Tuesday, November 18, 2014

இணையம் வெல்வோம் - 22

 
மடை திறந்த வெள்ளம் போல் காலை வணக்கம், இன்றைய ராசிபலன், இன்றைய தத்துவம் என்று வலம்புரி ஜானின் இடத்தினை நிரப்பியபடி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் சமூகவலை இணையத்தளங்கள் ஒவ்வொரு மணித்துளியும் உட்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கையும், உலகம் முழுக்க உள்ள அவற்றின் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம்.
அதுவே கூட்டத்தில் கும்மியடிக்கும் தர்ம அடிப் பாரம்பரியத்தின் வழிவந்த நம் சமூகத்திற்கு மிகப்பெரிய மனதைரியத்தினை இணையத்தில் அளிக்கிறது. அந்த அசட்டு தைரியம் தான் அடிமனதின் இருட்டுப் பக்கங்களை இணையத்தில் வார்த்தைகளாக உலவ விட்டு அழகு பார்க்கிறது.
நேருக்கு நேர் சந்திக்கும் போது கண்களைப் பார்த்து பேசக்கூட பயப்படும் அம்பிகள் கேட்கக்கூசும் வார்த்தைகளை இணையத்தில் அள்ளி வீசி ஆனந்தமடையும் அந்நியன்களாய் மாறிப்போகிறார்கள். இவர்களின் பலமே, இவர்களின் இணைய நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்படுபவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தான். மாலை முரசில் பரிட்சை எண் இல்லையென்று அன்றே தற்கொலை செய்து, மறுநாள் காலை தினசரிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் சம்பவங்கள் நம் சமூகத்திற்கு புதிதில்லை. அச்சு ஊடகக் காலகட்டத்திலிருந்தே, ஊடகத்தில் சொல்லி விட்டால் அதனை மறுபேச்சின்றி உண்மையென்று நம்பும் பழக்கத்தில் ஊறிப்போன நமக்கு, யாரோ முகந்தெரியாதவன் இணையத்தில் உங்களை அயோக்கியன் என்று பதிவு செய்து விட்டால், ‘கம்ப்யூட்டரே சொல்லுதாம்ல, அவன் அப்படி, இப்படின்னு’ என்று கும்மியடிக்க ஒன்று கூடும் ஊரிது.
இப்படிப்பட்ட தேசத்தில், தினசரி வாழ்க்கையில் கவலைப்பட ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் பொழுது, கடல் போன்ற இணையத்தில் எவன் என்னைப் பற்றி என்ன சொன்னால் எனக்கென்ன, போங்கடா போங்க என்று பிளிறும் அன்பர்கள் சற்று தள்ளி நிற்கவும். எதிர்காலத்தில் சர்வமும் இணையமெனும் ஜோதியில் ஐக்கியமாகும் பொழுது, எனது மகனோ, பேரனோ, ஒட்டு மொத்த குடும்பத்தில் வருங்கால சந்ததியினரும் இணையத்தில் என்னைப் பற்றித் தேடும் பொழுது என்னைப் பற்றி அசிங்கமாக யாராவது எழுதிய விஷயங்களைப் படித்துத் தவறாக நினைத்து விடக்கூடாது, வரலாறு மிக முக்கியம் என்று கருதும் புலிகேசிகளுக்கு ஒரு இனிய செய்தி. ஒட்டு மொத்த சமூகவலைதளங்களிலும் உங்களைப் பற்றி யார், யார் என்னென்னெ பொதுவில் பகிர்கிறார்கள் என்பதை நீங்கள் சுடச்சுட கண்காணிக்க முடியும். உங்களின்  பயனாளர் பெயரினை வைத்து கண்காணிப்பது சாத்தியமென்றாலும், பயனாளர் பெயரினைக் குறிப்பிடாது உங்களைப் பற்றி பேசும் பட்சத்தில், நீங்கள் இராமசாமியாகவோ அல்லது குப்புசாமியாகவோ இருந்துவிட்டால் கடினம். அப்படியின்றி உங்கள் இயற்பெயரோ அல்லது பட்டப்பெயரோ தனித்துவமாக புரட்சி இடி, வறட்சி வள்ளல் என்றோ அல்லது ரஷ்ய எலக்கியத்தில் நீங்கள் மூழ்கி முத்தெடுத்த மூத்தவர் என்பதைக் குறிக்கும் விதமாக அயோடக்ஸ்கி அல்லது ராவாவிஸ்கி என்று இருந்தால் மிகச் சிறப்பு.
இதற்கென ஏகப்பட்டச் சிறப்பு மென்பொருட்கள் பரவலாக கிடைக்கின்றன. சரிதா நாயர்களும், ராய் லட்சுமிகளும் இணையத்தில் நம்மை தினமும் ஆக்கிரமித்துக் கொள்வதால் நம் கண்களுக்கு தட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான மென்பொருட்கள் அவற்றின் அடிப்படைக் கண்காணிப்பு வசதிகளை இலவசமாகவே தருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி (உ.தா: HootSuite). சமூகவலைத்தளங்களில் யாராவது ஒரு நபர் ‘தங்கராசு பெண்பித்தன், தங்கராசு பெண்பித்தன்’ என்று தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டேயிருந்தால் குறிப்பிட்ட நாளில் தங்கராசுவைப் பற்றித் தெரிந்து கொள்ள தேடுபொறிகளில் தங்கராசு என்று நீங்கள் தட்டச்சி முடிக்கும் முன்பே தங்கராசு பெண்பித்தன் என்று தேடுபொறிகள் கைகொட்டிச் சிரிக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற மென்பொருட்கள் பெரும்பாலும் மிகப்பெரும் வியாபார நிறுவனங்கள் மற்றும் பணப்பைக் கனமான கணவான்களினாலும், சீமாட்டிகளாலும் பயன்படுத்தப் படுகின்றன.
உதாரணத்திற்கு உலகின் முன்னணி நிறுவனத்தின் பொருளைப் பற்றி நீங்கள் அவதூறாகவோ அல்லது உண்மையானக் குறைபாடுகளைப் பற்றியோ பதிவிட்டுப் பாருங்கள், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு உண்மையெனில் நிவாரணமும், பொய்யெனில் சட்டச்சிக்கல்களையும் தூவி விட்டு மாயமாகிவிடுவார்கள். இது போன்ற நுணுக்கங்கள் அதிகாரமிக்க அரசியல் தலைவர்களுக்கு, அதுவும் கடுமையான இணையச்சட்டங்கள் இருக்கும் நாடுகளில் தெரியவந்து ஒருவேளை கண்காணிக்க ஆரம்பித்தால், தன் வீட்டு கட்டிலுக்கடியில் படுத்துக் கொண்டு “டேய் பிரதமரே வாடா இங்கே” என்று பதிவிட்டு முடிக்கும் முன்பே உங்கள் வீட்டு கதவினை வால்டர் தேவாரம்களும், அலெக்ஸ் பாண்டியன்களும் பலமாகத் தட்டும் சத்தம் உங்கள் காதுகளில் இன்பத்தேனாய் பாயும் சாத்தியங்கள் உண்டு. எனவே அடுத்தவர்களைப் பற்றி இணையத்துல் எழுதும் பொழுது அடக்கி வாசிப்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.
HootSuite போன்ற மென்பொருட்களில் மூலம் நீங்கள் கண்காணிக்க விரும்பும் குறிப்பிட்ட வார்த்தைகளை உள்ளிட்டால் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் பொதுவில் பேசுகிறார்கள் என்று கண்காணிக்க முடியும். உதாரணத்திற்கு இன்று ஒரு திரைப்படம் வெளியாகிறது, அது குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் படத்தின் பெயரை வைத்து பேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ யாரெல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று கண்காணிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தினைப் பற்றித் திரும்பத் திரும்ப இணையத்தில் பதிவிடும் போது அது தேடுபொறிகளில் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும் என்பதனைப் புரிந்து கொள்ளவும். சொற்போர் விவாதங்கள், பட்டி மன்றங்கள் முதல் டீக்கடை அரட்டை, குழாயடிச் சண்டை வரை மிக ஆழமான மரபணுப் படிமங்களைக் கொண்ட தமிழினம், கடைசி வரை சத்தமாக பேசுகிறவரே வெற்றி பெற்றவர் என்னும் சித்தாந்தத்தினை இணையத்திலும் கொண்டாடி கும்மாளமிட்டு கொண்டிருக்கிறது. இணையத்தளங்களில் தகவல் பதிவுகளை விட அவற்றுக்கு வரும் விவாதப் பதிவுகளைப் பார்த்தால் நம் தரம் எளிதில் விளங்கும். இணையத்தில் விவாதிப்பதின் மூலம் உடனடியாக நாத்திகனை ஆத்திகனாகவோ, ஆத்திகனை நாத்திகனாகவோ மாற்றி விடத்துடிக்கும் ஜல்லிக்கட்டுகள் இங்கே ஏராளம். உங்களைப் பற்றி யாரும் அவதூறாகப் பேசினால்,  முடியும் பட்சத்தில் ஒரு முறை மறுப்பு சொல்லிவிட்டுப் புறந்தள்ளுங்கள். தொந்திரவு தொடர்ந்தால் சட்டத்தின் உதவியினை நாடுங்கள். அதை விடுத்து உங்கள் வீரத்தினை இணையத்தில் விவாதக் களமாடுவதில் காண்பிக்க நினைத்து, எதிராளி ஒரு முறை செய்த அவதூறு பதிவினை நீங்களே பலமுறை உங்களையறியாமல் பதிவு செய்யும் தவறினைத் தவிர்ப்பது நன்று.

சல்லிசாக சீனத்தயாரிப்புகளும், இணைய இணைப்பும், இலவச பயனாளர்க் கணக்கும் கிடைக்கிறதென்ற ஒரே காரணத்திற்காக சரியான தொழில்நுட்பப் புரிதலின்று இணைய ஜோதியில் கலக்கத் துடிக்கும் அன்பர்களுக்கும், விளக்கின் வெளிச்சத்தில் மாய்ந்து போகும் விட்டில் பூச்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. உணர்ச்சிவயப்பட்ட தமிழ்ச்சமூகம் பேஸ்புக் அல்லது டிவிட்டர் பதிவுகளுக்காக அடிதடி, கத்திக்குத்து என்று களமிறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதைத் தவிர்க்க ஒரே வழி, இணையம் குறித்தான சரியானப் புரிதலை சாமனியருக்கும் உருவாக்குவது தான். எந்தவொரு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் போதும் சமூகம் இது போன்ற சிக்கல்களை சந்திதிருந்த்தாலும், இணையம் அனைத்து மக்களுக்கும் பரவலாகும் வேகத்தினைக் கணக்கில் கொள்ளும் போது மிக முக்கியத்துவம் பெறுகிறது.

நாங்கள் விக்கிலீக்ஸ் ஜூலியன்,  ஸ்நோடன், பர்னபி, ஆரொன் ஸ்வார்ட்ஸ் போன்று இணையத்தில் மூலம் சமூக மாற்றங்கள் வேண்டி பயணிக்கப் போவதில்லை, ஒரு சாதாரண சக மனிதனாக இணையத்தினை இனிய அனுபவமாக, அடிப்படைத் தொழில்நுட்பப் புரிதலோடு பிரச்சினைகளின்றி கடந்து சென்றால் போதும், அதற்கென்ன வழிமுறைகள் ஆலோசனைகள்?.

தொடர்வோம்……

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, November 10, 2014

இணையம் வெல்வோம் - 21

மாற்று ஊடகத்திற்கு என்றுமே மக்கள் ஆதரவளிக்கவும், போற்றவும் தயங்கியதேயில்லை. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்துத் தரிசாகிக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகம் சன் டிவியின் தமிழ் மாலைக்கும், அவர்களின் செய்திகள் பிரிவு ஆரம்பித்த புதிதிலும் கொடுத்த வரவேற்பே அதற்கு சாட்சி சொல்லும்.
ஊடகங்களில் தனியார் நிறுவனங்கள் கோலோச்ச ஆரம்பித்தப் புதிதில் அதிலிருக்கும் சூட்சுமங்கள் புரியாமல் மதிமயங்கிய நாம் இன்னும் அதன் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. திண்ணைப்பழக்கம் முற்றாக ஒழிந்து வெளியில் மழை பெய்கிறது என்று ஊடகங்களில் சொன்ன பிறகே வெளியில் எட்டிப்பார்த்து உறுதி செய்து கொள்ளும் அளவுக்கு மக்கள் மகுடிப் பாம்பாய் வீட்டுக்குள் முடங்கத் தொடங்கியதும, அதனால் ஏற்பட்ட விபரீதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் என்று எவ்வொரு ஊடக நிறுவனத்தின் வேர்களும் ஏதாவதொரு அரசியல் புதைகுழியில் ஜனித்திருப்பது பெரும்பாலோனோர்க்குத் தெரிந்திருப்பதில்லை. சினிமாத் திரைகளில் தங்கள் தலைவர்களைத் தேடிய சமூகத்தினை காட்சி ஊடகங்கள் மூலம் சுத்துமாத்து செய்து குழம்பிப் போகச் செய்வதில் ஊடகங்களுக்கு பெரிய சிரமமிருக்கவில்லை.
இப்படி இராஜபாட்டையில் பயணித்துக் கொண்டிருந்த ஊடங்களனைத்திற்கும் இன்னல் தரும் இடியாய் இறங்கியது தான் இணையம். ஆரம்பத்தில் கணிணிக் கல்வி சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கப்பட்ட இணையத்தின் விஸ்வரூபம் இன்று ஊடகங்களையும், அவற்றை கட்டிமேய்க்கும் பண முதலைகளையும் தடுமாற வைத்திருக்கிறது. இணையம் ஒவ்வொரு தனிமனிதனையும் ஒரு ஊடகக்கருவியாக்கி ஒரு புதுயுகத்தினை நம் தலைமுறைக்கு அளித்திருக்கிறது. இணையத்தின் பயன்பாடு மென்மேலும் பரவலாகும் பொழுது அரசியல் லாபத்திற்காக அதிகார வர்க்கத்திற்குக் குடைபிடிக்கும் வெகுஜன ஊடகங்கள் தானாகவே பலமிழந்து போய்விடும். இப்படி ஒரு அசுரபலத்தை சர்வசாதாரணமாக கணிணியிலோ அல்லது கைபேசியிலோ வைத்திருக்கும் நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம், புற்றீசல் போல தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு நித்தம் புதுப்புது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி வந்தாலும் இன்றும் காலியாக இருக்கும் உண்மையான மாற்று ஊடகத்திற்கான இடத்தினை நாம் நிரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் உங்கள் மண்டையைக் குடைந்தால் நன்று.
இணையம் ஒரு கட்டற்ற களம். இங்கு எந்த விதிமுறைகளும் இல்லை. ஒரு தனிநபரை, நீ இப்படித்தான் இணையத்தில் எழுத வேண்டும், குத்துவிளக்குப் புகைப்படங்கள் மட்டுமே வலையேற்ற வேண்டும் என்று இங்கு யாரையும், யாரும் கட்டுப்படுத்தவோ, அறிவுரை சொல்வதற்கோ இடமேயில்லை. அப்படி ஒரு கட்டற்ற சுதந்திரம் தான் இணையத்தின் பலம். நம்மில் இணையத்தினைப் பாவிப்பவர்களில் எத்தனை பேர் அடுத்தவர்களுக்கு இணையப்பயன்பாடு குறித்து அறிவுரை சொல்லாமல் ஒரு நாளைக் கடக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் நாம் செய்யும் தவறுகள் புரியும். தங்கள் கொள்கைகளை அடுத்தவர் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் அல்லது சர்வாதிகாரிகளுக்கும், இணையத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆத்திச்சூடி படிப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இணையம் எப்படி செயல்படுகிறது, அதன் வீச்சு என்ன, சாதக,பாதகங்கள் என்ன என்பதைத்தான் அடுத்த தலைமுறைக்கும், அடுத்தவர்களுக்கும் புரியவைக்க வேண்டும். இங்கு பெரும்பாலோனோர்க்கு இணையம், வலைப்பாதுகாப்பு மற்றும் இணையத்தின் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட சட்டங்கள் குறித்தான எந்த அடிப்படை புரிதலும் இருப்பதில்லை. விக்கிப்பீடீயா தளத்தில் இருப்பதெல்லாம் உண்மையென்றும், திருப்பதி பெருமாள் படத்தினை அடுத்த 5 நிமிடங்களில் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தால் குபேரன் தங்கள் வீட்டில் குப்புறப் படுப்பார் என்று நம்புபவர்களும், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் கேண்டி கிரஷ் விளையாடவும் தெரியாமல், அப்படியே தொந்திரவு படுத்தினாலும் அதுபோன்ற இம்சைகளை மட்டுறுத்தும் நுட்பங்களையும் அறியாமல் புலம்பிக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லக் கிளம்புபவர்களுக்கும், ஸ்வாகா சொல்வதற்கு மட்டுமே பூஜைக்கு செல்லும் இது நம்ம ஆளு பாக்யராஜுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இணையத்தினை மாற்று ஊடகமாகப் பாவிப்பதற்கு மேலே சொன்ன தொழில்நுட்பப் புரிதல்கள் மட்டுமின்றி உண்மைத்தகவல்களைத் திரட்டும் திறனோ அல்லது அதற்கான தொடர்புகளோ இருக்க வேண்டும். இன்றையத் தேதிக்கும் உண்மைத்தகவல்கள் சம்பவ இடத்தில் இருந்து நம்பகமானத் தொடர்புகள் மூலம் கிடைத்தால் மட்டுமே சாத்தியம். ஊடகங்கள் மூலம் அல்லது அரசியல் அல்லது கொள்கைச்சார்புள்ளவர்கள் மூலம் கிடைத்தால் தகவல்களைத் தங்கள் நோக்கம் போல் திரித்துக் கொளுத்தி விட வாய்ப்புகள் அதிகம். முதலில் தொழில்நுட்பம் குறித்த புரிதல்கள் குறித்துப் பார்ப்போம். கணிணி வலையமைப்புகளும், இணையமும் இன்று சகல இடங்களிலும் வியாபித்த பிறகு அனைத்துத் துறையினரும் சந்திக்கும் முக்கிய சவால்களுல் ஒன்று கணிணி மற்றும் இணையம் குறித்தான் தொழில்நுட்பப் புரிதல். ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தினை முடக்க முடியாமல் திணறும் நீதித்துறை, ஒரு இணையத்தளத்தினை தனிநபர் அடையாளமின்றி எப்படி நடத்துவெதென்பதறியாமல் சிரமப்படும் மாற்று ஊடக முயற்சியாளர்கள், இணையம் அல்லது கணிணி குறித்தான செய்திச் சந்திப்புகளில் சரியான கேள்விகள் கேட்க முடியாமல் திணறும் செய்தியாளர்கள், ஒபாமாவைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் சூடுபோட்டுக் கொண்ட அரசியல் தலைகள், சுஜாதாவின் இடத்தினைப் பிடிக்க நினைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்து உளறிக் குளறிப் போடும் எலக்கியவியாதிகள் என்று தொழில்நுட்பப் புரிதலின்றி திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம். இதில் அதிகம் குளிர் காய்வது ஸ்வாகா பாக்யராஜ்கள் மட்டுமே. அவர்களில், தங்களின் கட்டுப்பாட்டில் அனைத்து சமூக வலைத்தளங்களும் இருப்பதாக நம்ப வைத்து, ஏமாற்றி தங்கள் தலைவர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயம் தேடும் தொண்டர்கள், விக்கிபிடியாவை மொழிபெயர்த்து புத்தகம் எழுதி மூத்தவர்களை அசத்தும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள், நாளைக்கு நாற்பது நிலைத்தகவல் இடுவதால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் குறித்தான தொழிநுட்ப விவாதங்களில் கலந்து கொள்ளும் அறிவுசார் புரட்சிப்பொங்கல்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ் இணையத்தில் மாற்று ஊடகங்களுக்கான முயற்சியில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது திரைப்பட விமர்சனங்கள். ஒரு கட்டத்தில் இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் கூட நடத்த ஆரம்பிக்கும் அளவுக்கு அதன் வீச்சு அதிகமாகியிருந்தது. திரைப்பட விமர்சனங்கள் வெற்றியடையக் காரணம், எழுதும் ஒவ்வொருவரும் தாங்களே நேரடி அனுபவத்தில் ஒரு திரைப்படம் குறித்தான அலசல்களைத் தங்கள் ரசனைக்கேற்ப முன்வைத்ததும், அதன் மூலம் அவர்களுக்கு எந்த ஆதாயமோ அல்லது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் எந்த பயமும், எதிர்பார்ப்பும் இன்றியும் இருந்தது தான். அரசியல், சமூகம் குறித்தான செய்திகள் என்று இதே போன்று அந்த சுயலாப நோக்கில் இல்லாமல், தனிமனித மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இணையத்தில் பகிரப்படுகிறதோ அன்று தான் மாற்று ஊடகத்திற்கானக் கதவுகள் முழுமையாகத் திறக்கும்.
இன்றைய சூழ்நிலையில் மக்கள் பார்வையில் இருக்கும் அனேக ஊடகங்களும், அவற்றின் முகங்களாகத் திகழும் ஊடகவியலாளர்களும் ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளவர்களாகவும், அவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பாதிப்பின்றி சுதந்திரமாக இணையத்தில் செயல்பட வாய்ப்புக் கிடைத்தாலும் ‘என் தலைவன் தங்கம்டா’ என்றே காலம் பூராவும் பேசி இம்சிக்கிறவர்களே அதிகம், அதிலும் ஏகப்பட்ட வெற்றிகொண்டான்களும், தீப்பொறி ஆறுமுகங்களும் இருக்கிறார்கள். பிரதமர் முதல் இணையத்தில் தனக்குப் பிடிக்காத வண்ணம் எதிர்பதிவு போடும் சாமனியன் வரை அனைவரையும் மானாவாரியாக, பச்சைப்பச்சையாக எழுதுவது இவர்களின் இணையச் சாணக்கியத்தனம், அதாவது இணையத்தில் தாக்குகிறார்களாமாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிலபல வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும். முன்பே கூறியது போல் மற்ற குற்றங்களை விட இணையக் குற்றங்களை நிரூபிப்பது மிக எளிது அதே சமயம் அது வழக்கறிஞர்கள், காவல்துறை நண்பர்கள், நீதிமன்றங்கள் ஆகியோரின் தொழில்நுட்பபுரிதலும் அவசியம் என்பதையும் மறந்து விடக்கூடாது.
மின்சாரம் தடைபட்டால் தெருமுனைப் பெட்டிக்கடைக்குப் போகப் பயப்படும் பிள்ளைப்பூச்சிகள் கூட, சீறும் சிறுத்தைகளாக இணையத்தில் சீறிப்பாயக் காரணம், தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது அல்லது எத்தனையோ கோடிக்கணக்கான நபர்கள் எழுதித்தள்ளும் டிவிட்டர், பேஸ்புக் தளங்களில் தான் ஒருவன் எழுதுவதை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பார்கள் என்ற தைரியத்தில், ஒற்றை ஆளாய் யாரெனும் முக்கியப் புள்ளியினை மானக்கேடாய் வறுத்தெடுத்து அதில் இன்பம் காண்பது தான். அப்படி நினைப்பவர்கள் நீங்களும் ஒருவராக இருந்தால் இன்றோடு அந்த எண்ணத்தினை மாற்றிக் கொள்ளுங்கள். டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், உங்கள் பெயரைக் குறிப்பிட்டு யார், என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூடச் சுடச்சுடக் கண்டறிய முடியும். எப்படி?
தொடர்வோம்……

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.