Thursday, September 26, 2013

இணையம் வெல்வோம்-11

அனானிமஸ் – இன்றைய தேதிக்கு இணைய உலகின் பாதுகாப்பு வல்லுநர்களும்,  மக்களுக்கு எதிராகவோ அல்லது மக்களிடம் இருந்து ஏதேனும் முக்கிய உண்மைகளை மறைத்து வைத்து கபடநாடகம் ஆடும் பெரும் நிறுவனங்களும், அரசுகளும், அவற்றின் அதிகார மையங்களும் கேட்டவுடன் அதிரும் வார்த்தை.
 ‘பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல’, ‘அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது எங்க பாலிசி’, சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம், போன்ற நமக்குப் பரிச்சயமான பல அதிரடி வசனங்களுக்கு இன்றைய தேதியில் மிகச் சரியான உதாரணமாக இருப்பவர்கள் தான் அனானிமஸ்.

உலகிற்கு ‘இணைய யுத்தம்’ என்ற புதிய போர்முறையினை முழு அளவில் அறிமுகப்படுத்தி ஊருக்கெல்லாம் கண்காட்சி வைத்த இணையத்தின் ராபின் ஹூட்கள். “Anonymous - We are Legion. We do not forgive. We do not forget. Expect us” என்ற அறிமுக வசனத்துடன் இவர்கள் இணைய உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இன்று வரைக்கும் பலத்த கரவொலியுடன் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு இவர்கள் உத்தரவாதம். இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், எதற்காக இவர்கள் மேல் உலகின் மிகப்பலம் வாய்ந்த நாடுகள் அனைத்தும் கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கின்றன?,எவருமே தப்பிக்க முடியாத இணையத்தில் இவர்கள் மட்டும் எப்படி தப்பிக்கிறார்கள்? போன்ற கேள்விகளால் அவதியுறும் அன்பர்கள் மேலே படிக்கவும்.

வலையுலகில் அனானிமஸ் குழுமம் என்பது கடவுள் மாதிரி, உணர மட்டுமே முடியும், யார் இயக்குகிறார்கள் என்று இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் கணிணி வல்லுநர்கள் முக்கியமாக வலைப்பாதுகாப்பில் கரை கண்டவர்களால் செயல்படுத்தப்படும் இக்குழுமத்தின் கட்டமைப்பு வித்தியாசமானது. அதன் காரணமாகவே இன்று வரை அனானிமஸ் யார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. இவர்களுக்கு தானைத்தலைவரோ, புரட்சிப்புயலோ, தளபதியோ, கொ.ப.செ என்றோ யாரும் இல்லை. இருந்தாலும் கோபால் பல்பொடிக்கு அடுத்த படியாக பர்மா, மலேசியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் கிளை இவர்களுக்கு உண்டு.

இணையத்தில் பெயரிலிகளாக உலா வரும் இவர்களின் புகழ் திக்கெட்டும் பரவக்காரணம் போராடுவதற்கு இவர்கள் எடுத்துக் கொள்ளும் காரணிகளும், அதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் அதிகார மையங்களும் தான். அமெரிக்க அரசு இயந்திரங்கள், உலகின் பெரும்பாலான உளவு அமைப்புகள், மக்களை ஏமாற்றி பெரும்பணத்தில் திளைக்கும் பெரும் நிறுவனங்கள் இப்படி யாரையும் எதிர்க்க இவர்கள் எள்ளளவும் தயங்குவதில்லை. காலையில் மனைவி வீட்டில் போராட்டத்தினை அறிவித்து விட்டு மதிய உணவுக்குத் துணைவி வீட்டில் கை கழுவும் ஏமாற்று வேலைகளை இவர்கள் செய்வதில்லை. இந்த நாள், இந்த நேரம் உங்கள் வலையமைப்பில் உள்நுழைவோம், உங்கள் இருப்பினை இணையத்தில் இல்லாது செய்வோம் என்று சொல்லி அதனை சொன்னபடி செயல்படுத்துவதில் அசகாய சூரர்கள்.

2012 ஆண்டு நியூயார்க் நகரிலும், ஸ்பெயினிலும் துவங்கிய ஆகிரமிப்புப் போராட்டங்கள் உலகின் 82 நாடுகளிலுள்ள 951 நகரங்களில் பரவி பிரம்மாண்டமாய் அசுர வளர்ச்சி பெற்ற போது அதற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியது அனானிமஸ் அமைப்பு. எங்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் அத்துமீறினாலும் உடனே அதனைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டு ஊடகங்களுக்கு காய்ச்சலேற்றினார்கள். அத்தோடு நில்லாமல் குறிப்பிட்ட காவல்துறை ஊழியர் அத்துமீறினால் அவரின் வீட்டு முகவரி, தொலைபேசி எண், தொலைநகல் எண் ஆகியவை வலையேற்றப்படும். அனானிமஸ் ஆதரவாளர்கள் அக்காவலரின் அக்கிரமத்தைக் காட்டும் புகைப்படங்களை ஆயிரக்கணக்கில் அஞ்சலிலும், தொடர்ந்து நிரல்கள் மூலம் நிறுத்தாமல் தொலைபேசியில் அழைத்தும், அடர் கறுப்பு பக்கங்களை தொலைநகல் அனுப்பியும் அட்டகாசம் செய்தனர்.


அதே போல தங்கள் அட்டகாசங்களை வெளியிட்டு சங்கடத்தில் தவிக்க விட்ட விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏதுவாக விக்கிலீக்ஸ் தளத்திற்கு வரும் நன்கொடைகள் அனைத்தையும் முடக்கிய விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையதள வழங்கிகளை பல மணி நேரம் முடக்கிய தருணத்தில் உலகின் ஒட்டு மொத்த பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது. விக்கிலீக்ஸ் தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசான்ஞ் லண்டனில் கைது செய்யப்பட்ட போது லண்டன் நகரம் குலுங்க அனானிமஸ் குழுமத்தினர் முகமூடி அணிந்து பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் செய்து அசரவைத்தனர். 

சமீபத்திய வருடங்கள் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்த எகிப்து, துருக்கி, துனிசியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சிரியா போன்ற அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விஷயங்களை எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டு முக்கிய பங்காற்றியது அனானிமஸ் அமைப்பு. எவ்வித மட்டுறுத்தலும், பக்கசார்பும் இல்லாத ஊடகங்கள், மக்களிடம் எதையும் மறைத்து வைக்காமல், ஒளிவு மறைவின்றி செயல்படும் அரசாங்கம், முழு சுதந்திரத்துடன் கூடிய இணையம் என்று இவர்களுக்கும், விக்கிலீக்ஸ் அமைப்புக்கும் கிட்டத்தட்ட கொள்கை அளவில் வித்தியாசம் அதிகமில்லை.

விக்கிலீக்ஸ் அமைப்பு சட்ட ரீதியாக, அடிப்படைக் கட்டமைப்புடன் செயல்படும் ஊடக நிறுவனம். அனானிமஸ் அப்படி இல்லை, ஒத்த கருத்துடைய கணிணித் தொழில்நுட்பத்தில் தேர்ந்த வல்லுநர்கள் நாலு பேர் சேர்ந்து கூட அனானிமஸ் பெயரில் செயல்பட முடியும். நீங்கள் எதை என்ன காரணத்திற்காக போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு உலகமெங்கும் பரவியிருக்கும் போராளிகள் உங்களோடு சேர்ந்து இணைய யுத்தம் நடத்துவார்கள். அதே போல இணைய உலகில் நடந்து வரும் இத்தகைய சம்பவங்களை மூக்கு நுனியில் இருக்கும் கண்ணாடியினை அழுத்தி ஏற்றி விட்டு உற்றுக் கவனித்து வரும் அன்பர்களுக்கு விக்கிலீக்ஸ் தளத்தில் வெளிவந்த அனேக சமாச்சாரங்கள் அனானிமஸ் குழுமம் வழங்கியதாக இருப்பதை உணரலாம்.
பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துடிப்புடன் செயல்படும் அனானிமஸ் அதர்மத்தை கண்டிக்க எப்பொழுதுமே தயங்கியதில்லை. அனானிமஸ் குழுமம் வழங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனமான ஸ்ட்ரட்போர் அமைப்பின் கோப்புகளை அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பொழுது அந்த வலைப்பக்கத்தினை பார்வையிடும் பொழுது நன்கொடை கேட்டு விளம்பரங்கள் வந்த பின்னர் கோப்புகள் தெரியுமாறு விக்கிலீக்ஸ் வெளியிட்டதும், பணம் செலுத்தி கோப்புகளைப் பார்க்கச் சொல்லும் வகையில் இருந்த அவ்விளம்பரங்களை கண்டித்து அனானிமஸ் அமைப்பினர் பொங்கியெழுந்து விட்டனர்.
பின்னர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விளம்பரங்களை நீக்கி விக்கிலீக்ஸ் வெளியிட்டது. ஒன்றுக்குள் ஒன்று என விமர்சிக்கப்பட்ட அனானிமஸும், விக்கிலீக்ஸும் முட்டிக் கொண்டது அனைவராலும் ஆச்சர்யத்துடன் கவனிக்கப்பட்டாலும், நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என நாட்டாமையாக மாறி கர்ஜித்த அனானிமஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது,
தங்கள் நடவடிக்கைகள் மூலம் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்ற அனானிமஸ் அமைப்பின் பலமே வலையமைப்புத் தாக்குதல்கள் தான். தங்களுக்கென பிரத்யேகத் தாக்குதல் முறைகளைக் கையாண்டு வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களை  திக்குமுக்காடச் செய்வது இவர்களின் பிரசித்தம். அதே போல எத்தனையோ விதவிதமான வித்தைகள் மூலம் வலையமைப்பினைப் பாதுகாக்கும் அரண்களான பாதுகாப்பு வல்லுநர்களிடையேயும் அனானிமஸ், விக்கிலீக்ஸ் அமைப்பின் பால் பாசமும், அபிமானமும் கொண்டவர்கள் பெருக ஆரம்பித்தது விபரீத விளவுகளை உண்டாக்கியது. இதற்கு சமீபத்திய உதாரணம் எட்வர்ட் ஸ்னொடன்.

அனானிமஸ் வலையமைப்புத் தாக்குதல் யுக்திகள், ஸ்நொடன் மற்றும் அவர் போல அனானிமஸ் அமைப்பிலிருந்து முகமூடி களைந்து வெளியிலகிற்கு வந்தவர்கள் குறித்தும் வரும் பகுதிகளில் தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.