Thursday, April 17, 2014

மாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது?



கபில்தேவ் அணியினர் வாங்கி வந்த உலககோப்பையை இந்தியா கொண்டாடி முடித்திருந்த நேரம் 1983ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி நியுயார்க்கில் இருந்து தென்கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்டது அந்த விமானம், செல்லும் வழியில் அலாஸ்கா மாகாணத்தின் அங்க்கரெஜ் நகரத்தில் தரையிறங்கி செல்வதாகத் திட்டம். ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளையும், 269 பயணிகளின் கனவுகளையும் சுமந்து கொண்டு விமானம் ஆகாயத்தில் கலந்தது. அலாஸ்காவில் சென்று தரையிறங்கும் வரை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது. அலாஸ்காவில் இருந்து கிளம்பியதும் விமானிகள் தானியங்கிப் பொறி மூலம் விமானத்தினை செலுத்த ஆரம்பித்தனர். யதார்த்தமாக புவியிடங்காட்டி (GPS) குளறுபடியால் தவறு செய்ய, விமானம் பதார்த்தமாக சோவியத் யூனியனின் வான் எல்லைக்குள் நுழைந்தது. தாங்கள் இப்படி தடம் மாறிச் செல்வதை விமானிகள் உணரவேயில்லை.



தரைப்பகுதிகளை நாம் எப்படி வரைபடத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்து எல்லைகளை நிர்ணயிக்கிறோமோ அதே போல வான்பரப்பிற்கும் வரைபடங்கள் உண்டு. அதில் சிக்கல் என்னவென்றால் வாகனங்களில் செல்லும் போது குழப்பமேற்பட்டால் வழியில் உள்ள தேநீர் கடையில் வழிகேட்டு சரியான் பாதையில் செல்வதென்பது இயலாதென்பதால், புவியிடங்காட்டியே துணை. உலகெங்கும் உள்ள் பயணிகள் விமானங்களுக்கெல்லாம் ஒரே வரைபடம் வழங்கப்படும், அதனை மேற்பார்வையிட்டுத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து அனைவருக்கும் விநியோகிப்பது International Civil Aviatation Organization (ICAO) அமைப்பின் வேலை. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு உச்சத்தில் இருந்த நேரத்தில்,  தடம் மாறிய விமானம் சோவியத் வான் பகுதியில் நுழைந்த நேரம் வழக்கமாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் எல்லையில் உலாப்போகும் நேரம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் தனது ரேடார்கள் மூலம் பூதக்கண்ணாடி அணிந்து சல்லடை போடுவது வழக்கம்.



பதட்டமான காலத்தில் ராணுவ ரேடார் கண்காணிப்புப் பணியில் இருப்பவர்களின் மன அழுத்தம் சொல்லில் வடிக்க முடியாது. இப்படியான திக் திக் நேரத்தில் திடீரென எதிரி நாட்டுப் பகுதியில் இருந்து ஒரு விமானம் தங்கள் வான்பகுதியில் நுழைந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதனை சோவியத் போர் விமானம் செய்தது. தென் கொரியாவிற்குச் சொந்தமான KAL007 சுட்டு வீழ்த்தப்பட்டது. 269 பயணிகள் மற்றும் விமானி, விமானப் பணிக்குழு என அனைவரது உயிரும் கடலில் சங்கமித்துப் போனது. துயரத்திலும் துயரம், அதன் பின் நடந்த சம்பவங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் வீழ்ந்த கடல் பகுதி பயில்வான் நாடான சோவியத் என்பதால் தேடுதல் பணி அத்தனை சுலபமாக கைகூடவில்லை. சுமார் எட்டு நாட்கள் விமானத்திற்கு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை. சோவியத்தும் சுட்டு வீழ்த்தி விட்டு கமுக்கமாக ‘என்ன காந்தி செத்துட்டாரா’ கணக்காய் அனைவரையில் கடலில் காய விட்டது. எட்டு நாட்கள் உப்புக்காற்றில் கண்கள் காய்ந்து கிட்டத்தட்ட அனைவரும் சோர்ந்து போன நிலையில் இதற்கு மேல் சொல்லாவிட்டால் போர் மூளும் அபாயம் இருப்பதை உணர்ந்து சோவியத் அரசு அத்துமீறி வான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் விமானம் எங்கு சென்று விழுந்தது என்று தெரியவில்லை என்று சொல்லி, தேடுதல் பணிக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக அறிவித்தது.



சோவியத் இப்படி அறிவித்ததும் அமெரிக்க அதிபர் ரீகன் இது அநியாயம், அப்பட்டமான படுகொலை என்று கொதித்தெழுந்தார். அமெரிக்கா இவ்விஷயத்தில் படு தீவிரமாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலான பயணிகள் அமெரிக்க பிரஜைகள் என்பதும், பயணிகளில் ஒருவர் ஜார்ஜியா மாகணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் என்பதும் தான். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் அவ்விமானத்தில் பயணம் செய்வதாக இருந்து பின்னர் பயணத்திட்டத்தை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடைசியில் எல்லாரும் சேர்ந்து விமானத்தினைத் தேடலாம் என்று சோவியத் சொல்ல, எந்தப் பகுதியில் தேடுவது என அமெரிக்கா கேட்க, தேவிப்பட்டணத்தில் விழுந்த விமானத்தை, கொட்டாம்பட்டியில் தேடுவோம் என்று கைகாட்டி அனைவருடனும் சேர்ந்து சோவியத்தும் தேடிய அட்டகாசமும் நடந்தேறியது. ஒன்றுமே கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து ஏகப்பட்ட காலணிகளை மட்டும் சோவியத் அரசு இதுதான் எங்கள் தேடுதல் வேட்டையில் கிடைத்தது என்று ஒப்படைத்தது. இந்தக் காலணிகளும், ஜப்பானின் ஹொக்கடோ தீவினில் கரையொதுங்கிய மிகச்சில மனித உடல் பகுதிகளையும் தவிர எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் கழித்து சோவியத் சிதறுண்டு, போரிஸ் எல்சின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் நல்லெண்ண நடவடிக்கையாக விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டத் தகவல் பதிவுகளை வெளியிட்டு விமானத்தின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், விமானத்தில் உயிர் தப்பிய பயணிகளை சோவியத் அரசு மீட்டெடுத்து தங்கள் ரகசிய முகாம்களில் வைத்திருந்தது என்ற கதையும் காற்றில் கலந்து இன்றும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.




முதலில் பாதை மாறி, பின்னர் மலாக்கா ஜலசந்தியில் சமீபத்தில் மாயமான மலேசிய விமானத்தின் சம்பவத்தில், விமானத்தின் தொலைத்தொடர்பு கருவிகள் எதுவும் செயல்பாட்டில் இல்லாமல் பறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இவ்வாறு தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு செவிமடுக்காமல் பறக்கும் பொருள்களனைத்தும் ரேடார் மூலம் கண்காணிப்பில் இருப்பவர்களின் கண்களுக்கு ஏவுகணைகளாகவோ, அல்லது பிரச்சினைக்குரிய/ராணுவ  நடவடிக்கையில் ஈடுபடும் விமானமாகவோ தான் தெரியும். அவ்வாறு கருதப்படும் பட்சத்தில் கண்காணிப்பில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு மேலே சொன்ன சம்பவம் ஒரு உதாரணம். மலேசிய விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்களாக இருந்தாலும், மலாக்கா ஜலசந்தியில் நாம் கூட ஒரு கட்டுமரத்தில் போய் தேடுதல் வேட்டையில் கலந்து கொள்ளுமளவுக்கு வெளிப்படையாக தேடுதல் நடப்பதாலும் சீனாவால் இதற்கு மேல் எந்த அழுத்தமும் கொடுப்பதற்கு இல்லை. ஒரு வேளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் மலேசிய விமானம் மாயமாகி இருந்தால் அதைப் பற்றிய எந்தவொரு தகவலோ  அல்லது விமானத்தின் சிறு தகடோ கூட என்றைக்கும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்பதே உண்மை. விமானம் மாயமான மலாக்கா ஜலசந்தி தொடர்ந்து இந்தியக் கண்காணிப்பில் உள்ள கடல்பகுதி என்பதும், மலாக்கா ஜலசந்தியில் தன் ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு கடந்த சில ஆண்டுகளில் பெரும் ராணுவ முதலீடு இந்திய இராணுவத்தால் செய்யப்பட்டுள்ளதென்பதும், அந்தமான் தீவினில் பெரும் விமானப்படைத்தளமும், வான்பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டிருப்பதும், சுமார் 5000 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைத் தளங்களும் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




பொதுவாக விமான விபத்துகளில் விமானி மரணமடைந்தால், பெரும்பாலும் அவரையே விபத்துக்குக் காரணமாக நேர்ந்து விடப்படுவது வழக்கம். காரணம் விமானங்களை, அதன் இலத்திரனியல் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளின் அசுர பலம். இந்த பலத்தோடு அரசு அதிகாரத்தின் உச்சமான இராணுவமும் சேர்ந்தால் எதுவும் மறைக்கப்படவும், மறக்கடிக்கப்படவும் சாத்தியம். அதுவரை ஊடகங்கள் விமானி சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே பக்கத்தில் இருக்கும் பையனைக் கிள்ளித் துன்புறுத்திய தீவிரவாதி, அவர் கடத்தியிருக்கலாம் என்பது போன்ற மரண மொக்கைகளைச் சகித்து, வரப்போகும் தேர்தலோடு இதனைத் தலைமுழுகி வேறு ஏதாவதொரு பரபரப்புச் செய்தியில் மூழ்கிப் போவோம்.

11 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

puduvaisiva said...

வணக்கம் தல,
நீங்கள் சொல்லுவது போல் ஒரு நிலை ஏற்பட்டால் அந்த விமானத்தின் பயணம் செய்த பயணிகளின் நிலமை கவலை அளிக்கிறது. மேலும் இது தொடர்பாக எனக்கு தெரிந்த வானிலை முனைவரை இதை பற்றி பேசிய போது வான்காந்த புயல் திடீர் தாக்குதலினால் இது போன்று நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

சுடுதண்ணி said...

நன்றி @ நிகண்டு

வணக்கம். நலமா?. வருகைக்கும், தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி @ புதுவை சிவா :).

சீராளன்.வீ said...

உலகே மாயம் ....!
எல்லாம் அவன் செயல்

வவ்வால் said...

அடையாளம் காண முடியா மர்ம பறக்கும் பொருள் என சந்தேகத்தின் அடிப்படையில் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பது ஒரு சாத்தியக்கூறே,ஆனால் அதனை இந்தியா செய்திருக்கும் என்பதாக கட்டுரையை எழுதியிருப்பது தான் பொறுத்தமாக இல்லை.

inmraa sat இன் ACARS சிக்னல் படி அடுத்த நாள் காலை 8.11 வரையில் சுமார் 7 மணி நேரங்கள் விமானம் பறந்திருக்கிறது என்கிறார்கள், மேலும் அவர்கள் அறிந்த பின்க் டேட்டாப்படி தென் கிழக்கு ,வட மேற்கு காரிடாரில் பறந்திருக்க வேண்டும் எனவும் , தென் கிழக்காக இந்தியக்கடல் நோக்கி சென்றிருக்கலாம் என்பதற்கு சாதகமான தகவல்களே உள்ளன.

7 மணி நேரத்துக்கு மலாக்கா சந்தியிலேயே பறந்துக்கொண்டிருந்ததா விமானம்?

அப்படியானால் மலேசிய ராணூவ ரேடாரில் தெரியாமலா போயிற்று?

இரவு 2.21க்கு புலாவ் பரேக் தீவில் மலேசிய ராணுவ ரேடாரில் விமானம் சிக்கியுள்ளது , அப்போ தான் விட்டாங்கன்னா 7 மணி நேரம் அதே ஏரியாவில் வட்டமடித்தாலும் விட்டுவிடுவார்கலா?

# சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியக்கடலில் வைத்து அமெரிக்கா டீகோ கார்சியா தளத்தில் இருந்து சுட்டு இருக்கலாமே?

ரஷ்யா கொரிய விமானத்தினை சுட்டது உட்பட பலவற்றையும் அலசி நானும் மலேசிய விமான மர்மம் பற்றி சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்டுள்ளேன், அதில் பல சாத்தியக்கூறுகளையும் அலசியுள்ளேன்.

http://vovalpaarvai.blogspot.in/2014/04/mh-370the-mystery.html

ராஜ நடராஜன் said...

நலமா?உங்க கான்ஸ்பைரசி தியரியோட வவ்வால் புலம்பிகிட்டே இருக்கும் டீகோ கார்சியா தியரியும் சேர்ந்துகிட்டா இப்ப திகில் செய்தி முடியாது போல இருக்குதே!

முதலில் விமான தொடர்பலை இல்லாமல் போனதுக்கு இருவரும் விளக்கம் போடுங்கள்.அப்புறம் கிழக்கோ போகும் விமானம் மேற்கே பறந்தது பற்றி யோசிக்கலாம்.

சுடுதண்ணி said...

வவ்வால் வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி :). மலாக்கா ஜலசந்தியினை ஒரு பறக்கும் பொருள் இந்தியக் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பது தான் சாரம். இவ்விமானம் மாயமானதிற்கு இந்திய/அமெரிக்க இராணுவம் காரணமாக இருக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே ஜோடிக்கப்பட்டதாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மலாக்கா ஜலசந்தியில் மாயமானது, ஏழு மணி நேரம் பறந்தது உட்பட :).

சுடுதண்ணி said...

நலம் நடராஜன், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டத்தைக் காண்பதில் மகிழ்ச்சி.

காரணம் தெரியாது :). எதைச் சொன்னாலும் அதில் ஏகப்பட்ட "லாம்"கள் கலந்து சொல்வதைத் தவிர வேறு வழியில்லை :).

sornamithran said...

வவ்வால் இருபது பக்கத்துக்கு அலசியிருந்தார்.நீஙக சிம்பிளா இந்தியாமேல பழியைப்போட்டுட்டீங்க...

sornamithran said...
This comment has been removed by the author.
test said...

வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்