Wednesday, March 27, 2013

இணையம் வெல்வோம் - 6


கடந்து செல்லும் தாவணிகளின் எண்ணிக்கை நூறானாலும் அல்லது ஆயிரமாயேனாலும் எப்படி ஒரு வயசுப் பையனின் கண்களும், மூளையும் பரபரத்துக், கடகடவென அத்தனையையும் அலசி, ஒன்றே ஒன்றைத் தேர்ந்தெடுத்து நிலை குத்தி நிற்கிறதோ, கிட்டத்தட்ட அதே வேகத்தோடும், விவேகத்தோடும், வந்து குவியும் வலையமைப்பின் அத்தனை செயற்பதிவுகளையும் ஆராய்ந்து முக்கியமான தகவல்களை மட்டும் பாதுகாப்பு வல்லுநர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் தான் Security Incident and Event Management (SIEM).
SIEM தொழில்நுட்பம் களிமண் போன்றது. குரங்கும் பிடிக்கலாம், பிள்ளையாரும் பிடிக்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. ஒரு வலையமைப்பில் எந்தெந்த உபகரணங்கள், கணிணிகள், வழங்கிகளின் செயற்பதிவுகள் தேவை, அவற்றினை SIEM தொழில்நுட்ப உபகரணங்களுக்கு தங்கள் செயற்பதிவுகளை அனுப்பி வைக்கத் தேவையான நிரல்கள்/உத்தரவுகளை வழங்குதல் ஆகியவை பாதுகாப்பு வல்லுநர்களின் பொறுப்பு. மேலும் இப்படித் திரட்டும் செயற்பதிவுகளை வைத்து SIEM தொழில்நுட்பம் என்ன செய்ய வேண்டும் என்பதை நிரல்கள் மூலம் செயல்பட வைப்பதும் அவர்களின் வேலை. அப்படி என்னவெல்லாம் இதன் மூலம் செய்ய முடியும்?.

உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்திற்குப் பல நகரங்களில் கிளை நிறுவனங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தினசரி டெல்லிக் கிளையிலிருந்து வலையமைப்பில் உள்நுழையும் சிதம்பரம் என்ற ஊழியர், அனைவரும் அலறும் வண்ணம் தீடீரென ஒருநாள் சிவகங்கையில் இருந்து வலையமைப்பில் உள்நுழைந்தால் SIEM தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம். சமயங்களில் நீங்கள் முக்கிய வேலையாக வெளியூர் சென்று முகப்புத்தகம் பார்க்காமல் முகம் வியர்த்து, கை நடுங்கி அவசர, அவசரமாக நீங்கள் உங்கள் பயனாளர் கணக்கினுள் உள்நுழைந்தால், நீங்கள் வழக்கமாக வரும் இணைய இணைப்பின் மூலம் உள்நுழையவில்லை என்று எச்சரிக்கக் கண்டிருப்பீர்கள். அதெல்லாம் கிட்டத்தட்ட SIEM வகை எச்சரிக்கைகள்.


வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு SIEM மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம், தாங்கள் நினைத்த வண்ணம், குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் மட்டும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அளித்து மில்லியன்/பில்லியன் எண்ணிக்கையிலான செயற்பதிவுகளை பின்னாளில் விசாரணக்குத் தோதாக சேமித்து வைக்கும் உற்ற தோழன்.

ஆதிகாலத்தில் ஹேக்கர்கள் சரவெடி போன்று தாக்குதல் நடத்துவது தான் வழக்கம். ஒரு இணையத்தளத்தில் பயனாளர் பெயர், கடவுச்சொல் உள்ளிடும் உள்நுழையும் பக்கம் (login page) இருந்தால் அதற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான உள்நுழையும் முயற்சிகளை நிரல்கள் மூலம் மேற்கொள்வது வழக்கம். ஒரு கடவுச்சொல்லை வைத்து பல பயனாளர்களின் பெயர்களை முயற்சி செய்வது, ஒரு பயனாளர் பெயரை வைத்து பலக் கடவுச்சொற்களை முயற்சி செய்வது, ஒவ்வொரு வலையமைப்பு உபகரணங்களுக்கு அதனைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பிரத்யேக பயனாளர் பெயர்/கடவுச்சொல் இருக்கும் (factory default admin account),  அவற்றை முயற்சி செய்வது இப்படி பலவகைத் தாக்குதல் சகட்டு மேனிக்கு நடக்கும்.


இதனைத் தவிர்க்கத் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தனர். ஒவ்வொரு வலையமைப்பு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் பயனாளர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவது, மூன்று முறைக்கு மேல் தவறான கடவுச்சொல் அளிக்கும் பயனாளர் கணக்கினை செயலிழக்கச் செய்வது, ஒரே வலையமைப்பு எண்ணில்/கணினியில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்நுழையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், குறிப்பிட்ட கால அளவிற்கு அந்த வலையமைப்பு எண்ணைத் தடை செய்வது, CAPTCHA தொழில்நுட்பம் மூலம் தானியங்கி நிரல்கள் மூலம் தொடுக்கப்படும் முயற்சிகளைத் தவிர்ப்பது ஆகியவை அவற்றுள் சில.ஊரே உலையில் விழுந்தாலும் எப்படி நாம் அன்று திரைப்படம் வெளியானால் அதற்கு திரைவிமர்சனம் எழுதி குதூகலிப்பதை நிறுத்துவதில்லையோ, அதைப் போல ஹேக்கர்களுக்கு தன் முயற்சிதனைக் கைவிடுதலும், தளர்ந்து போதலும் பழக்கமன்று. தாக்கப்போகும் வலையமைப்புகளை, இப்படிக் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்து, பிராண்டினால் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள், அதனால் ஒரு பலனும் இல்லை என்று உணர்ந்த ஹேக்கர்கள், கொண்டு வந்த மறுமலர்ச்சித் திட்டம் தான் APT எனப்படும் Advanced Persistence Threat. ‘இதயம்’ திரைப்பட முரளியைப் போன்று ஒரே இடத்தை பொறுமையாகக் குறி வைத்து அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்ப நிதானமாக மாதக்கணக்கில் நேரம் எடுத்து தாக்குதல் நடத்தி வெற்றி பெறும் போர் முறை தான் APT. இத்தகையத் தாக்குதல் நடத்துவதற்கு எந்த அளவு தேர்ந்த மதியும், நுட்பமும், நிதானமும் தேவையோ, அதனைவிட அதிகம் தேவை இவற்றைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கு.

ஒரு பயனாளரின் பெயர் மட்டும் உங்களுக்குத் தெரிகிறது, கடவுச்சொல் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். பயனாளர் கணக்கினை உடைத்து உள்நுழையும் முயற்சிகளுக்கு என்றே கடவுச்சொல் பட்டியல்கள் உண்டு. அது கிட்டத்தட்ட அகராதியில் உள்ள அத்தனை வார்த்தைகளையும், கணிணியின் விசைப்பலகையின் மூலம் உள்ளிடக்கூடிய அத்தனை எழுத்துக்கள்/எண்கள் அனைத்தையும் விதவிதமாகக் கூட்டமைத்தும் இருக்கும். இவையனைத்தும் எழுத்தின் எண்ணிக்கையின் படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகத் தான் கடவுச்சொற்களின் நீளம் இத்தனை எழுத்துக்கள் இருக்க வேண்டும், அனைத்து வகை எழுத்துக்கள், எண்கள் இவற்றின் கலவையாக இருக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்றன, அப்படி செய்வது மூலம் உங்கள் கணக்குப் பாதுகாப்பான ஒன்று நினைத்து விடக் கூடாது, திங்கள் கிழமை போக வேண்டிய மானம் சனிக்கிழமை போகும், அவ்வளவே. ஆனால் இதன் மூலம் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இது போன்ற தாக்குதலை கண்டுபிடிப்பதற்குப் போதிய கால அவகாசம் கிடைக்குமென்பதே முக்கியக் காரணம்.

அளவுக்கு மேல் பெருத்துக் கொழுத்த நிறுவனங்கள் தங்களின் இணையத்தளத்தின் வழங்கிகள் (Web Servers), உலகமெங்கும் பரவியிருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கோப்புப் பறிமாற்றத்திற்கான வழங்கிகள் (FTP servers), எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தின் மூலம் நிறுவனத்தில் உள்வலையமைப்பிற்குள் பாதுகாப்பாக நுழைவதற்கான  VPN (Virtual Private Network) போன்றவற்றை இணையத்தின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற நிறுவனங்கள் இணையப் பாவனையில் இருக்கும் தங்களின் வழங்கிகளின் பாதுகாப்பினை உறுதியாக வைத்திருப்பது அவசியம், இல்லையேல் ஹேக்கர்கள் இணையத்தள வழங்கியில் உள்நுழைந்து உங்களின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் ‘இன்னும் 15 நாள்ல கரண்ட் வந்துரும்’ என்று பாண்டிச்சேரி நாரயணசாமியை பேசவைக்க முடியும்.

ஹேக்கர்களிலும் பல விதமானவர்கள் உண்டு. ஒரு வலையமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வெற்றியடைந்து உள்நுழைந்த உடன் அலறி அடித்து, கோப்புகளை அள்ளிச் சுருட்டி, செயற்பதிவுகளை அழித்து, “அசந்தா அடிக்கிறாது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது என் பாலிசி’ என்பது போன்ற முத்திரை வசனங்களை இணையத்தளங்களில் வலையேற்றி, சில நிமிடங்களில் அந்த இடத்தையே ரணகளமாக்கிச் செல்பவர்களும் உண்டு. உள்நுழைந்த சுவடே தெரியாமல் அப்படியே அமைதியாக மாதக்கணக்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி ஆணிவேர் வரை ஒட்டு மொத்தத் தகவல்களையும் மொத்தமாக, நிதானமாக உருவும் வித்தைக்காரக்ளும் உண்டு.


மேற்சொன்ன அத்தனை சூழ்நிலைகளையும் ஒரு தேர்ந்த வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர் SIEM தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துத் தடுக்க முடியும். SIEM தொழில்நுட்பத்தினை ஒரு வலையமைப்பில் நிறுவி, நிர்வகிப்பதும், ஷங்கர் படத்தைத் தயாரிப்பதும் ஒன்று, எவ்வளவு பணம் போட்டாலும் முழுங்கும் வல்லமை வாய்ந்தது.HP, IBM, McAfee, RSA போன்ற நிறுவனங்களின் SIEM தயாரிப்புகளே இன்றைய தேதிக்கு முண்ணனியில் இருப்பவை. இவற்றை வாங்கி நிறுவவதற்கும், அதனைத் திறம்பட நிர்வகித்து அவற்றின் முழுத்திறனையும், பயனையும் பெற்றிடத் திறமையுள்ள பாதுகாப்பு வல்லுநர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதற்கும் நல்ல கனமான பணப்பை முக்கியம். இப்படி விதவிதமான தொழில்நுட்பங்கள் மூலம் தங்கள் வலையமைப்பிற்கு அரண் அமைக்கும் அளவிற்கு இவர்களை மிரட்டும் ஹேக்கர்களின் பிரபலமான தாக்குதல் வகைகள் என்ன, அவற்றை எதிர்கொள்ளும் உத்திகள் என்ன?...

தொடர்வோம்..

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...

Wednesday, March 20, 2013

இணையம் வெல்வோம் - 5


வலையமைப்புப் பாதுகாப்பின் அச்சாணியாக விளங்குவது செயற்பதிவு (event log) என்னும் சமாச்சாரம் தான். அதில் அப்படி என்ன விசேஷம் என்றால், எந்த ஒரு கணிணி, வலையமைப்பு உபகரணங்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் இவையனைத்தும் வெளிப்பார்வைக்கு நாம் சொல்வதெல்லாம் செய்யும் விளையாட்டுப் பொருளாகத் தெரிந்தாலும், பயனாளராகிய நாம் என்னெவெல்லாம் செய்யச் சொல்கிறோம், அதனைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கணிணி, கோப்புகள் மற்றும் உங்கள் வலையமைப்பில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் செயற்பதிவுகள் மூலம் சேமிக்கப்படுகின்றன.

‘இன்னைக்கி எங்க வீட்ல தோசை சுட்டோம்’ என்று சொன்னால் கூட, எங்கள் ஆட்சிக்காலத்தில் தான் அதற்கு மாவாட்டிக் கொடுத்தோம் என்று பெருமை பாராட்டும் சட்டமன்றத்தில் எப்படி நம் அரசியல்வியாதிகள் தங்கள் திருவாய் மலர்ந்தருளும் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றதோ கிட்டத்தட்ட அதைப்போலவே உங்கள் மென்பொருள், வலையமைப்புப் போக்குவரத்து அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒரு கோப்பினில் சேமித்து வைக்கப்படும். ஒரு வித்தியாசம், செயற்பதிவுகளில் இருந்து எதையும் சபைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதைப்போல அழித்து விட முடியாது. உடனே செயற்பதிவுகள் எப்படி இருக்கும் என்று பார்த்து விடத் ‘துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்’ என்று திமிறும் அன்பர்கள் உங்கள் கணிணி Windows இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்தால் Control Panel -> Event Viewer சென்று சுற்றிவரவும்.

கேட்பதற்கு எளிமையாக இருக்கும் இந்த செயற்பதிவுகள் தரும் தகவல்களின் ஆழம் மிகமிக அதிகம். செயற்பதிவுகள் மூலம் உங்கள் கணிணியோ அல்லது வலையமைப்பு உபகரணமோ எத்தனை மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது, நிறுத்தப்படுகிறது என்பது முதல், யாரெல்லாம் உள்நுழைகிறார்கள், அவர்கள் என்னென்ன மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், எந்தெந்த கோப்புகளை பயன்படுத்துகிறார்கள், எவற்றைப் படிக்கிறார்கள், எவற்றில் மாற்றம் செய்கிறார்கள், கணிணியின் வெப்பமதிகமாகி காய்ச்சலடிக்கிறதா, செயலி (processor) அதிக வேலைப்பளுவால் மூச்சுத்திணறுகிறதா, உபகரணத்தினுள் வெப்பத்தினை வெளியேற்ற வைத்திருக்கும் காற்றாடி சுற்றுகிறதா என்பது வரை அனைத்தும் வருடம், மாதம், தேதி, மணி, நிமிடம், நொடி என்று அத்தனை விவரங்களையும் ஒரு கணிணியிலோ/வலையமைப்பு உபகரணத்திலேயோ கண்டுபிடிக்க முடியும்.

இந்த செயற்பதிவுகள் தான் இணையக் குற்றங்களுக்கு சட்டரீதியான ஆதாரம். எந்த ஒரு முறையான வலையமைப்பிலும் செயற்பதிவுகளை மாற்றம் செய்வதோ, பார்வையிடுவதோ பொதுப்பயனாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும். அதை மீறி ஏதாவது குறுக்கு வழியில் அதனை அழிப்பதோ, மாற்றம் செய்வதோ கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இவை சட்டரீதியான விசாரணைகளுக்கு முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றங்களால் எடுத்துக் கொள்ளப்படுமென்பதை அவ்வளவு எளிதாகப் படித்து விட்டுக் கடந்து சென்றுவிட முடியாது. செயற்பதிவுகளுக்கு உண்மையிலேயே அது பதிவு செய்யும் செயல்களுக்கான ஆணைகளைத் தரும் மனிதர் யார் என்பது தெரியாது, அதனைப் பொருத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பயனாளர் பெயர் தான் காரணம். குறிப்பிட்ட ஒரு செயல்பாடு நடக்கும் பொழுது அந்தக் கணிணியிலொ அல்லது வலையமைப்பு உபகரணத்திலோ எந்த பயனாளர் உள்நுழைந்திருக்கிறாரோ அவர் பெயர் தான் பதிவு செய்யப்படும்.

அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது பட்சி கூப்பிடுகிறதென்று சலனப்பட்டு உங்கள் கணிணியினை பூட்டாமல் காபி குடிக்கப் போனாலோ அல்லது உங்கள் கடவுச்சொல் அடிக்கடி மறந்துபோய் இம்சிக்கிறதென்று கணிணித்திரையின் மேலேயே ஒரு காகிதத்தில் கோவில் மின்விளக்கிற்கு உபயம் எழுதும் அளவுக்கு பெரிதாக அதனை எழுதி வைத்தாலோ உங்களை நிமிடத்தில், மறுநாள் காலை அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் ‘இவர் இப்பத்தான் இப்படியா இல்ல சின்ன வயசிலேர்ந்தே ஒரு மாதிரி தானா?’ என்று உங்கள் வீட்டுத் தெருவில் விசாரிக்கும் அளவுக்கு பிரபலமான குற்றவாளியாக்க முடியும். ஏனெனில் உங்கள் கணிணியின் மூலமாகவோ அல்லது உங்களின் வடமில்லா வலையமைப்பு மூலமாகவோ உள்நுழைந்து இணைய இணைப்பினைப் பயன்படுத்தி யாராவது வழக்குப் போடும் அளவிற்கு மானமிருக்கும் பிரபலங்களை மானக்கேடாகத் திட்டி மின்னஞ்சலாம், டிவிட்டலாம், உங்கள் உலாவியில் பயன்படுத்தும் மின்னஞ்சல், முகப்புத்தகம் ஆகியவற்றின் கடவுச்சொற்களை உங்கள் வசதிக்காக உலாவியிலேயே (remember password feature) சேமித்து வைக்கும் ஆசாமியாக நீங்கள் இருந்து விட்டால் மிகச் சிறப்பு, இப்படி செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தும் போது, முக்கிய ஆட்டக்காரராக ஆடப்போவது செயற்பதிவுகள் மட்டுமே. செயற்பதிவுகள் பயனாளர் பெயரை மட்டுமே சொல்லும், அதனைப் பயன்படுத்திய மனிதர் யாரென்பது குறித்து சட்டமும், செயற்பதிவும் கொஞ்சம்  கூட அலட்டிக் கொள்ளப்போவதில்லை.


பிறகு இது குறித்து யார் தான் கவலைப்படுவது?. நாம் தான். இதனை மனதில் வைத்துத்தான் ஒவ்வொரு பயனாளரும் தங்கள் கடவுச்சொற்களை இறுக்கி முடிந்து வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் வடமில்லா வலையமைப்பு இருந்தால் அதனைக் கடுமையானக் கடவுச்சொல் மூலம் பூட்டி வையுங்கள் என்று வன்மையாக வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். ‘நாங்களும் காசு கொடுத்து வாங்கிட்டோம்ல’ என்று வடமில்லா வலையமைப்பு உபகரணங்களை வாங்கி வைத்து விட்டு மார்தட்டும் மைனர் குஞ்சுகள் தயவு செய்து அது எந்த அளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதனை, அதனை நிறுவ வரும் வல்லுநரிடம் நறுக்கென்று கேட்டு, அதனை செயல்படுத்தவும் சொல்லவும். இதனை இங்கு அழுத்திச் சொல்லக் காரணம் எந்தப் பொருள் வாங்கினாலும், எப்பொழுதும் நாம் படிக்காமலேயேக் கையெழுத்திடும் காகிதங்களின் நிபந்தனைகள் பட்டியலில் பாதுகாப்புப் பாலெல்லாம் அழும் குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்கவும் என்று தான் இருக்கும். எனவே மறக்காமல் அழுது வைக்கவும். இப்படி நிபந்தனை விதிப்பது, வாரத்திற்கு இருமுறை ‘அக்கா… மறந்து போச்சு.. கொஞ்சம் மாத்திக் கொடுங்களேன்’ என்று வாடிக்கையாளர்கள் சேவைக்கு வரும் கடவுச்சொல் மறந்து போனவர்களின் அன்புத்தொல்லைகளைத் தவிர்க்கவும், அதற்குத் தேவைப்படும் தொழில்நுட்ப வல்லுநரின் கூடுதல் மணித்துளிகளுக்கான ஊதியமும் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படி நம் கணிணிகளிலும், சாதாரண வலையமைப்பு உபகரணங்களிலுமே இவ்வளவு தகவல்கள் கிடைத்தால், வலையமைப்பின் பாதுகாப்புக்கென பயன்படுத்தப்படும் சிறப்பு உபகரணங்கள் சொல்லும் கதைகள் இன்னும் சுவாரசியம். காலை அலுவலகத்திற்குச் சென்றதும் சூடான காபி சுவைத்துக் கொண்டே நாளெடுகளின் செய்திகளை நிதானமாக வலைமேய்ந்த பின் வேலை பார்க்க ஆரம்பிக்கும் பழக்கமுள்ள தனிநபர் அந்த நேரத்தில் மட்டுமே சில நூறு செயற்பதிவுகளை உருவாக்க முடியும் என்றால், நூற்றுக்கணக்கான பயனாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் வலையமைப்பின் வேலைநேரத்தில் உண்டாகும் வலையமைப்புக் போக்குவரத்துகள், கணிணி, இணையம்/மின்னஞ்சல் தொடர்பான செயல்பாடுகள் மொத்தமாக உருவாக்கும் செயல்பதிவுகள் மில்லியன்/பில்லியன் எண்ணிக்கையில் இருக்கும்.

ஒரு வலையமைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை செயற்பதிவுகள் மூலமே பாதுகாப்பு வல்லுநர்கள் கண்காணிக்கிறார்கள். அதிலும் வெளிவலைப்போக்குவரத்து உள்நுழையும் இடத்திலும், உள்வலைப்போக்குவரத்து வெளியேறிச் செல்லும் இடத்திலும் உள்ள வலையமைப்பு உபகரணங்களின் செயற்பதிவுகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு வலைத்தடுப்பு உபகரணத்தின் (firewall) செயற்பதிவுகளை நேரடியாக பார்வையிட்டால் கணிணித் திரையில் செயற்பதிவுகள் மும்மாரி பொழியும், நயாகரா நீர்வீழ்ச்சிக்கடியில் குடை பிடித்து நுழைந்த அனுபவம் கிடைக்கும். இவற்றை ஒவ்வொரு பக்கமாக எச்சில் தொட்டுப் புரட்டிப் படித்து முடிப்பதற்குள் அடித் தொண்டை வரண்டு, கண்கள் இருட்டி, மயக்கமே வந்து விடும், நடைமுறைக்கும் ஒத்துவராது. ஒவ்வொரு செயற்பதிவினையும் நூறு அல்லது ஆயிரக்கணக்கான கணிணிகள், வலையமைப்பு உபகரணங்கள், பயனாளர்கள் உள்ள ஒரு வலையமைப்பில் சோதித்துப் பார்ப்பதென்பது ‘தமிழகத்தில் தடையில்லா மின்சாரம்’ என்பதை விடவும் கடினம், நிச்சயம் சாத்தியமில்லை.

ஒரு வலையமைப்பில் வெளியிலிருந்தோ அல்லது உள்ளிருந்தோ நடத்தப்படும் வலைத்தாக்குதல்களை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விருது வாங்குவதில் வல்லவர்களான பாதுகாப்பு வல்லுநர்கள், மலைக்கும் அளவு எண்ணிக்கையில் இருக்கும் செயற்பதிவுகளை எப்படி கட்டி மேய்க்கிறார்கள்?, எத்தகையத் தாக்குதல்களை ஹேக்கர்களிடமிருந்து இவர்கள் எதிர்கொள்கிறார்கள், எல்லோராலும் ஹேக்கிங் செய்ய முடியுமா?, இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் ஏன் ஹேக்கர்களின் தாக்குதலை எல்லா நேரங்களிலும் தடுக்க முடிவதில்லை?....

தொடர்வோம்..

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...

Wednesday, March 13, 2013

இணையம் வெல்வோம் - 4


வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இரு பெரும் பொறுப்புகள் உண்டு. ஒன்று தாங்கள் கண்காணிக்கும் வலையமைப்பினை எந்தவித தாக்குதலுக்கும் பலியாகாமல் வருமுன் காப்பது,அது முடியாதபட்சத்தில் அதனைக் கண்டுபிடித்து சீராக்குவது. படிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், மிகவும் சிரமமான, தகவல் தொழில்நுட்ப வேலைகளில் முதலிடம் இதற்குத் தான். தாங்கள் பாதுகாக்க வேண்டிய வலையமைப்பின் கட்டமைப்பு, பயன்பாட்டுக்கு உள்ள பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், அணுதினமும் மாறிவரும் பாதுகாப்புச் சூழலை கிரகித்து வருதல், தங்கள் வலையமைப்பின் பயன்பாடு குறித்தான தகவல்களை விரல் நுனியில் வைத்திருத்தல், நடு ராத்திரி தூக்கத்தில் எழுப்பினாலும் முனகல் சத்தம் கூட போடாமல் வேலை பார்க்கத் தயாரயிருத்தல் ஆகியவை இவர்களின் அத்தியாவசியமான அம்சங்கள். இவர்களுக்குள்ளும் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் சிறப்பு வல்லுநர்கள், கணினித் தடயவியல் நிபுணர்கள், வலைக் கட்டமைப்புக் ஆலோசகர்கள் என பலவகைக் குழுக்கள் உண்டு. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில பணி நேரத்தில் வேலை பார்க்காமல் அளவு கடந்து வலை மேய்பவர்கள், சக ஊழியர்களிடம் சாட்டில் வரம்பு மீறி சதா ஜொள்ளித் திரிபவர்கள், போட்டியாளர்களிடமோ அல்லது எதிரிகளிடமோ முக்கிய, ரகசியத் தகவல்களை வலை மூலம் கருணா வேலை செய்பவர்கள் என்று கணிணித் திரைக்குப்பின் முகம் மறைந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் சகலரையும் கையும், கணிணியுமாகப் பிடித்து பீதியூட்டுவது இவர்களின் அன்றாட பணிகளில் சாதாரணம். இதன் பின்விளைவுகளாக குற்றம் செய்பவரின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மிகக்கடுமையாக இருக்கும். சிறை, வேலை இழப்பு, விவாகரத்து, சமயங்களில் தற்கொலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், பொதுவாக இது போன்ற பின் விளைவுகள் குறித்து பாதுகாப்பு வல்லுநர்களுக்கு எதுவும் தெரியாதவாறு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும். அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலும், குற்றவுணர்ச்சியும் அடுத்த முறை ஒரு வலைக்குற்றத்தினைப் பற்றி விசாரணை செய்யும் பொழுது பாதிக்க வாய்ப்பிருப்பதே காரணம்.
எல்லோரையும் போல சாதரணமாக நேர்முகத்தேர்வு, குற்றவியல் பின்னணி குறித்தான விசாரணை போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து பணியில் சேரும் சாதா வல்லுநர்களும் உண்டு, ஜீன்ஸ்-டீஷர்ட் அணிந்து வரவேற்பறையில் இருக்கும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவிழ்த்து வலையமைப்பினை ஹேக் செய்து தங்களின் சகல திறமைகளையும் நிரூபித்து அசத்தலாக நுழையும் சூப்பர் வல்லுநர்களும் உண்டு, இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்யும் முதல் வேலை வலையமைப்பின் கட்டமைப்பினை அலசித் துவைத்துக் காயப்போடுவது தான். காரணம் ‘ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழைய முடியும்’ என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே நம்மூர் வக்கீல்கள் கற்பழிப்பு வழக்குகளுக்கென சிறப்பாகக் கண்டுபிடித்த அதே தத்துவம் தான்.
வலையமைப்பு என்பது உங்கள் வீட்டைப் போன்றது. எந்தெந்த இடத்தில் ஜன்னல், நிலைக்கதவு, வாசல் வைக்க வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறதோ அதே போன்று வலையமைப்பிலும் இருக்கிறது. வீட்டுக்கு வெளியில் இருந்து உள்ளே நுழைய ஏதுவாயிருக்கும் முன்வாசல், பின் வாசல், ஜன்னல் கதவுகளை எப்படி சிறப்புக் கவனத்துடன் கனத்த இரும்புக் கம்பிகளைக் கொண்டும், பெரிய அளவு பூட்டுக்களையும் போட்டு அலங்கரித்து அழகு பார்க்கிறோமோ அதைப் போலவே வலையமைப்பினிலும் வடிவமைப்பிற்கான சாஸ்திர, சம்பிரதாயங்கள் உண்டு. ஒவ்வொரு வலையமப்பிலும் இரண்டு புள்ளிகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. ஒன்று உள் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்துக்குச் செல்லும் வழி (Egress Point) மற்றது இணையத்தில் இருந்து வரும் வலைப்போக்குவரத்து உங்கள் நிறுவனத்தின் உள்வலையமைப்பிற்குள் நுழையும் வழி (ingress Point). உங்கள் வீட்டில் உங்களுக்கு இணைய வசதியினை தரும் நிறுவனத்தின் வலைத்தொடர்பு சாதனமே உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்லுவதற்குமானத் தொடர்புப் புள்ளியாக விளங்குகிறது என்பதனை நினைவில் கொள்ளவும்.
உதாரணத்திற்கு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு இணையத்தளத்தின் முகவரியினை உங்கள் உலாவியில் உள்ளிடும் பொழுது உங்களின் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்திற்குச் சென்று (egress point) நீங்கள் கேட்கும் தகவல்களை அத்தளத்தின் வழங்கியிடம் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக வழங்கி தரும் தகவல்களை இணையத்திலிருந்து உங்கள் நிறுவனத்தின் வலையமப்பிற்குள் (ingress point) கொண்டு வந்து சேர்க்கும். ஒரு வலையமைப்பின் பாதுகாப்பு அரண் இந்த இரண்டு புள்ளிகளிளும் தான். வலையமைப்பில் இருந்து வெளியே செல்லும் தகவல்கள் அனைத்தும் அனுமத்திக்க பட்ட இடத்திற்கு மட்டும் செல்வதையும், அவை எந்தவித வில்லங்கம் இல்லாத தகவல் பறிமாற்றம் என்பதையும் உறுதி செய்வது பாதுகாப்பு வல்லுநர்களுடைய பணி. சிலநேரம் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்குப்பிள்ளை திடீரென ’30 நாட்களுக்குள் ஹேக்கராவது எப்படி?’ படித்து விட்டு வந்து நிறுவனத்தின் வலையமைப்புக்குள் இருந்து கொண்டு நாசாவின் இணையத்தளத்திற்குள் ராக்கெட் விட்டு உங்களுக்கு காய்ச்சல் வரவைக்க வாய்ப்பிருப்பதால் தாங்கள் நிர்வகிக்கும் வலையமைப்பின் பயனாளர்கள் யார், அவர்கள் வலையமைப்பிற்கு வெளியே இணையத்திற்கு எதற்கெல்லாம் செல்கிறார்கள், எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாதுகாப்பு வல்லுநர்கள் பணிகளில் ஒன்று.
அதே போன்று இணையத்தில் இருந்து உங்கள் உள்வலையமைப்பிற்குள் வரும் தகவல்களான மின்னஞ்சல்கள், பயனாளர்கள் உலாவியின் வழியாகக் கேட்டுப்பெறும் அனைத்து வகையான இணையத்தளங்கள் என அனைத்தையும் கட்டுப்பாடோடும், கண்காணிப்பிலும் வைத்திருப்பது அவசியம். இவையனைத்தையும் கண்காணிப்பதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் அவ்வளவு எளிதல்ல. இவ்வளவுத் தகவல்களும் திரைக்காட்சிகளாகத் துல்லியமாக திரையில் தோன்றப்போவதில்லை, இவையனைத்தும் வலையமைப்பு எண்களாகவும் (IP Address), வலைத்தொடர்பு எண்களாகவுமே காணக்கிடைக்கும் (Port numbers), இப்படி எங்கேங்கே காணினும் எண்களாக காட்சி தரும் தகவல்களை எப்படி இனங்கண்டு கொள்வது?. வலையமைப்பினில் உள்ள ஒவ்வொரு உபகரணத்திற்கும், உங்கள் கணிணி உட்பட உள்ள முகவரி மற்றும் அடையாளம் தான் வலையமைப்பு எண். உங்கள் வலைதொடர்பின் முறையினைப் பொறுத்து (protocol)) பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண் மாறுபடும். உலாவியில் நாம் பொதுவாக பயன்படுத்தும் இணையத்தள மேய்தலுக்கு (http) 80, கோப்புகள் பகிரப் பயன்படுத்தபடும் FTPக்கு (File Transfer Protocol) 21, பாதுகாப்பான இணையத்தளத் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் குறீயீட்டு முறைப்படுத்தப்பட்ட வலைப்போக்குவரத்துக்கு 443 இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இது போல நாம் கணிணியில் செயல்படுத்தும் ஓவ்வொரு நிரலுக்கும் அல்லது மென்பொருளுக்கு என்று தனிக்குணங்களில் அவைப் பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண்களும் உண்டு.
இப்படி, வலையமைப்பினுள் இருக்கும் ஒவ்வொரு சாதனத்தின் வலையமைப்பு எண்களையும் அவர் பயன்படுத்தும் அனைத்து வகையான வலைத்தொடர்பு எண்களையும் பார்த்துப் பார்த்துக் கண்கள் சிவந்த பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இவையனைத்தும் தலைகீழ் மனப்பாடம். இவர்களின் விவாதங்களின் போது மென்பொருட்களின் பெயர்களைத் தனியே உச்சரிப்பது அரிது அப்படியே உச்சரித்தாலும் கூடவே வலைத்தொடர்பு எண்களைக் குறிப்பிட மறக்க மாட்டார்கள். அத்தனைத் தகவல்களையும் அறிந்து வைத்திருந்தாலும் 24 மணி நேரமும் வலையமைப்பின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகக் கடினம். பாதுகாப்பு வல்லுநர்களின் வேலையை எளிதாக்க மின்னஞ்சல் (Email Security gateway), இணையதளப் பயனளார்களின் போக்குவரத்து (Web Gateway/URL Filtering), இணையத் தள வழங்கிகளுக்கு (Web Application Firewall), பொதுவான வலைப்போக்குவரத்து (Network Security – IPS/IDS), தகவல் இழப்பினைத் தடுத்தல் (Data Loss Prevention) என பலவிதமான தொழில்நுட்பங்கள் உண்டு.
இப்படி ஆயிரம் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அசகாய சூரர்களான பாதுகாப்பு வல்லுநர்கள் இருந்தாலும், இணைய உலகின் வலைப்பாதுகாப்புக்கான அச்சாணியாக விளங்கும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. அது இன்றி வலையுலகில் அணுவும் அசைவதில்லை. ஒரு வலையமைப்பினை கட்டுடைத்து உள்நுழைவதை விடவும் இதனை அழித்தலோ அல்லது மாற்றியமைத்தலோ மிகப்பெரியக் குற்றமாகக் கருதப்படும். அது என்ன?
தொடரும்…

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...

Wednesday, March 6, 2013

இணையம் வெல்வோம் -3


திடீரென்று உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி காவல்துறையின் சீருடையில் ஒருவர் அதிகாரத் தோரணையில் விசாரித்தால் அனேகம் பேர் நிச்சயம் அந்த நபர் தங்கபதக்கம் சிவாஜியோ அல்லது வால்டர் வெற்றிவேல் சத்யராஜாகவோ தான் இருக்க வேண்டும் என்று நம்பி,கடகடவென நேற்று வைத்த மீன் குழம்பு முதல் இன்று காலை பல் விளக்கியது வரை விவரித்து புல்லரிக்க வைத்து விட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கினால் முதலில் சீருடையில் இருப்பவர் உண்மையிலேயே காவல்துறையைச் சேர்ந்தவர் தானா என்று அடையாளப் படுத்திக் கொள்வேன் என்று கூறும் அன்பர்கள் தங்கள் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டு தொடரவும். கிட்டத்தட்ட அப்படியொரு சூழ்நிலையினை மின்னஞ்சல் மூலம் உருவாக்கி உங்களை உணர்ச்சி வசப்பட வைத்து பலியாடாக்குவது தான் Spear Phishing Attack.
ஒரு நல்ல திடம், மணம், சுவை நிறைந்த Spear Phishing தாக்குதலைச் சமைக்கத் தேவையான பொருட்களில் முதன்மையானது தரமான பலியாடு மற்றும் அதன் மின்னஞ்சல் முகவரி,  பலியாட்டின் நம்பிக்கைக்குரிய ஒருவரின் அல்லது எதைச் சொன்னாலும் உடனே செய்ய வைக்கக் கூடிய பணியிடத்தின் உயரதிகாரியின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் ஆகும். இவற்றுடன், தாக்குதலுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட virus, malware, spyware போன்ற ஆயுதங்களுடன் களமிறங்குதல் சிறப்பு. இவையெல்லாம் நம் தெரு முக்கில் உள்ள மளிகைக் கடையில் கிடைத்து விடாது எனபதை நினைவில் கொள்ளவும். முதலில் virus, spyware and malware ஆக செயல்படப்போகும் நிரல்களை எழுதும் திறன் வேண்டும். அந்த நிரல்கள் கணிணி மற்றும் வலையமைப்புப் பாதுகாப்புக்கான மென்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தால் பலியாட்டின் கணிணியிலிருந்தும் அதன் வலையமைப்பில் இருந்து உங்களின் நிரல் உங்களிடம் தொடர்பு கொள்ள ஏதுவாக ஒன்றோ அல்லது உங்களது தாக்குதலின் நீள, அகலத்திற்கேற்ப பல வழங்கிகளோ இணையத்தின் இணைப்பிலிருக்க வேண்டும்.
 

பொதுவாக Spear Phishing Attack என்பது பெரும் நிறுவனங்களின் வலையமைப்பிற்குள் நுழைவதற்கும் அவர்களின் தகவல்களைத் திருடுவதற்குமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்சொன்ன அனைத்தும் தயாரான பின், யாரைத் தாக்கப் போகிறோம் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களின் தாக்குதலை ABC என்ற நிறுவனத்தின் மீது செயல்படுத்த வேண்டுமென்றால் முதலில் அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பெயர்கள் அவர்கள் பணிபுரியும் துறை, மேலதிகாரிகள், முதலாளிகள் போன்ற தகவல்களனைத்தையும் சேகரிக்க வேண்டும். இவையெல்லாம் கிடைத்ததும், பூப்போட்டுப் பார்த்து எளிதாக ஏமாற்றப்படுவதற்கு ஏற்றவகையில் அமைந்திருக்கும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். தகவல் தொழில்நுட்பத்துறை சாராதவராகவும், தமிழ்ப் பெயராகவும் கிடைத்தால் சிறப்போ சிறப்பு.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் துறை மேலாளரின் பெயரிலோ அல்லது உயரதிகாரியின் பெயரிலோ ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதில் நயமாக பேசி, அவரின் கணிணியில் உங்கள் நிரலை விதைக்க வேண்டியது உங்களின் சாமர்த்தியம். ‘இத்துடன் இணைத்திருக்கும் கோப்பினைப் பிழைதிருத்தி அனுப்பவும்’ என்று சொல்லலாம், அல்லது ‘சென்ற வாரவிடுமுறையில் குடும்பத்துடன் கச்சத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம்.. புகைப்படங்களைப் பார்க்க இங்கு செல்லவும்’ என்று சொல்லி இணையத்திற்கு வரவைத்தும் உங்கள் நிரலை நிறுவலாம். எப்படி மற்றொருவரின் மின்னஞ்சல் முகவரியின் பெயரில் நாம் மின்னஞ்சல் அனுப்ப முடியும் என்று  மண்டைக்குள் விளக்கெரியும் நண்பர்கள் கூகுளாடவும், அதிக நேரமிருப்பவர்கள் இணைய நிரல்கள் எழுதக் கற்றுக் கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தாக்குதலில் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல்களின் முகவரிகள் மிகச்சரியாக இருக்கும் காரணத்தால் உணர்ச்சிவசப்பட்டு பல பேர் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் நடைபெறும் சிறு தவறு மூலம் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அல்லது உங்கள் கணிணி இருக்கும் வலையமைப்பின் சகல சங்கதிகளையும் எங்கோ ஒருக்கும் கட்டுப்பாட்டு வழங்கியிடம் அனுப்பிக் கொண்டிருப்பீர்கள்,


மெதுவாக பரவும் விஷம் போல உங்கள் கணிணியிலிருந்து கிடைக்கும் மேலதிகத் தகவல்கள் மூலம் கிட்டத்தட்ட வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பலியாடாக மாற்றி, ஒரு நாள் நிறுவனத்தின் மொத்த மானமும் ஊடகங்களிலும், இணையத்திலும் மணக்க மணக்க பிரியாணியாகப் படைக்கப்படும். இது போன்ற தாக்குதலுக்குப் பலியாவது பெரும்பாலும் அரசாங்கத் துறைகள், இராணுவம், விண்வெளி மற்றும் அணு ஆய்வு மையங்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக வலையமைப்பின் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள். பொதுமக்களுக்குத் தெரிந்தே விடக்கூடாத உண்மைகள் சந்தி சிர்ப்பதும், அதனால் ஏற்படும் அரசியல் சதிராட்டங்களும் தான் அரசாங்கம் இத்தகையத் தாக்குதல் மூலம் சந்திக்கும் பாதிப்புகள். மற்ற தனியார் நிறுவனங்கள் இதன் மூலம் பெருத்த பொருள் நஷ்டம் அடைந்து ஊமைக்காயத்துடன் அவையடக்கத்துடன் சங்கடப்பட்டு கூனிக் குறுகும் நிலைக்கு ஆளாவார்கள்.
இராணுத்தளவாடங்களைத் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான லக் ஹீட் மார்ட்டின் மற்றும் வலையமைப்புப் பாதுகாப்பற்கானத் தொழிநுட்பத்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான RSA போன்ற முதலைகள் இத்தாக்குதலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கு பூஜ்ஜியங்கள் மிகமிக அதிகம். மிகவும் ரகசியத் தகவல்களை கையாளும் நிறுவனங்கள் இது போன்று ஒருவர் செய்யும் சிறு தவறினால் தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை இழந்து விடுவதும், RSA போன்ற ஊரில் உள்ள மற்றவர்களின் வலையமைப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றவர்களால் கேலியும், கிண்டலும் செய்யப்படும் நிலைக்கு ஆளாவதுமே இது போன்ற தாக்குதல்களைக் கண்டு அனைவரும் அஞ்சுவதற்குக் காரணம்.

இதுவரை நாம் கனவிலும் நினைத்திராத எத்தனையோ தொழிநுட்பங்கள் வலையமைப்பின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் உலகம் இருக்கும் வரை சவாலாக இருக்கப் போவது மனித தவறுகள் மட்டுமே. ஹேக்கர்கள் தங்கள் திறமையை விட அதிகம் நம்புவதும் இவற்றைத்தான். யாராவது தொலைபேசியில் ‘ஐயாம் மேஜர் சுந்தர்ராஜன் ஸ்பீக்கீங், நான் தான் மேஜர் சுந்தர்ராஜன் பேசுறேன்’ என்று சொன்னால் உடனே நம்பி தங்களின் கடவுச்சொல் முதல் வீட்டு நிலைக்கதவில் சாவி ஒளித்து வைத்திருக்கும் இடம் வரை பதார்த்தமாக பகிர்ந்து கொள்ளும் அன்பர்கள் இருக்கும் வரை இது போன்ற தாக்குதல்கள் வெள்ளை மாளிகை முதல் நேமத்தான்பட்டி வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
இதற்குத் தீர்வே இல்லையா?. இருக்கிறது. மின்னஞ்சலில் வெறும் தகவல்களை மட்டுமே பரிமாறும், கோப்புகளையோ அல்லது இணையச்சுட்டிகளையோ அனுமதிக்காத நிறுவனங்களும் அமைப்புகளும் உண்டு. குறிப்பிட்டக் கால இடைவெளியில் அனைத்து பணியாள்ர்களையும் அழைத்து வலையமைப்பின் பாதுகாப்புக் குறித்துக் காதைத் திருகி  வகுப்பெடுத்து, விழிப்பாக இருந்து கொள்ள அறிவுரைகள் வழங்கி செம்மைப்படுத்தும் நிறுவனங்களும் உண்டு. இது போன்று இணையத்தின் மூலம் தொடுக்கப்படும் தாக்குதல்கள் வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பது அதனை நடத்தும் ஹேக்கர்களுத்தானேத் தெரியும். ஒரு வேளை வெற்றியடைந்து விட்டால், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் எப்படி, எப்பொழுது அதனைக் கண்டுபிடிப்பார்கள்?.


இங்கு தான் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் உலா வரும் வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. பொதுவாக சிறுநகரங்களிலும், குக்கிராமங்களிலும் ஊருக்குள் புதிதாக ஒரு காகம் வந்தால் கூட சரியாகக் கண்டுபிடித்து, பயணம் தொடங்கிய இடம், செல்லும் இடம், பார்க்கப் போகும் நபர், அவருக்கு எந்த வகையில் சொந்தம் என்று சகலத்தையும் அலசிய பின் அனுப்பி வைக்கும் ஜெய்சங்கர்கள் ஊருக்கு வெளியே சுமைதாங்கிக் கல்லின் மேலோ அல்லது பாலத்திலோ இருந்து கொண்டு எப்படி ஊருக்குள் வருவோர், போவோரை அளவெடுப்பார்களோ கிட்டத்தட்ட அதே வேலையினை உங்கள் கண்ணி வலையமைப்பில் பார்ப்பவர்கள் தான் இவர்கள். இவர்களின் உலகம் முற்றும் மாறுபட்டது, இவர்கள் பார்வைபடும் இடமெல்லாம் வலையமைப்பு எண்களும்(IP Address) மற்றும் வலைத்தொடர்பு எண்களுமே (port) நிறைந்திருக்கும். ஆயிரக்கணக்காண நபர்கள் பணியாற்றும் இடமாக இருந்தாலும் இத்துறையில் இரண்டு அல்லது மூன்று பேர் தான் இருப்பார்கள். இவர்களால் எப்படி மிகப்பெரிய வலையமைப்பின் பாதுகாப்பினைக் கட்டுப்படுத்த முடிகிறது, எப்படி வலையமைப்பின் தாக்குதல் ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்புக் குறைபாட்டினால் பாதிக்கப்பாட்டாலோ இவர்களின் கண்களுக்கு மட்டும் அது தெரியவருகிறது?.. இவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் என்ன?
தொடர்வோம்..

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...