முதலில் இது வாத்தியார்த்தனமான பதிவல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது பரவலாகியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில ஆலோசனைகள் மட்டுமே. இணையத்தில் சமையல், கல்(ல)வி, தொழில்நுட்பம், இலக்கியம் எனச் சகலத்தையும் பற்றியும் தெரிந்து கொண்டு இன்புறுவது எவ்வள்வு இனிமையோ, அவ்வளவுக்கு அதனை ஒரு ஊடக்கருவியாக மட்டுமே பயன்படுத்துதலின் மூலம் நிஜ வாழ்க்கையில் எந்தவித துன்பங்களும், அசெளகரியங்களும் நேராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை என்ற கருத்துப் பொங்கலின் வெளிப்பாடே இப்பதிவு.
1. அலுவலகம்,இல்லம்,ஓசிக்கணினி,பக்கத்து வீடு, பேருந்து-ரயில்-விமான நிலையங்கள், இணைய மையங்கள் (netcafe) என்று எங்கு உங்கள் இணையத் தாகத்தினை சாந்தி செய்து கொண்டாலும், முதலில் நீங்கள் பயன்படுத்தப் போகும் கணினி பாதுகாப்பானதா என்று பரிசோதித்துப் பின் செயலில் இறங்கவும். keyloggers, spyware போன்ற அன்பர்கள் உங்களுக்காகக் காத்திருக்கலாம், கவனம். மடிக்கணினி வைத்துக் கொண்டு பொது இடங்களில் இணையத்தைப் பாவிப்பவர்கள் முதுக்குப் பின் யாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ளா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் :D. பெரும்பாலும் பொது இடங்களில் மிக அவசிய, அவசரத் தேவையன்றி, இணையத்தைத் தவிர்ப்பது சிறப்பு. அவ்வாறு தவிர்க்கவியலாத சூழ்நிலையில், உங்கள் வீட்டுக்குச் சென்றடைந்ததும், பயன்படுத்திய கடவுச்சொற்களை மாற்றுவது நன்று.
keyloggers என்பது விசைப்பலகையில் தட்டச்சப்படும் அத்தனையையும் பதிவு செய்யும் அதிஅற்புதப் பயனுக்காகவே படைக்கப் பட்ட ஒரு மென்பொருளென்பதும், spyware உங்கள் இணைய நடவடிக்கைகளை இம்மி பிசகாமல் தங்கள் எசமானர்களுக்கு அனுப்பி வைக்கும் கடமையேக் கண்ணாகக் கொண்ட மென்பொருளென்பதும் உபரித்தகவல்.
2. எந்த இடத்தில் சுட்டிகளைக் கண்டாலும், அடுத்த நொடியே தன்னிலை இழந்து, படக்கென்று க்ளிக்கி விடும் வியாதி இருக்கும் அன்பர்கள், பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டுப் பார்வையிடும் பக்கங்களை எக்காரணம் கொண்டும் வலைப்பக்கங்களிலோ அல்லது மின்னஞ்சல்களிலோ இருக்கும் சுட்டிகள் மூலம் திறக்காமல் இருப்பது பாதுகாப்புக்கு மிக முக்கியம். அப்படி முடியாத அளவுக்கு வியாதி அதிகமாயிருந்தால் கைகளைக் கட்டிக் கொண்டு வலைப்பக்கங்களையோ, மின்னஞ்சல்களைப் படிக்கப் பழகலாம் (பார்க்க படம்:D).
3. டிஜிட்டல் புகைப்படக்கருவிகளும், புகைப்படக்கருவி வசதி கொண்ட செல்பேசிகளும் பெருத்துப் போன இக்காலகட்டத்தில் புகைப்படங்களை கணினியில் சேமிப்பதோ, இணையத்தில் பகிர்வதோ எல்லாருக்குமே மிகமிக எளிதாகிவிட்டது. எளிதாகிவிட்ட ஒரே காரணத்தினால் புகைப்படங்களைக் கண்டமேனிக்குப் பகிர்ந்து கொள்ளும் முன் புகைப்படக் கோப்புகளின் தலைப்பகுதியில் இருக்கும் உளவுத்தகவல்களை நீக்குவது பற்றி அறிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்கவும். மிகமிக முக்கியமானத் தவிர்க்க முடியாதத் தேவைகளின்றி உங்கள் முகத்தினையோ அல்லது குடும்பத்தினரின் முகத்தினையோ இணையத்தில் காட்டுவது விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பிருப்பதை நினைவில் கொள்ளவும். குறிப்பாக சுதந்திரமாக மாற்றுக் கருத்துக்களைக் குமுறும் பலவகை இசங்களில் ஏதெனும் ஒன்றிற்கான, இணைய உலகின் ஒரே ஒப்பற்றப் பிரதிநிதிகளுக்கு இது மிக முக்கியம், இல்லையேல் சாலையில் தனியாக நடந்து செல்லும் போது கலைஞர் காப்பீட்டு அட்டையை மறக்காமல் சட்டைப்பையில் வைத்துச் செல்லவும். (படிக்க: இணையத்தில் புகைப்படங்கள் )
4. உங்கள் கணினியை, புகைப்படக் கருவிகளை, கோப்புகளை சேமிக்கும் உபகரணங்களை (pen drives) மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டோ அல்லது பிழைநீக்கும் நபர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டோ கொடுக்க நேர்ந்தால் காஞ்சிபுரம் தேவநாதனை ஒருமுறை கண்மூடித் தியானித்துக் கொள்ளவும். அழிக்கப்பட்ட, அழிக்கப்படாத அத்தனைக் கோப்புகளும் சுருட்டப்படும், கவனம். கடந்த காலத்தில் அப்படி பகிரக்கூடாதக் கோப்புகளுடன் உபகரணங்களைப் பகிர்ந்திருந்தால், தினமும் இரவு தூங்கச் செல்லும் முன், சாப்பாட்டுக்குப் பின், ஒரு முறை யூ-டியூப் தளத்தினையோ அல்லது கூகுள் படங்களையோ அலசி, உறுதிபடுத்திக் கொண்டு தூங்கவும் (படிக்க: மெமரி டிஸ்க் அபாயங்கள் ).
5. பிறந்தநாள் தேதி, தாய் தந்தையர் பெயர்கள். சொந்த ஊர், முகவரி போன்ற தகவல்கள் ஒவ்வொன்றும் வலைத்தளங்களில் உங்கள் பயனாளர் கணக்கை பாதுகாக்கும் கதவுகளின் சாவிகள். சாவிகள் பத்திரம். பலர் படிக்கும் வண்ணம் பதிவுகளிலோ, வலைத்தளங்களிலோ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோ, அல்லது இன்று எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரவேற்கப்படுகின்றன..இன்றே கடைசியென்று கூவுவதையோ தவிர்ப்பது நல்லது.
6. வலைப்பதிவுகளில், உங்கள் சொந்த வாழ்க்கையில் நடப்பவைகள் குறித்துப் பகிரும் போது புனைவுகள் சேர்த்துப் பதியுங்கள்.
"பஸ் ஸ்டாண்ட்ல போயி இறங்கினதும், காந்தி நகர் எங்கேருக்குன்னு கேட்டீங்கன்னா, யார் வேணா சொல்வாங்க. நடக்கிற தூரந்தான். காந்தி நகர் மூணாவது தெருவுல ரைட் சைடு நாலாவது வீடு. மஞ்சக்கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும். பெரிய கதவுல ABC ILLAM அப்படின்னு போட்ருக்கும்",
"எங்க வீட்ல எல்லாரும் ஊட்டி போறோம், வந்ததும் போட்டோக்களோட பதிவு போடுறேன். பாவம் எங்க கிழவியத்தான் குளிர் ஒத்துக்காதுன்னு தனியா வீட்டுல விட்டுட்டுப் போறோம்",
"மேலே போட்டோல இருக்குறது தான்எங்க பாப்பா, அவ ரொம்ப சுட்டி, படிப்பில் கெட்டி, abc பள்ளிக்கூடத்தில தான் படிக்கிறா. தனியாவே/ஆட்டோல/பஸ்ல போயிட்டு வந்துருவா. அவங்க க்ளாஸ் டீச்சர் மைதிலி. ரொம்ப நல்லவங்க. அவங்க உதட்டுக்கு மேல மச்சம் சிம்ரன் மாதிரி மச்சம் இருக்கும்"
போன்ற பகிர்வுகள், பகிர்வுகளல்ல, உட்காரும் இடத்தில் நமக்கு நாமே விதைக்கு கண்ணி வெடிகள். உங்களுக்கு விதைத்துக் கொண்டாலும் அடுத்தவர்களுக்கு விதைக்காமல் பார்த்துக் கொள்ளவும் :D. அவசியமென்றால் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாமே தவிர பொதுத்தளங்களில் அல்ல.
7. இணையத்தின் மூலம் அறிமுகமாகும் நண்பர்களிடம் போதிய கால அவகாசமின்றி உடனேயே உங்கள் வீட்டு நாய்க்குட்டி குட்டிப் போட்ட வரைக்கும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உளவியல் ரீதியாக இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும். முக்கியமாக இணைய நண்பர்களை முதல்முறை நேரில் சந்திக்கச் செல்லும் போது கட்டாயம் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை உடன் அழைத்துச் செல்வதும், முடிந்தால் சரக்கடிக்காமல் சந்திப்பை முடித்துத் திரும்புதல் மிகச்சிறப்பு.
8. அனுதினமும் படைப்புகளைப் படையலாக்கிக் கொண்டிருக்கும் பதிவுலகில், பாராட்டு என்பது எல்லாருக்குமே க்ளென்பெடிச் (18yrs) போன்றது, அதாவது உற்சாகமளிக்கும், பட்டாம்பூச்சி பறக்கும் விஷயம் தான். அதனைப் பின்னூட்டங்கள் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ பெற்றுக் கொள்வது நன்று. வலைப்பதிவராக இருப்பின் உங்கள் பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்காமல், வலைப்பதிவுக்கென்று தனியாக ஒரு மின்னஞ்சலைப் பாவித்து வருவது பலவகையிலும் பிரச்சினைகளைத் தவிர்க்கும். அதிகபட்சம் உங்கள் வலைப்பதிவிற்கான மின்னஞ்சலை பொதுவில் பகிர்ந்து கொள்ளுங்கள் (மின்னஞ்சல் சூறையாடப்பட்டால் சுடுதண்ணி பொறுப்பல்ல). உங்கள் தொலைபேசி/செல்பேசி எண்களைப் வலைப்பக்கத்தில் "வாங்க பேசலாம்" என்று பெரிதாகப் போட்டுவிட்டுப் புன்னகைக்கும் உங்களைப்பார்த்து, அடுத்த வாரமே "எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். நான் ரொம்ப பிசி. முக்கியமான நேரத்தில, பதிவு பத்திப் போன் பண்ணித் தொல்லை பண்றானுங்க, ராஸ்கல்ஸ்" என்று பதிவு போடும்போது படிப்பவர்கள் புன்னகைப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
இணையம் என்பது தொழில்நுட்பம் நமக்களித்த மூன்றாவது கண், அது ஆனந்தத்தால் பனிக்க வேண்டுமே தவிர வேதனையால் அல்ல என்ற நோக்கத்திலேயே இப்பகிர்வு, மற்றபடி இணையத்தில் எதை எழுதுவது, பகிர்வது என்பது அவரவர் சுதந்திரம். ஒருவேளை சுதந்திரம் சட்டத்தை மீறினாலோ. அல்லது சுதந்திரத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டாலோ சட்டத்தைத் தயங்காமல் அணுகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொல்லி இப்பதிவு நிறைவடைகிறது.
- "இணையமும், சமூகப் பாதுகாப்பும்" சர்வதேச மாநாட்டில் சுடுதண்ணி பேசியதிலிருந்து... (ஒரு விளம்பரத்திற்காக மட்டும் :D)
பி.கு: படிக்கும் அன்பர்கள் தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
24 comments:
நிறைய விசயங்களில் நானே ஓட்டையாக இருக்கிறேன்...
சீக்கிரம் சிமெண்டு பூசி அடைச்சிடுறேன்...
நன்றி தல...
அற்புதம்!!!
நகைச்சுவை என்ற தேன் தடவி, சொல்ல
வந்த விசயத்தை அழகாய் சொல்லி விட்டீர்கள்.
எல்லா பால்லயும் சிக்ஸர் ;)
அருமையான தொகுப்பு தலைவரே... மிக்க நன்றி!
சிரித்துக்கொண்டு அழுகின்றேன்.
ஊரில் இருக்கிறீர்களா? காப்பீடு அட்டைவாங்க வரிசையில் இருப்பவர் போல? வியப்பு
உளவியல் ரீதியாக இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும்
புரிந்தவர்கள் பார்க்கும் உலகம் சென்ஷி சொன்னது போல சிக்ஸர்
. முக்கியமாக இணைய நண்பர்களை முதல்முறை நேரில் சந்திக்கச் செல்லும் போது கட்டாயம் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை உடன் அழைத்துச் செல்வதும், முடிந்தால் சரக்கடிக்காமல் சந்திப்பை முடித்துத் திரும்புதல் மிகச்சிறப்பு.
இது கூட ரொம்ப நாளா பலர் பொளந்துகட்டி இதையும் இடுகையாக படைத்தார்கள். வாங்கியவர் மட்டும் இடுகையாக எழுதவில்லை????
All clear. இனி எதை வேண்டுமானாலும் எழுதக்கூடிய தேர்வில் Pass...........
\\இணையத்தில் தங்கள் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் பிம்பம் வேறு, நிஜ வாழ்வில் இருக்கும் உண்மை வேறு என்பதைப் புரிந்து கொண்டு இணைய நட்பில் உலகம் வெல்ல முயற்சிக்கவும்.\\
உண்மை தல
என்னை போன்ற பேர்வழிகளுக்காகவே இந்த பதிவு பொருந்தும்..
பதிவிற்க்கு நன்றி தல
விரைவில் தங்கள் சகல ஓட்டைகளும் அடைபட வாழ்த்துக்கள் நண்பா :)) @ அகல்விளக்கு
ஊக்கத்துக்கு மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)
மிக்க மகிழ்ச்சி சென்ஷி :)
உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி ஜோதிஜி :). (கண்கள் பனிச்சிருச்சு போல :D)
உங்களுக்குப் பயனுள்ளதாயிருந்ததில் மிக்க மகிழ்ச்சி யோகி :). ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)
நன்றி :)
நன்றியோ நன்றி!
பின்னுறியே தலைவா... அடிச்சு ஆடுங்க.. தொடர்ச்சியா சிக்ஸர்.. போடுறீங்கன்னு சென்ஷி சொன்னது தப்பே இல்லை.
ஏதாவது தமிழ் பத்திரிக்கைகள் சுட்டுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கு.
ப்ளாக்கர் இடுகைகளுக்கு காப்பிரைட் சட்டம் எல்லாம் கிடையாதா? :(
நல்லா எழுதி இருக்கீங்க .. பாலபாரதி சொல்வது போல இதை யாரும் சுட்டுப் போடறாங்களான்னு கவனிங்க.. :)
நல்ல பயனுள்ள தகவல்கள்
சூப்பர் பதிவு! வாழ்த்துக்கள்!
பதிவுலகில் புதியவர்களுக்கு இப்பதிவு மிக பயனுள்ளதாய் அமையும்.
நன்றிகள்.
உங்களுக்கும் நன்றியோ நன்றி பழமைபேசி. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி :).
ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி பாலபாரதி. காப்பிரைட் வேணும்னா பண்ணிக்கலாம் :).
மிக்க நன்றி முத்துலெட்சுமி :). சுட்டார் சிறியோர், சுடாதார் பெரியோர், பட்டாங்கில் உள்ளபடி :D.
வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி வேலு, மோகன், சீனு. தொடர்ந்து வாங்க.
சென்ஷி சாரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
:)
இதனுடன் anti logger பற்றியும் எழுதி இருக்கலாமே.
திருடன் இல்லா இணையம் வேண்டும்.
நான் இணையம் புகுந்த போது லொட லொடனு பேசி பின்னால் அவதிப் பட்டிருக்கேன்.
அப்போல்லாம் உங்களப்போல அறிவாளிங்க பதிவ படிக்காம போனதால...:-) இப்போ ஓகே...
விரிவா விளக்கி சொன்னதுக்கு நன்றி சுடுதண்ணி சார்...
மிக அருமையான பதிவு....
எளிய நடையில் மிக ஆழமான கருத்துக்களைக் கூறியமைக்கு நன்றி சுடுத்தண்ணி....
இந்த் பதிவைப் படித்ததும் ஆனந்தத்தால் பனித்தது.
வேணாம்னு சொல்லிட்டு நீங்களே ஒரு ஃபேமிலி போட்டோ போட்ருக்கீங்களே???யாருங்க அவுங்கள்ளாம்?
வணக்கம் சுடுதண்ணி அண்ணே
"எங்க வீட்ல எல்லாரும் ஊட்டி போறோம், வந்ததும் போட்டோக்களோட பதிவு போடுறேன். பாவம் எங்க கிழவியத்தான் குளிர் ஒத்துக்காதுன்னு தனியா வீட்டுல விட்டுட்டுப் போறோம்"
- இது நம்ப பிட்டு
பாவம் அந்த கிழவிக்கு ராத்திரியல கண்ணு தெரியாது அதனால வீட்டு சாவி பீரோ சாவி செட்டை பழைய பிளாஸ்குல போட்டு அவங்க படுக்கையான்ட வச்சி இருக்கோம். திருடன் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது ...
பிறகு ஊட்டி இருக்கும் வலைபதிவர்களுக்கு இதான் நாங்க 3 நாள் தங்க போர
விலாசம்.
ஓட்டல் கோவிந்தா
அல்வா பிளாக்
அறை எண். 111
பி.கு காலையி பல இடங்களை சுற்றி பார்க்க இருப்பதால் மாலையில் வலைபதிவர்களை சந்திக்க விரும்புகிறேன்.
நன்றி!
சுனா.பானா
பிரபல வலைபதிவர் - இதுவரை இட்ஸ் - 1500000111
:-))))
ரொம்ப அவசியமான பதிவு.. நன்றி..
good sugestion!!!
thank u sir!
Pirichu menjiteenga
http://signincomputers.blogspot.com/
Fantastic post!
//ப்ளாக்கர் இடுகைகளுக்கு காப்பிரைட் சட்டம் எல்லாம் கிடையாதா? :( //
Yes there are. It is very easy. Read the 1st point in this link.
http://www.templetons.com/brad/copymyths.html
In brief,
The correct form for a notice is:
"Copyright [dates] by [author/owner]"
You can use C in a circle © instead of "Copyright" but "(C)" has never been given legal force. The phrase "All Rights Reserved" used to be required in some nations but is now not legally needed most places. In some countries it may help preserve some of the "moral rights."
Post a Comment