Thursday, July 18, 2013

இணையம் வெல்வோம் - 10

எந்தவொரு மனிதனின் வெற்றியும், தோல்வியும் நெருக்கடியான தருணங்களில் அவன் எப்படி எதிர்வினை புரிகிறான் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
துரதிர்ஷடவசமாக அந்தோணிக்கு பதட்டத்தில் வார்த்தைகள் தறிகெட்டு ஓடி அவரது ஒட்டு மொத்த அரசியல் வாழ்க்கைக்கே கரும்புள்ளியாகிப்போனது. அடுத்து வந்த நாட்களில் இது போல இணையத்தில் படங்களை வெளியிட்டு பல்பு வாங்கும் அன்பர்களுக்கானக் குறிச்சொல்லாக மாறிப் போனார் அந்தோணி.
டிவிட்டரில் வெளியிட்ட படங்கள் ஊடகங்களில் கல்லா கட்ட ஆரம்பித்ததும் முதலில் அந்தோணி உதிர்த்த முத்து தனது டிவிட்டர் கணக்கினை யாரோ ஹேக் செய்து அப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள், அது தனது படங்களே இல்லை என்பது தான். பின்னர் படங்கள் தன்னுடையதாக இருக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார். இது குறித்து ஏன் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு இது கேலிக்காக யாரோ செய்திருக்கிறார்கள், அவர்கள் மேல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை ஆயினும் அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளும் பொருட்டு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் விசாரித்து வருவதாகக் கூறினார்.
மேலே அந்தோணி சொன்ன அனைத்து வசனங்களும் அவருக்கே ஆப்பாக அமைந்தது. முதலில் அந்தோணி போன்ற பிரபலங்களின் இணையக் கணக்குகள் ஹேக் செய்யப்படுதென்பது இணைய பாதுகாப்பு வல்லுநர்களால் கூர்ந்து நோக்கப்படும். காரணம் எந்த யுக்தியினைப் பயன்படுத்தி சம்பந்தபட்டவர்களின் கணக்கு களவாடப்பட்டது என்பது முதல், எந்த இடத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைப்பாட்டினால் இது நிகழ்ந்தது வரையிலான அனைத்து சமாச்சாரங்களையும் அலசி காயப்போட்டு, அதனைப் பாடமாக வருங்கால சந்ததியினருக்கு கல்வெட்டில் எழுதி வைப்பது வழக்கம். அதிலும் அந்தோணி குறிப்பிட்டது இன்று அனைத்து அரசு, தனியார், பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கி அதிபர், பிரதமர், வார்டு கவுன்சிலர் வரை டிவிட்டரில் டிவிட்டித் தள்ளுவது சகஜமாகி விட்ட காலகட்டத்தில் ஒரு டிவிட்டர் கணக்குத் திருடு போனது இணைய உலகில் சலசலப்பினை உண்டாக்கியது. செய்தி வெளியாகியதும் பீதியில் அமெரிக்க அரசியல்வாதிகள் சில பேர் தங்கள் கடவுச்சொற்களை மாற்றியதும் நடந்தது.
அந்தோணி செய்த தவறு, இது குறித்து கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்காமல் போகிற போக்கில் நினைத்தையெல்லாம் ஊடகங்களில் பேசியது தான். முதலில் செல்பேசி, புகைப்படக் கருவிகள் முதலான மின்னணு உபகரணங்கள் மற்றும் கணிணியில் உருவாக்கப்படும் அனைத்துக் கோப்புகளுக்கும் Header meta data என்னும் தலைப்பகுதி ஒன்று இருக்கும். அதில் கோப்பு முதன்முதலில் உருவாக்கப்பட்ட இடம், நேரம், உபகரணம், ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது குறித்த தகவல்கள் அனைத்தும் இருக்கும். உதாரணத்திற்கு உங்கள் செல்பேசியில் எடுக்கப்பட்ட படத்தினை நீங்கள் இணையத்தில் பகிர்ந்தால் நீங்கள் வைத்திருக்கும் செல்பேசியின் வகை. தயாரிப்பு நிறுவனத்தின் தகவல், GPS வசதியிருந்தால் எடுத்த இடம், நேரம், தேதி மற்றும் ஒளி வெளிச்சம் குறித்து அனைத்து தகவல்களும் அந்த புகைப்படகோப்பின் தலைப்பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடியும். எனவே அந்தோணியின் படம் அவருடைய செல்பேசியில் இருந்து தான் எடுக்கப்பட்டதென்பதை மறைக்க வாய்ப்பேயில்லை.
அதே போல உங்கள் செல்பேசி அல்லது கணிணி மூலம் இணையத்தில் எங்கு சென்றாலும் உங்கள் வருகை அந்தந்த தளங்களின் வழங்கிகளில் பதிவு செய்யப்படும். உங்கள் இடம், வலையமைப்பு எண், தளத்தில் நுழைந்த நேரம், செலவிட்ட நேரம், வெளியேறிய நேரம், படித்த பக்கங்கள், புகைப்படங்களையோ அல்லது கருத்துக்களையோ பதிவேற்றினால் அது குறீத்த விவரங்கள் ஆகிய ஒவ்வொன்றும் அங்கு கிடைக்கும். வலையமைப்பு எண்ணின் மூலம் உங்களுக்கு இணைய வசதி தரும் நிறுவனத்தினைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் மூலம் அவர்களை அணுகினால் உங்கள் ஒட்டுமொத்த இணைய நடவடிக்கைகளும் பந்தி வைக்கப்படும்.
இணையத்தளங்களை நடத்தும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனவே அந்தோணி தனது புகைப்படங்களை டிவிட்டர் தளத்தினில் இருந்து நீக்கினாலும் முன்பு பதிவேற்றிய புகைப்படங்கள் அதற்கு பயன்படுத்தப்பட்ட இணைய இணைப்பு ஆகியவை அந்தோணியினை நோக்கிக் கைகாட்டும் என்பதை அவர் உணராததன் விளைவே இத்தனை சங்கடங்களும். இதையெல்லாம் உணர்வதற்குள் அந்தோணியின் மதிப்பும் மரியாதையும் அவர் படங்களைப்போலவே ஊடகங்களால் நிர்வாணமாகக் காட்சியளித்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி இப்படி புகைப்படக் கலை வித்வானாக நேரங்கழித்ததும், நேர்மையின்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதும் அந்தோணியின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் தாக்கியது. உடனடியாக ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த அந்தோணி தான் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு ஜகதலப்பிரதாபன் என்பதையும், தன் மனைவிக்கும், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் உண்மையை மறைத்த பாவி என்பதையும் இரு கன்னங்களிலும் கண்ணீர் பிழிந்து வழிய ஒப்புக் கொண்டார். தனது ட்விட்டர் கணக்கினை மூடியதோடு பதவியினையும் ராஜினாமா செய்தார்.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய அந்தோணி, நேரே நெடுஞ்சான் கிடையாக சென்று விழுந்தது மனைவி ஹூமாவின் கால்களில் தான். மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையின் படி கண்கள் பனித்து, இதயம் இனித்து ஹூமா அந்தோணியை ஏற்றுக் கொண்டார். இது போன்ற அஜால்குஜால் வேலைகளில் கழக முன்னோடியான, திருமணத்தினை நடத்தி வைத்த பில் கிளிண்டனிடமும் தனியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது தனிக் கிளைக்கதை. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தன் டிவிட்டர் கடையினை அகலத்திறந்த அந்தோணி தான் தீவிர அரசியலுக்குத் திரும்புவதாகவும், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்த போது ஊடகங்கள் வெளியிட்ட செய்தித்தலைப்பு சகல தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. பார்க்க படம்
அந்தோணியின் அனுபவம் நித்திரை கொள்ளும் வரை இணையத்திலேயே உழன்று கொண்டு எதையாவது வலையேற்றியே தீர்வது என்று கொலைவெறி பிடித்த அன்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். மேலும் இது போன்ற இணையம் மற்றும் கணிணி குறித்தான விழிப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகள் தான் இணையக்குற்றங்களுக்கான சட்டங்களை நிறைவேற்ற பக்கோடா தின்று கொண்டோ அல்லது தங்கள் செல்பேசியில் ஆபாசப்படங்களை பார்த்துக் கொண்டே வாக்களித்து நிறைவேற்றும் அபாயத்தினை நாம் உணர்ந்து கொள்ளவும் சரியான உதாரணம்.
மரத்தடி டீக்கடையில் அரசியல், சினிமா மற்றும் ஊர்வம்பு பேசி, டீ சூடு ஆறுவதற்குள் காஷ்மீர், பாலஸ்தீனம், கச்சத்தீவு, ஈழம், அணு உலை போன்ற விவாதங்களுக்குத் தீர்ப்புச் சொல்லி பெருமிதம் கொள்ளும் கலாச்சாரத்தில் ஊறிப்போனத் தமிழ்ச்சமூகம் அதனை அப்படியே இணையத்தில் வலையேற்றியிருக்கும் இக்காலத்தில் இணையம் குறித்தான சட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
அரசுகளின் பார்வையில் இணையம் என்பது தேசியச் சொத்து, தகவல்களை வலையேற்றும் ஒவ்வொரு தனி நபரும் ஒரு ஊடகக்கருவி என்பதனை நினைவில் கொள்ளவும். நண்பர்களிடம் அரட்டையடித்த பழக்கத்தில் இணையத்தில் எந்தவொரு தனிநபரைப் பற்றியும் ஆதாரமில்லாமல் அவதூறு கூறுவது குற்றம். பேச்சு சுதந்திரம், தனி மனித உரிமை வெங்காயங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை. நம்மூரில் இன்னும் எவரும் தங்களை பற்றி இணையத்தில் யார் என்ன பதிவு செய்திருக்கிறார்கள் என்பதனைப் பற்றி பொருட்படுத்துவதில்லை, அப்படியொரு நிலை வெகு சீக்கிரத்தில் வரும்.
வெட்டியரட்டையில் பேசுவது போல இணையத்தில் வேடிக்கைக்காக பேசினாலும், சம்பந்தப்பட்ட நபர் நினைத்தால் உங்களை பராசக்தி சிவாஜி போல கோர்ட்டில் பிளிற வைக்க முடியும். இதற்கு தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஒருவரின் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் ஒரு உதாரணம். அதே போல வட இந்தியத் தொழிலாளர்கள் வதந்தியால் தென்னகத்திலிருந்து தங்கள் ஊருக்குக் கிளம்பிய நேரத்தில் இந்திய அரசு செல்பேசி குறுந்தகவல்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசால் தகவல் தொழில்நுட்பத்தினை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியுமென்பதற்கு அது ஒரு சின்ன உதாரணம்.
சமீப வருடங்களில் எந்த நாட்டில் மக்கள் போராட்டத்திற்கு கிளர்ந்தெழுந்தாலும், அதனை வலுவிழக்கச் செய்யும் முதல் வேலை ஒட்டு மொத்த இணையத்தையும் நாடு முழுவதும் செயலிழக்கச் செய்வது தான். இதில் கொடுங்கோல் சர்வாதிகார நாடுகள் முதல் காந்தி தேசங்கள் வரை விதிவிலக்கில்லை. அதற்கான அதிகாரத்தினை அரசின் முதன்மைப் பதவி விகிப்பவர்களுக்கு வழங்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதனை நினைவில் கொள்ளவும்.
இவ்வளவு கடுமையான சட்டங்களை எந்த நாடும் தனித்தனியாக சொந்த அறிவில் யோசித்து செய்யவில்லை. அனைத்து நாடுகளின் இணையம் குறித்தான சட்டங்களும் கிட்டத்தட்ட ஈயடிச்சான் காப்பி என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதனை அரசுகள் பயன்படுத்தும் சூழ்நிலை வரும் போது தான் அதன் வீரியத்தினை நாம் உணர முடியும். இணையத்தினைப் பயன்படுத்தும் ஒரு சாமனியனின் பார்வையில் இது தனி மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அரசின் பார்வையில் நாட்டின் பாதுகாப்புக்கான அத்தியாவசியம்.
இந்த சட்டங்களெல்லாம் எங்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றி விட்டார்கள், இது மிகப்பெரும் அநீதி, அக்கிரமம், அடக்குமுறை என்று சேகுவரா சட்டைகள் அணிந்து கொண்டு பொங்கும் அன்பர்களுக்கும், டொரண்டில் ஒரு திரைப்படத்தினைத் தரவிறக்கம் செய்வதெல்லாம் ஒரு குற்றமா, இதையெல்லாம் தட்டிக் கேட்க இங்கு ஆளே இல்லையா என்று கதறும் அப்பாவிகளுக்குமான பிரத்யேக காயகல்ப லேகியமாக அவதரித்தவர்கள் தான் “அனானிமஸ்.”
தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

1 comment:

Ranjani Narayanan said...

உண்மையிலேயே 'சுடும்' பதிவு இது.
எனக்கும் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. படிக்க படிக்க பயம் அதிகமாகிறது.

இந்த ஒரு பதிவு மட்டுமே படித்துள்ளேன். இதனை தொடர்ந்து வாசிக்கிறேன்.

எப்படி ஜாக்கிரதையாக இருப்பது என்றும் எழுதுங்கள், ப்ளீஸ்!