Russell Crowe - Ridley Scott
சர்வதேச சமூகம் கடந்த மாதத்தில் மூன்று ராபின் ஹூட்களைக் கண்டிருக்கிறது. முதலாவது, ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ராபின் ஹூட்டாக வந்து அசத்தியிருக்கும் ரசல் க்ரோவ். அந்த 'ask me, nicely' காட்சிக்காக மட்டுமே ஒருமுறை பார்க்கலாம். பார்க்காத அன்பர்கள் பார்த்து இன்புறவும்.
Christopher Coke
இரண்டாவது ஜமைக்காவின் 'வேலு நாயக்கர்', அமெரிக்காவின் 'ரவுடி கபாலி', "க்ரிஸ்டோபர் கோக்", செல்லமாக 'டுடுஸ்'. 'நாலு பேரு நல்லாருக்கணும்னா, நானூறு கொலை பண்ணாலும் தப்பில்ல' என்று வசனம் மட்டும் பேசாமல் போதை மருந்துக் கடத்தல்கள், கொலைகள் என சகல கலைத்திறன்களையும் பரம்பரை, பரம்பரையாகக் காட்டி அமெரிக்காவிற்கு சுடுதண்ணி கொடுத்து வெறியேற்றி வரும் குடும்பத்தின் இந்த தலைமுறை தான் க்ரிஸ்டோபர் கோக். கோக்கினைக் கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக, ஜமைக்காவின் காவல்துறை தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள் கோக் வீட்டு வாசலில் துப்பாக்கிச் சூட்டுடன் கூடிய போலீஸ், திருடன் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. கோக்கிற்காக விளையாடும் அணியினர் அனைவரும் கோக் மூலம் பயனடைந்த பொதுமக்கள் என்பது உபரித் தகவல். ஜமைக்காவின் பிரதமர் கோக்கின் நெருங்கிய தோழர் என்பது முக்கியச் சிரிப்பு :).
Ilmars Poikan
மூன்றாவது இப்பதிவின் தலைப்பு நாயகன், லாட்வியா நாட்டில் மக்களால் 'ராபின் ஹூட்' என்றும், இணையத்தில் 'நியொ' என்ற புனைப்பெயராலும் அறியப்படும் இமார்ஸ் பெய்க்கன். ஐரோப்பிய ஒன்றியத்தில் கடைசியாக இணைந்து, பொருளாதார வளர்ச்சியில் வேகமாக முன்னேறி, முதலிடத்தில் இருந்தது மட்டுமின்றி, சமீபத்திய பொருளாதார வீழ்ச்சியின் போது அதனினும் வேகமாக சரிந்து போன தருணங்களில் அனைவராலும் கவனிக்கப்பட்ட நாடு லாட்வியா. பொருளாதரத்தினை மீண்டும் தூக்கி நிறுத்தும் பொருட்டு, அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களின் ஊதியத்தில் 40 சதவிகிதம் முட்டுக் கொடுக்கப்பட்டது. இதனால் மக்களனைவரும் அவதிக்குள்ளானாலும், நாட்டு முன்னெற்றத்தின் பொருட்டு என்பதால் சகித்துக் கொண்டிருந்த நேரத்தில், லாட்வியா பல்கலைக்கழகத்தில் கணினித் துறையொன்றில் (artifricial intelligence) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்த திரு. இமார்ஸ் பெய்க்கன் (எ) நியோவுக்கு மட்டும் சிலபல சந்தேகங்களும், குறுகுறுப்புகளும் இருந்து வந்த காரணத்தால், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்க்காமல், அரசு வரி அலுவலகத்தின் இணையதளத்தினை பிரித்து மேய்ந்திருக்கிறார். அப்போது, அவர்களது வழங்கியில் இருக்கும் அறிக்கைக் கோப்புகளை அளிக்கும் நிரலொன்றின் பாதுகாப்புக் குறைப்பாட்டைக் கண்டதும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்திருக்கிறது.
சில பல வாரங்களுக்கு தனது கணினியில் ஒரு சிறப்பு நிரலொன்றினை எழுதி, பாதுகாப்புக் குறைப்பாட்டைப் பயன்படுத்தி, வழங்கியில் இருந்த சுமார் 70 லட்சம் ஊதிய அறிக்கைகளை அள்ளி முடித்தப் பின்பே நியோவுக்குத் தூக்கம் வந்தது. நடுநிசியில் தங்கள் இணையதளத்தின் பலுக்கப்பயன்பாடு எகிறுவதைக் கண்ட அரசு வரி அலுவலகத்தின் கணினி வல்லுநர்கள் என்னவோ நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்து கொள்ள முடிந்ததே தவிர அது என்னெவென்று அறுதியிட்டுச் சொல்ல முடியாததால் தங்கள் கோப்புக்களை மொத்தமாக முடக்கி விட்டு அமைதியாகி விட்டனர். இவர்கள் அமைதியாகி விட்டாலும் நியோவிற்கு தரவிறக்கம் செய்த கோப்புகளைப் படித்ததும், துடித்தது புஜம் (வயது 31). காரணம் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் யாருமே 40 சதவிகித ஊதியக் குறைப்பினை எடுத்துக் கொள்ளாமால், வழக்கம் போல ஊதியமும், அதற்கு மேலும் ஊக்கத்தொகைகளும் பெற்று வந்திருந்ததைக் கோப்புகள் சொல்லாமல் சொல்லியது. உடனே டிவிட்டர் தளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தனிமனிதக் குறிப்புகள் நீங்கலாக ஊதிய விவரங்களை தவணை முறையில் ஊதிவிட, லாட்வியா தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் நக்லா, நியோவின் டிவிட்டர் குறிப்புகளைத் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் சேர்க்க, இன்னும் போராட்ட உணர்வு குன்றிப் போகாத மக்களைக் கொண்ட லாட்வியாவில் அரசுக்கு எதிர்ப்பு வலுத்தது. அதிகார வர்க்கத்தின் அவலங்களை அம்பலமாக்கிவரும், நியோ தான் லாட்வியாவின் இன்றைய இளையத் தளபதி, தல ..இன்னும் பிற.
திணறிப் போன அரசு, யாரிந்த நியோ என்று நக்லாவின் வீட்டிலும், இணையத்திலும் அலசியதில் நியோ கைது செய்யப்பட்டார். கைது செய்து அடுத்த இரண்டு நாட்களும் மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனை விடுதலை செய்யக் கோரி தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்ததும், நியோ பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. நியோவின் கைதும், ஊடகத்துறையைச் சேர்ந்த நக்லாவின் வீடு சோதனையிடப்பட்டதும் அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது.
Loskutovs
இணையதளத்தின் பாதுகாப்புத் தடைகளைத் தகர்க்காமல், பாதுகாப்பில்லாத பக்கங்களை மட்டுமே சுட்டதாலும், தனி மனித தாக்குதல் இல்லாமல் தகவல்களை வெளியிட்டதாலும் பெரிதாக நியோவினைத் தண்டித்து விட முடியாது என்று லாட்வியாவின் சட்ட வல்லுநர்கள் கூறிவருவதும், லாட்வியாவின் முக்கியத் தலையும், வழக்கறிஞருமான திரு. லொஸ்குட்டொவ் (முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைவர்), நியோவின் வழக்கினை எடுத்து நடத்த முன்வந்திருப்பதும் சிறப்புக் குறிப்புகள் :).
அரசு இயந்திரங்கள் உட்பட சகலமும் கணினிமயமாக்கப்பட்டு வரும் இந்நாட்களில் லாட்வியாவில் நடந்திருக்கும் இச்சம்பவம் , எதிர்காலத்தின் புரட்சி வித்துக்கள் இணையத்திலும், தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாகவும் விதைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்திருப்பதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இணையதளத்தின் பாதுகாப்பு எந்தளவு முக்கியமானது, எதையெல்லாம் இணையத்தின் மூலம் வழங்கலாம் என்பதற்கான ஒரு படிப்பினையாகவும் நியோ விவகாரம் அலசப்பட்டு வருகிறது. உலகிலே அதிகம் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதையும், இணையத்தினை எப்படியெல்லாம் சமூக மாற்றங்களுக்கு மற்றவர்களுக்கு 'வலி'க்காமல் பயன்படுத்த முடியும் என்பதையும் வலியுறுத்திக் கூவிக் கொள்வதுடன் இப்பகிர்வு நிறைவடைகிறது.