Wednesday, February 17, 2010

இணையக்கோட்டை முரட்டு ரவுடிகள்

கல்லூரிக்காலங்களில் வேடிக்கைக்காக இரவு நேரத்தில் மின்சாரத்தடையின் போதோ அல்லது பட்டப்பகலில் போர்வை போத்தியோ பிறந்தநாள் கொண்டாடியிருப்பீர்கள். அதாவது யார் அடிக்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் அடி வெளுக்கப்படும். வெளிச்சம் வந்ததும் பார்த்தால் எல்லோரும் அவரவர் இடத்தில் இருப்பார்கள். அப்படி இணையத்தின் பின்பக்கம் மறைந்து கொண்டு தாக்குபவர்கள் பற்றியும் அக்கலையின் நுட்பங்கள் பற்றியும் இப்பதிவில்.

சின்னக் குழந்தைகளைத் தாக்கினால் அது இணைய அச்சுறுத்தல் (cyber bullying) என்றும், மீசை முளைத்த குழந்தைகளைத் தாக்கினால் இணையத் தொந்திரவுகள் (cyber stalking/cyber harassment) என்றும் இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள். சமூக வலைப்பின்னல்கள் பெருகிப்போய்விட்ட இணையத்தில் ஒரு தனி நபரைப் பற்றித் திரித்து எழுதி இணையத்தில் வலம் வரச்செய்வதென்பது சுடுதண்ணி வைப்பது போல் மிகமிக எளிது. இதை ஏன் செய்கிறார்கள்? தனிப்பட்ட வன்மம் அல்லது மனவியாதி இரண்டில் ஒன்றாக இருக்கலாம். இணைய உலகத்தில் கருத்து விவாதங்கள் பல தளங்களில் நடந்து கொண்டேயிருந்தாலும், கருத்துக்களைத் தாக்கி விவாதிக்காமல் கருத்துச் சொல்லும் நபரின் இனம், மொழி ஆகியவற்றைச் சாடித் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதும் அன்பர்களாலேயே இணைய ரவுடித்தனம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. நிஜ வாழ்வில் முகம் காட்டி மோதும் அளவுக்குக் கூட சில இணையத்தகராறுகள் செல்வதுண்டு.


இவற்றை எப்படிச் சமாளிப்பது?. உங்கள் நிஜவாழ்வின் அடையாளத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதென்பது வேலியில் போவதை வேட்டிக்குள் விடும் அனுபவத்தைத் தர வல்லது. அனேக இணையத் தொந்திரவுகள் அடையாளத்திருட்டு(identity theft) மூலமே நடைபெறுகிறது. அதுபோக இணையத்தளங்களிலோ அல்லது பதிவுகளிலோ கருத்து மோதல்களில் பெரும் காலத்தை செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கருத்தை ஒரே முறை பதிவு செய்வதோடு இணையத்தின் மூலம் நாம் செய்யும் சமூக சேவையினை முடித்துக் கொள்வது நன்று. கருத்துக்கு எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்பதெல்லாம் காலவிரயம் என்பது அனுபவசாலிகளின் கருத்து. இணையத்தில் பலதரப்பட்ட நபர்கள் வருவார்கள், இருதரப்பிலும் ஒரே மாதிரியான மனமுதிர்ச்சியையும், கருத்து விவாதம் செய்யும் பாங்கினையும் எதிர்பார்க்க முடியாதென்பதும் ஒரு காரணம்.


இந்தியாவின் முதல் இணையத் தொந்திரவு குற்றப்பதிவு தில்லியைச் சேர்ந்த திருமதி. ரித்து கொஹ்லி அவர்களால் பதிவு செய்யப்பட்டது. காரணம் அவரது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து தினமும் ஒருவர் இணைய அரட்டையில் கும்மியடித்து வந்ததும், அதன் விளைவாக நேரங்கெட்ட நேரத்தில் ஏகப்பட்ட நபர்கள் திருமதி. ரித்து அவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து 'வரலாமா' என்று கேட்க ஆரம்பித்ததும் தான். பின்னர் வழக்கம் போல வலையிணைப்பு முகவர் எண் (I.P) மூலம் குற்றவாளி கணடுபிடிக்கப்பட்டு முட்டிக்கு முட்டி பெயர்க்கப்பட்டாலும் இதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து திருமதி. ரித்து கொஹ்லிக்கு மட்டுமே வெளிச்சம்.


தனிப்பட்ட நபர்களால் மட்டுமின்றி கூட்டம் சேர்ந்து கொண்டு ஒருவரைக் குறிவைத்து இணையத்தில் தொந்திரவு செய்வதும் இணையத்தின் மாமூல் வாழ்க்கையில் ஒரு பகுதியே. இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?. நிஜ வாழ்க்கையைப் பாதிக்காதவரை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய் விடுவதே சிறப்பு. கவன ஈர்ப்பைப் பெறுவதே குற்றவாளிகளின் முதல் நோக்கம். அது கிடைக்காத வருத்தத்தில் அவர்களாகவே மனநலக் காப்பகத்தில் சென்று சேர்ந்து கொள்வதின் வாய்ப்பதிகம். அப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். இணையத்தில் அனைவரது நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. கால அவகாசங்கள் வேறுபடுமே ஒழிய, எவரும் தப்பிக்க முடியாது.உங்கள் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள் ஆகியோரின் படத்தினை வலைப்பக்கங்களிலோ, பதிவுகளிலோ பிரசுரிக்கும் முன் எதையும் தாங்கும் இதயம் இருப்பதை உறுதி செய்து கொள்வது நலம்.ஒரு தாய் தன் குழந்தையின் படத்தையே, 'ஆதரவற்ற குழந்தை, உதவி செய்யுங்கள்' என்ற கோரிக்கையுடன் மின்னஞ்சல்களில் பார்த்த சம்பவத்தை உலகம் கண்டிருக்கிறது. தொலைபேசி எண்கள், பழைய எண், புதிய எண் போன்ற நுணுக்கமான விவரங்களுடன் கூடிய வீட்டு முகவரி ஆகியவற்றை வலையேற்றுவதைத் தவிர்க்கவும். அதனினும் முக்கியமானது மற்றவர்களுடைய விவரங்களை அவர்களது அனுமதியின்றி பிரசுரிப்பது.கடந்த காலத்தில் இணையத் தொந்திரவினால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் த்ரிஷா, குஷ்பு, நயன் தாரா போன்ற அபலைகள் பலர் இருப்பதால் அரசு அவர்களுக்கென ஒரு நலவாரியம் அமைத்து, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருந்தாலும், நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழரின் பிரத்யேக மின்னஞ்சலை இணையத்தில் வெளியிட்டு, 'வந்து குவியும் மின்னஞ்சல்களை அழித்து, அழித்து மணிக்கட்டு வலிக்கிது, அழுதுருவேன்..' என்று அவரை ஊடகத்தில் கதற விட்ட கதை ஒரு சமீபத்திய உதாரணம்.


இவ்வளவுக்குப் பிறகும், இணையத்தின் மூலம் தொந்திரவுகள் ஏற்படின் கீழ்கண்ட சுட்டியில் இருக்கும் பட்டியலில் உங்களுக்கு அருகே வசிக்கும் நண்பருக்கு பேசா அழைப்புக் கொடுத்து (missed call) விவரத்தைச் சொன்னால் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.


உங்களின் இணைய அனுபவம் என்றென்றும் இனிக்கும் அனுபவமாக இருக்க வாழ்த்துக் கூறி இப்பதிவு நிறைவடைகிறது.

25 comments:

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

மிகவும் உபயோகமான தகவல்கள்

வாழ்த்துக்கள்

சுடுதண்ணி said...

நன்றி உலவு :)

Sangkavi said...

நல்ல தகவல்...

அகல்விளக்கு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு தல...

நன்றி..
:)

அண்ணாமலையான் said...

நன்றி

பிரபு . எம் said...

அவசியமான பதிவு..
எளிய நடையில் சுவாரஸ்யமான பகிர்வு..
சுட்டிக்கு ரொம்ப நன்றி...
இணையவாசிகள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியமான பதிவு..

சுடுதண்ணி said...

நன்றி சங்கவி :)

நன்றி நண்பா @ அகல்விளக்கு

தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி அண்ணாமலையான்.

ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி பிரபு. தொடர்ந்து வாங்க :)

எப்பூடி..... said...

//இருதரப்பிலும் ஒரே மாதிரியான மனமுதிர்ச்சியையும், கருத்து விவாதம் செய்யும் பாங்கினையும் எதிர்பார்க்க முடியாதென்பதும் ஒரு காரணம்.//

100 % உண்மை

காலத்துக்கு தேவையான பதிவு

ஜோதிஜி said...

மொத்தத்தில் உங்களுக்கென்று ஒரு துறை,எழுத்து நடை, எவருமே பார்க்காத படங்கள் கூடவே ராத்திரி தூக்கத்தை கெடுக்கும் படங்கள் என்று ஒரு புதிய பாதை பார்த்திபன் போல தேர்ந்தெடுத்த நீங்கள் இன்று உருவாக்கிய தலைப்புக்கு காப்புரிமையை பெற்று விடுங்கள். சீக்கிரம் எவராது சுட்டு விரைவிலேயே தினத்தந்தியில் எட்டுகாலத்தில் புதிய திரைப்பட விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

உங்களுக்கு மற்றொரு தகவல். நீங்கள் கொடுத்த இணையதளத்தில் உள்ள சென்னை சைபர் க்ரைம் மின் அஞ்சல் முகவரி சில திரும்பி வருகிறது. அல்லது அப்படி ஒன்று இல்லை என்று எனக்கு திரும்பி வந்த அனுபவம் ஏற்கனவே உண்டு.

காரணம் அவர்களின் பணி (?) கூட இருப்பவர்களுடன் சேர்ந்து இப்போது தமிழ்படம் ஜக்கு காணாமல் போன பாய் , வரப்போகின்ற யாவரும் கேளீர் கருத்தாழம் மிக்க படங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கவனமாக இருக்கலாம்.

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல் தலைவா, உங்கள் கிண்டல் கலந்த எழுத்து நடை :))

சுடுதண்ணி said...

மிக்க நன்றி நண்பா @ எப்பூடி :)

ஊக்கத்துக்கு மிக்க நன்றி ஜோதிஜி. அதிகாரப்பூர்வ தளத்தின் சுட்டி வழங்கியிருக்கிறேன் :). நீங்கள் சொல்வது போல அவர்களுக்கு வேலைப்பளு இப்போது கொஞ்சம் அதிகம் தான் :D

மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :). தொடர்ந்து வாங்க.

வடுவூர் குமார் said...

புதியவர்களுக்கு தேவையான அறிவுரை.

ராஜன் said...

//த்ரிஷா, குஷ்பு, நயன் தாரா போன்ற அபலைகள் பலர் இருப்பதால்//

அவ்வ்வ்வவ் .... உங்களுக்கும் நல்ல பறந்து விரிஞ்ச மனசு

சுடுதண்ணி said...

மிக்க நன்றி வடுவூர் குமார் :)

தெரிஞ்சு போச்சா :o @ ராஜன் :)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மிகவும் உபயோகமான தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள். நன்றி.

சுடுதண்ணி said...

மிக்க மகிழ்ச்சி மருத்துவரே :).

அறிவிலி said...

அட.. போங்க... உங்கள பாராட்டி பாராட்டி போரடிக்குது. உங்க பழைய பதிவுகள்ல இருக்கற என் பின்னூட்டத்தையே இதுக்கும் ரிப்பீட்டு போட்டுக்கங்க....

யவனராணி said...

கருத்தையும் நகைச்சுவையினையும் சேர்த்து வழங்கி இருக்கீங்க சுடுதண்ணி சார்... வாழ்த்துக்கள்.

♠புதுவை சிவா♠ said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

சட்டம் போட்டு தடுகிற கூட்டம்
தடுத்து கொண்டே இருக்குது - அதை
திட்டம் போட்டு IP மாத்தி - தாக்கர கூட்டம்
தாக்கி கொண்டே இருக்குது.

:-)))))

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

சுடுதண்ணி said...

தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அறிவிலி :)

பாராட்டுக்கு மகிழ்ச்சியும், நன்றிகளும் @ யவனராணி :)

பாட்டு அருமை :) சிவா தம்பி...

சரி ரைட்டு @ bogy.in

பதுறுதீன் தஸ்லீம். said...

சிறப்பான தகவல்கள். உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால் ... சில நல்ல தகவல்களை எனது ப்ளொக்கில் சேர்க்கட்டுமா?

தாசிஸ் அரூண் said...

// உங்கள் நிஜவாழ்வின் அடையாளத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதென்பது வேலியில் போவதை வேட்டிக்குள் விடும் அனுபவத்தைத் தர வல்லது.//


romba correct anna....!!!!


மிகவும் உபயோகமான தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள்

சுடுதண்ணி said...

நன்றி தஸ்லீம். ஆட்சேபணையில்லை :).


நன்றி அரூண்.

"தாரிஸன் " said...

PENGALUKU MIGAVUM PAYANULLA PATHIVU....

ARUMAI.. NANDRI..