எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் ‘அண்டாகா கசம், அபுகா குகும், திறந்திடு சீசேம்’ என்றவுடன் திறந்த குகைக்கதவுகளைப் பார்த்து வாய்பிளந்த தமிழ்ச்சமூகம் இன்று மனிதக்குரல்களைக் கிரகிக்கும் மென்பொருட்கள் மூலம் தங்கள் கணிணி, செல்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பூட்டிவைப்பது சர்வசாதரணமாகி, சிவாஜி திரைப்படத்தில் ரஜினி மடிக்கணிணியைத் திறக்கும் உத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குரல்கிரகிக்கும் தொழில்நுட்பத்தினைக் குறித்தான குரல்களைத் திரையரங்கிற்குள் கேட்க முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது. இப்படிக் கற்பனைக் கதைகளில் கண்டதையும், கேட்டதையும் விஞ்சுமளவுக்கு ஹேக்கிங்கில் உலகையே கலக்கிய அசத்தல் மன்னன் தான் பர்னபி ஜாக்.
நியுஸ்லாந்தில் பிறந்து பின்பு அமெரிக்கவாசியாகிப் போன பர்னபியின் ஹேக்கிங் சாதனைகளுக்கு வானமே எல்லை. மற்றவர்களுக்கும் பர்னபிக்கும் இருந்த வித்தியாசம், அவர் தேர்ந்தெடுத்த களம். பொதுமக்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தும், அதே சமயம் முக்கியமான இலத்திரணியல் சாதனங்களை ஹேக்கிங் செய்து அவற்றில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவற்றை எப்படி சரி செய்வது என்று உதவி செய்து சுபம் போடுவது தான் பர்னபியின் பாணி.
குஷ்பூவின் ஜாக்பாட்டுக்குள் நாம் தொலைந்து போய் வெகுநாட்களாகிவிட்ட காலகட்டத்தில், பர்னபியின் ஜாக்பாட் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகையும் மலைக்க வைத்தது. 2010 நடந்த ஹேக்கர்களின் கருத்தரங்கில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை மேடையில் வைத்து அவற்றை அனைவரின் கண் முன்னே சில நிமிடங்களில் அவற்றிலிருந்து தானாகப் பணத்தினைக் கொட்ட வைத்து கிளுகிளுப்பான பீதியை கிளப்பியவர் பர்னபி. அதற்கு பர்னபி வைத்த பெயர் ஜாக்பாட்டிங் (Jackpotting). பர்னபி நிரல்கள் எழுதுவதில் புலி. கணிணியில் ஏதெனும் ஒரு பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டால் உடனே அதனைப் பயன்படுத்தி கணிணியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தந்திரங்களைச் செய்யும் நிரல்கள் எழுதுவதில் நிபுணர். அடுத்த இரண்டு வருடத்தில் பர்னபியின் அடுத்த அதிரடி வெளியீடாக வந்தது இன்சுலின் பம்ப்.
கணிணித் தொழில்நுட்பம் வளர, வளர தங்களையும் ஒருசேர நவீனப் படுத்திக் கொண்ட துறைகளில் மிக முக்கியமானது மருத்துவத்துறை. மருத்துவ உபகரணங்கள் அனைத்து கணிணிமயமாகின, நோயாளிகள் பயன்படுத்து இன்சுலின் பம்ப், பேஸ்மேக்கர் போன்ற கருவிகள் வடமில்லா வலையமைப்பு வசதிகளோடு சந்தைப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் 30 அடி தூரத்தில் இருக்கும் நோயாளியின் இன்சுலின் பம்பினை ஹேக் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் விரும்பும் கால இடைவெளி மற்றும் அளவில் இன்சுலின் மருந்தினை நோயாளியின் உடம்பில் செலுத்திக் காண்பித்து திகிலேற்படுத்தினார் பர்னபி. அளவிற்கு மீறிய இன்சுலின் மருந்து மரணத்தினை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்னத்த செய்ய போறானோ என்று அகில உலகத்தையும் அன்னாந்து பார்க்க வைத்து விட்டு பர்னபி செய்த அடுத்த சாதனை தான் நோயாளிகள் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவும் பேஸ்மேக்கர் கருவியினை ஹேக் செய்து கட்டுக்குள் கொண்டு வருவது. உலகில் கொளுத்த பணபலம், அதிகார பலமிக்க பெரும்பாலான முதலைகள் பேஸ்மேக்கர்களில் தான் உயிர்வாழ்கின்றன என்பதால் இது குறித்த செய்திகளை பர்னபி வெளியிட்ட போது மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
பேஸ்மேக்கர் கருவியைக் கட்டுக்குள் கொண்டுவந்து இதயத்துடிப்பினை அதிரடியாக அதிகரித்து ஆளைத் தீர்த்துக்கட்டுவது வரை சுமார் 50 அடி தூரத்தில் இருந்து தன்னால் செய்ய முடியும் என்று அறிவித்து 2013ல் நடக்க விருந்த சர்வதேச ஹேக்கர்ஸ் கருத்தரங்கில் செயல்முறை விளக்கத்தோடு செய்து காட்டுவதாக அறிவித்து பரபரப்பினை ஏற்படுத்திய பர்னபிக்கு கருத்தரங்கில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பர்னபியை யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறி அந்த ஒரு மணி நேரத்தை பர்னபியின் நினைவஞ்சலிக்கென ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது தான் பெருஞ்சோகம்.
கருத்தரங்கிற்கு மிகச் சில நாட்களுக்கு முன்பு பர்னபி தன் அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்து கிடந்தார். சம்பவ தினத்தன்று காலை பர்னபியைக் காணச் சென்ற அவரது காதலி கொடுத்தத் தகவலின் பேரில் காவல்துறை குவிந்தது. உலகில் மிகமிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட, வெறும் 35 வயதே ஆன பர்னபியின் மரணம் இணையச்சமூகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மைக்கெல் ஹாஸ்டிங்கின் மரணத்திற்கும், பர்னபியின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஒரு பிரிவும், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலதிபர்களின் குண்டர்கள் கைங்கர்யம் என்று ஒரு பிரிவும் கூறி வந்தாலும், சம்பவ இடத்திற்கு சென்ற சில மணித்துளிகளிலேயே இம்மரணத்தில் எந்த சந்தேகமோ, சர்ச்சையோ இல்லை என்று காவல்துறை முற்றுப்புள்ளி வைத்ததும், பர்னபியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை பல மாதங்களுக்குப் பின்பே வெளியிடப்பட்டதும், அதில் விபரீதமான போதை மருந்துக் கலவையினை உட்கொண்டதால் மரணம் சம்பவித்தது என்று கூறியதும் பெரிதும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. முக்கியமாக பிரேதப் பரிசோதனை தகவல்கள் ஏதும் இல்லாமலேயே இம்மரணத்தில் கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை என காவல்துறை கூறியது மென்மேலும் சந்தேகங்களைக் கிளறி விட்டது. என்ன தான் சர்ச்சைகள் கிளம்பினாலும், பர்னபியின் மரணம் ஒரு போதை மருந்து விபத்தென சட்டப்படி காலாவதியாக்கப்பட்டது.
அடுத்தடுத்த மரணங்கள், ஸ்நோடன், அனானிமஸ், விக்கிலீக்ஸ் என இணைய உலகம் கொந்தளித்துக் கிடக்க, அமெரிக்க தேசியப் பாதுகாப்பின் தலைவர் ஜெனரல் அலெக்ஸாண்டர் கீத் ஹேக்கர்ஸ் கருத்தரங்கில் பர்னபிக்கு அஞ்சலி செலுத்திப் பேசத் தொடங்கிய போது கூட்டத்தில் இருந்து வந்த எதிர்ப்புக் குரல்களும், கேள்விக் கணைகளும் அனல் பறந்தது. இணையக் கண்காணிப்பிலிர்ந்து விடுதலை வேண்டும் என்று கூட்டத்திலிருந்து குரலெழும்ப, நீங்களும் எங்களோடு சேர்ந்து அதற்கான முயற்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அலெக்ஸாண்டர் கீத் பதிலளிக்க, நீ ஒரு புளுகுணி மூட்டை, அமெரிக்க காங்கிரஸில் இணையக் கண்காணிப்புக் குறித்து பொய் சொல்லிய பொய்யர்கள், உங்களை நம்ப முடியாது என்று பதில் குரலொலிக்க அலெக்ஸாண்டர் கீத் ஒரு மாதிரியாக சமாளித்துப் பேசி முடித்தார்.
பின் அங்கு கேட்ட பல கேள்விகளில் முக்கியமானது, ‘ஒரு தனிநபர் தனது அம்மாவுடன் பேசுவதையோ, அல்லது உங்கள் (அலெக்ஸாண்டர்) மகளின் இணைய நடவடிக்கைகளையும், தகவல் தொடர்புகளையும் நீங்கள் கண்காணிக்க முடியுமா?’. அதற்கு அலெக்ஸாண்டர் அளித்த பதில் வரலாற்று முக்கியயத்துவம் வாய்ந்தது. எங்களால் யாரையும் கண்காணிக்க முடியும், ஆனால் நீங்கள் நல்லவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் தகவல் தொடர்பு எதுவும் கண்காணிக்கப்பட மாட்டாது என்பது தான் அலெக்ஸாண்டர் அளித்த பதில். நல்லவர், கெட்டவர் என்பதற்கான வரைமுறைகளை அவர்களே வகுத்துக் கொள்வது தான் இதிலுள்ள சிறப்பம்சம், மேலும் மற்ற நாடுகளின் அரசியலதிகார மையங்கள் அனைத்தும் கெட்டவர்கள் வகையறாவில் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்படும் என்பதை யார் சொல்லியும் நமக்குத் தெரியத் தேவையில்லை. இங்கு அலெக்ஸாண்டர் கீத் சொன்ன அதே செய்தியைத் தான் உலகெங்கும் சில மாதங்களுக்கு முன்பு அம்பலமாக்கியதற்காக ஸ்நோடன் ரஷ்யாவில் தஞ்சம் புக நேரிட்டதை இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளவும்.
இதுவரை நாம் பார்த்த ஆளுமைகள் அனைவருமே ஊடகங்களும், அரசாங்கங்களும் ஒளிவுமறைவின்றி மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும், இணையம் என்பது மக்களுக்கானது அதில் அவர்களின் அந்தரங்கத்தன்மை அவர்களது உரிமை என்பது போன்ற காரணங்களுக்காக வெற்றிவேல், வீரவேல் என்று கிளம்பிப் போய் தங்கள் வாழ்க்கையை லட்சியத்திற்காகத் துறந்தவர்கள். இவர்கள் அனைவருமே வாழ்க்கையில் மிக இளம் வயதிலேயே பணம், புகழ், காதல் என்று எக்குறையுமின்றி இருந்தவர்கள். இவர்களைப் பற்றி நாம் இவ்வளவு விரிவாகப் பார்த்ததின் காரணம், சமூக , பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் அனைத்திலும் மேற்கத்திய உலகத்தினை அப்பட்டமாக பின்பற்றும் நாம், அவர்கள் சந்திக்கும் இதே ஊடகச்சிக்கல்களை, இணையச்சுதந்திரத்திற்கானத் தேவைகளை எண்ணி எண்ணி பொங்க வேண்டிய நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.
தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டத் தேவைகளை சகட்டுமேனிக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் பணிகளில் பெரும்பங்கு வகிக்கும் நாம், சமூக மாற்றங்களுக்கு, உண்மையை உலகறியச் செய்வதற்கு இணையத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்கானத் தகுதியை எட்டியிருக்கிறோமா, அதனை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவதென்பதையாவதுத் தெரிந்திருக்கிறோமா?.
தொடர்வோம்..
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.
நேர்த்தியாக அளவாக அழகாக வந்துள்ளது.
ReplyDeleteஊக்கத்துக்கு மிக்க நன்றி ஜோதிஜி :)
ReplyDeleteஇன்னும் என்னென்ன கோலக்கித்தங்களை பார்க்கப்போகிறமோ? நல்ல பதிவு.
ReplyDeleteAs usual, excellent post.
ReplyDelete//கணிணியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தந்திரங்களைச் செய்யும் நிரல்கள் எழுதுவதில் நிபுணர்//
Which programming language?
ஊக்கத்துக்கு மிக்க நன்றி வடுவூர் குமார் :)..
ReplyDeletemostly perl, python etc.. In reality the target decides the weapon :). Thanks for the support and encouragement @ Alien.
புதிய தகவல் நன்றி !
ReplyDeleteமற்றும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.