முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட திமுகவினரைப்போல் வாயெல்லாம் பல்லாக மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த அனானிமஸ் குழுவினர் மற்றும் இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும் சாமானியர்களின் வாழ்க்கையிலும், வாயிலும் மண்ணை அள்ளிப் போட்டது அமெரிக்க அரசு.
இணையத்தில் குறியீட்டு முறைப்படி தகவல் பறிமாற்றம் செய்தாலும் அவற்றை சேமித்து அதன் குறியீட்டு முறையினைக் கட்டுடைத்துத் தகவல்களைப் படிப்பதை குற்றமற்ற ஒன்றாக மாற்றும் வண்ணம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. குறியீட்டுமுறையின் வீரியம் அதிகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் உதவியை நாடுவது, ஒரு குறிப்பிட்ட பயனாளர் கணக்கின் கடந்தகால பதிவுகள் அனைத்தையும் அந்நிறுவனங்களின் மூலம் பெறுவதற்கான அதிகாரங்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கைவரப்பெற்றது.
இது போன்ற வேண்டுகோள்களுக்கெல்லாம் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிந்து போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. மீசை மடங்காத, விரைப்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலையே இழுத்து மூடிய சம்பவங்களும் நடந்தன. இது கிட்டத்தட்ட நூறு வீடுகள் இருக்கும் ஒரு ஊரில், ஒரு திருடனின் வீட்டைக் கண்டுபிடிப்பதற்காக அத்தனை வீட்டினையும் முன் அனுமதியின்றி, யாருக்கும் தெரியாமல் உட்புகுந்து வேவு பார்க்கலாம் என்பது போன்ற ஒரே நேரத்தில் பகீர் மற்றும் கிளுகிளுப்பு இரண்டும் கலந்த ஒரு விஷயம்.
அது மட்டுமின்றி அமெரிக்க உளவு அமைப்புகள் அனானிமஸ் ஆதரவாளர்கள்/ஆர்வலர்கள் போர்வையில் அவர்களின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், இணையத்தில் தங்கள் அடையாளத்தினை மறைத்துக் கொள்ள விரும்புவர்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் TOR வலையமைப்பிலும் பங்கேற்பாளர்களாக உருமாறி தங்கள் கணிணிகள் மூலம் பயணிக்கும் தகவல்களைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தார்கள். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கணிணி/இணைய வல்லுநர்கள் மத்தியில் பலத் துயரச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.
அச்சம்பவங்கள் அனைத்தும் அனானிமஸ் தொடர்பானவை என்பதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதும் பொதுவில் வைக்கப்படவில்லையென்றாலும், அவற்றின் மூலம் அனானிமஸ் அல்லது அமெரிக்க அரசுக்கு எதிராக இணையத்தில் அடையாளங்களை மறைப்பது மற்றும் ஊடகங்களின் தணிக்கை முறை ஆகியவற்றுக்கெதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
அமெரிக்க அரசு இத்தனை பிரயத்தனப்பட்டாலும் அவர்களுக்கு கைகொடுத்ததென்னவோ எதிரிகளைக் கவிழ்க்க பயன்படும் தொன்றுதொட்ட பாரம்பரிய வழக்கமான காட்டிக்கொடுக்க உள்ளிருக்கும் ஆட்களை வளைக்கும் தந்திரம் தான். இணையத்தில் மாயமான்களாய் வலம்வரும் அனானிமஸ் அன்பர்களை அவ்வாறு வளைத்த வரலாறு அதிரிபுதிரி திருப்பங்கள் திருப்பங்கள் நிறைந்த மசாலாத் திரைப்படங்களை மிஞ்சிய ஒன்று. அக்கதையினைப் பார்ப்போம்.
முதலில் சட்டமாற்றங்கள் மூலம் இணையக்குற்றங்கள் மிகப்பெரும் தேசத்துரோக வழக்குகளைப் போல கையாளப்பட்டது. சிறு குற்றங்களுக்குக் கூட பல்லாண்டு சிறைத்தண்டனை, கட்டவே முடியாத அபராதத் தொகை போன்ற அஸ்திரங்கள் ஏவப்பட்டன. அனானிமஸ் அன்பர்கள் முகமூடி மாயாஜாலக்காரர்களாக இருந்தாலும் பெரும்பான்மையனோர் மிக இளம் வயதினர், அதிமுக்கிய இணையப் பாதுகாப்புத் துறைகளின் பதவிகளை அலங்கரித்தவர்களாகவோ அல்லது அதனை எதிர்நோக்கியவர்களாக இருந்தனர்.
அமெரிக்க அரசின் கடும் தண்டனைகளும், வழக்கில் சிக்கி விட்டால் தங்கள் எதிர்காலம் சாகும்வரை சின்னாபின்னப்படுத்தப்படும் என்பது அவர்களிடையே ஒரு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதில் நாம் முதலில் சந்திக்கப் போகும் நபர் ‘சிக்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 20 வயதாகும் சிகர்துர் தொர்டர்சன். மேலே படத்தில் புத்தம் புதிய பால் டின்னைப் போல புசுபுசுவென விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் உடன் காட்சியளிக்கும் சிறுவன் தான் சிகர்துர். இந்தப் பொடிப்பயல் எப்படி ஜூலியனுடன் என்று உங்கள் மனதில் தோன்றும் அதே கேள்வியும் ஆச்சர்யமும் அனைவருக்கும் தோன்றியது. ஜூலியனுனிருந்தவர்கள் அனைவருமே சின்னஞ்சிறுசு, அறியாத வயசு என்று ஜூலியனை கடுமையாக எச்சரித்தனர். விதி வீதியில் விளையாடியது, ஜூலியன் கேட்கவில்லை.
ஜூலியன் சிகர்துர் மேல் வைத்த நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது. ஐஸ்லாந்தைச் சேர்ந்த சிகர்துர், ஜூலியனைப் போலவே தனிமை நிறைந்த சிறுவனாக வளர்ந்ததும், தன் 12 வயதிலேயே கணிணிகள் மேல் காதல் கொண்டு ஒரு இணையத்தளத்தினை ஹேக் செயத்ததும், 14 வயதில் குடும்பத்துடன் விமானப்பயணம் மேற்கொள்கையில், ஐஸ்லாந்தின் முக்கிய நிதி நிறுவனமான ‘மைல்ஸ்டோன்’னின் முக்கியஸ்தரான தன் சக பயணியின் மடிக்கணிணியினை சரி செய்து கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்திலேயே வேலை கிடைக்கப்பெற்றதும் சிகர்துரின் திறமையைச் சொல்லும். சிகர்துரின் வீரியம் புரியாமல் மைல்ஸ்டோன் நிறுவனம் கொடுத்த வேலை அவர்களின் வலையமைப்பில் சிதறிக்கிடக்கும் அதிமுக்கிய ஆவணங்களைத் தேடிப்பிடித்து அவற்றை முற்றாக அழிப்பது.
சாக்லேட் சாப்பிடும் வயதாக இருந்தாலும், இந்த வேலைக்கு இவ்வளவு காசா என்ற கேள்வி சிகர்துருக்கும் இருந்து வந்தது. தான் அழிக்க வேண்டிய ஆவணங்களை பிரதி எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து அவற்றைப் படிக்க ஆரம்பித்ததும் சிகர்துருக்கு அந்நிறுவனத்தின் பெரிய தலைகள் ஈடுபட்டுள்ள மோசடிகளும், அதில் ஐஸ்லாந்து அரசியல்வாதிகளின் தொடர்பும் புரியவந்தது. இது நடந்த வருடம் 2009, கடும் பொருளாதார நெருக்கடியில் ஐஸ்லாந்து தத்தளித்த நேரம். சிறுவயது முதலே ‘ஏதாவது செய்யனும் பாஸ்’ என்று ஆசை கொண்டிருந்த சிகர்துருக்கு இது அரிய சந்தர்ப்பமாகத் தோன்றியது.
தன் அடையாளத்தினை தெரியப்படுத்தாமல் சுமார் 600 gb அளவிலான கோப்புகளை முக்கிய ஊடகங்களுக்கு சிகர்துர் மூலம் பந்தி வைக்கப்பட்டு, மைல்ஸ்டோன் நிறுவனத்தின் மானம் அடுத்த நாள் தலைப்புச் செய்தியில் சந்தி சிரித்தது. அதுவரை சிறப்பாக அனைத்தையும் கடந்து வந்த சிகர்துர் சந்தித்த முதல் துரோகம் தன் வகுப்புத் தோழன் தன்னைக் காட்டிக் கொடுத்தது தான். மைல்ஸ்டோன் கோப்புகளை பகிரங்கப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, வழக்கும் தொடுக்கப்பட்டது, வாழ்க்கையே வெறுத்துப் போன சிகர்துருக்கு தெரிந்த ஒரு விடிவெள்ளி ஐஸ்லாந்து ஊடகத்தில் பழக்கமான கிறிஸ்டைன்.
இந்த கிறிஸ்டைன் வேறு யாருமல்ல, விக்கிலீக்ஸின் அதிகாரப்பூர்வ ஊடகத்தொடர்பாளர். அந்த காலகட்டத்தல் அப்பொழுது தான் விக்கிலீக்ஸ் சிறிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்த நேரம், சிகர்துர் பகிரங்கப்படுத்திய கோப்புகள் ஐஸ்லாந்தில் புயலைக்கிளப்பியதைக் கண்ட கிறிஸ்டைன், அகில உலகத்தையும் உறைய வைத்த ‘colateral murder’ காணொளியினை வெளியிடும் பணிகளுக்காக ஐஸ்லாந்தில் மையம் கொண்டிருந்த ஜூலியன் அசான்ஞ்சிடம் சிகர்துரை அறிமுகப்படுத்திய அந்த கணம் ஜூலியனுக்கு ஏழரை ஆரம்பித்தது.
தன்னைப் போலவே சிறுபிராயத்தினை கொண்டிருந்ததும், தன் சொந்த மகனின் வயதினை ஒத்திருந்த சிகர்துரிடம் அடுத்த சிலமணி நேரங்களின் தனியே அமர்ந்து சூப் சாப்பிடுமளவுக்கு மனதால் நெருங்கியிருந்தார் ஜூலியன். அடுத்த சில வாரங்களில் ஜூலியனின் நம்பிக்கைகுரிய உள்வட்டத்தில் சிகர்துருக்கு இடமளிக்கப்பட்டது. நினைத்த நேரத்தில் ஜூலியன் தொடர்பு கொள்ள குறியீட்டுமுறைப்படுத்தப்பட்ட கைப்பேசி வழங்கப்பட்டது, ‘colateral murder’ காணொளியின் தயாரிப்புப் பணியிலும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது சிகர்துருக்கு. முதலில் penguinX என்றும், பின்னர் ‘Q’ என்றும் புனைப்பெயரால் சிகர்துரை அனைவரும் அழைக்க ஆரம்பித்திருந்தனர்.
தொடர்து பலபேரும் ஜூலியனிடம், சிகர்துருக்குக் கூடி வரும் முக்கியத்துவத்தினை எச்சரித்தையும் மீறி விக்கிலீக்ஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ விவாதத்தளங்களை(chatroom/forum) நிர்வாகம் செய்யும் பொறுப்பு சிகர்துருக்கு வழங்கப்பட்டது. கேட்க சாதாரணமாக இருந்தாலும் இது நடந்த பொழுது ஸ்வீடனில் ஆடிய கபடி ஆட்டத்திற்காக இன்டர்போல் ஜூலியனைத் தேடிய நேரம், collateral murder காணொளியின் வெளியீட்டுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத்துறை தன் கழுகுக் கண்களை ஜூலியனின் மேல் அழுந்தப் பதித்திருந்த நேரம். விக்கிலீக்ஸின் விவாதத்தளங்களுக்கு வருபவர்கள் அமெரிக்க உளவாளிகளாகக் கூட இருக்கலாம், ஒவ்வொருவரையும் எடை போட்டு அனுமதிக்க வேண்டிய பெரும் பொறுப்பு சிகர்துரின் பிஞ்சுக்கைகளில் வரப்போகும் விபரீதங்களை அறியாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
தொடரும்.
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.
5 comments:
இது என்ன, கிரைம் நாவல் விருவிருப்புடன் போகிறது.
திருவாளர் சுடுதண்ணி அவர்களே... கடந்த மூன்று மாதங்களாக வாரத்திற்கு ஒருதடவையாவது உங்களின் வலைப்பூவிற்கு வந்து பார்த்துவிட்டு செல்வேன்... இப்போது தான் நிம்மதி... தொடருங்கள்... காத்திருப்போம்...!
கடந்த சில மாதங்களாக உங்கள் தளத்திற்கு வந்து வந்து பார்த்து ரொம்ப ஏமாந்து விட்டோம் சார். இனியும் விடாமல் தொடர்ந்து எழுதுங்கள் சார்....
ஊக்கத்திற்கு மிக்க நன்றி @ வடுவூர் குமார்
அன்புக்கு நன்றி @ மகரன், மைக் முனுசாமி. இனி தொடர்ந்து பதிவுகள் வெளிவரும் :).
Dear Sir, Please keep posting sir. I was also visiting your page may times and disappointed.
Post a Comment