப நிமிடங்களில் செய்து முடித்தாக வேண்டும். இத்தகைய தாக்குதலுக்கு இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று தாக்கப்பட்டதற்குப் பின் பதில் தாக்குதல் நடத்துவது அல்லது முன்னெச்சரிக்கைத் தகவல் கிடைத்தவும் தாக்கத் தொடங்குவது (launch on warning and launch on attack).

அணுஆயுதங்கள் இருக்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் முன்னெச்சரிக்கை தகவல் மையங்கள் மிகமிக விழிப்புடன் இருக்கும். அவற்றுக்கு இடையே தாக்குதல் மூண்டால் எதிரியின் ஏவுகணை நம் வீட்டில் இறங்கும் முன் நமது ஏவுகணைப் புறப்படும் வண்ணம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். நாமில்லா விட்டால் எதிரியும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த ஏற்பாடு (Mutual Assured Destruction - MAD).

எந்தெந்த நாடுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கைத் தகவல் மையம் தேவைப்படுகிறது?. கூடவே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு முக்கிய நகரங்களுக்குள் உல்லாச படகுச் சவாரியில் ஆயுததாரிகளை அனுப்பி வைக்கும் அண்டை நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தோடு இருந்தால் அவசியம் தேவை. அவர்கள் அணுஆயுத பலம் பெற்றிருப்பின் கூடுதல் சிறப்பு. இவ்வளவு வசதிகளும் செய்து கண்காணித்தாலும், வான்பகுதி உண்மையாகவே பாதுகாப்பாக இருக்கிறதா ?. இந்த தொழில்நுட்ப வசதிகளின் நம்பகத்தன்மை என்ன? இவை குறித்து அடுத்த பகுதியில்.

Thursday, January 14, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் - டிரான்ஸ்போர்ட் லேயர்


தலைப்பில் 'சுவாரஸ்யம்' என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர இது கொஞ்சம் மண்டை காயும் பதிவு (நன்றி: புதுவை சிவா & எப்பூடி) , பொருத்தருளவும் :). இணையத்தின் தகவல்தொடர்புக்கு என்று சில சட்ட திட்டங்கள் உள்ளன(TCP/IP - Transmission control protocol/Internet protocol). இவை வழக்கம் போல அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தால்(DOD - Department of Defense) வடிவமைக்கப்பட்டு பின்னர் இணையத்திற்கும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டதிட்டங்கள் ஏன், எதற்கு ?. கண்டமேனிக்கு ஆளுக்கொரு விதமா இணையத்தில் தகவல்தொடர்பு வைத்துக்கொண்டால் எப்படி இருக்கும் ?. 100 அல்லது 110 கோடி இந்தியர்களும் ஆளுக்கொரு மொழியில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஒருத்தர் மூஞ்சியில் ஒருத்தர் தார் பூசி ஹோலி விளையாடிவிட்டு, தண்டவாளத்தில் தலைவைத்து ஓய்வெடுக்க வேண்டி வரும் :). தகவல்தொடர்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்காது, மேலும் ஒரு பொதுவான முறை அனைவருக்கும் இருந்தால் மேம்படுத்துதல் மற்றும் தனிநபர் பயன்கள் அதிகரிக்கும். அதற்காகத் தான் TCP/IP கட்டமைக்கப்பட்டன. இந்த TCP/IP வலைத்தொடர்பை நான்கு பகுதிகளாக (layers) பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன வழிமுறைகள் (protocols) பின்பற்ற வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தும் எல்லாருமே ஒவ்வொரு நொடியும் நமக்குத் தெரியாமலேயே இந்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் வலைத்தளங்கள், மின்னஞ்சல், வலையரட்டை ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்கிறோம்.

அந்த நாலு பகுதிகள் என்னென்ன? application, transport, internet மற்றும் network interface. அந்த நாலு பகுதிகளில் டிரான்ஸ்போர்ட் லேயர் குறித்து மட்டுமே இப்பகுதியில் பார்க்கப் போகிறோம். கொட்டாவி விடாமல் படித்து முடிக்கும் அன்பர்கள் மற்ற பகுதிகள் குறித்தும் அறிய விருப்பப்பட்டுப் பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்ச்சி :). 'அந்த நாலுல முதலும் இல்லாம, கடைசியும் இல்லாம நடுவுல இருக்குற டிரான்ஸ்போர்ட் லேயருக்கு மட்டும் அப்படி ஏன் 'முக்கிய'த்துவம் கொடுத்து தெரிஞ்சிக்கப்போறாம்' என்று உங்களுக்கு இந்நேரம் தோன்றியிருந்தால் சிறப்பு.

உதாரணத்திற்கு உங்கள் அலுவலகத்தில் 100 கணினிகள் கொண்ட வலையமைப்பில் நீங்கள் ஒரு கணினியில் இருந்து கொண்டு ஒரு வலைப்பக்கத்தை உலாவியில் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எப்படி சரியாக உங்கள் கணினி இணையத்தின் மூலம் வலைத்தளத்தின் சர்வரைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்று உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது?, டிரான்ஸ்போர்ட் லேயர் தான் காரணம். நீங்கள் பயன்படுத்தும் உலாவியில் (application) இருந்து வரும் தகவல்களை segment எனப்படும் தகவல்பகுதிகளாக மாற்றி, வலைத்தொடர்புக்கு அனுப்பிவைப்பது டிரான்ஸ்போர்ட் லேயர் தான். அதாவது வலைத்தொடர்பு என்ற கடலுக்குள் உங்கள் காகிதக் கப்பலை கைநீட்டி மிதக்கவிடும் போது கடைசிப்பிடியில் இருக்கும் இரண்டு விரல்கள் போன்றது டிரான்ஸ்போர்ட் லேயர், அதனாலே தான் டிரான்ஸ்போர்ட் லேயரில் செய்யப்படும் சங்கேதக் குறியீடு மாற்று முறைகள் (encryption) முக்கியத்துவம் பெறுகின்றன. இணையத்தில் மிக பாதுகாப்பான வலைத்தொடர்பு முறையாகக் கருதப்படும் HTTPS இணைப்புகள் சங்கேதக் குறியீடு மாற்றுக்கு (encryption stage) தேர்ந்தெடுத்த பகுதி என்ற பெருமை டிரான்ஸ்போர்ட் லேயருக்கு உண்டு.

சரி டிரான்ஸ்போர்ட் லேயருக்குள் என்ன நடக்கிறது?. உங்கள் உலாவியின் மூலம் நீங்கள் உள்ளிடும் தகவல்களை தகவல்பகுதிகளாக (segments) மாற்றுகிறது. அதன் தலைப்பகுதியில் (header) அனுப்புநர் மற்றும் பெறுநரின் வலையிணைப்பு எண்கள் (ip addresses), வலையமைப்பு புள்ளி எண் (port number) ஆகியவற்றை இணைத்து வலைத்தொடர்பில் அனுப்பி வைக்கும். இந்த வலையமைப்புப் புள்ளி எண் மூலமாகவே சரியாக உங்கள் கணினிக்கு நீங்கள் பயன்படுத்து மென்பொருளுக்கு தகவல் வந்து சேர்கிறது. பதில் தகவல் வந்து சேரும் போதும் சரிபார்த்து முழுமையாக இருந்தால், சரியாகக் கிடைத்து விட்டது என்ற தகவலை அனுப்பியவருக்கு அனுப்பி விட்டு, கிடைத்த தகவல்பகுதிகளைத் முழுத்தகவலாக மீள்கட்டமைப்பு செய்து உங்கள் உலாவி/மென்பொருளுக்குத் தருகிறது. தகவல் முழுமையாகப் பெறப்படாவிட்டால் தானாகவே மீண்டும் தகவல் அனுப்பச்சொல்லி வேண்டுகோள் விடுத்துத் திரும்பப் பெறுவதும் (ARR - automatic repeat request), கிடைக்கப்பெறும் தகவல் பகுதிகளை சரியாக வரிசைப்படுத்தி தருவதும் டிரான்ஸ்போர்ட் லேயரின் வேலை.

மேலே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளுக்குப் (protocol) பெயர் Transmission control protocol(tcp), இதுவே பெரும்பாலானப் பொதுப் பயன்பாட்டுக்குப் பின்பற்றப் படுகின்றன. டிரான்ஸ்போர்ட் லேயருக்கென்று வேறு பல வழிமுறைகளும் உள்ளன (eg: UDP, DCCP.. etc), அவை நாம் பயன்படுத்தும் மென்பொருளின் தேவைக்கேற்பவும், தகவல்களின் பயன்பாட்டுக்கேற்பவும் மாறுபடும்.

ஓரளவிற்குப் புரியும்படி விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன். பொறுமையுடன் இறுதி வரைப் படித்த நண்பர்களுக்கும், தலைப்பைப் பார்த்து திறந்து பார்க்காமலே பறந்து சென்ற சிட்டுக்குருவிகளுக்கும், படம் மட்டும் பார்க்கும் பொருட்டு வருகை தந்த அன்பர்களுக்கும் மனமார்ந்த பொங்கள் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் சுடுதண்ணி பேருவகைக் கொள்கிறது. மிகச் சாதரணமாகி விட்ட இணையப் பயன்பாட்டில் ஒவ்வொரு அசைவிலும் இது போன்ற எண்ணற்ற தொழில்நுட்பங்கள் திரைமறைவில் நமக்காகத் தலைதெறிக்க ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றன என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றினால் அதுவே இப்பதிவின் நோக்கம்.

கல்லூரி நாட்களில் வகுப்பறையின் கடைசி வரிசையில் அலப்பறை செய்து, பரீட்சை நேரத்தில் கையறு நிலையில் தவித்த போது தனது புத்தகத்தின் மூலம் ஞானப்பால் புகட்டிக் காப்பாற்றிய ஆண்ட்ரூ டனன்பாம் அவர்களுக்கு இப்பதிவை சமர்ப்பித்து, தனது நன்றிக்கடனை அடைத்தத் திருப்தியோடு சுடுதண்ணி இப்பதிவை நிறைவு செய்கிறது.




Monday, January 11, 2010

இணையத்தில் பணப்பறிமாற்றம் : ஒரு பார்வை


இணையத்தில் அனேக நண்பர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கடன் அட்டை மூலமாகவோ அல்லது உங்கள் வங்கியின் இணையத்தளத்தின் மூலமாக பணப்பறிமாற்றம் சம்ப்ந்தப்பட்ட விஷயங்களுக்கு அறிமுகமாயிருப்பீர்கள். எதையும் ஏன், எப்படி என்று ஆராயும் அன்பர்கள் HTTPS குறித்தும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த HTTS குறித்து இப்பதிவில் காண்போம்.

வரலாறு மிகவும் முக்கியமென்பதால் HTTPSக்கு முன்பு என்ன நடந்தது என்று முதலில் தெரிந்து கொள்வோம். இணையத்தொடர்பில் பறிமாற்றப்படும் தகவல்கள் கிட்டத்தட்ட தொலைபேசியில் இருவர் பேசிக் கொள்வது போலத் தான். குசும்புக்காரர்கள் கொக்கிப் போட்டு ஜோதியில் ஐக்கியமாக முடியும் என்பது கூடுதல் தகவல். இப்படி ஐக்கியமாகும் தோழர்கள் என்னென்ன செய்ய முடியும்?, ஒட்டுக்கேட்கலாம், இடைமறிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் உயிர் போகும் நிலைமை, அவசர உதவி தேவை என்று உங்கள் நண்பருக்கு தொலைபேசியில் அழைக்கிறீர்கள். அந்நேரம் ஒரு பலகுரல் மன்னன் உங்கள் தொடர்பிணைப்பை இடைமறித்து உங்கள் நண்பருக்கு 'உண்ணாவிரதம் இருந்துட்டேன், எல்லாம் சரியாயிருச்சு' என்று உங்கள் குரலிலும், உங்களிடம் ' ஹலோ.....ஹலோ.. ஒண்ணும் கேக்கல ஹலோ...' என்றும் உங்கள் நண்பர் குரலிலும் பேசி பல்லாங்குழி ஆடலாம்.

இவ்வாறு இடைமறித்து நாம் சரியான இடத்தோடு தான் தொடர்பில் இருக்கிறோம் என்று எப்படி நம்ப வைக்கிறார்கள்?. பொதுவாக இணையத்தில் பறிமாற்றிக்கொள்ளப்படும் தகவல்களனைத்துமே சங்கேதக்குறியீடுகளாக மாற்றப்பட்டே அனுப்பபடுகின்றன. இதற்குப் பெயர் public key encryption. பயனாளருக்கு, தொடர்பு கொள்ளும் சர்வருக்கும் தனித்தனியே public key ஒன்று வழங்கப்படும். ஒருவருக்கொருவர் அறிவித்துக் கொண்டாலோழிய ஒருவரின் public key இன்னொருவருக்குத் தெரியாது. ஒருவரின் தகவல்கள் அவர்தம் public key மூலமாகவே சங்கேதக் குறியீடுகளாக மாற்றி அனுப்படுகின்றன. உங்கள் public key தெரியாமல், அதில் உள்ள தகவல்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. பின் எப்படி தொடர்பு சாத்தியப்படுகிறது ? முதல் தொடர்பில் (hand shaking) பயனாளரும், சர்வரும் தங்கள் public key விவரங்களைப் பறிமாறிக் கொள்வது வழக்கம். இடைமறிக்கும் நபர்களுக்கு இந்த முதல் தொடர்பு தான் புதையல், அதை நோக்கித் தான் செயல்படுவார்கள். அதில் வெற்றி பெற்றால் தங்களின் public key விவரங்களை இணைத்து பயனாளரிடமிருந்து வருவது போல் சர்வருக்கும், சர்வரிடமிருந்து வருவது போல் பயனாளருக்கும் அனுப்பி வைத்து விட்டால், சர்வமும் அவர்கள் கையில் உங்களின் அதிமுக்கியத் தகவல்கள் உட்பட.

இப்பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?. பிரச்சினை என்று வரும்போது மூன்றாவது நபரின் பஞ்சாயத்து அவசியம் என்ற பாரம்பரிய முறைப்படி சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. HTTPல் (port 80) இருந்து HTTPSக்கு (secured http, port 443) தகவல் பரிமாற்றம் மாற்றப்பட்டது. HTTPS எப்படி செயல்படுகிறது?, முக்கியத் தகவல் பறிமாற்றம் நடக்கும் ஒவ்வொரு சர்வருக்கும் SSL அல்லது TLS சான்றிதழ் வழங்கப்பட்டது (secured sockets layer/transport layer security). முதல் தகவல் தொடர்பில் (handshaking) public key தகவலுடன் சான்றிதழ்களும் அனுப்பப்பட்டன. சான்றிதழ்களில் கண்ணாமூச்சி ஆட்டங்கள் நடைபெறாமல் இருக்க மூன்றாவது தரப்பு நியமிக்கப்பட்டது (certificate authorities, eg: verisign,microsft etc..). இந்த மூன்றாவது தரப்பு, சான்றிதழ்களின் நம்பகத்தன்மையினை, அதாவது நீங்கள் தொடர்பு கொள்ளும் சர்வருடையது தானா?, காலாவதியானதா இல்லையா போன்ற விஷயங்களை உறுதிபடுத்தி நீங்கள் பயன்படுத்தும் உலாவிக்குத் (browser) தெரிவிப்பார்கள். எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் உலாவியின் முகவரிப் பட்டை (address bar) மஞ்சள் வண்ணத்துக்கு மாறும், ஒரு பூட்டுச் சின்னத்தின் தரிசனமும் கிடைக்கப் பெறலாம்.

அவ்வாறு இல்லாமல் ஏதாவது பிரச்சினை இருப்பின் உங்கள் உலாவி எச்சரிக்கைப் படிவத்தைக் காட்டும். அதன்பின் நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ். அந்த சான்றிதழை அனுமதிப்பதும், அனுமதிக்காததும் உங்கள் விருப்பம். சில நண்பர்கள் நம்பகமான தளங்களைப் பயன்படுத்தும் போதும் உலாவியில் எச்சரிக்கைப் படிவம் கிடைக்கப் பெறலாம். அது போன்ற சூழ்நிலைகளில் சான்றிதழ் எந்த தளத்திலிருந்து அனுப்பப்படுகிறது என்பதனை உறுதி செய்து கொண்டு பின் அனுமதிக்கவும். உதாரணத்திற்கு www.somesite.com உடன் தொடர்பில் இருக்கும் போது www.someshit.com ல் இருந்து வரும் சான்றிதழுக்கு அனுமதி வழங்காதிருத்தல் சிறப்பு.

ஓரளவு உங்களுக்கு HTTPS எப்படி செயல்படுகிறது என்ற விவரம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். Transport layer குறித்து விரிவாக விவரித்தால் கொட்டாவி விரியும் வாய்ப்புள்ளதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது. விருப்பமுள்ள அன்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தனிப்பதிவிட ஆவலாக உள்ளதை சுடுதண்ணி பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறது.அடுத்த முறை பணப்பறிமாற்றம் குறித்தப் பக்கங்களில் இருக்கும் போது உலாவியின் முகவரிப் பட்டையில் இருக்கும் HTTPS, மஞ்சள் வண்ணம் மற்றும் பூட்டுச் சின்னம் ஆகியவற்றைப் பார்க்கும் போது புரிதல் கலந்த திருப்தி ஏற்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடையப்படும் என்பதனைத் தெரிவித்து இப்பதிவு நிறைவடைகிறது.


Tuesday, January 5, 2010

இணையமும், பதிவுத் திருட்டுக்களும் - 2 (முற்றும்)



திருடப்பட்ட படைப்புகளை நீக்க விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்து, உங்கள் முகத்தின் முன் கொக்கரித்தால் என்ன செய்வது?. பிண்ணனியில் ஒரு கொள்கை விளக்கப் பாடலை ஒலிக்க விட்டுக்கொண்டு ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன வகையான ஆதாரங்கள், அவற்றை எப்படித் திரட்டுவது என்பது குறித்து விரிவாக இப்பகுதியில் காண்போம்.

இணையத்தில் ஒரு படைப்பின் உரிமையை யார் முதலில் வெளியிடுகிறார்கள் என்பதை வைத்துத் தான் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே உங்கள் படைப்பு வெளியிடப்பட்ட நேரம், திருடப்பட்டப் பதிவு வெளியிடப்பட்ட நேரம், உரல்கள், நீங்கள் வேண்டுகோள் வைத்த மின்னஞ்சல், அதற்கு கிடைத்த பதில் என்று உங்கள் படைப்பே முதலில் வெளியானது என்பதற்குச் சான்றாக எதெல்லாம் கையில் சிக்குகிறதோ அவற்றையெல்லாம் தொகுக்கவும். தேவைப்பட்டால் திரைக்காட்சியைப் பதிவு செய்து கொள்வது நலம் (screenshot).

இப்பொழுது ஆதாரங்கள் தயார். அடுத்து என்ன செய்வது ?. கொஞ்சம் கொஞ்சமாக பணிய வைக்க வேண்டும் என்று நிதானமாக யோசிப்போர், முதலில் திரட்டிகள், திருடப்பட்ட படைப்பைக் கொண்டிருக்கும் தளத்தினை விளம்பரம் செய்யும் தளங்களின் நிர்வாகிகளுக்கு ஆதாரங்களை அனுப்பி, தங்கள் செயல்பாட்டிலிருந்து திருடும் தளத்தினை நிறுத்தி வைக்க வேண்டுகோள் வைக்கலாம். இது போன்ற வேண்டுகோளுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எனவே நம்பிக்கையோடு இருக்கவும். இதன் பிறகு குற்றவாளி தன்னிலையிலிருந்து இறங்கிவர வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இவர்களும் கூட்டுக் களவாணியாக இருந்தால் நேரே சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக வேண்டியது தான் கடைசி கட்டம்.

சுப்ரீம் கோர்ட் என்பது நாம் குற்றம் சாட்டும் பதிவினை இணையத்தில் வெளியிடத் தளம் வழங்கியிருக்கும் நிறுவனங்கள். உதா. ப்ளாக்கர் பதிவுகளாக இருந்தால் கூகுளுக்கு புகார் அனுப்பலாம். கூகுள் நிறுவனத்தில் யாரையும் தெரியாது எனக் கவலைப்படாமல் கீழே இருக்கும் சுட்டிக்குச் சென்று உங்கள் புகாரைத் தட்டுங்கள், திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.





மேற்படி நிறுவனங்களின் நடவடிக்கைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும்,குற்றம் செய்யும் தளங்களைத் தங்கள் தேடுபொறிகளில் தடை செய்வார்கள் அல்லது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு நிரூபணமானால் பதிவுத் தளமே மொத்தமாக முடக்கப்படும், நீதி நிலைநிறுத்தப்படும், பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் துடைக்கப்படும்.

நீதி கிடைத்தவுடன், 'அப்பாடா' என்று அசந்து விடாதீர்கள். மீண்டும் வேறெங்கும் திருடப்பட்டிருக்கிறதா என்று தேடத் துவங்குங்கள், ஏனெனில் இணையம் அசருவதேயில்லை. ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கில் ctrl+c, ctrl+v தட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன். படைப்புகள் பரவிக் கொண்டேயிருக்கின்றன வேறு வேறு பெயர்களில்.

மேற்படி காரியங்களனைத்தையும் செய்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அசாத்திய பொறுமை தேவை என்பதையும், பொறுமையுடன் உங்கள் படைப்பின் பெருமையைக் காக்க வாழ்த்துக்களையும் கூறி இத்தொடர் நிறைவடைகிறது. பின்னூட்டங்கள் மூலமும், வேறுவகையிலும் ஊக்கமளித்த அனைவருக்கும் சுடுதண்ணி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


Saturday, January 2, 2010

இணையமும், பதிவுத் திருட்டுக்களும் - 1


இப்பதிவை எழுதும் எண்ணத்தை விதைத்த நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

பதிவுகள் எந்த வகையினைச் சார்ந்ததாக இருந்தாலும் அதற்கென ஒரு உழைப்புத் தேவைப்படுகிறது, அந்த உழைப்பு தான், தங்கள் பதிவுகள் திருடப்படும்போது துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம் என நம்மைத் துள்ள வைக்கிறது. பரந்து விரிந்த இந்த இணைய உலகில் திருடுவதைத் தடுக்க முடியவே முடியாது. 'ஐயகோ, என் பதிவுகளை அல்லது என் படைப்புகளைத் திருடிவிட்டான்' என்று குமுறுவது கிட்டத்தட்ட கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று நிர்வாணமாய் குளித்துவிட்டு, 'பார்த்துட்டான், பார்த்துட்டான்' என்று கதறுவதற்கு ஒப்பானது. இணையத்தில் உங்கள் படைப்புகளை வெளியிட்ட மறுகணமே அது உங்களுக்குச் சொந்தமில்லை. அவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம், மறுவாரம் உங்கள் மின்னஞ்சலுக்கே 'என்னமா எழுதிருக்கான்யா..' என்று அங்கலாய்த்து பார்வேர்ட் வரலாம். எதையும் தாங்கும் இதயத்துடன் இருப்பது மனதுக்கும், உடலுக்கு நலம்.

அதெல்லாம் முடியாது, 'நான் இணையத்திலும் எழுதுவேன், திருட்டையும் தடுக்கனும்' என்று ஒற்றைக்காலில் அடம்பிடிப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். பதிவுத் திருட்டு இரண்டு வகைப்படும் ஒன்று ஒரு சில மனங்கவர்ந்த இடுகைகளை மட்டும் அள்ளுவது (content theft) அல்லது மொத்தமாக முழுப் பதிவினையும் சுருட்டுவது (site hijacking). திருட்டைத் தடுக்க வழியே இல்லையா?. சில நிரல்கள் மூலம் ctrl c, mouse right click ஆகியவற்றை உங்கள் பதிவைப் பார்வையிடும் போது செயலிழக்க வைக்கலாம், ஆனால் கெட்டிக்காரத் திருடனுக்கு அதெல்லாம் தூசு. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பதிவுகளை உரிய அனுமதியில்லாமலோ அல்லது தளத்தின் உரல் கொடுக்காமலோ பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அறிவிப்புப் பலகையினை வைக்கலாம்.

இப்படி வெறும் அறிவிப்பு வைப்பதற்கு மாற்றாக சில காப்புரிமை சேவை வழங்கும் தளங்கள் உள்ளன. (உதா. www.creativecommons.org, www.copyscape.com, www.www.myfreecopyright.com). அது போன்ற தளங்களில் உங்கள் வசதிற்கேற்ப காப்புரிமை விதிமுறைகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொண்டு, அவற்றின் காப்புரிமைப் படத்தினை உங்கள் பதிவில் வெளியிட்டு, தளத்தின் வருகையாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இது போன்ற சேவைகள் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்புக்கு மட்டுமே. ஒரு வேளைத் திருட்டு நடந்தால், படைப்பின் மீதான உங்கள் உரிமையை நிலைநாட்ட ஒரு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, திருட்டு நடந்தால் யார் பிராது கொடுப்பார்கள்?. நண்பர்கள் வலையில் உலாவும் போது பார்த்துவிட்டு வந்து சொல்லலாம் இல்லையென்றால் நாமாகக் கண்டுபிடித்தாலோ அல்லது அதுவாக கண்ணில்பட்டாலோ தான் உண்டு. www.copyscape.com போன்ற தளங்கள் மூலமும் முயற்சி செய்து பார்க்கலாம்.ஒருவழியாக எங்கேயோ, யாரோ உங்கள் பதிவைத் திருடிவிட்டதைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதிரடி சாகசங்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.

இந்த இடத்தில் தான் பொறுமையாக, அமைதியாக இருக்க வேண்டும். முதலில் பொதுவில் இது குறித்து திருடன், திருடன் என்று சொல்வதைத் தவிர்ப்பது பிரச்சனை மேலும் சிக்கலாவதைத் தடுக்கவும், திருடன் உஷாராகி மறுகணமே திருடப்பட்டப் பதிவை நீக்கிவிட்டு நாம் அவனில்லை என்று நம்மை அம்பேலாக்குவதைத் தடுக்கவும் உதவும். அனேக இணையப் பயனாளர்களுக்கு இவ்வாறு படைப்புகளை வெட்டி, ஒட்டுவது தவறு என்ற விழிப்புணர்வு இருப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

யார் உங்கள் பதிவினைத் தங்களுடையது போன்று வெளியிட்டு இருக்கிறார்களோ அவருடைய தொடர்பு விவரங்களை அறிந்து கொண்டு ஒரு மின்னஞ்சல் மூலம் மிக அமைதியாக சொல்லலாம். பெருவாரியான பதிவுத்திருட்டு சம்பவங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதன் மூலமே தீர்க்கப்பட்டுவிடுகின்றன. அப்படியும் அடங்க மறுக்கும் அஞ்சாநெஞ்சர்களை என்ன செய்வது?. அது குறித்து அடுத்த பகுதியில்....

Friday, January 1, 2010

எப்ப வரும் அந்த புத்தாண்டு ?



உன் நரைமுடி கண்டு
நாங்க சிரிக்கணும்
என் வழுக்கையை மற்றவர்கள்
கிண்டலடிக்கணும்

கல்லூரி சேட்டைகளை
சொல்லிச் சொல்லி
சிரிப்பு வெடி நாம வெடிக்கணும்

அனுபவங்கள் செதுக்கி விட்ட
மாற்றங்களை நினைச்சு
பார்த்து ரசிச்சுத் திளைக்கணும்

'உன் ஆளு இப்ப
எங்க இருக்கோ'ன்னு கேட்டு
மலரும் நினைவுல மூழ்கடிக்கணும்

பிரியும் போது நிச்சயமா
அழுகாம சிரிச்சி நின்னு
போட்டோ ஒன்னு எடுத்து வைக்கணும்

அப்படி ஒரு புத்தாண்டுக்குத் தான்
காத்திருக்கேன்
அதுக்குத்தான் ஆண்டவன வேண்டியிருக்கேன்....

அனைவருக்கும் சுடுதண்ணியின் இதங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் :)