Wednesday, July 17, 2013

இணையம் வெல்வோம் - 9

ஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.
இணையம் இல்லா காலகட்டத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்தவர்கள் தங்களுடைய வரலாற்றைச் சிறிதும் சேதாரமில்லாமல் பதிவு செய்து கொள்வதையும் அல்லது மக்களுக்கு அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளை மட்டுமே கொண்டு சேர்ப்பதையும் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் செய்வதைப் போல எந்த சிரமும் இல்லாமல் சீரோடும் சிறப்போடும் செய்து வந்தனர். அதையும் மீறி உண்மை உழைப்பு, நீதி, புரட்சி, ஈயம், பித்தளை என்று முக்கியவர்கள் அனைவரும் கச்சிதமாக நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் பரிசுத்தமாகக் கிருமிநாசினி ஊற்றிக் கழுவப்படுவது தொன்று தொட்ட வழக்கமாகவே இருந்து வந்தது,

இணையம் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில். அதன் வீச்சும், வீரியமும் அதிகார வர்க்கத்திற்கும், அவர்களின் மந்திராலோசனை வட்டத்தில் வறுத்த முந்திரி சாப்பிட்டுக்கொண்டு ‘நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்து கொண்டே இருக்கிறது மன்னா’ என்று தங்கள் கருத்துக் கூடாரத்திலிருந்து ஆட்சியாளர்கள் வெளிவராமல் பத்திரமாகப் பார்த்து கொண்ட அதிமேதாவிகளுக்கும் இம்மியளவும் புரியவில்லை. ‘பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு பார்க்க இனிமேல் மாலை முரசுக்குத் தொங்க வேண்டாமாம், இன்டெர்நெட்லேயே வந்துருமாம்’ என்கிற அளவிலேயே இணையம் தொடர்பான பார்வை உலக நாடுகளுக்கு இருந்து வந்தது. அதுநாள் வரை பொதுமக்களுக்குத் தடையாயிருந்த தகவல் தொடர்பு என்ற ஒற்றை விஷயத்தின் அத்தனை கதவுகளையும் ஒரே நேரத்தில் தகர்த்தெறிந்த பெருமை இணையத்திற்கு உண்டு. ஒரு கணிணியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும், வேறேந்த தகவல் தொடர்பு சாதனமும் தேவையில்லை என்ற நிலை உருவானது.

இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க உலக நாடுகள் அதற்கு எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்தார்கள் என்பதனை பார்த்தாலே இணையத்தைப் பற்றி அவர்களின் புரிதல் சிரிப்பாய்ச் சிரிக்கும். இணையத்தின் மூலம் சல்லிசாய் அல்லது இலவசமாய் எந்த நாட்டுக்கும் தொலைபேசும் மென்பொருட்கள் வந்ததும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை, ஏதாவது ஒரு வலைப்பக்கத்தில் அவர்களுக்குப் பிடிக்காத சங்கதிகள் இருந்த்தால் அந்த இணையத்தளத்திற்குத் தடை என்று உலக நாடுகளின் கைங்கர்யத்தில் அரங்கேறிய நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம்.

இணையம் ஒரு கட்டற்ற காட்டாறு, யாரும் அதனைக் கட்டி வைக்கவோ, எவரும், எவரையும் கட்டுப்படுத்தவோ முடியாது, அதே நேரத்தில் ஒவ்வொருவரின் அசைவும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும். அதுவரை அமைதியாக இருந்து விட்டு, மனைவி ஊருக்குப் போனதும் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்று கும்மாளமிடும் ரங்கமணிக்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம்.



ஒரு நாட்டின் அடித்தளமே ஊடகங்கள் தான், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று, பேனா கத்தியை விடக் கூர்மையானது போன்றவற்றைக் கேட்டு வளரும் குழந்தைகள் பாவம். ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை ஊடக அதிபர்களையும் வலைக்குள் விழ வைப்பதுதான் சம்பிரதாய வழக்கம். தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவும், பணத்திற்காகவும் ஊடகங்களும், அரசுகளும் போட்ட பேயாட்டத்தில் வரலாற்றில் புதைக்கப்பட்ட உண்மைகள் எண்ணிலடங்காதவை. இன்றும் ‘எம்.ஆர்.இராதா ஏண்ணே எம்.ஜி.ஆர சுட்டாறு’ என்றும், ‘சுபாஷ் சந்திர போஸை எப்ப வந்தாலும் பிடிச்சுக் கொடுப்போம்னு சொல்லித்தான் சுதந்திரம் கிடைச்சுச்சாமே’ டீக்கடையில் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அப்பிராணி குடிமக்களே அதற்கு சாட்சி. சாமாளிப்புச் செலவு அளவிற்கு மீறிய கட்டத்தில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளே ஊடகங்களை நடத்த ஆரம்பித்த கொடுமைகளும் அனேக நாடுகளில் நடந்தன.


இணையம் வந்த பிறகு இதற்கெல்லாம் வேலையில்லாமல் போய்விட்டது. சாலை விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கோ, திருட்டில் நகையைப் பறிகொடுத்து ஒருவருக்கோ ‘யாருமே உதவிக்கு வரல, கலி முத்திருச்சி’ என்று,  தான் உதவி செய்கிறோமோ இல்லையோ, சம்பவத்தை முனைப்பாக புகைப்படத்துடன் டிவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ அல்லது வலைபதிவிலோ பதிந்து ஜனநாயகக் கடமையாற்றுவது இன்று சர்வசாதரணமாகி விட்டது. அதிகாரவர்க்கங்கள் பொது இடங்களில் நடக்கும் எந்த விஷயத்தினையும் ஊடகங்கள் வாயிலாக மக்களிடமிருந்து மறைத்துக் விடலாம் என்பது காலாவதியாகிப் போன (கு)யுக்தியாக மாறிப்போனது. உலகின் மற்ற மூலைகளில் இணையத்தின் கட்டற்ற தகவல்தொடர்பால் ஒவ்வொரு தினமும் எத்தனையோ சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறார்கள், மக்களுக்கான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாம் என்ன செய்திருக்கிறோம், சினிமா விமர்சனப்பதிவுகள் மூலம் இணையப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு சினிமா தானே முக்கியம்.

இணையத்தின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகக்கருவியாய் மாறிப்போனதில் மிகவும் தடுமாறிப் போனது அரசாங்கங்கள் தான். இணையத்தினைக் கட்டுப்படுத்த கன்னாபின்னாவெனெ இணையக் குற்றங்களுக்கான சட்டங்கள் தாறுமாறாக வரையப்பட்டன. நீங்கள் நினைப்பது போல அச்சட்டங்கள் சுலபமானவை அல்ல மிக விபரீதமானது, ஒரு நாட்டின் அத்தனை இணைய இணைப்பினையும் துண்டிக்கவோ, உளவு பார்க்கவோ அனுமதிக்கும் சர்வாதிகாரத்தினை அரசாங்ககளுக்கு வழங்கும் தன்மையுடையது. அதனை வரைவு செய்யும் அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ, பயன்படுத்தும் சட்டத்தரணிகளோ அத்தொழில்நுட்பத்தில் புலமை வாய்ந்தவர்களா இல்லையா என்பதை நீங்களே தூக்கத்திலிருந்து விழித்து முடிவு செய்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ப்ளாக்கர் வலைப்பதிவினைத் தடைசெய்வதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக அனைத்து வலைப்பதிவுகளையும் (*.blogspot.com) தடைசெய்த கொடுமையெல்லாம் இந்தியாவில் நடந்து, உலகமே வாயால் சிரித்து வைத்த சம்பவங்களெல்லாம் கூட உண்டு.

சட்டங்களை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு மக்கள் மன்றத்தில் வாக்களிக்கும் அரசியல்வியாதிகளின் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி பற்றி சொல்லவே தேவையில்லை. அதற்கு அருமையான, கிளுகிளுப்பான உதாரணம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் காங்கிரஸ் உறுப்பினர் அந்தோணி வினர் (Anthony Weiner). இளம் வயது, கவர்ச்சித் தோற்றம், அரசியலில் அசுர வளர்ச்சி என்று நியூயார்க் மாநகரத்தில் உள்ள அனைத்து  சொப்பன சுந்தரிகளின் கனவுக் கண்ணன். அண்ணனும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் கோலடிக்கும் திறன்மிக்க கால்பந்து வீரரைப்போல எழில்மிகுப் பாவையர்களை வாசிப்பதில் கில்லாடி. இப்படி மைனர் குஞ்சாக வலம் வந்து கொண்டிருந்த அந்தோணியின் மனதில் ஆழமாக கொக்கியைப் போட்டு மோதிரம் மாட்டியவர் இந்தியா-பாகிஸ்தானின் கூட்டுத்தயாரிப்பான ஹுமா (Huma Abedin). இவர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய உதவியாளர் என்பதும் பில் கிளிண்டன் தலைமையில் திருமணம் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது. மணமானாலும், ஆடிய காலும், பாடிய வாயும் வேண்டுமானால் சும்மா இருக்கலாம், அந்தோணியால் முடியவில்லை. ஒரே நேரத்தில் பல இடங்களில் பல தளங்களில் களமாடிக்கொண்டிருந்த அந்தோணிக்கு விதி இணையத்தில் வீதி உலா வந்தது.

தனிமையில் இனிமை காணும் பொருட்டு அந்தோணி சில கிளுகிளுப்பான படங்களை ஒரு கிளியிடம் யதார்த்தமாக டிவிட்டரில் பகிரப்போக, ஒரு சிறிய தவறால் அது அந்த கிளிக்கு மட்டும் செல்லாமல்  அந்தோணியை டிவிட்டரில் தொடரும் அத்தனை பேருக்கும் பதார்த்தமாக பல்லைக்காட்டியது. போதை இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் தவறை உணர்ந்த அந்தோணி படங்களை டிவிட்டரில் இருந்து நீக்கி விட்டு, போர்வையை இறுக்கிப் போர்த்திக் கொண்டுத் தூங்கி விட்டார். அந்த சில நிமிட இடைவெளியில் இணையத்தில் அந்த புகைப்படப்பதிவுகளை நகலெடுத்த ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்து, அவர்களின் இணையத்தளத்தில் சுடச்சுட வெளிவந்தும் விட்டது.

அந்த புகைப்படத்தை பார்த்து அத்தனை பேருக்கும், அந்தோணி உள்பட குளிர்க்காய்ச்சலே வந்து விட்டது. மறுநாள் அந்தோணி எங்கும் நடமாட முடியவில்லை. எங்கு போனாலும் ஒரே கேள்வி ‘அது உங்களோடதா?’. அனைத்து தொலைக்காட்சிகளும் ஊரிலுள்ள கருத்துக் கந்தசாமிகளனைவரையும் ஒரு அரைவட்ட மேஜையில் அமரவைத்து அப்படத்தினை உத்து, உத்துப் பார்த்து உருக்குலைந்து போனார்கள். உள்ளாடை எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அளவு என்ன,  அந்தோணி அதனை எந்தக் கடையில் வாங்கினார் என்பது வரைக்கும் ஆராய்ச்சி நீண்டு கொண்டே இருந்தது.


நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அந்தோணி, அதனைச் சமாளிக்க அள்ளிவிட்ட சரடுகள் மேலும் அவரை அதளபாதாளத்திற்குத் தள்ளியது

தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

Good Information

Katz said...

அருமையான தொடர்.... படங்கள் நச்.