Wednesday, January 7, 2015

இணையம் வெல்வோம் - 23

முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது பரவலாகியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில ஆலோசனைகள் மட்டுமே.
இணையத்தில் சமையல், கல்(ல)வி, தொழில்நுட்பம், இலக்கியம் எனச் சகலத்தையும் பற்றியும் தெரிந்து கொண்டு இன்புறுவது எவ்வளவு இனிமையோ, அவ்வளவுக்கு அதனை ஒரு ஊடக்கருவியாக மட்டுமே பயன்படுத்துதலின் மூலம் நிஜ வாழ்க்கையில் எந்தவித துன்பங்களும், அசெளகரியங்களும் நேராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை என்ற கருத்துப் பொங்கலே பின்வரும் ஆலோசனைகள்.
 1. அலுவலகம், இல்லம், ஓசிக்கணினி, பக்கத்து வீடு, பேருந்து-ரயில்-விமான நிலையங்கள், இணைய மையங்கள் (netcafe) என்று எங்கு உங்கள் இணையத் தாகத்தினை சாந்தி செய்து கொண்டாலும், முதலில் நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி பாதுகாப்பானதா என்று பரிசோதித்துப் பின் செயலில் இறங்கவும். keyloggers, spyware போன்ற அன்பர்கள் உங்களுக்காகக் காத்திருக்கலாம், கவனம். மடிக்கணினி வைத்துக் கொண்டு பொது இடங்களில் இணையத்தைப் பாவிப்பவர்கள் முதுக்குப் பின் யாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ளா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் :D. பெரும்பாலும் பொது இடங்களில் மிக அவசிய, அவசரத் தேவையன்றி, இணையத்தைத் தவிர்ப்பது சிறப்பு. அவ்வாறு தவிர்க்கவியலாத சூழ்நிலையில், உங்கள் வீட்டுக்குச் சென்றடைந்ததும், பயன்படுத்திய கடவுச்சொற்களை மாற்றுவது நன்று.
keyloggers என்பது விசைப்பலகையில் தட்டச்சப்படும் அத்தனையையும் பதிவு செய்யும் அதிஅற்புதப் பயனுக்காகவே படைக்கப் பட்ட ஒரு மென்பொருளென்பதும், spyware உங்கள் இணைய நடவடிக்கைகளை இம்மி பிசகாமல் தங்கள் எசமானர்களுக்கு அனுப்பி வைக்கும் கடமையேக் கண்ணாகக் கொண்ட மென்பொருளென்பதும் உபரித்தகவல்.
2. எந்த இடத்தில் சுட்டிகளைக் கண்டாலும், அடுத்த நொடியே தன்னிலை இழந்து, படக்கென்று க்ளிக்கி விடும் வியாதி இருக்கும் அன்பர்கள், பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டுப் பார்வையிடும் பக்கங்களை எக்காரணம் கொண்டும் வலைப்பக்கங்களிலோ அல்லது மின்னஞ்சல்களிலோ இருக்கும் சுட்டிகள் மூலம் திறக்காமல் இருப்பது பாதுகாப்புக்கு மிக முக்கியம். அப்படி முடியாத அளவுக்கு வியாதி அதிகமாயிருந்தால் கைகளைக் கட்டிக் கொண்டு வலைப்பக்கங்களையோ, மின்னஞ்சல்களைப் படிக்கப் பழகலாம்.
3. டிஜிட்டல் புகைப்படக்கருவிகளும், புகைப்படக்கருவி வசதி கொண்ட செல்பேசிகளும் பெருத்துப் போன இக்காலகட்டத்தில் புகைப்படங்களை கணினியில் சேமிப்பதோ, இணையத்தில் பகிர்வதோ எல்லாருக்குமே மிகமிக எளிதாகிவிட்டது. எளிதாகிவிட்ட ஒரே காரணத்தினால் புகைப்படங்களைக் கண்டமேனிக்குப் பகிர்ந்து கொள்ளும் முன் புகைப்படக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் உளவுத்தகவல்களை நீக்குவது பற்றி அறிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கவும். மிகமிக முக்கியமானத் தவிர்க்க முடியாதத் தேவைகளின்றி உங்கள் முகத்தினையோ அல்லது குடும்பத்தினரின் முகத்தினையோ இணையத்தில் காட்டுவது விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பிருப்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பாக சுதந்திரமாக மாற்றுக் கருத்துக்களைக் குமுறும் பலவகை இசங்களில் ஏதெனும் ஒன்றிற்கான, இணைய உலகின் ஒரே ஒப்பற்றப் பிரதிநிதிகளுக்கு இது மிக முக்கியம், இல்லையேல் சாலையில் தனியாக நடந்து செல்லும் போது உங்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டையை மறக்காமல் சட்டைப்பையில் வைத்துச் செல்லவும்.
4. உங்கள் கணினியை, புகைப்படக் கருவிகளை, கோப்புகளை சேமிக்கும் உபகரணங்களை (pen drives) மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டோ அல்லது பிழைநீக்கும் நபர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டோ கொடுக்க நேர்ந்தால் காஞ்சிபுரம் தேவநாதனையோ அல்லது இணையத்தின் இன்ப ஊற்று சிலம்பரசனையோ ஒருமுறை கண்மூடித் தியானித்துக் கொள்ளவும். அழிக்கப்பட்ட, அழிக்கப்படாத அத்தனைக் கோப்புகளும் சுருட்டப்படும், கவனம். கடந்த காலத்தில் அப்படி பகிரக்கூடாதக் கோப்புகளுடன் உபகரணங்களைப் பகிர்ந்திருந்தால், தினமும் இரவு தூங்கச் செல்லும் முன், சாப்பாட்டுக்குப் பின், ஒரு முறை யூ-டியூப் தளத்தினையோ அல்லது கூகுள் படங்களையோ அலசி, உறுதிபடுத்திக் கொண்டு தூங்கவும்.
5. பிறந்தநாள் தேதி, தாய் தந்தையர் பெயர்கள். சொந்த ஊர், முகவரி போன்ற தகவல்கள் ஒவ்வொன்றும் வலைத்தளங்களில் உங்கள் பயனாளர் கணக்கை பாதுகாக்கும் கதவுகளின் சாவிகள். சாவிகள் பத்திரம். பலர் படிக்கும் வண்ணம் பதிவுகளிலோ, வலைத்தளங்களிலோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோ, அல்லது இன்று எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரவேற்கப்படுகின்றன..இன்றே கடைசியென்று பொதுவில் கூவுவதையோ தவிர்ப்பது நல்லது.
 6. வலைப்பதிவுகளில், உங்கள் சொந்த வாழ்க்கையில் நடப்பவைகள் குறித்துப் பகிரும் போது புனைவுகள் சேர்த்துப் பதியுங்கள்.
"பஸ் ஸ்டாண்ட்ல போயி இறங்கினதும், காந்தி நகர் எங்கேருக்குன்னு கேட்டீங்கன்னா, யார் வேணா சொல்வாங்க. நடக்கிற தூரந்தான். காந்தி நகர் மூணாவது தெருவுல ரைட் சைடு நாலாவது வீடு. மஞ்சக்கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும். பெரிய கதவுல ABC ILLAM அப்படின்னு போட்ருக்கும்",
"எங்க வீட்ல எல்லாரும் ஊட்டி போறோம், வந்ததும் போட்டோக்களோட பதிவு போடுறேன். பாவம் எங்க கிழவியத்தான் குளிர் ஒத்துக்காதுன்னு தனியா வீட்டுல விட்டுட்டுப் போறோம்",
"மேலே போட்டோல இருக்குறது தான்எங்க பாப்பா, அவ ரொம்ப சுட்டி, படிப்பில் கெட்டி, abc பள்ளிக்கூடத்தில தான் படிக்கிறா. தனியாவே/ஆட்டோல/பஸ்ல போயிட்டு வந்துருவா. அவங்க க்ளாஸ் டீச்சர் மைதிலி. ரொம்ப நல்லவங்க. அவங்க உதட்டுக்கு மேல மச்சம் சிம்ரன் மாதிரி மச்சம் இருக்கும்"
போன்ற பகிர்வுகள், பகிர்வுகளல்ல, உட்காரும் இடத்தில் நமக்கு நாமே விதைக்கு கண்ணி வெடிகள். உங்களுக்கு விதைத்துக் கொண்டாலும் அடுத்தவர்களுக்கு விதைக்காமல் பார்த்துக் கொள்ளவும் :D. அவசியமென்றால் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாமே தவிர பொதுத்தளங்களில் அல்ல.
7. இணையத்தின் மூலம் அறிமுகமாகும் நண்பர்களிடம் போதிய கால அவகாசமின்றி உடனேயே உங்கள் வீட்டு நாய்க்குட்டி குட்டிப் போட்ட வரைக்கும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உளவியல் ரீதியாக இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும். முக்கியமாக இணைய நண்பர்களை முதல்முறை நேரில் சந்திக்கச் செல்லும் போது கட்டாயம் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை உடன் அழைத்துச் செல்வதும், முடிந்தால் சரக்கடிக்காமல் சந்திப்பை முடித்துத் திரும்புதல் மிகச்சிறப்பு.
 8. அனுதினமும் படைப்புகளைப் படையலாக்கிக் கொண்டிருக்கும் பதிவுலகில், பாராட்டு என்பது எல்லாருக்குமே க்ளென்பெடிச் (18yrs) போன்றது, அதாவது உற்சாகமளிக்கும், பட்டாம்பூச்சி பறக்கும் விஷயம் தான். அதனைப் பின்னூட்டங்கள் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ பெற்றுக் கொள்வது நன்று. வலைப்பதிவராக இருப்பின் உங்கள் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்காமல், வலைப்பதிவுக்கென்று தனியாக ஒரு மின்னஞ்சலைப் பாவித்து வருவது பலவகையிலும் பிரச்சினைகளைத் தவிர்க்கும். அதிகபட்சம் உங்கள் வலைப்பதிவிற்கான மின்னஞ்சலை பொதுவில் பகிர்ந்து கொள்ளுங்கள் (மின்னஞ்சல் சூறையாடப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல). உங்கள் தொலைபேசி/செல்பேசி எண்களைப் வலைப்பக்கத்தில் "வாங்க பேசலாம்" என்று பெரிதாகப் போட்டுவிட்டுப் புன்னகைக்கும் உங்களைப்பார்த்து, அடுத்த வாரமே "எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். நான் ரொம்ப பிசி. முக்கியமான நேரத்தில, பதிவு பத்திப் போன் பண்ணித் தொல்லை பண்றானுங்க, ராஸ்கல்ஸ்" என்று பதிவு போடும்போது படிப்பவர்கள் புன்னகைப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
 இணையம் என்பது தொழில்நுட்பம் நமக்களித்த மூன்றாவது கண், அது ஆனந்தத்தால் பனிக்க வேண்டுமே தவிர வேதனையால் அல்ல என்பதே நோக்கம், மற்றபடி இணையத்தில் எதை எழுதுவது, பகிர்வது என்பது அவரவர் சுதந்திரம். ஒருவேளை சுதந்திரம் சட்டத்தை மீறினாலோ. அல்லது சுதந்திரத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டாலோ சட்டத்தைத் தயங்காமல் அணுகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதையும், எதிர்வரும் காலங்களில் இணையம் குறித்தான உங்கள் பார்வையையும், புரிதலையும் மாற்றியமைப்பதற்கான சிறு விதையாக இத்தொடர் இருந்தால் பெருமகிழ்ச்சியென்பதையும் சொல்லி இத்தொடர் நிறைவடைகிறது.
அறிவால் இணைவோம், இணையம் வெல்வோம்!!!

முற்றும்.

நன்றி:
ஒரு பதினைந்து நிமிட தேநீர் சந்திப்பின் போது பிறந்ததே இத்தொடர் குறித்தான எண்ணம். வெறும் 23 பகுதிகள் தான் என்றாலும் அதனை சவ்விழுப்பாக ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டு முடித்தாலும், எந்த குறையும் சொல்லாமல் இன்முகத்துடன் அனுப்பிய நேரங்களில் எல்லாம் பிரசுரித்த 4தமிழ்மீடியா நிறுவனத்தார்க்கும், மலைநாடன் அவர்களுக்கும் நன்றிகள். அமைதியாக சலனமின்றி சென்று கொண்டிருந்த வாழ்க்கை, இத்தொடர் தொடங்கிய நேரம் முதல் காட்டாற்றில் சிக்கிய படகாக மாறிப்போனது. பணி நிமித்தமான மாற்றங்களும், அழுத்தங்களும், தொடர்ச்சியான வாகன விபத்துகளும், சூழலுமே சரியான நேரத்தில் இத்தொடர் முடிக்க முடியாமல் போனதற்கான காரணம். தொடர்ச்சியாக இத்தொடரைப் படிக்க முடியாமல் அவதிப்பட்ட வாசகர்களுக்கு எனது வருத்தங்கள். இத்தொடரை எழுதிய காலத்தில் தொடர்பு கொண்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் சுடுதண்ணியின்  நன்றிகள்!!!!.

Tuesday, November 18, 2014

இணையம் வெல்வோம் - 22

 
மடை திறந்த வெள்ளம் போல் காலை வணக்கம், இன்றைய ராசிபலன், இன்றைய தத்துவம் என்று வலம்புரி ஜானின் இடத்தினை நிரப்பியபடி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் சமூகவலை இணையத்தளங்கள் ஒவ்வொரு மணித்துளியும் உட்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கையும், உலகம் முழுக்க உள்ள அவற்றின் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம்.
அதுவே கூட்டத்தில் கும்மியடிக்கும் தர்ம அடிப் பாரம்பரியத்தின் வழிவந்த நம் சமூகத்திற்கு மிகப்பெரிய மனதைரியத்தினை இணையத்தில் அளிக்கிறது. அந்த அசட்டு தைரியம் தான் அடிமனதின் இருட்டுப் பக்கங்களை இணையத்தில் வார்த்தைகளாக உலவ விட்டு அழகு பார்க்கிறது.
நேருக்கு நேர் சந்திக்கும் போது கண்களைப் பார்த்து பேசக்கூட பயப்படும் அம்பிகள் கேட்கக்கூசும் வார்த்தைகளை இணையத்தில் அள்ளி வீசி ஆனந்தமடையும் அந்நியன்களாய் மாறிப்போகிறார்கள். இவர்களின் பலமே, இவர்களின் இணைய நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்படுபவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தான். மாலை முரசில் பரிட்சை எண் இல்லையென்று அன்றே தற்கொலை செய்து, மறுநாள் காலை தினசரிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் சம்பவங்கள் நம் சமூகத்திற்கு புதிதில்லை. அச்சு ஊடகக் காலகட்டத்திலிருந்தே, ஊடகத்தில் சொல்லி விட்டால் அதனை மறுபேச்சின்றி உண்மையென்று நம்பும் பழக்கத்தில் ஊறிப்போன நமக்கு, யாரோ முகந்தெரியாதவன் இணையத்தில் உங்களை அயோக்கியன் என்று பதிவு செய்து விட்டால், ‘கம்ப்யூட்டரே சொல்லுதாம்ல, அவன் அப்படி, இப்படின்னு’ என்று கும்மியடிக்க ஒன்று கூடும் ஊரிது.
இப்படிப்பட்ட தேசத்தில், தினசரி வாழ்க்கையில் கவலைப்பட ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் பொழுது, கடல் போன்ற இணையத்தில் எவன் என்னைப் பற்றி என்ன சொன்னால் எனக்கென்ன, போங்கடா போங்க என்று பிளிறும் அன்பர்கள் சற்று தள்ளி நிற்கவும். எதிர்காலத்தில் சர்வமும் இணையமெனும் ஜோதியில் ஐக்கியமாகும் பொழுது, எனது மகனோ, பேரனோ, ஒட்டு மொத்த குடும்பத்தில் வருங்கால சந்ததியினரும் இணையத்தில் என்னைப் பற்றித் தேடும் பொழுது என்னைப் பற்றி அசிங்கமாக யாராவது எழுதிய விஷயங்களைப் படித்துத் தவறாக நினைத்து விடக்கூடாது, வரலாறு மிக முக்கியம் என்று கருதும் புலிகேசிகளுக்கு ஒரு இனிய செய்தி. ஒட்டு மொத்த சமூகவலைதளங்களிலும் உங்களைப் பற்றி யார், யார் என்னென்னெ பொதுவில் பகிர்கிறார்கள் என்பதை நீங்கள் சுடச்சுட கண்காணிக்க முடியும். உங்களின்  பயனாளர் பெயரினை வைத்து கண்காணிப்பது சாத்தியமென்றாலும், பயனாளர் பெயரினைக் குறிப்பிடாது உங்களைப் பற்றி பேசும் பட்சத்தில், நீங்கள் இராமசாமியாகவோ அல்லது குப்புசாமியாகவோ இருந்துவிட்டால் கடினம். அப்படியின்றி உங்கள் இயற்பெயரோ அல்லது பட்டப்பெயரோ தனித்துவமாக புரட்சி இடி, வறட்சி வள்ளல் என்றோ அல்லது ரஷ்ய எலக்கியத்தில் நீங்கள் மூழ்கி முத்தெடுத்த மூத்தவர் என்பதைக் குறிக்கும் விதமாக அயோடக்ஸ்கி அல்லது ராவாவிஸ்கி என்று இருந்தால் மிகச் சிறப்பு.
இதற்கென ஏகப்பட்டச் சிறப்பு மென்பொருட்கள் பரவலாக கிடைக்கின்றன. சரிதா நாயர்களும், ராய் லட்சுமிகளும் இணையத்தில் நம்மை தினமும் ஆக்கிரமித்துக் கொள்வதால் நம் கண்களுக்கு தட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான மென்பொருட்கள் அவற்றின் அடிப்படைக் கண்காணிப்பு வசதிகளை இலவசமாகவே தருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி (உ.தா: HootSuite). சமூகவலைத்தளங்களில் யாராவது ஒரு நபர் ‘தங்கராசு பெண்பித்தன், தங்கராசு பெண்பித்தன்’ என்று தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டேயிருந்தால் குறிப்பிட்ட நாளில் தங்கராசுவைப் பற்றித் தெரிந்து கொள்ள தேடுபொறிகளில் தங்கராசு என்று நீங்கள் தட்டச்சி முடிக்கும் முன்பே தங்கராசு பெண்பித்தன் என்று தேடுபொறிகள் கைகொட்டிச் சிரிக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற மென்பொருட்கள் பெரும்பாலும் மிகப்பெரும் வியாபார நிறுவனங்கள் மற்றும் பணப்பைக் கனமான கணவான்களினாலும், சீமாட்டிகளாலும் பயன்படுத்தப் படுகின்றன.
உதாரணத்திற்கு உலகின் முன்னணி நிறுவனத்தின் பொருளைப் பற்றி நீங்கள் அவதூறாகவோ அல்லது உண்மையானக் குறைபாடுகளைப் பற்றியோ பதிவிட்டுப் பாருங்கள், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு உண்மையெனில் நிவாரணமும், பொய்யெனில் சட்டச்சிக்கல்களையும் தூவி விட்டு மாயமாகிவிடுவார்கள். இது போன்ற நுணுக்கங்கள் அதிகாரமிக்க அரசியல் தலைவர்களுக்கு, அதுவும் கடுமையான இணையச்சட்டங்கள் இருக்கும் நாடுகளில் தெரியவந்து ஒருவேளை கண்காணிக்க ஆரம்பித்தால், தன் வீட்டு கட்டிலுக்கடியில் படுத்துக் கொண்டு “டேய் பிரதமரே வாடா இங்கே” என்று பதிவிட்டு முடிக்கும் முன்பே உங்கள் வீட்டு கதவினை வால்டர் தேவாரம்களும், அலெக்ஸ் பாண்டியன்களும் பலமாகத் தட்டும் சத்தம் உங்கள் காதுகளில் இன்பத்தேனாய் பாயும் சாத்தியங்கள் உண்டு. எனவே அடுத்தவர்களைப் பற்றி இணையத்துல் எழுதும் பொழுது அடக்கி வாசிப்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.
HootSuite போன்ற மென்பொருட்களில் மூலம் நீங்கள் கண்காணிக்க விரும்பும் குறிப்பிட்ட வார்த்தைகளை உள்ளிட்டால் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் பொதுவில் பேசுகிறார்கள் என்று கண்காணிக்க முடியும். உதாரணத்திற்கு இன்று ஒரு திரைப்படம் வெளியாகிறது, அது குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் படத்தின் பெயரை வைத்து பேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ யாரெல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று கண்காணிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தினைப் பற்றித் திரும்பத் திரும்ப இணையத்தில் பதிவிடும் போது அது தேடுபொறிகளில் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும் என்பதனைப் புரிந்து கொள்ளவும். சொற்போர் விவாதங்கள், பட்டி மன்றங்கள் முதல் டீக்கடை அரட்டை, குழாயடிச் சண்டை வரை மிக ஆழமான மரபணுப் படிமங்களைக் கொண்ட தமிழினம், கடைசி வரை சத்தமாக பேசுகிறவரே வெற்றி பெற்றவர் என்னும் சித்தாந்தத்தினை இணையத்திலும் கொண்டாடி கும்மாளமிட்டு கொண்டிருக்கிறது. இணையத்தளங்களில் தகவல் பதிவுகளை விட அவற்றுக்கு வரும் விவாதப் பதிவுகளைப் பார்த்தால் நம் தரம் எளிதில் விளங்கும். இணையத்தில் விவாதிப்பதின் மூலம் உடனடியாக நாத்திகனை ஆத்திகனாகவோ, ஆத்திகனை நாத்திகனாகவோ மாற்றி விடத்துடிக்கும் ஜல்லிக்கட்டுகள் இங்கே ஏராளம். உங்களைப் பற்றி யாரும் அவதூறாகப் பேசினால்,  முடியும் பட்சத்தில் ஒரு முறை மறுப்பு சொல்லிவிட்டுப் புறந்தள்ளுங்கள். தொந்திரவு தொடர்ந்தால் சட்டத்தின் உதவியினை நாடுங்கள். அதை விடுத்து உங்கள் வீரத்தினை இணையத்தில் விவாதக் களமாடுவதில் காண்பிக்க நினைத்து, எதிராளி ஒரு முறை செய்த அவதூறு பதிவினை நீங்களே பலமுறை உங்களையறியாமல் பதிவு செய்யும் தவறினைத் தவிர்ப்பது நன்று.

சல்லிசாக சீனத்தயாரிப்புகளும், இணைய இணைப்பும், இலவச பயனாளர்க் கணக்கும் கிடைக்கிறதென்ற ஒரே காரணத்திற்காக சரியான தொழில்நுட்பப் புரிதலின்று இணைய ஜோதியில் கலக்கத் துடிக்கும் அன்பர்களுக்கும், விளக்கின் வெளிச்சத்தில் மாய்ந்து போகும் விட்டில் பூச்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. உணர்ச்சிவயப்பட்ட தமிழ்ச்சமூகம் பேஸ்புக் அல்லது டிவிட்டர் பதிவுகளுக்காக அடிதடி, கத்திக்குத்து என்று களமிறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதைத் தவிர்க்க ஒரே வழி, இணையம் குறித்தான சரியானப் புரிதலை சாமனியருக்கும் உருவாக்குவது தான். எந்தவொரு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் போதும் சமூகம் இது போன்ற சிக்கல்களை சந்திதிருந்த்தாலும், இணையம் அனைத்து மக்களுக்கும் பரவலாகும் வேகத்தினைக் கணக்கில் கொள்ளும் போது மிக முக்கியத்துவம் பெறுகிறது.

நாங்கள் விக்கிலீக்ஸ் ஜூலியன்,  ஸ்நோடன், பர்னபி, ஆரொன் ஸ்வார்ட்ஸ் போன்று இணையத்தில் மூலம் சமூக மாற்றங்கள் வேண்டி பயணிக்கப் போவதில்லை, ஒரு சாதாரண சக மனிதனாக இணையத்தினை இனிய அனுபவமாக, அடிப்படைத் தொழில்நுட்பப் புரிதலோடு பிரச்சினைகளின்றி கடந்து சென்றால் போதும், அதற்கென்ன வழிமுறைகள் ஆலோசனைகள்?.

தொடர்வோம்……

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, November 10, 2014

இணையம் வெல்வோம் - 21

மாற்று ஊடகத்திற்கு என்றுமே மக்கள் ஆதரவளிக்கவும், போற்றவும் தயங்கியதேயில்லை. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்துத் தரிசாகிக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகம் சன் டிவியின் தமிழ் மாலைக்கும், அவர்களின் செய்திகள் பிரிவு ஆரம்பித்த புதிதிலும் கொடுத்த வரவேற்பே அதற்கு சாட்சி சொல்லும்.
ஊடகங்களில் தனியார் நிறுவனங்கள் கோலோச்ச ஆரம்பித்தப் புதிதில் அதிலிருக்கும் சூட்சுமங்கள் புரியாமல் மதிமயங்கிய நாம் இன்னும் அதன் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. திண்ணைப்பழக்கம் முற்றாக ஒழிந்து வெளியில் மழை பெய்கிறது என்று ஊடகங்களில் சொன்ன பிறகே வெளியில் எட்டிப்பார்த்து உறுதி செய்து கொள்ளும் அளவுக்கு மக்கள் மகுடிப் பாம்பாய் வீட்டுக்குள் முடங்கத் தொடங்கியதும, அதனால் ஏற்பட்ட விபரீதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் என்று எவ்வொரு ஊடக நிறுவனத்தின் வேர்களும் ஏதாவதொரு அரசியல் புதைகுழியில் ஜனித்திருப்பது பெரும்பாலோனோர்க்குத் தெரிந்திருப்பதில்லை. சினிமாத் திரைகளில் தங்கள் தலைவர்களைத் தேடிய சமூகத்தினை காட்சி ஊடகங்கள் மூலம் சுத்துமாத்து செய்து குழம்பிப் போகச் செய்வதில் ஊடகங்களுக்கு பெரிய சிரமமிருக்கவில்லை.
இப்படி இராஜபாட்டையில் பயணித்துக் கொண்டிருந்த ஊடங்களனைத்திற்கும் இன்னல் தரும் இடியாய் இறங்கியது தான் இணையம். ஆரம்பத்தில் கணிணிக் கல்வி சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கப்பட்ட இணையத்தின் விஸ்வரூபம் இன்று ஊடகங்களையும், அவற்றை கட்டிமேய்க்கும் பண முதலைகளையும் தடுமாற வைத்திருக்கிறது. இணையம் ஒவ்வொரு தனிமனிதனையும் ஒரு ஊடகக்கருவியாக்கி ஒரு புதுயுகத்தினை நம் தலைமுறைக்கு அளித்திருக்கிறது. இணையத்தின் பயன்பாடு மென்மேலும் பரவலாகும் பொழுது அரசியல் லாபத்திற்காக அதிகார வர்க்கத்திற்குக் குடைபிடிக்கும் வெகுஜன ஊடகங்கள் தானாகவே பலமிழந்து போய்விடும். இப்படி ஒரு அசுரபலத்தை சர்வசாதாரணமாக கணிணியிலோ அல்லது கைபேசியிலோ வைத்திருக்கும் நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம், புற்றீசல் போல தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு நித்தம் புதுப்புது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி வந்தாலும் இன்றும் காலியாக இருக்கும் உண்மையான மாற்று ஊடகத்திற்கான இடத்தினை நாம் நிரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் உங்கள் மண்டையைக் குடைந்தால் நன்று.
இணையம் ஒரு கட்டற்ற களம். இங்கு எந்த விதிமுறைகளும் இல்லை. ஒரு தனிநபரை, நீ இப்படித்தான் இணையத்தில் எழுத வேண்டும், குத்துவிளக்குப் புகைப்படங்கள் மட்டுமே வலையேற்ற வேண்டும் என்று இங்கு யாரையும், யாரும் கட்டுப்படுத்தவோ, அறிவுரை சொல்வதற்கோ இடமேயில்லை. அப்படி ஒரு கட்டற்ற சுதந்திரம் தான் இணையத்தின் பலம். நம்மில் இணையத்தினைப் பாவிப்பவர்களில் எத்தனை பேர் அடுத்தவர்களுக்கு இணையப்பயன்பாடு குறித்து அறிவுரை சொல்லாமல் ஒரு நாளைக் கடக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் நாம் செய்யும் தவறுகள் புரியும். தங்கள் கொள்கைகளை அடுத்தவர் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் அல்லது சர்வாதிகாரிகளுக்கும், இணையத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆத்திச்சூடி படிப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இணையம் எப்படி செயல்படுகிறது, அதன் வீச்சு என்ன, சாதக,பாதகங்கள் என்ன என்பதைத்தான் அடுத்த தலைமுறைக்கும், அடுத்தவர்களுக்கும் புரியவைக்க வேண்டும். இங்கு பெரும்பாலோனோர்க்கு இணையம், வலைப்பாதுகாப்பு மற்றும் இணையத்தின் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட சட்டங்கள் குறித்தான எந்த அடிப்படை புரிதலும் இருப்பதில்லை. விக்கிப்பீடீயா தளத்தில் இருப்பதெல்லாம் உண்மையென்றும், திருப்பதி பெருமாள் படத்தினை அடுத்த 5 நிமிடங்களில் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தால் குபேரன் தங்கள் வீட்டில் குப்புறப் படுப்பார் என்று நம்புபவர்களும், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் கேண்டி கிரஷ் விளையாடவும் தெரியாமல், அப்படியே தொந்திரவு படுத்தினாலும் அதுபோன்ற இம்சைகளை மட்டுறுத்தும் நுட்பங்களையும் அறியாமல் புலம்பிக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லக் கிளம்புபவர்களுக்கும், ஸ்வாகா சொல்வதற்கு மட்டுமே பூஜைக்கு செல்லும் இது நம்ம ஆளு பாக்யராஜுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இணையத்தினை மாற்று ஊடகமாகப் பாவிப்பதற்கு மேலே சொன்ன தொழில்நுட்பப் புரிதல்கள் மட்டுமின்றி உண்மைத்தகவல்களைத் திரட்டும் திறனோ அல்லது அதற்கான தொடர்புகளோ இருக்க வேண்டும். இன்றையத் தேதிக்கும் உண்மைத்தகவல்கள் சம்பவ இடத்தில் இருந்து நம்பகமானத் தொடர்புகள் மூலம் கிடைத்தால் மட்டுமே சாத்தியம். ஊடகங்கள் மூலம் அல்லது அரசியல் அல்லது கொள்கைச்சார்புள்ளவர்கள் மூலம் கிடைத்தால் தகவல்களைத் தங்கள் நோக்கம் போல் திரித்துக் கொளுத்தி விட வாய்ப்புகள் அதிகம். முதலில் தொழில்நுட்பம் குறித்த புரிதல்கள் குறித்துப் பார்ப்போம். கணிணி வலையமைப்புகளும், இணையமும் இன்று சகல இடங்களிலும் வியாபித்த பிறகு அனைத்துத் துறையினரும் சந்திக்கும் முக்கிய சவால்களுல் ஒன்று கணிணி மற்றும் இணையம் குறித்தான் தொழில்நுட்பப் புரிதல். ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தினை முடக்க முடியாமல் திணறும் நீதித்துறை, ஒரு இணையத்தளத்தினை தனிநபர் அடையாளமின்றி எப்படி நடத்துவெதென்பதறியாமல் சிரமப்படும் மாற்று ஊடக முயற்சியாளர்கள், இணையம் அல்லது கணிணி குறித்தான செய்திச் சந்திப்புகளில் சரியான கேள்விகள் கேட்க முடியாமல் திணறும் செய்தியாளர்கள், ஒபாமாவைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் சூடுபோட்டுக் கொண்ட அரசியல் தலைகள், சுஜாதாவின் இடத்தினைப் பிடிக்க நினைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்து உளறிக் குளறிப் போடும் எலக்கியவியாதிகள் என்று தொழில்நுட்பப் புரிதலின்றி திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம். இதில் அதிகம் குளிர் காய்வது ஸ்வாகா பாக்யராஜ்கள் மட்டுமே. அவர்களில், தங்களின் கட்டுப்பாட்டில் அனைத்து சமூக வலைத்தளங்களும் இருப்பதாக நம்ப வைத்து, ஏமாற்றி தங்கள் தலைவர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயம் தேடும் தொண்டர்கள், விக்கிபிடியாவை மொழிபெயர்த்து புத்தகம் எழுதி மூத்தவர்களை அசத்தும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள், நாளைக்கு நாற்பது நிலைத்தகவல் இடுவதால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் குறித்தான தொழிநுட்ப விவாதங்களில் கலந்து கொள்ளும் அறிவுசார் புரட்சிப்பொங்கல்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ் இணையத்தில் மாற்று ஊடகங்களுக்கான முயற்சியில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது திரைப்பட விமர்சனங்கள். ஒரு கட்டத்தில் இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் கூட நடத்த ஆரம்பிக்கும் அளவுக்கு அதன் வீச்சு அதிகமாகியிருந்தது. திரைப்பட விமர்சனங்கள் வெற்றியடையக் காரணம், எழுதும் ஒவ்வொருவரும் தாங்களே நேரடி அனுபவத்தில் ஒரு திரைப்படம் குறித்தான அலசல்களைத் தங்கள் ரசனைக்கேற்ப முன்வைத்ததும், அதன் மூலம் அவர்களுக்கு எந்த ஆதாயமோ அல்லது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் எந்த பயமும், எதிர்பார்ப்பும் இன்றியும் இருந்தது தான். அரசியல், சமூகம் குறித்தான செய்திகள் என்று இதே போன்று அந்த சுயலாப நோக்கில் இல்லாமல், தனிமனித மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இணையத்தில் பகிரப்படுகிறதோ அன்று தான் மாற்று ஊடகத்திற்கானக் கதவுகள் முழுமையாகத் திறக்கும்.
இன்றைய சூழ்நிலையில் மக்கள் பார்வையில் இருக்கும் அனேக ஊடகங்களும், அவற்றின் முகங்களாகத் திகழும் ஊடகவியலாளர்களும் ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளவர்களாகவும், அவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பாதிப்பின்றி சுதந்திரமாக இணையத்தில் செயல்பட வாய்ப்புக் கிடைத்தாலும் ‘என் தலைவன் தங்கம்டா’ என்றே காலம் பூராவும் பேசி இம்சிக்கிறவர்களே அதிகம், அதிலும் ஏகப்பட்ட வெற்றிகொண்டான்களும், தீப்பொறி ஆறுமுகங்களும் இருக்கிறார்கள். பிரதமர் முதல் இணையத்தில் தனக்குப் பிடிக்காத வண்ணம் எதிர்பதிவு போடும் சாமனியன் வரை அனைவரையும் மானாவாரியாக, பச்சைப்பச்சையாக எழுதுவது இவர்களின் இணையச் சாணக்கியத்தனம், அதாவது இணையத்தில் தாக்குகிறார்களாமாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிலபல வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும். முன்பே கூறியது போல் மற்ற குற்றங்களை விட இணையக் குற்றங்களை நிரூபிப்பது மிக எளிது அதே சமயம் அது வழக்கறிஞர்கள், காவல்துறை நண்பர்கள், நீதிமன்றங்கள் ஆகியோரின் தொழில்நுட்பபுரிதலும் அவசியம் என்பதையும் மறந்து விடக்கூடாது.
மின்சாரம் தடைபட்டால் தெருமுனைப் பெட்டிக்கடைக்குப் போகப் பயப்படும் பிள்ளைப்பூச்சிகள் கூட, சீறும் சிறுத்தைகளாக இணையத்தில் சீறிப்பாயக் காரணம், தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது அல்லது எத்தனையோ கோடிக்கணக்கான நபர்கள் எழுதித்தள்ளும் டிவிட்டர், பேஸ்புக் தளங்களில் தான் ஒருவன் எழுதுவதை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பார்கள் என்ற தைரியத்தில், ஒற்றை ஆளாய் யாரெனும் முக்கியப் புள்ளியினை மானக்கேடாய் வறுத்தெடுத்து அதில் இன்பம் காண்பது தான். அப்படி நினைப்பவர்கள் நீங்களும் ஒருவராக இருந்தால் இன்றோடு அந்த எண்ணத்தினை மாற்றிக் கொள்ளுங்கள். டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், உங்கள் பெயரைக் குறிப்பிட்டு யார், என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூடச் சுடச்சுடக் கண்டறிய முடியும். எப்படி?
தொடர்வோம்……

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Sunday, October 19, 2014

இணையம் வெல்வோம் - 20

எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் ‘அண்டாகா கசம், அபுகா குகும், திறந்திடு சீசேம்’ என்றவுடன் திறந்த குகைக்கதவுகளைப் பார்த்து வாய்பிளந்த தமிழ்ச்சமூகம் இன்று மனிதக்குரல்களைக் கிரகிக்கும் மென்பொருட்கள் மூலம் தங்கள் கணிணி, செல்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பூட்டிவைப்பது சர்வசாதரணமாகி, சிவாஜி திரைப்படத்தில் ரஜினி மடிக்கணிணியைத் திறக்கும் உத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குரல்கிரகிக்கும் தொழில்நுட்பத்தினைக் குறித்தான குரல்களைத் திரையரங்கிற்குள் கேட்க முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது. இப்படிக் கற்பனைக் கதைகளில் கண்டதையும், கேட்டதையும் விஞ்சுமளவுக்கு ஹேக்கிங்கில் உலகையே கலக்கிய அசத்தல் மன்னன் தான் பர்னபி ஜாக்.
நியுஸ்லாந்தில் பிறந்து பின்பு அமெரிக்கவாசியாகிப் போன பர்னபியின் ஹேக்கிங் சாதனைகளுக்கு வானமே எல்லை. மற்றவர்களுக்கும் பர்னபிக்கும் இருந்த வித்தியாசம், அவர் தேர்ந்தெடுத்த களம். பொதுமக்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தும், அதே சமயம் முக்கியமான இலத்திரணியல் சாதனங்களை ஹேக்கிங் செய்து அவற்றில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவற்றை எப்படி சரி செய்வது என்று உதவி செய்து சுபம் போடுவது தான் பர்னபியின் பாணி.
குஷ்பூவின் ஜாக்பாட்டுக்குள் நாம் தொலைந்து போய் வெகுநாட்களாகிவிட்ட காலகட்டத்தில், பர்னபியின் ஜாக்பாட் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகையும் மலைக்க வைத்தது. 2010 நடந்த ஹேக்கர்களின் கருத்தரங்கில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை மேடையில் வைத்து அவற்றை அனைவரின் கண் முன்னே சில நிமிடங்களில் அவற்றிலிருந்து தானாகப் பணத்தினைக் கொட்ட வைத்து கிளுகிளுப்பான பீதியை கிளப்பியவர் பர்னபி. அதற்கு பர்னபி வைத்த பெயர் ஜாக்பாட்டிங் (Jackpotting). பர்னபி நிரல்கள் எழுதுவதில் புலி. கணிணியில் ஏதெனும் ஒரு பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டால் உடனே அதனைப் பயன்படுத்தி கணிணியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தந்திரங்களைச் செய்யும் நிரல்கள் எழுதுவதில் நிபுணர். அடுத்த இரண்டு வருடத்தில் பர்னபியின் அடுத்த அதிரடி வெளியீடாக வந்தது இன்சுலின் பம்ப்.
கணிணித் தொழில்நுட்பம் வளர, வளர தங்களையும் ஒருசேர நவீனப் படுத்திக் கொண்ட துறைகளில் மிக முக்கியமானது மருத்துவத்துறை. மருத்துவ உபகரணங்கள் அனைத்து கணிணிமயமாகின, நோயாளிகள் பயன்படுத்து இன்சுலின் பம்ப், பேஸ்மேக்கர் போன்ற கருவிகள் வடமில்லா வலையமைப்பு வசதிகளோடு சந்தைப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் 30 அடி தூரத்தில் இருக்கும் நோயாளியின் இன்சுலின் பம்பினை ஹேக் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் விரும்பும் கால இடைவெளி மற்றும் அளவில் இன்சுலின் மருந்தினை நோயாளியின் உடம்பில் செலுத்திக் காண்பித்து திகிலேற்படுத்தினார் பர்னபி. அளவிற்கு மீறிய இன்சுலின் மருந்து மரணத்தினை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்னத்த செய்ய போறானோ என்று அகில உலகத்தையும் அன்னாந்து பார்க்க வைத்து விட்டு பர்னபி செய்த அடுத்த சாதனை தான் நோயாளிகள் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவும் பேஸ்மேக்கர் கருவியினை ஹேக் செய்து கட்டுக்குள் கொண்டு வருவது. உலகில் கொளுத்த பணபலம், அதிகார பலமிக்க பெரும்பாலான முதலைகள் பேஸ்மேக்கர்களில் தான் உயிர்வாழ்கின்றன என்பதால் இது குறித்த செய்திகளை பர்னபி வெளியிட்ட போது மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
பேஸ்மேக்கர் கருவியைக் கட்டுக்குள் கொண்டுவந்து இதயத்துடிப்பினை அதிரடியாக அதிகரித்து ஆளைத் தீர்த்துக்கட்டுவது வரை சுமார் 50 அடி தூரத்தில் இருந்து தன்னால் செய்ய முடியும் என்று அறிவித்து 2013ல் நடக்க விருந்த சர்வதேச ஹேக்கர்ஸ் கருத்தரங்கில் செயல்முறை விளக்கத்தோடு செய்து காட்டுவதாக அறிவித்து பரபரப்பினை ஏற்படுத்திய பர்னபிக்கு கருத்தரங்கில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பர்னபியை யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறி அந்த ஒரு மணி நேரத்தை பர்னபியின் நினைவஞ்சலிக்கென ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது தான் பெருஞ்சோகம்.
கருத்தரங்கிற்கு மிகச் சில நாட்களுக்கு முன்பு பர்னபி தன் அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்து கிடந்தார். சம்பவ தினத்தன்று காலை பர்னபியைக் காணச் சென்ற அவரது காதலி கொடுத்தத் தகவலின் பேரில் காவல்துறை குவிந்தது. உலகில் மிகமிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட,  வெறும் 35 வயதே ஆன பர்னபியின் மரணம் இணையச்சமூகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மைக்கெல் ஹாஸ்டிங்கின் மரணத்திற்கும், பர்னபியின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஒரு பிரிவும், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலதிபர்களின்  குண்டர்கள் கைங்கர்யம் என்று ஒரு பிரிவும் கூறி வந்தாலும், சம்பவ இடத்திற்கு சென்ற சில மணித்துளிகளிலேயே இம்மரணத்தில் எந்த சந்தேகமோ, சர்ச்சையோ இல்லை என்று காவல்துறை முற்றுப்புள்ளி வைத்ததும், பர்னபியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை பல மாதங்களுக்குப் பின்பே வெளியிடப்பட்டதும், அதில் விபரீதமான போதை மருந்துக் கலவையினை உட்கொண்டதால் மரணம் சம்பவித்தது என்று கூறியதும் பெரிதும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. முக்கியமாக பிரேதப் பரிசோதனை தகவல்கள் ஏதும் இல்லாமலேயே இம்மரணத்தில் கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை என காவல்துறை கூறியது மென்மேலும் சந்தேகங்களைக் கிளறி விட்டது. என்ன தான் சர்ச்சைகள் கிளம்பினாலும், பர்னபியின் மரணம் ஒரு போதை மருந்து விபத்தென சட்டப்படி காலாவதியாக்கப்பட்டது.
அடுத்தடுத்த மரணங்கள், ஸ்நோடன், அனானிமஸ், விக்கிலீக்ஸ் என இணைய உலகம் கொந்தளித்துக் கிடக்க, அமெரிக்க தேசியப் பாதுகாப்பின் தலைவர் ஜெனரல் அலெக்ஸாண்டர் கீத் ஹேக்கர்ஸ் கருத்தரங்கில் பர்னபிக்கு அஞ்சலி செலுத்திப் பேசத் தொடங்கிய போது கூட்டத்தில் இருந்து வந்த எதிர்ப்புக் குரல்களும், கேள்விக் கணைகளும் அனல் பறந்தது. இணையக் கண்காணிப்பிலிர்ந்து விடுதலை வேண்டும் என்று கூட்டத்திலிருந்து குரலெழும்ப, நீங்களும் எங்களோடு சேர்ந்து அதற்கான முயற்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அலெக்ஸாண்டர் கீத் பதிலளிக்க, நீ ஒரு புளுகுணி மூட்டை, அமெரிக்க காங்கிரஸில் இணையக் கண்காணிப்புக் குறித்து பொய் சொல்லிய பொய்யர்கள், உங்களை நம்ப முடியாது என்று பதில் குரலொலிக்க அலெக்ஸாண்டர் கீத் ஒரு மாதிரியாக சமாளித்துப் பேசி முடித்தார்.

 
பின் அங்கு கேட்ட பல கேள்விகளில் முக்கியமானது, ‘ஒரு தனிநபர் தனது அம்மாவுடன் பேசுவதையோ, அல்லது உங்கள் (அலெக்ஸாண்டர்) மகளின் இணைய நடவடிக்கைகளையும், தகவல் தொடர்புகளையும் நீங்கள் கண்காணிக்க முடியுமா?’. அதற்கு அலெக்ஸாண்டர் அளித்த பதில் வரலாற்று முக்கியயத்துவம் வாய்ந்தது. எங்களால் யாரையும் கண்காணிக்க முடியும், ஆனால் நீங்கள் நல்லவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் தகவல் தொடர்பு எதுவும் கண்காணிக்கப்பட மாட்டாது என்பது தான் அலெக்ஸாண்டர் அளித்த பதில். நல்லவர், கெட்டவர் என்பதற்கான வரைமுறைகளை அவர்களே வகுத்துக் கொள்வது தான் இதிலுள்ள சிறப்பம்சம், மேலும் மற்ற நாடுகளின் அரசியலதிகார மையங்கள் அனைத்தும் கெட்டவர்கள் வகையறாவில் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்படும் என்பதை யார் சொல்லியும் நமக்குத் தெரியத் தேவையில்லை. இங்கு அலெக்ஸாண்டர் கீத் சொன்ன அதே செய்தியைத் தான் உலகெங்கும் சில மாதங்களுக்கு முன்பு அம்பலமாக்கியதற்காக ஸ்நோடன் ரஷ்யாவில் தஞ்சம் புக நேரிட்டதை இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளவும்.
இதுவரை நாம் பார்த்த ஆளுமைகள் அனைவருமே ஊடகங்களும், அரசாங்கங்களும் ஒளிவுமறைவின்றி மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும், இணையம் என்பது மக்களுக்கானது அதில் அவர்களின் அந்தரங்கத்தன்மை அவர்களது உரிமை என்பது போன்ற காரணங்களுக்காக வெற்றிவேல், வீரவேல் என்று கிளம்பிப் போய் தங்கள் வாழ்க்கையை லட்சியத்திற்காகத் துறந்தவர்கள். இவர்கள் அனைவருமே வாழ்க்கையில் மிக இளம் வயதிலேயே பணம், புகழ், காதல் என்று எக்குறையுமின்றி இருந்தவர்கள். இவர்களைப் பற்றி நாம் இவ்வளவு விரிவாகப் பார்த்ததின் காரணம், சமூக , பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் அனைத்திலும் மேற்கத்திய உலகத்தினை அப்பட்டமாக பின்பற்றும் நாம், அவர்கள் சந்திக்கும் இதே ஊடகச்சிக்கல்களை, இணையச்சுதந்திரத்திற்கானத் தேவைகளை எண்ணி எண்ணி பொங்க வேண்டிய நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.
தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டத் தேவைகளை சகட்டுமேனிக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் பணிகளில் பெரும்பங்கு வகிக்கும் நாம், சமூக மாற்றங்களுக்கு, உண்மையை உலகறியச் செய்வதற்கு இணையத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்கானத் தகுதியை எட்டியிருக்கிறோமா, அதனை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவதென்பதையாவதுத் தெரிந்திருக்கிறோமா?.

தொடர்வோம்..

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, July 14, 2014

இணையம் வெல்வோம் - 19

மைக்கெல் ஹாஸ்டிங்கின் விபத்து நடந்த இடம்
இன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல்.

மைக்கெல் ஹாஸ்டிங்கும் அவரது காதலியும்
நியூயார்க்கில் பிறந்தாலும், லாஸ் ஏஞ்சலிஸ் வாழ்க்கை, புத்தம் புது மெர்சிடஸ், உலகளாவிய புகழ், பத்திரிக்கைத்துறை விருதுகள், அழகான காதலி, கை நிறைய பணம் என்று இருந்தாலும், எழுத்தின் மூலம் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற வேட்கை என்றும் குன்றாமலிருந்து அதனாலேயே அகால மரணடைந்த போது மைக்கெலுக்கு வயது வெறும் 33.
2002ல் நியூஸ் வீக்கில் மூலம் நடந்த மைக்கெலின் பத்திரிக்கையுலகப் பிரவேசம், பின்னர் பஸ்பீட் (Buzzfeed) மற்றும் ரோலிங்ஸ்டோன் (Rollingstone) நிறுவனங்களோடு பணிபுரியும் வரைக்கும் நாளும், பொழுதும் மென்மேலும் வளர்ந்து கொண்டே போனது. செய்தி சேகரிப்புக்காக ஈராக்கில் கிடையாய்க் கிடந்த காலத்தில், மைக்கெலுடன் இருப்பதற்காகவே அங்கு பணிபுரியச்சென்ற காதலி ஆண்ட்ரியா ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட, வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்த மைக்கெல் வாழ்க்கையை சோகம் கவ்வியது. தனது காதலியுடனான ஈராக் நாட்களை I lost my love in Baghdad என்ற தலைப்போடு மைக்கெலின் முதல் புத்தகமாக வெளிவந்து மிகுந்த வரவேற்பையும், அதே சமயம் பலத்த விமர்சனங்களையும் பெற்றது.
மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய I Lost My Love in Baghdad புத்தகம்
அதன் பின்னர் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் தளபதியான ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் குறித்து இவர் எழுதிய கட்டுரை அமெரிக்க அரசியலில் கிளப்பிய சூட்டைத் தணிக்க அதிபர் ஒபாமாவின் வேண்டுகோளுக்கு அல்லது மிரட்டலுக்கு இணங்க ஸ்டான்லி மெக்றிஸ்டல் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
ஒபாமாவுடன் கலந்துரையாடும் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல்
மெக்கிறிஸ்டலும் அவரது சகாக்களும் ஒபாமா மற்றும் அவரது அலுவலக, அமைச்சரவை அன்பர்கள் குறித்து நக்கலாக சிலாகித்து சிலிர்த்துக்  கொண்டதனைத்தும் கட்டுரையாக வடித்து, அமெரிக்க அதிபரை அலட்சியமாக நினைக்கும் படைத்தளபதி என்கிற ரீதியில் கடந்த கால போர் சாகசங்கள் மீது கட்டியுழுப்பியிருந்த மெக்கிறிஸ்டலின் பிம்பங்களை சூறையாடிய பெருமை மைக்கெலுக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் மெக்கிறிஸ்டல் தனது சகாக்களோடு உரையாடியது குறித்து வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானாலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் குறைபாடுகளனைத்தையும் வெளிக்கொணர்ந்த விதம் மைக்கெலுக்கு புகழையும் அதே சமயம்  அதிகாரவர்க்கப் பகையையும் சம்பாதித்துக் கொடுத்தது.
மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய The Operators புத்தகம்
ஒரு நிலைச்சார்பாக, சுயலாபத்துக்கான செயல்திட்டத்துடன் செயல்படும் ஊடக அன்பர்களுடன் பொது இடத்தில் நாராசமாக வாய்த்தகராறில் ஈடுபடும் அளவுக்கு மைக்கெலுக்கு கோபம் இருந்தது. அதிகார வர்க்கத்தின் அட்டகாசங்களைத் தோலுரிக்க வேண்டுமென்ற எண்ணமும், ஊடகத்துறையில் பரவியிருந்த அரசியல் அதிகார வர்க்கத்தின் சார்பு நிலை மீதான கோபமும் இயற்கையாக அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் தொடர்புகளை மைக்கெலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. லண்டனிலுள்ள பண்ணை வீட்டில் பிணையிலிருந்த ஜூலியனை நேரில் சந்தித்த மிகச்சில நபர்களில் மைக்கெலும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து The Operators என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்ட மைக்கெல், அதன் பின்னர் தேர்ந்தெடுத்த குறி சிஐஏ இயக்குநர் ஜான் பிரனன் மற்றும் ஸ்நோடன் அம்பலப்படுத்திய அமெரிக்க உளவு அமைப்புகளின் இணையக் கண்காணிப்புத்திட்டம்.
ஜான் பிரனன்
இதற்கிடையில் தன் நீண்ட நாள் தோழியான எலைஸ் ஜோர்டானைத் திருமணம் செய்திருந்த மைக்கெல், ஜான் பிரனன் மற்றும் இணையக் கண்காணிப்புக் குறித்தான தனது கட்டுரை வெளிவருவதற்கு முன்னரே சர்ச்சைக்குறிய சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.
ஜூன் 18, 2013 அன்று அதிகாலை 4.25 மணிக்கு தனது மெர்சிடஸ் காரில் சென்ற மைக்கெல், அதிவேகத்தில் சாலையோரத்திலிருந்த பனைமரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகிப் பலியானார். இந்த விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது நெருங்கிய நண்பர்களுக்கு FBI அதிகாரிகள் தனக்கு நெருக்கமானவர்களை விசாரித்து வருவதாகவும், தாங்கள் விசாரணைக்கு உட்படும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் துணையின்றி ஏதும் பேச வேண்டாமென்றும், மிகப்பெரியக் கட்டுரை ஒன்றிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன், சிறிது காலம் தொடர்பில் இல்லாமல் இருக்கப் போகிறேன் என்று மைக்கெல் மின்னஞ்சல் அனுப்பியதும், அவர்களில் ஒருவர் விக்கிலீக்ஸின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கெல் ஹாஸ்டிங்
சிஐஏ மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் இணையக் கண்காணிப்புக் குறித்து மைக்கெல் யாரிடமெல்லாம் தகவல் சேகரித்தார் என்பது பொதுவில் இதுவரை வெளிவரவில்லையென்றாலும் அவை குறித்தானத் தகவல்களை அவரிகளின் அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக பெறக்கூடிய கைராசியான ஸ்தாபனம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ். அமெரிக்காவின் இணையக் கண்காணிப்பு முறையை அம்பலப்படுத்திய ஸ்நோடன் சரியாக விபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன், விக்கிலீக்ஸ் உதவியின் காரணமாகவே பாங்காக்கிலிருந்து தப்பி ரஷ்யா சென்றதை இங்கு நினைவுபடுத்திகொள்ளவும்.
மைக்கெல் ஹாஸ்டிங்கின் கார் விபத்துக்குள்ளான போது தீப்பிடித்து எரியும் காட்சி
இவையனைத்திற்கும் மேலாக மைக்கெல்லின் மெர்சிடஸ் சி250 விபத்துக்குள்ளான விதம் மிகவும் சந்தேகத்திற்குரியது. அதிவேகத்தில் சென்று மரத்தின் மோதிய வாகனங்கள் எதற்கும் மைக்கெல்லின் வாகனத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டதில்லை. வாகனத்தின் இஞ்சின் சுமார் 100 அடி தூரத்திற்கு மேலாகத் தூக்கியெறியப்பட்டதும், பலத்த வெடிச்சத்தத்துடன் வாகனம் தீப்படித்து எரிந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மைக்கெல் பலியான விதம் பலத்தவிவாதங்களைக் கிளப்பியது.
அதிநவீன இலத்திரனியல் சாதனங்களைக் கொண்ட வாகனங்களை எங்காவது இருந்து இயக்கும் வண்ணம் இலத்திரனியல் சாதனங்களை மாற்றியமைத்தோ அல்லது கட்டுடைத்தோ விபத்துக்குள்ளாக்கும் வித்தை அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு கைவந்த கலையென்றும், மைக்கெல் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை வெளிவந்தால் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுப் போவோம் என்ற காரணத்தால் அமெரிக்க உளவு அமைப்புகள் காரில் வெடி வைத்தார்கள் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. உத்தியோகப்பூர்வமாக அப்படி எதுவும் நடக்கவில்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை, இது வெறும் விபத்து மட்டுமே என்று காவல்துறைக் கோப்புகளை மூடி வைத்து விட்டது.
ஆரம்பத்தில்  இதற்குக் காரணமானவர்களை பழிவாங்கிய தீருவேன் என்று கொந்தளித்த மைக்கெலின் மனைவி எலைஸ் ஜோர்டான், பின்னர் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறி ஆச்சர்யமளிக்கும் வகையில் அமைதியாகிப் போனார். முன்னாள் அமெரிக்கச் செயலர் கெண்டலீசா ரஸின் அலுவலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த எலைஸ் தனது தொடர்புகள் மூலம் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து மவுனித்துப் போனார் என்றும் நம்பப்படுகிறது. அனைத்து தரப்பினரும் அமைதி காத்த நேரத்தில் தான்  மைக்கெல்லின் எப்.பி.ஐ விசாரணை குறித்தான மின்னஞ்சல் வெளிவந்து புயலைக் கிளப்பியது, ஆரம்பத்தில் நாங்கள் மைக்கெல் ஹாஸ்டிங்கையோ அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்களையோ விசாரிக்கவே இல்லை, இல்லவே இல்லை என்று கைகளை அகல விரித்த எப்.பி.ஐ பின்னர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த பிறகு சரியாக விபத்து நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் மைக்கெல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டது.இருந்தாலும் இன்று வரை மைக்கெலின் மரணம் ஒரு ஊரறிந்த ரகசியமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
பத்திரிக்கை உலகில் மைக்கெல்லின் மரணத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பாகவே அடுத்த மாதமே மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்தது. இம்முறை அதிர்ந்தது இணைய பாதுகாப்பு வல்லுநர்களும், ஹேக்கர்களும். 
தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, July 7, 2014

இணையம் வெல்வோம் - 18

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது.  2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.
2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் திகில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.
எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.
கை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.
கண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப்பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.
இத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI  மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள்  மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.
தி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது  போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ஹாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.
 அனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை  மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.
மக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில்  தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங்.  33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் ?

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Friday, May 30, 2014

இணையம் வெல்வோம் - 17

அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.
வந்த சுவடே தெரியாமல் சிகர்துர் கட்டுக்குலையாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்று முதல் எப்.பி.ஐ உடன் தினமும் நேரடித்தொடர்பில் இருந்தார் சிகர்துர். விக்கிலீக்ஸ் தளங்களில் நடைபெறும் விவாதங்கள், வெளியிடத்தயாராகும் கோப்புகள், சாபு மூலம் கொட்டும் தகவல்கள் அனைத்தும் சிகர்துர் மூலம் நேரலையில் அமெரிக்கா கண்டுகளித்துக் கொண்டிருந்தது.
சாபுவின் கைங்கர்யத்தில் கிடைத்த ஸ்ட்ரட்போர் தகவல்களையே தாளிக்க முடியாமல் இருந்த சிகர்துருக்கு சாபுவிடம் இருந்து சிரிய அரசாங்கத்தின் மின்னஞ்சல் வழங்கியிலிருந்து லவட்டப்பட்ட 96GB அளவிலான மின்னஞ்சல்கள் வந்து சேர்ந்தது. பின்னாளில் சிரியா கோப்புகள் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் அவை வெளியிடப்பட்டு உள்நாட்டு கலவரம் நடந்த அந்த நாட்களில் மேற்கத்திய நாடுகளும், அந்நாட்டு நிறுவனங்களும் போட்ட இரட்டை வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு சிகர்துர் மூலம் தகவல் சொல்லப்பட்டது. இப்படி அமெரிக்காவின் ஜேம்ஸ்பாண்டாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிகர்துருக்கு சங்கு ஒரு தொலைபேசி வடிவில் வந்தது. 

விக்கிலீக்ஸின் ஊடகத் தொடர்பாளரும், சிகர்துரை ஜூலியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவருமான கிறிஸ்டைன் இடமிருந்து வந்த அழைப்பின் மூலம் சிகர்துர் மேல் விக்கிலீக்ஸ் பணம் ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கையாடப்பட்டதாகக் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படப் போவதாக சொல்ல, தனக்கு இனி இங்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்து விக்கிலீக்ஸின் தொடர்பு எல்லைக்கு வெளியே சிகர்துர் என்ற சிட்டுக்குருவி சர்ரென்று பறந்தது.

ஜெரொமி ஹமன்ட்
தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அமெரிக்காவிற்குத் தெரிவித்து இனி தன்னால் தகவல்கள் தர இயலாது என்று சொன்ன சிகர்துர், வாஷிங்டன் வரவழைக்கப்பட்டு மூளையில் இருக்கும் மிச்சச் சொச்சத் தகவல்களும் சுத்தமாக சுரண்டி எடுக்கப்பட்டது. இம்முறை சிகர்துர் மூலம் விக்கிலீக்ஸ் உடன் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர்களும் கவனமாக பதிவு செய்து சக்கையாக அனைத்துத் தகவல்களையும் கறந்து ஐஸ்லாந்தில் துப்பப்பட்டார் சிகர்துர். அடுத்த சில நாட்களில் 2012 மார்ச் மாதம் வரிசையாகக் கைதுக் காட்சிகள் அரங்கேறின. லல்செக் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் சாபுவின் நெருங்கிய கூட்டாளியுமான ஜெரொமி ஹமன்ட் (Jeremy Hammond) அமெரிக்காவிலும், சிகர்துருடன் தொடர்பில் இருந்த கேலா இங்கிலாந்திலும் வைத்து கைது செய்யப்பட, அதன் பின் ஊடகங்களி வெளியான செய்திகளில் சிகர்துருக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. 

16 வயதே ஆன பெண்ணாக ஹேக்கிங் உலகில் அறியப்பட்ட கேலா உண்மையில் 25 வயது ஆண் ரயான் (Ryan Ackroyd) என்பதும், ஜெரோமி ஹமண்ட் குறித்துத் தகவல் கொடுத்தது சாபு தான் என்பதும், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே 2011 ஜூன் மாதம் சாபு அமெரிக்க உளவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆள்காட்டிக் கொடுக்க சம்மதித்த காரணத்தால் ரகசியமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டு ஹேக்கிங் உலகில் உலவ விடப்பட்ட உளவாளி என்பதும் தெரிய வந்த சிகர்துருக்குக் பேரரசின் திரைப்படம் பார்த்ததைப் போன்ற பாதிப்பில் கன்னாபின்னாவென தலைசுற்றிக் கிறங்கினாலும் அப்பொழுது தான் பல விஷயங்கள் தெளிவாகியது.

ரயான் 
ஒவ்வொரு முறையும் சிகர்துர் எப்.பி.ஐ இடம் சாபு குறித்தத் தகவல்கள் அளித்த போதும் மேற்கொண்டு அது குறித்த தகவல்களோ அல்லது கேள்விகளோ சிகர்துரிடம் கேட்கப்படவில்லை. அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளின் வரலாற்றில் மிகப்பெரியத் தகவல் கசிவு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் மற்றும் சிரியாவின் உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் இரட்டை வேடம் போட்ட அத்தனை பேரையும் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் ‘சிரியா கோப்புகள்’ ஆகிய இரண்டும் அமெரிக்க உளவு அமைப்புகளுக்குத் தெரிந்தே விக்கிலீக்ஸிற்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. தன் கோவணம் காற்றில் பறந்தாலும் ஜூலியனைக் கையும் களவுமாக நேரடியாக அமெரிக்க சட்டப்படி குற்றவாளியாக நடக்க வைத்து, சிறைபிடிக்க விரிக்கப்பட்ட வலைதான் இத்தனை நாடங்கங்களும், காட்சிகளும். குற்றத்தினை நடக்காமல் தடுக்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளே அவற்றை நடக்க வேடிக்கைப் பார்த்த விதம் அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், ஜூலியன் மேல் அமெரிக்க வைத்திருக்கும் குறியின் தீவிரத்தையும் புரியவைத்தது.
சாபுவிற்கு சற்றும் குறைவில்லாத ஹேக்கிங் நிபுணரும், தீவிர  இணையப் போராளியுமான ஜெரொமி ஹமன்ட், ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் வெளியீட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், சாபுவுடன் தொடர்பில் இருந்த கேலா/ரயான் 30 மாத சிறை தண்டனையும் அனுபவித்துக் கொண்டிருப்பது உபதகவல். அது வரை ஏகப்பட்ட சட்டச்சிக்கல்களைச் சந்தித்தாலும், சளைக்காமல் சமாளித்து லண்டனில் பிணையில் வெளிவந்திருந்த ஜூலியன் மேற்படி சம்பவங்களுக்குப் பின்னர் இதற்கு மேல் ரத்த பூமியில் உலவ முடியாது என்று முடிவு செய்து ஈக்வடர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கேட்டு குடியறியதில் இருந்து இவற்றின் பின்விளைவுகளால் ஜூலியன் தலைக்கு வரவிருந்த ஆபத்தினை உணரலாம்.  அன்று தூதரகத்தின் உள்நுழைந்த ஜூலியன் இன்றும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கையாடல் செய்ததாகச் சொல்லப்பட்ட பணம் ஜூலியனின் அனுமதியுடன் தன் கைச்செலவுக்கு எடுத்தது என்று சிகர்துரும், சிகர்துர் சொல்லும் அளவுக்கு ஜூலியனோ அல்லது விக்கிலீக்ஸ் நபர்கள் யாருமோ சிகர்துரை அளவுக்கு மீறி நம்பவில்லை என்று க்றிஸ்டைனும் முன்னுக்குப் பின் முரணாக சொன்னாலும், விக்கிலீக்ஸ் குறித்து சிகர்துர் தான் எப்.பி.ஐ இடம் போட்டுக் கொடுத்தது என்று ஜனவரி மாதம் 2013க்குப் பிறகு தான் ஜூலியனுக்கும், க்றிஸ்டைனுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதமானது, தகவல் உபயம் க்றிஸ்டைனின் நண்பரான ஐஸ்லாந்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்.

2012 மார்ச் மாதத்தின் கைதுச் சூறாவளிக்குப் பிறகு பல மர்ம மரணங்கள் இணைய உலகை உலுக்கத் தொடங்கின. அவர்கள் அனைவருமே ஒரு வகையில் இணைய சுதந்திரத்தில் பாதுகாப்பின் பெயரில் கைவைக்கும் அமெரிக்க அரசிற்கு எதிராகக் கொடிபிடித்தவர்கள். 

எப்.பி.ஐ , என்.எஸ்.ஏ மற்றும் சி.ஐ.ஏ அமைப்புகளின் கையில் அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் உடன் தொடர்புடையவர்களாக மாட்டியவர்கள் யார் யாரென்பது சம்பந்தப்பட்ட தலைகளுக்கே வெளிச்சம். சில வேளை யாரென்றே தெரியாமல் தங்கள் அடையாளங்களை மறைத்து செயல்பட்டவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அவ்வாறு மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பத்திரிக்கையாளர் மெக்கேல் ஹேஸ்டிங், நாம் முதன் முதலில் பார்த்த இணைய ஆரவலர் ஆரோன் ஸ்வார்ட்ஸ், உலகப்புகழ் பெற்ற ஹேக்கிங் மன்னன் பெர்னபி ஜக் ஆகியோர். இவர்கள் அனைவரின் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க உளவு அமைப்புகளால் விசாரணைக்கோ அல்லது கண்காணிப்பிற்கோ உள்ளாக்கப் பட்டவர்கள்.

இணையப்போரளிகளுடன் கண்ணாமூச்சி ஆடி, ஆடி அலுப்பில் இருந்த அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது சாபுவின் கைது. ஊரே வியந்து பார்க்கும் ஹேக்கிங் சாகசக்காரரான சாபு, கைதவறி தன் அடையாளத்தினை மறைக்காமல், தனது உண்மையான வலையமைப்பு எண்ணுடன் இணையத்தில் ஒரே ஒரு முறை இணைந்தது தான் மாட்டிகொண்டதற்கான காரணம். அத்தனை துல்லியமாக வைத்த குறி தப்பாமல் இணையத்தில் யாரையும் கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு சாபுவின் சம்பவம் சாட்சி. சிகர்துருக்கோ அல்லது சாபுவுக்கோ தாங்கள் அளித்த தகவல்கள் மூலம் நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை. இதில் தப்பியவர்கள் ஈக்வடர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த முன்னெச்சரிக்கைப் புலியான ஜூலியனும், ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் எட்வர் ஸ்நோடனும் மட்டுமே.

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.