இணையத்தின் மூலம் உலக அரங்கில் அரசியல் மாற்றங்கள் வரப்போவதை சென்ற வருடமே லாட்வியாவில் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சுடுதண்ணியில் ஆருடம் கூறியிருந்தாலும் சமீபத்தில் வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வுகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்லும் செய்தி என்ன?. இணைய வழியில் அரசியல் அதிகார மையங்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? இந்தியா குறித்தான தனது பார்வை குறித்து பிணையில் வெளிவந்த பிறகு முதன்முறையாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூலியன் பேசியிருக்கும் அதே நேரத்தில், தி-ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் விவரங்கள் என்ன?. இக்கேள்விகளை அனைத்தும் உங்களைத் துளைத்தெடுத்தால் மட்டுமே மேற்கொண்டு படிக்கவும். (ஏன்னா.. பதிவு கொஞ்சம் நீளம் அதிகம் :D).
முதலில் ஜூலியன் பேசியது குறித்து. "இன்றைய உலகில் எளிதாகவும், மிக அதிகமாகவும் வேவுபார்க்க பயன்படுத்தப்படும் ஊடகம் இணையம். இணையத்தில் அதிகார மையங்களை எதிர்த்து புரட்சி கும்மியடிக்கும் தம்பிகள் போதிய தொழில்நுட்ப புரிதலின்றி வரம்பு மீறி செயல்பட வேண்டாம். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கண் சிமிட்டும் நேரத்தில் யாராலும் வேவு பார்க்கப் படலாம். செய்தி ஊடகங்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகத்தான் அரசியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற மாயை உருவாக்குகின்றன. அதை நம்பி மோசம் போக வேண்டாம். குறிப்பாக எகிப்தின் முபாரக் அரசாங்கத்தினால் இணையத்தில் செயலாற்றியவர்களைக் களையெடுத்து கிட்டத்தட்ட பதவி விலகுவதற்குள் ஒரு குறுவை சாகுபடியே நடத்தி முடிக்கப்பட்டது குறித்து அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இணையத்தின் தாக்கம் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற அரசியல் போராட்டங்களில் ஓரளவுக்கு இருந்தாலும்,அவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் அதனாலான சர்வதேச அழுத்தம். ஆட்சி மாற்றங்களுக்கான போராட்டங்கள் நடக்கும், நடந்து கொண்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் அமெரிக்காவின் ஊடகங்களும், அரசின் அதிகார மையங்களும் புரட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டையே கொண்டிருப்பதை கவனியுங்கள். மேற்கூறிய நாடுகள் சம்பந்தமாக சென்ற வருடம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக ஆவணங்கள் (cable leaks) சொல்வதெல்லாம் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தினை விரும்புகிறது என்பதைத் தான். அதன் பிறகு தான் புரட்சியாளர்களுக்கு தாங்கள் போராடினால் அமெரிக்கா கைகொடுக்கும் என்ற நம்பிக்கைப் பிறந்தது. மற்றபடி இணையம் ரொம்ப ஆபத்தானது அதில் செயல்படும் போது கவனம், கவனம், கவனம்'. இதுதான் ஜூலியன் ஆற்றிய உரையின் சாராம்சம்.
அதெல்லாம் சரி இந்தியா பற்றி என்ன சொன்னார் ஜூலியன்?. ஆறு மில்லியன் வார்த்தைகளைக் கொண்ட மொத்த விக்கிலீக்ஸ் ஆவணங்களும் இந்தியப் பாராளுமன்றத்தினை அதிர வைக்கப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். நம்மவர்களைப் பற்றி ஜுலியனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லையென்றாலும், தன் எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார். விக்கிலீக்ஸ் தங்கள் ஆவணங்களை வெளியிட பயன்படுத்திக் கொண்ட மேற்கத்திய அச்சு ஊடகங்களான அமெரிக்காவின் நியூயார்க்கர், இங்கிலாந்தின் கார்டியன், ஜெர்மனியின் தி மிரர் (Der Spiegel) ஆகியவற்றின் வரிசையில் இந்தியாவின் 'தி-ஹிந்து'. அந்த வகையில் ஹிந்து பத்திரிக்கைக்கு இது ஒரு மைல்கல். ஊடக உலகிற்கு புதியபாதை வகுத்த ஜூலியனுடன் கைகோர்ப்பதென்பது பெருமையான விஷயம். ஆனால் இது 'ரொம்ப தாமதம்'.
தலைப்புச் செய்தியில் இன்று நம் பிரச்சினைகளுக்கான கடிதம், தந்தி, புறாக்கள் குறித்தான விவரங்களை அறிந்து புளகாங்கிதமடைந்து, சினிமாச்செய்திகளுக்குள் புகுந்து, ராசிபலன் படித்து வெளிக்கிளம்பும் சாமனிய இந்தியனுக்கு ஏதோ இன்று தான் விக்கிலீக்ஸ் இந்தியா குறித்த ஆவணங்கள் வெளியிடுவதாகத் தோன்றலாம். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒட்டு மொத்த அமெரிக்க தூதரக ஆவணங்களனைத்தும் இணையமெங்கும் அள்ளி வீசப்பட்டு பல மாதங்களாகி விட்டன. மற்ற நாட்டு ஆவணங்கள் எல்லாம் அந்நாட்டு மக்களால் அலசி, ஆராய்ந்து அக்குச்சிக்காகி, செத்துச் சுண்ணாம்பாகிப் போன வேளையில் தான் 'இந்திய ஆவணங்கள்' புத்தம்புதுசாக வெளியாகிறது. இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் செய்தி, நம்மில் நிறையபேருக்கு விக்கிலீக்ஸ் குறித்துத் தெரிந்திருக்கவில்லை, முக்கியமாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், எதிர்க்கட்சிகள், ஊடக அன்பர்கள் இவர்களுக்கெல்லாம் விக்கிலீக்ஸ் ஆவணங்களை எப்படி அணுகுவதென்பது கூடத் தெரியாத நிலை. நரம்பு தளர்ந்து போன அறுபது ஆண்டு ஜனநாயகத்தை, ரத்தம் சுண்டிப்போன அரசியல்வாதிகள் நிர்வாகம் செய்தால் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே அட்சரம் பிசகாமல் இருக்கிறது பாரதம். தகவல் தொழில்நுட்பத்தின் 'பாட்ஷா' வாக இருக்கும் இந்தியா இப்போது தான் மின்னஞ்சல் முகவரி பெற்றுக் கொள்ளும் 'நாய் சேகர்களால்' ஆட்சி செய்யப்படுவது காலத்தின் கோலம். இவர்களுக்கு விக்கிலீக்ஸ் காத தூரம்.
இதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுது தான் அச்சு ஊடகமொன்று இந்தியாவில் வெளியிடுகிறதே, விக்கிலீக்ஸ் மற்ற நாடுகளில் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தினை இங்கும் ஏற்படுத்துமா? வாய்ப்பே இல்லை. ஏன்?. விக்கிலீக்ஸின் இந்திய ஆவணங்கள் சொல்லப் போவதெல்லாம் என்ன?. இந்தியா அரசாங்கத்தின் போலி மதச்சார்பின்மை, முட்டாள் தனமான பிராந்திய வெளியுறவுக்கொள்கைளின் காரணமாக சகட்டுமேனிக்கு அனைவரிடமும் திரைமறைவில் மண்டியிட்டுவிட்டு, ஊடகங்களில் பசப்புதல், 'இங்கு தரமான வாக்குகள் மொத்த விலையில் விற்கப்படும்' என்றாகிவிட்ட போலி ஜனநாயகம் ஆகியவை தான். இதில் ஏதாவது படிக்கும் அன்பர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா?. இருக்காது, நாம் எவ்வளவெல்லாம் பார்த்திருக்கிறோம் என்பது ஜூலியனுக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் ஹிந்து பத்திரிக்கைக்குத் தெரியும். மும்பைத் தாக்குதலை வைத்து இந்திய அரசாங்கம் மதரீதியான அரசியல் நடத்தியது முதல், ஈழப்பிரச்சினையில் மேற்கத்திய நாடுகளை தலையிடாமல் இருக்கக் கெஞ்சியது மற்றும் மதுரை சிம்மக்கல்லில் பட்டுராஜன் (முன்னாள் மதுரை மேயர்) வாக்காளர்களுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது வரை விவரிக்கிறது விக்கிலீக்ஸ். குற்றம் கூறப்படும் அனைவருமே 'இது எங்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி, இதை வன்மையாக மறுக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த காண்டாமிருகம் வாழ்க என்று ப்ளெக்ஸ் வைத்துக் கொண்டாடிவிட்டுப் போவார்கள். ஒரு வேளை 'நமீதாவுடன் மாலத்தீவில் கரையொதுங்கிய இளம் அரசியல்வாதி' போன்ற பிட்டுக்கள் ஏதெனும் ஆவணத்தில் இருந்தால், காணொளி கிடைக்கிறதா என தேடித்தேடி ஒட்டு மொத்த இணையமும் சின்னாபின்னப் படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது :D.
ஒட்டுமொத்த கேபிள்களுமே 30 மில்லியன் வார்த்தைகள், அவற்றில் 6 மில்லியன் வார்த்தைகள் அதாவது ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவின் ஆவணங்கள். இது அமெரிக்கா, இந்தியா மீது செலுத்தும் விசேஷ கவனத்தினையும், இந்திய அதிகார மையங்களின் தூண்கள் அனைத்தும் தூதரக விருந்துகளில் வரிசையில் நின்று மதுவருந்தி விட்டு, (அ)முக்கிய விஷயங்களனைத்தையும் வாந்தியெடுத்து வைத்து விட்டு வருவதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிற மறைபொருட்கள். ஹிந்துவின் இந்த அணுகுமுறையால் ஜூலியனின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பும் பட்சத்தில், கணிணிமயப்படுத்தப்பட்ட இந்திய அரசுத்துறை வழங்கிகளின் பாதுகாப்பின் தரம் விரைவில் பல்லிளிக்கலாம் :D.
மற்ற இந்திய ஊடகங்கள் ஏதும் வெளியிட எந்தவித முயற்சியும் செய்யாத நேரத்தில், சட்டரீதியான பாதுகாப்புடன் விக்கிலீக்ஸ் உடன் முறையான ஒப்பந்தம் செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. எவற்றையும் 'உள்'ளரசியல் காரணமாக தணிக்கை செய்யாமல் கிடைக்கப்பெற்ற அனைத்து ஆவணங்களையும் மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டியது ஹிந்துவின் தார்மீகக் கடமை, ஏனெனில் ஜூலியனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'தணிக்கை'.
இப்பதிவினை எழுதத் தூண்டிய திரு.சித்திரகுப்தன் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.
நன்றி
45 comments:
what a clear view? u hav the point on our people's
behaviour
பதிவு அருமையான வடிப்பு...
அசான்ஞ்சின் உரை மிக மிகச் சரியானது...
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்களே தல... ஆணி அதிகமோ...??
உங்கிட்ட இருந்து இன்னும் நிறைய பதிவு எதிர்பார்க்கிறேன் தல... :-)
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல. வரிக்கு வரி படிக்க வைத்து விடும் சூத்திரத்தை நன்றாக கற்று வைத்து இருக்கீங்க. வந்தார்கள் வென்றார்கள் மதன் எழுதிய புத்தகத்தில் சுஜாதா எழுதிய வாசகம் இப்போது நினைவுக்கு வருகின்றது.
இது போன்ற வரலாற்று புத்தகங்கள் பாடத்தில் வந்து இருந்தால் இன்னும் கூட கொஞ்சம் மதிப்பெண்கள் அதிகம் வாங்கியிருப்பேன். “
என் நண்பரும் இதைத்தான் சொன்னால். இந்த கேபிள் சமாச்சாரத்தை இயல்பாக படிக்க முடியல என்றார். ஆனால் நோண்டி நொங்கு எடுத்து இருக்கீங்க.
வாழ்க் சித்ரகுப்தன். என்னுடைய பேசிய போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது புரிகின்றது. அடுத்து உண்டா?
செய்தி பத்தி எல்லாரும் பேசிக்கிட்டிருக்கும்போதே இதை இந்த ப்ளாகில் படிச்சாத்தான் சரின்னு நினைச்சேன்..:) நன்றி.
எல்லோரும் அரசல் புரசலாக, ஆணித்தரமாக நூறு முறை கூறிய விஷயங்களையே, மூன்று நாட்களாக ஹிந்து கூறிக்கொண்டிருக்கிறது, அப்படிப்பட்ட கோப்புகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், எல்லோருக்கும் போய்ச்சேரட்டும் என்ற வகையில் வரவேற்கப்படவேண்டியது
தம்பி சுடுதண்ணி-க்கு வாழ்த்துக்கள், மற்றும் நன்றி-
மதுரை சுங்குடி சேலை நெசவில் நடுவில் சரிகை அல்லது கலர் நூலால் டிசைன் உருவாக்குவதை இழையாடுதல் அல்லது ஊடுபாவுதல் என்பார்கள். அது போல தம்பியின் எழுத்தில் நகைச்சுவை ஊடுபாவி கட்டுரை எழுதும் திறன் இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள். எனது எழுத்து சற்று சீரியஸாக இருப்பதாக நண்பர் ஜோதி கூறுவார்.
நான் படிக்கிற காலத்தில் அரசியல் பற்றி தெரிந்திராவிட்டாலும் அரசியல் பொதுக் கூட்டங்கள் கேட்பேன். நல்ல தமிழுக்காக நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், எம் ஏ ஹக்கீம் போன்றவர்கள் பேச்சும், இயல்பாக கவருவதால் கம்யூனிஸ்ட் கூட்டங்களும் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற சொற்றொடருக்கு அர்த்தம் தெரிந்திருக்கவில்லை.பின்னர் படித்து முடித்து வேலைக்கு வந்து அரசியல்கள் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தபின் ஏகாதிபத்தியம் பற்றி சிறிது தெரிந்து கொள்ள முடிந்தது. பின்னர் பல புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தினால், உலகவங்கி பணியாளராக இருந்து பின்னர் இந்நாட்டின் நிதியமைச்சராக, பின்னர் பிரதமராக ஆக்கப்பட்டுள்ள மன்மோகன்சிங், ஆதரவாளர்கள் மான்டேக்சிங் அலுவாலியா, ப.சி போன்றவர்கள் முழுநேர அமெரிக்க விசிறிகள், தாசர்கள் என்பது தெரிந்து கொள்ள முடிந்தது. இது பற்றி சீரியஸாக அரசியல் பேசும் உண்மையான இடது சாரிகள், நக்ஸல் அமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று பேசும் போதெல்லாம் பலருக்கு "இவர்களுக்கு வேலையில்லை எதற்கெடுத்தாலும் ஏகாதிபத்தியம் என்று விடுவார்கள் என்று தோன்றியிருக்கும்" ஆனால் கடந்த 3 நாட்களாக ஹிந்து நாளிதழ் ஜூலியன் அசாஞ்சேயுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிடும் விபரங்களினால் இந்திய அரசியலின் டவுசர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக மதுரையில் (அதிமுக)அம்மா பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரில் உலகத்தலைவர்கள் பலர் இரட்டைவிரல் காண்பித்து கொண்டு அம்மாவுடன் போஸ் கொடுப்பது போல் படம் வந்தது. இன்று அதிமுக அதன் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிறர் கேட்ட தொகுதிகளுக்கெல்லாம் அதிமுக வேட்பாளர்கள் அறிவித்து தமிழகம் அதம் பறந்து கொண்டிருப்பதற்கு கூட ஒபாமாவின் பங்கு இருக்குமோ என்னவோ. ஆனால் 3வது அணி அமைவது போல் ஒரு செய்தியை டி வி யில் பாரத்துவிட்டு படுத்துக்கொள்ளும் தமிழக மக்கள் நாளை காலையில் வெக்கங்கெட்டு மீண்டும் கூட்டணி என ஒன்றாக சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை பேப்பரில் பார்க்கவும் நேரிடலாம்..
தம்பி தொடர்ந்து எழுதுங்கள். ஏற்கனவே முடிவு செய்தபடி ஹேக்கிங் பற்றி எழுதுங்கள். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். எனக்கு சமர்ப்பணம் என பெருமைப்படுத்தியதற்கு நன்றி
பாத்தீயளா சுடுதண்ணி. நான் எழுதிய விமர்சனம் கூட அவசரத்தில் எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளேன். ஆனால் நண்பர் சித்ரகுப்தன் எழுதியதைப் பார்த்தால் வெகு விரைவில் மேலமாசி வீதியில் சுடுதண்ணி ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவார். இங்கே சூடு சூ... வரைக்கும் பொளக்குது. இப்ப ஹிந்து வேறு பொளந்து கட்டுது. ஆகவே சித்ரகுப்தன் ஆரம்பிக்கப் போகும் ரசிகர் மன்றத்தில் குளிர்ந்த மோர் கொடுக்கும் வைபோகத்தில் நீங்களும் வந்து கலந்து புழுதி தலைவி என்ற ஆத்தா தனக்குத்தானே சொருகிக் கொண்ட ஆப்பை (குவார்ட்டர் ஆஃப் அல்ல) கழட்டுவது எப்படி என்பதைப் பற்றி உரையாற்றுமாறு திருப்பூர் சதுரச் செயலாளர் சங்குமுருகன் சார்பாக வேண்டுகொள் வைத்து விடைபெறுகின்றேன்.
சில மாதங்களுக்குப்பிறகு... அசத்தீட்டீங்க... :-)
keep going!!!!!!!!!!!
senthil,doha
வணக்கம் சுடுதண்ணி அண்ணே !
பதிவு வரிகள் அனைத்தும் நச்
நன்றி...
நல்ல பதிவு.
நானும் இந்து பத்திரிகை படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.
மிக்க நன்றி சார்....தொடர்ந்து எழுதுங்கள்......
அருமையான பதிவு. புரியும்படி எளிமையான எழுத்து நடை. நன்றி.
ஹிந்து பத்திரிக்கையில எல்லாம் படிச்சா எங்களுக்கு புரியாதுண்ணே...உங்க பிளாக்ல படிக்கற மாதிரி வராது.தொடர்ந்து எழுதுங்கண்ணே.
//ஜூலியனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'தணிக்கை'.// :D
ஹிந்து பத்திரிக்கை ஒப்பந்தத்தை மீறாம இருந்தா சரி..!!
அருமையான பதிவு..!!தொடர்ந்து எழுதுங்கள்...!!
விக்கிலீக்ஸ் 14 காக நான் எத்தனை மாசம் வெய்ட் பண்ணிட்டு இருந்தன் தெர்யுமா சார் ...
இந்த மேட்டர் லாம் எங்க இருந்து புடிக்கிரிங்க சார்... கலக்கிட்டிங்க சார்...
ஆனா ஒன்னு சார் கையும் களஊமா புடிச்சாலே ஒண்ணும் பண்ண முடியாது ....பாக்கலாம்
Keep rocking 'suduthanni'
இந்தியாவின் நிலைமை எழுத்தில் நன்றாகவே வடித்துயிருக்கீங்க... சந்தோஷமா படிச்சாலும் உள்ள என்னமோ தான் பண்ணுது...
தொடர்ந்து வாங்க
நல்ல இடுகை.
சந்தோசமான விஷயம் தான்.,எனினும் இதில் ஹிந்துவின் பங்கு குறித்த சந்தேகம் எனக்குண்டு.அது நடுநிலையான நாழிதழ் போன்ற பாவனையைக் கூட வெகு காலம் முன்பே விட்டுவிட்டது.அது ஹைலைட் பண்ணுகிற விஷயங்கள் சொல்லாமல் விடும் விஷயங்கள் எல்லாவற்றிலும் அதன் அரசியல் சார்ந்த விருப்பமும் வெறுப்பும் நிச்சயம் இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
Welcome Back...
ரொம்ப நாளுக்குப்பிறகு ஆவி பறக்குதே......
அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க.....
http://www.TruthAboutIndiaCorruption.org
ம்ம்ம்...இன்னும் சொல்லுங்க சுடுதண்ணி.
//ஏற்கனவே முடிவு செய்தபடி ஹேக்கிங் பற்றி எழுதுங்கள்//.
இந்திய சைபர்கிரை சட்டப்படி இப்படி ஹேக்கிங் பற்றி எழுதுவது சட்டத்திற்கு எதிரானதா?
குளிருக்கு கதகதப்பா போர்த்திகிட்டு தூங்கிட்டீங்களோன்னு நினைச்சேன்:)
அடிக்கடி வாங்க!
தகவல் தொழில்நுட்பத்தின் 'பாட்ஷா' வாக இருக்கும் இந்தியா இப்போது தான் மின்னஞ்சல் முகவரி பெற்றுக் கொள்ளும் 'நாய் சேகர்களால்' ஆட்சி செய்யப்படுவது காலத்தின் கோலம்//
என்னா வரிகள்..தலைவரே கலக்கிட்டீங்க...கடினமான விஷயங்களையும் எளிமைப்படுத்தும் உங்கள் திறமைக்கு சல்யூட்..நிறைய படிச்சிகிட்டே இருக்கணும் போல இருக்கு.. அடிக்கடி எழுதுங்க பாஸ்
துவக்க காலம் முதலே இணையத்தில் கவனமா இருங்கப்புன்னு ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுக்கொண்டே வருகிறீர்கள்.நமது கருத்துப்பரிமாறல்கள் ரஜனி மொழியில் சொல்ல வேண்டுமானால் ஜுஜுபி!நாம் மட்டுமல்ல அதிகார வர்க்கமும் நுழையாத கன்னித்தீவே இணையம் என்பேன்:)
எனவே சிவப்பு நாடா தேவையில்லையென்பது எனது கருத்து.
Salaams to you 'steaming hot water'..!
As usual, this post of yours is also popping the relief valve at high pressure..!
Let us hope positively that the politicians, public and particularly the courts take it serious... at least now.
Tanks a lot.
Actually I felt like article ended very soon. You have very good style of writing.Please try to keep writing..
@ கவிதைகள் சொல்லலாம் -ஊக்கத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க :)
@ அகல்விளக்கு - அன்புக்கு மிக்க நன்றி :). கொஞ்சம் அதிகம் தான். நிறைய எழுத நிச்சயம் முயற்சிக்கிறேன்.
உங்களின் தொடர்ந்த அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி :)
@ முத்துலெட்சுமி - உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி :).
@ தமிழினியன் - கருத்துக்கு மிக்க நன்றி :).
@ ஒன்று சேர் - உங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. உங்களின் கடந்த கால 'ஏகாதிபத்திய' பாதிப்புகளைப் பகிர்ந்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நடப்பவற்றைப் பார்க்கும் போது மொத்த உலகத்தையும் ஒரு சில பயில்வான் நாடுகள் தான் ஆள்வது போல் தோன்றுகிறது. நிச்சயம் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்பில் இருப்போம்.
@ ஜோதிஜி - :)))
@ ரோஸ்விக் - தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி நண்பரே.
@ செந்தில் - நன்றி :).
@ புதுவை சிவா - நன்றி தம்பி :D.
அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ தாமஸ், ரத்னவேல், அமுதா கிருஷ்ணா,சேலம் தேவா, ஆனந்த், துரை, தாமு.. தொடர்ந்து வாங்க.
கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி @ D.R.அஷோக், பாலகுமார், போகன், தோமா, தவறு.
@ சாய்தாசன் - வருகைக்கு மிக்க நன்றி சாய்தாசன், அதுகுறித்து தெளிவானத் தகவல்கள் திரட்டிக்கொண்டிருக்கிறேன். வருகையாளர்களில் யாருக்கேனும் தெரிந்திருந்து பகிர்ந்து கொண்டால் நன்று :).
@ ராஜராஜன் - படிக்கும் போதே இழுத்துப்போத்திட்டு தூங்கலாம் போலிருக்கு :). இந்திய தேசத்து இணையச்சட்டம் இணையத்தின் பயன்பாட்டை முழுமையாகத் தெரிந்தவர்களால் கட்டமைக்கப் பட்டதாகத் தெரியவில்லை. 'you are not experienced, just old' போன்றவர்களால் வடிவமைக்கப்பட்டது போல் அறிந்தவரை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு ஆபாசப்படங்களை இணையத்திலோ எந்த ஒர் இலத்திரனியல் உபகரணம் மூலமாகவோ பார்வையிடும் பார்வையாளரைக் கைது செய்ய இந்தியச்சட்டத்தில் இடமிருக்கிறது. (இந்திய இணையச்சட்டங்களை விரைவில் சுடுதண்ணியில் அலசப்படும்.). சாமன்யனுக்கு சாதரணமாகத் தோன்றும் கருத்துப் பறிமாறல் வகைதொகையான ஆப்பாக மாறிவிடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை தான் :). உதாரணத்திற்கு பதிவுத்திருட்டுகள் (any kind ofcopy /pasting copyrighted info) ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மூன்று வருட சிறைத்தண்டனை/ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.
ஏற்கனவே சொன்னது போல இதுவரை இந்திய அரசின் ஆட்சியாளர்களோ அல்லது அதிகார மையங்களோ இணையத்தின்/இணையச்சட்டங்களின் பக்கம் தங்கள் பார்வையினைச் செலுத்தவில்லை, அது நடக்கும் போது விளைவுகள் ரொம்ப மோசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. உதாரணம் - மும்பைத் தாக்குதல் சமயத்தில் ஏதோ 'ஒரு' வலைப்பதிவில் சட்டத்திற்கெதிரான தகவல்கள் பதிவிரப்பட்டிருந்ததால் ஒட்டுமொத்த blogspot.com தளமுகவரிகளைத் தடை செய்த தேசமிது. பின்னூட்டம் ரொம்ப நீளமாகிவிட்டது. இது குறித்து நிச்சயம் தனிப்பதிவில் பகிர்ந்து கொள்வோம். நன்றி ராஜராஜன்.
நன்றி ஆஷிக் தொடர்ந்து வாங்க.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஹரி. அடுத்தடுத்த பதிவுகள் சரியான நீளத்தில் அமையுமாறு நிச்சயம் பார்த்துக் கொள்ளப்படும்.
உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ ஆர். கே. சதீஷ்குமார். தொடர்ந்து வாங்க :)
வாங்க வாங்க... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...
மாசத்துக்கு ஒரு பதிவாவது எழுதுங்க தல...
மற்றபடி நீங்க சொன்னது உண்மைதான். ஓட்டுக்கு காசு குடுக்குறது, MP-க்களை வாங்கியது எல்லாமே நம்ம பொதுஜனத்துக்கு தெரிஞ்ச விஷயம் தான். இதை மறுபடியும் சொன்னா அவங்களுக்கு ஆச்சர்யமாவே இருக்காது.
வணக்கம்.
சுடுதண்ணி வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னவென்றால், இந்த பதிவுக்கு இது வரை மொத்தம் 34 மறுமொழிகள் கிடைத்துள்ளது. அப்படியானால் சரியாக 34 பேர் கண்டிப்பாக முழு கட்டுரையையும் அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டு படித்திருப்பீர்கள் என்று அறிகிறேன்.
அப்படி இருக்கின்ற பட்சத்தில் இந்த கட்டுரைக்கு தமிழ்மணத்தில் வாக்களித்து அதை பரிந்துரைக்கப்பட்ட கட்டுரையாக, மற்றவர்களுக்கும் அறியும் வண்ணம் அளிக்க வேண்டியது நமது கடமை. தேவை இல்லாத பதிவுலக அரசியல் பற்றிய பதிவுகள் முன்னை இடுகைகளில் வருவதை இதன் மூலம் சிறிது நேரமாவது நாம் தடுக்கலாம்.
தமிழ்மணம் கணக்கு இல்லாதவர்கள் தயவு செய்து ஒரு கணக்கை உருவாக்கி இந்த கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.
கலக்கல் சுடுதண்ணி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கு பதிவு. பின்னூட்டதில் வேற கலக்குறீங்க... பயணம் படத்தோட டச் இருக்கு.
இது தமிழ்ல வர்ற விக்கிலீக்ஸ்.........ஆ??? சூப்பர் சுட சுட குடுங்க காத்துக்கிட்டு இருக்கோம்.........
டெஹல்கா போன்ற பத்திரிகைதான் விக்கிலீக்ஸ் க்கு சரியாக இருந்திருக்கும்..
ஹிந்துவின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது.. ஏனெனில் அது பல முறை ஒருசார்புடையதாக இருந்திருக்கிறது.. அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும், ஆனால் அதன் அவப்பெயர், விக்கிலீக்ஸ்ன் கேபில்களின் நம்பகத்தன்மையைக் குறைத்து விடக் கூடாது என்பது என்னுடைய எண்ணம் ஆசை..
டேஹல்கா போன்ற உண்மையைத் தோலுரித்துக் காட்டிய ஊடகத்துடன் ஒன்றிணைந்து இருந்தால், தூள் பரந்திருக்கும் இன்னும்... சரி பார்ப்போம்..
மிகுந்த நாள் கழித்து உங்களிடம் இருந்து வந்திருக்கும் பதிவு தலைவா..
தொடர்ந்து எழுதுங்கள்...
தி ஹிந்து வின் நோக்கம் நேற்றய பேப்பரில் தெரிந்துவிட்டதே. தோழர் பிரகாஷ் காரத் "ரொம்ப நல்லவரு"ன்னு விக்கிலீக் சொல்லியிருக்கிறதா நடுப்பக்க கட்டுரை. இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் சிபிஎம்-ன் அரசியல் பாரம்பரியம் 40 ஆண்டுகளுக்கு மேல் என சொல்லிக்கொண்டு, கட்சி ஆரம்பித்து 4 ஆண்டு ஆகாத நடிகர் வீட்டு கதவைத் தட்டி தனியாக அணி அமைக்கலாமா என கேட்டுவிட்டு அவர் யோசிப்பதற்குள் அம்மா கதவைத் தட்டி தனியாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தாச்சு. இதில் அமெரிக்கா நல்ல நாடு ஆனா கெட்ட நோக்கம் என காரத் கருத்துரை வேறு ????
நீங்கள் தொடர் பதிவு போட வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு
Boss enna boss pls Continues a eluthunga BOss....
நன்றி..உங்களின் தொடர் வாசிப்பாளனாகி விட்டேன்.
வணக்கம்,உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
ஒண்ணுமே தெரியாத அப்பாவிங்களா இருந்த நமக்கு இந்த உலகம் என்ன செய்கிறது... எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று எடுத்துச் சொல்லிய அவர் பேரு அசாஞ்ஜே இல்லீங்க! அ(ஞ்)சா(நெ)ஞ்ஜே!
Post a Comment