Wednesday, January 7, 2015

இணையம் வெல்வோம் - 23

முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது பரவலாகியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில ஆலோசனைகள் மட்டுமே.
இணையத்தில் சமையல், கல்(ல)வி, தொழில்நுட்பம், இலக்கியம் எனச் சகலத்தையும் பற்றியும் தெரிந்து கொண்டு இன்புறுவது எவ்வளவு இனிமையோ, அவ்வளவுக்கு அதனை ஒரு ஊடக்கருவியாக மட்டுமே பயன்படுத்துதலின் மூலம் நிஜ வாழ்க்கையில் எந்தவித துன்பங்களும், அசெளகரியங்களும் நேராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை என்ற கருத்துப் பொங்கலே பின்வரும் ஆலோசனைகள்.
 1. அலுவலகம், இல்லம், ஓசிக்கணினி, பக்கத்து வீடு, பேருந்து-ரயில்-விமான நிலையங்கள், இணைய மையங்கள் (netcafe) என்று எங்கு உங்கள் இணையத் தாகத்தினை சாந்தி செய்து கொண்டாலும், முதலில் நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி பாதுகாப்பானதா என்று பரிசோதித்துப் பின் செயலில் இறங்கவும். keyloggers, spyware போன்ற அன்பர்கள் உங்களுக்காகக் காத்திருக்கலாம், கவனம். மடிக்கணினி வைத்துக் கொண்டு பொது இடங்களில் இணையத்தைப் பாவிப்பவர்கள் முதுக்குப் பின் யாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ளா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் :D. பெரும்பாலும் பொது இடங்களில் மிக அவசிய, அவசரத் தேவையன்றி, இணையத்தைத் தவிர்ப்பது சிறப்பு. அவ்வாறு தவிர்க்கவியலாத சூழ்நிலையில், உங்கள் வீட்டுக்குச் சென்றடைந்ததும், பயன்படுத்திய கடவுச்சொற்களை மாற்றுவது நன்று.
keyloggers என்பது விசைப்பலகையில் தட்டச்சப்படும் அத்தனையையும் பதிவு செய்யும் அதிஅற்புதப் பயனுக்காகவே படைக்கப் பட்ட ஒரு மென்பொருளென்பதும், spyware உங்கள் இணைய நடவடிக்கைகளை இம்மி பிசகாமல் தங்கள் எசமானர்களுக்கு அனுப்பி வைக்கும் கடமையேக் கண்ணாகக் கொண்ட மென்பொருளென்பதும் உபரித்தகவல்.
2. எந்த இடத்தில் சுட்டிகளைக் கண்டாலும், அடுத்த நொடியே தன்னிலை இழந்து, படக்கென்று க்ளிக்கி விடும் வியாதி இருக்கும் அன்பர்கள், பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டுப் பார்வையிடும் பக்கங்களை எக்காரணம் கொண்டும் வலைப்பக்கங்களிலோ அல்லது மின்னஞ்சல்களிலோ இருக்கும் சுட்டிகள் மூலம் திறக்காமல் இருப்பது பாதுகாப்புக்கு மிக முக்கியம். அப்படி முடியாத அளவுக்கு வியாதி அதிகமாயிருந்தால் கைகளைக் கட்டிக் கொண்டு வலைப்பக்கங்களையோ, மின்னஞ்சல்களைப் படிக்கப் பழகலாம்.
3. டிஜிட்டல் புகைப்படக்கருவிகளும், புகைப்படக்கருவி வசதி கொண்ட செல்பேசிகளும் பெருத்துப் போன இக்காலகட்டத்தில் புகைப்படங்களை கணினியில் சேமிப்பதோ, இணையத்தில் பகிர்வதோ எல்லாருக்குமே மிகமிக எளிதாகிவிட்டது. எளிதாகிவிட்ட ஒரே காரணத்தினால் புகைப்படங்களைக் கண்டமேனிக்குப் பகிர்ந்து கொள்ளும் முன் புகைப்படக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் உளவுத்தகவல்களை நீக்குவது பற்றி அறிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கவும். மிகமிக முக்கியமானத் தவிர்க்க முடியாதத் தேவைகளின்றி உங்கள் முகத்தினையோ அல்லது குடும்பத்தினரின் முகத்தினையோ இணையத்தில் காட்டுவது விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பிருப்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பாக சுதந்திரமாக மாற்றுக் கருத்துக்களைக் குமுறும் பலவகை இசங்களில் ஏதெனும் ஒன்றிற்கான, இணைய உலகின் ஒரே ஒப்பற்றப் பிரதிநிதிகளுக்கு இது மிக முக்கியம், இல்லையேல் சாலையில் தனியாக நடந்து செல்லும் போது உங்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டையை மறக்காமல் சட்டைப்பையில் வைத்துச் செல்லவும்.
4. உங்கள் கணினியை, புகைப்படக் கருவிகளை, கோப்புகளை சேமிக்கும் உபகரணங்களை (pen drives) மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டோ அல்லது பிழைநீக்கும் நபர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டோ கொடுக்க நேர்ந்தால் காஞ்சிபுரம் தேவநாதனையோ அல்லது இணையத்தின் இன்ப ஊற்று சிலம்பரசனையோ ஒருமுறை கண்மூடித் தியானித்துக் கொள்ளவும். அழிக்கப்பட்ட, அழிக்கப்படாத அத்தனைக் கோப்புகளும் சுருட்டப்படும், கவனம். கடந்த காலத்தில் அப்படி பகிரக்கூடாதக் கோப்புகளுடன் உபகரணங்களைப் பகிர்ந்திருந்தால், தினமும் இரவு தூங்கச் செல்லும் முன், சாப்பாட்டுக்குப் பின், ஒரு முறை யூ-டியூப் தளத்தினையோ அல்லது கூகுள் படங்களையோ அலசி, உறுதிபடுத்திக் கொண்டு தூங்கவும்.
5. பிறந்தநாள் தேதி, தாய் தந்தையர் பெயர்கள். சொந்த ஊர், முகவரி போன்ற தகவல்கள் ஒவ்வொன்றும் வலைத்தளங்களில் உங்கள் பயனாளர் கணக்கை பாதுகாக்கும் கதவுகளின் சாவிகள். சாவிகள் பத்திரம். பலர் படிக்கும் வண்ணம் பதிவுகளிலோ, வலைத்தளங்களிலோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோ, அல்லது இன்று எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரவேற்கப்படுகின்றன..இன்றே கடைசியென்று பொதுவில் கூவுவதையோ தவிர்ப்பது நல்லது.
 6. வலைப்பதிவுகளில், உங்கள் சொந்த வாழ்க்கையில் நடப்பவைகள் குறித்துப் பகிரும் போது புனைவுகள் சேர்த்துப் பதியுங்கள்.
"பஸ் ஸ்டாண்ட்ல போயி இறங்கினதும், காந்தி நகர் எங்கேருக்குன்னு கேட்டீங்கன்னா, யார் வேணா சொல்வாங்க. நடக்கிற தூரந்தான். காந்தி நகர் மூணாவது தெருவுல ரைட் சைடு நாலாவது வீடு. மஞ்சக்கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும். பெரிய கதவுல ABC ILLAM அப்படின்னு போட்ருக்கும்",
"எங்க வீட்ல எல்லாரும் ஊட்டி போறோம், வந்ததும் போட்டோக்களோட பதிவு போடுறேன். பாவம் எங்க கிழவியத்தான் குளிர் ஒத்துக்காதுன்னு தனியா வீட்டுல விட்டுட்டுப் போறோம்",
"மேலே போட்டோல இருக்குறது தான்எங்க பாப்பா, அவ ரொம்ப சுட்டி, படிப்பில் கெட்டி, abc பள்ளிக்கூடத்தில தான் படிக்கிறா. தனியாவே/ஆட்டோல/பஸ்ல போயிட்டு வந்துருவா. அவங்க க்ளாஸ் டீச்சர் மைதிலி. ரொம்ப நல்லவங்க. அவங்க உதட்டுக்கு மேல மச்சம் சிம்ரன் மாதிரி மச்சம் இருக்கும்"
போன்ற பகிர்வுகள், பகிர்வுகளல்ல, உட்காரும் இடத்தில் நமக்கு நாமே விதைக்கு கண்ணி வெடிகள். உங்களுக்கு விதைத்துக் கொண்டாலும் அடுத்தவர்களுக்கு விதைக்காமல் பார்த்துக் கொள்ளவும் :D. அவசியமென்றால் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாமே தவிர பொதுத்தளங்களில் அல்ல.
7. இணையத்தின் மூலம் அறிமுகமாகும் நண்பர்களிடம் போதிய கால அவகாசமின்றி உடனேயே உங்கள் வீட்டு நாய்க்குட்டி குட்டிப் போட்ட வரைக்கும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உளவியல் ரீதியாக இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும். முக்கியமாக இணைய நண்பர்களை முதல்முறை நேரில் சந்திக்கச் செல்லும் போது கட்டாயம் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை உடன் அழைத்துச் செல்வதும், முடிந்தால் சரக்கடிக்காமல் சந்திப்பை முடித்துத் திரும்புதல் மிகச்சிறப்பு.
 8. அனுதினமும் படைப்புகளைப் படையலாக்கிக் கொண்டிருக்கும் பதிவுலகில், பாராட்டு என்பது எல்லாருக்குமே க்ளென்பெடிச் (18yrs) போன்றது, அதாவது உற்சாகமளிக்கும், பட்டாம்பூச்சி பறக்கும் விஷயம் தான். அதனைப் பின்னூட்டங்கள் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ பெற்றுக் கொள்வது நன்று. வலைப்பதிவராக இருப்பின் உங்கள் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்காமல், வலைப்பதிவுக்கென்று தனியாக ஒரு மின்னஞ்சலைப் பாவித்து வருவது பலவகையிலும் பிரச்சினைகளைத் தவிர்க்கும். அதிகபட்சம் உங்கள் வலைப்பதிவிற்கான மின்னஞ்சலை பொதுவில் பகிர்ந்து கொள்ளுங்கள் (மின்னஞ்சல் சூறையாடப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல). உங்கள் தொலைபேசி/செல்பேசி எண்களைப் வலைப்பக்கத்தில் "வாங்க பேசலாம்" என்று பெரிதாகப் போட்டுவிட்டுப் புன்னகைக்கும் உங்களைப்பார்த்து, அடுத்த வாரமே "எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். நான் ரொம்ப பிசி. முக்கியமான நேரத்தில, பதிவு பத்திப் போன் பண்ணித் தொல்லை பண்றானுங்க, ராஸ்கல்ஸ்" என்று பதிவு போடும்போது படிப்பவர்கள் புன்னகைப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
 இணையம் என்பது தொழில்நுட்பம் நமக்களித்த மூன்றாவது கண், அது ஆனந்தத்தால் பனிக்க வேண்டுமே தவிர வேதனையால் அல்ல என்பதே நோக்கம், மற்றபடி இணையத்தில் எதை எழுதுவது, பகிர்வது என்பது அவரவர் சுதந்திரம். ஒருவேளை சுதந்திரம் சட்டத்தை மீறினாலோ. அல்லது சுதந்திரத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டாலோ சட்டத்தைத் தயங்காமல் அணுகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதையும், எதிர்வரும் காலங்களில் இணையம் குறித்தான உங்கள் பார்வையையும், புரிதலையும் மாற்றியமைப்பதற்கான சிறு விதையாக இத்தொடர் இருந்தால் பெருமகிழ்ச்சியென்பதையும் சொல்லி இத்தொடர் நிறைவடைகிறது.
அறிவால் இணைவோம், இணையம் வெல்வோம்!!!

முற்றும்.

நன்றி:
ஒரு பதினைந்து நிமிட தேநீர் சந்திப்பின் போது பிறந்ததே இத்தொடர் குறித்தான எண்ணம். வெறும் 23 பகுதிகள் தான் என்றாலும் அதனை சவ்விழுப்பாக ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டு முடித்தாலும், எந்த குறையும் சொல்லாமல் இன்முகத்துடன் அனுப்பிய நேரங்களில் எல்லாம் பிரசுரித்த 4தமிழ்மீடியா நிறுவனத்தார்க்கும், மலைநாடன் அவர்களுக்கும் நன்றிகள். அமைதியாக சலனமின்றி சென்று கொண்டிருந்த வாழ்க்கை, இத்தொடர் தொடங்கிய நேரம் முதல் காட்டாற்றில் சிக்கிய படகாக மாறிப்போனது. பணி நிமித்தமான மாற்றங்களும், அழுத்தங்களும், தொடர்ச்சியான வாகன விபத்துகளும், சூழலுமே சரியான நேரத்தில் இத்தொடர் முடிக்க முடியாமல் போனதற்கான காரணம். தொடர்ச்சியாக இத்தொடரைப் படிக்க முடியாமல் அவதிப்பட்ட வாசகர்களுக்கு எனது வருத்தங்கள். இத்தொடரை எழுதிய காலத்தில் தொடர்பு கொண்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் சுடுதண்ணியின்  நன்றிகள்!!!!.

7 comments:

ஜோதிஜி said...

Good

ஜோதிஜி said...

சிறப்பாக வந்துள்ளது.

srinivasan said...

இந்த தொடர் மறுநினைவூட்டலாக வந்திருக்கிறது.விரைவில் அடுத்த தொடரை எதிர்பார்ப்போம் .

Larry M said...

சூப்பர் பாஸ். நல்ல கருத்துக்கள்.

நேற்று ஒரு tagged போட்டோ என்னுடைய newsfeedஇல் தெரிந்தது. அந்த பெண்ணின் வயது 19 இருக்கும். அந்த பெண்ணின் இரண்டு அத்தைகளை என்னக்கு 20 வருடமாக தெரியும். Facebook எப்படி ஒரு friend of friendஇன் போட்டோவை என்னுடைய newsfeedஇல் கொண்டு வந்தது என்று தெரியவில்லை.

அந்த போட்டோ ஒரு screen shot. அந்த பெண்ணின் facebook comment section is open to public. எவனோ ஒரு சின்ன பையன் அவள் profileயை பார்த்து விட்டு, நல்ல pigaru என்று கமெண்ட் செய்து இருக்கிறான். இந்த பெண் கோபம் அடைந்து , 'உங்க அம்மாவும் pigaruthane, போய் அவகிட்ட சொல்லுடா என்று' கமெண்ட் செய்தது. பிறகு அதை screen shot எடுத்து, ஒரு 40 facebook connections tag பண்ணி, 'see my bravery, see my bravery' என்று பறைசாற்றியது.

அந்த பெண்ணின் அறியாமைக்காக நான் கவலைப்பட்டேன்.அந்த பெண்ணின் profile எடுத்து பார்த்த போது , அத்தனையும் கவர்ச்சி படங்கள். அவளுடைய சுதந்திரம், நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் அந்த போடோக்கள் public ஆக இருக்கும் போது, எவனாவது ஒருவன் வந்து கமெண்ட் செய்வான். அந்த பெண்ணுக்கு அவளுடைய privacy settings மாற்றுமாறு comment seithen. மேலும் ஒருவரை அவமானம் செய்வது ஆபத்தானது. இந்த பெண் college செல்லும்போது, அவளை வழிமறித்து கோபத்தில் தாக்க வாய்ப்பு உண்டது. அதனால் ஒரு profile தொந்தரவு செய்தால் அதை block செய்வதுதான் சரியான வழி என்று சொன்னேன்.

அந்த பெண்ணின் 'see my bravery' commmentkku சொல்லி வைத்தது போல, அத்தனை ஆண்களும் ஆதரவு. அந்த அதரவுக்கு காரணம் நமக்கு தெரியும். LOL! இதை சொல்லியதால், அந்த பெண் என்னை block செய்து விட்டால். அழகான முட்டாள்.

அடுத்த முறை, social networking privacy settings பற்றியும், online behaviour பற்றியும் எழுதுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

srinivasansubramanian said...

நல்ல கருத்துக்கள்.சிறப்பாக ள்ளது.

Anonymous said...

//இணையம் என்பது தொழில்நுட்பம் நமக்களித்த மூன்றாவது கண், அது ஆனந்தத்தால் பனிக்க வேண்டுமே தவிர வேதனையால் அல்ல என்பதே நோக்கம்//

Wow...........

Unknown said...

I Miss You.