Saturday, August 18, 2012

உலகைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 14


ஸ்விடன் மூலம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசான்ஞ் பிணையில் வெளிவந்து ஏறக்குறைய 20 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த இருபது மாதங்களில் என்னவெல்லாம் நடந்ததது, ஜூலியன் இப்போது எங்கே இருக்கிறார், அமெரிக்காவின் நெருக்கடியினால், குற்றவிசாரணைக்கு என்ற ஒரே சப்பைக் காரணத்திற்காக மட்டுமே ஸ்வீடன் செல்ல வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கும் ஸ்வீடனையும், பிரிட்டனையும் உலகமே, ஜூலியனின் தாய்நாடான ஆஸ்திரேலியா உட்பட  ஊமையாய் வேடிக்கை பார்த்த நேரத்தில், கிராமத்து பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்ட கதாநாயகனுக்காக இக்கட்டான நேரத்தில் ஆதரவாக சாட்சி சொல்ல வரும் குணச்சித்திர நடிகர் போல ஒரு நாடு தன் திராணியை நிரூபித்த நிகழ்வுகள், லண்டனில் மற்றும் உலகமெல்லாம் நடந்த ஜூலியனுக்கு ஆதரவான போராட்டங்கள், இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையேயும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய ஆவணங்கள் ஆகியவை குறித்து ஒரு அலசல்.

தாங்கள் வெளியிட்டத் தகவல்களால் மொத்த உலகையும் இணையத்தை சல்லடைப் போட்டு மேய வைத்த விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன், கடந்த இரண்டு மாதங்களாக தங்கி இருப்பது லண்டனில் இருக்கும் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் ஒரு 15X15 அடி அளவிலான அறையில். பிணையில் இருக்கும் ஜூலியன் தினமும் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் உள்ளேன் ஐயா சொல்ல வேண்டும் என்பது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் ஒன்று. பிணையில் இருந்தாலும், ஜூலியன் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்குகள் மேல் கோர்ட்டுகளிலும், மென்மேல் கோர்ட்டுகளிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அலசி ஆராய்ந்து ஸ்வீடனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.ஸ்வீடனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டதும், எந்நேரத்திலும் ஜூலியன் கைது செய்யப்பட்டு ஸ்வீடனுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்றும், அடுப்பில் உலை கொதிக்கும் போதே தட்டெடுத்து உட்காரும் அகோரப்பசியில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் ஸ்வீடனுக்கு விரைந்து விமானநிலையத்தில் ஜூலியனின் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் செய்திகள் பரவின. 'இது பத்தி உங்க கருத்து என்ன", இந்த சமயத்தில நீங்க எப்படி பீல் பண்றீங்க?, உங்கள அமெரிக்கால வச்சுக் கொன்றுவாங்கன்னு உங்களுக்கு தோணுதா?" போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்விகளோடு ஜூலியனைத் தேடி வாகன் ஸ்மித்தின் பண்ணை வீட்டுக்குச் சென்ற செய்தியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சிட்டுக்குருவிப் பறந்து விட்டது.


ஜூலியன் மாயம், லண்டனில் பரபரப்பு என்று உலகமெ மாலை முரசில் படித்துக் கொண்டிருந்த போது அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் ஜீலியனிடம் இருந்து ஒரு செய்தி அறிக்கை வந்து சேர்ந்தது, அதில் தான் அரசியல் புகலிடம் கோரி ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் விண்ணப்பித்து இருப்பதாகவும், தன் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவெடுக்கும் வரை தனக்கு பாதுகாப்பளிப்பதற்காக தங்கள் தூதரகத்திலேயெ தங்க வைக்க ஈக்வடார் தூதரகள் அனுமதியளித்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.ஜூலியனின் இந்த நகர்வு மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவும், பிரிட்டனும், ஸ்விடனும் சேர்ந்து பிண்ணிய வலையில், லண்டனில் காவல்துறையின் கண்காணிப்பில் தங்கியிர்ருக்கும் ஜூலியனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவரது பிணைக்காக பணம் செலுத்திய நண்பர்களுக்குக் கூட இது குறித்து முன்கூட்டியத் தெரிவிக்கப் படவில்லை. தூதரகம் செல்லும் வழியில் வைத்துக் கூட கைது செய்யப்படலாம் என்ற நிலையில் ஜூலியன் அரசியல் புகலிடம் கோரி ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்த ஜூலியனின் நடவடிக்கை பலராலும் பாராட்டவும், விமர்சிக்கவும் பட்டது.  சர்வதேச சட்டப்படி தூதரகங்களுக்குள் புகுந்து சட்ட நடவடிக்கை எடுக்க தூதரகத்தின் அனுமதி வேண்டும். தூரகத்திற்கு வெளியே லண்டன் போலிஸும், ஜூலியனின் ஆதரவாளர்களும் குவிந்தனர். ஜூலியன் கதவிடுக்கில் வெளியே கை நீட்டினால் கூட பிடித்து இழுத்துக் கைது செய்வதற்கு தயாராய் போலீஸ். அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க கும்பலாய் ஆதரவாளர்கள் என யுத்தக்களம் போல் காட்சியளித்தது.

ரபேல் கொரயா - ஈக்வடார் அதிபர்

ஜூலியன் உலகமெங்கும் புகழ்பெற்ற நபர், அமெரிக்காவிலும், ஐரோப்பிய யூனியனில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ள நபர், அவருக்குப் புகலிடம் கொடுப்பது என்பது அத்தனை எளிதல்ல, ஜூலியனின் விண்ணப்பம் நேரடியாக ஈக்வடார் நாட்டில் அதிபரான ரபேல் கொரயாவிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஈக்வடார் கேட்ட சில முக்கிய ஆவணங்களையெல்லாம், ஜூலியனின் தாய், ஆஸ்திரெலியாவிலிருந்து ஈக்வடார் சென்று நேரில் சமர்ப்பித்தார். ஈக்வடார் என்ன முடிவெடுக்குமோ என்று பதட்டத்திலிருந்த மக்களுக்கும், ஊடகத்திற்கும் அருமருந்தாக லண்டம் ஒலிம்பிக்ஸ் அமைந்தது :).  கடந்த வியாழக்கிழமை வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பினை ஈக்வடார் அறிவித்தது, ஜூலியனுக்கு தாங்கள் புகலிடம் அளிப்பதாக.தூதரகத்தில் இருந்து ஈக்வடார் செல்வதற்கு விட மாட்டோம், கதவிற்கு வெளியே கால் வைத்தால் கைது செய்வோம் என்று பிரிட்டன் மல்லுக்கு நிற்கிறது மேலும் தூதரகத்திற்குள் புகுந்து ஜூலியனைக் கைது செய்யவும்  தயங்க மாட்டோம் என்று மிரட்டியது. அரசியல் புகலிடம் பெற்ற ஒருவரைக் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி மறுப்பது சர்வதேச சட்டத்தினை அவமதிக்கும் செயல் என்று கூறிய ஈக்வடார், பிரிட்டனின் மிரட்டலைத் தொடர்ந்து ALBA (Bolivarian Alliance of the Americas) மற்றும் OAS (Organization of American States) அமைப்புகளிடன் பிரச்சினையை எடுத்துச் சென்றது. ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தினைக் கூட்டி ஜூலியன் குறித்து விவாதிப்பதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இக்கோரிக்கை வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது எதிர்த்து வாக்களித்த மூன்று நாடுகள் அமெரிக்கா, கனடா மற்றும் ட்ரினிடாட் & டுபாக்கோ. அடுத்த வாரம் ஜூலியன் செல்லப்போவது அரசியல் புகலிடம் தந்த ஈக்வடாருக்கா அல்லது விசாரணைக்காக அழைத்து அமெரிக்காவிடம் கையளிக்கப்போகும் ஸ்விடனுக்கா என்று தெரியவரும்.

அடுத்த பகுதியில் கடந்த இருபது மாதங்களில் ஜூலியன் கடந்து வந்த பாதை, சந்தித்த சவால்கள், ஊடகங்களுடனான பிரச்சினைகள் மற்றும் அரசியல் புகலிடத்திற்கு ஈக்வடாரைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஆகியவை குறித்துப் பார்ப்போம்.


ஜுலியனின் செயல்கள் அனைத்திலும் எனக்கு ஒப்புதலில்லை. ஆனாலும் அவற்றுக்குத் தண்டனை வாழ்நாள் சிறை அல்லது மரணம் என்பதும், அதற்காக நாடுகடத்தப்படுவதம் சரியல்ல - அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால் ஜூலியனுக்குக் கிடைக்கப் போகும் தண்டனை குறித்து  - ரபேல் கொரயா, ஈக்வடார் அதிபர்.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விளக்கம்.. நன்றி...(TM 2)

சுடுதண்ணி said...

மிக்க மகிழ்ச்சி தனபாலன். :).

பொதிகை said...

தங்களது தொடர்கள் மூலம் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசான்ஞ் பற்றி நன்கு அறிய முடிந்தது. மிக்க நன்றி.

வவ்வால் said...

சுடுத்தண்ணீ,

தொடர்ந்து ஊடகங்களில் படித்து வந்தாலும் தமிழில் படிக்கும் போது நன்றாக புரிந்த உணர்வு வருகிறது, நல்லப்பகிர்வு, ஆனால் அசாஞ்சேயின் சொந்த நாடு வாய் மூடிக்கொண்டிருப்பது தான் இடிக்கிறது.

நம்ம நாட்டில் வெடிக்குண்டு, துப்பாக்கி சூடு வழக்கெல்லாம் இழுத்துக்கொண்டிருக்கும் போது அசாஞ்சே வழக்கு மட்டும் மின்னல் வேகத்தில் பாய்வது ஆச்சரியம் தான்.

ANaND said...

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர் ,,
மிக்க மகிழ்ச்சி

விரிவான விளக்கம்....

ஆதரவு தரும் ஈக்வெடார் அதிபர் பாராட்டப்படவேண்டியவர்..

அவரின் தாய் நாடு வாய்மூடி மெளனமாக இருப்பது வருதமளிகிறது ...

சுவையான உங்களின் அடுத்த பதிவிற்காக காத்துகொண்டிருகிறேன்

நன்றி

TAMIL said...

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர் ,,
மிக்க மகிழ்ச்சி

Thomas Ruban said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவிட்டுள்ளீர்கள் பகிவுக்கு நன்றி சார். தாய் நாடு ஆஸ்திரிலியா கை விட்ட நிலையில், வல்லரசுகளை எதிர்த்து ஆதரவு தந்த ஈக்வெடார் நாடு மிகவும் பாராட்டுக்குரியது.
அடுத்த பதிவிற்கு ஆவலுடன்...

Guru said...

Thank u brother

Hai said...

வருக வருக..........

நல்ல பலசெய்திகளோடு வருக........

Dhamu said...

Good post after a long back. Thanx Sir! We're awaiting for the next...

tupbala said...
This comment has been removed by the author.
tupbala said...

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர் ,,
மிக்க மகிழ்ச்சி

DR said...

ஏரியா கவுன்சிலரை பகைச்சிக்கிட்டாலே, இந்த உலகத்தில் உயிருக்கு உத்தரவாதம் கெடையாது. அப்புடி இருக்க சொல்ல, சில அரசாங்கங்களை பகைச்சிக்கிறதுக்கு என்ன மாதிரியான தில்லு வேணும்...

உண்மையிலையே இந்த மனுசனுக்கு தில்லு ஜாஸ்தி தான்... அருமையான கட்டுரை... அடுத்த தொடருக்கு ஆவலுடன் வெயிட்டிங்...

DR said...

For followup comments...

Dino LA said...

நல்ல பகிர்வு நண்பா...

ஜோதிஜி said...

கூகுள் கூட்டலில் எங்கு பார்த்தாலும் சுடுதண்ணி சுடுதண்ணி.

இப்படி புரியுமா? புரியுதா?