Friday, May 30, 2014

இணையம் வெல்வோம் - 17

அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.
வந்த சுவடே தெரியாமல் சிகர்துர் கட்டுக்குலையாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்று முதல் எப்.பி.ஐ உடன் தினமும் நேரடித்தொடர்பில் இருந்தார் சிகர்துர். விக்கிலீக்ஸ் தளங்களில் நடைபெறும் விவாதங்கள், வெளியிடத்தயாராகும் கோப்புகள், சாபு மூலம் கொட்டும் தகவல்கள் அனைத்தும் சிகர்துர் மூலம் நேரலையில் அமெரிக்கா கண்டுகளித்துக் கொண்டிருந்தது.
சாபுவின் கைங்கர்யத்தில் கிடைத்த ஸ்ட்ரட்போர் தகவல்களையே தாளிக்க முடியாமல் இருந்த சிகர்துருக்கு சாபுவிடம் இருந்து சிரிய அரசாங்கத்தின் மின்னஞ்சல் வழங்கியிலிருந்து லவட்டப்பட்ட 96GB அளவிலான மின்னஞ்சல்கள் வந்து சேர்ந்தது. பின்னாளில் சிரியா கோப்புகள் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் அவை வெளியிடப்பட்டு உள்நாட்டு கலவரம் நடந்த அந்த நாட்களில் மேற்கத்திய நாடுகளும், அந்நாட்டு நிறுவனங்களும் போட்ட இரட்டை வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு சிகர்துர் மூலம் தகவல் சொல்லப்பட்டது. இப்படி அமெரிக்காவின் ஜேம்ஸ்பாண்டாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிகர்துருக்கு சங்கு ஒரு தொலைபேசி வடிவில் வந்தது. 

விக்கிலீக்ஸின் ஊடகத் தொடர்பாளரும், சிகர்துரை ஜூலியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவருமான கிறிஸ்டைன் இடமிருந்து வந்த அழைப்பின் மூலம் சிகர்துர் மேல் விக்கிலீக்ஸ் பணம் ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கையாடப்பட்டதாகக் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படப் போவதாக சொல்ல, தனக்கு இனி இங்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்து விக்கிலீக்ஸின் தொடர்பு எல்லைக்கு வெளியே சிகர்துர் என்ற சிட்டுக்குருவி சர்ரென்று பறந்தது.

ஜெரொமி ஹமன்ட்
தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அமெரிக்காவிற்குத் தெரிவித்து இனி தன்னால் தகவல்கள் தர இயலாது என்று சொன்ன சிகர்துர், வாஷிங்டன் வரவழைக்கப்பட்டு மூளையில் இருக்கும் மிச்சச் சொச்சத் தகவல்களும் சுத்தமாக சுரண்டி எடுக்கப்பட்டது. இம்முறை சிகர்துர் மூலம் விக்கிலீக்ஸ் உடன் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர்களும் கவனமாக பதிவு செய்து சக்கையாக அனைத்துத் தகவல்களையும் கறந்து ஐஸ்லாந்தில் துப்பப்பட்டார் சிகர்துர். அடுத்த சில நாட்களில் 2012 மார்ச் மாதம் வரிசையாகக் கைதுக் காட்சிகள் அரங்கேறின. லல்செக் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் சாபுவின் நெருங்கிய கூட்டாளியுமான ஜெரொமி ஹமன்ட் (Jeremy Hammond) அமெரிக்காவிலும், சிகர்துருடன் தொடர்பில் இருந்த கேலா இங்கிலாந்திலும் வைத்து கைது செய்யப்பட, அதன் பின் ஊடகங்களி வெளியான செய்திகளில் சிகர்துருக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. 

16 வயதே ஆன பெண்ணாக ஹேக்கிங் உலகில் அறியப்பட்ட கேலா உண்மையில் 25 வயது ஆண் ரயான் (Ryan Ackroyd) என்பதும், ஜெரோமி ஹமண்ட் குறித்துத் தகவல் கொடுத்தது சாபு தான் என்பதும், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே 2011 ஜூன் மாதம் சாபு அமெரிக்க உளவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆள்காட்டிக் கொடுக்க சம்மதித்த காரணத்தால் ரகசியமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டு ஹேக்கிங் உலகில் உலவ விடப்பட்ட உளவாளி என்பதும் தெரிய வந்த சிகர்துருக்குக் பேரரசின் திரைப்படம் பார்த்ததைப் போன்ற பாதிப்பில் கன்னாபின்னாவென தலைசுற்றிக் கிறங்கினாலும் அப்பொழுது தான் பல விஷயங்கள் தெளிவாகியது.

ரயான் 
ஒவ்வொரு முறையும் சிகர்துர் எப்.பி.ஐ இடம் சாபு குறித்தத் தகவல்கள் அளித்த போதும் மேற்கொண்டு அது குறித்த தகவல்களோ அல்லது கேள்விகளோ சிகர்துரிடம் கேட்கப்படவில்லை. அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளின் வரலாற்றில் மிகப்பெரியத் தகவல் கசிவு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் மற்றும் சிரியாவின் உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் இரட்டை வேடம் போட்ட அத்தனை பேரையும் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் ‘சிரியா கோப்புகள்’ ஆகிய இரண்டும் அமெரிக்க உளவு அமைப்புகளுக்குத் தெரிந்தே விக்கிலீக்ஸிற்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. தன் கோவணம் காற்றில் பறந்தாலும் ஜூலியனைக் கையும் களவுமாக நேரடியாக அமெரிக்க சட்டப்படி குற்றவாளியாக நடக்க வைத்து, சிறைபிடிக்க விரிக்கப்பட்ட வலைதான் இத்தனை நாடங்கங்களும், காட்சிகளும். குற்றத்தினை நடக்காமல் தடுக்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளே அவற்றை நடக்க வேடிக்கைப் பார்த்த விதம் அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், ஜூலியன் மேல் அமெரிக்க வைத்திருக்கும் குறியின் தீவிரத்தையும் புரியவைத்தது.
சாபுவிற்கு சற்றும் குறைவில்லாத ஹேக்கிங் நிபுணரும், தீவிர  இணையப் போராளியுமான ஜெரொமி ஹமன்ட், ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் வெளியீட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், சாபுவுடன் தொடர்பில் இருந்த கேலா/ரயான் 30 மாத சிறை தண்டனையும் அனுபவித்துக் கொண்டிருப்பது உபதகவல். அது வரை ஏகப்பட்ட சட்டச்சிக்கல்களைச் சந்தித்தாலும், சளைக்காமல் சமாளித்து லண்டனில் பிணையில் வெளிவந்திருந்த ஜூலியன் மேற்படி சம்பவங்களுக்குப் பின்னர் இதற்கு மேல் ரத்த பூமியில் உலவ முடியாது என்று முடிவு செய்து ஈக்வடர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கேட்டு குடியறியதில் இருந்து இவற்றின் பின்விளைவுகளால் ஜூலியன் தலைக்கு வரவிருந்த ஆபத்தினை உணரலாம்.  அன்று தூதரகத்தின் உள்நுழைந்த ஜூலியன் இன்றும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கையாடல் செய்ததாகச் சொல்லப்பட்ட பணம் ஜூலியனின் அனுமதியுடன் தன் கைச்செலவுக்கு எடுத்தது என்று சிகர்துரும், சிகர்துர் சொல்லும் அளவுக்கு ஜூலியனோ அல்லது விக்கிலீக்ஸ் நபர்கள் யாருமோ சிகர்துரை அளவுக்கு மீறி நம்பவில்லை என்று க்றிஸ்டைனும் முன்னுக்குப் பின் முரணாக சொன்னாலும், விக்கிலீக்ஸ் குறித்து சிகர்துர் தான் எப்.பி.ஐ இடம் போட்டுக் கொடுத்தது என்று ஜனவரி மாதம் 2013க்குப் பிறகு தான் ஜூலியனுக்கும், க்றிஸ்டைனுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதமானது, தகவல் உபயம் க்றிஸ்டைனின் நண்பரான ஐஸ்லாந்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்.

2012 மார்ச் மாதத்தின் கைதுச் சூறாவளிக்குப் பிறகு பல மர்ம மரணங்கள் இணைய உலகை உலுக்கத் தொடங்கின. அவர்கள் அனைவருமே ஒரு வகையில் இணைய சுதந்திரத்தில் பாதுகாப்பின் பெயரில் கைவைக்கும் அமெரிக்க அரசிற்கு எதிராகக் கொடிபிடித்தவர்கள். 

எப்.பி.ஐ , என்.எஸ்.ஏ மற்றும் சி.ஐ.ஏ அமைப்புகளின் கையில் அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் உடன் தொடர்புடையவர்களாக மாட்டியவர்கள் யார் யாரென்பது சம்பந்தப்பட்ட தலைகளுக்கே வெளிச்சம். சில வேளை யாரென்றே தெரியாமல் தங்கள் அடையாளங்களை மறைத்து செயல்பட்டவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அவ்வாறு மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பத்திரிக்கையாளர் மெக்கேல் ஹேஸ்டிங், நாம் முதன் முதலில் பார்த்த இணைய ஆரவலர் ஆரோன் ஸ்வார்ட்ஸ், உலகப்புகழ் பெற்ற ஹேக்கிங் மன்னன் பெர்னபி ஜக் ஆகியோர். இவர்கள் அனைவரின் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க உளவு அமைப்புகளால் விசாரணைக்கோ அல்லது கண்காணிப்பிற்கோ உள்ளாக்கப் பட்டவர்கள்.

இணையப்போரளிகளுடன் கண்ணாமூச்சி ஆடி, ஆடி அலுப்பில் இருந்த அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது சாபுவின் கைது. ஊரே வியந்து பார்க்கும் ஹேக்கிங் சாகசக்காரரான சாபு, கைதவறி தன் அடையாளத்தினை மறைக்காமல், தனது உண்மையான வலையமைப்பு எண்ணுடன் இணையத்தில் ஒரே ஒரு முறை இணைந்தது தான் மாட்டிகொண்டதற்கான காரணம். அத்தனை துல்லியமாக வைத்த குறி தப்பாமல் இணையத்தில் யாரையும் கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு சாபுவின் சம்பவம் சாட்சி. சிகர்துருக்கோ அல்லது சாபுவுக்கோ தாங்கள் அளித்த தகவல்கள் மூலம் நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை. இதில் தப்பியவர்கள் ஈக்வடர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த முன்னெச்சரிக்கைப் புலியான ஜூலியனும், ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் எட்வர் ஸ்நோடனும் மட்டுமே.

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

4 comments:

Thomas Ruban said...

சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்..
தன்னுடைய நிழலைக் கூட நம்ப முடியாதுப் போலிருக்கு,
நன்றி.

Anonymous said...

Interesting.....
Waiting for next episode....

srinivasan said...

சந்தர்ப்பம் கிடைக்காத வரையில் அனைவரும் நல்லவர்களே .ஆகா ! அருமை ! தொடர்கிறேன்!

மகரன் said...

எந்தவொரு கூட்டத்திலும் துரோகிகள் இருப்பார்கள் என்பதற்கு விக்கிலீக்ஸ்'உம் விதிவிலக்கல்லவே...? தொடருங்கள்... காத்திருக்கின்றோம்..!