Monday, July 14, 2014

இணையம் வெல்வோம் - 19

மைக்கெல் ஹாஸ்டிங்கின் விபத்து நடந்த இடம்
இன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல்.

மைக்கெல் ஹாஸ்டிங்கும் அவரது காதலியும்
நியூயார்க்கில் பிறந்தாலும், லாஸ் ஏஞ்சலிஸ் வாழ்க்கை, புத்தம் புது மெர்சிடஸ், உலகளாவிய புகழ், பத்திரிக்கைத்துறை விருதுகள், அழகான காதலி, கை நிறைய பணம் என்று இருந்தாலும், எழுத்தின் மூலம் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற வேட்கை என்றும் குன்றாமலிருந்து அதனாலேயே அகால மரணடைந்த போது மைக்கெலுக்கு வயது வெறும் 33.
2002ல் நியூஸ் வீக்கில் மூலம் நடந்த மைக்கெலின் பத்திரிக்கையுலகப் பிரவேசம், பின்னர் பஸ்பீட் (Buzzfeed) மற்றும் ரோலிங்ஸ்டோன் (Rollingstone) நிறுவனங்களோடு பணிபுரியும் வரைக்கும் நாளும், பொழுதும் மென்மேலும் வளர்ந்து கொண்டே போனது. செய்தி சேகரிப்புக்காக ஈராக்கில் கிடையாய்க் கிடந்த காலத்தில், மைக்கெலுடன் இருப்பதற்காகவே அங்கு பணிபுரியச்சென்ற காதலி ஆண்ட்ரியா ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட, வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்த மைக்கெல் வாழ்க்கையை சோகம் கவ்வியது. தனது காதலியுடனான ஈராக் நாட்களை I lost my love in Baghdad என்ற தலைப்போடு மைக்கெலின் முதல் புத்தகமாக வெளிவந்து மிகுந்த வரவேற்பையும், அதே சமயம் பலத்த விமர்சனங்களையும் பெற்றது.
மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய I Lost My Love in Baghdad புத்தகம்
அதன் பின்னர் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் தளபதியான ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் குறித்து இவர் எழுதிய கட்டுரை அமெரிக்க அரசியலில் கிளப்பிய சூட்டைத் தணிக்க அதிபர் ஒபாமாவின் வேண்டுகோளுக்கு அல்லது மிரட்டலுக்கு இணங்க ஸ்டான்லி மெக்றிஸ்டல் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
ஒபாமாவுடன் கலந்துரையாடும் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல்
மெக்கிறிஸ்டலும் அவரது சகாக்களும் ஒபாமா மற்றும் அவரது அலுவலக, அமைச்சரவை அன்பர்கள் குறித்து நக்கலாக சிலாகித்து சிலிர்த்துக்  கொண்டதனைத்தும் கட்டுரையாக வடித்து, அமெரிக்க அதிபரை அலட்சியமாக நினைக்கும் படைத்தளபதி என்கிற ரீதியில் கடந்த கால போர் சாகசங்கள் மீது கட்டியுழுப்பியிருந்த மெக்கிறிஸ்டலின் பிம்பங்களை சூறையாடிய பெருமை மைக்கெலுக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் மெக்கிறிஸ்டல் தனது சகாக்களோடு உரையாடியது குறித்து வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானாலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் குறைபாடுகளனைத்தையும் வெளிக்கொணர்ந்த விதம் மைக்கெலுக்கு புகழையும் அதே சமயம்  அதிகாரவர்க்கப் பகையையும் சம்பாதித்துக் கொடுத்தது.
மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய The Operators புத்தகம்
ஒரு நிலைச்சார்பாக, சுயலாபத்துக்கான செயல்திட்டத்துடன் செயல்படும் ஊடக அன்பர்களுடன் பொது இடத்தில் நாராசமாக வாய்த்தகராறில் ஈடுபடும் அளவுக்கு மைக்கெலுக்கு கோபம் இருந்தது. அதிகார வர்க்கத்தின் அட்டகாசங்களைத் தோலுரிக்க வேண்டுமென்ற எண்ணமும், ஊடகத்துறையில் பரவியிருந்த அரசியல் அதிகார வர்க்கத்தின் சார்பு நிலை மீதான கோபமும் இயற்கையாக அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் தொடர்புகளை மைக்கெலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. லண்டனிலுள்ள பண்ணை வீட்டில் பிணையிலிருந்த ஜூலியனை நேரில் சந்தித்த மிகச்சில நபர்களில் மைக்கெலும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து The Operators என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்ட மைக்கெல், அதன் பின்னர் தேர்ந்தெடுத்த குறி சிஐஏ இயக்குநர் ஜான் பிரனன் மற்றும் ஸ்நோடன் அம்பலப்படுத்திய அமெரிக்க உளவு அமைப்புகளின் இணையக் கண்காணிப்புத்திட்டம்.
ஜான் பிரனன்
இதற்கிடையில் தன் நீண்ட நாள் தோழியான எலைஸ் ஜோர்டானைத் திருமணம் செய்திருந்த மைக்கெல், ஜான் பிரனன் மற்றும் இணையக் கண்காணிப்புக் குறித்தான தனது கட்டுரை வெளிவருவதற்கு முன்னரே சர்ச்சைக்குறிய சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
ஜூன் 18, 2013 அன்று அதிகாலை 4.25 மணிக்கு தனது மெர்சிடஸ் காரில் சென்ற மைக்கெல், அதிவேகத்தில் சாலையோரத்திலிருந்த பனைமரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகிப் பலியானார். இந்த விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது நெருங்கிய நண்பர்களுக்கு FBI அதிகாரிகள் தனக்கு நெருக்கமானவர்களை விசாரித்து வருவதாகவும், தாங்கள் விசாரணைக்கு உட்படும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் துணையின்றி ஏதும் பேச வேண்டாமென்றும், மிகப்பெரியக் கட்டுரை ஒன்றிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன், சிறிது காலம் தொடர்பில் இல்லாமல் இருக்கப் போகிறேன் என்று மைக்கெல் மின்னஞ்சல் அனுப்பியதும், அவர்களில் ஒருவர் விக்கிலீக்ஸின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கெல் ஹாஸ்டிங்
சிஐஏ மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் இணையக் கண்காணிப்புக் குறித்து மைக்கெல் யாரிடமெல்லாம் தகவல் சேகரித்தார் என்பது பொதுவில் இதுவரை வெளிவரவில்லையென்றாலும் அவை குறித்தானத் தகவல்களை அவரிகளின் அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக பெறக்கூடிய கைராசியான ஸ்தாபனம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ். அமெரிக்காவின் இணையக் கண்காணிப்பு முறையை அம்பலப்படுத்திய ஸ்நோடன் சரியாக விபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன், விக்கிலீக்ஸ் உதவியின் காரணமாகவே பாங்காக்கிலிருந்து தப்பி ரஷ்யா சென்றதை இங்கு நினைவுபடுத்திகொள்ளவும்.
மைக்கெல் ஹாஸ்டிங்கின் கார் விபத்துக்குள்ளான போது தீப்பிடித்து எரியும் காட்சி
இவையனைத்திற்கும் மேலாக மைக்கெல்லின் மெர்சிடஸ் சி250 விபத்துக்குள்ளான விதம் மிகவும் சந்தேகத்திற்குரியது. அதிவேகத்தில் சென்று மரத்தின் மோதிய வாகனங்கள் எதற்கும் மைக்கெல்லின் வாகனத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டதில்லை. வாகனத்தின் இஞ்சின் சுமார் 100 அடி தூரத்திற்கு மேலாகத் தூக்கியெறியப்பட்டதும், பலத்த வெடிச்சத்தத்துடன் வாகனம் தீப்படித்து எரிந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மைக்கெல் பலியான விதம் பலத்தவிவாதங்களைக் கிளப்பியது.
அதிநவீன இலத்திரனியல் சாதனங்களைக் கொண்ட வாகனங்களை எங்காவது இருந்து இயக்கும் வண்ணம் இலத்திரனியல் சாதனங்களை மாற்றியமைத்தோ அல்லது கட்டுடைத்தோ விபத்துக்குள்ளாக்கும் வித்தை அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு கைவந்த கலையென்றும், மைக்கெல் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை வெளிவந்தால் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுப் போவோம் என்ற காரணத்தால் அமெரிக்க உளவு அமைப்புகள் காரில் வெடி வைத்தார்கள் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. உத்தியோகப்பூர்வமாக அப்படி எதுவும் நடக்கவில்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை, இது வெறும் விபத்து மட்டுமே என்று காவல்துறைக் கோப்புகளை மூடி வைத்து விட்டது.
ஆரம்பத்தில்  இதற்குக் காரணமானவர்களை பழிவாங்கிய தீருவேன் என்று கொந்தளித்த மைக்கெலின் மனைவி எலைஸ் ஜோர்டான், பின்னர் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறி ஆச்சர்யமளிக்கும் வகையில் அமைதியாகிப் போனார். முன்னாள் அமெரிக்கச் செயலர் கெண்டலீசா ரஸின் அலுவலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த எலைஸ் தனது தொடர்புகள் மூலம் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து மவுனித்துப் போனார் என்றும் நம்பப்படுகிறது. அனைத்து தரப்பினரும் அமைதி காத்த நேரத்தில் தான்  மைக்கெல்லின் எப்.பி.ஐ விசாரணை குறித்தான மின்னஞ்சல் வெளிவந்து புயலைக் கிளப்பியது, ஆரம்பத்தில் நாங்கள் மைக்கெல் ஹாஸ்டிங்கையோ அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்களையோ விசாரிக்கவே இல்லை, இல்லவே இல்லை என்று கைகளை அகல விரித்த எப்.பி.ஐ பின்னர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த பிறகு சரியாக விபத்து நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் மைக்கெல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டது.இருந்தாலும் இன்று வரை மைக்கெலின் மரணம் ஒரு ஊரறிந்த ரகசியமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
பத்திரிக்கை உலகில் மைக்கெல்லின் மரணத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பாகவே அடுத்த மாதமே மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்தது. இம்முறை அதிர்ந்தது இணைய பாதுகாப்பு வல்லுநர்களும், ஹேக்கர்களும். 
தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, July 7, 2014

இணையம் வெல்வோம் - 18

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது.  2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.
2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் திகில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.
எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.
கை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.
கண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப்பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.
இத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI  மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள்  மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.
தி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது  போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ஹாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.
 அனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை  மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.
மக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில்  தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங்.  33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் ?

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.