Tuesday, February 16, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 2 (முற்றும்)

தனிப்பட்ட முறையில் குக்கீஸ்கள் உலாவியால் உருவாக்கப்படும் வெறும் எழுத்துக் கோப்புகளே, அவற்றால் உங்கள் கணினியில் தங்கி இருக்க முடியுமே ஒழிய எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியாது. குக்கீஸ் மூலம் வைரஸ் பரப்பப்படும், கோப்புகள் அழிக்கப்படும் என்பது, தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக 'சின்ன புள்ளைங்க பாக்குப் போட்டா மாடு முட்டும்' என்று சொல்வதைப் போன்றது. குக்கீஸ்களில் என்ன சேமிக்கப்படுகிறது என்பது நாம் செல்லும் இணையத்தளங்கள் பின்பற்றும் முறையைப் பொருத்தது. குக்கீஸ்கள் மூலம் தகவல்கள் கைமாறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த பின்பு அனேக தளங்கள் வருகையாளருக்கானத் தனிக்குறியீட்டு எண்களை மட்டுமே குக்கீஸ்களில் சேமிக்கின்றன. அவற்றுக்கானப் பிறதகவல்கள் அவர்களின் இணைய வழங்கிகளில் பாதுகாப்பாகவே இருக்கின்றன. சில தளங்கள் அவற்றின் பக்கங்களை மூடியதுமே தங்கள் குக்கீஸ்களை செயலற்றதாக்கி விடும் (session cookies) முறையினையும் தேவைக்கேற்பப் பின்பற்றுகின்றன.
அவ்வாறு பாதுகாப்பாக வைப்பதும், வைக்காததும் தளங்களை வடிவமைப்பவர்களைப் பொருத்தது என்பதால் புதிதாக ஏதேனும் தளங்களுக்குச் செல்லும் போது மின்னஞ்சல் முகவரி,கடனட்டை விவரங்கள் போன்ற பிரத்யேகத் தகவல்களைத் தரும் சந்தர்ப்பத்தில், அந்தத் தளத்தின் குக்கீஸ்களைச் சென்று பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. அப்படி பார்க்கும் போது அவற்றில் முக்கியத் தகவல்கள் இருப்பின் உடனே அந்த குக்கீஸ்களை நீக்கி விடுவது சாலச் சிறந்தது. அல்லது ஒரு தை அமாவசையன்று உங்கள் வங்கிக் கணக்கு பல்லிளிக்கவோ அல்லது உங்கள் முகவரிக்கு நொடிக்கொருமுறை வயாக்ரா விற்பனையாளர் மின்னஞ்சலில் திக் விஜயம் செய்யவோ வாய்ப்பதிகம். நம் கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குக்கீஸ்களை கீழ்காணும் இடங்களுக்குச் சென்று கண்டு மகிழவும்.

Internet Explorer: Tools -> Internet options -> Browsing History -> Settings -> View Files

Firefox: Tools -> Options -> Privacy -> Select 'Use custom settings for history' -> Show cookies

Google Chrome: Tools -> Options -> Under the hood -> Show cookies and website permissions

ஒரு தளத்தின் குக்கீஸ்களை மற்ற தளங்கள் படிக்க முடியாத போது எதற்காக இப்படி சிரமப்பட வேண்டும், கால விரயம் என்று கவலைப் படுபவர்கள் தொடர்ந்து படிக்கவும் :).
இணையப் பக்கங்களில் பலவிதமான விளம்பரப் பட்டைகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த குக்கீஸ்களுக்குள் புகுந்து விளையாடுவது இந்த விளம்பரப் பட்டைகள் (ad banners) தான். எப்படி?. இந்த விளம்பரப் பட்டைகள் இரண்டு வகை. ஒன்று நீங்கள் செல்லும் இணையத்தளம் தங்கள் சொந்த வழங்கியிலிருந்து தருவது (first party ads), இரண்டு வேறு ஒருவருக்குச் சொந்தமான வழங்கியில் இருந்து தருவது (third party ads). இதில் இரண்டாவது தான் கொஞ்சம் பிரச்சினைக்குரியது. ஏன்?. உதாரணத்திற்கு நாம் இரண்டு வெவ்வேறு இணைய தளத்திற்கு செல்கிறோம், இரண்டிலும் ஒரே மூன்றாம் நபரிடம் (same third party ads) இருந்து விளம்பரங்களைத் தரும் பட்சத்தில் அந்த மூன்றாம் நபர் இரண்டு இடத்திலும் நம் நடவடிக்கைகளைத் தங்கள் குக்கீஸ்களில் பதிவு செய்து கொள்ள முடியும். அதன் மூலம் மீண்டும் நாம் செல்லும் போது நம் கடந்த கால நடவடிக்கைகளுக்குச் சம்பந்தமான விளம்பரங்கள் நம்மைப் பார்த்து கண்ணடிக்க வைத்து மகிழ்வார்கள். இணையத்தில் உலவுவது இருட்டுக்குள் உலவுவது போலத்தான், விளம்பரங்கள் வழங்கும் அந்த மூன்றாம் தரப்பு மூலம் தகவல் திருட்டு நடக்க வாய்ப்பிருப்பதால் கவனமாக, பாதுகாப்பாகச் செல்ல பரிந்துரைக்கபடுகிறது.

விளம்பர நிறுவனங்களுக்கு அடுத்து குக்கீஸ்களை விவகாரமான முறையில் பயன்படுத்துபவர்கள் தேடு பொறி நிறுவனங்கள். தேடுபொறியில் நாம் தேடும் குறிச்சொற்கள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஊரிலிருந்து, இந்த இணைப்பிலிருந்து ஒருத்தர் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு 'நமிதா' படங்களைத் தேடினார் என்பது மாதிரியான தகவல்களை விரிவாக, தெளிவாக, அழகாக தங்கள் வழங்கியில் பதிவு செய்து அதற்கான குறியீட்டு எண் நம் கணினியிலேயே விதைக்கப்படும். அடுத்த முறை ''நந்தா' என்று குறிச்சொல்லைத் தேடும் பொருட்டு செல்லும் போது 'did you mean நமிதா?' என்று கேட்டால் சலனப்பட்டுவிடாமல் நந்தாவையே தேடவும்.

ஓரளவுக்கு குக்கீஸ்கள் குறித்து புரியும்படி விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இதுவரை படித்த பின் இணையத்தின் சகல திசைகளிலும் குக்கீஸ்களால் உங்களை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் தோன்றினால், அது வெறும் மனப்பிராந்தி என்று ஒதுக்கித்தள்ளாதிருக்கவும். குக்கீஸ்களுக்கு நாமே கடிவாளம் போடலாம். பின்வரும் முறைகளைப் பின்பற்றி உங்கள் உலாவியின் வசதிக்கேற்ப, நம்பத்தகுந்த தளங்களுக்கு மட்டும் குக்கீஸ்களை பதிந்து கொள்ள அனுமதிக்கலாம் அல்லது ஒவ்வொரு முறையும் உங்கள் அனுமதி பெற்று பதியுமாறும் செய்து கொள்ளலாம். உலாவியில் ஒட்டுமொத்தமாக குக்கீஸ்களை செயலாற்ற விடாமல் செய்ய முடியும், இருந்தாலும் பல தளங்கள் குக்கீஸ்கள் இன்றி செயல்பட முடியாது என்று அடம்பிடிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

Internet explorer : Tools -> Internet Options -> Privacy -> Advanced

Firefox: Tools -> Options -> Privacy -> Select 'Use custom settings for history'

Google Chrome: Tools -> Options -> Under the hood -> Cookie settings

மேலே சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்றால் குக்கீஸ்களைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகளைக் காணலாம். அவற்றும் உங்கள் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். நாம் திறக்கும் இணையத்தளங்கள் மட்டுமே குக்கீஸ்கள் பதிவு செய்து கொள்ள முடிவது போலவும், வேறு மூன்றாம் தரப்புத் தளங்களுக்கு அனுமதியளிக்காமலும் பார்த்துக் கொள்வது சிறப்பு என தெரிவிப்பதுடன் இத்தொடர் நிறைவடைகிறது.







18 comments:

அண்ணாமலையான் said...

gud post... thank u

சுடுதண்ணி said...

மிக்க நன்றி அண்ணாமலையான் :)

ஜோதிஜி said...

கொஞ்சம் புத்தியோடு படிக்க வந்தாலும் சலனப்பட வைத்து விடுவிங்க போல இருக்கே? தீவிரவாத மக்கள் ரகசியமாய் உள்ளே என்கிரிப்ட் வைத்து விளையாடி கடத்திக்கொண்டுருப்பதை கொஞ்சம் புரியவைங்களேன்

DREAMER said...

பயனுள்ள தகவல்கள், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

அகல்விளக்கு said...

//அடுத்த முறை ''நந்தா' என்று குறிச்சொல்லைத் தேடும் பொருட்டு செல்லும் போது 'did you mean நமிதா?' என்று கேட்டால் சலனப்பட்டுவிடாமல் நந்தாவையே தேடவும்.//

கண்ணுக்கு குளிர்ச்சியா படத்தை போட்டுட்டீங்களே...

i love cookies....

:-)

Anonymous said...

Please move tech posts only to a separate blog or move nontech posts to a separate blog so that without prejudice to others you can be included in tamil infotech blogs top ten

சுடுதண்ணி said...

மிக்க நன்றி ஜோதிஜி. அது குறித்து எழுதியிருக்கிறேன்.http://suduthanni.blogspot.com/2009/11/1_08.html


மிக்க நன்றி ஹரீஷ் நாரயண் :) தொடர்ந்து வாங்க.

me too :D @ அகல்விளக்கு

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சாய்தாசன். நீங்கள் சொல்வதுபடி செய்கிறேன் :). தொடர்ந்து வாங்க.

ilayangudian said...

very good article. Thanks for your posts.

சுடுதண்ணி said...

நன்றி இளையாங்குடி :).

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி தகவல்களுக்கு. (இடையே வந்த நகைச்சுவைக்கும்)

Tech Shankar said...

நான் அடிக்கடி குக்கீஸை க்ளியர் செய்வது வழக்கம். நன்றி.

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)

மிக்க நன்றி சங்கர். உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது :)

Prabu M said...

Very informative nanbaa...
the way you explain things made me your fan..
keep writing friend.. :)

Mohan said...

உங்கள் எழுத்து நடை சூப்பர்... வாழ்த்துக்கள்....

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி பிரபு, மோகன். தொடர்ந்து வாங்க :)

Muruganandan M.K. said...

பகிர்விற்கு நன்றி. பயனடைந்தேன்.

சுடுதண்ணி said...

மிக்க மகிழ்ச்சி :)

govinthan said...

ஸ்டைல் நல்லாருக்கு தல