Tuesday, March 2, 2010

இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 2



கணினியில் இணையதளத்தைப் பார்வையிடும் முன் நாம் உள்ளிடும் இணையதள முகவரி முதலில் வலையிணைப்பு முகவர் எண்ணாக மாற்றப்பட்டு, அதன் பின் அந்த முகவர் எண்ணுக்குரிய வழங்கியிலிருந்து தேவையான பக்கங்களைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதையும், அவ்வாறு தள முகவரிகள், முகவர் எண்ணாக மாற்றம் பெறுவதை ping கட்டளை மூலம் காணப் பெற்றதையும், கடந்த இரண்டு நாட்களாக ஆழமான ஆன்மீகத்தில் மூழ்கித் திளைத்து மறந்திருக்க வாய்ப்பிருப்பதால் அவற்றை நினைவுறுத்தித் தொடரப்படுகிறது :).

முதலில் தள முகவரிகள் எவ்வாறு முகவர் எண்ணாக மாற்றம் பெறுகிறது?, யார் மாற்றுகிறார்கள்?. இந்த வேலையைச் செய்வது இணைய முகவரி வழங்கிகள் (DNS servers). ஒரு தளத்தின் முகவரியை உலாவியில் உள்ளிட்டதும், உலாவி செய்யும் முதல் வேலை இணைய முகவரி வழங்கிகளைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் தளத்தின் முகவர் எண்ணைப் பெற்று, அதனை நோக்கிப் பயணிப்பது தான். இந்த இணைய முகவரி வழங்கிகளில் இந்த நிமிடத்தில் செய்ல்பட்டுக் கொண்டிருக்கும் அத்தனை தளங்களின் விபரங்களும் இருக்காது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் என்ன நடக்கும்?. வகுப்பறையில் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது பேனா மை தீர்ந்து விட்டாலோ அல்லது பேனாவே இல்லாமல் இருந்தாலோ முன்னால் அமர்ந்திருப்பவரிடம் கேட்டுப் பார்ப்போம், அவரிடம் இல்லையென்றால் அவருக்கு முன்னாடி இருப்பவரிடம், அங்கும் இல்லையென்றால் அதுக்கும் முன்னாடி.. இப்படியே சலசலப்பைக் கிளப்பி தொல்லை தாங்க முடியாமல் கடைசியில் பேராசிரியரே 'என்னப்பா வேணும், பேனாவா.. இந்தா' என்று கொடுத்துதவும் சம்பவங்களைக் கடந்திருப்பீர்கள் அல்லது பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அப்படியொரு சங்கிலித்தொடரமைப்பில் தான் இந்த வழங்கிகள் செயல்படுகின்றன.

கேட்கப்படும் தளத்தின் முகவர் எண் விவரங்கள் வழங்கியில் இல்லாத பட்சத்தில் அது மைய வழங்கியிடம் தொடர்பு கொள்ளும், அதிலும் இல்லையென்றால் கேட்கப்படும் இணைய முகவரியின் அதிகாரப்பூர்வ வழங்கியிடம் கேட்கப்படும். அங்கும் இல்லையென்றால் அப்படியொரு தளமே இல்லையென்று உலாவி கணினித் திரையில் புன்னகைக்கும். இவற்றில் மைய வழங்கிகள் பிரதேச அளவில் பல நிலைகளில் உள்ளன. உலக அளவில் ARIN (Canada, United States, some islands of the Pacific) · RIPE NCC (Europe, parts of Asia) · APNIC (Asia, Pacific region) · LACNIC (Latin America and the Caribbean) · AfriNIC (Africa) ஆகிய அமைப்புகள் முக்கிய மைய வழங்கிகளாக செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கும் மேலாக இணைய முகவரியின் தலைப்பகுதிக்கேற்ப அதிகாரப்பூர்வ வழங்கிகளும் (authoritative servers) செயல்படுகின்றன. அவைதான் கேட்கப்படும் இணையதளம் இருக்கிறதா, இல்லையா என்ற உறுதியான மற்றும் இறுதியானத் தகவலைத் தருகின்றன.


தள முகவரிகளின் தலைப்பகுதியைப் (top level domains) பொருத்து முகவரிகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. உ.தா. .com, .org, .net, .biz, .edu etc.... பின்னாளில் இணைய தளங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிய பின் மேலாண்மை வசிதிக்காகப் பல புதிய வகைத் தலைப்பகுதிகள் ICANN அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது, உ.தா .in,.univ,.uk,.au,.us etc. இது போன்ற ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி உள்ளது. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பினை ICANN (internet corporation for assigned names and numbers) சர்வேதச அமைப்பின் கண்காணிப்பின் கீழ் பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உ.தா. .com, .org, .net ஆகிய வகைத் தலைப்பகுதியைக் கொண்ட இணையதளங்களுக்கான அதிகாரப்பூர்வ வழங்கியை Network Solutions Inc. என்ற நிறுவனம் நிர்வகிக்கிறது. ஒரு இணையதள முகவரி புதிதாகப் பதிவு செய்யப்படுகிறது என்றால் அதன் தலைப்பகுதி (.com/.net..etc) வகைக்குரிய அதிகாரப்பூர்வ வழங்கியில் அந்த தள முகவரி அந்த தளத்தினுடைய வழங்கியின் முகவர் எண் தகவலோடு சேர்க்கப்பட்டு விடும், எனவே எந்த ஒரு தலைப்பகுதி வகைக்கும் அந்த நொடிவரை செயல்பாட்டில் இருக்கும் அனைத்து தளங்களின் முகவரிகளும் இந்த அதிகாரப் பூர்வ வழங்கிகளில் இருக்கும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு அதிகாரப்பூர்வ வழங்கி இருப்பதால் தான் ஒரே முகவரியில் இரு தளங்கள் இருக்க சாத்தியப்படுவதில்லை. அதே நேரம் www.example.com மற்றும் www.example.org ஆகிய இரண்டும் வெவ்வேறு வகை என்பதால் இரண்டும் தனித்தனியாக செயல்படுவது சாத்தியமே. அது போன்ற குழப்பங்களை சமாளிக்கவே பெரிய நிறுவனங்கள் தங்கள் தளங்களின் முகவரியை அனைத்து தலைப்பகுதிகளுக்கும் பதிவு செய்து விடுகின்றன. (உ.தா. microsoft.com, microsoft.net, microsoft.org..)


தன்னிடம் தளமுகவரி குறித்த விவரங்கள் இல்லாத நிலையில் இணைய முகவரி வழங்கிகள் எப்படி மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து கேட்டுப்பெறுகிறது என்பது குறித்துப் பார்த்தோம். ஒரு முறை இப்படி பயணித்துப் பெறும் தகவல்களை தற்காலிகமாக இணைய முகவரி வழங்கி தனது நினைவகத்தில் சேமித்து கொள்ளும் (caching). அதுபோக எல்லா இணைய முகவரி வழங்கிகளும் தங்கள் மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து மொத்தமாக அனைத்துத் தகவல்களையும் குறிப்பிட்டக் கால இடைவெளியில் தனது நினைவகத்தில் புதுப்பித்துச் சேமித்துக் கொள்ளும். பயனாளர்களுக்குத் தேவையான தகவல்களை ஒவ்வொரு முறையும் மேல்நிலை வழங்கிகளுக்குச் சென்று தகவல் பெறாமல் தானே வழங்குவதன் மூலம் குறுகிய நேரத்தில் தேவையைப் பூர்த்தி செய்யவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது மேல்நிலை வழங்கிகளில் இருந்து தகவல்களைத் திரட்டிப் புதுப்பித்துக் கொள்வதால் முடிந்தவரை இணையத்தின் தற்கால நிலையினைப் பிரதிபலிக்கவுமே இந்த ஏற்பாடு. அந்த கால இடைவெளியில் உருவாக்கப்படும் புதிய இணையத் தளங்களையோ அல்லது ஒரு வழங்கியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படும் தளங்களையோ பார்வையிட முற்படும் போது சிரமங்கள் நேருவது உண்டு.


இதில் முதல் நிலை இணைய முகவரி வழங்கிகள் மிகவும் முக்கியம். அவற்றின் செயல்பாட்டுத் திறன், தகவல்களை மேல்நிலை வழங்கிகளிடம் இருந்து புதுப்பித்து கொள்ளும் கால இடைவெளி ( பொதுவாக 24 முதல் 72 மணி நேரம் வரை), எந்த அளவிற்கு மேற்கொண்டு பயணிக்காமல் தளத்திற்குரிய முகவர் எண்ணைத் தரமுடிகிறது ஆகியவை பயனாளரின் இணைய அனுபவம் விரைவானதாகவும், சொகுசாகவும் அமைவதற்கு மிக முக்கியம். அவற்றை யார் நிர்வகிக்கிறார்கள், அவற்றின் பாதுகாப்புக் குறைபாடுகளாலும் ஏற்படக் கூடிய விபரீதங்கள், அவை குறித்த தகவல்களை நாம் அறிந்து கொள்வது எப்படி, ஒரு தளத்தினைப் பார்வைக்குக் கிடைக்கும் முன் பயனாளரின் வேண்டுகோள் தகவல் எங்கெங்கு பயணிக்கின்றன, புதிய இணைய முகவரிகளைப் பதிவு செய்யும் நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.... அதுவரை உலாவியைத் திறவுங்கள்.. இணையம் வரட்டும் :).


12 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ஆன்மிக சுற்றுலா சென்ற எங்களை, மீண்டும் இணைய சுற்றுலா அழைத்து சென்ற
சுடுதண்ணி அவர்களுக்கு நன்றி :))

ஜோதிஜி said...

ஆகா நான் தான் முதல் என்று உள்ளே வந்தால் சுடச்சுட பரோட்டா.

முகவரிக்கு பின்னால் முன்ஜென்ம பந்தம் உள்ளதோ?

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உபயோகமான பதிவு

அகல்விளக்கு said...

//சைவகொத்துப்பரோட்டா said...

ஆன்மிக சுற்றுலா சென்ற எங்களை, மீண்டும் இணைய சுற்றுலா அழைத்து சென்ற
சுடுதண்ணி அவர்களுக்கு நன்றி :))//

கரெக்டா சொன்னீங்க.....

:-)

சுடுதண்ணி said...

தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :).

இருக்கலாம்.. மிக்க நன்றி ஜோதிஜி. மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி :).

நன்றி @ அண்ணாமலையான் :).

நன்றி உலவு :)

தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி நண்பா @ அகல்விளக்கு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சைவகொத்துப்பரோட்டா said...
ஆன்மிக சுற்றுலா சென்ற எங்களை, மீண்டும் இணைய சுற்றுலா அழைத்து சென்ற
சுடுதண்ணி அவர்களுக்கு நன்றி :))//

:) ஆமாமா நன்றி..

சசிகுமார் said...

பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுடுதண்ணி said...

வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ முத்துலெட்சுமி, சசிகுமார் :).

vasu said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. தொழில்நுட்பம் பற்றிய தமிழ் ப்ளாக்களில் சுடுதண்ணி தான் front runner

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி ரீடர் :). தொடர்ந்து வாங்க.

பொற்கோ said...

நல்ல பதிவு!தாங்கள் இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக எழுதலாமே!
பலருக்கும் பயனுள்ள முயற்சியாக இருக்கும்.