"எப்படியாவது சாகுறதுக்குள்ள ஒரு தடவையாவது விமானத்துல போயிப் பாத்துரணும்" என்று வானம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த சமூகம், "போன தடவ கிங்பிஷ்ஷர்ல போனேன், சும்மா கலக்குறாளுங்கப்பா" என்று கிறுகிறுத்துக் கிறங்கிப் போவது வழக்கமாகிவிட்ட நிலையில், 2020ல் அண்ட சராசரங்களையும் துண்டுதுண்டாக்கப் போகும் நாளைய வல்லரசான இந்தியாவின் விமான நிலையங்களின் தரம் என்ன?, தொழில்நுட்ப வசதிகள் என்ன?, பாதுகாப்புத் தரம் என்ன? என்று பல என்னக்கள் குறித்து மங்களுரின் விமான விபத்தின் வெடிச்சத்தத்தில் அலறி விழித்திருக்கும் நம்மனைவருக்குமானப் பகிர்வே இப்பதிவு.
வான்போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் நல்ல தொடர்பு நிலையில் தரையிறங்கிய விமானம், ஓடுபாதையில் வெடித்துச் சிதறிப் பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. இச்செய்தியைச் சேகரிக்கும் பொருட்டே முதல்முறை மங்களூர் விமானதளத்திற்குச் சென்றவர்களைப்போல், ஊடகங்கள் விளம்பர இடைவேளைக்கிடையே "table top runway, table top runway" என்று கூவி, மக்களையும் கலவரப்படுத்தி தம் பணிகளைச் செவ்வனே செய்தன.
"table top" ஓடுதளம் என்றால் என்ன?. ஒரு மேஜை மேல் இருப்பதைப் போல் இரண்டு எல்லையிலும் பள்ளத்தாக்காகவோ அல்லது மலைச்சிகரங்களாகவோ இருந்தால் அது "table top" ஓடுதளம் எனப்படும். உலகில் இது போலவும், இதற்கு மேலும் அபாயகரமான இடங்களிலெல்லாம் ஒடுதளங்கள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் தினமும் விபத்துகள் இல்லாமல் தான் விமானங்கள் மேலெழும்பியும், தரையிறங்கியும் பொழுது போய்க்கொண்டு தான் இருக்கிறது.
விபத்துக்குள்ளான போயிங் 737-800 வகை விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமானது. புதிதாகக் கொள்முதல் செய்து மூன்று வருடங்களே ஆகின்றது, முறையான பராமரிப்பில் இருந்திருக்கிறது. பணியிலிருந்த விமானிகள் இருவரும் அனுபவம் மிக்கவர்கள், பல முறை இதே மங்களூரில் பத்திரமாகத் தரையிறங்கியவர்கள். பின் எப்படி விபத்து?.
அதற்கு முதலில் போயிங் 737-800 வகை விமானத்தைப் பற்றி தெரிந்து கொள்வது சிறப்பு. அதனினும் சிறப்பு இந்தியாவில் "சில" விமானிகள் பணி நேரத்தில் சரக்கடித்து கிர்ர்ரான நிலையில் விமானத்தினை ஓட்டுவது குறித்தும் அதனைத் தடுக்க இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திக்கித் திணறி ஆடிய ஆட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்வதும் ஆகும். பணிநேரத்தில் விமானிகள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்கும் பொறுப்பினை க்ளென்பெடிச் வகையறாக்கள் வசம் ஒப்படைக்கும் வழக்கத்தினைக் கண்ட இந்திய விமானப் போக்குவரத்துத் துறை, அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் விமானிகளை அதிரடியாக போதை மருந்து சோதனைக்கு உட்படுத்தியதும், பல விமானிகள் மாட்டியதும், ஆனாலும் சில காரணங்களுக்காக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டதும், பின்னர் இது போன்ற சோதனைகளுக்கு விமானிகள் எதிர்ப்புத் தெரிவித்ததும், எதிர்ப்பைக் கண்ட வீரதீர விமானப் போக்குவரத்துத் துறை சோதனைப் பொறுப்பை விமான நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து ஒதுங்கியது வரை வரலாறாக இருந்தாலும், ஊடகங்களுக்குச் சப்பையானச் செய்தியாகப் போனதால் மக்கள் பார்வையில் கவனிக்கப்படாமலே போய்விட்டது சோகம்.
தொழில்நுட்ப காரணங்கள் தவிர, ஒரு விமானம் தரையிறங்குவதையும், மேலெழும்புவதையும் தீர்மானிக்கும் விசயங்களில் மிக முக்கியமானது விமானத்தின் மொத்த எடை (பயணிகள் மற்றும் பொருட்கள் உட்பட) மற்றும் ஓடுதளத்தின் தூரம். போயிங் 737-800 வஸ்துகள் 65 முதல் 85 டன் எடையுடன் பயணிக்க ஏதுவானவை. மொத்த எடைக்கேற்ப 2.4 முதல் 2.5 கிலோமீட்டர் ஓடுதளத்தின் நீளம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். தேவையான அளவை விட கொஞ்சம் கூடுதல் நீளத்துடம் ஓடுதளத்தினை அமைப்பது பாதுகாப்பானது என்பதை முதல் பந்தியில் இடம் கிடைத்தால் பக்கத்து இலையையும் சேர்த்துப் பிடித்து வைக்கும் நமக்குச் சொல்லத் தேவையில்லை :).
2006ஆம் ஆண்டு முதல் 2.45 கிலோமீட்டர் நீளமுள்ள ஓடுதளத்துடன் பன்னாட்டு விமான நிலையமாக உருவெடுத்த மங்களூர் விமான நிலையம், இந்தியாவில் மூன்று table top விமான நிலையங்களுள் ஒன்று. மற்றவை கேரளத்தின் கோழிக்கோடு மற்றும் மிசோரமின் லெங்புய் விமான நிலையங்கள். இதில் மங்களூரைப் போலவே பெரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுதளம் 2.7 கிலோ மீட்டர் நீளம் என்பதையும், மங்களூரில் 2.45 கிலோ மீட்டர் மட்டுமே என்பதையும் ஒப்பிட்டு, இந்திய தேசியத்தின் இறையாண்மையை மாசுபடுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.
மே மாதம் 22ஆம் தேதி விபத்து நடந்திருக்கிறது, சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு மே 15ஆம் தேதி மங்களூர் விமான நிலையத்தின் ஓடுபாதை 2.7 கிலோ மீட்டராக நீளப்படுத்தப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூவியிருப்பதை பழைய செய்தித்தாள்களின் ஓரங்களில் தேடிப்பார்த்தால் காணக் கிடைக்கலாம். உலகில் விமானி இறந்து போன அனைத்து விமான விபத்துக்களுக்கும் விமானிகளின் தவறே காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வாழ்க விசாரணைக்குழு.
விமானத்தின் ஓடுபாதைக்கருகிலேயே வெடித்த ஒரு விமானத்தின் கருப்புப் பெட்டியை மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது என்பது, தேடுதல் பணியில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் கருப்புப் பெட்டியை அதற்கு முன்பு பார்த்திருப்பார்களோ என்ற சிந்தனையைத் தட்டி எழுப்புவதைத் தவிர்க்க முடியவில்லை.
சராசரி மனிதர்களாகிய பயணிகள் என்னதான் செய்வது? . அடுத்த பகுதியில்...
22 comments:
வாங்க தலைவா,வணக்கம் எங்க ஆளையே கானோம்
//கருப்புப் பெட்டியை மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது //
இப்பவாவது விபத்திற்க்கான காரணம் தெரிஞ்சிச்சா!
நல்ல தகவல்கள்,நன்றி
வணக்கம்
தங்களுக்கு விருது ஒன்றை கொடுத்துள்ளேன்
வந்து பெற்றுக்கொள்ளுங்கள்
http://jillthanni.blogspot.com/2010/05/blog-post_23.html
***ஜில்தண்ணி***
வேற இடத்துல வைக்கச்சொல்லி போராடுனோம்ன்னு சிலர் சொல்றாங்களாமே.. 35 கிமீ ல இருக்கிற ப்ளையின் இடம் நல்ல பொருத்த்மானதுன்னு..
கருப்பு பெட்டி ஆரஞ்சு கலரில் தானே இருக்கும் ஆனா ஊடகங்களில் வந்த படங்களில் சுத்தி வைத்து அடித்து ஓபன் செய்த மாதிரி ஒரு பண்டத்தை காண்பித்தார்கள்....என்னவாகியிருக்கும்?
இவ்விபத்தை பற்றி என் சீன நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவனுக்கு பறப்பது என்பது பயம் என்றும் எப்போது இறங்குவோம் என்று யோசித்துக்கொண்டிருப்பேன் என்றான் ஆனால் எனக்கு பறப்பது ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்,என்னை ஒரு மாதிரியாக பார்த்தான்.
ஊடகங்கள் எப்போது சரியான தகவலை தருவார்கள்? சரியான தகவல் உள்ளவர்கள் எழுதுவதில்லையா?
//கருப்புப் பெட்டியை மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது //
suvatril poi muttikkolla vendum...
சராசரி மனிதர்களாகிய பயணிகள் என்னதான் செய்வது?//
ஏர் இந்தியாவை புறகனித்து விட்டு மற்ற விமானங்களில் பயனிப்பது தான் ஒரே வழி
\ஏர் இந்தியாவை புறகனித்து விட்டு மற்ற விமானங்களில் பயனிப்பது தான் ஒரே வழி\
100% சரி.. ஆனால் பல சமயங்களில் வேறு வழியில்லாமல் தான் ஏர் இந்தியாவில் பயனம் செய்ய நேர்கிறது.
/சராசரி மனிதர்களாகிய பயணிகள் என்னதான் செய்வது? //
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.
நாஸியா said...
\ஏர் இந்தியாவை புறகனித்து விட்டு மற்ற விமானங்களில் பயனிப்பது தான் ஒரே வழி\
100% சரி.. ஆனால் பல சமயங்களில் வேறு வழியில்லாமல் தான் ஏர் இந்தியாவில் பயனம் செய்ய நேர்கிறது.
MAY 25, 2010 11:22 PM///
It's true.
Renga
பெருமூச்சுத்தான் தலைவரே விட்டுக்க முடியுது... :((
புறக்கணிப்பது என்பது ஒரு சரியான தீர்வாகுமா?
மற்ற நாட்டின் விமானங்கள் அனைத்து இடங்களுக்கும் வருவதில்லை, முக்கியமான பெருநகரங்களுக்கு மட்டுமே வருகின்றன,குறிப்பாக ஏர் இந்தியாவின் எக்ஸ்பிரஸ் விமானம் மட்டுமே தனது பன்னாட்டு விமான சேவையை அனைத்து நகரங்களுக்கும் கொண்டு சென்றது. நடந்த்த தவறுக்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படும்வரை எதுவும் சொல்ல முடியாது.
//அதனினும் சிறப்பு இந்தியாவில் "சில" விமானிகள் பணி நேரத்தில் சரக்கடித்து கிர்ர்ரான நிலையில் விமானத்தினை ஓட்டுவது குறித்தும் அதனைத் தடுக்க இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திக்கித் திணறி ஆடிய ஆட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்வதும் ஆகும்//
அடப் பாவிங்களா?
தரையிலதான் இந்த கூத்து ஆகாயத்திலுமா?
முதல்ல விமானத்தில் லிக்கர் கொடுப்பதை தடை செய்யனும்.உட்கார்ந்து இருப்பவன் குடித்தால் ஓட்டுறவனும் குடிப்பான்
ஷாகுல் said...
சராசரி மனிதர்களாகிய பயணிகள் என்னதான் செய்வது?//
ஏர் இந்தியாவை புறகனித்து விட்டு மற்ற விமானங்களில் பயனிப்பது தான் ஒரே வழி
-சூப்பர் ஐடியா , அதை தான் நாம்ப செய்ய முடியும்
//முதல்ல விமானத்தில் லிக்கர் கொடுப்பதை தடை செய்யனும்.உட்கார்ந்து இருப்பவன் குடித்தால் ஓட்டுறவனும் குடிப்பான்//
என்னங்க கண்மணி! எங்க பொழப்புல மண்ணள்ளி போட்டுவிடாதீங்க. எதோ அது இருப்பதால்தான் ரொம்பப்பேர் விமானத்திலேயே ஏறுகிறோம்!
//எதோ அது இருப்பதால்தான் ரொம்பப்பேர் விமானத்திலேயே ஏறுகிறோம்!//
இல்லைன்னா, இந்தியாவுக்கு நடந்தே போயிடுவார் போல!!
:-)))
காலையில் வந்தேன்
கணினிக்கு சுகமில்லை
மீண்டும் மாலை வந்தேன்
விமானக் குறிப்புக்கள் இன்னும் எதிர் பார்க்கிறேன்!
தெரியாத பல தகவல்கள் கருப்பு பெட்டி நக்கலுடன்.
////எதோ அது இருப்பதால்தான் ரொம்பப்பேர் விமானத்திலேயே ஏறுகிறோம்!//
இல்லைன்னா, இந்தியாவுக்கு நடந்தே போயிடுவார் போல!!
:-))) //
பின்னூட்டத்தில் ரசித்தது:)
//ஷாகுல் said...
சராசரி மனிதர்களாகிய பயணிகள் என்னதான் செய்வது?//
ஏர் இந்தியாவை புறகனித்து விட்டு மற்ற விமானங்களில் பயனிப்பது தான் ஒரே வழி
-சூப்பர் ஐடியா , அதை தான் நாம்ப செய்ய முடியும் //
வளைகுடா பயணத்தில் நட்பாக நடந்துகொள்பவர்கள் இந்திய விமான உதவியாளர்களே.நான் விமானதுறையில் ஒரு வருடம் பணி செய்த காலத்தில் உலக அளவில் முந்திக் கொண்டவர்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர்நோக்கும் வாசகியாக நான்...... காத்திருக்கின்றேன்.
துளசி கோபால் அவர்களையோ வாசகியா பெற்ற நீங்கள் ???
லேட்டா வந்தாலும் உங்கள் சிந்தனைகள் லேட்டஸ்ட் தான் தோழா,
வணக்கம் ஜில்தண்ணி :). மிக்க நலம். விருதுக்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் :). தாய்க்குப் பின் தாரம், நீதிக்குப் பின் பாசம் மாதிரி பணிக்குப் பின் பதிவு :). அதான் ஆளக் காணோம்.
இருக்கலாம், தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி :)
புதுசா கடையில இருக்கும் போது இருக்குற ஆரஞ்சுக் கலர்லயே விமானமே எரிஞ்ச பிறகும் இருக்கணும்னா எப்புடி??? :D , சீன நண்பருக்கு சுடுதண்ணியின் வாழ்த்துக்கள் :) @ வடுவூர் குமார்.
நன்றி நண்பா @ அகல்விளக்கு :)
விமான நிறுவனங்கள் மட்டுமின்றி பயணத்தின் போது செல்லும் விமான நிலையங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி ஷாகுல் :)
தங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி @ நாஸியா, ஹுஸைனம்மா, ரெங்கா, சென்ஷி :), இப்ராகிம், கண்மணி :) ரோகிணி சிவா. தொடர்ந்து வாங்க.
மிக்க நன்றி ராஜ நடராஜன் :).
வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி துளசிகோபால். தொடர்ந்து வாங்க.
அன்புக்கும், ஊக்கத்துக்கும் நன்றி ஜோதிஜி :)
Post a Comment