Wednesday, November 20, 2013

இணையம் வெல்வோம்-14

அமெரிக்காவின் வரலாற்றை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை 2001 செப்டம்பர் 11க்கு முன், பின் என நளைய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் படிக்குமளவுக்கு தலைகீழாய் புரட்டிப் போட்டது இரட்டைக் கோபுரத் தாக்குதல் அல்லது நிகழ்ச்சி.
கம்யூனிச நாடுகளின் மேல் மேற்குலக மேதாவிகள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு அங்கு தனிமனித சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது. ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த கிழக்கு ஜெர்மனியில் இத்தகைய கண்காணிப்புகள் மிகப்பிரபலம். இப்படி ஊர் உலகமெல்லாம் அரசு இயந்திரங்கள் நடத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்த அமெரிக்க மக்கள் தங்களுக்கே அது போன்ற நிலை வருமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு தேசியப் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டுத் தங்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்தால் கூட “God Bless America” என்று மயிர்க்கூச்செரியக் கூவுமளவிற்கு அனைவரும் அரண்டு போயிருந்தார்கள். ஊடகங்களும் அதனை நியாயப்படுத்தின. 


ஆனால் அமெரிக்க அரசின் கண்காணிப்பின் நீள, அகலம் எட்வர்ட் ஸ்நோடன் ஊடகங்களின் அவிழ்த்து விடும் வரை யாருக்கும் உறுதியாய்த் தெரிந்திருக்கவில்லை. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்காவில் கல்யாணத்தின் முதல் பந்தியில் சாப்பாடு பறிமாறும் வேகத்திற்கு இணையாக தேசியப்பாதுகாப்பினை பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று தான் FISA (Foreign Intelligence Surveillance Act) எனப்படும் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள். அதன் மூலம் எந்த நீதிமன்ற ஆணையுமின்றி அரசு சந்தேகப்படும் எந்த ஒரு நபரின் தொலைத்தொடர்புகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து அலசி ஆராயலாம் என்பது தான். இங்கு தொலைத்தொடர்பு என்பது இணையம், தொலைபேசி மற்றும் செல்பேசி என சகல இலத்திரனியல் சாதனங்கள் மூலம் ஏற்படுத்தபடும் தகவல் தொடர்புகள் என்பதனை நினைவில் கொள்ளவும். இந்த அசுர பலத்தின் வீச்சினையும், வீரியத்தினையும் சட்டென்று பலருக்குப் புரிபடுவதில்லை. இணையம் எப்படி செயல்படுகிறதென்பதின் சூட்சுமம் அறிந்தவர்களுக்கு இதில் உள்ள ஆபத்தும், ஆழமும் புரிந்திருந்தது.
மொட்டைக்குத் திருப்பதி போல, இணைய வழங்கிகளுக்கு அமெரிக்கா. உலகத்திலிருக்கும் முக்கால்வாசி இணைய வழங்கிகள் அங்கு தான் இருக்கிறது. தேசிய அளவின் இணையப்போக்குவரத்தினைக் கண்காணிப்பதன் மூலம் உசிலம்பட்டியில் இருந்து உங்கள் செல்பேசியின் ‘வாட்ஸ் அப்’ பில் யார், யாரிடம் மரியாதையுடம் பேசுகிறீர்கள், அல்வா கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என்பதெல்லாம் கூட கண்காணிக்க முடியும்.

இங்கு கண்காணிப்பதென்பது உங்கள் இணைய நடவடிக்கைகளை எப்போதும் ஒருவர் தோளோடு தோளாய் நின்று கண்காணிக்கிறார் என்பதல்ல. இங்கு சகலமும் சேமிக்கப்படுகிறது. சகலமும் என்றால் ச..க..ல..மு...ம். உங்கள் கணிணி எத்தனை மணிக்கு இணைகிறது, வலையமைப்பு எண், உங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனம், வேலை நேரத்தில் பேஸ்புக் போவது முதல், சினிமா கிசுகிசு படித்துக் கொண்டே VOIP மூலம் தொலைத்தொடர்பில் இருப்பது வரை அத்தனையும். சேமிக்கப்படும் தகவல்களனைத்தையும் அரைத்துச் சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொடுக்க SIEM போன்ற வலைப்பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் பாஸ்டன் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ‘pressure cooker bombs’ என்று தெரிந்த பிறகு கூகுளில் Pressure Cooker Bombs என்று தேடியவர்கள் வீடுகளுக்கு அமெரிக்கப் போலீசார் விருந்துக்குச் சென்ற சம்பவங்களின் மூலம் இணையக் கண்காணிப்பின் ஆழத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள கனமாகப் பரிந்துரைக்கப் படுகிறது. முதலாவது அமெரிக்க இணைய வழங்கிகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமானது அல்ல. அவற்றில் இருக்கும் இணையத்தளங்களை உலகம் முழுவதிலும் உள்ள பயனாளர்கள் வருகை தருகிறார்கள். நீங்களும், நானும், உலகமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள், இராணுவப்பாதுகாப்பு மற்றும் அணு உலை மைய அலுவலகங்கள் இப்படி அனைத்தும். இவையனைத்தையும் ஒரு தனி நாடு கண்காணிக்க முடியுமென்பது மிக அபாயகரமானது. இதன் மூலம் குறிப்பிட்ட எந்த தனி நபரையும் குறிவைத்துத் தகவல்கள் சேமிக்க முடியும், மேலும் உங்கள் இணையப்பழக்க வழக்கங்களை வைத்து உங்கள் கணிணியில் நிரல்களை நிறுவி நீங்கள் இணையத்தில் இணைப்பில் இல்லாத  போதும் என்னென்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியும். இரண்டாவது விஷயம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட இணையத்தில் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பது மூலம் மனிதர்களைத் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்பதாகத் தரம்பிரிக்க முடியும்.

உதாரணத்திற்கு உங்கள் உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கிய விவரங்கள், பிடித்த/பிடிக்காத விஷயங்கள், அரசியல் சார்பு, குடும்பம், நட்பு, தொடுப்பு இப்படி அனைத்தும். இப்படி ஒரு தனி நபரை இணைய நடவடிக்கைகள் மூலம் தரம்பிரித்தலை அமெரிக்கா தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ஆரம்பித்து வைத்தாலும், இணையமும் ஒரு காலத்தில் போர்க்காலங்களில் இராணுவப் பயன்பாட்டுக்கென கண்டுபிடித்து இன்று கொத்தமல்லி சட்னி வைக்கக் கூட இணையத்தினைப் பயன்படுத்தும் அளவுக்கு அதன் வளர்ச்சியினைப் பார்க்கிறோம்.


 அதே போல் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் எதிரில் இருக்கும் நபரின் முகத்தினைப் படம் பிடித்து, அடையாளம் கண்டு, அவரைப் பற்றிய சகல விவரங்களையும் அவருடைய இணைய நடவடிக்கைகளை வைத்துப் பட்டியலிடக் கூடிய சக்தியுடன் இலத்திரனியல் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும்.

அது போன்ற கால கட்டங்களில் எந்த ஒரு மனிதனும் தங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்/நண்பர்கள் மத்தியில் மட்டுமே தங்கள் முகத்தினையோ அல்லது தங்கள் அடையாளப்படுத்தியோ கொள்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் மானாட மயிலாட பார்த்து விட்டு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சென்றால் உள் நுழைந்ததும் எச்சரிக்கை ஒலி அடிக்கச் செய்யுமளவிற்கு வளரப் போகும் விஷயம் தான் இந்த இணையக் கண்காணிப்பு (Project PRISM).


இவற்றையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறது என்று உலகிற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டு இதன் ஆபத்தினை பற்றி எடுத்துரைத்த எட்வர்ட் ஸ்நோடனை அரசாங்கத்துடன் வெள்ளைக் காக்கை மேய்க்கும் பெரும் ஊடகங்கள் உளவாளி, மோசடிக்காரன் என்று ஆர்ப்பரித்து அடங்கின.

ஸ்நோடன் குறித்து விரிவாக, தனியாகப் பார்ப்போம். எல்லாம் சரி இதன் மூலம் அனானிமஸ் அன்பர்களுக்கு வந்த பிரச்சினைகள் என்ன, அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், மேலும் மைக்ரொசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் குறியீட்டு முறையை (encrpytion) எப்படி அமெரிக்க அரசாங்கள் கட்டுடைத்து அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் பலம் பெற்றது போன்ற விவரங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.


தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

8 comments:

99Likes said...

தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். http://blogintamil.blogspot.in/2013/11/2.html

சுடுதண்ணி said...

அறிமுகத்திற்கு மிக்க நன்றி முகமது நவ்சின் கான் :).

வடுவூர் குமார் said...

Nice.

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா நானெல்லாம் என் பசங்க கூட ஃபேஸ்புக்கில் பேசுறப்ப எப்படா வீட்டுக்கு வரூவீங்க...மாயாஜாலில் டிக்கெட் போட்டாச்சா..ட்ரையின் டிக்கெட் இருக்கா என்று பேசுறது கூட ரெக்கார்ட் செய்வாங்களா????

Santhose said...

// உதாரணத்திற்கு சமீபத்தில் பாஸ்டன் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ‘pressure cooker bombs’ என்று தெரிந்த பிறகு கூகுளில் Pressure Cooker Bombs என்று தேடியவர்கள் வீடுகளுக்கு அமெரிக்கப் போலீசார் விருந்துக்குச் சென்ற சம்பவங்களின் மூலம் இணையக் கண்காணிப்பின் ஆழத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.//

Do you have any evidence for this? (at least any news paper quote ....)

srinivasan said...

வன்தட்டு பழுதடைந்தால் கவலைப்பட வேண்டாம் ,நாசா அல்லது சி .ஐ.எ இல் கேட்டால் கிடைக்கும் என்பது நகைசுவையாக தோன்றினாலும் , உண்மையை உணரும் போது அதன் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது .

த. சீனிவாசன் said...

அன்புடையீர்,

தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு
கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில்,
பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான
ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான
Desktop,ebook readers like kindle, nook, mobiles, tablets with android,
iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள்
support செய்யும் ebub, mobi, pdf போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள்
அமையும்.

இதற்காக நாங்கள் [http://www.suduthanni.com/] உங்களது
வலைதளத்திலிருந்து பதிவுகளை

பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.

எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை
மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின்
பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை
"Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும்
உறுதியையும் அளிக்கிறோம்.

http://creativecommons.org/choose
இங்கே சென்று, தேவையான உரிமத்தை தெரிவு செய்க.


கீழ் காணும் பதிவில் உள்ளது போல ஒரு பதிவையும், widget or footer ஐயும்
சேர்த்து விட்டு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/


நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

e-mail : freetamilebooksteam@gmail.com
9841795468

எங்களைப் பற்றி : http://freetamilebooks.com/about-the-project/

Google Group : https://groups.google.com/forum/#!forum/freetamilebooks

FB : https://www.facebook.com/FreeTamilEbooks

G +: https://plus.google.com/communities/108817760492177970948

சுடுதண்ணி said...

மிக்க நன்றி @ வடுவூர் குமார்.

அது நீங்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளைப் பொருத்து @ அமுதா கிருஷ்ணா :)

http://news.yahoo.com/google-pressure-cookers-backpacks-visit-feds-140900667.html @ சந்தோஷ்.

அன்புக்கு நன்றி @ ஶ்ரீனிவாசன் :).