Saturday, August 18, 2012

உலகைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 14


ஸ்விடன் மூலம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசான்ஞ் பிணையில் வெளிவந்து ஏறக்குறைய 20 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த இருபது மாதங்களில் என்னவெல்லாம் நடந்ததது, ஜூலியன் இப்போது எங்கே இருக்கிறார், அமெரிக்காவின் நெருக்கடியினால், குற்றவிசாரணைக்கு என்ற ஒரே சப்பைக் காரணத்திற்காக மட்டுமே ஸ்வீடன் செல்ல வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கும் ஸ்வீடனையும், பிரிட்டனையும் உலகமே, ஜூலியனின் தாய்நாடான ஆஸ்திரேலியா உட்பட  ஊமையாய் வேடிக்கை பார்த்த நேரத்தில், கிராமத்து பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்ட கதாநாயகனுக்காக இக்கட்டான நேரத்தில் ஆதரவாக சாட்சி சொல்ல வரும் குணச்சித்திர நடிகர் போல ஒரு நாடு தன் திராணியை நிரூபித்த நிகழ்வுகள், லண்டனில் மற்றும் உலகமெல்லாம் நடந்த ஜூலியனுக்கு ஆதரவான போராட்டங்கள், இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையேயும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய ஆவணங்கள் ஆகியவை குறித்து ஒரு அலசல்.

தாங்கள் வெளியிட்டத் தகவல்களால் மொத்த உலகையும் இணையத்தை சல்லடைப் போட்டு மேய வைத்த விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன், கடந்த இரண்டு மாதங்களாக தங்கி இருப்பது லண்டனில் இருக்கும் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் ஒரு 15X15 அடி அளவிலான அறையில். பிணையில் இருக்கும் ஜூலியன் தினமும் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் உள்ளேன் ஐயா சொல்ல வேண்டும் என்பது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் ஒன்று. பிணையில் இருந்தாலும், ஜூலியன் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்குகள் மேல் கோர்ட்டுகளிலும், மென்மேல் கோர்ட்டுகளிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அலசி ஆராய்ந்து ஸ்வீடனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.



ஸ்வீடனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டதும், எந்நேரத்திலும் ஜூலியன் கைது செய்யப்பட்டு ஸ்வீடனுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்றும், அடுப்பில் உலை கொதிக்கும் போதே தட்டெடுத்து உட்காரும் அகோரப்பசியில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் ஸ்வீடனுக்கு விரைந்து விமானநிலையத்தில் ஜூலியனின் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் செய்திகள் பரவின. 'இது பத்தி உங்க கருத்து என்ன", இந்த சமயத்தில நீங்க எப்படி பீல் பண்றீங்க?, உங்கள அமெரிக்கால வச்சுக் கொன்றுவாங்கன்னு உங்களுக்கு தோணுதா?" போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்விகளோடு ஜூலியனைத் தேடி வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டுக்குச் சென்ற செய்தியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சிட்டுக்குருவிப் பறந்து விட்டது.


ஜூலியன் மாயம், லண்டனில் பரபரப்பு என்று உலகமெ மாலை முரசில் படித்துக் கொண்டிருந்த போது அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் ஜீலியனிடம் இருந்து ஒரு செய்தி அறிக்கை வந்து சேர்ந்தது, அதில் தான் அரசியல் புகலிடம் கோரி ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் விண்ணப்பித்து இருப்பதாகவும், தன் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவெடுக்கும் வரை தனக்கு பாதுகாப்பளிப்பதற்காக தங்கள் தூதரகத்திலேயெ தங்க வைக்க ஈக்வடார் தூதரகள் அனுமதியளித்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.



ஜூலியனின் இந்த நகர்வு மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவும், பிரிட்டனும், ஸ்விடனும் சேர்ந்து பிண்ணிய வலையில், லண்டனில் காவல்துறையின் கண்காணிப்பில் தங்கியிர்ருக்கும் ஜூலியனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவரது பிணைக்காக பணம் செலுத்திய நண்பர்களுக்குக் கூட இது குறித்து முன்கூட்டியத் தெரிவிக்கப் படவில்லை. தூதரகம் செல்லும் வழியில் வைத்துக் கூட கைது செய்யப்படலாம் என்ற நிலையில் ஜூலியன் அரசியல் புகலிடம் கோரி ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த ஜூலியனின் நடவடிக்கை பலராலும் பாராட்டவும், விமர்சிக்கவும் பட்டது.  சர்வதேச சட்டப்படி தூதரகங்களுக்குள் புகுந்து சட்ட நடவடிக்கை எடுக்க தூதரகத்தின் அனுமதி வேண்டும். தூரகத்திற்கு வெளியே லண்டன் போலிஸும், ஜூலியனின் ஆதரவாளர்களும் குவிந்தனர். ஜூலியன் கதவிடுக்கில் வெளியே கை நீட்டினால் கூட பிடித்து இழுத்துக் கைது செய்வதற்கு தயாராய் போலீஸ். அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க கும்பலாய் ஆதரவாளர்கள் என யுத்தக்களம் போல் காட்சியளித்தது.

ரபேல் கொரயா - ஈக்வடார் அதிபர்

ஜூலியன் உலகமெங்கும் புகழ்பெற்ற நபர், அமெரிக்காவிலும், ஐரோப்பிய யூனியனில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ள நபர், அவருக்குப் புகலிடம் கொடுப்பது என்பது அத்தனை எளிதல்ல, ஜூலியனின் விண்ணப்பம் நேரடியாக ஈக்வடார் நாட்டில் அதிபரான ரபேல் கொரயாவிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஈக்வடார் கேட்ட சில முக்கிய ஆவணங்களையெல்லாம், ஜூலியனின் தாய், ஆஸ்திரெலியாவிலிருந்து ஈக்வடார் சென்று நேரில் சமர்ப்பித்தார். ஈக்வடார் என்ன முடிவெடுக்குமோ என்று பதட்டத்திலிருந்த மக்களுக்கும், ஊடகத்திற்கும் அருமருந்தாக லண்டம் ஒலிம்பிக்ஸ் அமைந்தது :).  கடந்த வியாழக்கிழமை வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பினை ஈக்வடார் அறிவித்தது, ஜூலியனுக்கு தாங்கள் புகலிடம் அளிப்பதாக.



தூதரகத்தில் இருந்து ஈக்வடார் செல்வதற்கு விட மாட்டோம், கதவிற்கு வெளியே கால் வைத்தால் கைது செய்வோம் என்று பிரிட்டன் மல்லுக்கு நிற்கிறது மேலும் தூதரகத்திற்குள் புகுந்து ஜூலியனைக் கைது செய்யவும்  தயங்க மாட்டோம் என்று மிரட்டியது. அரசியல் புகலிடம் பெற்ற ஒருவரைக் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி மறுப்பது சர்வதேச சட்டத்தினை அவமதிக்கும் செயல் என்று கூறிய ஈக்வடார், பிரிட்டனின் மிரட்டலைத் தொடர்ந்து ALBA (Bolivarian Alliance of the Americas) மற்றும் OAS (Organization of American States) அமைப்புகளிடன் பிரச்சினையை எடுத்துச் சென்றது. ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தினைக் கூட்டி ஜூலியன் குறித்து விவாதிப்பதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இக்கோரிக்கை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது எதிர்த்து வாக்களித்த மூன்று நாடுகள் அமெரிக்கா, கனடா மற்றும் ட்ரினிடாட் & டுபாக்கோ. அடுத்த வாரம் ஜூலியன் செல்லப்போவது அரசியல் புகலிடம் தந்த ஈக்வடாருக்கா அல்லது விசாரணைக்காக அழைத்து அமெரிக்காவிடம் கையளிக்கப்போகும் ஸ்விடனுக்கா என்று தெரியவரும்.

அடுத்த பகுதியில் கடந்த இருபது மாதங்களில் ஜூலியன் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், ஊடகங்களுடனான பிரச்சினைகள் மற்றும் அரசியல் புகலிடத்திற்கு ஈக்வடாரைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஆகியவை குறித்துப் பார்ப்போம்.


ஜுலியனின் செயல்கள் அனைத்திலும் எனக்கு ஒப்புதலில்லை. ஆனாலும் அவற்றுக்குத் தண்டனை வாழ்நாள் சிறை அல்லது மரணம் என்பதும், அதற்காக நாடுகடத்தப்படுவதம் சரியல்ல - அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால் ஜூலியனுக்குக் கிடைக்கப் போகும் தண்டனை குறித்து  - ரபேல் கொரயா, ஈக்வடார் அதிபர்.

Sunday, April 22, 2012

அலெக்ஸ் பால் மேனன்

வாழ்க்கையில் எத்தனையோ நபர்களைச் சந்தித்தாலும், மிகச்சிலர் முதல் சந்திப்பின் போதே நம் மனதின் நம்பிக்கைக்குகந்தவராக மாறிவிடுவர். அதுபோன்ற மிகச்சிலரில் ஒருவர் தான் அலெக்ஸ் பால் மேனன். முதல்முறை திண்டுக்கல் தண்ணீர்ப்பந்தல் என்னுமிடத்தில் உள்ள தேனீர்க் கடையில் அலெக்ஸை சந்தித்த நிகழ்வு முதல், கல்லூரிக்காலத்தின் கடைசி நாளில், 'என்ன நடந்தாலும் எழுதுறத மட்டும் நிறுத்திடாதடா' என்று சொல்லிப் பிரியும் நாள் வரை அலெக்ஸ் நீக்க மற நிறைந்திருந்தார்.

செயல்படாமல் இருந்த கல்லூரித் தமிழ்ச் சங்கத்தினை மீண்டும் செயல்பட வைக்கப் போராடிய நாட்களும், நிதிப் பற்றாக்குறையால் கைக்காசைச் செலவு செய்து கல்லூரிக்கான மாத இதழ் தயாரிப்பில் கண்கள் சிவந்த தூங்கா இரவுகளும், இருக்கும் காசில் இருவரும் பசியாற நடைபாதை கம்பங்கூழ் கடைகளில் சங்கமித்து சித்தாந்தம், சமுதாயம், தமிழ், பொறியியல், அரசியல் என சகலமும் விவாதித்த நாட்களும் இன்றும் கண்களில் நிழலாடுகிறது.
 
பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள மதுரையில் உள்ள பிரபலக் கல்லூரிக்குச் சென்ற போது அங்கு நடந்த சில விதிமுறை மீறல்களை அனைவரின் முன் ஆக்ரோஷத்துடன் எதிர்த்து அக்கல்லூரி முதல்வரிடம் வாதிட்டது, தொடர்ந்து கல்லூரி மாத இதழ்களின் மூலம் திரட்டிய நிதியை முதலாமாண்டு ஏழை மாணவனின் சக்கர நாற்காலி வாங்க வழங்கியது என அலெக்ஸின் அநீதி கண்டு பொறுக்காத மனத்திற்கும், கருணையுணர்வுக்கும் சான்றாக சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
கல்லூரிக் காலம் கடந்த பிறகு, வேலை தேடி சென்னை மாநகரைக் காலால் அளந்து கொண்டு திரிந்த நாட்களில் அலெக்ஸ் இந்திய ஆட்சியாளர் தேர்வுக்காகப் படித்து கொண்டிருந்த போது மீண்டும் சந்தித்தேன். உடன் படித்தவர்கள் நான்கு இலக்க சம்பளத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளில் பணியில் சேர்ந்து கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் தனியறையில் ஒரு தவமியற்றுவது போல் படித்துக் கொண்டிருந்த அலெக்ஸைக் கண்ட போது பிரமிப்பில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பின்னாளில் பொறியியல் பாரம்பரியச் சடங்கின் சட்டத்திட்டத்தின் படி கப்பலேறிய சில மாதங்களில் இணையத்தில் தமிழ் நாளிதழ்களை மேய்ந்து கொண்டிருந்த போது தமிழகத்தில் இருந்து இஆப தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் அலெக்ஸின் பெயரைக் கண்டதும் நானே வென்றதைப் போல் உடனிருப்பவர்கள் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பெருமையடைந்தேன்.


ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் பேசும் போதும், தன் பணியில் மனநிறைவுடன்,உணர்வுப்பூர்வமாக செயலாற்றும் பாங்கினை குரல் பிரதிபலிக்கும். கடந்த முறை பேசிக் கொண்டிருந்த போது தான் பணியாற்றும் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு தங்கள் தாய்மொழியில் கணினி பயில வசதியேற்படுத்திக் கொடுத்ததைப் பற்றியும், அதற்கான தொழில்நுட்பங்கள் பல இந்தியாவிற்குள்ளேயேக் கேட்பாரற்றுக் கிடப்பதைப் பற்றியும் அங்கலாய்த்துக் கொண்டு விடைபெற்றுக் கொண்டோம்.
 
கடத்தப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்

இன்று செய்திகளில் மாவோயிஸ்ட் படையினரால் அலெக்ஸ் கடத்தப்பட்டார் என்ற செய்தி கண்டதும் மனம் ஸ்தம்பித்துப் போனது. அலெக்ஸின் இரண்டு பாதுகாவலர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தின் துயரங்கள் இன்னும் ஏதும் தெரியவரவில்லை. சொகுசு வாழ்க்கை வாழ வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும், அனைத்தையும் உதறித்தள்ளி அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதற்காக மட்டுமே இஆப பணிக்குச் சென்ற அலெக்ஸிற்கு சிவப்புச் சித்தாந்தத்தின் பரிசு?. 

இத்தனை வருடங்களில் அலெக்ஸ் எதற்கும் பயந்ததில்லை, தன் கொள்கைளில் துளியும் சமரசம் செய்து கொண்டதில்லை, எளிமை கலந்து நகைச்சுவையுடன் பேசும் விதத்திலும் அப்படியே. யார் ஆட்சியாளர் என்று சரியாகத் தெரியாமல் குழம்பியக் கடத்தல்காரர்களிடம் நான் தான் அலெக்ஸ் என்று நெஞ்சுரத்துடன் சென்ற நெல்லைச் சீமையின் மண்ணின் மைந்தன் விரைவில் மீண்டு வரட்டும்.

இன்று அலெக்ஸ் பணிபுரிந்த சட்டிஸ்காரின் சுக்மா மாவட்ட மக்கள் கடத்தப்பட்டிருக்கும் தங்கள் மாவட்டத்தின் முதல் ஆட்சியாளரை விடுவிக்கக் கோரிப் போராட்டங்களை முன்னெடுத்திருப்பதே அலெக்ஸின் சாதனைகளுக்குச் சான்று.
 
நிச்சயம் நலமாக திரும்பி வருவீர்கள் அலெக்ஸ், நீங்கள் இன்னும் தொடுவதற்கு ஆயிரம் சிகரங்களும், நாம் கண்விழித்து தேநீர் சுவைத்து விவாதிக்க இன்னும் எத்தனையோ விஷயங்களும் பாக்கியிருக்கிறது.