Monday, July 14, 2014

இணையம் வெல்வோம் - 19

மைக்கெல் ஹாஸ்டிங்கின் விபத்து நடந்த இடம்
இன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல்.

மைக்கெல் ஹாஸ்டிங்கும் அவரது காதலியும்
நியூயார்க்கில் பிறந்தாலும், லாஸ் ஏஞ்சலிஸ் வாழ்க்கை, புத்தம் புது மெர்சிடஸ், உலகளாவிய புகழ், பத்திரிக்கைத்துறை விருதுகள், அழகான காதலி, கை நிறைய பணம் என்று இருந்தாலும், எழுத்தின் மூலம் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற வேட்கை என்றும் குன்றாமலிருந்து அதனாலேயே அகால மரணடைந்த போது மைக்கெலுக்கு வயது வெறும் 33.
2002ல் நியூஸ் வீக்கில் மூலம் நடந்த மைக்கெலின் பத்திரிக்கையுலகப் பிரவேசம், பின்னர் பஸ்பீட் (Buzzfeed) மற்றும் ரோலிங்ஸ்டோன் (Rollingstone) நிறுவனங்களோடு பணிபுரியும் வரைக்கும் நாளும், பொழுதும் மென்மேலும் வளர்ந்து கொண்டே போனது. செய்தி சேகரிப்புக்காக ஈராக்கில் கிடையாய்க் கிடந்த காலத்தில், மைக்கெலுடன் இருப்பதற்காகவே அங்கு பணிபுரியச்சென்ற காதலி ஆண்ட்ரியா ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட, வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்த மைக்கெல் வாழ்க்கையை சோகம் கவ்வியது. தனது காதலியுடனான ஈராக் நாட்களை I lost my love in Baghdad என்ற தலைப்போடு மைக்கெலின் முதல் புத்தகமாக வெளிவந்து மிகுந்த வரவேற்பையும், அதே சமயம் பலத்த விமர்சனங்களையும் பெற்றது.
மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய I Lost My Love in Baghdad புத்தகம்
அதன் பின்னர் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் தளபதியான ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் குறித்து இவர் எழுதிய கட்டுரை அமெரிக்க அரசியலில் கிளப்பிய சூட்டைத் தணிக்க அதிபர் ஒபாமாவின் வேண்டுகோளுக்கு அல்லது மிரட்டலுக்கு இணங்க ஸ்டான்லி மெக்றிஸ்டல் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
ஒபாமாவுடன் கலந்துரையாடும் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல்
மெக்கிறிஸ்டலும் அவரது சகாக்களும் ஒபாமா மற்றும் அவரது அலுவலக, அமைச்சரவை அன்பர்கள் குறித்து நக்கலாக சிலாகித்து சிலிர்த்துக்  கொண்டதனைத்தும் கட்டுரையாக வடித்து, அமெரிக்க அதிபரை அலட்சியமாக நினைக்கும் படைத்தளபதி என்கிற ரீதியில் கடந்த கால போர் சாகசங்கள் மீது கட்டியுழுப்பியிருந்த மெக்கிறிஸ்டலின் பிம்பங்களை சூறையாடிய பெருமை மைக்கெலுக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் மெக்கிறிஸ்டல் தனது சகாக்களோடு உரையாடியது குறித்து வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானாலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் குறைபாடுகளனைத்தையும் வெளிக்கொணர்ந்த விதம் மைக்கெலுக்கு புகழையும் அதே சமயம்  அதிகாரவர்க்கப் பகையையும் சம்பாதித்துக் கொடுத்தது.
மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய The Operators புத்தகம்
ஒரு நிலைச்சார்பாக, சுயலாபத்துக்கான செயல்திட்டத்துடன் செயல்படும் ஊடக அன்பர்களுடன் பொது இடத்தில் நாராசமாக வாய்த்தகராறில் ஈடுபடும் அளவுக்கு மைக்கெலுக்கு கோபம் இருந்தது. அதிகார வர்க்கத்தின் அட்டகாசங்களைத் தோலுரிக்க வேண்டுமென்ற எண்ணமும், ஊடகத்துறையில் பரவியிருந்த அரசியல் அதிகார வர்க்கத்தின் சார்பு நிலை மீதான கோபமும் இயற்கையாக அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் தொடர்புகளை மைக்கெலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. லண்டனிலுள்ள பண்ணை வீட்டில் பிணையிலிருந்த ஜூலியனை நேரில் சந்தித்த மிகச்சில நபர்களில் மைக்கெலும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து The Operators என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்ட மைக்கெல், அதன் பின்னர் தேர்ந்தெடுத்த குறி சிஐஏ இயக்குநர் ஜான் பிரனன் மற்றும் ஸ்நோடன் அம்பலப்படுத்திய அமெரிக்க உளவு அமைப்புகளின் இணையக் கண்காணிப்புத்திட்டம்.
ஜான் பிரனன்
இதற்கிடையில் தன் நீண்ட நாள் தோழியான எலைஸ் ஜோர்டானைத் திருமணம் செய்திருந்த மைக்கெல், ஜான் பிரனன் மற்றும் இணையக் கண்காணிப்புக் குறித்தான தனது கட்டுரை வெளிவருவதற்கு முன்னரே சர்ச்சைக்குறிய சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
ஜூன் 18, 2013 அன்று அதிகாலை 4.25 மணிக்கு தனது மெர்சிடஸ் காரில் சென்ற மைக்கெல், அதிவேகத்தில் சாலையோரத்திலிருந்த பனைமரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகிப் பலியானார். இந்த விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது நெருங்கிய நண்பர்களுக்கு FBI அதிகாரிகள் தனக்கு நெருக்கமானவர்களை விசாரித்து வருவதாகவும், தாங்கள் விசாரணைக்கு உட்படும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் துணையின்றி ஏதும் பேச வேண்டாமென்றும், மிகப்பெரியக் கட்டுரை ஒன்றிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன், சிறிது காலம் தொடர்பில் இல்லாமல் இருக்கப் போகிறேன் என்று மைக்கெல் மின்னஞ்சல் அனுப்பியதும், அவர்களில் ஒருவர் விக்கிலீக்ஸின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கெல் ஹாஸ்டிங்
சிஐஏ மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் இணையக் கண்காணிப்புக் குறித்து மைக்கெல் யாரிடமெல்லாம் தகவல் சேகரித்தார் என்பது பொதுவில் இதுவரை வெளிவரவில்லையென்றாலும் அவை குறித்தானத் தகவல்களை அவரிகளின் அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக பெறக்கூடிய கைராசியான ஸ்தாபனம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ். அமெரிக்காவின் இணையக் கண்காணிப்பு முறையை அம்பலப்படுத்திய ஸ்நோடன் சரியாக விபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன், விக்கிலீக்ஸ் உதவியின் காரணமாகவே பாங்காக்கிலிருந்து தப்பி ரஷ்யா சென்றதை இங்கு நினைவுபடுத்திகொள்ளவும்.
மைக்கெல் ஹாஸ்டிங்கின் கார் விபத்துக்குள்ளான போது தீப்பிடித்து எரியும் காட்சி
இவையனைத்திற்கும் மேலாக மைக்கெல்லின் மெர்சிடஸ் சி250 விபத்துக்குள்ளான விதம் மிகவும் சந்தேகத்திற்குரியது. அதிவேகத்தில் சென்று மரத்தின் மோதிய வாகனங்கள் எதற்கும் மைக்கெல்லின் வாகனத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டதில்லை. வாகனத்தின் இஞ்சின் சுமார் 100 அடி தூரத்திற்கு மேலாகத் தூக்கியெறியப்பட்டதும், பலத்த வெடிச்சத்தத்துடன் வாகனம் தீப்படித்து எரிந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மைக்கெல் பலியான விதம் பலத்தவிவாதங்களைக் கிளப்பியது.
அதிநவீன இலத்திரனியல் சாதனங்களைக் கொண்ட வாகனங்களை எங்காவது இருந்து இயக்கும் வண்ணம் இலத்திரனியல் சாதனங்களை மாற்றியமைத்தோ அல்லது கட்டுடைத்தோ விபத்துக்குள்ளாக்கும் வித்தை அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு கைவந்த கலையென்றும், மைக்கெல் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை வெளிவந்தால் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுப் போவோம் என்ற காரணத்தால் அமெரிக்க உளவு அமைப்புகள் காரில் வெடி வைத்தார்கள் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. உத்தியோகப்பூர்வமாக அப்படி எதுவும் நடக்கவில்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை, இது வெறும் விபத்து மட்டுமே என்று காவல்துறைக் கோப்புகளை மூடி வைத்து விட்டது.
ஆரம்பத்தில்  இதற்குக் காரணமானவர்களை பழிவாங்கிய தீருவேன் என்று கொந்தளித்த மைக்கெலின் மனைவி எலைஸ் ஜோர்டான், பின்னர் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறி ஆச்சர்யமளிக்கும் வகையில் அமைதியாகிப் போனார். முன்னாள் அமெரிக்கச் செயலர் கெண்டலீசா ரஸின் அலுவலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த எலைஸ் தனது தொடர்புகள் மூலம் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து மவுனித்துப் போனார் என்றும் நம்பப்படுகிறது. அனைத்து தரப்பினரும் அமைதி காத்த நேரத்தில் தான்  மைக்கெல்லின் எப்.பி.ஐ விசாரணை குறித்தான மின்னஞ்சல் வெளிவந்து புயலைக் கிளப்பியது, ஆரம்பத்தில் நாங்கள் மைக்கெல் ஹாஸ்டிங்கையோ அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்களையோ விசாரிக்கவே இல்லை, இல்லவே இல்லை என்று கைகளை அகல விரித்த எப்.பி.ஐ பின்னர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த பிறகு சரியாக விபத்து நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் மைக்கெல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டது.இருந்தாலும் இன்று வரை மைக்கெலின் மரணம் ஒரு ஊரறிந்த ரகசியமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
பத்திரிக்கை உலகில் மைக்கெல்லின் மரணத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பாகவே அடுத்த மாதமே மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்தது. இம்முறை அதிர்ந்தது இணைய பாதுகாப்பு வல்லுநர்களும், ஹேக்கர்களும். 
தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, July 7, 2014

இணையம் வெல்வோம் - 18

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது.  2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.
2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் திகில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.
எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.
கை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.
கண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப்பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.
இத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI  மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள்  மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.
தி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது  போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ஹாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.
 அனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை  மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.
மக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில்  தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங்.  33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் ?

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Friday, May 30, 2014

இணையம் வெல்வோம் - 17

அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.
வந்த சுவடே தெரியாமல் சிகர்துர் கட்டுக்குலையாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்று முதல் எப்.பி.ஐ உடன் தினமும் நேரடித்தொடர்பில் இருந்தார் சிகர்துர். விக்கிலீக்ஸ் தளங்களில் நடைபெறும் விவாதங்கள், வெளியிடத்தயாராகும் கோப்புகள், சாபு மூலம் கொட்டும் தகவல்கள் அனைத்தும் சிகர்துர் மூலம் நேரலையில் அமெரிக்கா கண்டுகளித்துக் கொண்டிருந்தது.
சாபுவின் கைங்கர்யத்தில் கிடைத்த ஸ்ட்ரட்போர் தகவல்களையே தாளிக்க முடியாமல் இருந்த சிகர்துருக்கு சாபுவிடம் இருந்து சிரிய அரசாங்கத்தின் மின்னஞ்சல் வழங்கியிலிருந்து லவட்டப்பட்ட 96GB அளவிலான மின்னஞ்சல்கள் வந்து சேர்ந்தது. பின்னாளில் சிரியா கோப்புகள் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் அவை வெளியிடப்பட்டு உள்நாட்டு கலவரம் நடந்த அந்த நாட்களில் மேற்கத்திய நாடுகளும், அந்நாட்டு நிறுவனங்களும் போட்ட இரட்டை வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு சிகர்துர் மூலம் தகவல் சொல்லப்பட்டது. இப்படி அமெரிக்காவின் ஜேம்ஸ்பாண்டாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிகர்துருக்கு சங்கு ஒரு தொலைபேசி வடிவில் வந்தது. 

விக்கிலீக்ஸின் ஊடகத் தொடர்பாளரும், சிகர்துரை ஜூலியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவருமான கிறிஸ்டைன் இடமிருந்து வந்த அழைப்பின் மூலம் சிகர்துர் மேல் விக்கிலீக்ஸ் பணம் ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கையாடப்பட்டதாகக் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படப் போவதாக சொல்ல, தனக்கு இனி இங்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்து விக்கிலீக்ஸின் தொடர்பு எல்லைக்கு வெளியே சிகர்துர் என்ற சிட்டுக்குருவி சர்ரென்று பறந்தது.

ஜெரொமி ஹமன்ட்
தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அமெரிக்காவிற்குத் தெரிவித்து இனி தன்னால் தகவல்கள் தர இயலாது என்று சொன்ன சிகர்துர், வாஷிங்டன் வரவழைக்கப்பட்டு மூளையில் இருக்கும் மிச்சச் சொச்சத் தகவல்களும் சுத்தமாக சுரண்டி எடுக்கப்பட்டது. இம்முறை சிகர்துர் மூலம் விக்கிலீக்ஸ் உடன் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர்களும் கவனமாக பதிவு செய்து சக்கையாக அனைத்துத் தகவல்களையும் கறந்து ஐஸ்லாந்தில் துப்பப்பட்டார் சிகர்துர். அடுத்த சில நாட்களில் 2012 மார்ச் மாதம் வரிசையாகக் கைதுக் காட்சிகள் அரங்கேறின. லல்செக் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் சாபுவின் நெருங்கிய கூட்டாளியுமான ஜெரொமி ஹமன்ட் (Jeremy Hammond) அமெரிக்காவிலும், சிகர்துருடன் தொடர்பில் இருந்த கேலா இங்கிலாந்திலும் வைத்து கைது செய்யப்பட, அதன் பின் ஊடகங்களி வெளியான செய்திகளில் சிகர்துருக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. 

16 வயதே ஆன பெண்ணாக ஹேக்கிங் உலகில் அறியப்பட்ட கேலா உண்மையில் 25 வயது ஆண் ரயான் (Ryan Ackroyd) என்பதும், ஜெரோமி ஹமண்ட் குறித்துத் தகவல் கொடுத்தது சாபு தான் என்பதும், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே 2011 ஜூன் மாதம் சாபு அமெரிக்க உளவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆள்காட்டிக் கொடுக்க சம்மதித்த காரணத்தால் ரகசியமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டு ஹேக்கிங் உலகில் உலவ விடப்பட்ட உளவாளி என்பதும் தெரிய வந்த சிகர்துருக்குக் பேரரசின் திரைப்படம் பார்த்ததைப் போன்ற பாதிப்பில் கன்னாபின்னாவென தலைசுற்றிக் கிறங்கினாலும் அப்பொழுது தான் பல விஷயங்கள் தெளிவாகியது.

ரயான் 
ஒவ்வொரு முறையும் சிகர்துர் எப்.பி.ஐ இடம் சாபு குறித்தத் தகவல்கள் அளித்த போதும் மேற்கொண்டு அது குறித்த தகவல்களோ அல்லது கேள்விகளோ சிகர்துரிடம் கேட்கப்படவில்லை. அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளின் வரலாற்றில் மிகப்பெரியத் தகவல் கசிவு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் மற்றும் சிரியாவின் உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் இரட்டை வேடம் போட்ட அத்தனை பேரையும் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் ‘சிரியா கோப்புகள்’ ஆகிய இரண்டும் அமெரிக்க உளவு அமைப்புகளுக்குத் தெரிந்தே விக்கிலீக்ஸிற்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. தன் கோவணம் காற்றில் பறந்தாலும் ஜூலியனைக் கையும் களவுமாக நேரடியாக அமெரிக்க சட்டப்படி குற்றவாளியாக நடக்க வைத்து, சிறைபிடிக்க விரிக்கப்பட்ட வலைதான் இத்தனை நாடங்கங்களும், காட்சிகளும். குற்றத்தினை நடக்காமல் தடுக்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளே அவற்றை நடக்க வேடிக்கைப் பார்த்த விதம் அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், ஜூலியன் மேல் அமெரிக்க வைத்திருக்கும் குறியின் தீவிரத்தையும் புரியவைத்தது.
சாபுவிற்கு சற்றும் குறைவில்லாத ஹேக்கிங் நிபுணரும், தீவிர  இணையப் போராளியுமான ஜெரொமி ஹமன்ட், ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் வெளியீட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், சாபுவுடன் தொடர்பில் இருந்த கேலா/ரயான் 30 மாத சிறை தண்டனையும் அனுபவித்துக் கொண்டிருப்பது உபதகவல். அது வரை ஏகப்பட்ட சட்டச்சிக்கல்களைச் சந்தித்தாலும், சளைக்காமல் சமாளித்து லண்டனில் பிணையில் வெளிவந்திருந்த ஜூலியன் மேற்படி சம்பவங்களுக்குப் பின்னர் இதற்கு மேல் ரத்த பூமியில் உலவ முடியாது என்று முடிவு செய்து ஈக்வடர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கேட்டு குடியறியதில் இருந்து இவற்றின் பின்விளைவுகளால் ஜூலியன் தலைக்கு வரவிருந்த ஆபத்தினை உணரலாம்.  அன்று தூதரகத்தின் உள்நுழைந்த ஜூலியன் இன்றும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கையாடல் செய்ததாகச் சொல்லப்பட்ட பணம் ஜூலியனின் அனுமதியுடன் தன் கைச்செலவுக்கு எடுத்தது என்று சிகர்துரும், சிகர்துர் சொல்லும் அளவுக்கு ஜூலியனோ அல்லது விக்கிலீக்ஸ் நபர்கள் யாருமோ சிகர்துரை அளவுக்கு மீறி நம்பவில்லை என்று க்றிஸ்டைனும் முன்னுக்குப் பின் முரணாக சொன்னாலும், விக்கிலீக்ஸ் குறித்து சிகர்துர் தான் எப்.பி.ஐ இடம் போட்டுக் கொடுத்தது என்று ஜனவரி மாதம் 2013க்குப் பிறகு தான் ஜூலியனுக்கும், க்றிஸ்டைனுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதமானது, தகவல் உபயம் க்றிஸ்டைனின் நண்பரான ஐஸ்லாந்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்.

2012 மார்ச் மாதத்தின் கைதுச் சூறாவளிக்குப் பிறகு பல மர்ம மரணங்கள் இணைய உலகை உலுக்கத் தொடங்கின. அவர்கள் அனைவருமே ஒரு வகையில் இணைய சுதந்திரத்தில் பாதுகாப்பின் பெயரில் கைவைக்கும் அமெரிக்க அரசிற்கு எதிராகக் கொடிபிடித்தவர்கள். 

எப்.பி.ஐ , என்.எஸ்.ஏ மற்றும் சி.ஐ.ஏ அமைப்புகளின் கையில் அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் உடன் தொடர்புடையவர்களாக மாட்டியவர்கள் யார் யாரென்பது சம்பந்தப்பட்ட தலைகளுக்கே வெளிச்சம். சில வேளை யாரென்றே தெரியாமல் தங்கள் அடையாளங்களை மறைத்து செயல்பட்டவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அவ்வாறு மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பத்திரிக்கையாளர் மெக்கேல் ஹேஸ்டிங், நாம் முதன் முதலில் பார்த்த இணைய ஆரவலர் ஆரோன் ஸ்வார்ட்ஸ், உலகப்புகழ் பெற்ற ஹேக்கிங் மன்னன் பெர்னபி ஜக் ஆகியோர். இவர்கள் அனைவரின் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க உளவு அமைப்புகளால் விசாரணைக்கோ அல்லது கண்காணிப்பிற்கோ உள்ளாக்கப் பட்டவர்கள்.

இணையப்போரளிகளுடன் கண்ணாமூச்சி ஆடி, ஆடி அலுப்பில் இருந்த அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது சாபுவின் கைது. ஊரே வியந்து பார்க்கும் ஹேக்கிங் சாகசக்காரரான சாபு, கைதவறி தன் அடையாளத்தினை மறைக்காமல், தனது உண்மையான வலையமைப்பு எண்ணுடன் இணையத்தில் ஒரே ஒரு முறை இணைந்தது தான் மாட்டிகொண்டதற்கான காரணம். அத்தனை துல்லியமாக வைத்த குறி தப்பாமல் இணையத்தில் யாரையும் கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு சாபுவின் சம்பவம் சாட்சி. சிகர்துருக்கோ அல்லது சாபுவுக்கோ தாங்கள் அளித்த தகவல்கள் மூலம் நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை. இதில் தப்பியவர்கள் ஈக்வடர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த முன்னெச்சரிக்கைப் புலியான ஜூலியனும், ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் எட்வர் ஸ்நோடனும் மட்டுமே.

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, May 12, 2014

இணையம் வெல்வோம் - 16

சிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.
உலகமெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டுத் தலைவர்களை கவுண்டமணியும் காது பொத்தும் அளவிற்கு நாராசமாய் கிண்டலடித்தும், நாட்டின் நிலவரங்களையும் தெரியப்படுத்தும் மின்னஞ்சல்களை ஐரோப்பிய யூனியனில் இருக்கும் முக்கிய ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும் வேலை சிகர்துருக்கு வழங்கப்பட்டதிலிருந்து சிகர்துரின் முக்கியத்துவத்தினை நாம் அறிந்து கொள்ளலாம். ஜூலியனின் வயதுக்கு வந்த மற்ற ஆலோசர்களும், நண்பர்களும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமலா போய்விடும் என்று ‘நாந்தேன் அப்பவே சொன்னேன்ல’ சொல்வதற்குக் காத்திருந்தனர்.
விக்கிலீக்ஸ் சார்பாக சிகர்துர் உலகம் சுற்றிக் கொண்டிருந்த நேரம் ஜூலியன் லண்டன் சிறையிலிருந்து பிணையில் வெளியாகி, விக்கிலீக்ஸ் ஆர்வலரான கேப்டன் வேகன் ஸ்மித்திற்குச் சொந்தமான எல்லிங்ஹாம் ஹால் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து அரசியல் தஞ்சம் கேட்டு ஈக்வடர் நாட்டு தூதரகத்திற்கு செல்லும் காலம் வரையிலும் ஜூலியனை நெருக்கமாக அடிக்கடி சந்தித்த நபர்களில் சிகர்துரும் அடக்கம். இன்று வரையிலும் ஜூலியன் லண்டனிலுள்ள ஈக்வடர் நாட்டுத் தூதரகத்தில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே சந்தேகப்பிராணியான ஜூலியன் தன்னுடன் இருக்கும் அனைவரையும் வேவு பார்க்குமளவுக்கு மன அழுத்தத்தில் இருந்த நேரம், அவ்வாறு வேவு பார்க்கப்பட்டவர்களில் தங்கியிருந்த பண்ணை வீட்டின் சொந்தக்காரரான கேப்டன் வேகன் ஸ்மித்தும் ஒருவர். இப்படி வேவு பார்த்து தகவல்களைத் திரட்டி ஜூலியனுக்கு அனுப்பி வைப்பது சிகர்துரின் வேலைகளுல் ஒன்று. வேவு பார்ப்பதென்றால் சம்பந்தப்பட்ட நபர்களின் கணிணியிலிருக்கும் தகவல்களை மொத்தமாக சுருட்டி அவற்றை அலசி ஆராய்வது, தினசரி நடவடிக்கைகள், சந்திப்புகள் ஆகியவற்றை நுண்ணிய கண்காணிப்புக் கருவிகள் மூலம் பதிவு செய்வது போன்றவையாகும்.

ஜூலியனை மேலும், மேலும் சந்தோசப்படுத்த, தனது அதிகாரங்கள் அதிகரிப்பது ஒருவித போதையாகி, பெயர்பெற்ற ஹேக்கர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் விக்கிலீக்ஸ் வெளியிடுவதற்கான ஆவணங்களை சேகரிப்பதில் கொண்டு போய் விட்டது. காக்கர் (Gawker) வலைப்பதிவுத் தளத்தினை கட்டுடைத்து தங்கள் பெயரினைப் பெரிதும் பேச வைத்த நோசிஸ்(Gnosis) எனும் ஹேக்கர் குழுவிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட சிகர்துர், பின்னர் அவர்கள் மூலம் 16 வயதே ஆன பெண் கேலா(Kayla) மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த 30 வயது நபர் சாபு(Sabu) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. கேலாவின் மூலம் பல கோப்புகள் கிடைத்தது சிகர்துருக்கு. முக்கியமாக ஐஸ்லாந்து அமைச்சரக இணையத்தளங்கள் மற்றும் மின் நிறுவனமான லான்ட்ஸ்நெட் ஆகியவற்றின் தளங்கள் தகர்ப்பதும் கேலாவின் உதவியோடு சிகர்துர் நடத்தி முடித்தாலும், அதில் எதிர்பார்த்த கிளுகிளுப்பும், கிக்கும் சிகர்துருக்குக் கிடைக்கவில்லை.

சாபுவிடம் தொடர்பு கொண்டு தான் இன்னும் பெரிதாக எதிர்பார்ப்பதாகவும், அவற்றினை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடுவதற்கு ஆவண செய்வதாகவும் சிகர்துர் சொல்ல, சாபுவோ முதலில் சிகர்துருக்கு விக்கிலீக்ஸில் இருக்கும் தொடர்பினை உறுதிப்படுத்தாமல் எதுவும் செய்ய மறுக்க, நேரடியாக ஜூலியனுடன் பேசிய பிறகே சாபு உதவி செய்ய சம்மதித்தாக சிகர்துர் சொன்னாலும் என்ன நடந்தது என்பது சாபுவுக்கும், ஜுலியனுக்குமே வெளிச்சம். அதற்குப் பிறகு வரிசையாக நடந்தேறியது அதிரடி சம்பவங்கள்.

சாபு
ஹேக்கிங் கில்லாடியான சாபுவின் திறமை அனானிமஸ் உலகில் மிகப்பிரபலம். லல்செக் (lulzec) எனப்படும் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களின் ஒருவர். லல்செக்கின் அதிரடி அட்டகாசங்கள் மிகப்பிரசித்தம். இவர்களின் தாக்குதலுக்கு அமெரிக்காவின் சிஐஏ இணையத்தளம் கூட தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாபுவின் திறமைகளின் வீரியம் சிகர்துர் கேட்டு முடிக்கும் முன்பே தகவல்களை கொட்டும் வேகத்தில் தெரிந்தது, கேட்ட கோப்புகள் எந்த நிறுவனம் அல்லது அமைப்பிற்குச் சொந்தமாக இருந்தாலும் உடனே அவர்களின் வலையமைப்பிற்குள் புகுந்து சுருட்டி அள்ளிவந்து கொட்டுவதில் சாபு கில்லாடி. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கும் தனியார் நிறுவனங்களான ஸ்ட்ரட்போர் (stratfor), லக்ஹீட் மார்ட்டின் (lockheed martin) உள்ளிட்ட நிறுவனங்களின் மின்னஞ்சல்களின் தொகுப்புகள் சாபுவின் மூலம் சிகர்துருக்குக் கையளிக்கப்பட்டது. இவை பின்னாளில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்த போது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளின் செயல்படும் முறைகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட விதங்கள் என அனைத்தும் சந்தி சிரித்தன. பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்ப்ட்ட பின்லேடனின் உடலுக்கு உண்மையில் என்ன நடந்தது போன்ற தகவல்கள் இம்மின்னஞ்சல்கள் மூலம் வெளிவந்தன.
ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக இருந்தாலும், சாபுவின் மூலம் தகவல்கள் மளமளவென கொட்டத் தொடங்கியதும், அத்தகவல்களின் வீரியமும் சிகரிதுரின் நிலைமையை ஷகீலா படம் பார்த்த வயசுப்பையனைப் போலாக்கியது. சாமத்தில் கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன. நள்ளிரவில் எப்.பி.ஐ கதவை உடைத்துக் கொண்டு சிகர்துரை அள்ளிப் போவது போலான பீதியை உண்டாக்கும் பயங்கள் தோன்ற ஆரம்பித்தன சிகர்துருக்கு. உலகமெங்கும் பரவியிருக்கும் காக்கர், நோசிஸ், மற்றும் லல்செக் போன்ற சிறு குழுக்கள் சேர்ந்தது தான் அனானிமஸ் என்பதும் அவர்களின் சகவாசம் எத்தகைய சிக்கலில் கொண்டு விடும் என்பது சிகர்துருக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்த போது தான் எந்த அளவுக்கு எதில் புதைந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. அது போக மற்றுமொரு விஷயமும் சிகர்துர் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அது கொலட்ரல் மர்டர் காணொளி மற்றும் தூதரக மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸிக்கு அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வழக்கினைச் சந்தித்து வரும் பிரட்லி மேனிங்கின் வழக்கினை நடத்துவதற்காக ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிரட்லி மேனிங் பாதுகாப்பு இயக்கத்திற்குப் பெருந்தொகை ஒன்றை நன்கொடையாகத் தருவதாக வாக்களித்திருந்த ஜூலியன் அதனை நிறைவேற்றவில்லை. அது குறித்த மனவருத்தமும் சிகர்துருக்கு ஜூலியனின் மீதிருந்த மதிப்பினை, நம்பகத்தன்மையைச் சிதைத்திருந்தது.

ஆகஸ்ட் 23, 2011 அன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவின் தூக்கம் வராமல் மன அழுத்தத்தில் தவித்த சிகர்துர் ஒரு முடிவுக்கு வந்து ‘உங்களைச் சந்திக்க வேண்டும்’  என்ற தகவலுடன் மின்னஞ்சல் ஒன்றை ஐஸ்லாந்து தலைநகர் ரெஜவிக்கில் (Reykjavik) உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அனுப்ப, உடனே வந்து சந்திக்க அழைப்பு வருகிறது சிகர்துருக்கு.

காலம் எத்தனையோ புதிர்களை நமக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ், அவர்களுக்குக்கிடையே உள்ள தொடர்புகள், தகவல் பறிமாற்றங்கள், விக்கிலீக்ஸ் விவாதத்தளங்களில் பங்கு பெற்றவர்கள் என்று சகல விவரங்களும் தெரிந்த,  ஜூலியனிடம் நெருங்கிப் பழகிய சிகர்துர் அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று வாக்குமூலமளிக்க செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது அத்தகைய புதிர்களில் ஒன்று. சிகர்துர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அனானிமஸ்கள், விக்கிலீக்ஸிற்கு ஏற்பட்டப் பின்னடைவு, தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய மரணங்கள்…

தொடரும்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Thursday, April 17, 2014

மாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது?



கபில்தேவ் அணியினர் வாங்கி வந்த உலககோப்பையை இந்தியா கொண்டாடி முடித்திருந்த நேரம் 1983ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி நியுயார்க்கில் இருந்து தென்கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்டது அந்த விமானம், செல்லும் வழியில் அலாஸ்கா மாகாணத்தின் அங்க்கரெஜ் நகரத்தில் தரையிறங்கி செல்வதாகத் திட்டம். ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளையும், 269 பயணிகளின் கனவுகளையும் சுமந்து கொண்டு விமானம் ஆகாயத்தில் கலந்தது. அலாஸ்காவில் சென்று தரையிறங்கும் வரை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது. அலாஸ்காவில் இருந்து கிளம்பியதும் விமானிகள் தானியங்கிப் பொறி மூலம் விமானத்தினை செலுத்த ஆரம்பித்தனர். யதார்த்தமாக புவியிடங்காட்டி (GPS) குளறுபடியால் தவறு செய்ய, விமானம் பதார்த்தமாக சோவியத் யூனியனின் வான் எல்லைக்குள் நுழைந்தது. தாங்கள் இப்படி தடம் மாறிச் செல்வதை விமானிகள் உணரவேயில்லை.



தரைப்பகுதிகளை நாம் எப்படி வரைபடத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்து எல்லைகளை நிர்ணயிக்கிறோமோ அதே போல வான்பரப்பிற்கும் வரைபடங்கள் உண்டு. அதில் சிக்கல் என்னவென்றால் வாகனங்களில் செல்லும் போது குழப்பமேற்பட்டால் வழியில் உள்ள தேநீர் கடையில் வழிகேட்டு சரியான் பாதையில் செல்வதென்பது இயலாதென்பதால், புவியிடங்காட்டியே துணை. உலகெங்கும் உள்ள் பயணிகள் விமானங்களுக்கெல்லாம் ஒரே வரைபடம் வழங்கப்படும், அதனை மேற்பார்வையிட்டுத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து அனைவருக்கும் விநியோகிப்பது International Civil Aviatation Organization (ICAO) அமைப்பின் வேலை. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு உச்சத்தில் இருந்த நேரத்தில்,  தடம் மாறிய விமானம் சோவியத் வான் பகுதியில் நுழைந்த நேரம் வழக்கமாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் எல்லையில் உலாப்போகும் நேரம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் தனது ரேடார்கள் மூலம் பூதக்கண்ணாடி அணிந்து சல்லடை போடுவது வழக்கம்.



பதட்டமான காலத்தில் ராணுவ ரேடார் கண்காணிப்புப் பணியில் இருப்பவர்களின் மன அழுத்தம் சொல்லில் வடிக்க முடியாது. இப்படியான திக் திக் நேரத்தில் திடீரென எதிரி நாட்டுப் பகுதியில் இருந்து ஒரு விமானம் தங்கள் வான்பகுதியில் நுழைந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதனை சோவியத் போர் விமானம் செய்தது. தென் கொரியாவிற்குச் சொந்தமான KAL007 சுட்டு வீழ்த்தப்பட்டது. 269 பயணிகள் மற்றும் விமானி, விமானப் பணிக்குழு என அனைவரது உயிரும் கடலில் சங்கமித்துப் போனது. துயரத்திலும் துயரம், அதன் பின் நடந்த சம்பவங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் வீழ்ந்த கடல் பகுதி பயில்வான் நாடான சோவியத் என்பதால் தேடுதல் பணி அத்தனை சுலபமாக கைகூடவில்லை. சுமார் எட்டு நாட்கள் விமானத்திற்கு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை. சோவியத்தும் சுட்டு வீழ்த்தி விட்டு கமுக்கமாக ‘என்ன காந்தி செத்துட்டாரா’ கணக்காய் அனைவரையில் கடலில் காய விட்டது. எட்டு நாட்கள் உப்புக்காற்றில் கண்கள் காய்ந்து கிட்டத்தட்ட அனைவரும் சோர்ந்து போன நிலையில் இதற்கு மேல் சொல்லாவிட்டால் போர் மூளும் அபாயம் இருப்பதை உணர்ந்து சோவியத் அரசு அத்துமீறி வான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் விமானம் எங்கு சென்று விழுந்தது என்று தெரியவில்லை என்று சொல்லி, தேடுதல் பணிக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக அறிவித்தது.



சோவியத் இப்படி அறிவித்ததும் அமெரிக்க அதிபர் ரீகன் இது அநியாயம், அப்பட்டமான படுகொலை என்று கொதித்தெழுந்தார். அமெரிக்கா இவ்விஷயத்தில் படு தீவிரமாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலான பயணிகள் அமெரிக்க பிரஜைகள் என்பதும், பயணிகளில் ஒருவர் ஜார்ஜியா மாகணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் என்பதும் தான். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் அவ்விமானத்தில் பயணம் செய்வதாக இருந்து பின்னர் பயணத்திட்டத்தை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடைசியில் எல்லாரும் சேர்ந்து விமானத்தினைத் தேடலாம் என்று சோவியத் சொல்ல, எந்தப் பகுதியில் தேடுவது என அமெரிக்கா கேட்க, தேவிப்பட்டணத்தில் விழுந்த விமானத்தை, கொட்டாம்பட்டியில் தேடுவோம் என்று கைகாட்டி அனைவருடனும் சேர்ந்து சோவியத்தும் தேடிய அட்டகாசமும் நடந்தேறியது. ஒன்றுமே கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து ஏகப்பட்ட காலணிகளை மட்டும் சோவியத் அரசு இதுதான் எங்கள் தேடுதல் வேட்டையில் கிடைத்தது என்று ஒப்படைத்தது. இந்தக் காலணிகளும், ஜப்பானின் ஹொக்கடோ தீவினில் கரையொதுங்கிய மிகச்சில மனித உடல் பகுதிகளையும் தவிர எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் கழித்து சோவியத் சிதறுண்டு, போரிஸ் எல்சின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் நல்லெண்ண நடவடிக்கையாக விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டத் தகவல் பதிவுகளை வெளியிட்டு விமானத்தின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், விமானத்தில் உயிர் தப்பிய பயணிகளை சோவியத் அரசு மீட்டெடுத்து தங்கள் ரகசிய முகாம்களில் வைத்திருந்தது என்ற கதையும் காற்றில் கலந்து இன்றும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.




முதலில் பாதை மாறி, பின்னர் மலாக்கா ஜலசந்தியில் சமீபத்தில் மாயமான மலேசிய விமானத்தின் சம்பவத்தில், விமானத்தின் தொலைத்தொடர்பு கருவிகள் எதுவும் செயல்பாட்டில் இல்லாமல் பறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இவ்வாறு தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு செவிமடுக்காமல் பறக்கும் பொருள்களனைத்தும் ரேடார் மூலம் கண்காணிப்பில் இருப்பவர்களின் கண்களுக்கு ஏவுகணைகளாகவோ, அல்லது பிரச்சினைக்குரிய/ராணுவ  நடவடிக்கையில் ஈடுபடும் விமானமாகவோ தான் தெரியும். அவ்வாறு கருதப்படும் பட்சத்தில் கண்காணிப்பில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு மேலே சொன்ன சம்பவம் ஒரு உதாரணம். மலேசிய விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்களாக இருந்தாலும், மலாக்கா ஜலசந்தியில் நாம் கூட ஒரு கட்டுமரத்தில் போய் தேடுதல் வேட்டையில் கலந்து கொள்ளுமளவுக்கு வெளிப்படையாக தேடுதல் நடப்பதாலும் சீனாவால் இதற்கு மேல் எந்த அழுத்தமும் கொடுப்பதற்கு இல்லை. ஒரு வேளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் மலேசிய விமானம் மாயமாகி இருந்தால் அதைப் பற்றிய எந்தவொரு தகவலோ  அல்லது விமானத்தின் சிறு தகடோ கூட என்றைக்கும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்பதே உண்மை. விமானம் மாயமான மலாக்கா ஜலசந்தி தொடர்ந்து இந்தியக் கண்காணிப்பில் உள்ள கடல்பகுதி என்பதும், மலாக்கா ஜலசந்தியில் தன் ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு கடந்த சில ஆண்டுகளில் பெரும் ராணுவ முதலீடு இந்திய இராணுவத்தால் செய்யப்பட்டுள்ளதென்பதும், அந்தமான் தீவினில் பெரும் விமானப்படைத்தளமும், வான்பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டிருப்பதும், சுமார் 5000 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைத் தளங்களும் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




பொதுவாக விமான விபத்துகளில் விமானி மரணமடைந்தால், பெரும்பாலும் அவரையே விபத்துக்குக் காரணமாக நேர்ந்து விடப்படுவது வழக்கம். காரணம் விமானங்களை, அதன் இலத்திரனியல் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளின் அசுர பலம். இந்த பலத்தோடு அரசு அதிகாரத்தின் உச்சமான இராணுவமும் சேர்ந்தால் எதுவும் மறைக்கப்படவும், மறக்கடிக்கப்படவும் சாத்தியம். அதுவரை ஊடகங்கள் விமானி சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே பக்கத்தில் இருக்கும் பையனைக் கிள்ளித் துன்புறுத்திய தீவிரவாதி, அவர் கடத்தியிருக்கலாம் என்பது போன்ற மரண மொக்கைகளைச் சகித்து, வரப்போகும் தேர்தலோடு இதனைத் தலைமுழுகி வேறு ஏதாவதொரு பரபரப்புச் செய்தியில் மூழ்கிப் போவோம்.

Thursday, April 10, 2014

இணையம் வெல்வோம் - 15

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட திமுகவினரைப்போல் வாயெல்லாம் பல்லாக மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த அனானிமஸ் குழுவினர் மற்றும் இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும் சாமானியர்களின் வாழ்க்கையிலும், வாயிலும் மண்ணை அள்ளிப் போட்டது அமெரிக்க அரசு.
இணையத்தில் குறியீட்டு முறைப்படி தகவல் பறிமாற்றம் செய்தாலும் அவற்றை சேமித்து அதன் குறியீட்டு முறையினைக் கட்டுடைத்துத் தகவல்களைப் படிப்பதை குற்றமற்ற ஒன்றாக மாற்றும் வண்ணம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. குறியீட்டுமுறையின் வீரியம் அதிகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் உதவியை நாடுவது, ஒரு குறிப்பிட்ட பயனாளர் கணக்கின் கடந்தகால பதிவுகள் அனைத்தையும் அந்நிறுவனங்களின் மூலம் பெறுவதற்கான அதிகாரங்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கைவரப்பெற்றது.
இது போன்ற வேண்டுகோள்களுக்கெல்லாம் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிந்து போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. மீசை மடங்காத, விரைப்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலையே இழுத்து மூடிய சம்பவங்களும் நடந்தன. இது கிட்டத்தட்ட நூறு வீடுகள் இருக்கும் ஒரு ஊரில், ஒரு திருடனின் வீட்டைக் கண்டுபிடிப்பதற்காக அத்தனை வீட்டினையும் முன் அனுமதியின்றி, யாருக்கும் தெரியாமல் உட்புகுந்து வேவு பார்க்கலாம் என்பது போன்ற ஒரே நேரத்தில் பகீர் மற்றும் கிளுகிளுப்பு இரண்டும் கலந்த ஒரு விஷயம்.
அது மட்டுமின்றி அமெரிக்க உளவு அமைப்புகள் அனானிமஸ் ஆதரவாளர்கள்/ஆர்வலர்கள் போர்வையில் அவர்களின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், இணையத்தில் தங்கள் அடையாளத்தினை மறைத்துக் கொள்ள விரும்புவர்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் TOR வலையமைப்பிலும் பங்கேற்பாளர்களாக உருமாறி தங்கள் கணிணிகள் மூலம் பயணிக்கும் தகவல்களைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தார்கள். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கணிணி/இணைய வல்லுநர்கள் மத்தியில் பலத் துயரச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.
அச்சம்பவங்கள் அனைத்தும் அனானிமஸ் தொடர்பானவை என்பதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதும் பொதுவில் வைக்கப்படவில்லையென்றாலும், அவற்றின் மூலம் அனானிமஸ் அல்லது அமெரிக்க அரசுக்கு எதிராக இணையத்தில் அடையாளங்களை மறைப்பது மற்றும் ஊடகங்களின் தணிக்கை முறை ஆகியவற்றுக்கெதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
அமெரிக்க அரசு இத்தனை பிரயத்தனப்பட்டாலும் அவர்களுக்கு கைகொடுத்ததென்னவோ எதிரிகளைக் கவிழ்க்க பயன்படும் தொன்றுதொட்ட பாரம்பரிய வழக்கமான காட்டிக்கொடுக்க உள்ளிருக்கும் ஆட்களை வளைக்கும் தந்திரம்  தான். இணையத்தில் மாயமான்களாய் வலம்வரும் அனானிமஸ் அன்பர்களை அவ்வாறு வளைத்த வரலாறு அதிரிபுதிரி திருப்பங்கள் திருப்பங்கள் நிறைந்த மசாலாத் திரைப்படங்களை மிஞ்சிய ஒன்று. அக்கதையினைப் பார்ப்போம்.
முதலில் சட்டமாற்றங்கள் மூலம் இணையக்குற்றங்கள் மிகப்பெரும் தேசத்துரோக வழக்குகளைப் போல கையாளப்பட்டது. சிறு குற்றங்களுக்குக் கூட பல்லாண்டு சிறைத்தண்டனை, கட்டவே முடியாத அபராதத் தொகை போன்ற அஸ்திரங்கள் ஏவப்பட்டன. அனானிமஸ் அன்பர்கள் முகமூடி மாயாஜாலக்காரர்களாக இருந்தாலும் பெரும்பான்மையனோர் மிக இளம் வயதினர், அதிமுக்கிய இணையப் பாதுகாப்புத் துறைகளின் பதவிகளை அலங்கரித்தவர்களாகவோ அல்லது அதனை எதிர்நோக்கியவர்களாக இருந்தனர்.
அமெரிக்க அரசின் கடும் தண்டனைகளும், வழக்கில் சிக்கி விட்டால் தங்கள் எதிர்காலம் சாகும்வரை சின்னாபின்னப்படுத்தப்படும் என்பது அவர்களிடையே ஒரு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதில் நாம் முதலில் சந்திக்கப் போகும் நபர் ‘சிக்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 20 வயதாகும் சிகர்துர் தொர்டர்சன். மேலே படத்தில் புத்தம் புதிய பால் டின்னைப் போல புசுபுசுவென விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் உடன் காட்சியளிக்கும் சிறுவன் தான் சிகர்துர். இந்தப் பொடிப்பயல் எப்படி ஜூலியனுடன் என்று உங்கள் மனதில் தோன்றும் அதே கேள்வியும் ஆச்சர்யமும் அனைவருக்கும் தோன்றியது. ஜூலியனுனிருந்தவர்கள் அனைவருமே சின்னஞ்சிறுசு, அறியாத வயசு என்று ஜூலியனை கடுமையாக எச்சரித்தனர். விதி வீதியில் விளையாடியது, ஜூலியன் கேட்கவில்லை.
ஜூலியன் சிகர்துர் மேல் வைத்த நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது.  ஐஸ்லாந்தைச் சேர்ந்த சிகர்துர்,  ஜூலியனைப் போலவே தனிமை நிறைந்த சிறுவனாக வளர்ந்ததும், தன் 12 வயதிலேயே கணிணிகள் மேல் காதல் கொண்டு ஒரு இணையத்தளத்தினை ஹேக் செயத்ததும், 14 வயதில் குடும்பத்துடன் விமானப்பயணம் மேற்கொள்கையில், ஐஸ்லாந்தின் முக்கிய நிதி நிறுவனமான ‘மைல்ஸ்டோன்’னின் முக்கியஸ்தரான தன் சக பயணியின் மடிக்கணிணியினை சரி செய்து கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்திலேயே வேலை கிடைக்கப்பெற்றதும் சிகர்துரின் திறமையைச் சொல்லும். சிகர்துரின் வீரியம் புரியாமல் மைல்ஸ்டோன் நிறுவனம் கொடுத்த வேலை அவர்களின் வலையமைப்பில் சிதறிக்கிடக்கும் அதிமுக்கிய ஆவணங்களைத் தேடிப்பிடித்து அவற்றை முற்றாக அழிப்பது.
சாக்லேட் சாப்பிடும் வயதாக இருந்தாலும், இந்த வேலைக்கு இவ்வளவு காசா என்ற கேள்வி சிகர்துருக்கும் இருந்து வந்தது. தான் அழிக்க வேண்டிய ஆவணங்களை பிரதி எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து அவற்றைப் படிக்க ஆரம்பித்ததும் சிகர்துருக்கு அந்நிறுவனத்தின் பெரிய தலைகள் ஈடுபட்டுள்ள மோசடிகளும், அதில் ஐஸ்லாந்து அரசியல்வாதிகளின் தொடர்பும் புரியவந்தது. இது நடந்த வருடம் 2009, கடும் பொருளாதார நெருக்கடியில் ஐஸ்லாந்து தத்தளித்த நேரம். சிறுவயது முதலே ‘ஏதாவது செய்யனும் பாஸ்’ என்று ஆசை கொண்டிருந்த சிகர்துருக்கு இது அரிய சந்தர்ப்பமாகத் தோன்றியது.
தன் அடையாளத்தினை தெரியப்படுத்தாமல் சுமார் 600 gb அளவிலான கோப்புகளை முக்கிய ஊடகங்களுக்கு சிகர்துர் மூலம் பந்தி வைக்கப்பட்டு, மைல்ஸ்டோன் நிறுவனத்தின் மானம் அடுத்த நாள் தலைப்புச் செய்தியில் சந்தி சிரித்தது. அதுவரை சிறப்பாக அனைத்தையும் கடந்து வந்த சிகர்துர் சந்தித்த முதல் துரோகம் தன் வகுப்புத் தோழன் தன்னைக் காட்டிக் கொடுத்தது தான். மைல்ஸ்டோன் கோப்புகளை பகிரங்கப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, வழக்கும் தொடுக்கப்பட்டது, வாழ்க்கையே வெறுத்துப் போன சிகர்துருக்கு தெரிந்த ஒரு விடிவெள்ளி ஐஸ்லாந்து ஊடகத்தில் பழக்கமான கிறிஸ்டைன்.
இந்த கிறிஸ்டைன் வேறு யாருமல்ல, விக்கிலீக்ஸின் அதிகாரப்பூர்வ ஊடகத்தொடர்பாளர். அந்த காலகட்டத்தல் அப்பொழுது தான் விக்கிலீக்ஸ் சிறிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்த நேரம், சிகர்துர் பகிரங்கப்படுத்திய கோப்புகள் ஐஸ்லாந்தில் புயலைக்கிளப்பியதைக் கண்ட கிறிஸ்டைன், அகில உலகத்தையும் உறைய வைத்த ‘colateral murder’ காணொளியினை வெளியிடும் பணிகளுக்காக ஐஸ்லாந்தில் மையம் கொண்டிருந்த ஜூலியன் அசான்ஞ்சிடம் சிகர்துரை அறிமுகப்படுத்திய அந்த கணம் ஜூலியனுக்கு ஏழரை ஆரம்பித்தது.
தன்னைப் போலவே சிறுபிராயத்தினை கொண்டிருந்ததும், தன் சொந்த மகனின் வயதினை ஒத்திருந்த சிகர்துரிடம் அடுத்த சிலமணி நேரங்களின் தனியே அமர்ந்து சூப் சாப்பிடுமளவுக்கு மனதால் நெருங்கியிருந்தார் ஜூலியன். அடுத்த சில வாரங்களில் ஜூலியனின் நம்பிக்கைகுரிய உள்வட்டத்தில் சிகர்துருக்கு இடமளிக்கப்பட்டது. நினைத்த நேரத்தில் ஜூலியன் தொடர்பு கொள்ள குறியீட்டுமுறைப்படுத்தப்பட்ட கைப்பேசி வழங்கப்பட்டது, ‘colateral murder’ காணொளியின் தயாரிப்புப் பணியிலும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது சிகர்துருக்கு. முதலில் penguinX என்றும், பின்னர் ‘Q’ என்றும் புனைப்பெயரால் சிகர்துரை அனைவரும் அழைக்க ஆரம்பித்திருந்தனர்.
தொடர்து பலபேரும் ஜூலியனிடம், சிகர்துருக்குக் கூடி வரும் முக்கியத்துவத்தினை எச்சரித்தையும் மீறி விக்கிலீக்ஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ விவாதத்தளங்களை(chatroom/forum) நிர்வாகம் செய்யும் பொறுப்பு சிகர்துருக்கு வழங்கப்பட்டது. கேட்க சாதாரணமாக இருந்தாலும் இது நடந்த பொழுது ஸ்வீடனில் ஆடிய கபடி ஆட்டத்திற்காக இன்டர்போல் ஜூலியனைத் தேடிய நேரம், collateral murder காணொளியின் வெளியீட்டுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத்துறை தன் கழுகுக் கண்களை ஜூலியனின் மேல் அழுந்தப் பதித்திருந்த நேரம். விக்கிலீக்ஸின் விவாதத்தளங்களுக்கு வருபவர்கள் அமெரிக்க உளவாளிகளாகக் கூட இருக்கலாம், ஒவ்வொருவரையும் எடை போட்டு அனுமதிக்க வேண்டிய பெரும் பொறுப்பு சிகர்துரின் பிஞ்சுக்கைகளில் வரப்போகும் விபரீதங்களை அறியாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

தொடரும்.
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Wednesday, November 20, 2013

இணையம் வெல்வோம்-14

அமெரிக்காவின் வரலாற்றை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை 2001 செப்டம்பர் 11க்கு முன், பின் என நளைய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் படிக்குமளவுக்கு தலைகீழாய் புரட்டிப் போட்டது இரட்டைக் கோபுரத் தாக்குதல் அல்லது நிகழ்ச்சி.
கம்யூனிச நாடுகளின் மேல் மேற்குலக மேதாவிகள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு அங்கு தனிமனித சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது. ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த கிழக்கு ஜெர்மனியில் இத்தகைய கண்காணிப்புகள் மிகப்பிரபலம். இப்படி ஊர் உலகமெல்லாம் அரசு இயந்திரங்கள் நடத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்த அமெரிக்க மக்கள் தங்களுக்கே அது போன்ற நிலை வருமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு தேசியப் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டுத் தங்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்தால் கூட “God Bless America” என்று மயிர்க்கூச்செரியக் கூவுமளவிற்கு அனைவரும் அரண்டு போயிருந்தார்கள். ஊடகங்களும் அதனை நியாயப்படுத்தின. 


ஆனால் அமெரிக்க அரசின் கண்காணிப்பின் நீள, அகலம் எட்வர்ட் ஸ்நோடன் ஊடகங்களின் அவிழ்த்து விடும் வரை யாருக்கும் உறுதியாய்த் தெரிந்திருக்கவில்லை. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்காவில் கல்யாணத்தின் முதல் பந்தியில் சாப்பாடு பறிமாறும் வேகத்திற்கு இணையாக தேசியப்பாதுகாப்பினை பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று தான் FISA (Foreign Intelligence Surveillance Act) எனப்படும் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள். அதன் மூலம் எந்த நீதிமன்ற ஆணையுமின்றி அரசு சந்தேகப்படும் எந்த ஒரு நபரின் தொலைத்தொடர்புகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து அலசி ஆராயலாம் என்பது தான். இங்கு தொலைத்தொடர்பு என்பது இணையம், தொலைபேசி மற்றும் செல்பேசி என சகல இலத்திரனியல் சாதனங்கள் மூலம் ஏற்படுத்தபடும் தகவல் தொடர்புகள் என்பதனை நினைவில் கொள்ளவும். இந்த அசுர பலத்தின் வீச்சினையும், வீரியத்தினையும் சட்டென்று பலருக்குப் புரிபடுவதில்லை. இணையம் எப்படி செயல்படுகிறதென்பதின் சூட்சுமம் அறிந்தவர்களுக்கு இதில் உள்ள ஆபத்தும், ஆழமும் புரிந்திருந்தது.
மொட்டைக்குத் திருப்பதி போல, இணைய வழங்கிகளுக்கு அமெரிக்கா. உலகத்திலிருக்கும் முக்கால்வாசி இணைய வழங்கிகள் அங்கு தான் இருக்கிறது. தேசிய அளவின் இணையப்போக்குவரத்தினைக் கண்காணிப்பதன் மூலம் உசிலம்பட்டியில் இருந்து உங்கள் செல்பேசியின் ‘வாட்ஸ் அப்’ பில் யார், யாரிடம் மரியாதையுடம் பேசுகிறீர்கள், அல்வா கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என்பதெல்லாம் கூட கண்காணிக்க முடியும்.

இங்கு கண்காணிப்பதென்பது உங்கள் இணைய நடவடிக்கைகளை எப்போதும் ஒருவர் தோளோடு தோளாய் நின்று கண்காணிக்கிறார் என்பதல்ல. இங்கு சகலமும் சேமிக்கப்படுகிறது. சகலமும் என்றால் ச..க..ல..மு...ம். உங்கள் கணிணி எத்தனை மணிக்கு இணைகிறது, வலையமைப்பு எண், உங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனம், வேலை நேரத்தில் பேஸ்புக் போவது முதல், சினிமா கிசுகிசு படித்துக் கொண்டே VOIP மூலம் தொலைத்தொடர்பில் இருப்பது வரை அத்தனையும். சேமிக்கப்படும் தகவல்களனைத்தையும் அரைத்துச் சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொடுக்க SIEM போன்ற வலைப்பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் பாஸ்டன் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ‘pressure cooker bombs’ என்று தெரிந்த பிறகு கூகுளில் Pressure Cooker Bombs என்று தேடியவர்கள் வீடுகளுக்கு அமெரிக்கப் போலீசார் விருந்துக்குச் சென்ற சம்பவங்களின் மூலம் இணையக் கண்காணிப்பின் ஆழத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள கனமாகப் பரிந்துரைக்கப் படுகிறது. முதலாவது அமெரிக்க இணைய வழங்கிகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமானது அல்ல. அவற்றில் இருக்கும் இணையத்தளங்களை உலகம் முழுவதிலும் உள்ள பயனாளர்கள் வருகை தருகிறார்கள். நீங்களும், நானும், உலகமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள், இராணுவப்பாதுகாப்பு மற்றும் அணு உலை மைய அலுவலகங்கள் இப்படி அனைத்தும். இவையனைத்தையும் ஒரு தனி நாடு கண்காணிக்க முடியுமென்பது மிக அபாயகரமானது. இதன் மூலம் குறிப்பிட்ட எந்த தனி நபரையும் குறிவைத்துத் தகவல்கள் சேமிக்க முடியும், மேலும் உங்கள் இணையப்பழக்க வழக்கங்களை வைத்து உங்கள் கணிணியில் நிரல்களை நிறுவி நீங்கள் இணையத்தில் இணைப்பில் இல்லாத  போதும் என்னென்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியும். இரண்டாவது விஷயம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட இணையத்தில் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பது மூலம் மனிதர்களைத் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்பதாகத் தரம்பிரிக்க முடியும்.

உதாரணத்திற்கு உங்கள் உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கிய விவரங்கள், பிடித்த/பிடிக்காத விஷயங்கள், அரசியல் சார்பு, குடும்பம், நட்பு, தொடுப்பு இப்படி அனைத்தும். இப்படி ஒரு தனி நபரை இணைய நடவடிக்கைகள் மூலம் தரம்பிரித்தலை அமெரிக்கா தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ஆரம்பித்து வைத்தாலும், இணையமும் ஒரு காலத்தில் போர்க்காலங்களில் இராணுவப் பயன்பாட்டுக்கென கண்டுபிடித்து இன்று கொத்தமல்லி சட்னி வைக்கக் கூட இணையத்தினைப் பயன்படுத்தும் அளவுக்கு அதன் வளர்ச்சியினைப் பார்க்கிறோம்.


 அதே போல் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் எதிரில் இருக்கும் நபரின் முகத்தினைப் படம் பிடித்து, அடையாளம் கண்டு, அவரைப் பற்றிய சகல விவரங்களையும் அவருடைய இணைய நடவடிக்கைகளை வைத்துப் பட்டியலிடக் கூடிய சக்தியுடன் இலத்திரனியல் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும்.

அது போன்ற கால கட்டங்களில் எந்த ஒரு மனிதனும் தங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்/நண்பர்கள் மத்தியில் மட்டுமே தங்கள் முகத்தினையோ அல்லது தங்கள் அடையாளப்படுத்தியோ கொள்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் மானாட மயிலாட பார்த்து விட்டு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சென்றால் உள் நுழைந்ததும் எச்சரிக்கை ஒலி அடிக்கச் செய்யுமளவிற்கு வளரப் போகும் விஷயம் தான் இந்த இணையக் கண்காணிப்பு (Project PRISM).


இவற்றையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறது என்று உலகிற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டு இதன் ஆபத்தினை பற்றி எடுத்துரைத்த எட்வர்ட் ஸ்நோடனை அரசாங்கத்துடன் வெள்ளைக் காக்கை மேய்க்கும் பெரும் ஊடகங்கள் உளவாளி, மோசடிக்காரன் என்று ஆர்ப்பரித்து அடங்கின.

ஸ்நோடன் குறித்து விரிவாக, தனியாகப் பார்ப்போம். எல்லாம் சரி இதன் மூலம் அனானிமஸ் அன்பர்களுக்கு வந்த பிரச்சினைகள் என்ன, அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், மேலும் மைக்ரொசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் குறியீட்டு முறையை (encrpytion) எப்படி அமெரிக்க அரசாங்கள் கட்டுடைத்து அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் பலம் பெற்றது போன்ற விவரங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.


தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.