Thursday, April 17, 2014

மாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது?கபில்தேவ் அணியினர் வாங்கி வந்த உலககோப்பையை இந்தியா கொண்டாடி முடித்திருந்த நேரம் 1983ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி நியுயார்க்கில் இருந்து தென்கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்டது அந்த விமானம், செல்லும் வழியில் அலாஸ்கா மாகாணத்தின் அங்க்கரெஜ் நகரத்தில் தரையிறங்கி செல்வதாகத் திட்டம். ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளையும், 269 பயணிகளின் கனவுகளையும் சுமந்து கொண்டு விமானம் ஆகாயத்தில் கலந்தது. அலாஸ்காவில் சென்று தரையிறங்கும் வரை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது. அலாஸ்காவில் இருந்து கிளம்பியதும் விமானிகள் தானியங்கிப் பொறி மூலம் விமானத்தினை செலுத்த ஆரம்பித்தனர். யதார்த்தமாக புவியிடங்காட்டி (GPS) குளறுபடியால் தவறு செய்ய, விமானம் பதார்த்தமாக சோவியத் யூனியனின் வான் எல்லைக்குள் நுழைந்தது. தாங்கள் இப்படி தடம் மாறிச் செல்வதை விமானிகள் உணரவேயில்லை.தரைப்பகுதிகளை நாம் எப்படி வரைபடத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்து எல்லைகளை நிர்ணயிக்கிறோமோ அதே போல வான்பரப்பிற்கும் வரைபடங்கள் உண்டு. அதில் சிக்கல் என்னவென்றால் வாகனங்களில் செல்லும் போது குழப்பமேற்பட்டால் வழியில் உள்ள தேநீர் கடையில் வழிகேட்டு சரியான் பாதையில் செல்வதென்பது இயலாதென்பதால், புவியிடங்காட்டியே துணை. உலகெங்கும் உள்ள் பயணிகள் விமானங்களுக்கெல்லாம் ஒரே வரைபடம் வழங்கப்படும், அதனை மேற்பார்வையிட்டுத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து அனைவருக்கும் விநியோகிப்பது International Civil Aviatation Organization (ICAO) அமைப்பின் வேலை. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு உச்சத்தில் இருந்த நேரத்தில்,  தடம் மாறிய விமானம் சோவியத் வான் பகுதியில் நுழைந்த நேரம் வழக்கமாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் எல்லையில் உலாப்போகும் நேரம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் தனது ரேடார்கள் மூலம் பூதக்கண்ணாடி அணிந்து சல்லடை போடுவது வழக்கம்.பதட்டமான காலத்தில் ராணுவ ரேடார் கண்காணிப்புப் பணியில் இருப்பவர்களின் மன அழுத்தம் சொல்லில் வடிக்க முடியாது. இப்படியான திக் திக் நேரத்தில் திடீரென எதிரி நாட்டுப் பகுதியில் இருந்து ஒரு விமானம் தங்கள் வான்பகுதியில் நுழைந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதனை சோவியத் போர் விமானம் செய்தது. தென் கொரியாவிற்குச் சொந்தமான KAL007 சுட்டு வீழ்த்தப்பட்டது. 269 பயணிகள் மற்றும் விமானி, விமானப் பணிக்குழு என அனைவரது உயிரும் கடலில் சங்கமித்துப் போனது. துயரத்திலும் துயரம், அதன் பின் நடந்த சம்பவங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் வீழ்ந்த கடல் பகுதி பயில்வான் நாடான சோவியத் என்பதால் தேடுதல் பணி அத்தனை சுலபமாக கைகூடவில்லை. சுமார் எட்டு நாட்கள் விமானத்திற்கு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை. சோவியத்தும் சுட்டு வீழ்த்தி விட்டு கமுக்கமாக ‘என்ன காந்தி செத்துட்டாரா’ கணக்காய் அனைவரையில் கடலில் காய விட்டது. எட்டு நாட்கள் உப்புக்காற்றில் கண்கள் காய்ந்து கிட்டத்தட்ட அனைவரும் சோர்ந்து போன நிலையில் இதற்கு மேல் சொல்லாவிட்டால் போர் மூளும் அபாயம் இருப்பதை உணர்ந்து சோவியத் அரசு அத்துமீறி வான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் விமானம் எங்கு சென்று விழுந்தது என்று தெரியவில்லை என்று சொல்லி, தேடுதல் பணிக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக அறிவித்தது.சோவியத் இப்படி அறிவித்ததும் அமெரிக்க அதிபர் ரீகன் இது அநியாயம், அப்பட்டமான படுகொலை என்று கொதித்தெழுந்தார். அமெரிக்கா இவ்விஷயத்தில் படு தீவிரமாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலான பயணிகள் அமெரிக்க பிரஜைகள் என்பதும், பயணிகளில் ஒருவர் ஜார்ஜியா மாகணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் என்பதும் தான். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் அவ்விமானத்தில் பயணம் செய்வதாக இருந்து பின்னர் பயணத்திட்டத்தை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடைசியில் எல்லாரும் சேர்ந்து விமானத்தினைத் தேடலாம் என்று சோவியத் சொல்ல, எந்தப் பகுதியில் தேடுவது என அமெரிக்கா கேட்க, தேவிப்பட்டணத்தில் விழுந்த விமானத்தை, கொட்டாம்பட்டியில் தேடுவோம் என்று கைகாட்டி அனைவருடனும் சேர்ந்து சோவியத்தும் தேடிய அட்டகாசமும் நடந்தேறியது. ஒன்றுமே கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து ஏகப்பட்ட காலணிகளை மட்டும் சோவியத் அரசு இதுதான் எங்கள் தேடுதல் வேட்டையில் கிடைத்தது என்று ஒப்படைத்தது. இந்தக் காலணிகளும், ஜப்பானின் ஹொக்கடோ தீவினில் கரையொதுங்கிய மிகச்சில மனித உடல் பகுதிகளையும் தவிர எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் கழித்து சோவியத் சிதறுண்டு, போரிஸ் எல்சின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் நல்லெண்ண நடவடிக்கையாக விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டத் தகவல் பதிவுகளை வெளியிட்டு விமானத்தின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், விமானத்தில் உயிர் தப்பிய பயணிகளை சோவியத் அரசு மீட்டெடுத்து தங்கள் ரகசிய முகாம்களில் வைத்திருந்தது என்ற கதையும் காற்றில் கலந்து இன்றும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.
முதலில் பாதை மாறி, பின்னர் மலாக்கா ஜலசந்தியில் சமீபத்தில் மாயமான மலேசிய விமானத்தின் சம்பவத்தில், விமானத்தின் தொலைத்தொடர்பு கருவிகள் எதுவும் செயல்பாட்டில் இல்லாமல் பறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இவ்வாறு தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு செவிமடுக்காமல் பறக்கும் பொருள்களனைத்தும் ரேடார் மூலம் கண்காணிப்பில் இருப்பவர்களின் கண்களுக்கு ஏவுகணைகளாகவோ, அல்லது பிரச்சினைக்குரிய/ராணுவ  நடவடிக்கையில் ஈடுபடும் விமானமாகவோ தான் தெரியும். அவ்வாறு கருதப்படும் பட்சத்தில் கண்காணிப்பில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு மேலே சொன்ன சம்பவம் ஒரு உதாரணம். மலேசிய விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்களாக இருந்தாலும், மலாக்கா ஜலசந்தியில் நாம் கூட ஒரு கட்டுமரத்தில் போய் தேடுதல் வேட்டையில் கலந்து கொள்ளுமளவுக்கு வெளிப்படையாக தேடுதல் நடப்பதாலும் சீனாவால் இதற்கு மேல் எந்த அழுத்தமும் கொடுப்பதற்கு இல்லை. ஒரு வேளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் மலேசிய விமானம் மாயமாகி இருந்தால் அதைப் பற்றிய எந்தவொரு தகவலோ  அல்லது விமானத்தின் சிறு தகடோ கூட என்றைக்கும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்பதே உண்மை. விமானம் மாயமான மலாக்கா ஜலசந்தி தொடர்ந்து இந்தியக் கண்காணிப்பில் உள்ள கடல்பகுதி என்பதும், மலாக்கா ஜலசந்தியில் தன் ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு கடந்த சில ஆண்டுகளில் பெரும் ராணுவ முதலீடு இந்திய இராணுவத்தால் செய்யப்பட்டுள்ளதென்பதும், அந்தமான் தீவினில் பெரும் விமானப்படைத்தளமும், வான்பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டிருப்பதும், சுமார் 5000 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைத் தளங்களும் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பொதுவாக விமான விபத்துகளில் விமானி மரணமடைந்தால், பெரும்பாலும் அவரையே விபத்துக்குக் காரணமாக நேர்ந்து விடப்படுவது வழக்கம். காரணம் விமானங்களை, அதன் இலத்திரனியல் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளின் அசுர பலம். இந்த பலத்தோடு அரசு அதிகாரத்தின் உச்சமான இராணுவமும் சேர்ந்தால் எதுவும் மறைக்கப்படவும், மறக்கடிக்கப்படவும் சாத்தியம். அதுவரை ஊடகங்கள் விமானி சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே பக்கத்தில் இருக்கும் பையனைக் கிள்ளித் துன்புறுத்திய தீவிரவாதி, அவர் கடத்தியிருக்கலாம் என்பது போன்ற மரண மொக்கைகளைச் சகித்து, வரப்போகும் தேர்தலோடு இதனைத் தலைமுழுகி வேறு ஏதாவதொரு பரபரப்புச் செய்தியில் மூழ்கிப் போவோம்.

Thursday, April 10, 2014

இணையம் வெல்வோம் - 15

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட திமுகவினரைப்போல் வாயெல்லாம் பல்லாக மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த அனானிமஸ் குழுவினர் மற்றும் இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும் சாமானியர்களின் வாழ்க்கையிலும், வாயிலும் மண்ணை அள்ளிப் போட்டது அமெரிக்க அரசு.
இணையத்தில் குறியீட்டு முறைப்படி தகவல் பறிமாற்றம் செய்தாலும் அவற்றை சேமித்து அதன் குறியீட்டு முறையினைக் கட்டுடைத்துத் தகவல்களைப் படிப்பதை குற்றமற்ற ஒன்றாக மாற்றும் வண்ணம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. குறியீட்டுமுறையின் வீரியம் அதிகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் உதவியை நாடுவது, ஒரு குறிப்பிட்ட பயனாளர் கணக்கின் கடந்தகால பதிவுகள் அனைத்தையும் அந்நிறுவனங்களின் மூலம் பெறுவதற்கான அதிகாரங்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கைவரப்பெற்றது.
இது போன்ற வேண்டுகோள்களுக்கெல்லாம் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிந்து போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. மீசை மடங்காத, விரைப்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலையே இழுத்து மூடிய சம்பவங்களும் நடந்தன. இது கிட்டத்தட்ட நூறு வீடுகள் இருக்கும் ஒரு ஊரில், ஒரு திருடனின் வீட்டைக் கண்டுபிடிப்பதற்காக அத்தனை வீட்டினையும் முன் அனுமதியின்றி, யாருக்கும் தெரியாமல் உட்புகுந்து வேவு பார்க்கலாம் என்பது போன்ற ஒரே நேரத்தில் பகீர் மற்றும் கிளுகிளுப்பு இரண்டும் கலந்த ஒரு விஷயம்.
அது மட்டுமின்றி அமெரிக்க உளவு அமைப்புகள் அனானிமஸ் ஆதரவாளர்கள்/ஆர்வலர்கள் போர்வையில் அவர்களின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், இணையத்தில் தங்கள் அடையாளத்தினை மறைத்துக் கொள்ள விரும்புவர்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் TOR வலையமைப்பிலும் பங்கேற்பாளர்களாக உருமாறி தங்கள் கணிணிகள் மூலம் பயணிக்கும் தகவல்களைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தார்கள். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கணிணி/இணைய வல்லுநர்கள் மத்தியில் பலத் துயரச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.
அச்சம்பவங்கள் அனைத்தும் அனானிமஸ் தொடர்பானவை என்பதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதும் பொதுவில் வைக்கப்படவில்லையென்றாலும், அவற்றின் மூலம் அனானிமஸ் அல்லது அமெரிக்க அரசுக்கு எதிராக இணையத்தில் அடையாளங்களை மறைப்பது மற்றும் ஊடகங்களின் தணிக்கை முறை ஆகியவற்றுக்கெதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
அமெரிக்க அரசு இத்தனை பிரயத்தனப்பட்டாலும் அவர்களுக்கு கைகொடுத்ததென்னவோ எதிரிகளைக் கவிழ்க்க பயன்படும் தொன்றுதொட்ட பாரம்பரிய வழக்கமான காட்டிக்கொடுக்க உள்ளிருக்கும் ஆட்களை வளைக்கும் தந்திரம்  தான். இணையத்தில் மாயமான்களாய் வலம்வரும் அனானிமஸ் அன்பர்களை அவ்வாறு வளைத்த வரலாறு அதிரிபுதிரி திருப்பங்கள் திருப்பங்கள் நிறைந்த மசாலாத் திரைப்படங்களை மிஞ்சிய ஒன்று. அக்கதையினைப் பார்ப்போம்.
முதலில் சட்டமாற்றங்கள் மூலம் இணையக்குற்றங்கள் மிகப்பெரும் தேசத்துரோக வழக்குகளைப் போல கையாளப்பட்டது. சிறு குற்றங்களுக்குக் கூட பல்லாண்டு சிறைத்தண்டனை, கட்டவே முடியாத அபராதத் தொகை போன்ற அஸ்திரங்கள் ஏவப்பட்டன. அனானிமஸ் அன்பர்கள் முகமூடி மாயாஜாலக்காரர்களாக இருந்தாலும் பெரும்பான்மையனோர் மிக இளம் வயதினர், அதிமுக்கிய இணையப் பாதுகாப்புத் துறைகளின் பதவிகளை அலங்கரித்தவர்களாகவோ அல்லது அதனை எதிர்நோக்கியவர்களாக இருந்தனர்.
அமெரிக்க அரசின் கடும் தண்டனைகளும், வழக்கில் சிக்கி விட்டால் தங்கள் எதிர்காலம் சாகும்வரை சின்னாபின்னப்படுத்தப்படும் என்பது அவர்களிடையே ஒரு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதில் நாம் முதலில் சந்திக்கப் போகும் நபர் ‘சிக்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 20 வயதாகும் சிகர்துர் தொர்டர்சன். மேலே படத்தில் புத்தம் புதிய பால் டின்னைப் போல புசுபுசுவென விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் உடன் காட்சியளிக்கும் சிறுவன் தான் சிகர்துர். இந்தப் பொடிப்பயல் எப்படி ஜூலியனுடன் என்று உங்கள் மனதில் தோன்றும் அதே கேள்வியும் ஆச்சர்யமும் அனைவருக்கும் தோன்றியது. ஜூலியனுனிருந்தவர்கள் அனைவருமே சின்னஞ்சிறுசு, அறியாத வயசு என்று ஜூலியனை கடுமையாக எச்சரித்தனர். விதி வீதியில் விளையாடியது, ஜூலியன் கேட்கவில்லை.
ஜூலியன் சிகர்துர் மேல் வைத்த நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது.  ஐஸ்லாந்தைச் சேர்ந்த சிகர்துர்,  ஜூலியனைப் போலவே தனிமை நிறைந்த சிறுவனாக வளர்ந்ததும், தன் 12 வயதிலேயே கணிணிகள் மேல் காதல் கொண்டு ஒரு இணையத்தளத்தினை ஹேக் செயத்ததும், 14 வயதில் குடும்பத்துடன் விமானப்பயணம் மேற்கொள்கையில், ஐஸ்லாந்தின் முக்கிய நிதி நிறுவனமான ‘மைல்ஸ்டோன்’னின் முக்கியஸ்தரான தன் சக பயணியின் மடிக்கணிணியினை சரி செய்து கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்திலேயே வேலை கிடைக்கப்பெற்றதும் சிகர்துரின் திறமையைச் சொல்லும். சிகர்துரின் வீரியம் புரியாமல் மைல்ஸ்டோன் நிறுவனம் கொடுத்த வேலை அவர்களின் வலையமைப்பில் சிதறிக்கிடக்கும் அதிமுக்கிய ஆவணங்களைத் தேடிப்பிடித்து அவற்றை முற்றாக அழிப்பது.
சாக்லேட் சாப்பிடும் வயதாக இருந்தாலும், இந்த வேலைக்கு இவ்வளவு காசா என்ற கேள்வி சிகர்துருக்கும் இருந்து வந்தது. தான் அழிக்க வேண்டிய ஆவணங்களை பிரதி எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து அவற்றைப் படிக்க ஆரம்பித்ததும் சிகர்துருக்கு அந்நிறுவனத்தின் பெரிய தலைகள் ஈடுபட்டுள்ள மோசடிகளும், அதில் ஐஸ்லாந்து அரசியல்வாதிகளின் தொடர்பும் புரியவந்தது. இது நடந்த வருடம் 2009, கடும் பொருளாதார நெருக்கடியில் ஐஸ்லாந்து தத்தளித்த நேரம். சிறுவயது முதலே ‘ஏதாவது செய்யனும் பாஸ்’ என்று ஆசை கொண்டிருந்த சிகர்துருக்கு இது அரிய சந்தர்ப்பமாகத் தோன்றியது.
தன் அடையாளத்தினை தெரியப்படுத்தாமல் சுமார் 600 gb அளவிலான கோப்புகளை முக்கிய ஊடகங்களுக்கு சிகர்துர் மூலம் பந்தி வைக்கப்பட்டு, மைல்ஸ்டோன் நிறுவனத்தின் மானம் அடுத்த நாள் தலைப்புச் செய்தியில் சந்தி சிரித்தது. அதுவரை சிறப்பாக அனைத்தையும் கடந்து வந்த சிகர்துர் சந்தித்த முதல் துரோகம் தன் வகுப்புத் தோழன் தன்னைக் காட்டிக் கொடுத்தது தான். மைல்ஸ்டோன் கோப்புகளை பகிரங்கப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, வழக்கும் தொடுக்கப்பட்டது, வாழ்க்கையே வெறுத்துப் போன சிகர்துருக்கு தெரிந்த ஒரு விடிவெள்ளி ஐஸ்லாந்து ஊடகத்தில் பழக்கமான கிறிஸ்டைன்.
இந்த கிறிஸ்டைன் வேறு யாருமல்ல, விக்கிலீக்ஸின் அதிகாரப்பூர்வ ஊடகத்தொடர்பாளர். அந்த காலகட்டத்தல் அப்பொழுது தான் விக்கிலீக்ஸ் சிறிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்த நேரம், சிகர்துர் பகிரங்கப்படுத்திய கோப்புகள் ஐஸ்லாந்தில் புயலைக்கிளப்பியதைக் கண்ட கிறிஸ்டைன், அகில உலகத்தையும் உறைய வைத்த ‘colateral murder’ காணொளியினை வெளியிடும் பணிகளுக்காக ஐஸ்லாந்தில் மையம் கொண்டிருந்த ஜூலியன் அசான்ஞ்சிடம் சிகர்துரை அறிமுகப்படுத்திய அந்த கணம் ஜூலியனுக்கு ஏழரை ஆரம்பித்தது.
தன்னைப் போலவே சிறுபிராயத்தினை கொண்டிருந்ததும், தன் சொந்த மகனின் வயதினை ஒத்திருந்த சிகர்துரிடம் அடுத்த சிலமணி நேரங்களின் தனியே அமர்ந்து சூப் சாப்பிடுமளவுக்கு மனதால் நெருங்கியிருந்தார் ஜூலியன். அடுத்த சில வாரங்களில் ஜூலியனின் நம்பிக்கைகுரிய உள்வட்டத்தில் சிகர்துருக்கு இடமளிக்கப்பட்டது. நினைத்த நேரத்தில் ஜூலியன் தொடர்பு கொள்ள குறியீட்டுமுறைப்படுத்தப்பட்ட கைப்பேசி வழங்கப்பட்டது, ‘colateral murder’ காணொளியின் தயாரிப்புப் பணியிலும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது சிகர்துருக்கு. முதலில் penguinX என்றும், பின்னர் ‘Q’ என்றும் புனைப்பெயரால் சிகர்துரை அனைவரும் அழைக்க ஆரம்பித்திருந்தனர்.
தொடர்து பலபேரும் ஜூலியனிடம், சிகர்துருக்குக் கூடி வரும் முக்கியத்துவத்தினை எச்சரித்தையும் மீறி விக்கிலீக்ஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ விவாதத்தளங்களை(chatroom/forum) நிர்வாகம் செய்யும் பொறுப்பு சிகர்துருக்கு வழங்கப்பட்டது. கேட்க சாதாரணமாக இருந்தாலும் இது நடந்த பொழுது ஸ்வீடனில் ஆடிய கபடி ஆட்டத்திற்காக இன்டர்போல் ஜூலியனைத் தேடிய நேரம், collateral murder காணொளியின் வெளியீட்டுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத்துறை தன் கழுகுக் கண்களை ஜூலியனின் மேல் அழுந்தப் பதித்திருந்த நேரம். விக்கிலீக்ஸின் விவாதத்தளங்களுக்கு வருபவர்கள் அமெரிக்க உளவாளிகளாகக் கூட இருக்கலாம், ஒவ்வொருவரையும் எடை போட்டு அனுமதிக்க வேண்டிய பெரும் பொறுப்பு சிகர்துரின் பிஞ்சுக்கைகளில் வரப்போகும் விபரீதங்களை அறியாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

தொடரும்.
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.