Thursday, March 25, 2010

மனிதம் தேடும் இணையம் : CAPTCHA - 2 (முற்றும்)


இணையதள வடிவமைப்பாளர்களுக்கும், அதை உடைக்கும் SPAM தொழிலதிபர்களுக்கும் நடந்த சுமோ யுத்தத்தில் நசுங்கிச் சின்னபின்னமானது அப்பாவி பயனாளர்கள் தான். உச்சகட்டத்தில் பயனாளர்கள் வர்க்கத்தை மொத்தமாக மறந்து விட்டு, போட்டியில் மூழ்கிப் போன விளைவு தான் கீழ்காணும் CAPTCHAக்கள். பார்த்து மகிழவும். ரொம்பவும் பொழுதுபோகாமல் இருக்கும் அன்பர்கள் விடைகளைப் பின்னூட்டத்தில் உள்ளிட்டு, பெருமிதப்பட்டுக்கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.



காலப்போக்கில் வடிவமைப்பாளர்களுக்கு CAPTHCAக்களின் தேவை ஆயிரம், லட்சம் என்று அதிகமானது. ஒரு CAPTCHA மீண்டும் காட்சிப்படுத்தப்படுவதற்கு நீண்ட கால இடைவெளித் தேவைப்பட்டதே காரணம். ஏனெனில் ஒவ்வொரு நூறாவது முறையும் ஒரே CAPTCHA க்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்தால் நிரல்களை வைத்து நூற்றுக்கு ஒன்று, என்ற கணக்கில் நிரல்கள் எழுதி வெளுக்கப்படும். இதனால் CAPTCHAக்களை வடிவமைத்துத் தரும் நிறுவனங்கள் பெருகின, அவற்றுள் கட்டணச்சேவை மற்றும் இலவசச் சேவை இரண்டும் அடக்கம். இதில் பிரச்சினை என்றால் மூன்றாம் நபரின் CATPCHAக்களைப் பயன்படுத்தும் போது குக்கீஸ்கள் மூலம் உங்கள் வருகையாளர்களின் நடவடிக்கைகள் குறித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருப்பது(third party cookies) உபரித் தகவல். எனவே கண்ட கண்ட CAPTCHAக்களைப் பயன்படுத்தும் தளங்களுக்குச் செல்லும் போது முன்னெச்சரிக்கைக்காக ஒருமுறை பின்பக்கம் திரும்பிப் பார்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.


இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இப்பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் அணுகியவர்கள், reCAPTCHA என்ற திட்டத்தை முன்மொழிந்தார்கள். அதாவது CAPTCHAக்களை உடைக்கப் பயன்படுத்தும் OCR தொழில்நுட்பத்தைக் கொண்டு தான் ஆவணங்களைக் கணினிமயப்படுத்துவது வழக்கம். அவ்வாறு செய்யும் போது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தைகள் அடையாளம் காணப்படுவதில்லை. அவ்வாறு OCR அடையாளம் காணமுடியாமல் சிரமப்படும் வார்த்தைகளை சரி பார்த்துத் திருத்துவதென்பது நேரத்தை விழுங்கும் வேலை.ஒரு வார்த்தையை OCR அடையாளம் காணமுடியாவிட்டால் அதுவே ஒரு சிறந்த CAPTCHAவிற்கான அடையாளம். எனவே அந்த வார்த்தைகளை CAPTCHAக்களாக மாற்றி இணையத்தில் உலாவ விட்டு, மக்கள் மூலம் சரியான வார்த்தைகளைத் திரும்பப் பெறும் சாமர்த்தியத் திட்டம் தான் reCAPTCHA. சுருங்கச் சொன்னால் 'ஊர்ச்செலவுல ஊறுகாய் சாப்பிடறது'.

reCAPTCHA திட்டம் கார்னெகி மெலன் பல்கலைக் கழகத்தால் புத்தகங்களைக் கணினிமயமாக்க செயல்பாட்டுக் கொண்டுவரப்பட்டது. இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் தங்கள் தளத்திற்கான CAPTCHAக்களுக்கு ஒரு நல்ல வழங்கி கிடைத்த மகிழ்ச்சி. எங்கெல்லாம் இலவசமோ அங்கெல்லாம் CAPTCHA அவசியம். இணையத்தின் இலவசச் சக்கரவர்த்தி கூகுளுக்கு CAPTCHAக்களின் தேவை மிகமிக அதிகம். விளைவு reCAPTHCA திட்டம் கூகுளுக்குக் கைமாறியது. twitter மற்றும் facebook ஆகியவை reCAPTCHA பயன்படுத்தும் தளங்களில் முக்கியமானவை.

reCAPTCHA எப்படி செயல்படுகிறது?. ஒரு புதிர் சரியா, தவறா என்று கணிப்பதற்கு, உங்களுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் reCAPTCHA என்பது விடைதெரியா புதிர்களுக்கு மக்களிடம் விடையைப் பெறும் முறை. அதில் எவ்வாறு விடைகளைச் சரியா, தவறா என்று கணிக்கிறார்கள்?. எப்போதும் reCAPTCHAக்கள் இரண்டு வார்த்தைகளோடு தான் காட்சிக்கு வைக்கப்படும். அவற்றில் ஒன்று விடை தெரிந்த வார்த்தை மற்றது reCAPTCHA வார்த்தையாக இருக்கும். பயனாளர் அவற்றுக்கான விடையை உள்ளிடும் போது ஒன்று சரியாக இருந்தால் மற்றொன்றும் சரியாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பயனாளரின் விடை சேமிக்கப்படும். அதோடு விட்டுவிடாமல் அதே reCAPTCHA பல்வேறு ஜோடி வார்த்தைகளுடன் பல பயனளார்கள் மூலம் விடைகள் பெறப்பட்டு அதிகபட்சமாக பெறப்பட்ட விடையே சரியானத் தீர்வாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இப்பொழுது கூகுள் reCAPTCHA மூலம் ஆதிகால நியூயார்க் டைம்ஸ் இதழ்களைக் கணினிமயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்குச் சுமாராக 30 மில்லியன் வார்த்தைகள் reCAPTCHA மூலம் சரிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. தங்களுத்தெரிந்தோ, தெரியாமலோ இணைய உலகம் அதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறது. 'பாதுகாப்புக்கு பாதுகாப்பாச்சு, வேலையும் முடிஞ்சு போச்சு' என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்படுவது சுவராஸ்யம்.

இணையத்தில் எங்கேனும் CAPTCHAக்கள் பக்கம் செல்லுகையில் இரட்டை வார்த்தைகளைக் கண்டதும் reCAPTCHA உங்களுக்கு நினைவுக்கு வருவதற்கு இத்தொடர் காரணியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்று தெரிவித்துக் கொண்டு சுடுதண்ணி விடைபெற்றுக்கொள்கிறது :).




Thursday, March 11, 2010

மனிதம் தேடும் இணையம் : CAPTCHA - 1

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில், சரளா ஜோடியைப் பார்த்து சிவாஜி, பத்மினி என்று காசு கொடுத்து சொல்லவைப்பது போல் ஒரு காட்சி வரும். கவுண்டமணியிடம் மாட்டிக்கொண்டு, 'உனக்கேண்டா இந்த வேலை' என்று கேட்டதும் செந்தில் சொல்லும் பதில் 'ஒரு வெளம்பரம்ம்ம்'. இணையத்தின் வளர்ச்சியில் மிகுந்த சவாலுக்குள்ளான விஷயங்கள் இரண்டு. ஒன்று பாதுகாப்பு மற்றொன்று விளம்பரத்தொல்லைகளைச் சமாளிப்பது.

SPAM என்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்கவிலும், ஐரோப்பாவிலும் திகட்டத்திகட்ட சந்தைப்படுத்தியதின் மனரீதியான பாதிப்பே, பின்னாளில் அளவுக்கு மீறித் தொல்லைதரும் விளம்பரங்களையோ அல்லது தகவல்களையோ இணையத்தில் கண்டால் SPAM என்று அலறி ஓடக் காரணமாகி, பின்னர் அதுவே பெயராகவும் ஆகிப்போனது. இதைப்போல் சரித்திரத்தில் பெயர் பெற விரும்பும் அன்பர்கள் சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்கி, இலவச இணைப்பாக ஒரு திரைப்படத்தையும் வாங்கி, அதன் விளம்பரத்தைப் போட்டு மக்களைக் கதற விடலாம். அர்ப்பணிப்புடன் 10 அல்லது 15 வருடங்கள் இதனைச் செய்தால் எண்ணம் ஈடேர சாத்தியமுண்டு :). இன்றைய தேதியில் SPAM என்பதைத் தமிழ்ப்படுத்தச் சொன்னால் 'சன் பிக்சர்ஸ்' அல்லது 'கலாநிதி மாறன்' நல்ல தேர்வு :D.

SPAM செய்பவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களை மின்னஞ்சல்கள், ப்ளாக்கர், வேர்ட்ப்ரஸ் பதிவுகள் மற்றும் எங்கெல்லாம் இலவசமாக கல்லா கட்ட முடியுமோ அங்கெல்லாம் சரமாரியாக கிளைகளைப் பரப்பிக் கடைபரப்புவதே தொழில் தர்மம். ஒரு கட்டத்தில் இவர்கள் பயனாளர் கணக்குகளை தானியங்கி நிரல்கள் மூலம் (bots) குவிக்க ஆரம்பித்ததும் இணைய நிறுவனங்கள் திணறிப்போயின. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மூலமே நிம்மதியாக உட்கார விடாமல் செய்யும் :) சவால்கள் தான், சவால்களைச் சந்திக்கும் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் தீர்வு :D. பல்லாயிரக்கணக்கான உண்மைப் பயனாளிகளின் கூட்ட நெருக்கடியில் கலந்து கரைந்து விடும் இவர்களைத் தடுப்பதற்காக என்ன செய்யலாம் என்று பல தரப்புகளில் ஆய்வுகள் நடந்த போது, இஸ்ரேலைச் சேர்ந்த மொனி நோர் என்பவர் இணையத்தளங்கள் தங்கள் வருகையாளர் ஒரு மனிதனா அல்லது தானியங்கி நிரலா என்பதை அறிவதற்கான வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் ஆய்வுக்குறிப்பாக வெளியிட்டார்.

கிருஷ்ணா பரத்

செய்திகளை முந்தித்தருவதில் தினத்தந்தி போல், இணையத்தில் புதுமைகளை முந்தி தருவதுடன், இலவசமாகவும் தந்து நம் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கூகுள் நிறுவனத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு 1997ம் ஆண்டு முதல் முறையாக CAPTCHA (Completely Automated PublicTuring test to tell Computers and Humans Apart) அறிமுகப்படுத்தப்பட்டது. அக்குழுவில் பலபேர் இருந்தாலும் சென்னை ஐ.ஐ.டியில் படித்த கிருஷ்ணா பரத்தும் (கூகுள் செய்திகள் பிரிவினைக் கொண்டு வந்தவர்) ஒருவர் என்பதை இங்கு விளக்குப் போட்டுக் காண்பிப்பதில் சுடுதண்ணி பெருமிதம் கொள்கிறது. இதனைப் படித்தவுடன் கைதட்டி, விசிலடித்து ஆட்டோகிராப் வாங்க விரும்பும் அன்பர்கள் பெங்களூர் கூகுள் அலுவலகத்தின் தலைவர் அறைக்கதவைத் தட்டவும் :).

பல தளங்களில் புதிய கணக்குத் திறக்கும் போதோ அல்லது உங்கள் பயனாளர் கணக்கினுள் நுழையும் போதோ, நம்மை கணினித்திரையில் முகத்தைத் தேய வைக்குமளவுக்கு உற்றுப் பார்க்க வைக்கும் காரணி CAPTCHA. சிலரின் சேட்டைகளுக்காக இன்று உலகமே குஷ்டப்படுகிறது என்றாலும், எல்லாம் பயனளார்களின் நன்மை கருதியே என்பதால் கசப்பாக இருந்தாலும் மருந்தாக நினைத்து இணைய உலகம் CAPTCHAவை சகித்துக்கொள்ளப் பழகிவிட்டது. CAPTCHA என்பது பால்வாடிப் புத்தகங்களில் இருக்கும் படம் பார்த்து கதை சொல்லும் முறைதான். படங்கள் எழுத்துக்களாகவோ, காட்சிகளாகவோ, புதிர்களாகவோ இருக்கும். தங்களின் தொழில் முடங்கிப்போவதைப் பொறுக்காத SPAM தொழிலதிபர்கள் படங்களில் இருக்கும் எழுத்துக்களைக் கிரகிக்கும் OCR (optical character recognition) தொழில்நுட்பத்தைப் பங்காளியாகச் சேர்த்துக் கொண்டு CAPTCHAக்களை உடைக்க ஆரம்பித்ததின் விளைவுகள் தான் நமது கண்களைச் சுழுக்கெடுத்து, கடுப்பேற்றி சமயத்தில் இணையப்பக்கங்களையே மூடி விட்டுப் போகுமளவுக்கு வளைந்து, நெளிந்து காட்சி தரும் CAPTCHAக்கள்.



இருதரப்பினருக்கும் போட்டி முத்திப் போனதின் விளைவே மேலே காணும் CAPTHCAக்கள். இப்போட்டியில் மனிதர்களேத் தடுமாறிப்போகும் அளவுக்கு எழுத்துக்கள் நெளிந்து போனது, OCR எம்மாத்திரம். OCR தொழில்நுட்பம் சறுக்க ஆரம்பித்ததின் காரணமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து CAPTCHAக்களை உள்ளிட்டு பயனளார் கணக்கை ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கித் தரும் நிறுவனங்கள் பல முளைத்தன. இணையம் அதன் போக்கில் உருவாக்கித் தரும் தொழில் வாய்ப்புகள் மிக சுவராசியமானவை, அவற்றுள் இதுவும் ஒன்று.

CAPTCHA உள்ளிட்டுத் தரும் நிறுவனங்களின் விளம்பரங்கள்

நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 மில்லியன் CAPTHCAக்கள் மக்களால் இணையத்தில் உள்ளிடப்படுகின்றன. ஒரு CAPTCHA சில நொடிகள் எடுத்துக் கொண்டாலும் பல லட்சம் மணி நேரம் தினந்தோறும் CAPTCHA க்களால் மனிதர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. நேரம் கிடைத்தால் சரக்கடிக்கவோ, சினிமாவுக்கோ அல்லது தொலைக்காட்சியில் மூழ்கிப்போகவோ வசதியில்லாத கூட்டம் ஒன்று CAPTCHAக்களால் வீணாகிப் போகும் பல லட்சம் மணி நேர மனித உழைப்பை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்று யோசிக்கத் தொடங்கியது. அதன் விளைவுகள் மற்றும் சில சுவாரஸ்யமான CAPTCHAக்கள் ஆகியவைப் பற்றி அடுத்த பகுதியில்.


Wednesday, March 10, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : பிங் - மைக் மூஸ்


20-11-2000 அன்று அமெரிக்காவில் ஒரு சாலை விபத்தில் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டன. தன் வீட்டுக்கருகே உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு வந்த மைக் மூஸ் அந்த விபத்தில் பலியானார். மொத்த கணிப்பொறியியல் துறையும், அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சகமும் துக்கம் அனுசரித்தது மைக் மூஸின் மறைவுக்காக. ஏன்? யார் இந்த மைக் மூஸ்?.. தொடர்ந்து படியுங்கள்.


நட்டநடு பசிபிக் கடலில் ஒரு சின்ன படகில் ஒருவரை கண்ணைக் கட்டி கொண்டு போய் விட்டால் தலைகால் புரியாம சிலிர்ப்பா ஒரு அனுபவம் கிடைக்கும். கிட்டத்தட்ட அந்த அனுபவத்தை அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் வலையமைப்பு வல்லுநர்கள். நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கணினிகள் கொண்ட வலையமைப்பில் ஒரு கணினி மட்டும் கண்ணடிக்குது என்று புகார் வரும் சமயம், அதனை சோதனை செய்யச் செல்லும் வல்லுநர் திரையரங்கில் மொக்கைப்பாடல் வரும் போது புண்பட்ட மனதை ஆற்ற மக்கள் தன்னிச்சையாகக் வெளிக்கிளம்புவதைப் போல, கொஞ்சம் கூட யோசிக்காமல் உபயோகப்படுத்தும் முதல் ஆயுதம் 'பிங்' (ping).

உலகில் பிங் நிரல் இல்லாத கணினிகளே இல்லை. முதல் காரணம் அதன் அற்புதமான பயன், இரண்டாவது காரணம் 'இலவசம்' :D. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிங் எப்படி செயல்படுது, செயல்படும் நேரத்தில் என்னென்ன நடக்கிறது, அவற்றின் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம். வலையமைப்புக்கான தொடர்பு வழிமுறைகளின் (TCP/IP - Transmission control protocol/Internet protocol) ஒரு அங்கமான ICMP - internet control message protocol என்பதனைப் பயன்படுத்தி ஒரே வலையமைப்பில் உள்ள் இரண்டு கணினிகள் ' நீ இருக்கியா' (echo_request), 'இருக்கேன், ரைட்டு' (echo_response) என்று தங்களது இருப்பை உறுதிப் படுத்திக்கொள்ளும் நிகழ்வு தான் பிங். பிங் கட்டளையமைப்பு கீழ்காணும்படி இருக்க வேண்டும்.

ping [ip address]/domain name eg: ping 192.168.1.1 / ping www.siteaddress.com


எங்கிருந்து பிங் கட்டளை பிறப்பிக்கப் படுகிறதோ அங்கிருந்து சேருமிடத்திற்குச் சிறு தகவல்பகுதிகள (data packets) ICMP வழிமுறைப்படி அனுப்படும். அத்தகவல்பகுதியின் தலைப்பகுதியில் தகவல் புறப்படுமிடம் மற்றும் சேருமிடத்தின் வலையமைப்பு முகவர் எண்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். கட்டளையில் உள்ளிடப்பட்ட முகவர் எண்ணுக்கான இடத்தை அடைந்ததும், தகவல் பகுதி திருப்பி புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் நான்கு முறை திருப்பி அனுப்பி வைக்கப்படும். இவை அனைத்தும் 128 மில்லி வினாடிகளுக்குள் நடந்து முடிந்தால் தகவல் தொடர்பு சரியாக இருக்கிறதென்று அர்த்தம். கால தாமதத்தால் 128 மில்லி வினாடிகளைத் தாண்டி காலாவதியானால் (time to live - TTL=128) கணினிகளுக்கிடையே வலையமைப்புக் கட்டமைபுக்கான உள்ளிடல்களிலோ அல்லது Firewall காரணமாகவோ சிக்கல் இருக்கலாம். அல்லது சேருமிடத்திற்குரிய வலையமைப்பு முகவர் எண்ணைக் காணவில்லை என்று தகவல் தந்தால் வேறு வழியில்லை, இடுப்பை வளைத்து, குனிந்து கணினி மேஜைக்கடியில் புகுந்து வலையமைப்புக்கான இணைப்பு கழண்டிருகிறதா அல்லது வலையமைப்பு வடத்தில் பிரச்சினையா என்று சட்டை கசங்கினாலும் கவலைப்படாமல் பார்த்துத்தான் ஆக வேண்டும்.


மேற்சொன்ன உதாரணம் ஒரு பொதுப்பயன். இவை தவிர பிங் மூலம் உங்கள் கணினிக்கும் ஒரு இணையதளத்திற்க்கோ அல்லது வலையமைப்பில் உள்ள மற்றொரு கணினிக்கோ இடையே உள்ள வலையமைப்புத் தூரம் எவ்வளவு என்பதை கணக்கிடவும், இணையதளத்தின் முகவரிக்குரிய முகவர் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம். இப்படி விவரிக்கும் போதே தலைவலிக்க வைக்கும் செயல்களை மிகச்சுலபமாக செய்து முடிக்கும் 'பிங்', ஒவ்வொரு நொடியிலும் உலகில் எதோ ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு பெருமைகளையும், ஆயிரத்திற்குமதிகமான வரிகளால் அமைக்கப்பட்ட மூலக்கூறு நிரலையும் உடைய 'பிங்' கட்டளை ஒரு பொன்மாலைப் பொழுதில் அவசரத் தேவைக்காக சில மணி நேரத்தில், தனி மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய தகவல். அத்தகைய அதிவேக செயல்திறன் கொண்ட மூளைக்குச் சொந்தக்காரர் தான் மைக் மூஸ் (மைக்கேல் ஜான் மூஸ்). ஒரு மனிதன் தன் தாய்மொழியைப் பேசுவதற்கு ஈடான வேகத்தில் நிரல்களை எழுதும் சூரப்புலி என்று தன் சக விஞ்ஞானிகளால் புகழப்பட்ட மைக் மூஸ் அடிப்படையில் ஒரு மின் பொறியாளர். மைக் மூஸ் இணையத்துக்கும், கணினித் தொழில்நுட்பத்துக்கும் படைத்த ஒரு பானைப் படைப்புகளில் ஒரு சோறு தான் இந்த பிங்.

பிங் இவ்வளவு பிரபலமடையும் என்று தெரிந்திருந்தால் உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்திருப்பேன் என்று பின்னாளில் கூறிய மைக் மூஸ், USENIX அமைப்பின் 1993 ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பாராட்டு விழாக்கள் ஏதுமின்றி :D மொத்தம் 26 விருதுகள் அளித்துக் கவுரவிக்கப்பட்டவர். அமெரிக்கப் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையில் பணியாற்றி வந்த மைக் மூஸ் பாதுகாப்புத் துறைக்காக உலகின் முதல் முப்பரிமாண வடிவமைப்பு மென்பொருளைக் கட்டமைத்தவர் (BRL-CAD - ballistic reaseach laboratory, computer aided design). தான் வாழும் காலத்தில் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று கல்லூரி நாட்களிலேயே பட்டியலிட்டு வைத்திருந்த மைக் மூஸ், தன் 42வது வயதிலேயே கிட்டத்தட்ட அப்பட்டியலை முடிக்கும் தருவாய்க்கு வந்துவிட்டார். நண்பர்கள் அவரைக் கடைசியாக சந்தித்த தருணத்தில் தனது அடுத்த பட்டியலைத் தயார் செய்து கொண்டிருந்தார் மைக் மூஸ். பட்டியல் மட்டுமே இருக்கிறது.


வலையமைப்பில் யாரைத் தேடினாலும் பார்த்துச் சொல்லும் பிங், "ping mike muuss" என்று கேட்டால் தரும் பதில் "ping request could not find host mike muuss".

Saturday, March 6, 2010

இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 3 (முற்றும்)

இணையதள முகவரிகளை அவற்றிற்குரிய வலையமைப்பு முகவர் எண்களாக மாற்றித்தரும் முகவரி வழங்கிகள் மற்றும் அவை எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஓரளவு புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இப்பகுதியில் ஒவ்வொரு பயனாளரும் தங்களின் முகவரி வழங்கிகள் குறித்தான விவரங்களை அறிந்து கொள்வது பற்றியும், ஒவ்வொரு முறையும் இணைய தளங்களைப் பார்வையிடும் போது எங்கெங்கு பயனாளரின் வேண்டுகோள் பயணிக்கின்றன என்பது குறித்தும், இன்னபிற தகவல்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.


உங்கள் கணினியில் start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ipconfig/all என்ற கட்டளையினை வழங்கினால் உங்கள் வலையமைப்புத் தொடர்பு குறித்த ஜாதகத்தினைப் பெற்று கிரக நிலை குறித்து அறிந்து கொண்டு மகிழலாம். (பார்க்க படம்). அவற்றுள் DNS servers என்ற தலைப்பில் உங்களின் முதல் நிலை இணைய முகவரி வழங்கியின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் காணலாம். அனேக முகவரி வழங்கிகள் உங்களுக்கான இணையத்தொடர்பு வழங்கும் நிறுவனங்களாலேயே நிர்வக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினைப் பொருத்து வழங்கிகளின் எண்ணிக்கை இருக்கும். துரிதமான சேவையின் பொருட்டு சுழல்முறையில் வேண்டுகோள்கள் வழங்கிகளுக்கிடையே பிரித்தளிக்கப்படும்.



அதேபோல் ஒரு இணையதள முகவரியினை உலாவியில் உள்ளிடும் போது உங்கள் வேண்டுகோள் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள start->cmd->run என்ற இடத்திற்கு சென்று tracert www.siteaddress.com என்ற கட்டளையினை வழங்கினால் காணப்பெறலாம். (பார்க்க படம்).

வதவதவென தளங்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் சொந்தமாகவே முகவரி வழங்கிகளை வைத்து நிர்வகிப்பதுண்டு, உ.தா. Microsoft. வழங்கிகளின் கட்டமைப்புகள் குறித்தான தெளிவான புரிதல் இருந்தாலோ அல்லது தினமும் பொழுதுபோகாமல் வெகுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பிருந்தாலோ சொந்தமாக முகவரி வழங்கிகள் வைத்து விளையாடலாம் :). அதே போல தடையில்லா இணைய இணைப்பும், மின்சார வசதியும் கொண்ட கணினிகளை 24 மணி நேரமும் இயக்கும் வரங்களைப் பெற்ற அதிர்ஷடசாலிகள் தங்கள் கணினியிலேயே தங்கள் இணையதளத்தை சேமித்து இணையத்தில் வலம் வரச் செய்யலாம் (self -webhosting). இது போன்ற சூழல்களில் வழங்கிகளாக கட்டமைக்கப்படும் கணினிகளின் செயல்திறன் மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரே நேரத்தில் கூட்டம் கும்முவதால் சில நேரங்களில் உங்கள் இணையத்தளம் முக்கிமுனகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதில் www.cricinfo.com தளத்தின் இணைய வழங்கி சச்சினை விட அதிகமாக சோர்வடைந்து மயங்கியது சமீபத்திய உதாரணம். அது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழும் வாய்ப்பிருக்கும் தளங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய வழங்கிகளை நிர்வகித்து வருகையாளர்களைச் சுழல் முறையில் வழங்கிகளிடையே பிரித்தனுப்புவது வழக்கம். அது போல அவற்றுள் ஏதேனும் ஒரு வழங்கி செயலிழந்தால் கூட, இணையதளம் தொடர்ந்து செயல்பட வைக்கும் பொறுப்பினை மீதமிருப்பவை கவனித்து கொள்ளும்.



மேலும் ஒரு இணையதளத்திற்கான பாதுகாப்பில் அவற்றின் முகவரி வழங்கிகள் மிகமிக முக்கியமான பங்காற்றுகின்றன. பொதுவாக முகவரி வழங்கிகளின் வலையிணைப்பு முகவர் எண்ணைத் தெரிந்து கொள்வது மிகச் சுலபம் என்பதால் எந்நேரமும் விஷமிகள் உள்ளே புகுந்து குச்சுப்புடி விளையாட வாய்ப்புண்டு, எனவே பாதுகாப்பு என்பது உண்மையாகவே கடுமையானதாக இருக்க வேண்டும், தாக்குதல் நடந்த பின் 'இனியும் பொறுக்க மாட்டோம், கடுமையாக கண்டிக்கிறோம்' என்று வீரவசனம் பேசி சமாளிக்க முடியாது. காரணம் முகவரி வழங்கியினுள் விஷமிகள் ஊடுருவினால், எந்தவொரு தளத்திற்குரிய முகவர் எண்ணிற்குப் பதிலாக அவர்களுக்குப் பிடித்ததை மாற்றி வைத்து விட்டு ஜோதியில் கலந்து விடுவார்கள். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் தளத்திற்கு இம்முறையினைப் பின்பற்றி முகமூடி மாட்டப்பட்டது, முகமூடி உபயம்: இணையப்படைக் குடும்பத்தார், ஈரான் :).


நம் கணினிகள் உறங்கினாலும் இணையம் உறங்குவதில்லை. ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் யாருக்காகவோ அது ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த ஒவ்வொரு கணமும் எத்தனையோ முகவரி வழங்கிகள், இணைய வழங்கிகள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொத்த வலையமைப்பின் இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்புகள், நிறுவனங்கள் ஆகிய அனைவரும் கூட்டாகச் சேர்ந்து நிறுத்தாமல் தொடர்ந்து ஆடும் ஆட்டமே, நம்மை இணையப் பக்கங்களை விரல்சொடுக்கும் நேரத்தில் பார்த்துப் படிக்க வகை செய்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இத்தொடர். படித்தவர்கள் அனைவருக்கும் உபயோகமானதாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் இத்தொடர் நிறைவு பெறுகிறது, ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி கூறி சுடுதண்ணி விடைபெற்றுக் கொள்கிறது :).


Tuesday, March 2, 2010

இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 2



கணினியில் இணையதளத்தைப் பார்வையிடும் முன் நாம் உள்ளிடும் இணையதள முகவரி முதலில் வலையிணைப்பு முகவர் எண்ணாக மாற்றப்பட்டு, அதன் பின் அந்த முகவர் எண்ணுக்குரிய வழங்கியிலிருந்து தேவையான பக்கங்களைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதையும், அவ்வாறு தள முகவரிகள், முகவர் எண்ணாக மாற்றம் பெறுவதை ping கட்டளை மூலம் காணப் பெற்றதையும், கடந்த இரண்டு நாட்களாக ஆழமான ஆன்மீகத்தில் மூழ்கித் திளைத்து மறந்திருக்க வாய்ப்பிருப்பதால் அவற்றை நினைவுறுத்தித் தொடரப்படுகிறது :).

முதலில் தள முகவரிகள் எவ்வாறு முகவர் எண்ணாக மாற்றம் பெறுகிறது?, யார் மாற்றுகிறார்கள்?. இந்த வேலையைச் செய்வது இணைய முகவரி வழங்கிகள் (DNS servers). ஒரு தளத்தின் முகவரியை உலாவியில் உள்ளிட்டதும், உலாவி செய்யும் முதல் வேலை இணைய முகவரி வழங்கிகளைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் தளத்தின் முகவர் எண்ணைப் பெற்று, அதனை நோக்கிப் பயணிப்பது தான். இந்த இணைய முகவரி வழங்கிகளில் இந்த நிமிடத்தில் செய்ல்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை தளங்களின் விபரங்களும் இருக்காது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் என்ன நடக்கும்?. வகுப்பறையில் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது பேனா மை தீர்ந்து விட்டாலோ அல்லது பேனாவே இல்லாமல் இருந்தாலோ முன்னால் அமர்ந்திருப்பவரிடம் கேட்டுப் பார்ப்போம், அவரிடம் இல்லையென்றால் அவருக்கு முன்னாடி இருப்பவரிடம், அங்கும் இல்லையென்றால் அதுக்கும் முன்னாடி.. இப்படியே சலசலப்பைக் கிளப்பி தொல்லை தாங்க முடியாமல் கடைசியில் பேராசிரியரே 'என்னப்பா வேணும், பேனாவா.. இந்தா' என்று கொடுத்துதவும் சம்பவங்களைக் கடந்திருப்பீர்கள் அல்லது பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அப்படியொரு சங்கிலித்தொடரமைப்பில் தான் இந்த வழங்கிகள் செயல்படுகின்றன.

கேட்கப்படும் தளத்தின் முகவர் எண் விவரங்கள் வழங்கியில் இல்லாத பட்சத்தில் அது மைய வழங்கியிடம் தொடர்பு கொள்ளும், அதிலும் இல்லையென்றால் கேட்கப்படும் இணைய முகவரியின் அதிகாரப்பூர்வ வழங்கியிடம் கேட்கப்படும். அங்கும் இல்லையென்றால் அப்படியொரு தளமே இல்லையென்று உலாவி கணினித் திரையில் புன்னகைக்கும். இவற்றில் மைய வழங்கிகள் பிரதேச அளவில் பல நிலைகளில் உள்ளன. உலக அளவில் ARIN (Canada, United States, some islands of the Pacific) · RIPE NCC (Europe, parts of Asia) · APNIC (Asia, Pacific region) · LACNIC (Latin America and the Caribbean) · AfriNIC (Africa) ஆகிய அமைப்புகள் முக்கிய மைய வழங்கிகளாக செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கும் மேலாக இணைய முகவரியின் தலைப்பகுதிக்கேற்ப அதிகாரப்பூர்வ வழங்கிகளும் (authoritative servers) செயல்படுகின்றன. அவைதான் கேட்கப்படும் இணையதளம் இருக்கிறதா, இல்லையா என்ற உறுதியான மற்றும் இறுதியானத் தகவலைத் தருகின்றன.


தள முகவரிகளின் தலைப்பகுதியைப் (top level domains) பொருத்து முகவரிகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. உ.தா. .com, .org, .net, .biz, .edu etc.... பின்னாளில் இணைய தளங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிய பின் மேலாண்மை வசிதிக்காகப் பல புதிய வகைத் தலைப்பகுதிகள் ICANN அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது, உ.தா .in,.univ,.uk,.au,.us etc. இது போன்ற ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி உள்ளது. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பினை ICANN (internet corporation for assigned names and numbers) சர்வேதச அமைப்பின் கண்காணிப்பின் கீழ் பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உ.தா. .com, .org, .net ஆகிய வகைத் தலைப்பகுதியைக் கொண்ட இணையதளங்களுக்கான அதிகாரப்பூர்வ வழங்கியை Network Solutions Inc. என்ற நிறுவனம் நிர்வகிக்கிறது. ஒரு இணையதள முகவரி புதிதாகப் பதிவு செய்யப்படுகிறது என்றால் அதன் தலைப்பகுதி (.com/.net..etc) வகைக்குரிய அதிகாரப்பூர்வ வழங்கியில் அந்த தள முகவரி அந்த தளத்தினுடைய வழங்கியின் முகவர் எண் தகவலோடு சேர்க்கப்பட்டு விடும், எனவே எந்த ஒரு தலைப்பகுதி வகைக்கும் அந்த நொடிவரை செயல்பாட்டில் இருக்கும் அனைத்து தளங்களின் முகவரிகளும் இந்த அதிகாரப் பூர்வ வழங்கிகளில் இருக்கும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி இருப்பதால் தான் ஒரே முகவரியில் இரு தளங்கள் இருக்க சாத்தியப்படுவதில்லை. அதே நேரம் www.example.com மற்றும் www.example.org ஆகிய இரண்டும் வெவ்வேறு வகை என்பதால் இரண்டும் தனித்தனியாக செயல்படுவது சாத்தியமே. அது போன்ற குழப்பங்களை சமாளிக்கவே பெரிய நிறுவனங்கள் தங்கள் தளங்களின் முகவரியை அனைத்து தலைப்பகுதிகளுக்கும் பதிவு செய்து விடுகின்றன. (உ.தா. microsoft.com, microsoft.net, microsoft.org..)


தன்னிடம் தளமுகவரி குறித்த விவரங்கள் இல்லாத நிலையில் இணைய முகவரி வழங்கிகள் எப்படி மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து கேட்டுப்பெறுகிறது என்பது குறித்துப் பார்த்தோம். ஒரு முறை இப்படி பயணித்துப் பெறும் தகவல்களை தற்காலிகமாக இணைய முகவரி வழங்கி தனது நினைவகத்தில் சேமித்து கொள்ளும் (caching). அதுபோக எல்லா இணைய முகவரி வழங்கிகளும் தங்கள் மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து மொத்தமாக அனைத்துத் தகவல்களையும் குறிப்பிட்டக் கால இடைவெளியில் தனது நினைவகத்தில் புதுப்பித்துச் சேமித்துக் கொள்ளும். பயனாளர்களுக்குத் தேவையான தகவல்களை ஒவ்வொரு முறையும் மேல்நிலை வழங்கிகளுக்குச் சென்று தகவல் பெறாமல் தானே வழங்குவதன் மூலம் குறுகிய நேரத்தில் தேவையைப் பூர்த்தி செய்யவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது மேல்நிலை வழங்கிகளில் இருந்து தகவல்களைத் திரட்டிப் புதுப்பித்துக் கொள்வதால் முடிந்தவரை இணையத்தின் தற்கால நிலையினைப் பிரதிபலிக்கவுமே இந்த ஏற்பாடு. அந்த கால இடைவெளியில் உருவாக்கப்படும் புதிய இணையத் தளங்களையோ அல்லது ஒரு வழங்கியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படும் தளங்களையோ பார்வையிட முற்படும் போது சிரமங்கள் நேருவது உண்டு.


இதில் முதல் நிலை இணைய முகவரி வழங்கிகள் மிகவும் முக்கியம். அவற்றின் செயல்பாட்டுத் திறன், தகவல்களை மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து புதுப்பித்து கொள்ளும் கால இடைவெளி ( பொதுவாக 24 முதல் 72 மணி நேரம் வரை), எந்த அளவிற்கு மேற்கொண்டு பயணிக்காமல் தளத்திற்குரிய முகவர் எண்ணைத் தரமுடிகிறது ஆகியவை பயனாளரின் இணைய அனுபவம் விரைவானதாகவும், சொகுசாகவும் அமைவதற்கு மிக முக்கியம். அவற்றை யார் நிர்வகிக்கிறார்கள், அவற்றின் பாதுகாப்புக் குறைபாடுகளாலும் ஏற்படக் கூடிய விபரீதங்கள், அவை குறித்த தகவல்களை நாம் அறிந்து கொள்வது எப்படி, ஒரு தளத்தினைப் பார்வைக்குக் கிடைக்கும் முன் பயனாளரின் வேண்டுகோள் தகவல் எங்கெங்கு பயணிக்கின்றன, புதிய இணைய முகவரிகளைப் பதிவு செய்யும் நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.... அதுவரை உலாவியைத் திறவுங்கள்.. இணையம் வரட்டும் :).