Wednesday, December 30, 2009

இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 2 (முற்றும்)


நாம் பயன்படுத்துவது டிஜிட்டல் புகைப்படக் கருவிகளோ, செல்பேசிகளோ எதுவாக இருந்தாலும் அதது தங்கள் சக்திகேற்ப எடுக்கப்படும் புகைப்படங்களில் அனைத்து விவரங்களையும் exif metadata பகுதியில் விதைத்துவிடும். சில உயர்ரகக் கருவிகளில் GPS வசதியிருப்பின் புகைப்படம் எடுக்கப்படும் இடத்தின் விவரங்கள் கூட இலவச இணைப்பாக வழங்கப்படும்.

பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தங்கள் இணையதளத்தில் ஹேக்கிங் (hacking) குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரைக்காக அனுபவமிக்க ஒருவரிடம் பேட்டிக்குச் சென்ற போது அவர் தனது இருப்பிடம், பெயர் குறித்தான தகவல்கள் இன்றி வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையோடு பேட்டியளித்தார், சில முகம் தெரியாத புகைப்படங்களும் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன. ஆர்வக்கோளாரில் அப்படங்களின் exif metadata பகுதியினைப் பிரித்து மேய்ந்த சில வாசகர்கள் அந்த ஹேக்கரின் இருப்பிடத்தை வெளியிட்டு மகிழ்ந்தனர். இப்படிப் பல சம்பவங்களின் மூலம் புகைப்படங்களை இணையத்தில் பயன்படுத்தும் போது ரகசியத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்திலேயே இவை பார்க்கப்பட்டாலும் ஒரு சிலருக்கு இது மிகமிக உதவியாக இருக்கிறது. அவர்கள் தொழில்முறை புகைப்படக்காரர்கள். ஒரே காட்சியைப் பலவிதமான தொழில்நுட்ப நிலைகளில் (technical settings) படமெடுக்கும் இவர்களுக்கு, அவற்றைப் பின்னர் ஆராயும் போது மிக நன்றாக வந்திருக்கும் படங்களை எடுக்கும் போது என்னென்ன தொழில்நுட்ப நிலைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது மிக எளிது.

சரி, exif metadata பகுதியினைப் பார்வையிட பல மென்பொருட்கள் இணையமெங்கும் நீக்கமற நிறைந்த்திருக்கின்றன. கூகுளாடி தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தொடரில் irfanview என்ற இலவச மென்பொருள் மூலம் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழே இருக்கும் சுட்டிகளின் மூலம் irfanview மென்பொருளினையும், தேவையான கூடுதல் வசதிக்கான நிரல்களையும் (plugins) உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.




இப்பொழுது எந்தப் படத்தின் exif metadata பகுதியினைப் பார்வையிட வேண்டுமோ அப்படத்தை ifranview மென்பொருள் மூலம் திறக்கவும். பின்னர், image-> information -> EXIF info* என்ற இடத்திற்கு சென்றால் exif meta data பகுதியின் தரிசனம் கிடைக்கும் ( படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்).

இப்பொழுது பார்த்தாயிற்று, இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் முன் இவற்றை எப்படி அகற்றுவது?. புகைப்படங்கள் வெட்டுவதற்கு, சிறிதாக்குவதற்கு, பெரிதாக்குவதற்குப் பயன்படுத்தும் image processing வகை மென்பொருட்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். சில மென்பொருட்கள் தாமாகவே exif metadata பகுதியினை நீக்கிவிடும். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அவ்வாறு நிக்குகிறதா என்பதனை மேலே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அவற்றை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். நீக்கப்படாமல் இருப்பின் irfanview மென்பொருள் மூலமே அகற்றிவிடலாம். தேவையானப் புகைப்படத்தை irfanview மென்பொருளில் திறக்கவும். பின்னர் file->save as என்ற இடத்திற்கு சென்றால் சேமிக்கும் படிவத்திற்கு அருகில் சில வசதிகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் 'reset exif orientation tag' என்ற வசதியினைத் தேர்வு செய்து பின் சேமிக்கவும். அவ்வளவுதான் உங்கள் படம் இப்போது இணையத்தில் பகிர்ந்து கொள்ள தயார். கேதரின் நிலை ஏற்படாமலிருக்க ஒருமுறை thumbnail படத்தையும் சரிபார்த்துக் கொள்வது மிக்க நன்று.

இதுவரை சொன்னவை அனைத்தும் ஒரு பொதுவான பாதுகாப்பிற்கு மட்டுமே. தொழில்நுட்பங்கள் கண்டபடி வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எப்பொழுதுமே தங்கள் சொந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் முன் ரூம் போட்டு ஒரு முறைக்கு நாலு முறை யோசித்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது, முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள். இது தவிர புகைப்படங்கள் தவறான கைகளுக்கு சென்றால் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் :D.

மேலே உள்ள படம் இத்தொடரைப் படித்து அதன் மூலம் புரிதல் ஏற்பட்டவர்களுக்கான ஒரு சோதனைப் பயிற்சி. இப்படத்தின் exif meta data பகுதியினைப் பார்த்து உங்களுக்கு தெரியவரும் தகவல்களைப் பின்னூட்டத்தில் ஊட்டி விட்டால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு இத்தொடர் நிறைவடைகிறது. மேலதிக விபரங்கள் தேவைப்பட்டாலோ அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Monday, December 28, 2009

இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 1


மேலே இருக்கும் படத்தின் மூலம் நீவீர் அறியும் செய்தி என்ன?, அப்படின்னு யாராச்சும் கேட்டா, சாம் மாமாக்கள் ஆறு பேரு சேர்ந்து கேக் வெட்றாங்கன்னு சொல்லும் அனைவருக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

ஆனால் இணையத்தில் வெளியிடப்படும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் தான் என்பதற்குச் சிறிதும் உத்தரவாதமில்லை. சில வில்லங்கமான ஆசாமிகள் இப்படத்தைப் பார்த்தால் இந்தப் படம் நிக்கான் D300 புகைப்படக் கருவி மூலம் 11-06-2009 தேதியில் இரவு 12 மணி 10 வது வினாடியில், ஜே.டி. லெப்பெட் என்பவரால் எடுக்கப்பட்டது, எடுக்கும் போது புகைப்படக்கருவியில் ப்ளாஷ் அடித்திருக்கிறது. மறுநாள், அதாவது 12-06-2009 அன்று மாலை 4 மணி, 9 நிமிடம், 55வது வினாடியில் புகைப்படக்கருவியில் இருந்து தன்னோட கணினிக்கு தரவிறக்கம் செய்திருக்கிறார். முதல் நாள் கொண்டாட்டத்தில் சரக்கடிக்கும் பாக்கியம் பெற்றிருந்து, ஹாங் ஓவரால் பாதிக்கப்பட்டு இந்தத் தாமதம் நிகழ்ந்திருக்க அதிக சாத்தியம் இருக்கிறதென்று சொல்வார்கள். வெறும் படத்திலிருந்து எப்படி இவர்களால் இவ்வளவு தகவல்களைத் தர முடிகிறது?

நிற்க.

மேலே இருப்பவர் அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம், பெயர் கேதரின். இவருக்கும் நம்மைப் போலவே வீட்டில் கணினியும், இணைய இணைப்பும் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு தாங்கொனாத் துயரமடைந்து பதிவுகள் எழுத ஆரம்பித்தார். பிரபலம் என்பதால் பெரும்பாலும் தன்னைப் பற்றியப் பதிவுகளாகவே இருக்கும், கூட்டமும் களை கட்டும். இப்படி இன்பமயமாக இணைய அனுபவம் போய்க் கொண்டிருக்கையில், நானும் ரவுடிதான், எனக்கும் தம்மடிக்கத் தெரியும் என்று கீழே இருக்கும் சிகரெட் புடிக்கும் புகைப்படத்தைத் தனது பதிவில் வெளியிட்டார்.

பாவம், கேதரினுக்குப் புகைப்படம் எடுத்த இடத்தில் நல்ல காற்றோட்ட வசிதியில்லாத காரணத்தால் மேலாடை இல்லாமலே எடுத்தவர், கழுத்து வரைக்கும் புகைப்படத்தை வெட்டி, ஒரு நள்ளிரவில் தனது பதிவில் வெளியிட்டு விட்டு, தூங்கிப்போனார். ஆனால் இணையத்தில் அப்புகைப்படத்தைப் பார்த்தவர்கள் யாருமே அன்றிரவு சரியாகத் தூங்கவில்லை. காரணம், அவர் வெளியிட்ட புகைப்படத்தை தங்கள் கணினியில் தரவிறக்கம் செய்தவர்கள் அனைவருக்கும் அப்படத்தை thumbnail ஆக பார்க்கும் போது கேதரினின் காற்றோட்டமான படத்தைக் கண்டு காற்றுப்போன பலூன் ஆனார்கள் (இங்கே வெளியிடப்பட்டுள்ள படத்தில் அவ்வசதி இல்லை :D). கேதரின் இது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையென்றாலும் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இச்சம்பவத்திற்குப் பின் கொஞ்சம் உஷாரானார்கள்.

கேதரின் படத்தினை வெட்டி வெளியிட்டாலும், அப்படத்தின் thumbnail மாறவில்லை. ஏன்?

அனேகமாக இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் படங்கள் jpg வகை புகைப்படங்களே. இப்புகைப்படங்கள் டிஜிட்டல் புகைப்படக்கருவிகள் மூலமாகவோ அல்லது செல்பேசிகள் மூலமாக எடுக்கப்படும் போது மேலே சொல்லப்பட்டத் தகவல்கள் மற்றும் thumbnail சமாச்சாரங்கள் அனைத்தும் jpg கோப்பின் தலைப்பகுதியில் (jpg file header) இருக்கும் exif meta data என்ற பகுதியில் சேமிக்கப்படும். இவ்வாறு மறைமுகத் தகவல்கள் அடங்கிய புகைப்படத்தினை நாம் இணையத்தில் பகிரும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த exif meta data மூலம் புகைப்படக் கருவியின் தகவல்கள், படம் எடுக்கப்பட்ட நேரம், என்ன resolutionல் எடுக்கப்பட்டது, ப்ளாஷ் ஒளி அடித்ததா, இல்லையா, focal length எவ்வளவு, இன்னும் பல நுணுக்கமானத் தகவல்கள் அனைத்தயும் அறியலாம். தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் எளிதில் பகிர்ந்து கொள்ளாத புகைப்படம் குறித்தான தொழில்நுட்பத் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும். சரி exif meta data பகுதியினை நாம் எப்படிக் காண்பது? இணையத்தில் புகைப்படங்களை வெளியிடும் முன் இந்தத் தகவல்களை எப்படி நீக்குவது? போன்ற கேள்விகளுக்கான விடைகள் அடுத்த பகுதியில்...


Monday, December 21, 2009

கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)


இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு தளமும், பதிவுகளும் கிட்டத்தட்ட மேலே படத்தில் இருக்கும் கண்ணாடி அறை போலத்தான். வருகையாளர்கள் உங்கள் படைப்புகளைப் பார்க்க முடியுமே தவிர உள்ளிருக்கும் உங்களை அல்ல. உங்களால் வருகையாளர்கள் எவற்றைக் கவனிக்கிறார்கள், எந்தப் படைப்புகள் பெரும்பாலோனோரை ஈர்க்கிறது, எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு உங்கள் தளமோ/பதிவோ குறித்து எப்படி தெரிந்து கொண்டார்கள் ஆகியவற்றை உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளாமலே கண்டுகொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பதிவினைப் பார்ப்பவர்களின் பார்வையினை அலசிக் காயப்போட்டு நீங்களே தங்கள் பதிவினை சுயப்பரிசோதனை செய்து சலவை செய்து வெளுப்பாக்கிக் கொள்ள முடியும்.

இப்படி தங்கள் பதிவைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. முதலில் முக்கியமான ஒன்றான, உங்கள் பதிவுக்கு தங்கள் தளங்கள்/பதிவுகளில் உரல் கொடுத்துள்ள நல்ல உள்ளங்கள் யார், யார் என்பதை எப்படி அறிவது?, கூகுளுக்குச் சென்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் "link: yourblogname. blogspot.com" என்று மனு போட்டால் மறுகணம் தகவல்களைப் பெறலாம்.

இவற்றைத் தவிர நமக்கு உதவும் பொருட்டு கூகுள் இலவசமாக வழங்கும் இரண்டு சேவைகள் குறித்து பார்ப்போம். உங்கள் தளத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது, கூகுளின் crawler நிரல் உங்கள் பதிவுக்கு வந்து போன விவரம் ஆகியவைக் குறித்து அறிந்து கொள்ள google webmasters மற்றும் வருகையாளர்கள் குறித்தான அலசலுக்கு google analytics.

Google webmaster சேவையினைப் பயன்படுத்த உங்கள் ப்ளாக்கர் பதிவின் dashboard -> tools and resources -> webmaster tools -> enable webmaster tools என்ற இடத்திற்கு சென்று உங்கள் பதிவை இணைத்துக் கொள்ளலாம். அல்லது http://www.google.com/webmasters/ என்ற உரலுக்குச் சென்று adding a site -> verfiy through meta tags வசதியின் மூலமும் உங்கள் பதிவினை இணைத்துக் கொள்ளலாம். பின்னர் அதிலுள்ள வசதிகள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து பார்த்து சில நாட்கள் விளையாண்டால் ஓரளவு அனைத்து விவரங்களும் கைவரப்பெறலாம்.

அதே போல் google analytics சேவையினைப் பயன்படுத்த http://www.google.com/analytics/ என்ற உரலுக்குச் சென்று add new website profile என்பதைத் தேர்வு செய்து உங்கள் பதிவின் உரலை உள்ளிடவும். உடனே உங்கள் பதிவுக்கான நிரல் ஒன்று வழங்கப்படும். நிரலுக்கு அருகில் 'one domain with multiple subdomains' என்பதைத் தேர்வு செய்து விட்டு அதன் பின் நிரலை பிரதியெடுத்து உங்கள் பதிவின் 'dashboard -> layout -> edit html' என்ற இடத்திற்கு சென்று < / body > என்ற இடத்திற்கு முன்பாக உள்ளிட்டு சேமித்து விட்டால் வேலை முடிந்த்தது. 24 மணி நேரம் கழித்து google analytics சென்று பார்த்தால் வருகையாளர்க்ள் புருவம் உயரும் வண்ணம் விவரங்கள் காணலாம்.

மேற்சொன்ன இரண்டு சேவைகளுமே இலவசம் மற்றும் உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலமே பதிவு செய்து கொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு. இவற்றைப் பயன்படுத்தி வீடுபேறு அடைந்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பின்னூட்டத்தில பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அல்லது வழக்கம் போல் மவுனமாகப் பயனடைந்தால் மிகமிக மகிழ்ச்சி.

கடைசியாக google sandbox effect குறித்து ஒரு சிறு அறிமுகம் (நன்றி: புதுவை சிவா).தேடுபொறிகள் தரப்படுத்தப் பயன்படுத்தும் நிரல்களே அவர்களின் தொழில்ரகசியம். அவற்றைப் பற்றி எப்போதும் வெளிப்படையானத் தகவல்கள் காணக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் பல தளங்களை நடத்தி வருகிறார். மேலும் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். புதிய தளத்தினை தேடுபொறிகளின் தரப்பட்டியலில் குபீரென்று மேலே கொண்டு செல்ல புதிய தளத்தின் உரல்களைத் தன் வசமுள்ள தளங்கள் அனைத்திலும் இடுகிறார். இவ்வாறு திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே மாபெரும் வெற்றி என விளம்பரங்கள் வருவதைப் போல குறுகிய கால அவகாசத்தில் தரப்பட்டியலில் அசாதரணமாக முன்னேறும் தளங்களை கூகுள் வேண்டுமென்றே 3 முதல் 6 மாதங்கள் வரை அடக்கி வைக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது, அதற்கு பெயர் தான் sandbox effect. இதில் இருந்து தப்பிக்க பொறுமையாக 6 மாதம் பார்க், பீச் என்று ஊர்சுற்றி விட்டு வந்தால் தவிர வேறு வழியில்லை. எல்லா தளங்களுக்கும் இது போல நிகழ்வதில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கூகுள் 'எங்களின் நிரல்களின் செயல்பாட்டில் சிலக் குறிப்பிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு இவ்வாறு நேர வாய்ப்பிருக்கலாம், இது குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்' என்று பட்டும் படமாலும், தொட்டும் தொடாமலும் பொறுப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது.

இப்பகுதியோடு இத்தொடர் நிறைவு பெறுகிறது. தேடுபொறிகளில் தங்கள் பதிவுகளை உயர்த்திக் காட்ட விரும்பும் அன்பர்களின் பயனுக்கும், தேடுபொறிகளின் செயல்பாடு குறித்தான புரிதலுக்கும் இத்தொடர் உதவியிருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கும், கம்பெனிக்குத் தெம்பூட்டும் விதத்தில் பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் சுடுதண்ணியின் நன்றிகள்.

மேலதிக விவரங்கள் தேவைப்பட்டாலோ அல்லது சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Thursday, December 17, 2009

கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 2


தேடுபொறிகள் எப்படி செயல்படுகிறது, வலைத்தளங்களை எப்படி தரப்படுத்துகிறது, SEO அப்படின்னா என்ன போன்ற வறட்சியான விஷயங்களை போன பகுதியில் விரிவாகப் பார்த்து விட்டதால் இந்த ப்குதியில் ஒரு ப்ளாக்கர் பதிவை எப்படி தேடுபொறியின் பார்வையில் மேம்படுத்திக் காட்டுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலில் தேடுபொறிகள் ஒரு ப்ளாக்கர் பதிவைத் தரப்படுத்துவதற்கு ஆராயும் போது எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே மற்ற வேலைகள் மிக மிக எளிது. உங்கள் பதிவின் தலைப்பு (உ.தா. சுடுதண்ணி), ஓவ்வொரு இடுகைக்கும் அளிக்கும் தலைப்பு, இடுகைகளில் வழங்கும் படங்கள், எத்தனை பேர் உங்கள் பதிவுக்கு வருகை தருகிறார்கள், எத்தனை பேர் உங்கள் பதிவினை தொடர்கிறார்கள், நீங்கள் எத்தனை பேரைத் தொடர்கிறீர்கள், பெறும் பின்னூட்டங்கள், சீரான கால இடைவெளியில் புதுப்புது பதிவுகள் வெளியிடப்படுகிறதா மற்றும் அதன் தனித்தன்மை, உங்கள் பதிவுக்கு மற்ற தளங்களில் இருந்து உரல் மூலம் தொடர்புப் படுத்தப்பட்டு இருக்கிறதா, உங்கள் பதிவின் meta tags மூலம் நீங்கள் வழங்கியிருக்கும் குறிச்சொற்கள், இவையனைத்தும் தேடுபொறிகள் உங்கள் பதிவைத் தரப்படுத்துவதற்குக் காரணியாக விளங்குவதில் முக்கியமான விஷயங்கள்.

பெரும்பாலான பதிவர்கள் தங்கள் பதிவின் தலைப்பைப் (blog title) பெரும்பாலும் தாங்கள் எழுதும் விஷயங்களுக்கு தொடர்புப்படுத்தி வைப்பதில்லை, உதாரணம் சுடுதண்ணி :D. அதிகமாக எண்ணங்கள், கிறுக்கல், பிதற்றல், உளறல், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை, மன உளைச்சல் போன்ற தலைப்புகளை ஆங்காங்கே காணப்பெறலாம். ஆகவே முதலில் செய்ய வேண்டிய விஷயம் உங்கள் தலைப்பில் நீங்கள் எழுதும் விஷயங்களோடு தொடர்பு உள்ளதாக வைத்துக் கொள்வதை (சுடுதண்ணிக்குத் தலைப்பை மாற்றும் திட்டமேதும் இல்லாத காரணத்தால்) மற்றவர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல் ஓவ்வொரு இடுகைக்கும் வைக்கும் தலைப்பும் (post title) மிக முக்கியம். சிறுகதை, கவிதை எழுதும் பதிவர்கள் தங்கள் தலைப்பின் இறுதியில் சிறுகதை அல்லது கவிதைப் போன்ற வார்த்தைகளைச் சேர்த்தால் தேடுபொறிகளில் சிறுகதை, கவிதை போன்ற குறிச்சொற்களைத் தேடும் அன்பர்களுக்கு உங்கள் பதிவின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெறுவார்கள்.


பின்னூட்டங்கள், பதிவினைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் தொடரும் எண்ணிக்கை, மற்ற பதிவுகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ உங்கள் பதிவிற்கு தொடர்பு உரல்கள் ஆகியவை உங்கள் பதிவின் நம்பகத்தன்மையினை அதிகரிக்கும் காரணிகள். இங்கு பின்னூட்டங்கள் என்பது தனித்துவமாக எத்தனை பதிவர்கள் பின்னூட்டங்கள் வழங்குகிறார்கள் என்பதாகும்.. ஒரே நபரோ அல்லது குழுவோ செய்யும் பின்னூட்டக்கும்மிக்கு எந்த பயனும் இல்லை. மேலும் பளாக்கர் தளம் கிட்டத்தட்ட ஆர்குட் போல ஒரு சமூக வலையமைப்புத் தளம் என்பதனை நினைவில் கொள்ளவும். உங்கள் பதிவு எத்தனை மற்ற பதிவுகளைத் தொடர்கிறது மற்றும் எத்தனைப் பதிவுகள் உங்களைத் தொடர்கின்றன, அவ்வாறு தொடர்புகளை இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளின் உள்ளடக்கம் (content) எவ்வாறு உங்கள் பதிவின் உள்ளடக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது போன்ற இன்னபிற விஷயங்களின் அடிப்படையில் உங்கள் பதிவின் தரம் எடை போடப்படும். இந்த விஷயத்தில் தான் தேடுபொறிகளின் பார்வையில் சாதரண இணையத்தளங்களிலிர்ந்து பதிவுகள் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு நீங்கள் கவிதை எழுதும் பதிவு வைத்திருந்தால், மற்ற கவிதைகள் எழுதும் பதிவுகளோடு தொடர்பு படுத்தப் பட்டிருப்பின் சிறப்பு. அவ்வாறு தொடர்புப் படுத்தப்பட்டிருக்கும் பதிவுகள் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் உங்கள் பதிவினை விட சிறப்பானதாக இருந்தால் மிகமிகச்சிறப்பு.

அடுத்து ஒரு பதிவராக உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது (active blogger) . எத்தனை நாளைக்கு ஒரு முறை உங்கள் பதிவில் புது இடுகைகள் பதிவேற்றப்படுகிறது, எத்தனை பின்னூட்டங்கள் போன்ற விஷயங்களும் கணக்கில் கொள்ளப்படுகிறது. தரப்படுத்துதலில் மிகவும் சக்திவாய்ந்த காரணியாகக் கருதப்படுவது மற்ற தளங்கள் அல்லது பதிவுகளில் இருந்து உங்கள் பதிவுக்குக் கொடுக்கப்படும் சுட்டிகள் அல்லது உரல்கள் தான். சில தொழில்முறைப் பதிவர்கள் தேடுபொறியின் தரப்பட்டியலில் முன்னேறும் பொருட்டு நட்பு முறையில் அவருக்கு இவரும், இவருக்கு அவரும் சுட்டிகள் கொடுத்துக் கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு விஷயத்திற்கு மதிப்பதிகம் என்று அறிந்தால் அன்றே அதைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது தான் கண்ணுக்கும், பர்சுக்கும் அழகென்பதால், பணம் வருடச் சந்தா செலுத்தினால் உங்களின் சுட்டியை தங்கள் தளத்தில் வெளியிடும் தளங்கள் நிறைய உள்ளன. தேடுபொறிகளைச் சார்ந்து இருக்கும் பல தொழில்களில் இதுவும் ஒன்று.

அடுத்துப் பார்க்கப் போவது பதிவுகளில் படங்கள் வழங்குவது மற்றும் meta tags. பொதுவாக தேடுபொறிகள் உங்கள் பதிவினை ஆய்வு செய்யும் போது படங்களை அவற்றின் கோப்புப் பெயர் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட குறிச்சொற்களையுமே எடுத்துக் கொள்ளும். எனவே படங்களை இணைக்கும் பொழுது கோப்பின் பெயர் படம் விளக்கும் சங்கதியை ஒத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படங்களை இணைத்த பிறகு EDIT HTML பகுதிக்கு சென்று கீழ்காணும் முறையில் அப்படத்திற்கானக் குறிச்சொற்களை வழங்கலாம்.

< src="test.gif" width="25" height="25" alt="Place your keyword list here">

அதே போல் meta tag மூலம் உங்கள் பதிவிற்கு பொதுவாக என்னென்ன குறிச்சொற்கள் கொடுக்க விரும்புகிறீர்களோ அதனை வழங்கலாம். meta tag மூலம் கொடுக்கப்படும் குறிச்சொற்களுக்கு முக்கியத்துவம் கொஞ்சம் கம்மி என்றாலும், அவற்றையும் தேடுபொறிகள் அலசுவதால் கீழ்காணும் முறையில் dashboard -> layout -> edit html சென்று < /head >முன்பாக வழங்கி மகிழலாம்.

< equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
< name="DESCRIPTION" content="meta description goes here which appears in search results ">
< name="KEYWORDS" content="your keywords,go here,separated by a comma,but not a space">


இவ்வளவும் செய்தாலும் எப்போது உங்கள் தளமோ அல்லது பதிவோ தேடுபொறிகளின் தரப்பட்டியலில் மேலே வரும் என்பது தேவரகசியம். சிலவாரங்கள், மாதங்கள், சமயத்தில் வருடங்கள் கூட ஆகலாம். பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றும் வேலையைச் செய்து கொண்டே காத்திருக்க வேண்டியது தான். தேடுபொறிகள் ப்ளாக்கர் பதிவுகளை விட இணையத்தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரியாக மேம்படுத்துதல் மற்றும் உங்கள் தகவல்களின் தனித்துவத்தாலும் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் இணையதளங்களைத் தாண்டி பதிவுகள் முன்னெறுவது மிக எளிது உ.தா: வகுப்பறை, டொரண்ட் போன்ற குறிச்சொற்களை வைத்து கூகுளில் தேடிப் பாருங்கள்.

இணையத்தில் இருக்கும் எண்ணற்ற தளங்களை, பதிவுகளை தேடுபொறிகள் எப்படி ஆய்வு செய்வது சாத்தியமாகிறது?. ஓவ்வொரு தேடுபொறிக்கும் crawler எனப்படும் நிரல் இருக்கும். இந்த நிரல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் அட்டவணையில் இருக்கும் தளங்களுக்கு வருகை தந்து தரப்படுத்தத் தேவையான தகவல்களைத் திரட்டிச் செல்லும். கூகுளின் crawler நிரல்களின் செய்ல்பாட்டை எப்படி அறிவது? எப்போதெல்லாம் உங்கள் தளத்திற்கு வந்து செல்கிறது, என்னென்ன குறிச்சொற்கள் மூலம் உங்கள் பதிவை தேடுபொறிகள் மூலம் வருகையாளர்கள் வந்தடைகிறார்கள் போன்றவற்றையெல்லாம் அறிந்து கொள்வது உங்கள் பதிவினை தேடுபொறிகளின் பார்வையில் மேம்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும். இவற்றை அறியும் முறைகள் அதற்கு கூகுள் எப்படி உதவுகிறது போன்றவை குறித்து அடுத்த பகுதியில்...

Wednesday, December 16, 2009

கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 1

எப்போதாவது முன்பின் தெரியாத ஊரில் முகவரியில்லாமல் யாரையாவது தேடிய அனுபவம் அல்லது திரைப்படங்கள் குறித்தான அரட்டையின் போது மனதில் நிற்கும் துணைக் கதாப்பாத்திரத்தின் பெயர் தெரியாமல் தவிப்பது இப்படி வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நிறைய விஷயங்களைத் தேடியே தொலைந்து போயிருப்போம். அது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்குக் கைகொடுப்பது தான் குறிச்சொற்கள். தேடும் நபரை கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருப்பாரே, என்பீல்ட் புல்லட்ல போவாரே என்றோ, கரகாட்டக்காரன் படத்துல கனகா அப்பாவா வருவாரே என்றோ நிச்சயம் அடையாளம் சொல்ல முயற்சித்திருப்போம். இவற்றுள் "கருப்பு, பயங்கரம், என்பீல்ட் புல்லட், கரகாட்டக்காரன், கனகா அப்பா" ஆகியவை தான் குறிச்சொற்கள்.

இணையம் என்பது கிட்டத்தட்ட மேல்திருப்பதி மாதிரி. நாம் தேடும் மொட்டைத்தலையைக் கண்டுபிடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டமான வேலைக்குத் தோள் கொடுக்கும் தோழன் தான் தேடுபொறிகள் (search engines). தேடுபொறிகள் எப்படி செயல்படுகின்றன?. தேடுபொறிகள் தங்களுக்கென பிரத்யேகமான அட்டவணையைப் பராமரித்து வருகின்றன. அந்த அட்டவணையில் இணையத்தளங்களின் உரல்களும், அவற்றின் குறிச்சொற்கள் மற்றும் பொதுத்தகவல்கள் ஆகியவை சேமிக்கப்பட்டிருக்கும். நாம் தேடுபொறிகளில் தேடும் போது பயன்படுத்தும் சொற்கள் எந்தெந்த இணையத்தளத்தின் குறிச்சொற்களுடன் ஒத்துப்போகிறதோ அவற்றைத் தான் நாம் தேடல் முடிவுகளாகக் காண்கிறோம்.

இந்த தேடல் முடிவுகள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் தான் அளிக்கப்படுகின்றன. எப்படி? ஒவ்வொரு இணையத்தளத்தையும் தேடுபொறிகள் மதிப்பீடு (site rank) செய்து வரிசைப்படுத்துகின்றன. இந்த மதிப்பீடு ஒரு இணையத்தளத்தின் சராசரி வருகையாளர் எண்ணிக்கை, பக்கங்களின் கட்டமைப்பு, குறிச்சொற்களுக்கும் பக்கங்களின் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு, மற்ற தளங்களில் இருந்து தொடர்புக்கு கொடுக்கப்படும் உரல்கள் ஆகியவற்றை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. sms ஜோக்குகளுக்கு நடிகர் விஜய் எவ்வளவு முக்கியமோ அதைவிட இணையத்தளங்களுக்கு வருகையாளர்கள் முக்கியம். இன்றைய இணையப்பயன்பாட்டில் பெரும்பாலான வருகைகள் தேடுபொறிகள் மூலமே கிடைப்பதனால் இணையத்தில் குறிச்சொற்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

தேடுபொறிகள் பார்வையில் ஒரு இணையத்தளம் எவ்வாறு தெரியும்?. உரல்களும், குறிச்சொற்களும் சேர்ந்த ஒரு கலவையாக மட்டுமே பார்க்கப்படும். அதனால் தான் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் குறிச்சொற்கள் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பொருட்களைச் சந்தைப்படுத்தும் இணையத்தளங்களுக்கு இவைதான் உயிர். இணையத்தளத்திற்கு சரியான குறிச்சொற்களைத் தேர்ந்தெடுத்தல், இணையத்தளத்தின் பக்கங்களுடைய தொடர் கட்டமைப்பு (sitemap) மற்றும் தேடுபொறிகளின் முடிவுகளில் முதல் இடத்தை அல்லது குறைந்த பட்சம் முதல் பக்கத்திலாவது இடம்பிடிப்பது போன்ற வேலையைச் செய்வதற்கென்றே ஒரு துறை இருக்கிறது (search engine optimization).

இங்கு இணையத்தளங்கள் என்று குறிப்பிடப்படும் வார்த்தையில் ப்ளாக்கர் பதிவுகளும் அடங்கும். அம்மா என்றால் அன்பு என்பது போல தேடுபொறி என்றால் முதலிடத்தில் கூகுள் இலகுவாக வந்து நிற்பது தவிர்க்கமுடியாத ஒன்று. கூகுள் இணையத்தளம் ஒரு நாள் முடக்கப்பட்டால் இணைய உலகம் உடுக்கை இழந்தவன் கைபோல் தவித்துப் போய்விடும் அளவுக்கு இணையத்தில் கூகுளின் வீச்சு அதிகம். ஒரு ப்ளாக்கர் பதிவராக உங்கள் பதிவுகளும் தேடுபொறிகளில் நல்ல இடத்தைத் துண்டு போட்டு பிடிக்க என்ன செய்வது? முக்கியமாக கூகுளின் பார்வையில் உங்கள் பதிவுகளை மேம்படுத்துவது எப்படி?.

முதலில் ப்ளாக்கர் இணையத்தளத்தில் பதிவைத் துவங்குவதன் மூலமாக உங்கள் பதிவின் பெயர் தேடுபொறியில் குறிச்சொல்லாக சேர்க்கப்பட்டு விடுகிறது. மேலும் நீங்கள் இணைந்து கொள்ளும் திரட்டிகளின் வாயிலாக உங்கள் பதிவின் தலைப்புகள் மற்றும் லேபிள்கள் குறிச்சொற்களாக சேர்க்கப்படுகின்றன. இருந்தாலும் தேடுபொறிகள் மூலம் பெறப்படும் வருகையாளர்களுக்கு உங்கள் பதிவுகளுக்கு திரட்டிகளின் மூலமாகவோ அல்லது ப்ளாக்கர் தளத்தின் மூலமாகவோ சேர்க்கப்படும் குறிச்சொற்கள் நீங்கள் எழுதும் தகவலகளை எந்த அளவுக்கு சம்பந்தப்படுத்திக் காட்டும் என்பது நிச்சயமில்லை. தரமான குறிச்சொற்களின் மூலம் தேடுபொறிகளின் மூலம் உங்கள் பதிவுகளைத் தேவையான பயனாளர்களுக்கு எளிதாக சேர்க்கலாம். இந்த குறிச்சொற்களை நம் விருப்பத்திற்கேற்ப நாமே நமது பதிவுகளுக்கு எப்படி வழங்குவது? குறிச்சொற்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? இவற்றுக்கு கூகுள் எவ்வாறு உதவுகிறது போன்றவைப் பற்றி அடுத்த பகுதியில்.....

Wednesday, December 9, 2009

மர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி -2 (முற்றும்)


ஒரு விமானத்தின் கருப்புப் பெட்டி அந்த விமானத்தை இயக்கும் நிறுவனத்தின் சொத்து. அதில் உள்ள தகவல்கள் குறித்து அந்த விமான நிறுவனத்துக்கும் விபத்து நடந்த நாட்டைச் சேர்ந்த விசாரணைக்குழுவுக்குமே முழு அதிகாரம் உண்டு. அவர்கள் விரும்பினால் வெளியிடலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, காக்கா மோதியதால், மோசமான வானிலை காரணமாக என்று மிளகாய் அரைக்கப்படலாம். அவை விபத்துக் காரணங்களில் உள்ள வில்லங்கத்தைப் பொறுத்தது. விமான விபத்து என்பது பெரும்பாலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கருப்புப்பெட்டித் தகவல்கள் அதிமுக்கியம் வாய்ந்தவையாக கருதப்படும்.

ஒரு கருப்புப்பெட்டி எந்த ஒரு நிலையிலும் கடந்த 25 மணி நேர விமானத் தகவலும், 30 நிமிட விமானி அறையின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். கருப்புப்பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்றுகளும், பூஜ்யங்களுமாகவே இருக்கும் (Binary Format). கருப்புப்பெட்டியில் இருக்கும் மெமரி, data frame எனப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த data frame பகுதிகளில் தகவல் சேமிப்பதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஒரு data frame என்பது 48 bits கொண்ட ஒரு binary word ஆக இருக்கும். இதற்கும் மேலாக இந்த data frame தன்னிடத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒன்றுகளும், பூஜ்யங்களும் விமானத்தகவல்களில் எதைக் குறிக்கின்றன, எந்த வரிசையில் குறிக்கின்றன (உயரம், நேரம், இயந்திரங்களின் நிலைகள்) இவையெல்லாம் பற்றிய தகவல் கோர்வையே data frame layout என்று அழைக்கப்படுகிறது. கருப்புப்பெட்டி மெமரியின் data frame layout பற்றித் தெரியாமல் ஒருவர் அதிலுள்ள தகவல்களைப் பார்த்தால் வெறும் ஒன்றுகளும் பூஜ்யங்களுமாகத் தான் தெரியும்.

கருப்புப்பெட்டி உலகில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனங்கள் சர்வதேச வரைமுறைகளின் படி தயாரித்தாலும். data frame layout என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எனவே எந்த ஒரு விமான சேவை நிறுவனமும் தாங்கள் இயக்கும் அனைத்து விமானங்களிலும் இருக்கும் கருப்புப்பெட்டி குறித்தான தகவல்கள் மற்றும் அவற்றின் data frame layout ஆகியவ்ற்றை உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். விபத்து நடந்த பின் கருப்புப்பெட்டித் தகவல்களின்றி தலை சொரியும் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் உரிமத்தைக் கூட இழக்க நேரிடும்.

எப்பொழுதுமே இந்த கருப்புப்பெட்டி செய்திகளில் அடிபடும் போதெல்லாம் கூர்ந்து கவனித்தால் விபத்து குறித்த தகவல்கள் தெரிவிக்க பத்து நாட்களாகும், ஒரு மாதமாகும் என்று சொல்லுவார்கள். ஏன்?. உண்மையில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்கள் கணினிகளில் சில நிமிடங்களில் மேலே படத்தில் உள்ள கருவி (Blackbox readout interface module) மூலம் சேமிக்கப்படும். மற்ற ஒன்பது நாட்களும் சேமித்த தகவல்கள் அனைத்தையும் மீள்கட்டமைப்பு (decoding) செய்வதிலே தான் செலவாகும். இந்த தகவல்களை மீள்கட்டமைப்பு செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. அதைச் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். விபத்துக்குள்ளான விமானத் தயாரிப்பு நிறுவனம், விசாரணைக் குழு, விமானத்தின் உரிமையாளர்/நிறுவனம் இவர்கள் அனைவரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தான் தகவல்களை மீள்கட்டமைப்பார்கள். தொழில்நுட்ப ஆலோசனைகளை உடனுக்குடனே பெறவும், தகவல் பறிமாற்றம் எளிதாக நடக்கவுமே இந்த ஏற்பாடு.



இவை அனைத்துக்கும் மேலே கருப்புப்பெட்டி விபத்துக்குப்பின் கண்டுப்பிடிக்கப்படும் போது உள்ள நிலையும் தாமதத்திற்குக் காரணமாக அமையும். பெரும்பாலும் அடிவாங்கிய சொம்பு போல தான் கருப்புப்பெட்டி கிடைக்கும். சில சமயங்களில் மெமரி போர்டுகளும் பாதிப்படைவதுண்டு. தண்ணீருக்குள் இருந்து கண்டெடுக்கப்படும் கருப்புப்பெட்டிகள் ஆய்வு மையங்களுக்கு அனுப்பப்படும் போது beacon கருவியை நீக்கிவிட்டு ஒரு தண்ணீர் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்தே அனுப்புவது வழக்கம். ஈரம் உலர்வதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஆய்வு மையத்தை அடைந்ததும் கருப்புப்பெட்டித் திறக்கப்பட்டு மெமரி போர்டுகளுக்கு முதலுதவி அளித்து, பாதிக்கப்பட்ட உதிரி பாகங்களை மாற்றி தகவல்களை மீட்டெடுப்பார்கள்.

இந்த கருப்புப்பெட்டி ஆய்வகம் அமைப்பதென்பது எளிதானது தான் என்றாலும் அதற்குரிய நிபுணர்கள் உலகளவில் மிகக்குறைவு. மேலும் அனுபவமிக்க நிபுணர்கள் மிகமிகக் குறைவு. மேலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் நிபுணர்கள் அவ்வப்போது கருப்புப்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்து நாங்களும் யூத்து தான் என்று சொல்ல முடிந்தால் மிக நன்று. இந்த ஆய்வக வசதிகள் உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ளன?

நைஜீரியா,தென்னாப்பிரிக்கா,ரஷ்யா, இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, தென் கொரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, சால்வடர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா என கோபால் பல்பொடி கிடைக்கும் அனைத்து நாடுகளிலும் கருப்புப்பெட்டி ஆய்வகங்களும் இருப்பது தனிச்சிறப்பு.

மற்ற நாடுகள் தங்கள் நாட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மேற்கூறிய நாடுகளில் ஒன்றுக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்குவார்கள். அதுபோக கைப்பற்றப்பட்டக் கருப்புப்பெட்டியின் நிலைமை, ஆய்வக வசதி இருந்தாலும் அந்நாட்டின் நிபுணர்களின் அனுபவம், மெமரி போர்ட் பாதிப்புகள் ஆகியவற்றைப் பொருத்து அனுபவமிக்க நாடுகளுக்கு அனுப்புவதும் உண்டு. கருப்புப்பெட்டி விபத்து மர்மங்களுக்கு அருமருந்தாக இருப்பதை அனுபவத்தில் உணர்ந்து கார் தயாரிப்பாளர்கள் பல உயர்ரக கார்களிலும் கூட கருப்புப்பெட்டி பொருத்தத் துவங்கினர் உ.தா. pontiac sunfire.

கடந்த இரண்டு பகுதிகளிலும் கருப்புப்பெட்டி குறித்து தெரிந்தவற்றைப் புரியும்படி சொல்லியிருப்பதாக நினைக்கிறேன். எதிர்வரும் காலங்களில் கருப்புப்பெட்டி அல்லது விமான விபத்துகள் பற்றிய செய்திகளை நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்களின் பார்வை மாறியிருக்கும். அப்படி மாற்றுவதே இப்பதிவின் நோக்கம். ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கு நன்றி கூறி இத்தொடர் நிறைவடைகிறது.


Monday, December 7, 2009

மர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி - 1

இப்பதிவை எழுதும் எண்ணத்தை விதைத்த நண்பர் சென்ஷி அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

சில மாதங்களுக்கு முன்பு கொடியில் போட்டிருந்த பாவாடையைக் காணோம் என்பதைப் போல, விரைவில் வல்லரசாக காம்ப்ளான் குடித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் ஒரு ஹெலிகாப்டரைக் காணோம் என்று ஊடகங்களில் அலறியதை மறந்திருக்க மாட்டீர்கள். விமானப்படையும் தரைப்படையும் சேர்ந்து தேடுகிறார்கள், விரைவில் படம் பிடித்து போட்டு விடலாம் என்று காத்திருந்து காத்திருந்து காய்ந்து போன செய்தி ஊடகங்கள் அவர்களே படம் வரைந்து பாகம் குறித்து விளையாடிய சம்பவங்கள் யாவும் கண்டிருப்பீர்கள். கடைசியில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் எப்படி விபத்து நடந்திருக்கும் என்பது மர்மமாகவே இருந்தது, யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. காரணம் பயணிகள், விமானிகள் யாரும் உயிர்தப்பவில்லை. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நொடியும் அந்த ஹெலிகாப்டரில் என்ன நடந்தது, எந்தெந்த வரிசைப்படி பாகங்கள் செயலிழந்தன, விபத்து நடக்கும் அந்த நொடி வரை ஹெலிகாப்டருக்குள் என்னென்ன பேசினார்கள் என்பது வரைக்கும் தகவல்கள் வெளிவந்தது. எப்படி இது சாத்தியம் என்று கேள்வி எழுகிறதா, அக்கேள்விக்கு பதில் தான் 'கருப்புப்பெட்டி'.

கருப்புப்பெட்டி (Blackbox) என்பது விமானங்களின் தொழில்நுட்ப நிலைகளைப் பதிவு செய்ய விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு தகவல் சேமிப்பு கருவி. விமானத்தில் கருப்புப்பெட்டி பொருத்துவதென்பது ஓவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக முயற்சிக்கப் பட்டு மேம்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 70 வருடங்களுக்கு முன்னால் பிரான்ஸில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதே இதன் ஆரம்பம். வரலாறு ரொம்ப சொன்னா கொட்டாவி வரும் ஆபத்திருப்பதால், நாம் கருப்புப் பெட்டிக்குள் நுழைவோம்.


கருப்புப்பெட்டி ஒரு சுவாரஸ்யமான கருவி, அதன் குணாதிசயங்கள் ஆச்சர்யமானவை. 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 60 நிமிடங்களுக்கு மேலாகவும், அழுத்தம் மிகுந்த கடல் நீரில் நான்கு வாரம் வரைக்கும், சுமார் முப்பாதாயிரம் அடி உயரத்தில் இருந்து தரையில் வீழ்ந்தாலும், 2000 கிலோ வரையிலான சுமையைத் தாங்கினாலும் எந்த சேதாரமும் இல்லாமல் அமைதியாய் இருக்கும். எப்படி? முதலில் அலுமினியம், பின்னர் உலர் சிலிகா, அதன் பின்னர் டைட்டானியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு மிக மிக உறுதியான கொள்கலனுக்குள் வைக்கப் பட்டிருப்பது தான் எதையும் தாங்கும் இதயமாக கருப்புப்பெட்டி இருக்கக் காரணம். இவ்வளவு பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்டாலும், எல்லா சம்பவங்களிலும் கருப்புப்பெட்டி சேதமின்றி கிடைப்பதில்லை. இந்தக் கருப்புப்பெட்டி கருப்பு வண்ணத்தில இருக்காது, சிவப்பு அல்லது அடர்மஞ்சள் வண்ணத்தில் இரவிலும், பகலிலும், தண்ணீருக்கடியிலும் எளிதில் அடையாளங்காணும் வகையில் இருக்கும். இருந்தாலும் ஏன் கருப்புப்பெட்டி என்று பெயர் வந்தது?, ஆரம்ப காலத்தில் photosensors (தமிழில்?) பயன்படுத்தித் தான் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவந்தது, அதனால் ஒளி ஊடுருவ இயலாத வகையில் பெட்டி வடிவமைக்கப்பட்டதால் blackbox கருப்புப்பெட்டி என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் photosensors நீக்கப்பட்டு மின்காந்த நாடாக்கள் (Electromagnetic tapes) அதன் பின் மெமரி போர்டுகளாக மாற்றம் பெற்றது.

கருப்புபெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும், சில சமயங்களின் மேற்கூரையிலும் பொருத்தப்படுவதுண்டு. காரணம் அந்த பகுதிகளில் தான் விபத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் குறைந்து இருக்கும், மேலும் அனேகமாக கடைசியாக விபத்தினால் பாதிக்கப்பட போகும் இடமாகவும் இருக்கும். கருப்புப்பெட்டியில் இரண்டு பகுதிகள் உண்டு, விமானிகளின் கட்டுப்பாட்டு அறையில் எழும் அனைத்து ஒலிகளையும் பதிவு செய்ய cockpit voice recorder (CVR) மற்றும் விமானத்தின் பறக்கும் உயரம் உட்பட இயந்திர பாகங்களின் செயல்பாட்டு நிலைமை அனைத்தையும் பதிவு செய்ய flight data recorder (FDR). பெருவாரியான விபத்துகள் அத்துவானக் காடுகளிலோ அல்லது கடல்பகுதியிலேயோ தான் நடைபெறுகின்றன. விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன் மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்தாலும் அதைவிட பரபரப்பாக விசாரணை அதிகாரிகளின் கருப்புப்பெட்டித் தேடல் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.


FDR மற்றும் CVR தவிர beacon எனப்படும் ultrasonic ஒலிக்கருவியும் கருப்புப்பெட்டியில் இருக்கும். ஒருவேளை விபத்துகள் கடல்பகுதியில் நடந்தால், தண்ணீரில் மூழ்கிய மறுகணம் ஒவ்வொரு நொடியும் beacon கருவி ultrasonic ஒலியலைகளை சுமார் 14000 அடி வரை பரப்பும். தேடல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் sonar கருவிகள் மூலம் ஒலியலைகளை இனம் கண்டு கடலுக்கடியில் இருக்கும் கருப்புப்பெட்டியைக் கண்டுபிடிப்பார்கள். இந்த beacon கருவி கருப்புப்பெட்டியை மட்டுமின்றி விமான விபத்து நடந்த கடல்பகுதியையும் கண்டுபிடிக்க உதவி செய்து, அதன் மூலம் யாரேனும் தப்பிப்பிழைத்திருந்தால் அவர்களையும் கூடுமானவரை விரைவில் மீட்டெடுக்க உதவி புரிகிறது.

விபத்துக்கான சரியான காரணங்கள் பற்றியும், அதனைத் தவிர்ப்பதற்கான விமானிகளின் கடைசி நிமிட போராட்டங்கள், அவர்கள் கையாண்ட உத்திகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமின்றி எதிர்காலத்தில் அது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க விமானிகளுக்கு சிறப்புப் பயிற்சி அல்லது விமான வடிவமைப்பில் அதிக நவீனப்படுத்தப்பட்ட மாற்றம் ஆகியவற்றின் தேவை குறித்து முடிவெடுக்கவும் கருப்புப்பெட்டியே மூலாதாரம்.

கருப்புப்பெட்டி குறித்து ஓரளவு அறிமுகம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த பகுதியில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்களை எவ்வாறு மீட்டெடுப்பது, மீட்டெடுக்க்ப்படும் பணியில் உள்ள சிக்கல்கள், எந்தெந்த நாடுகளில் கருப்புப்பெட்டித் தகவல்களைப் படிக்கும் வசதி உள்ளது ஆகியவைக் குறித்துப் பார்க்கலாம்.

Saturday, December 5, 2009

கூகுள் வேவ்ஸ் - பரிசுப் போட்டி

"மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள்", தொடர்பதிவு நிறைவுற்றதை முன்னிட்டு இப்போட்டி. சரியான பதில் கூறி வெற்றி பெரும் நண்பர்களுக்கு கூகுள் வேவ்ஸ் அழைப்பு அன்புடன் அனுப்பி வைக்கப்படும். சரியான பதிலை அதிக நண்பர்கள் சொல்லியிருந்தால் பதில் அனுப்பிய வரிசைப் படி மற்றும் கைவசம் இருப்புள்ள கூகுள் வேவ்ஸ் அழைப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்து வெற்றி பெரும் நண்பர்கள் அறிவிக்கப் படுவார்கள்.

போட்டி என்னன்னா.. கீழே ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதி (email header) கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலின் மூலம் என்ன?, அதாவது அந்த மின்னஞ்சல் எந்த வலையிணைப்பு முகவர் எண்ணிலிருந்து (ip address) அனுப்பப்பட்டது மற்றும் அந்த எண்ணுக்குரிய ஊர், நாடு எது.. ஆகிய தகவல்களை mannan8796@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

பதில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 07 டிசம்பர் 2009.

போட்டின்னு பார்த்ததும் குபீர்ன்னு முதன்முறையாக சுடுதண்ணியை எட்டிப் பார்த்தவர்கள் கீழ்கண்ட பதிவுகளைப் படித்து புரிதல் ஏற்பட்ட பிறகு (புரியும்னு நம்புறேன்), போட்டியில் கலந்து கொள்ளலாம்.






போட்டிக்கான மின்னஞ்சல் தலைப்பகுதி:


Delivered-To: someone@gmail.com
Received: by 10.114.75.20 with SMTP id x20cs459741waa;
Fri, 16 Mar 2010 06:01:56 -0700 (PDT)
Received: by 10.90.79.6 with SMTP id c6mr1637548agb.1174050116362;
Fri, 16 Mar 2010 06:01:56 -0700 (PDT)
Return-Path:
Received: from Login.somecompany.com (login.somedomain.com [12.161.222.58])
by mx.google.com with ESMTP id 34si2015971agc.2010.03.16.06.01.55;
Fri, 16 Mar 2010 06:01:56 -0700 (PDT)
Received-SPF: pass (google.com: best guess record for domain of none@somedomain.com designates 12.161.222.58 as permitted sender)
X-ASG-Debug-ID: 1174050547-577d00e80000-eer621
X-Barracuda-URL: http://login.somedomain.com:80/cgi-bin/mark.cgi
X-Barracuda-Connect: unknown[196.12.47.141]
X-Barracuda-Start-Time: 1174050547
Received: from igin0111.in.somedomain.com (unknown [196.12.47.141])
by Login.somedomain.com (Spam Firewall) with ESMTP
id 979D0D6F6F; Fri, 16 Mar 2010 09:09:07 -0400 (EDT)
Received: from IGIN0117.in.somedomain.com ([10.254.3.229]) by igin0111.in.somedomain.com with Microsoft SMTPSVC(5.0.2195.6713);
Fri, 16 Mar 2010 18:31:51 +0530
X-MimeOLE: Produced By Microsoft Exchange V6.5
Content-class: urn:content-classes:message
MIME-Version: 1.0
Content-Type: multipart/alternative;
boundary="----_=_NextPart_001_01C767CB.438EC957"


பங்குபெறப் போகும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், சும்மா படித்து விட்டு காற்று வரும் பொருட்டு கிளம்பும் பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்.

Friday, December 4, 2009

மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 3 (முற்றும்)


இப்பகுதியில் முதலில் எவ்வாறு மின்னஞ்சலின் தலைப்பகுதியை பார்வையிடுவது என்று பார்ப்போம்.

யாஹூ : மின்னஞ்சலின் மேல் Right Click செய்து view full headers என்பதைச் சொடுக்கினால் போதும்.

ஹாட்மெயில்: மின்னஞ்சலின் மேல் Right Click செய்து view message source என்பதைச் சொடுக்க வேண்டும்.

ஜிமெயில்: மின்னஞ்சலைத் திறந்த பின் Reply என்ற பொத்தானில் கீழ்நோக்கிய அம்புக்குறியினை சொடுக்கி show original என்பதனைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவுட்லுக்: மின்னஞ்சலின் மேல் Right Click செய்து options என்பதைச் சொடுக்கினால் message options window திரையில் தோன்றும் அதில internet headers என்ற பகுதியில் தலைப்பகுதியினைக் காணலாம்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்: மின்னஞ்சலின் மேல் Right Click செய்து properties என்பதைச் சொடுக்கினால் தோன்றும் படிவத்தில் details என்ற பகுதியைத் தேர்வு செய்தால் காணலாம்.

தண்டர்பேர்ட்: மின்னஞ்சலைத் திறந்து, மெனுவில் View -> message source என்ற பகுதிக்கு சென்றால் காணலாம்.

இவ்வாறு காணும் தலைப்பகுதியில் நமக்குத் தேவை Received என்று தலைப்பிடப்பட்ட பகுதிகள் மட்டுமே. இந்த Received பகுதிகள் அனுப்புநர், அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் (ip address), பெறுநர் மற்றும் மின்னஞ்சல் சர்வர்களின் பெயர்கள், சர்வர் குறியீட்டு எண்கள் ஆகியத் தகவல்களைக் கொண்டிருக்கும். பல நபர்களைக் கடந்து ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வரும்பட்சத்தில் இந்த received பகுதிகளைக் கீழிருந்து மேலாக ஆய்வு செய்தால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதாவது கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார், இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் மின்னஞ்சலில் விவகாரமான விஷயங்கள் இருக்கலாம், காரணம் தேர்ந்த சில்மிஷ மின்னஞ்சல் அனுப்பும் கில்லாடிகள் வலை நிரல்கள் மூலம் இந்த மின்னஞ்சலின் தலைப்பகுதியிலும் கைவைத்து குழப்பி விடுவார்கள். நன்கு வடிவாக வாரியிருக்கும் தலைமுடியை கலைத்து விடுவது போல மேலும் சில received பகுதிகளை நிரல்கள் மூலம் ஆங்காங்கே மானாவாரியாக தலைப்பகுதியில் விதைப்பார்கள். அவற்றை மண்டை காய்ந்தாலும் கவலைப்படாமல் களையெடுப்பது ஆய்வு செய்யும் நிபுணர்களின் வேலை.

மேலே சொன்னபடி அனைத்து received பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இருக்க வேண்டும்(கீழே இருக்கும் received பகுதியின் பெறுநர் அதன் மேலே received பகுதியின் அனுப்புநராக இருப்பார்). அவ்வாறு இல்லாத received பகுதிகளை நீக்கிக் கொண்டே வந்தால் ஒழுங்கு படுத்தி விடலாம். அவ்வாறு ஒழுங்கு படுத்தி விட்டு பார்க்கும் போது கடைசி received பகுதியில் இருக்கும் வலையிணைப்பு முகவர் எண் ("[ ]" என்ற அடைப்புக் குறிக்குள் வழங்கப்பட்டிருக்கும்) தான் நமக்குத் தேவையான தகவல்.


அது போக மின்னஞ்சல் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கென சில தலைப்பகுதிக் கட்டமைப்புகளைப் பிரத்யேகமாக வைத்துள்ளன. ஹாட்மெயில் சேவையில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் தலைப்பகுதியில் வழக்கமான received பகுதிகளோடு சேர்த்து X-Origninating-IP என்ற ஒரு பகுதி கூடுதலாக இருக்கும். அதில் மின்னஞ்சலின் மூலம் அதாவது முதன் முதலில் யாரால் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதோ அவர்களின் வலையிணைப்பு முகவர் எண் அழகாகக் காண்பிக்கப்படும். நமக்கு ஆய்வு செய்யும் வேலை மிச்சம். வாழ்க மைக்ரோசாப்ட்.

யாஹூ வழக்கம் போல நாம் விவரித்த முறையிலேயே தங்கள் மின்னஞ்சல்களின் தலைப்பகுதியினை கட்டமைத்திருக்கிறார்கள். மேலிருந்து கீழாக received பகுதிகளை ஆய்வு செய்தால் கடைசியாக இருக்கும் பகுதியில் புதையல் இருக்கும்.

ஜிமெயில் தமது மின்னஞ்சல் சேவையின் போது உலாவி மூலம் மின்னஞ்சல் அனுப்பினால் அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண்களை பதுக்கி விட்டு, த்ங்களின் மின்னஞ்சல் சர்வரின் தகவல்களை மட்டுமே அளிக்கிறது. அனுப்புநரின் வலையிணைப்பு முகவர் எண் தேவை என்றால் கூகுளிடம் ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ தொங்கோ தொங்கென்று தொங்கினால் கிடைக்கப்பெறலாம். கூகுள் செய்யும் இணையச் சேட்டைகளில் இதுவும் ஒன்று. உலாவி அல்லாமல் மின்னஞ்சல் பயனாளர் மென்பொருட்கள் (outlook..etc) பயன்படுத்தி அனுப்பினால் தலைப்பகுதியில் அனுப்புநரின் முகவர் எண் கிடைக்கப் பெறலாம்.

இப்பொழுது தலைப்பகுதிகளை பார்வையிடுவது, ஆய்வு செய்து மின்னஞ்சலின் மூலத்தினது வலையிணைப்பு முகவர் எண்ணைக் கண்டுபிடிப்பது வரைக்கும் பார்த்தாகி விட்டது. அடுத்து நாம் கடந்த பகுதியில் குறிப்பிட்டதை போல http://www.melissadata.com/Lookups/iplocation.asp போன்ற வலைத்தளங்களுக்கு சென்று கண்டுபிடித்த வலையிணைப்பு முகவர் எண்ணை உள்ளிட்டால் அதன் இருப்பிடத்தை அறியலாம்.

இப்பொழுது முழுமையாக மின்னஞ்சலின் தலைப்பகுதி குறித்து ஒரு புரிதலுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இறுதியாக ஒரு விஷயம் மின்னஞ்சல் இரண்டு விதமாக அனுப்பப்படலாம். ஒன்று நேரடியாக அனுப்புநரால் அனுப்பப்படுவது. இரண்டாவது தானியங்கி நிரல்களால் வெப் சர்வர்களின் மூலம் அனுப்பப்படுவது. முதல் வகை நாம் சாதரணமாக அனுப்பும் முறை. இரண்டாவது வகைக்கு உதாரணம், நீங்கள் வலைப்பதிவுத் திரட்டிகளில் இருந்து பெறும் மின்னஞ்சல்கள் அனேகமாக நிரல்கள் மூலம் வெப் சர்வரில் இருந்து அனுப்பப்படுபவை. அவற்றின் தலைப்பகுதியினை ஆய்வு செய்தால் கிடைக்கும் வலையிணைப்பு முகவர் எண், அவர்களின் வெப் சர்வருக்கு உரியதாக இருக்கும். அதன் இடத்தை கண்டுபிடித்தால் வெப் சர்வர் எங்கிருந்து செயல்படுகிறது என்பதை அறியலாம்.

இவ்வாறு ஆய்வு செய்வதன் மூலம் தான் junk, spam மின்னஞ்சல்கள் கட்டுப்படுத்தப் படுகின்றது. உதாரணமாக உங்கள் மின்னஞ்சல்களில் ஒன்றை junk அல்லது spam என்று நீங்கள் வகைப்படுத்தினால் பின்னணியில் செயல்படும் நிரல்கள் அவற்றின் தலைப்பகுதியை ஆய்வு செய்து மூலத்தின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் கண்டுபிடித்து குறித்து வைத்து கொள்ளும், அதன் பின்னர் எப்பொழுது அந்த வலையிணைப்பு முகவர் எண்ணிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வந்தாலும் அவை spam அல்லது junk என்று வகைப்படுத்தப்படும்.

தலைப்பகுதி ஆய்வு செய்யும் முறை - ஓர் உதாரணம்:


Received: by 10.231.11.65 with SMTP id s1cs58301ibs;
Sun, 25 Oct 2009 06:59:40 -0700 (PDT)
Received: by 10.231.48.210 with SMTP id s18mr2579002ibf.3.1256479180680;
Sun, 25 Oct 2009 06:59:40 -0700 (PDT)
Received: from s15246724.onlinehome-server.com (s15246724.onlinehome-server.com [74.208.69.95])
by mx.google.com with ESMTP id 12si13106374iwn.49.2009.10.25.06.59.40;
Sun, 25 Oct 2009 06:59:40 -0700 (PDT)


மேலே உள்ளது தமிழ்மணத்திலிருந்து பெறப்பட்ட ஒரு மின்னஞ்சலின் தலைப்பகுதி. அதில் received என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். எனவே மற்ற பகுதிகள் நீக்கப்பட்டு received பகுதிகள் மட்டுமே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கடைசி received பகுதியில் நமக்கு கிடைக்கும் வலையிணைப்பு முகவர் எண்: [[74.208.69.95]). இது உணர்த்தும் தகவல்கள்

IP Address Location
IP Address74.208.69.95
CityWayne
State or RegionPennsylvania
CountryUnited States
ISP1&1 Internet Inc.
பி.கு: மேலே உள்ளது நிரல்களால் வெப் சர்வரிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் என்பதால் சர்வரின் தகவல்களே என்பதனை நினைவில் கொள்க.

இதன் மூலம் ஒருவருக்கு நாம் மின்னஞ்சல் அனுப்புப் போது நாம் வெறும் தகவல் மட்டும் அனுப்புவதில்லை, நமக்குத் தெரியாமல் நம்மைப் பற்றி பல்வேறு குறிப்புகளையும் சேர்த்தே அனுப்புகின்றோம் என்பதனை நினைவில் கொள்ளுமாறும், சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களை நீங்களே ஆய்வு செய்து தெளிவடைந்து மின்னஞ்சல் மோசடிகள், சில்மிஷங்களிலிருந்து காத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி இத்தொடர் நிறைவு பெறுகின்றது.

தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் ஏதேனும் மேலதிக விபரங்கள் தேவையென்றால் தயங்காமல் பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.