Tuesday, November 30, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 1


வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.


'விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.


உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் 'ஆளடி' அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :). 'சர்வ அதிகாரமும் படைத்த' என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் 'அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்' என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. 'தொழில்நுட்பம்'!!!.


'நாந்தான் அப்பவே சொன்னேன்ல' என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D. விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே 'வெட்டிப் போடும்' தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.


விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.


விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;), போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்....

Friday, November 26, 2010

பணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை

பொருளாதாரம் தேயும் சமயங்களில் விரக்தியில் அனேகம் பேர் சொல்லும் வசனம், ' பணம் என்ன மரத்துலயா காய்க்குது'. இதை எப்படியோ உளவுபார்க்கும் செயற்கைக்கோள்கள் மூலம் ஒட்டுக்கேட்ட வெள்ளைகாரன் கண்டுபிடிச்சது தான் ATM (Automatic Teller/Banking Machine) என்கிற தானியங்கி இயந்திரம். உண்மையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்து நெம்பி விட்டது காசு போட்டால் மிட்டாய் கொடுக்கும் இயந்திரங்கள். ATM என்றால் தூரத்தில் நின்று என்னவோ, ஏதோ என்று பார்த்து விட்டு நம்பிக்கையில்லாமல் நகர்ந்து சென்ற காலங்கள் மலையேறி, இன்று உபயோகிக்காதவர்கள் மிக மிகக் குறைவெனும் விதத்தில் மக்களின் நம்பிக்கையை காலத்தால் வென்ற சாதனை நாயகன்.என்ன தான் இருந்தாலும் இதன் வெற்றியில், வாடிக்கையாளர்களைப் பல மணி நேரம் வரிசையில் நிற்க விட்டு வெறியேற்றி அனுப்பும் வங்கிகள் முக்கியப் பங்காற்றி, புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை செவ்வனே செய்து முடித்ததை நாம் மறுக்க முடியாது :). நேரே ATM சென்று அட்டையை உள்ளிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் அவசர யுகத்தில் அது எப்படி செயல்படுகிறது, எவ்வளவு தூரம் பாதுகாப்பானது, அதன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தான அறிமுகமே இப்பதிவு.முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ATM என்பது ஒரு வெற்றுக் கணினி மட்டுமே (dumb system). உங்கள் அட்டையினை உள்வாங்கிக் கொண்டதும், அட்டையின் தகவல்களைப் படித்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய வலையமைப்பின் வழங்கியினைத் தொடர்பு கொண்டு உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் ஆகியவை சரிதானா என்று உறுதி செய்யும். பின்னர் நம் பணப்பறிமாற்றத்தினை உங்கள் வங்கிக்கணக்கின் பண இருப்பினை வைத்து உறுதி செய்து பணத்தினை வழங்கும். இந்த மொத்த நடவடிக்கைகளும் முடியும் வரை மட்டுமே உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் தற்காலிகமாக ATM கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். அதன்பின் அவை அழிக்கப்பட்டு விடும். பணத்தாள்களை வெளியிடும் போது அவற்றின் தடிமனை வைத்தே கணக்கிடப்படும், தடிமன் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவை தனியே ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பரமாரிப்பு மற்றும் பணத்தாள்களை வைப்பதற்காக வரும் அதிகாரிகள் அவ்வாறு ஒதுக்கப்பட்ட தாள்களை சேகரித்து மறுஆய்வுக்கு எடுத்துச் செல்வர்.மின்னஞ்சல், கணினி மற்றும் இதர இணைய வசதிகளுக்கே கடவுச்சொலை அப்படி வை, இப்படி வை என்று ஏகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் கணினியுலகம், ஒருவரது வங்கிக்கணக்கினை கையாளும் ATM இயந்திரங்களுக்கு வெறும் நான்கு இலக்கங்கள் மட்டுமே வைத்திருப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?. நான்கு இலக்கங்கள் பாதுகாப்பானைவையே அல்ல, மொத்தம் பத்தாயிரம் கடவுச்சொற்களே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் பாவிக்கப்படுகிறது. அதனால் தான் முதல் மூன்று முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படுகிறது. அப்படியும் முதல் மூன்று முறைக்குள்ளேயே உங்கள் கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு எடுக்கப்படும் பணத்திற்கென்று அளவுமுறை வைத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பணம் கொஞ்சம், கொஞ்சமாக மட்டும் நிதானமாகக் களவாடப்படும். அதற்குள் விழிப்படைந்து வங்கியில் முறையிட்டு பணத்தைக் காப்பாற்றிக் கொள்வது நம் திறமை.


ஒவ்வொரு வங்கியும் அவர்களுக்கென்று ஒரு ஆரம்பக் கடவுச்சொல் வைத்திருப்பார்கள் (0000, 1234), முதல் முறை உங்களிடம் அட்டை வழங்கப்படும் போது அந்த கடவுச்சொல் தான் இருக்கும், பின்பு நாம் அதனை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி நாம் மாற்றும் எண்ணுக்கும், ஆரம்பக் கடவுச்சொல் எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் (offset value), உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ள வழங்கியில் சேமிக்கப்படும். ஒவ்வொரும் முறை நீங்கள் ATM உபயோகிக்கும் போதும் உங்கள் கடவுச்சொல் மற்றும் வங்கியின் ஆரம்பக் கடவுச்சொல் ஆகிய இரண்டும் இடையே உள்ள வித்தியாசம் தான் சரிபார்க்கப் படுகிறதே தவிர நேரடியாக உங்கள் கடவுச்சொல் சரிபார்க்கப்படுவதில்லை என்பது உபரித் தகவல். சர்வதேச தரக்கோட்ப்பாட்டின் படி 4 முதல் 12 இலக்கங்கள் வரை கடவுச்சொல்லாக பயன்படுத்தலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இருந்தாலும் இத்தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஷெப்பர்ட் பரன், தன் சோதனை முயற்சிகளின் போது தன் மனைவியின் உதவியினை நாடினார். ஷெப்பர்டின் மனைவியோ 'என்னால 4 தான் ஞாபகத்துல வச்சுக்க முடியும்' என்று வெட்டு ஒன்று துண்டு நான்காக சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி தலையாட்டிய ஷெப்பர்டின் சம்சார விசுவாசத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு இன்றும் நான்கு இலக்கங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதிவிலக்காக ஸ்விஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலக்கங்கள் கொண்ட கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவதாகக் கேள்வி. நீங்கள் அதுபோன்ற இடங்களில் இருந்து வாசிப்பவராக இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச் சென்றால் சிறப்பு, சொல்லாமல் சென்றால் அதனினும் சிறப்பு :). மேலும் திரைகடலோடும் காலங்களில் நாணய மாற்றுக்கு ATM பயன்படுத்துவது லாபகரமானதென்றாலும் அதற்கு வங்கி உங்கள் மீது வி(மி)திக்கும் சேவைக் கட்டணத்தைப் பொறுத்துப் பயன்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறது.


தொழில்நுட்ப விவரங்களையும் தாண்டி சில பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவது சாலவும் நன்று. உங்கள் வங்கி அட்டையின் பின்பக்கத்திலேயே மிகத் தெளிவாக, அழகான கையெழுத்தில் கடவுச் சொல்லை எழுதி வைப்பது, ATM இயந்திரத்தின் அருகே சென்று நின்று கொண்டு, வில்லங்கமானவர்கள் தாக்குவதற்கு வசதியாக தலை முழுவதையும் உங்கள் பர்ஸுக்குள் நுழைத்து அட்டையைத் தேடி கொண்டிருப்பது, விளக்கு வெளிச்சம் அதிகமில்லாத ATM இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்றவை 'தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட தானைத் தலைவன்' என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்பட ஏதுவாயிருக்கச் செய்யும் செயல்கள். போலி அட்டைகள் உருவாக்குவதில் நாம் இளம் விஞ்ஞானிகள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதால், அடிக்கடி ATMல் புழங்கும் அன்பர்கள், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கின் பணப்பறிமாற்றத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலதிக பாதுகாப்பு அறிவுரைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்து கொள்ளும் வாசர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள் அதிரடிப் பரிசாக வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இப்பதிவு நிறைவடைகிறது.அடுத்த முறை ATM இயந்திரத்தின் அருகில் சென்றதும் சுடுதண்ணி நினைவுக்கு வந்தால் உடனே தொடர்பு கொண்டு, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் :). நன்றி.

Wednesday, November 24, 2010

Virtual Private Network : VPN என்றால் என்ன? - 2 (முற்றும்)


சென்ற பகுதியைப் படித்த அன்பர்களுக்கு VPN குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கிடைத்திருக்கும். இப்பகுதியில் ஒரு VPN எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதென்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.முதலில் VPN எத்தனை விதம், அவற்றின் தன்மை ஆகியவைப் பற்றி. முதல் வகை PPTN (point to point tunneling network) முறையில் அமைக்கப்படுவது. இது ஆதி வகை. இவ்வகை VPN செயல்பாட்டிற்கு உங்கள் வலையமைப்பின் வழங்கியிலும், எங்கோ இருந்து உங்கள் வலையமைப்பினைத் தொடர்பு கொள்ளும் கணினியிலும் VPN Client எனப்படும் மென்பொருள் தேவை. உங்கள் தகவல் தொடர்பு அனைத்துமே இம்மென்பொருள் வழியாகத் தான் கையாளப்படும். அந்த மென்பொருள் தான், PPTP ( point to point tunneling protocol) வழிமுறையைப் பின்பற்றி உங்கள் தகவல்களை கட்டமைத்து (data packets) பின்பு அவற்றை Internet protocol வழிமுறையில் மீண்டும் ஒருமுறை கட்டமைத்து இணையத்தில் ஏற்றி விடுவது வரை அனைத்து வேலைகளையும் செய்யும் சகலகலாவல்லவன். மொத்தத்தில் உங்கள் கணினியின் மென்பொருளுக்கும், வழங்கியின் மென்பொருளுக்கும் ஒரு ரகசியப்பாதை இணையத்தில் அமைக்கப்படும் (tunneling). இதனைத் தவிர, வீட்டைப் பூட்டி விட்டு பலமுறை பூட்டைப் பிடித்து தொங்கிப் பார்க்கும் நபர்களின் வசதிக்காகவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும் சங்கேதக் குறியீட்டுக்கான முறைகள் (Encryption), Firewall ஆகியவையும் பயன்படுத்தப்படுவதுண்டு (பார்க்க படம்).


இரண்டாவது வகை site to site VPN. இது கிட்டத்தட்ட முதல் வகை மாதிரி என்றாலும் அது இல்லை :D. எப்படி?. முதல் வகையில் ஒரு பக்கம் மட்டுமே வழங்கி (server) வலையமைப்பு இருக்கும். site to site VPN முறையில் இரண்டு பக்கமும் வலையமைப்பு, வழங்கி, Firewall போன்ற கட்டமைப்புகள் இருக்கும். மேலும் PPTPக்குப் பதிலாக IPsec (Internet protocol security protocol) என்னும் வழிமுறையினைப் பயன்படுத்தி தகவல்கள் இணையத்தில் ஏற்றப்படும். இவ்வேலையினைச் செய்வதற்கென பலவகை சிறப்பு உபகரணங்கள்(firewall & routers) இருக்கின்றன. இவ்வகை VPNகள் இணைய இணைப்பில் உள்ள இரண்டு பெரும் வலையமைப்புக்கள் பாதுகாப்பானத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.மூன்றாம் வகை 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்' வகை. அதாவது காசு போனா போகுது, நமக்குப் பாதுகாப்புத் தான் முக்கியம் என்று தம் பிடித்து நிற்பவர்களுக்கான வகை. point to point VPN, இது VPN மூலம் பிரத்யேக தொடர்பினை பேணும் முறை (leased line) பார்க்க படம். இதன் மூலம் உங்கள் பயன்பாட்டுக்கும் மட்டுமேயென தனியான வலைத்தொடர்பை இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் மூலம்(ISP) பெற்றுக் கொள்ளலாம். உங்கள் பணப்பை பத்திரம்.


நான்காம் வகை VPN வகையிn உச்சம். MPLS (multi protocol label switching) VPN, எனப்படும் இவ்வகை பயன்படுத்தும் MPLS வழிமுறையிலான தொடர்புமுறை மிக சக்திவாய்ந்தது, ஒரே நேரத்தில் பத்து மடங்குக்கும் அதிகமான பல்வேறு விதமான தகவல் தொடர்புகளை கையாளும் திறன் வாய்ந்த இத்தொழில்நுட்பம் Ipsilon, Cisco, IBM, and Toshiba ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு. இதன் மூலம் அதிவேகம் மற்றும் இலகுவாக கூடுதல் வலை மையங்களை உங்கள் VPN வலையமைப்பினுள் இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

ஒரு VPN வலையமைப்பினைக் கட்டியமைத்து நிர்வகிப்பதென்பது எளிதான விஷயமல்ல. முதல் காரணம் அதற்குத் தேவைப்படும் பல தளங்களில் செயல்படும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு. எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணையே புடுங்கிச் செல்லும் அசகாய சூரர்கள் நிறைந்த இணைய உலகத்தில் பாதுகாப்பு மிக அவசியம். காரணம் VPN கள் பெரும்பாலும் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி கணினிமயப்படுத்தப்பட்ட நாட்டின் அமைச்சகங்களும் கூட பயன்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் வழங்கியில் சேமித்து வைக்கும் தகவல்கள், பறிமாறப்படும் தகவல்கள் ஆகியவை பெரும்பாலும் மிக ரகசியமானவையாகவே இருக்கும்.


இப்படி ஏகப்பட்டத் தலைவலிகள் இருப்பதனால் இதற்கென பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களே சொந்தமாக வழங்கிகள் (data centers) வைத்து அவற்றின் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து உங்கள் நிறுவன வலையமைப்பிற்கு VPN மூலம் வழங்குவார்கள். அது போன்ற நிறுவனங்களிடம் தேவைப்படும் அனைத்து வகை தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிறப்பானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இருக்கும் அல்லது இருக்க வேண்டும் :). ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு சேவையினை வழங்கும் இவர்கள் தகவல் பாதுகாப்பிற்கான சிறப்பு ஒப்பந்தங்கள் மூலமே நிறுவனங்களுக்கான சேவையினை வழங்குவார்கள். இவ்வகைத் தொழில்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் என்றும் சிறப்பான காலம் உண்டு.

வெகுப் பரவலாகி வரும் VPN தொழில்நுட்பம், கணிணி மயமாக்கப்படும் அரசு அமைச்சகங்களுக்கான விருப்பத் தேர்வாக இருப்பதால், விரைவில் சாமன்யனுக்கும் கைக்கெட்டப்போகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அப்படி ஒரு கால கட்டத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாலுகா அலுவலகத்தில் நுழைந்து, PPTN, IP sec, Firewall, Encryption, Site to Site, MPLS என்று தொடர்ச்சியாக பல கேள்விகளைக் கேட்டுத் திணறடிப்பதற்கு இப்பதிவு உதவுமானால் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துக் கொண்டு சுடுதண்ணி விடைபெறுகிறது.


பி.கு: ஆறு மாதங்களாக கொதிக்காமல் இருந்தாலும், சுடுதண்ணியை மறக்காமல் நினைவில் வைத்து ஆதரவும், ஊக்கமும் தரும் அன்பர்களுக்கு நன்றி.. நன்றி... நன்றி..Virtual Private Network : VPN என்றால் என்ன? - 1


' Virtual Private Network என்பது எல்லாருக்கும் கேட்கிற மாதிரி ரகசியமாப் பேசுறது' என்று சொன்னால் கமலஹாசன் பேட்டி போல் ஆகிவிடும் என்பதால், சற்றே எளிமையாக, புரியும் படியாக VPN குறித்து இப்பதிவில் காண்போம்.

VPN சாமானியர்களுக்கு இன்னும் வசப்படவில்லையெனினும், நாளுக்கு நாள் ஊழல் தொகை பெருக்கத்துக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இருக்கும் போட்டியை வைத்துப் பார்க்கும் போது விரைவில் ரகசியமாய் டாஸ்மாக்கில் யாருக்கும் தெரியாமல் VPN மூலம் சரக்கு கொள்முதல் செய்து கொள்ளும் வசதி இலவசம் என்று தேர்தல் அறிக்கை வர வாய்ப்பிருக்கும் காரணத்தால், VPN என்று கேட்டவுடன் ஆச்சர்யப்பட்டு விடாமல் எகிறி அடிக்கும் வசதியை அளிக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையே இப்பதிவு.


VPN பற்றி விளக்கிச் சொல்ல உதாரணத்திற்கு ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் புதுமணத்தம்பதியர் எல்லாருக்கும் நடுவில் சங்கேதமாய் சில வார்த்தைகளில் பேசிக் கொள்வது தான் இத்தொழில்நுட்பத்தின் அடிப்படை விஞ்ஞானம். பொதுவில் கேட்பதற்கு சாதரணமாய்ப் பேசிக் கொள்வது போல் இருந்தாலும், பேசுபவருக்கும் - கேட்பவருக்கும் இடையில் அதற்கான புரிதலில் மின்சாரம் பொறி பறக்கும். இந்த விஷயத்தைத் தான், நம் தமில் பேசும் தொலைக்காட்சிகளில் ஏதாவது சில மொக்கைப் பாடல்களைத் திரும்பத் திரும்ப ஓட விட்டு, திரைக்கு அடியில் நேயர்களின் குறுந்தகவல்களை ஓட விடும் அளவுக்கு வளர்த்திருக்கிறார்கள். Hi kutti, I luv u, Good night - Neo" என்று குறுந்தகவல் ஒடினாலும் யார்,யாருக்கு கொடுக்கும் தகவல் என்பது அந்த குட்டிக்கும், நியொவுக்குமே வெளிச்சம். இப்படி 152 நாடுகளில் பார்க்கப்படும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் முழுமையான ரகசியாமாய் நம் கண் முன்னே எப்படி தகவல்கள் பறக்கின்றனவோ அதே போல் உலகமே கூடிக் கும்மியடிக்கும் இணையத்தினைப் பயன்படுத்தி ரகசியமாய், பிரத்யேகமாய்த் தொடர்பு கொள்வதே VPN தொழில்நுட்பம்.


வலையமைப்பில் தொடர்பு கொள்வதற்கு பல நூறு வரைமுறைகள் உள்ளன (Protocols), அவை தகவல் தொடர்புமுறைகளை நெறிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்பினையும் வழங்குகின்றன. அதுபோல் VPN செயல்பாட்டிற்கென பல பிரத்யேக வழிமுறைகள் உள்ளன, அவை மூலம் தகவல் அனுப்புபவரிடத்திலும், பெறுபவரிடத்திலும் தகவல்கள் அவர்களுக்கும் புரியும் வண்ணம் மாற்றி வழங்கப்படும். இவற்றுக்கென சிறப்பு உபகரணங்களும் உள்ளன.


அதெல்லாம் சரி, இ்தன் மூலம் யாருக்கு என்ன பயன்? எவருக்கு உதவுகிறது என்று போர்க்குரல் எழுப்பும் அன்பர்கள் சிறப்பானக் கைதட்டல்களை பெற்றுக் கொண்டு தொடர்ந்து படிக்கவும். இன்றைய பொருளாதார தாராளமயமாக்கலில் மொத்த பூமிப் பந்தும், கூகுளுக்குள் அட்ங்கிப் போனது போல், எல்லைகளின்றி தொழில் வளர்க்கும் பெரும் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்கள் உலகின் எந்த மூலையாக இருந்தாலும், உடனுக்குடன் ரகசியமாக தங்கள் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதற்கும், மென்பொருள் வல்லுநர்கள் வீட்டிலிருந்த படியே வெட்டி முறிப்பதற்கும், மிகச்சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் கணக்குப் பறிமாற்றத்திற்கும் கூட VPN தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றன.

VPN வருவதற்கு முன்னர் மேற்கூறியவையெல்லாம் நடக்காமல் இருக்கவில்லை. பிரத்யேக தொலைதொடர்பு முறையில் (leased line) நடந்தன, இருந்தாலும் அதற்கான செலவு மிக மிக அதிகம். இன்று VPN மூலம் சில்லறைச் செலவில் ஆலிவர் ரோட்டில் இருந்து கொண்டே மத்திய கிழக்கில் உள்ள etisalat நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய முடியும் :D, ரகசியமாக, பாதுகாப்பாக.

சாதாரணமாக இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் போது சங்கேதக் குறிப்பு முறையில் (encryption) பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள முடியும், இருந்தாலும் VPN எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது, இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, VPN தொழில் வாய்ப்புகள், ஆகியவை குறித்து அடுத்த பகுதியில் தொடரும்.