Saturday, March 6, 2010

இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 3 (முற்றும்)

இணையதள முகவரிகளை அவற்றிற்குரிய வலையமைப்பு முகவர் எண்களாக மாற்றித்தரும் முகவரி வழங்கிகள் மற்றும் அவை எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஓரளவு புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இப்பகுதியில் ஒவ்வொரு பயனாளரும் தங்களின் முகவரி வழங்கிகள் குறித்தான விவரங்களை அறிந்து கொள்வது பற்றியும், ஒவ்வொரு முறையும் இணைய தளங்களைப் பார்வையிடும் போது எங்கெங்கு பயனாளரின் வேண்டுகோள் பயணிக்கின்றன என்பது குறித்தும், இன்னபிற தகவல்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.


உங்கள் கணினியில் start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ipconfig/all என்ற கட்டளையினை வழங்கினால் உங்கள் வலையமைப்புத் தொடர்பு குறித்த ஜாதகத்தினைப் பெற்று கிரக நிலை குறித்து அறிந்து கொண்டு மகிழலாம். (பார்க்க படம்). அவற்றுள் DNS servers என்ற தலைப்பில் உங்களின் முதல் நிலை இணைய முகவரி வழங்கியின் வலையிணைப்பு முகவர் எண்ணைக் காணலாம். அனேக முகவரி வழங்கிகள் உங்களுக்கான இணையத்தொடர்பு வழங்கும் நிறுவனங்களாலேயே நிர்வக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினைப் பொருத்து வழங்கிகளின் எண்ணிக்கை இருக்கும். துரிதமான சேவையின் பொருட்டு சுழல்முறையில் வேண்டுகோள்கள் வழங்கிகளுக்கிடையே பிரித்தளிக்கப்படும்.



அதேபோல் ஒரு இணையதள முகவரியினை உலாவியில் உள்ளிடும் போது உங்கள் வேண்டுகோள் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள start->cmd->run என்ற இடத்திற்கு சென்று tracert www.siteaddress.com என்ற கட்டளையினை வழங்கினால் காணப்பெறலாம். (பார்க்க படம்).

வதவதவென தளங்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் சொந்தமாகவே முகவரி வழங்கிகளை வைத்து நிர்வகிப்பதுண்டு, உ.தா. Microsoft. வழங்கிகளின் கட்டமைப்புகள் குறித்தான தெளிவான புரிதல் இருந்தாலோ அல்லது தினமும் பொழுதுபோகாமல் வெகுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பிருந்தாலோ சொந்தமாக முகவரி வழங்கிகள் வைத்து விளையாடலாம் :). அதே போல தடையில்லா இணைய இணைப்பும், மின்சார வசதியும் கொண்ட கணினிகளை 24 மணி நேரமும் இயக்கும் வரங்களைப் பெற்ற அதிர்ஷடசாலிகள் தங்கள் கணினியிலேயே தங்கள் இணையதளத்தை சேமித்து இணையத்தில் வலம் வரச் செய்யலாம் (self -webhosting). இது போன்ற சூழல்களில் வழங்கிகளாக கட்டமைக்கப்படும் கணினிகளின் செயல்திறன் மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரே நேரத்தில் கூட்டம் கும்முவதால் சில நேரங்களில் உங்கள் இணையத்தளம் முக்கிமுனகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதில் www.cricinfo.com தளத்தின் இணைய வழங்கி சச்சினை விட அதிகமாக சோர்வடைந்து மயங்கியது சமீபத்திய உதாரணம். அது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழும் வாய்ப்பிருக்கும் தளங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய வழங்கிகளை நிர்வகித்து வருகையாளர்களைச் சுழல் முறையில் வழங்கிகளிடையே பிரித்தனுப்புவது வழக்கம். அது போல அவற்றுள் ஏதேனும் ஒரு வழங்கி செயலிழந்தால் கூட, இணையதளம் தொடர்ந்து செயல்பட வைக்கும் பொறுப்பினை மீதமிருப்பவை கவனித்து கொள்ளும்.



மேலும் ஒரு இணையதளத்திற்கான பாதுகாப்பில் அவற்றின் முகவரி வழங்கிகள் மிகமிக முக்கியமான பங்காற்றுகின்றன. பொதுவாக முகவரி வழங்கிகளின் வலையிணைப்பு முகவர் எண்ணைத் தெரிந்து கொள்வது மிகச் சுலபம் என்பதால் எந்நேரமும் விஷமிகள் உள்ளே புகுந்து குச்சுப்புடி விளையாட வாய்ப்புண்டு, எனவே பாதுகாப்பு என்பது உண்மையாகவே கடுமையானதாக இருக்க வேண்டும், தாக்குதல் நடந்த பின் 'இனியும் பொறுக்க மாட்டோம், கடுமையாக கண்டிக்கிறோம்' என்று வீரவசனம் பேசி சமாளிக்க முடியாது. காரணம் முகவரி வழங்கியினுள் விஷமிகள் ஊடுருவினால், எந்தவொரு தளத்திற்குரிய முகவர் எண்ணிற்குப் பதிலாக அவர்களுக்குப் பிடித்ததை மாற்றி வைத்து விட்டு ஜோதியில் கலந்து விடுவார்கள். உதாரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் தளத்திற்கு இம்முறையினைப் பின்பற்றி முகமூடி மாட்டப்பட்டது, முகமூடி உபயம்: இணையப்படைக் குடும்பத்தார், ஈரான் :).


நம் கணினிகள் உறங்கினாலும் இணையம் உறங்குவதில்லை. ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் யாருக்காகவோ அது ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த ஒவ்வொரு கணமும் எத்தனையோ முகவரி வழங்கிகள், இணைய வழங்கிகள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொத்த வலையமைப்பின் இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்புகள், நிறுவனங்கள் ஆகிய அனைவரும் கூட்டாகச் சேர்ந்து நிறுத்தாமல் தொடர்ந்து ஆடும் ஆட்டமே, நம்மை இணையப் பக்கங்களை விரல்சொடுக்கும் நேரத்தில் பார்த்துப் படிக்க வகை செய்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இத்தொடர். படித்தவர்கள் அனைவருக்கும் உபயோகமானதாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் இத்தொடர் நிறைவு பெறுகிறது, ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி கூறி சுடுதண்ணி விடைபெற்றுக் கொள்கிறது :).


10 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

அடுத்த பதிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.....

அகல்விளக்கு said...

வாவ்....

எம்புட்டு விஷயம் இருக்கு தல....

பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி....

சைவகொத்துப்பரோட்டா said...

எளிமை, அருமை, நன்றி நண்பரே.

ilayangudian said...

அருமையான தகவல்கள். நன்றி நண்பரே!

ஜோதிஜி said...

வலையமைப்புத் தொடர்பு குறித்த ஜாதகத்தினைப் பெற்று கிரக நிலை குறித்து அறிந்து கொண்டு மகிழலாம்

ஆமாம் உண்மையிலேயே வேலை செய்யாத போது திசாபலன் பலர் வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது

கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மொத்த வலையமைப்பின் இணைய தள முகவரிகளை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்புகள், நிறுவனங்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து கூட்டாகச் சேர்ந்து நிறுத்தாமல் தொடர்ந்து ஆடும் ஆட்டமே, நம்மை இணையப் பக்கங்களை விரல்சொடுக்கும் நேரத்தில் பார்த்துப் படிக்க வகை செய்கிறது

முகம் தெரியாத பலரின் உழைப்பு உங்களையும் என்னையும் இணைக்கின்றது.

அற்புதம் தமிழ். மொழி மட்டுமல்ல கோர்வையும்?

கிருஷ்ணா (Krishna) said...

கலக்குறீங்க தலைவா, இன்னும் நிறைய எழுதுங்க.

Rajan said...

இது சுடு தண்ணி இல்ல ! மினரல் வாட்டர்

சுடுதண்ணி said...

நன்றி உலவு :)

நன்றி அகல்விளக்கு :)

மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)

நன்றி இளையாங்குடி :)

தொடர்ந்த ஊக்கத்துக்கும், அன்புக்கும் நன்றி ஜோதிஜி :)

நன்றி கிருஷ்ணா :). தொடர்ந்து வாங்க..

ஊக்கத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி ராஜன், மிக்க ம்கிழ்ச்சி :)

puduvaisiva said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

"சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதில் www.cricinfo.com தளத்தின் இணைய வழங்கி சச்சினை விட அதிகமாக சோர்வடைந்து மயங்கியது சமீபத்திய உதாரணம்"

இது போல் சில பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் காண முற்படும் போது அந்த தளத்திற்குள் செல்வது குதிரை கொம்பாக இருக்கும்.

நன்றி !

முருகன் said...

REALLY USEFUL ARTICLE. VERY USEFUL BLOG THIS IS.

REGARDS,
MURUGAN