Sunday, February 28, 2010

இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1

உலாவியில் ஒரு இணையத்தளத்தின் முகவரியைத் தட்டிவிட்டதும், அத்தளத்தின் பக்கங்கள் கணினித்திரையை நிரப்பும் அந்த நொடியில் தொழில்நுட்பங்கள் நடத்தும் அதிரடித் திருப்பங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஈஸ்ட்மென் வண்ண திரைக்காவியத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

இணையதள முகவரி என்பது பயனாளர்களின் வசதிக்காக மட்டுமே. உலாவியில் உள்ளிட்ட பிறகு, அது வலையிணைப்பு முகவர் எண்களாக (IP address) மாற்றப்பட்டே அதன் பக்கங்கள் பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட செல்பேசிகளின் தொலைபேசிப் புத்தகம் (phone books) போல, எண்களை நினைவில் நிறுத்தும் சிரமத்தை தவிர்த்துக் கொடுக்கும் எளிய வழிமுறை. இவ்விடத்தில் வலையிணைப்பு முகவர் எண்களின் கட்டமைப்பை நினைவில் கொள்க (xxx.xxx.xxx.xxx). மிக எளிதாகத் தோன்றினாலும், இதற்குப்பின் எவ்வளவு தொழிநுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன, எத்தனை பேரின் மெனக்கெடல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இப்பதிவு. நாம் செல்லும் தளத்தின் முகவர் எண் என்பது தளத்தின் வழங்கியைக் குறிக்கும் (web server), அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது?. அதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நமக்கு நாமே திட்டத்தின் படி start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ping என்ற கட்டளையுடன் தளத்தின் முகவரியை உள்ளிடவும். (பார்க்க படம்).


இரண்டு, பாரம்பரிய வழக்கப்படி நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு தளங்களின் முகவர் எண்ணைக் கண்டுபிடிக்கும் வசதியை ஏராளமான தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. சமயத்தில் முகவர் எண்ணுடன் அதன் இருப்பிடத்தையும் சேர்த்து வழங்குவது கூடுதல் சிறப்பு. உ.தா. http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php . மூன்று, தளத்தை நடத்துபவரை தொடர்பு கொண்டு கேட்பதன் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம் :).இணையம் என்னும் கடலில் கோடிக்கணக்கான தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய இணையத்தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நூறு பெயர்கள் செயலிழக்கின்றன. இவற்றுக்கான முகவர் எண்களை யார் பராமரிக்கிறார்கள், எப்படி பழையன கழிதலையும், புதியன புகுதலையும் அவற்றிற்கேற்ப பிரதிபலிக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தோன்றுவது இயல்பே.


இணைய தள முகவரிகளைப் பதிவு செய்பவர்கள் (domain name registrars), இணைய தள முகவரிகளையும் அவற்றுக்கான முகவர் எண்களை நிர்வகிக்கும் இணையத் தகவல் மையங்கள் (network information centers - nic), இணைய முகவரிகளையும், அவற்றுக்கான முகவர் எண்களையும் சேமித்து வைத்து தேவைக்கேற்ப பயனளார்களுக்கு இணைய பக்கங்களை வழங்கத் துணை புரியும் இணைய முகவரி வழங்கிகள் (domain name system servers - dns servers), மைய வழங்கிகள் மற்றும் இவையனைத்தையும் கட்டி மேய்க்கும் ICANN (internet corporation for assigned names and numbers) இவர்களனைவரின் கூட்டு முயற்சியில் தான் நாம் முதுகுக்கு ஏதுவான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வசதியாக உலாவியில் முகவரியைக் கொடுத்து விட்டு இணையப் பக்கங்களைப் பெறுகிறோம்.

மேற்சொன்ன குழுவினர்களின் தலையாய வேலையே, நாள்தோறும் புத்தம் புதிதாக மலரும் இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் முகவர் எண்களை உலகமெங்கும் உள்ள இணைய முகவரி வழங்கிகளுக்குப் பரப்புவதும் (dns propogation), ஒரு பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதள முகவரிகள் பதியப்படாமல் பார்த்துக் கொள்வதும் தான். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மொத்தமும் அலங்கோலமாக வாய்ப்புகள் அதிகம். ஒரு புதிய இணையதளம் ஆரம்பித்து அது உலகம் முழுவதும் பார்வைக்குக் கிடைக்க அதிக பட்சம் மூன்று நாட்களாகலாம் :). அது பார்வையிடப்படும் பயனாளரின் இணைப்பில் உள்ள் இணைய முகவரி வழங்கிகளின் செயல்பாட்டைப் பொருத்தது.

இப்பிரிவினர் அனைவரும் ஒரு வரையறுக்கப்பட்ட வலையமைப்பில் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர்?, அவர்தம் செயல்பாடுகள் என்னென்ன?, நாம் வலையிணைப்புப் பெறும் நிறுவனங்களின் பங்கு என்ன? இணையதள முகவரியின் வகைகள் என்ன?, போன்ற பல என்ன, என்னக்களைப் பற்றி அடுத்த பகுதியில்...

Wednesday, February 17, 2010

இணையக்கோட்டை முரட்டு ரவுடிகள்

கல்லூரிக்காலங்களில் வேடிக்கைக்காக இரவு நேரத்தில் மின்சாரத்தடையின் போதோ அல்லது பட்டப்பகலில் போர்வை போத்தியோ பிறந்தநாள் கொண்டாடியிருப்பீர்கள். அதாவது யார் அடிக்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் அடி வெளுக்கப்படும். வெளிச்சம் வந்ததும் பார்த்தால் எல்லோரும் அவரவர் இடத்தில் இருப்பார்கள். அப்படி இணையத்தின் பின்பக்கம் மறைந்து கொண்டு தாக்குபவர்கள் பற்றியும் அக்கலையின் நுட்பங்கள் பற்றியும் இப்பதிவில்.

சின்னக் குழந்தைகளைத் தாக்கினால் அது இணைய அச்சுறுத்தல் (cyber bullying) என்றும், மீசை முளைத்த குழந்தைகளைத் தாக்கினால் இணையத் தொந்திரவுகள் (cyber stalking/cyber harassment) என்றும் இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள். சமூக வலைப்பின்னல்கள் பெருகிப்போய்விட்ட இணையத்தில் ஒரு தனி நபரைப் பற்றித் திரித்து எழுதி இணையத்தில் வலம் வரச்செய்வதென்பது சுடுதண்ணி வைப்பது போல் மிகமிக எளிது. இதை ஏன் செய்கிறார்கள்? தனிப்பட்ட வன்மம் அல்லது மனவியாதி இரண்டில் ஒன்றாக இருக்கலாம். இணைய உலகத்தில் கருத்து விவாதங்கள் பல தளங்களில் நடந்து கொண்டேயிருந்தாலும், கருத்துக்களைத் தாக்கி விவாதிக்காமல் கருத்துச் சொல்லும் நபரின் இனம், மொழி ஆகியவற்றைச் சாடித் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதும் அன்பர்களாலேயே இணைய ரவுடித்தனம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. நிஜ வாழ்வில் முகம் காட்டி மோதும் அளவுக்குக் கூட சில இணையத்தகராறுகள் செல்வதுண்டு.


இவற்றை எப்படிச் சமாளிப்பது?. உங்கள் நிஜவாழ்வின் அடையாளத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதென்பது வேலியில் போவதை வேட்டிக்குள் விடும் அனுபவத்தைத் தர வல்லது. அனேக இணையத் தொந்திரவுகள் அடையாளத்திருட்டு(identity theft) மூலமே நடைபெறுகிறது. அதுபோக இணையத்தளங்களிலோ அல்லது பதிவுகளிலோ கருத்து மோதல்களில் பெரும் காலத்தை செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கருத்தை ஒரே முறை பதிவு செய்வதோடு இணையத்தின் மூலம் நாம் செய்யும் சமூக சேவையினை முடித்துக் கொள்வது நன்று. கருத்துக்கு எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்பதெல்லாம் காலவிரயம் என்பது அனுபவசாலிகளின் கருத்து. இணையத்தில் பலதரப்பட்ட நபர்கள் வருவார்கள், இருதரப்பிலும் ஒரே மாதிரியான மனமுதிர்ச்சியையும், கருத்து விவாதம் செய்யும் பாங்கினையும் எதிர்பார்க்க முடியாதென்பதும் ஒரு காரணம்.


இந்தியாவின் முதல் இணையத் தொந்திரவு குற்றப்பதிவு தில்லியைச் சேர்ந்த திருமதி. ரித்து கொஹ்லி அவர்களால் பதிவு செய்யப்பட்டது. காரணம் அவரது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து தினமும் ஒருவர் இணைய அரட்டையில் கும்மியடித்து வந்ததும், அதன் விளைவாக நேரங்கெட்ட நேரத்தில் ஏகப்பட்ட நபர்கள் திருமதி. ரித்து அவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து 'வரலாமா' என்று கேட்க ஆரம்பித்ததும் தான். பின்னர் வழக்கம் போல வலையிணைப்பு முகவர் எண் (I.P) மூலம் குற்றவாளி கணடுபிடிக்கப்பட்டு முட்டிக்கு முட்டி பெயர்க்கப்பட்டாலும் இதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து திருமதி. ரித்து கொஹ்லிக்கு மட்டுமே வெளிச்சம்.


தனிப்பட்ட நபர்களால் மட்டுமின்றி கூட்டம் சேர்ந்து கொண்டு ஒருவரைக் குறிவைத்து இணையத்தில் தொந்திரவு செய்வதும் இணையத்தின் மாமூல் வாழ்க்கையில் ஒரு பகுதியே. இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?. நிஜ வாழ்க்கையைப் பாதிக்காதவரை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய் விடுவதே சிறப்பு. கவன ஈர்ப்பைப் பெறுவதே குற்றவாளிகளின் முதல் நோக்கம். அது கிடைக்காத வருத்தத்தில் அவர்களாகவே மனநலக் காப்பகத்தில் சென்று சேர்ந்து கொள்வதின் வாய்ப்பதிகம். அப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். இணையத்தில் அனைவரது நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. கால அவகாசங்கள் வேறுபடுமே ஒழிய, எவரும் தப்பிக்க முடியாது.



உங்கள் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள் ஆகியோரின் படத்தினை வலைப்பக்கங்களிலோ, பதிவுகளிலோ பிரசுரிக்கும் முன் எதையும் தாங்கும் இதயம் இருப்பதை உறுதி செய்து கொள்வது நலம்.ஒரு தாய் தன் குழந்தையின் படத்தையே, 'ஆதரவற்ற குழந்தை, உதவி செய்யுங்கள்' என்ற கோரிக்கையுடன் மின்னஞ்சல்களில் பார்த்த சம்பவத்தை உலகம் கண்டிருக்கிறது. தொலைபேசி எண்கள், பழைய எண், புதிய எண் போன்ற நுணுக்கமான விவரங்களுடன் கூடிய வீட்டு முகவரி ஆகியவற்றை வலையேற்றுவதைத் தவிர்க்கவும். அதனினும் முக்கியமானது மற்றவர்களுடைய விவரங்களை அவர்களது அனுமதியின்றி பிரசுரிப்பது.கடந்த காலத்தில் இணையத் தொந்திரவினால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் த்ரிஷா, குஷ்பு, நயன் தாரா போன்ற அபலைகள் பலர் இருப்பதால் அரசு அவர்களுக்கென ஒரு நலவாரியம் அமைத்து, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருந்தாலும், நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழரின் பிரத்யேக மின்னஞ்சலை இணையத்தில் வெளியிட்டு, 'வந்து குவியும் மின்னஞ்சல்களை அழித்து, அழித்து மணிக்கட்டு வலிக்கிது, அழுதுருவேன்..' என்று அவரை ஊடகத்தில் கதற விட்ட கதை ஒரு சமீபத்திய உதாரணம்.


இவ்வளவுக்குப் பிறகும், இணையத்தின் மூலம் தொந்திரவுகள் ஏற்படின் கீழ்கண்ட சுட்டியில் இருக்கும் பட்டியலில் உங்களுக்கு அருகே வசிக்கும் நண்பருக்கு பேசா அழைப்புக் கொடுத்து (missed call) விவரத்தைச் சொன்னால் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.


உங்களின் இணைய அனுபவம் என்றென்றும் இனிக்கும் அனுபவமாக இருக்க வாழ்த்துக் கூறி இப்பதிவு நிறைவடைகிறது.

Tuesday, February 16, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 2 (முற்றும்)

தனிப்பட்ட முறையில் குக்கீஸ்கள் உலாவியால் உருவாக்கப்படும் வெறும் எழுத்துக் கோப்புகளே, அவற்றால் உங்கள் கணினியில் தங்கி இருக்க முடியுமே ஒழிய எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியாது. குக்கீஸ் மூலம் வைரஸ் பரப்பப்படும், கோப்புகள் அழிக்கப்படும் என்பது, தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக 'சின்ன புள்ளைங்க பாக்குப் போட்டா மாடு முட்டும்' என்று சொல்வதைப் போன்றது. குக்கீஸ்களில் என்ன சேமிக்கப்படுகிறது என்பது நாம் செல்லும் இணையத்தளங்கள் பின்பற்றும் முறையைப் பொருத்தது. குக்கீஸ்கள் மூலம் தகவல்கள் கைமாறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த பின்பு அனேக தளங்கள் வருகையாளருக்கானத் தனிக்குறியீட்டு எண்களை மட்டுமே குக்கீஸ்களில் சேமிக்கின்றன. அவற்றுக்கானப் பிறதகவல்கள் அவர்களின் இணைய வழங்கிகளில் பாதுகாப்பாகவே இருக்கின்றன. சில தளங்கள் அவற்றின் பக்கங்களை மூடியதுமே தங்கள் குக்கீஸ்களை செயலற்றதாக்கி விடும் (session cookies) முறையினையும் தேவைக்கேற்பப் பின்பற்றுகின்றன.
அவ்வாறு பாதுகாப்பாக வைப்பதும், வைக்காததும் தளங்களை வடிவமைப்பவர்களைப் பொருத்தது என்பதால் புதிதாக ஏதேனும் தளங்களுக்குச் செல்லும் போது மின்னஞ்சல் முகவரி,கடனட்டை விவரங்கள் போன்ற பிரத்யேகத் தகவல்களைத் தரும் சந்தர்ப்பத்தில், அந்தத் தளத்தின் குக்கீஸ்களைச் சென்று பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. அப்படி பார்க்கும் போது அவற்றில் முக்கியத் தகவல்கள் இருப்பின் உடனே அந்த குக்கீஸ்களை நீக்கி விடுவது சாலச் சிறந்தது. அல்லது ஒரு தை அமாவசையன்று உங்கள் வங்கிக் கணக்கு பல்லிளிக்கவோ அல்லது உங்கள் முகவரிக்கு நொடிக்கொருமுறை வயாக்ரா விற்பனையாளர் மின்னஞ்சலில் திக் விஜயம் செய்யவோ வாய்ப்பதிகம். நம் கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குக்கீஸ்களை கீழ்காணும் இடங்களுக்குச் சென்று கண்டு மகிழவும்.

Internet Explorer: Tools -> Internet options -> Browsing History -> Settings -> View Files

Firefox: Tools -> Options -> Privacy -> Select 'Use custom settings for history' -> Show cookies

Google Chrome: Tools -> Options -> Under the hood -> Show cookies and website permissions

ஒரு தளத்தின் குக்கீஸ்களை மற்ற தளங்கள் படிக்க முடியாத போது எதற்காக இப்படி சிரமப்பட வேண்டும், கால விரயம் என்று கவலைப் படுபவர்கள் தொடர்ந்து படிக்கவும் :).
இணையப் பக்கங்களில் பலவிதமான விளம்பரப் பட்டைகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த குக்கீஸ்களுக்குள் புகுந்து விளையாடுவது இந்த விளம்பரப் பட்டைகள் (ad banners) தான். எப்படி?. இந்த விளம்பரப் பட்டைகள் இரண்டு வகை. ஒன்று நீங்கள் செல்லும் இணையத்தளம் தங்கள் சொந்த வழங்கியிலிருந்து தருவது (first party ads), இரண்டு வேறு ஒருவருக்குச் சொந்தமான வழங்கியில் இருந்து தருவது (third party ads). இதில் இரண்டாவது தான் கொஞ்சம் பிரச்சினைக்குரியது. ஏன்?. உதாரணத்திற்கு நாம் இரண்டு வெவ்வேறு இணைய தளத்திற்கு செல்கிறோம், இரண்டிலும் ஒரே மூன்றாம் நபரிடம் (same third party ads) இருந்து விளம்பரங்களைத் தரும் பட்சத்தில் அந்த மூன்றாம் நபர் இரண்டு இடத்திலும் நம் நடவடிக்கைகளைத் தங்கள் குக்கீஸ்களில் பதிவு செய்து கொள்ள முடியும். அதன் மூலம் மீண்டும் நாம் செல்லும் போது நம் கடந்த கால நடவடிக்கைகளுக்குச் சம்பந்தமான விளம்பரங்கள் நம்மைப் பார்த்து கண்ணடிக்க வைத்து மகிழ்வார்கள். இணையத்தில் உலவுவது இருட்டுக்குள் உலவுவது போலத்தான், விளம்பரங்கள் வழங்கும் அந்த மூன்றாம் தரப்பு மூலம் தகவல் திருட்டு நடக்க வாய்ப்பிருப்பதால் கவனமாக, பாதுகாப்பாகச் செல்ல பரிந்துரைக்கபடுகிறது.

விளம்பர நிறுவனங்களுக்கு அடுத்து குக்கீஸ்களை விவகாரமான முறையில் பயன்படுத்துபவர்கள் தேடு பொறி நிறுவனங்கள். தேடுபொறியில் நாம் தேடும் குறிச்சொற்கள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஊரிலிருந்து, இந்த இணைப்பிலிருந்து ஒருத்தர் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு 'நமிதா' படங்களைத் தேடினார் என்பது மாதிரியான தகவல்களை விரிவாக, தெளிவாக, அழகாக தங்கள் வழங்கியில் பதிவு செய்து அதற்கான குறியீட்டு எண் நம் கணினியிலேயே விதைக்கப்படும். அடுத்த முறை ''நந்தா' என்று குறிச்சொல்லைத் தேடும் பொருட்டு செல்லும் போது 'did you mean நமிதா?' என்று கேட்டால் சலனப்பட்டுவிடாமல் நந்தாவையே தேடவும்.

ஓரளவுக்கு குக்கீஸ்கள் குறித்து புரியும்படி விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இதுவரை படித்த பின் இணையத்தின் சகல திசைகளிலும் குக்கீஸ்களால் உங்களை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் தோன்றினால், அது வெறும் மனப்பிராந்தி என்று ஒதுக்கித்தள்ளாதிருக்கவும். குக்கீஸ்களுக்கு நாமே கடிவாளம் போடலாம். பின்வரும் முறைகளைப் பின்பற்றி உங்கள் உலாவியின் வசதிக்கேற்ப, நம்பத்தகுந்த தளங்களுக்கு மட்டும் குக்கீஸ்களை பதிந்து கொள்ள அனுமதிக்கலாம் அல்லது ஒவ்வொரு முறையும் உங்கள் அனுமதி பெற்று பதியுமாறும் செய்து கொள்ளலாம். உலாவியில் ஒட்டுமொத்தமாக குக்கீஸ்களை செயலாற்ற விடாமல் செய்ய முடியும், இருந்தாலும் பல தளங்கள் குக்கீஸ்கள் இன்றி செயல்பட முடியாது என்று அடம்பிடிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

Internet explorer : Tools -> Internet Options -> Privacy -> Advanced

Firefox: Tools -> Options -> Privacy -> Select 'Use custom settings for history'

Google Chrome: Tools -> Options -> Under the hood -> Cookie settings

மேலே சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்றால் குக்கீஸ்களைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகளைக் காணலாம். அவற்றும் உங்கள் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். நாம் திறக்கும் இணையத்தளங்கள் மட்டுமே குக்கீஸ்கள் பதிவு செய்து கொள்ள முடிவது போலவும், வேறு மூன்றாம் தரப்புத் தளங்களுக்கு அனுமதியளிக்காமலும் பார்த்துக் கொள்வது சிறப்பு என தெரிவிப்பதுடன் இத்தொடர் நிறைவடைகிறது.







Thursday, February 11, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 1

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விருந்தினர் பதிவேடு என்று ஒன்று வைத்திருப்பார்கள். அங்கு வருகைதரும் முக்கியஸ்தர்கள் அதில் இங்கு வந்ததில் பெருமை, இந்த இடம் அருமை, பார்த்ததும் புல்லரித்தது, உடம்பெங்கும் வியர்த்தது என்று எதையாவது எழுதி கையெழுத்திட்டு தங்கள் பெயர்களைப் பதிந்து செல்வார்கள். கிட்டத்தட்ட அப்படி ஒரு பதிவுக்குறிப்பை நீங்கள் செல்லும் இணையத்தளங்கள் உங்கள் நெற்றியிலேயே ஒற்றிவிட்டு அழகு பார்க்கும் விசயம் தான் இந்த குக்கீஸ். அவை குறித்து இப்பதிவில் காண்போம்.

இணையதள வழங்கிகள் (web servers) உங்கள் உலாவியின் மூலம் உங்கள் கணினியில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து வைக்கும் சிறு அளவிலான எழுத்துக் கோப்புகளே குக்கீஸ்கள். இந்த கோப்புகளில் என்ன இருக்கும்?. நீங்கள் இணையத்தளத்திற்கு வருகை தந்த நேரம், படித்த பக்கங்கள், செலவிட்ட நேரம் போன்ற விவரங்கள் இருக்கும்.லொ மொண்டலி இணையத்தின் பயன்பாட்டுக்கு படைத்த சிறப்பான பயன்பாடுகளில் இதுவும் ஒன்று. இணைய வர்த்தகத்திற்காக கண்டுபிடிக்கப் பட்டாலும், பின்னாளில் வருகையாளர்களின் தன்மைக்கேற்ப வலைப்பக்கங்களை மாற்றியமைத்து வழங்குவதற்கும் மற்றும் இணைய விளம்பர உலகத்திற்கும் குக்கீஸ் இன்றியமையாததாகிப் போனது.

லொ மொண்டலி

வர்த்தகத் தளங்களில் வாங்கும் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கொள்கலன் (purchase cart) ஒன்று இருக்கும், நீங்கள் பொருட்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு நிலையையும் பதிவு செய்து அந்த கொள்கலனுக்கு வழங்குவதற்காகவே குக்கீஸ்கள் படைக்கப்பட்டாலும், வழக்கம் போல மற்ற பயன்களால் தான் குக்கீஸ்கள் புகழ்பெற்றன. பல இணையத்தளங்கள் தங்கள் வருகையாளர்களே பிரத்யேகமாக தேவையானத் தகவல்களை முதல் பக்கத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியை வழங்குகின்றன உ.தா. yahoo, google. அவற்றுக்கு உதவுவதும் குக்கீஸ்களே. உங்கள் தேர்வுகளை தளங்களின் வழங்கிகளில் சேமித்து விட்டு அதற்கென்ற ஒரு தனிக்குறியீட்டு எண்ணை உங்கள் கணினியில் பதிந்து விடுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். மீண்டும் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்திற்கு செல்லும் போது உலாவியின் மூலம் உங்கள் குக்கீஸில் இருக்கும் தனிக்குறியீட்டு எண்ணைப் படிக்கும். அந்தக் குறியீட்டு எண்ணுக்குண்டான, வழங்கியில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொகுத்து வழங்கப்படும். இதில் உலாவியின் பங்கு மிகமிக முக்கியமானது, ஏன்?. ஒரு இணையத்தளத்தின் குக்கீஸ்களை மற்றொரு இணையத்தளம் படிக்க முடியாது. அப்படி படிக்க விடாமல் தடுத்து சரியான தளங்களிடம் மட்டுமே குக்கீஸ்களின் தகவல்கள் சேர்வதை உறுதிப்படுத்துவது உலாவிகளே.

இப்படி எல்லாம் இன்பமயமாக இருந்த தருணத்தில் இணைய விளம்பர நிறுவனங்கள் குக்கீஸ்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் தான் உலகம் நிமிர்ந்து கவனிக்கத் துவங்கியது. விளம்பரங்களை உங்கள் இணைய நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து வழங்கும் முறை மிகப் புகழ்பெற்றது. உதாரணத்திற்கு விளம்பரப் பட்டைகள் நிறைந்த தளங்களுக்குச் செல்லும் போது உங்களின் இருப்பிடம் சம்பந்தமான விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அல்லது நீங்கள் அதிகமாக இணையதளங்கள் வடிவமைப்புப் பற்றியப் பக்கங்களைப் படிப்பவராக இருந்தால் 'குறைந்த விலையில் இணைய வழங்கிகள், ஒன்று வாங்கினால் ஒரு சிக் ஷாம்பூ பாக்கெட் இலவசம்' போன்ற விளம்பரங்கள் காணக் கிடைக்கலாம்.
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அது போன்ற பக்கங்களை மாறுபட்ட பயனாளர்கள் இருவரின் கணினிகளில் திறந்து பார்த்தால் இருவருக்கு வெவ்வேறு விளம்பரங்கள் வழங்கப்படுவதைக் காணலாம். நீங்கள் எவற்றையெல்லாம் படிக்கிறீர்கள், எந்தப் பக்கங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் ஆகியத் தகவல்கள் குக்கீஸ்கள் மூலம் படிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விளம்பரங்கள் வழங்குவது வெகுவிமரிசையாக நடைபெற ஆரம்பித்தது. இது பயனாளர்களின் தனியுரிமைக்கும், ரகசியத்தன்மைக்கும் எதிரானது என்று பலர் கூவினாலும், அதனைத் தவிர்ப்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ உலாவியின் மூலம் பயனாளர்கள் தீர்மானிக்க முடியும் என்பதால் எதுவும் எடுபடவில்லை. ஆயினும் இவ்வாறான கண்காணிக்கும் குக்கீஸ்களை தவிர்க்கும் முறைகள் பற்றி அனேக பயனாளர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு இணையத்தளத்தின் குக்கீஸ்களை மற்றவைப் படிக்க முடியாத போது எப்படி பயனாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன?, குக்கீஸ்களை எப்படி தேவைக்கேற்பக் கட்டுப்படுத்துவது?, குக்கீஸ்கள் மூலம் வைரஸ் சாத்தியமா, போன்றவை குறித்து அடுத்தப் பகுதியில்.

அனைவருக்கும் சுடுதண்ணியின் காதலர் தின வாழ்த்துக்கள் :).