Thursday, May 5, 2011

இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...


நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமாகத் தெரியும் செய்திகளுக்கானப் புகைப்பட பதிவுகள், சிலருக்கு மனச்சிதைவைக்கூட ஏற்படுத்தலாம்.  பெரியவர்களுக்கே சவால் விடும் சக்திமிக்க ஊடகமான இணையத்தினை இன்றையக் குழந்தைகள் கையாளும் போது, இணையம் குறித்துத் தெரிந்த பெற்றோர்களுக்கு பதட்டமாக இருக்கும். அந்த பதட்டத்தின் காரணமாக மகனோ, மகளோ கணினி முன் அமர்ந்தால் வேறு வழியின்றி இவர்களும் கன்னத்தில் கைவைத்து திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள். இணையம் குறித்தான விவரங்கள அறியாத பெற்றோர்கள் தன் பிள்ளை சந்திரனுக்கு ராக்கெட் குறித்தான ஆராய்ச்சியில் இருப்பது போல மாயைத் தோன்றும், அதன் காரணத்தால் தனியறை ஒன்று ஏற்பாடு செய்து கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள். 


குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே. ஆனால் இணையத்தின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், எவ்வித தணிக்கை முறையும் மில்லாத ஊடகத்தின் கூர்மையான பக்கங்கள் உங்கள் குழந்தைகளின் வெள்ளை மனதில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தி, தீய வழியில் செலுத்த வாய்ப்பிருக்கிறது. என் பிள்ளைகள் எந்நேரமும் ஒரே கணினிதான், இணையம் தான் என்று பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் ஒரு பெற்றோராக உங்களின் கடமை வெறும் கணினியும், அதில் தூசு படியாமல் இருக்கு ஒரு ப்ளாஸ்டிக் கவரும் வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. உங்கள் பிள்ளைகள் நல்ல மனப்பக்குவமடையும் வரை இணையத்தின் முள்ளில்லா பாதைகளில் கரம் பிடித்து நடை பழக்குவதும் கூட ஒவ்வொரு பெற்றோரின் கடமை தான்.அதெல்லாம் சரி டாக்டர், இது குணமாகுறதுக்கு என்ன செய்யனும் என்று கேட்பவர்களுக்காகத் தான் இப்பதிவு. பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னெவென்றால் எப்பொழுது பிள்ளைகள் கணிணியில் உட்கார்ந்தாலும், அருகில் போய் உட்காருவதை சுத்தமாகத் தவிர்க்க வேண்டும். அவர்களாக சுதந்திரமாக இணையத்தினை எப்படியெல்லாம் நல்ல வழியில் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தி விட்டு ஒதுங்கி விட வேண்டும். அப்படி ஒதுங்கிப் போனால் பிள்ளைகள் இணையத்தில் என்னெவெல்லாம் செய்கிறார்கள் என்று எப்படிக் கண்காணிப்பது என்ற கவலை உள்ளவர்களுக்கு அருமருந்தாக பல மென்பொருட்கள் உள்ளன. விலைக்கு விற்கும் பல மென்பொருட்கள் இருந்தாலும் அவற்றிற்கு சிறிதும் சளைக்காத இலவச மென்பொருட்கள் என்றாலே நமக்குக் கொஞ்சம் கிக் அதிகம் என்பதால் பின்வரும் சில மென்பொருட்களை அறிமுகப் படுத்துவதில் சுடுதண்ணி பெருமிதம் கொள்கிறது. கொச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால் இதெல்லாம் கணினியில் வேவு பார்க்கப் பயன்படும் மென்பொருட்கள். பல இணைய மையங்களில் (Browsing Centers) இது போன்ற மென்பொருட்கள் தவறான வழியில் பயன்படுத்துவதாகக் கேள்வி, கவனமாக இருக்கவும். அதே போல நீங்களே தவறான வழிக்காக இவற்றைப் பயன்படுத்தவும் வேண்டாம். ஏற்கனவே பலமுறை சொன்னது போல என்னதான் தில்லுமுல்லு செய்தாலும் இணையத்தில் தப்பிக்கவே முடியாது என்பதில் மனதில் கொள்ளவும். 

K9 Web Protection:


இதனை இலவசமாக வழங்குபவர்கள் BlueCoat நிறுவனத்தார். இணையப்பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான இவர்கள் இணையத்தில் குழந்தைகளுக்கானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இம்மென்பொருளை இலவசமாக அளிக்கிறார்கள்.  இந்த மென்பொருளில் இணையத்தளங்களை சுமார் எழுபது வகைகளாகத் தரம்பிரித்து அதில் குறிப்ப்பிட்டத் வகை இணையத் தளங்களைப் பார்வையிடத்தடை செய்வது, உங்கள் கணினியில் குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் இணைய வசதி செயல்படுமாறு செய்வது, உங்கள் பிள்ளைகளின்  அன்றாட கணினி நடவடிக்கைகள் குறித்தானத் தகவல்களைப் பெறுவது போன்ற அற்புதமான வசதிகள் நிறைந்தது. 

Windows Live Family Safety 2011:

மைக்ரோசாப்ட் இயங்குதளத்திலும், உலாவியிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதி இருந்தாலும், கூடுதல் வசதிக்காக பில்கேட்ஸ் தரும் அன்புப்பரிசு தான் இம்மென்பொருள். இது சகல வசதிகளும் நிறைந்த ஒரு டீலக்ஸ் மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Chat Controller:


எந்நேரமும் சேட்டிங்கே கதியெனும் நிலைமைக்குத் தங்கள் குழந்தைகள் போய்விடுமோ என்று கவலைப்படும் பெற்றோர்கள் வயிற்றில் பாலாக ஊற்றப்பட்டது தான் Zemeric நிறுவனத்தின் Chat Controller  மென்பொருள். இதன் மூலம் உங்கள் கணினியில் செயல்படும் அனைத்து சேட்டிங் நிரல்களையும், அவை செயல்பட வேண்டிய நேரத்தினையும் மேலும் சேட்டிங்க் மூலம் பறிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும் கூட கண்காணிக்கும் வல்லமை மிக்கது இம்மென்பொருள். 

AOL Parental Control

மேற்சொன்ன அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட மென்பொருள், AOL நிறுவனத்தில் இருந்து. 

மேலே சொன்னவற்றில் சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்காமல், உங்கள் தேவைகளுக்கான வசதிகள் நிறைந்த மென்பொருளினைத் தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகள் இணையத்தினை நல்ல வழியில் பயன்படுத்த நெறிப்படுத்துங்கள். ஒரே வீட்டில் இணைய இணைப்பிலுள்ள கணினியையும், பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு சிரமப்படும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரிமும் இம்மென்பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற மென்பொருட்களையெல்லாம் டம்மியாக்கி, அட்டகாசம் செய்யும் அதிரடிக் குழந்தைகளைக் கணிப்பொறியியல் படிக்க வையுங்கள்.


இணையமெனும் அற்புதம், குழந்தைகளின் அபரிதமான அறிவு வளர்ச்சிக்கும், தெளிவான விழிப்புணர்ச்சிக்கும் மிக்க அவசியம். அதனைச் சரியான வழியில் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை நெறிப்படுத்த உதவும் மென்பொருட்களை அறிமுகப்படுத்திய மகிழ்ச்சியோடு இப்பதிவு நிறைவடைகிறது.

Wednesday, May 4, 2011

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - (முற்றும்)

ருடார்ப் எல்மர்

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்விஸ் வங்கிகளில் ஒரு கணக்குப்பிள்ளையாக, அதிகாரியாக பின்னர் மேலாளராக முட்டை வடிவக் கண்ணாடியை மூக்கு நுனியில் ஊஞ்சலாட விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த ருடால்ப் எல்மர் பின்னாளில் இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு பிரபலமடைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல நூற்றாண்டுகளாக ஸ்விஸ் வங்கிகள், 'ரகசியம்' என்ற ஒற்றைச் செங்கலில் கட்டியெழுப்பியிருந்த உலகின் மிகப்பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை மிக அமைதியாக, நிதானமாக, அழகாக, அற்புதமாக, சிறுகச் சிறுகச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார் எல்மர்.


கடைசியாக ஜூலியஸ் பேர் (julius baer) வங்கியின் கேமன்ஸ் தீவுகள் கிளையில்  உயரதிகாரியாக (Chief Operating Officer) பணியாற்றிக் கொண்டிருந்தார் எல்மர். அவர் நினைத்திருந்தால் அழகிய வளைவுகள் நிறைந்த கடற்கரையில் வார இறுதியில் காற்று வாங்கி, அதோடு சேர்த்துக் கொஞ்சம் கவிதையும் வாங்கி ரம்மியாக வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பதவிகளுக்கு முன்னேறிய எல்மருக்கு ஓரளவுக்கு மேல் பதவி உயர்வு பெற்ற பிறகு தான்,  'ரகசியம்' என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தினை பாதுகாக்கும் பூதங்களிடம் தான் பணிபுரிவது உறைத்தது. அப்பாவியான எல்மர் 'டீச்சர், டீச்சர் இவன் என்னை கிள்ளி விட்டுட்டான் டீச்சர்' கணக்காக ஸ்விஸில் இருக்கும் தலைமையகத்துக்கு ஓடினார், நம் வங்கியின் ரகசியத்தன்மையை இவ்வாறு வரி ஏய்ப்பு செய்யும் கறுப்புப் பண முதலைகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆவேசத்துடன் புகார் செய்த எல்மரைப் பார்த்து, தனியாக நிற்கும் கதாநாயகியைக் கண்ட வில்லன் போல் சிரித்தார்கள். 

விளைவு எல்மர் வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்டார், வங்கியின் விதிமுறைகளை மீறியதாகவும், ரகசியத் தகவல்களைத் தரக்கோரி மற்ற ஊழியர்களை மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த எல்மர், ஜூலியஸ் பேர் எனும் ஆக்டோபசிடம் தனியாகப் போராடினால் சில்லுத் தெரித்துவிடும் என்றுணர்ந்து நேரே மொரிஷியஸ் சென்று என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு சில வருடங்கள் யோசித்தார். பின்னர் திடீரென லண்டன் மாநகரில் ஒரு அதிகாலை, சுபவேளையில் கால்பதித்தார். அவர் நேரே சென்று சந்தித்தது நமக்கும் மிகவும் பழக்கமான விக்கிலீக்ஸ் ஜூலியன் அசான்ஞ்.

ஜூலியனுடன், எல்மர் - பத்திரிக்கையாளர் சந்திப்பில்

விக்கிலீக்ஸின் கடந்த கால நடவடிக்கைகளைப் பார்த்த எல்மருக்கு நம்பியார், ரகுவரன் போன்ற ரேஞ்சில் இருக்கும் மிகப்பெரிய வில்லன்களிடம் மோதிக் கொண்டிருக்கும் ஜூலியனுக்கு ஜூலியஸ் பேர் வங்கி ஒரு கொசு என்று தோன்றியதில் ஆச்சர்யமில்லை. ஏற்கனவே ஸ்வீடனில் அல்வா கொடுத்த விஷயத்தில் தன்னை அலைக்கழிக்கும் ஐரோப்பிய யூனியனின் மேல் உஷ்ணப் புகை விட்டுக் கொண்டிருந்த ஜூலியனுக்கு, எல்மர் தேடி வந்த தேவதையாகத் தெரிந்தார். எவ்வளவோ பார்த்து விட்ட ஜூலியனுக்கு இதைப் பார்க்கத் தெரியாதா?. எலமருக்கு ஆரத்தி எடுத்து முறைவாசல் செய்து, பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து அமைதியின் மறு உருவமான எல்மரை உலகை ஏய்த்து கருப்புப் பணம் குவிக்கும் பணக்காரர்களை எதிர்த்து சாமியாட வைத்து, 1997 முதல் 2002 காலகட்டத்தில் முறைகேடாக ஜூலியஸ் பேர் வங்கியில் முதலீடுகள் செய்த சுமார் 2000 வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளை எல்மரிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜூலியன். அடுத்த சில நாட்களில் ஸ்விஸ் வந்திறங்கிய எல்மர் கைது செய்யப்பட்டுப் பின் பிணையில் வெளிவந்து தன் மீதான வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

தான் எப்படியும் ஸ்விஸ் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட போகிறோம் என்று தெரிந்ததும் தன்னிடமிருக்கும் தகவல்கள் மூலம் உலக மக்களுக்கு ஸ்விஸ் வங்கிகளின் மர்மக்குகைகளுக்குள் என்ன நடக்கிறதென்பதை எப்படியாவது தெரிவித்து விட வேண்டுமென்பதுதான் எல்மரின் குறிக்கோள். எந்த பின்விளைவுகள் குறித்தும் ஒரு நொடி கூட அலட்டிக் கொள்ளாமல் எங்களிடம் இதுவரை கிடைத்த ரகசியங்கள் எப்படிக் கையாளப்பட்டதோ அதன்படி எல்மரின் தகவல்களும் சரிபார்க்கப்பட்டு அடுத்த சில வாரங்களில் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்று ஜூலியன் சூளுரைத்து முழுசாக மூன்று மாதங்களாகி விட்டன. இந்நேரம் ஜூலியனுக்குத் தெரிந்திருக்கும் எப்பேர்ப்பட்ட இடியாப்பத் தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம், அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது. எனினும் ஜூலியனும், எல்மரும் அடுத்தடுத்து அளித்த பேட்டிகளில் எந்த நேரமும் விக்கிலீக்ஸ் விளக்கிலிருந்து பூதம் கிளம்பலாம் என்றே தெரிகிறது. எப்படியும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக வந்து விடும் என்று உலகமே விக்கிலீக்ஸ் தளத்தின் முதல்பக்கத்தினை அழுத்தி, அழுத்தி விரலைத் தேய்த்துக் கொண்டிருக்கிறது. 


அதெல்லாம் சரி, இதெல்லாம் தெரிந்து எனக்கென்ன ஆகப்போகிறது என்று யாரும் மனந்தளர வேண்டாம் மகா ஜனங்களே, அந்த இரண்டாயிரம் பேரில் சில/பல இந்தியர்களின் பெயரும் இருப்பதாக ஜூலியன் கூறியிருக்கிறார். அதனால் விரைவில் இந்திய ஊடகங்களில் பெருச்சாளிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கோரசாக 'இதுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, எல்லாமே சும்மா' என்று ஊளையிடுவதைக் காணத் தயாராகுங்கள். உலகத்தில் இவ்வளவு சமாச்சாரம் நடக்கிறதே நம்ம ஊர் பஞ்சாயத்தார் நம் வீட்டுக் கறுப்புப் பணம் குறித்துக் கவலைப் படவில்லையா என்று கேள்வி கேட்பவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். நம்ம ஊர் மண்ணுமுட்டிகள் ஸ்விட்சர்லாந்துக்கும் நமக்கும் ராசாங்க ஒப்பந்தம் இருக்கிறது, இது போன்ற விவரங்கள் மட்டுமல்ல தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட ஸ்விர்சர்லாந்துக்கு கோபம் வந்துவிடும் என்று பாரளுமன்றத்தின் கழிப்பறையிலேயே விவாதத்தினை மு(மூ)டித்து வைத்திருந்தனர். 

இதைக் கேள்விப்பட்ட ஸ்விட்சர்லாந்தோ அப்படி எந்த ஒப்பந்தமும் இந்தியாவிடம் நாங்கள் போடவில்லை, அதுமட்டுமல்ல ஒப்பந்தமிருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களிடம் யார் கேட்டாலும் எங்கள் சட்டத்தின் படி குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே தரமுடியும் என்று திருப்பியடித்தது. சமீபத்தில் ஏதோ ஒரு புண்ணியவான் போட்ட பொதுநல வழக்கில் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து 8 பில்லியன் டாலர்களுக்கும் மேல் ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்து வெளியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹசன் அலி என்பவரை, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மானக்கேடாகத் திட்டிய பிறகு சிறையில் பிரியாணி சாப்பிட ஏற்பாடு செய்திருக்கின்றனர். 


உலக வரலாற்றில் தனிச்சிறப்பும், பாரம்பரியமுமிக்க ஸ்விஸ் வங்கிகளின் பெருமைகள் இரண்டு குறுந்தகடுகளில் ஜூலியனின் மடிக்கணினியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவை வெளியில் உலவ வரும் நேரத்திற்காக கோரப்பசியுடன் ஊடகங்கள் காத்திருக்கின்றன. நாமும் காத்திருப்போம். 

Tuesday, May 3, 2011

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 3


வலையமைப்பிற்கான பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறையில் வந்து குவியும் ஒவ்வொரு இணைப்பிற்கான தகவல்களையும் சரி பார்ப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. இவ்வாறு திரட்டப்படும் தகவல்களை நிர்வகிப்பதற்கென மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. அம்மென்பொருட்கள் மூலம் தேவைக்கேற்ப விதிமுறை நிரல்களை எழுதிக்கொள்ளலாம். குறிப்பிட்ட விதிமுறை மீறப்பட்டால் மட்டும் அந்த மென்பொருள் வலையமைப்பு வல்லுநர்களுக்கு தகவல் தெரிவிக்கும். அவர்களும் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆய்வுகளைச் செய்து சரி பார்ப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு வாடிக்கையாளர்  இயல்பாக முதலிரண்டு முறை தவறான கடவுச்சொல் கொடுத்து விட்டு பின்னர் சரியான கடவுச்சொல் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மேற்சொன்ன மூன்று இணைப்புத் தகவல்களில் எதுவும் பிரச்சினைக்குரியது இல்லை. அதே நேரம் ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளில் 100 முறை தவறான கடவுச்சொல் தகவலை உள்ளிட்டதாக இணைப்புத் தகவல்கள் சொன்னால் அது நிச்சயம் வில்லங்கமானது தான். இது போன்று ஒவ்வொரு பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களையும் பரிசீலித்து அவற்றினைச் சமாளிப்பதற்கேற்ப தங்கள் விதிமுறை நிரல்களை அமைத்துக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு தனித்தனித் தகவல்களையும் ஆராயாமல். தங்கள் விதிமுறை நிரல்களை மீறும் தகவல்களை மட்டும் ஆராய்ந்து அலசி வலையமைப்பின் பாதுகாப்பினை நிலை நாட்டுகிறார்கள்.


இவ்வளவு கட்டுக்காவலிலும் சிட்டுக்குருவி மாதிரி தகவல்களைக் கொத்திக் கொண்டு போகும் பிஸ்தாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வளவு பெரிய மதில் சுவராக இருந்தாலும் பொறுமையாக ஒவ்வொரு கல்லாக அசைத்துப் பார்த்து, நிதானமாக திருட்டு மாங்காய் சுவைப்பது இவர்களுக்கு கைவந்த கலை. அப்படி எந்த வகையிலும் தகர்க்க முடியாத வலையமைப்புகளுக்கென இருக்கவே இருக்கிறது 'social engineering' முறை. அதாவது தாவணிகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் விவரங்களை எதிரிலிருக்கும் ஒரு டைலர் கடையிலோ அல்லது டீக்கடையிலோ அடிக்கடி சென்று வசூலிப்பது போல, தகர்க்க நினைக்கும் வலையமைப்பினுள்ளே வேலை பார்க்கும் ஏதாவது ஒரு நபருடன் 'வாங்க பழகலாம்' திட்டத்தின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய பிரத்யேகத் தகவல்கள் மற்றும் பணியிடம் சம்பந்தப்பட்டத் தகவல்களை அவர்கள் அறியாமலேயே பேச்சுவாக்கில் போட்டு வாங்கிக் கொள்வது. அதிலும் ஜெயமில்லையென்றால்,  கடைசி பிரம்மாஸ்திரம் "பணம்", பிணம் கூட வாய்திறந்து கடவுச்சொல்லைச் சொல்லி விட்டு பழக்க தோஷத்தில் ஓட்டுப் போட விரலையும் நீட்ட வாய்ப்பிருப்பதால் இது தான் எளிதான மற்றும் 'வலி'மையான வழிமுறை.

மேலே சொல்லப்பட்டுள்ள "பணம்" கொடுத்துத் தகவல் பெறுதல் மற்றும் 'Social Engineering" ஆகியவற்றைப் பிறரால் தடுக்க முடியாது. ஆனால் ஸ்விஸ் வங்கிகளின் விஷயத்தில் அந்நாட்டின் சட்டம் அதற்குக் கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதால் இவை கட்டுக்குள் இருக்கின்றன. எனவே ஸ்விஸ் வங்கிகளின் ஒரே பிரச்சினை எந்த தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகவும் தங்கள் தகவல்கள் இணைய இணைப்பில் கசிந்து விடக் கூடாது என்பது தான். பொதுவாக ஒரு இணைய இணைப்பில் தகவல்களைத் திருடுவதற்கு இரண்டு முறைகள் மிக புகழ்பெற்றது. ஒன்று Man in Middle Attack மற்றது Trojan Attack. 


Man in the Middle Attack என்பது வாடிக்கையாளர் மற்றும் வங்கி இணைப்பிற்கு நடுவே நந்தி போல் இருந்து கொண்டு, வங்கிக்கு வாடிக்கையாளர் போலவும், வாடிக்கையாளருக்கு வங்கி போலவும் தகவல்களைப் பறிமாறிக் கும்மாளம் போடுவது. Trojan Attack என்பது தகவல்களைத் திரட்டித் தரும் மென்பொருளை எப்படியாவது வாடிக்கையாளரின் கணினியில் நிறுவி விடுவது. அதன் பின் வாடிக்கையாளரின் கணினியில் நடக்கும் அத்தனை நடவடிக்கைகளும் சேர வேண்டிய இடத்திற்குச் சென்று கொண்டேயிருக்கும். இவையிரண்டில் Trojan Attack முறைக்கு வாடிக்கையாளரே பொறுப்பாளி. தேவையற்ற மென்பொருட்களை நிறுவுவதைத் தடுப்பதற்கேற்ப பாதுகாப்பு மென்பொருட்களை நிறுவி வைத்து தனது கணினியினைப் பாதுகாத்துக் கொள்வது அவர் பொறுப்பு. 


ஆனால் இந்த Man in Middle Attack கொஞ்சம் வில்லங்கமானது மற்றும் இது போன்ற தகவல் திருட்டு சாத்தியமானால், அவ்வாறான பாதுகாப்புக் குறைவான இணையத் தொடர்பினைத் தனது வாடிக்கையாளருக்கு வழங்கிய குற்றம் வங்கியினையேச் சாரும். இது போன்ற அத்தனைப் பிரச்சினைக்கும் தீர்வாக இணையப் பாதுகாப்பு வல்லுநர்களால் வழிமொழியப்ப்பட்டது தான் 2 Factor Authentication (2FA). அதாவது உங்கள் பயனர்ச் சொல், கடவுச்சொல் இவற்றைத் தவிர மூன்றாவது ஒரு தகவல் வாடிக்கையாளரிடம் இருந்து பெரும் முறை.


இந்த 2FA முறையின்படி பயனாளர்களுக்கு ஒரு இலத்திரனியல் கருவித் தரப்படும் (token) அதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் வெவ்வேறு ஆறு இலக்க எண் தோன்றும் (இது நான்கு முதல் எட்டு இலக்க எண் வரை இருக்கலாம்).   வாடிக்கையாளர் தங்கள் கணக்கினை இணையத்தின் மூலம் கையாளும் போது தங்களின் கடவுச்சொல்லுடன் இந்த ஆறு இலக்க எண்ணையும் சேர்த்து கடவுச்சொல்லாக வழங்க வேண்டும். உங்களின் பயனர்ச்சொல்லும், கடவுச்சொல்லுடன் ஆறு இலக்க எண்ணும் இணையத்தில் பயணித்து வங்கியில் வலையமைப்பினைச் சென்று சேர்ந்ததும், உங்கள் தகவல்களை  கணினி ஒன்று (Authentication Manager) உறுதி செய்யும். அந்த கணினியில் வங்கியின் சார்பில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து இலத்திரனியல் கருவிகளின் விவரங்கள், அதனை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பயனர்ச்சொல் விவரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். உங்கள் பயனர்ச்சொல்லைக் கண்டதும் உங்களிடம் இருக்கும் கருவியில் அந்த நிமிடத்தில் என்ன ஆறு இலக்க எண் தோன்றியிருக்கக் கூடும் என்பதனை ஒரு சிறப்பு நிரலின் மூலம் கணித்து உங்கள் அடையாளத்தினை உறுதி செய்யும். ( பார்க்கப் படம்).

இன்றையத் தேதிக்கு இந்தத் தொழில்நுட்பம் தான் சுவை, திடம், நிறம் மூன்று நற்குணங்களும் நிறைந்த த்ரீ ரோஸஸ். இதைத்தான் ஸ்விஸ் வங்கிகள் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றன. இதனைப் பயன்படுத்திப் பார்க்க நீங்கள் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ஜொள்ளியவராக இருக்க வேண்டியதில்லை. அறந்தாங்கியில் மாதச்சம்பளம் வாங்கும் குமரேசன் கூட வெறும் மின்னஞ்சல் மூலம் ஏதெனும் ஒரு ஸ்விஸ் வங்கியில் வங்கிக் கணக்கினைத் திறக்க முடியும். உங்களுக்கு வங்கியில் அனுப்பப்படும் கடிதத்தில் இந்த இலத்திரனியல் கருவியும் அனுப்பி வைக்கப்படும், பயன்படுத்தி மகிழலாம்.


இந்த அளவுக்கு தங்கள் பாதுகாப்பு விவரங்களினை இணையத்தில் கசிய விடாமல் இறுக்கிப் பிடித்திருந்த ஸ்விஸ் வங்கிகளின் வேட்டியை உருவுவதற்கென ஒருவர் பிறந்திருந்தார். விதி வலியது.... :).

அடுத்த பகுதியில்.....

Monday, May 2, 2011

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 2


நிதி மேலாண்மையில் Offshore Asset Protection என்று ஒரு சங்கதி இருக்கிறது. அதாவது உங்கள் சொத்துக்களைப் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டில் முதலீடு செய்து வைப்பது. அவ்வாறு முதலீடு செய்யும் நாட்டில் தரமிக்க சட்டப் பாதுகாப்பு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது இதன் முக்கிய சாராம்சம். அன்னிய நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக செசல்ஸ், மொரீஷியஸ், ஸ்விஸ் போன்ற பல நாடுகள் இதற்கெனத் தனி சட்ட வரைவினை செயல்படுத்தி வைத்திருக்கின்றன. அதனால் இவர்களிடம் போய்ச் சேர்வதில் பெரும் பகுதி உள்நாட்டில் சேமிக்க முடியாத அளவுக்கு நிர்ப்பந்தத்தில் இருக்கும், மக்கள் சேவையே மகேசன் சேவையெனக் கருதி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அனுதினமும் பாடுபடும் அரசியல்வாதிகள் என்பது கடுப்பேற்றும் உண்மை. இதன் காரணமாகத் தான் அடிக்கடி இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் செசல்ஸ், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு விசாரணைக்காக செல்வது குறித்தும் அல்லது அவர்களின் விசாரணையில் இந்த நாடுகள் குறித்தான சொல்லாடல்கள் கலந்திருப்பதையும் இன்னமும் இது போன்ற செய்திகளைக் கடைசி வரி வரை பொறுமையுடன் படிக்கும் அன்பர்கள் அறிந்திருப்பீர்கள்.


உங்களிடம் முறைப்படியோ அல்லது முறைதவறியோ அல்லது பொதுச்சேவை காரணமாக எப்படியென்றே தெரியாமல் திடீரென பல கோடி பணம் சேர்ந்து விட்டால், அதனை நேரடியாக உங்கள் பெயரில் சேமிக்காமல், சட்டரீதியான பாதுகாப்பினைத் தரும் ஏதாவது ஒரு நாட்டில் ஒரு 'பால்பாண்டி அன் கம்பேனி' என்ற ஒன்றை பதிவு செய்து அந்த நிறுவனத்தின் பெயரால் உங்கள் பணத்தை முதலீடு செய்வதே பெரும்பாலும் கையாளப்படும் வழிமுறை. இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், எவ்வளவு பணம் சேர்த்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு ஆடிட்டர் காலில் விழுந்து தான் ஆக வேண்டும்.  அந்த ஆடிட்டர்களின் அறிவுரைப்படி தான் இது போன்ற முதலீடுகள் உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்கோ ஒரு குட்டி நாட்டில் கொண்டு குவிக்கப்படுகின்றன. உலக அளவில் இது வெகுகாலமாக நடந்து கொண்டிருந்தாலும், லேட்டாக ஆனால் லேட்டஸ்டாக வந்த பாரத மாமணிகள் 1947க்குப் பிறகு ஓட ஆரம்பித்து, வெறும் 65 ஆண்டுகளில் உலகில் முதலிடம் வந்திருக்கிறார்கள் என்றால், இவர்களின் அயராத உழைப்பு பிரமிக்க வைக்கிறது. 

தலைப்புக்குச் சம்பந்தமேயில்லாமல் இதெல்லாம் ஏன் சொல்லபடுகிறதென்றால், பெரும்பான்மையான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் எல்லாமே இது போன்ற வெளிநாட்டு முதலீடுகள் தான். இன்றைய அவசர உலகில், உலகமெங்கும் பரந்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களின் சிறப்பு வசதிக்காக இணையத்தில் மூலம் வங்கிக் கணக்குகளை கையாள அனுமதிப்பது தவிர்க்க முடியாது என்பதாலும், இது போன்ற கணக்குகள் வைத்திருப்பவர்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குப் பயணிப்பதை விரும்புவதில்லையென்பதாலும் ஸ்விஸ் வங்கிகள் இணையத்தில் மிக எச்சரிக்கையாகக் காலடியெடுத்து வைத்தன. இருப்பினும் முன்னெச்சரிக்கையில் மூக்கு வேர்க்கும் வியாதி பலருக்கு இருப்பதால் இன்றளவிலும் சில வங்கிகளும், பல வங்கிகளின் சிறப்பு ரகசியக் கணக்குகளும் இணைய வசதியின்றியே செயல்படுகின்றன என்பது சிறப்பு.


முதலில் ஸ்விஸ் வங்கிகள் மட்டுமின்றி இணையத்தில் உலகை வலம் வரும் உலகின் அதி ரகசியத் தகவல் பறிமாற்றங்களைக் கையாளும் இணைய வழங்கிகள் அனைத்துமே சிறப்பு அதிநவீன வசதிகளால் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வழங்கிகள் தீ விபத்துகளால் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு இரும்புப்பெட்டக அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும் (Fire proof Data Center). இந்த அறையினை கைரேகை அல்லது விழித்திரை பதிவுகள் மூலம் மட்டுமே திறக்க முடியும் (Biometric Authentication). அப்படித் திறப்பதற்கு என்று குறைந்த பட்சம் மூன்று பேர் கொண்ட குழு இருக்கும். அந்த மூன்று பேரும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கைரேகை அல்லது விழித்திரைப் பதிவுகளை உள்ளிட்டால் மட்டுமே ஒருசேர அறைக்குள் நுழைய முடியும். இதன் மூலம் நேரடியாக ஒரு தனிநபர் வழங்கி இருக்குமிடத்திற்குச் சென்று தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புத் தடுக்கப்படுகிறது.இதைத் தவிர பயணிகள் விமான நிலையத்திலும், இராணுவ விமானத் தளங்களிலும் செயல்படும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையினையும் (Air Traffic Control Room), போர்க் காலங்களில் இராணுவத்தலைமை செயல்படும் யுத்தக் கட்டுப்பாட்டு அறையினையும் (War  Control Room) ஒத்த வலையமைப்புப் பாதுகாப்பு மையம் (Network Security Operations Control Room) ஒன்று 24x7 செயல்பாட்டில் இருக்கும். அந்த அறையில் தங்கள் வழங்கிகளின் போக்குவரத்து அடர்த்திற்கேற்ற அளவிலான வலையமைப்பு வல்லுநர்கள், தொடர்ந்து உலகின் பல மூலைகளிலிருந்தும் தங்களின் வழங்கிகளை இணையத்தின் மூலமோ (External Traffic) அல்லது வங்கியிலேயே பணிபுரியும் நபர்கள் உள்வலையமைப்பின் மூலமோ (Internal Traffic) வழங்கிகளைத் தொடர்பு கொள்ளும் இணைப்புகளை கண்ணிமைக்காமல் ஒரு கூட்டமாக கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.


இதற்கென சிறப்பு அதிநவீன உபகரணங்கள் (event collectors) உள்ளன. அவற்றை தங்கள் வலையமைப்பின் பல பகுதிகளில் இணைத்திருப்பார்கள். இந்த உபகரணங்கள் தங்கள் இருக்கும் வலையமைப்பின் பகுதியில் பயணிக்கும் இணைப்பு எந்த கணினியிலிருந்து பயணிக்கிறது என்பது முதல், வழங்கியின் எந்தெந்த கோப்புகளை கையாள்கிறது என்பது வரையிலான தகவல்களை வலையமைப்பு பாதுகாப்பு மையத்திற்கு நேரலையில் தெரிவிக்கும். படிக்கும் வேகத்தில் இது சாதரணமாகத் தோன்றினாலும், மிகப் பரபரப்பாக செயல்படும் வழங்கிகளில் நொடிக்கு ஆயிரக்கணக்கில் இது போன்று தகவல்கள் அள்ளித் தெளிக்கப்படும். அவற்றில் ஒவ்வொன்றையும்  விடாமல் ஆராய்ந்து, போலீஸ் பார்வைப் பார்த்து தெளிவதற்குள் ஒட்டு மொத்தப் படமும் முடிந்து விடும்.


இதுப்போன்ற நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க இவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப வசதிகள் என்ன, எதன் அடிப்படையில் நல்ல இணைப்பையும், கள்ள இணைப்பையும் தரம் பிரிக்கிறார்கள், அதனையும் முறியடித்து எப்படித் தகவல்கள் கசிகின்றன, இவற்றுக்கெல்லாம் மேலாக ஸ்விஸ் வங்கிகள் பயன்படுத்தும் சிறப்பு பாதுகாப்பு வழிமுறை என்ன ஆகியவை அடுத்த பகுதியில்.

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 1


ஸ்விட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிமலையும், சாக்லேட்டும். அதே போல ஸ்விஸ் வங்கிக் கணக்குகளுக்கென்றும் ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. கத்தைக் கத்தையாய்க் கரன்சிகள் சலவையாய் அடுக்கப்பட்டு, ஒரு பக்கம் தங்கக் கட்டிகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், மிகக்கடுமையான இரும்புப் பெட்டகத்திற்குள் திருட்டுப் பணம் பாதுகாப்பாக இருப்பதைப் போலவும் நமக்குத் தோன்றலாம். இதையெல்லாம் தாண்டி ஸ்விஸ் வங்கி என்றதுமே ஆழ்மனதில் முதலில் தோன்றும் விஷயம் "ரகசியம்" மற்றும் "அது பணக்காரர்களுக்கானது". இந்த இரண்டில் ரகசியம் மட்டுமே உண்மை, மற்றபடி ஸ்விஸ் வங்கிக் கணக்கென்பது நம்ம ஊர் பொட்"டீ"க்கடை கணக்கு போலத்தான் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இத்தொடரில் ஸ்விஸ் வங்கிகள் குறித்தும், வங்கிகள் இணையச்சேவை வழங்குவது சாதரணமாகி விட்ட இக்காலக்கட்டத்தில் இணையத்தின் வீச்சுக்கேற்ப தங்கள் 'ரகசிய' முத்திரையைச் சேதப்படாமல் எவ்வாறு ஸ்விஸ் வங்கிகள் காத்துக் கொள்கின்றன என்பது குறித்தும் பார்க்கலாம்.


வரலாறு நமக்கு மிக முக்கியமாதலால், ஸ்விஸ் வங்கிகளின் ஆரம்ப நாட்களைச் சிறிது நுனிப்புல் மேய்ந்து விட்டுத் தொடருவோம். நம்ம ஊர் போலவே பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் கடன், வட்டி,  'சீட்' பண்ட், சேமிப்பு வகையறாக்களைக் கையாளும் செல்வந்தர் குடும்பங்கள் பல ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தனர்.  அந்த காலத்தில் பிரான்ஸ் மன்னர்களே சரக்கடிக்க காசில்லாவிட்டால், 'ஏலே சண்முகம், எடுறா வண்டிய' என்று ஸ்விட்சர்லாந்து கிளம்பி கடன் வாங்கி வரும் அளவிற்கு பணக்காரக் குடும்பங்கள் ஸ்விஸ்லிருந்து தொழில் செய்து கொண்டிருந்தனர். பிரான்ஸ் மன்னர்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று குளிப்பது மற்றொன்று தங்களைப் பற்றிய பிரத்யேக தகவல்கள் வெளியே கசிவது. இவர்கள் வசதிக்காகத் தான் முதல் முறையாக ஸ்விஸ் வங்கிகள் சங்கேதக் குறியீடுகள் மூலம் வங்கிக் கணக்குகளைத் துவக்கினர். பின்னாளில் அதுவே அவர்கள் உலக அளவில் புகழ் பெறக் காரணமாகி விட்டது. சர்வதேச அளவில் எந்த குழுவிலும் சேராமல் நடுநிலை நாடாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட நாடு ஸ்விட்சர்லாந்து என்பதால் கூடுதல் பாதுகாப்புடன் வங்கிகள் செழித்தன.


இவ்வங்கிகள், 1713ஆம் ஆண்டிலேயே அப்போதைய சட்ட நிர்வாக அமைப்பான ஜெனிவா கவுன்சிலால், வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை, கவுன்சில் அனுமதியின்றி யாருக்கும் தெரிவிக்கத் தேவையில்லை என்று அறிவித்து உரம் போட்டு வளர்த்து விட்டது. அச்சட்டத்தின் படி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியே சொன்னால் அபராதம் கட்ட வேண்டும். ஒரு வேளை வாடிக்கையாளர் ஸ்விட்சர்லாந்து சட்டத்தின் படி கிரிமினல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் தகவல்களை வங்கிகள் வெளியிடலாம். ஸ்விஸ் வங்கிகளின் ரகசியச் சேவை, நேர்மையாகவோ அல்லது கருமையாகவோ கடும் பணம் சேர்த்த அன்பர்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்ததால் ஸ்விஸ் வங்கிகளில் பணம் குவிய ஆரம்பித்தன.

ஹிட்லர்
ரகசியக் கணக்கென்பதால் தங்கள் நெருங்கிய ரத்த உறவுகளிடம் கூட சொல்லாமல் வைத்திருந்து, எதிர்பாராமல் மரணிக்க நேர்ந்து விட்டால், வங்கிகள் அவர்களின் சட்ட ரீதியான வாரிசைத் தேடும். அவ்வாறு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வங்கி அறிவித்து விட்டால் மொத்த கணக்கும் கம்பெனிக்கே சொந்தம் :).  முதலாம் உலகப்போரின் போது ஏற்பட்ட பெருத்த உயிரிழப்பின் போது ஏகப்பட்ட கணக்குகள் அந்த அடிப்படையில் ஸ்வாகா செய்யப் பட்டன. ஆனாலும் ஜெர்மனியும், பிரான்ஸ் மேற்படி கணக்குகளை நல்லெண்ண அடிப்படையில் தங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஸ்விஸ் வங்கிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹிட்லர் தன் உளவாளிகளை அனுப்பி ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஜெர்மானியர்களின் விவரங்களை சேகரித்து கொலை செய்து அவர்களின் கணக்குகளைத் அரசாங்கத்தின் பெயரில் மாற்ற ஆரம்பிக்க, விஷயம் ரொம்ப விகாரமாவதைக் கண்ட ஸ்விஸ் அரசமைப்புப் புதிய சட்ட திருத்தம் ஒன்றை 1934 ஆம் ஆண்டில் கொண்டுவந்ததது. அதன்படி வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை தங்கள் அனுமதியின்றி வெளியில் சொல்லுவதைக் கிரிமினல் குற்றமாக வகைப்படுத்தி கடும் சிறை தண்டனை வழங்க ஆணையிட்டது. அன்று முதல் இன்று வரை எப்பேர்ப்பட்டத் தில்லாலங்கடியாக இருந்தாலும் ஸ்விஸ் அரசிடம் சென்று முறைப்படிக் கெஞ்சினால் தான் வங்கி விவரங்களை கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலிக்கப்படும்.


இப்படியாக நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக தழைத்தோங்கிய ஸ்விஸ் வங்கிகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஹிட்லருக்கே அசைந்து கொடுக்காதவர்கள் என்று உலகம் முழுவதிலிருந்தும் வாடிக்கையாளர்கள் கும்ம ஆரம்பித்தனர். சும்மா சாமி கும்பிடும் கோவிலில் கூட்டம் அதிகமானால் நூறு, ஐநூறு, ஆயிரம் என ரகம் பிரித்து வரிசைக் கட்டி தரிசனம் பார்க்க விடுவது போல், வங்கிகள் தங்கள் தரத்திற்கேற்ப குறைந்த பட்ச வைப்பு நிதியாக ஐந்தாயிரம் டாலர்கள் முதல் பல மில்லியன் டாலர்கள் வரை கேட்க ஆரம்பித்தன. மிக மிக ரகசிய கணக்குகள் துவங்கும் வாடிக்கையாளர்கள் தாங்கள் திடீரென மரணித்தால் தங்கள் பணம் பறிபோய் விடும் வாய்ப்பிருப்பதால், தங்களின் வாரிசு குறித்தானத் தகவல்களை வங்கியில் முன்கூட்டியே தெரிவிப்பது அல்லது உறையிலிடப்பட்டக் கடிதத்தில் சமர்ப்பித்து, தாங்கள் மரணித்தப் பின் வாரிசு குறித்து வங்கி தெரிந்து கொள்வது போன்ற வழிமுறைகள் வந்தன.

திரு. & திருமதி. மொபுட்டு
உங்கள் தாத்தாவோ அல்லது ஒன்று விட்ட பெரியப்பாவோ ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருந்ததாகத் தெரியவந்து நீங்கள் ஆதாரத்துடன் ஷேர் ஆட்டோவில் சென்று ஸ்விட்சர்லாந்து இறங்கி நிரூபித்தாலும் பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதன் அடிப்படையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு காங்கோ நாட்டின் சர்வாதிகாரி மொபுட்டுவின் வாரிசுகளுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது உபரித் தகவல்.

இப்படியாகத் தங்களின் ரகசியத் தன்மை குறித்து பலப்பல பில்டப்களைக் கொடுத்து வந்த ஸ்விஸ் வங்க்கிகள் இது நாள் வரை வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்குகள் குறித்து விளம்பரப் படுத்தியதோ அல்லது வங்கி இருக்கும் வீதி வழியாக செல்வோரைக் கையைப் பிடித்து இழுத்து கணக்கு ஆரம்பிக்க சொன்னதோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். வாழ்க்கை ஒரு வட்டம், மேலே இருப்பது கீழே போகும், கீழே இருப்பது மேலே போகும் என்ற தமிழ்ப்பட வசனகர்த்தாக்களின் பொன்மொழிக்கேற்ப உச்சத்தில் இருந்த ஸ்விஸ் வங்கிகள் தங்கள் வரலாற்றில் ரகசியத்தன்மைக்காக சந்தித்த மிகப்பெரியச் சவால் தான் இணையம்.


காலத்தின் கட்டாயமாகிக் போன இணையத்தில் எதுவுமே ரகசியமில்லை என்பதும், வலைக்கட்டமைப்புக்களை உடைத்து, உடைத்து விளையாடும் வயசுப்பிள்ளைகள் அதிகமான இணைய உலகத்தில் பூட்டி, பூட்டி வைத்தாலும் பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதும் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. எங்கெங்கோ ஹேக்கிங் மூலமாக இணையத்தில் தகவல் திருட்டு நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் இதுவரை இணையத்தில் தங்கள் ரகசியத் தகவல்களை எந்த ஸ்விஸ் வங்கியும் ஹேக்கிங் மூலமாக இழந்ததில்லை. எப்படி அது சாத்தியம்?. அடுத்த பகுதியில்.

Thursday, March 17, 2011

விக்கிலீக்ஸ் - தி ஹிந்து பெருமையுடன் இணைந்து வழங்கும் . . .


கடந்த செவ்வாய்க் கிழமையன்று லண்டன் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடம் உலக அரசியல் மாற்றங்களும், இணையத்தின் தாக்கமும் என்ற தலைப்பில் ஜூலியன் அரட்டை அரங்கம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், தி ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'cable leaks' வெளியீடுகளில் இந்தியா குறித்தானத் தொகுப்புகளை வெளியிடுவதாக அறிவித்து, அதனைத் தினந்தோறும் வெளியிட்டும் வருகிறது. அது பற்றிய ஒரு அலசல் இப்பதிவு.

இணையத்தின் மூலம் உலக அரங்கில் அரசியல் மாற்றங்கள் வரப்போவதை சென்ற வருடமே லாட்வியாவில் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சுடுதண்ணியில் ஆருடம் கூறியிருந்தாலும் சமீபத்தில் வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வுகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்லும் செய்தி என்ன?. இணைய வழியில் அரசியல் அதிகார மையங்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? இந்தியா குறித்தான தனது பார்வை குறித்து பிணையில் வெளிவந்த பிறகு முதன்முறையாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூலியன் பேசியிருக்கும் அதே நேரத்தில், தி-ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் விவரங்கள் என்ன?.  இக்கேள்விகளை அனைத்தும் உங்களைத் துளைத்தெடுத்தால் மட்டுமே மேற்கொண்டு படிக்கவும். (ஏன்னா.. பதிவு கொஞ்சம் நீளம் அதிகம் :D).


முதலில் ஜூலியன் பேசியது குறித்து. "இன்றைய உலகில் எளிதாகவும், மிக அதிகமாகவும் வேவுபார்க்க பயன்படுத்தப்படும் ஊடகம் இணையம். இணையத்தில் அதிகார மையங்களை எதிர்த்து புரட்சி கும்மியடிக்கும் தம்பிகள் போதிய தொழில்நுட்ப புரிதலின்றி வரம்பு மீறி செயல்பட வேண்டாம். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கண் சிமிட்டும் நேரத்தில் யாராலும் வேவு பார்க்கப் படலாம். செய்தி ஊடகங்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகத்தான் அரசியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற மாயை உருவாக்குகின்றன. அதை நம்பி மோசம் போக வேண்டாம்.  குறிப்பாக எகிப்தின் முபாரக் அரசாங்கத்தினால் இணையத்தில் செயலாற்றியவர்களைக் களையெடுத்து கிட்டத்தட்ட பதவி விலகுவதற்குள் ஒரு குறுவை சாகுபடியே நடத்தி முடிக்கப்பட்டது குறித்து அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இணையத்தின் தாக்கம் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற அரசியல் போராட்டங்களில் ஓரளவுக்கு இருந்தாலும்,அவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் அதனாலான சர்வதேச அழுத்தம். ஆட்சி மாற்றங்களுக்கான போராட்டங்கள் நடக்கும், நடந்து கொண்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் அமெரிக்காவின் ஊடகங்களும், அரசின் அதிகார மையங்களும் புரட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டையே கொண்டிருப்பதை கவனியுங்கள். மேற்கூறிய நாடுகள் சம்பந்தமாக சென்ற வருடம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக ஆவணங்கள் (cable leaks) சொல்வதெல்லாம் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தினை விரும்புகிறது என்பதைத் தான். அதன் பிறகு தான் புரட்சியாளர்களுக்கு தாங்கள் போராடினால் அமெரிக்கா கைகொடுக்கும் என்ற நம்பிக்கைப் பிறந்தது. மற்றபடி இணையம் ரொம்ப ஆபத்தானது அதில் செயல்படும் போது கவனம், கவனம், கவனம்'. இதுதான் ஜூலியன் ஆற்றிய உரையின் சாராம்சம்.


அதெல்லாம் சரி இந்தியா பற்றி என்ன சொன்னார் ஜூலியன்?. ஆறு மில்லியன் வார்த்தைகளைக் கொண்ட மொத்த விக்கிலீக்ஸ் ஆவணங்களும் இந்தியப் பாராளுமன்றத்தினை அதிர வைக்கப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். நம்மவர்களைப் பற்றி ஜுலியனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லையென்றாலும், தன் எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார். விக்கிலீக்ஸ் தங்கள் ஆவணங்களை வெளியிட பயன்படுத்திக் கொண்ட மேற்கத்திய அச்சு ஊடகங்களான அமெரிக்காவின் நியூயார்க்கர், இங்கிலாந்தின் கார்டியன், ஜெர்மனியின் தி மிரர் (Der Spiegel) ஆகியவற்றின் வரிசையில் இந்தியாவின் 'தி-ஹிந்து'. அந்த வகையில் ஹிந்து பத்திரிக்கைக்கு இது ஒரு மைல்கல். ஊடக உலகிற்கு புதியபாதை வகுத்த ஜூலியனுடன் கைகோர்ப்பதென்பது பெருமையான விஷயம். ஆனால் இது 'ரொம்ப தாமதம்'. 


தலைப்புச் செய்தியில் இன்று நம் பிரச்சினைகளுக்கான கடிதம், தந்தி, புறாக்கள் குறித்தான விவரங்களை அறிந்து புளகாங்கிதமடைந்து, சினிமாச்செய்திகளுக்குள் புகுந்து, ராசிபலன் படித்து வெளிக்கிளம்பும் சாமனிய இந்தியனுக்கு ஏதோ இன்று தான் விக்கிலீக்ஸ் இந்தியா குறித்த ஆவணங்கள் வெளியிடுவதாகத் தோன்றலாம்.  விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒட்டு மொத்த அமெரிக்க தூதரக ஆவணங்களனைத்தும் இணையமெங்கும் அள்ளி வீசப்பட்டு பல மாதங்களாகி விட்டன. மற்ற நாட்டு ஆவணங்கள் எல்லாம் அந்நாட்டு மக்களால் அலசி, ஆராய்ந்து அக்குச்சிக்காகி, செத்துச் சுண்ணாம்பாகிப் போன வேளையில் தான் 'இந்திய ஆவணங்கள்' புத்தம்புதுசாக வெளியாகிறது. இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் செய்தி, நம்மில் நிறையபேருக்கு விக்கிலீக்ஸ் குறித்துத் தெரிந்திருக்கவில்லை, முக்கியமாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், எதிர்க்கட்சிகள், ஊடக அன்பர்கள் இவர்களுக்கெல்லாம் விக்கிலீக்ஸ் ஆவணங்களை எப்படி அணுகுவதென்பது கூடத் தெரியாத நிலை.  நரம்பு தளர்ந்து போன அறுபது ஆண்டு ஜனநாயகத்தை, ரத்தம் சுண்டிப்போன அரசியல்வாதிகள் நிர்வாகம் செய்தால் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே அட்சரம் பிசகாமல் இருக்கிறது பாரதம். தகவல் தொழில்நுட்பத்தின் 'பாட்ஷா' வாக இருக்கும் இந்தியா இப்போது தான் மின்னஞ்சல் முகவரி பெற்றுக் கொள்ளும் 'நாய் சேகர்களால்' ஆட்சி செய்யப்படுவது காலத்தின் கோலம். இவர்களுக்கு விக்கிலீக்ஸ் காத தூரம். 


இதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுது தான் அச்சு ஊடகமொன்று இந்தியாவில் வெளியிடுகிறதே,   விக்கிலீக்ஸ் மற்ற நாடுகளில் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தினை இங்கும் ஏற்படுத்துமா? வாய்ப்பே இல்லை. ஏன்?. விக்கிலீக்ஸின் இந்திய ஆவணங்கள் சொல்லப் போவதெல்லாம் என்ன?. இந்தியா அரசாங்கத்தின் போலி மதச்சார்பின்மை, முட்டாள் தனமான பிராந்திய வெளியுறவுக்கொள்கைளின் காரணமாக சகட்டுமேனிக்கு அனைவரிடமும் திரைமறைவில் மண்டியிட்டுவிட்டு, ஊடகங்களில் பசப்புதல், 'இங்கு தரமான வாக்குகள் மொத்த விலையில் விற்கப்படும்' என்றாகிவிட்ட போலி ஜனநாயகம் ஆகியவை தான். இதில் ஏதாவது படிக்கும் அன்பர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா?. இருக்காது, நாம் எவ்வளவெல்லாம் பார்த்திருக்கிறோம் என்பது ஜூலியனுக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் ஹிந்து பத்திரிக்கைக்குத் தெரியும். மும்பைத் தாக்குதலை வைத்து இந்திய அரசாங்கம் மதரீதியான அரசியல் நடத்தியது முதல், ஈழப்பிரச்சினையில் மேற்கத்திய நாடுகளை தலையிடாமல் இருக்கக் கெஞ்சியது மற்றும் மதுரை சிம்மக்கல்லில் பட்டுராஜன் (முன்னாள் மதுரை மேயர்) வாக்காளர்களுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது வரை விவரிக்கிறது விக்கிலீக்ஸ். குற்றம் கூறப்படும் அனைவருமே 'இது எங்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி, இதை வன்மையாக மறுக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த காண்டாமிருகம் வாழ்க என்று ப்ளெக்ஸ் வைத்துக் கொண்டாடிவிட்டுப் போவார்கள்.  ஒரு வேளை 'நமீதாவுடன் மாலத்தீவில் கரையொதுங்கிய இளம் அரசியல்வாதி' போன்ற பிட்டுக்கள் ஏதெனும் ஆவணத்தில் இருந்தால், காணொளி கிடைக்கிறதா என தேடித்தேடி ஒட்டு மொத்த இணையமும் சின்னாபின்னப் படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது :D.

ஒட்டுமொத்த கேபிள்களுமே 30 மில்லியன் வார்த்தைகள், அவற்றில் 6 மில்லியன் வார்த்தைகள் அதாவது ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவின் ஆவணங்கள். இது அமெரிக்கா, இந்தியா மீது செலுத்தும் விசேஷ கவனத்தினையும், இந்திய அதிகார மையங்களின் தூண்கள் அனைத்தும் தூதரக விருந்துகளில் வரிசையில் நின்று மதுவருந்தி விட்டு, (அ)முக்கிய விஷயங்களனைத்தையும் வாந்தியெடுத்து வைத்து விட்டு வருவதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிற மறைபொருட்கள். ஹிந்துவின் இந்த அணுகுமுறையால் ஜூலியனின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பும் பட்சத்தில், கணிணிமயப்படுத்தப்பட்ட இந்திய அரசுத்துறை வழங்கிகளின் பாதுகாப்பின் தரம் விரைவில் பல்லிளிக்கலாம் :D.


மற்ற இந்திய ஊடகங்கள் ஏதும் வெளியிட எந்தவித முயற்சியும் செய்யாத நேரத்தில், சட்டரீதியான பாதுகாப்புடன் விக்கிலீக்ஸ் உடன் முறையான ஒப்பந்தம் செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. எவற்றையும் 'உள்'ளரசியல் காரணமாக தணிக்கை செய்யாமல்  கிடைக்கப்பெற்ற அனைத்து ஆவணங்களையும் மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டியது ஹிந்துவின் தார்மீகக் கடமை, ஏனெனில் ஜூலியனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'தணிக்கை'.

இப்பதிவினை எழுதத் தூண்டிய திரு.சித்திரகுப்தன் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

நன்றி


தமிழ்மணம் விருதிற்காக 'சுடுதண்ணி'யினைப் பரிந்துரைத்த அனைத்து அன்பர்களுக்கும், நடுவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.