Sunday, April 22, 2012

அலெக்ஸ் பால் மேனன்

வாழ்க்கையில் எத்தனையோ நபர்களைச் சந்தித்தாலும், மிகச்சிலர் முதல் சந்திப்பின் போதே நம் மனதின் நம்பிக்கைக்குகந்தவராக மாறிவிடுவர். அதுபோன்ற மிகச்சிலரில் ஒருவர் தான் அலெக்ஸ் பால் மேனன். முதல்முறை திண்டுக்கல் தண்ணீர்ப்பந்தல் என்னுமிடத்தில் உள்ள தேனீர்க் கடையில் அலெக்ஸை சந்தித்த நிகழ்வு முதல், கல்லூரிக்காலத்தின் கடைசி நாளில், 'என்ன நடந்தாலும் எழுதுறத மட்டும் நிறுத்திடாதடா' என்று சொல்லிப் பிரியும் நாள் வரை அலெக்ஸ் நீக்க மற நிறைந்திருந்தார்.

செயல்படாமல் இருந்த கல்லூரித் தமிழ்ச் சங்கத்தினை மீண்டும் செயல்பட வைக்கப் போராடிய நாட்களும், நிதிப் பற்றாக்குறையால் கைக்காசைச் செலவு செய்து கல்லூரிக்கான மாத இதழ் தயாரிப்பில் கண்கள் சிவந்த தூங்கா இரவுகளும், இருக்கும் காசில் இருவரும் பசியாற நடைபாதை கம்பங்கூழ் கடைகளில் சங்கமித்து சித்தாந்தம், சமுதாயம், தமிழ், பொறியியல், அரசியல் என சகலமும் விவாதித்த நாட்களும் இன்றும் கண்களில் நிழலாடுகிறது.
 
பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள மதுரையில் உள்ள பிரபலக் கல்லூரிக்குச் சென்ற போது அங்கு நடந்த சில விதிமுறை மீறல்களை அனைவரின் முன் ஆக்ரோஷத்துடன் எதிர்த்து அக்கல்லூரி முதல்வரிடம் வாதிட்டது, தொடர்ந்து கல்லூரி மாத இதழ்களின் மூலம் திரட்டிய நிதியை முதலாமாண்டு ஏழை மாணவனின் சக்கர நாற்காலி வாங்க வழங்கியது என அலெக்ஸின் அநீதி கண்டு பொறுக்காத மனத்திற்கும், கருணையுணர்வுக்கும் சான்றாக சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
கல்லூரிக் காலம் கடந்த பிறகு, வேலை தேடி சென்னை மாநகரைக் காலால் அளந்து கொண்டு திரிந்த நாட்களில் அலெக்ஸ் இந்திய ஆட்சியாளர் தேர்வுக்காகப் படித்து கொண்டிருந்த போது மீண்டும் சந்தித்தேன். உடன் படித்தவர்கள் நான்கு இலக்க சம்பளத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளில் பணியில் சேர்ந்து கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் தனியறையில் ஒரு தவமியற்றுவது போல் படித்துக் கொண்டிருந்த அலெக்ஸைக் கண்ட போது பிரமிப்பில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பின்னாளில் பொறியியல் பாரம்பரியச் சடங்கின் சட்டத்திட்டத்தின் படி கப்பலேறிய சில மாதங்களில் இணையத்தில் தமிழ் நாளிதழ்களை மேய்ந்து கொண்டிருந்த போது தமிழகத்தில் இருந்து இஆப தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் அலெக்ஸின் பெயரைக் கண்டதும் நானே வென்றதைப் போல் உடனிருப்பவர்கள் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பெருமையடைந்தேன்.


ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் பேசும் போதும், தன் பணியில் மனநிறைவுடன்,உணர்வுப்பூர்வமாக செயலாற்றும் பாங்கினை குரல் பிரதிபலிக்கும். கடந்த முறை பேசிக் கொண்டிருந்த போது தான் பணியாற்றும் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு தங்கள் தாய்மொழியில் கணினி பயில வசதியேற்படுத்திக் கொடுத்ததைப் பற்றியும், அதற்கான தொழில்நுட்பங்கள் பல இந்தியாவிற்குள்ளேயேக் கேட்பாரற்றுக் கிடப்பதைப் பற்றியும் அங்கலாய்த்துக் கொண்டு விடைபெற்றுக் கொண்டோம்.
 
கடத்தப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்

இன்று செய்திகளில் மாவோயிஸ்ட் படையினரால் அலெக்ஸ் கடத்தப்பட்டார் என்ற செய்தி கண்டதும் மனம் ஸ்தம்பித்துப் போனது. அலெக்ஸின் இரண்டு பாதுகாவலர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தின் துயரங்கள் இன்னும் ஏதும் தெரியவரவில்லை. சொகுசு வாழ்க்கை வாழ வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும், அனைத்தையும் உதறித்தள்ளி அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக உழைப்பதற்காக மட்டுமே இஆப பணிக்குச் சென்ற அலெக்ஸிற்கு சிவப்புச் சித்தாந்தத்தின் பரிசு?. 

இத்தனை வருடங்களில் அலெக்ஸ் எதற்கும் பயந்ததில்லை, தன் கொள்கைளில் துளியும் சமரசம் செய்து கொண்டதில்லை, எளிமை கலந்து நகைச்சுவையுடன் பேசும் விதத்திலும் அப்படியே. யார் ஆட்சியாளர் என்று சரியாகத் தெரியாமல் குழம்பியக் கடத்தல்காரர்களிடம் நான் தான் அலெக்ஸ் என்று நெஞ்சுரத்துடன் சென்ற நெல்லைச் சீமையின் மண்ணின் மைந்தன் விரைவில் மீண்டு வரட்டும்.

இன்று அலெக்ஸ் பணிபுரிந்த சட்டிஸ்காரின் சுக்மா மாவட்ட மக்கள் கடத்தப்பட்டிருக்கும் தங்கள் மாவட்டத்தின் முதல் ஆட்சியாளரை விடுவிக்கக் கோரிப் போராட்டங்களை முன்னெடுத்திருப்பதே அலெக்ஸின் சாதனைகளுக்குச் சான்று.
 
நிச்சயம் நலமாக திரும்பி வருவீர்கள் அலெக்ஸ், நீங்கள் இன்னும் தொடுவதற்கு ஆயிரம் சிகரங்களும், நாம் கண்விழித்து தேநீர் சுவைத்து விவாதிக்க இன்னும் எத்தனையோ விஷயங்களும் பாக்கியிருக்கிறது.

18 comments:

RS said...

Salute to his courage and Praying god for his safe return.

nadar said...

Dont worry. He will be back soon

tnjjp77 said...

For good and sincere poor loving people god will be with him .This incident has shown to the country that there are good people whom we can rely upon to save this country.he will come back as a hero.

Raja said...

Welcome back bro,
didnt know anything abt alex and infact i thought he would've done something againt the people after his abduction. ur post certainly will let everyknow abt alex and thaks for the post

Raja

ராஜ நடராஜன் said...

செய்தியாக இருந்த நிகழ்வு இப்பொழுது மனதில் அதிர்வுகளை உருவாக்குவதோடு துயரம் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டது:(

Guru said...

welcome back Brother what happen u didnt write ? Plz continue your valueble writing . alex sir surely will come

Jeyachandran said...

இன்று தான் நான் முதன் முதலில்
உங்கள் தளத்துக்கு வந்தேன்.நானும் உங்கள் நண்பனின் விடுதலைக்காக
பிரார்த்திக்கிறேன் .உங்கள் கட்டுரை உணர்வுபூர்வமாக உள்ளது.

Balakumar Vijayaraman said...

மீண்டு வருவீர்கள் அலெக்ஸ். பிரார்த்தனைகள்.

சுடுதண்ணி said...

அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.

Ravichandran Somu said...

அலெக்ஸ் தங்கள் கல்லூரி நண்பர் என்று தெரிந்தவுடன் வருத்தங்கள் பல மடங்காயின. அலெக்ஸ் நலமுடன் திரும்பி வருவார். பிரார்த்தனைகள் !!!

venkarthi said...

HE WILL BE BACK SOON. I PRAY TO THE GOD. SAVE THIS KIND OF PEOPLE TO SAVE THE WORLD.

GOVT MAY REACTED FASTLY IF AN RULING CENTRAL MINISTER KIDNAPPED

பலசரக்கு said...

He will come back, everyone's prayers will be answered.

Rajesh said...

he is my neighbour, yes i am living in Ram Nagar extension, Tirunelveli,

he is my next street,

he will be back soon, and he continue his work at the same place,

சிவப்புச் சித்தாந்தம் நிச்சயம் செருப்படி வாங்கும்

T.Thenmathuran said...
This comment has been removed by the author.
T.Thenmathuran said...

சுடுதண்ணி அண்ணே வணக்கம். அலெக்ஸ் மேனன் இன்று விடுவிக்கப்பட்டதற்கு உங்களுடன் இணைந்து நானும் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். இன்னொரு விஷயம்... நீங்கள் எழுதிய இந்த போஸ்ட் இலிருந்து சில சம்பவங்களைச் 'சுட்டு' "அலெக்ஸ் மேனன் கடத்தலும் பின்னணியும்" என்று நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்....மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்....
http://venkkayam.blogspot.com/2012/05/blog-post_2350.html

rAAm said...

யார் ஆட்சியாளர் என்று சரியாகத் தெரியாமல் குழம்பியக் கடத்தல்காரர்களிடம் நான் தான் அலெக்ஸ் என்று நெஞ்சுரத்துடன் சென்ற நெல்லைச் சீமையின் மண்ணின் மைந்தன்

ராஜ நடராஜன் said...

அலெக்ஸ் அட்வென்சரின் மகிழ்ச்சியோடு இந்தப் பின்னூட்டம்.

unknown said...

வணக்கம்

அருமையை சொன்னீர்கள்
அவர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதில் எனக்கு மேலும் பெருமை
நானும் இந்திய ஆட்சிப்பணியில் பணியாற்ற தயாராகி கொண்டு இருக்கும் மாணவன் ,

தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்

என்றும் அன்புடன்
செழியன்.....