Tuesday, November 18, 2014

இணையம் வெல்வோம் - 22

 
மடை திறந்த வெள்ளம் போல் காலை வணக்கம், இன்றைய ராசிபலன், இன்றைய தத்துவம் என்று வலம்புரி ஜானின் இடத்தினை நிரப்பியபடி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் சமூகவலை இணையத்தளங்கள் ஒவ்வொரு மணித்துளியும் உட்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கையும், உலகம் முழுக்க உள்ள அவற்றின் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம்.
அதுவே கூட்டத்தில் கும்மியடிக்கும் தர்ம அடிப் பாரம்பரியத்தின் வழிவந்த நம் சமூகத்திற்கு மிகப்பெரிய மனதைரியத்தினை இணையத்தில் அளிக்கிறது. அந்த அசட்டு தைரியம் தான் அடிமனதின் இருட்டுப் பக்கங்களை இணையத்தில் வார்த்தைகளாக உலவ விட்டு அழகு பார்க்கிறது.
நேருக்கு நேர் சந்திக்கும் போது கண்களைப் பார்த்து பேசக்கூட பயப்படும் அம்பிகள் கேட்கக்கூசும் வார்த்தைகளை இணையத்தில் அள்ளி வீசி ஆனந்தமடையும் அந்நியன்களாய் மாறிப்போகிறார்கள். இவர்களின் பலமே, இவர்களின் இணைய நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்படுபவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தான். மாலை முரசில் பரிட்சை எண் இல்லையென்று அன்றே தற்கொலை செய்து, மறுநாள் காலை தினசரிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் சம்பவங்கள் நம் சமூகத்திற்கு புதிதில்லை. அச்சு ஊடகக் காலகட்டத்திலிருந்தே, ஊடகத்தில் சொல்லி விட்டால் அதனை மறுபேச்சின்றி உண்மையென்று நம்பும் பழக்கத்தில் ஊறிப்போன நமக்கு, யாரோ முகந்தெரியாதவன் இணையத்தில் உங்களை அயோக்கியன் என்று பதிவு செய்து விட்டால், ‘கம்ப்யூட்டரே சொல்லுதாம்ல, அவன் அப்படி, இப்படின்னு’ என்று கும்மியடிக்க ஒன்று கூடும் ஊரிது.
இப்படிப்பட்ட தேசத்தில், தினசரி வாழ்க்கையில் கவலைப்பட ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் பொழுது, கடல் போன்ற இணையத்தில் எவன் என்னைப் பற்றி என்ன சொன்னால் எனக்கென்ன, போங்கடா போங்க என்று பிளிறும் அன்பர்கள் சற்று தள்ளி நிற்கவும். எதிர்காலத்தில் சர்வமும் இணையமெனும் ஜோதியில் ஐக்கியமாகும் பொழுது, எனது மகனோ, பேரனோ, ஒட்டு மொத்த குடும்பத்தில் வருங்கால சந்ததியினரும் இணையத்தில் என்னைப் பற்றித் தேடும் பொழுது என்னைப் பற்றி அசிங்கமாக யாராவது எழுதிய விஷயங்களைப் படித்துத் தவறாக நினைத்து விடக்கூடாது, வரலாறு மிக முக்கியம் என்று கருதும் புலிகேசிகளுக்கு ஒரு இனிய செய்தி. ஒட்டு மொத்த சமூகவலைதளங்களிலும் உங்களைப் பற்றி யார், யார் என்னென்னெ பொதுவில் பகிர்கிறார்கள் என்பதை நீங்கள் சுடச்சுட கண்காணிக்க முடியும். உங்களின்  பயனாளர் பெயரினை வைத்து கண்காணிப்பது சாத்தியமென்றாலும், பயனாளர் பெயரினைக் குறிப்பிடாது உங்களைப் பற்றி பேசும் பட்சத்தில், நீங்கள் இராமசாமியாகவோ அல்லது குப்புசாமியாகவோ இருந்துவிட்டால் கடினம். அப்படியின்றி உங்கள் இயற்பெயரோ அல்லது பட்டப்பெயரோ தனித்துவமாக புரட்சி இடி, வறட்சி வள்ளல் என்றோ அல்லது ரஷ்ய எலக்கியத்தில் நீங்கள் மூழ்கி முத்தெடுத்த மூத்தவர் என்பதைக் குறிக்கும் விதமாக அயோடக்ஸ்கி அல்லது ராவாவிஸ்கி என்று இருந்தால் மிகச் சிறப்பு.
இதற்கென ஏகப்பட்டச் சிறப்பு மென்பொருட்கள் பரவலாக கிடைக்கின்றன. சரிதா நாயர்களும், ராய் லட்சுமிகளும் இணையத்தில் நம்மை தினமும் ஆக்கிரமித்துக் கொள்வதால் நம் கண்களுக்கு தட்டுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான மென்பொருட்கள் அவற்றின் அடிப்படைக் கண்காணிப்பு வசதிகளை இலவசமாகவே தருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி (உ.தா: HootSuite). சமூகவலைத்தளங்களில் யாராவது ஒரு நபர் ‘தங்கராசு பெண்பித்தன், தங்கராசு பெண்பித்தன்’ என்று தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டேயிருந்தால் குறிப்பிட்ட நாளில் தங்கராசுவைப் பற்றித் தெரிந்து கொள்ள தேடுபொறிகளில் தங்கராசு என்று நீங்கள் தட்டச்சி முடிக்கும் முன்பே தங்கராசு பெண்பித்தன் என்று தேடுபொறிகள் கைகொட்டிச் சிரிக்கும் வாய்ப்பு மிக அதிகம். இது போன்ற மென்பொருட்கள் பெரும்பாலும் மிகப்பெரும் வியாபார நிறுவனங்கள் மற்றும் பணப்பைக் கனமான கணவான்களினாலும், சீமாட்டிகளாலும் பயன்படுத்தப் படுகின்றன.
உதாரணத்திற்கு உலகின் முன்னணி நிறுவனத்தின் பொருளைப் பற்றி நீங்கள் அவதூறாகவோ அல்லது உண்மையானக் குறைபாடுகளைப் பற்றியோ பதிவிட்டுப் பாருங்கள், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு உண்மையெனில் நிவாரணமும், பொய்யெனில் சட்டச்சிக்கல்களையும் தூவி விட்டு மாயமாகிவிடுவார்கள். இது போன்ற நுணுக்கங்கள் அதிகாரமிக்க அரசியல் தலைவர்களுக்கு, அதுவும் கடுமையான இணையச்சட்டங்கள் இருக்கும் நாடுகளில் தெரியவந்து ஒருவேளை கண்காணிக்க ஆரம்பித்தால், தன் வீட்டு கட்டிலுக்கடியில் படுத்துக் கொண்டு “டேய் பிரதமரே வாடா இங்கே” என்று பதிவிட்டு முடிக்கும் முன்பே உங்கள் வீட்டு கதவினை வால்டர் தேவாரம்களும், அலெக்ஸ் பாண்டியன்களும் பலமாகத் தட்டும் சத்தம் உங்கள் காதுகளில் இன்பத்தேனாய் பாயும் சாத்தியங்கள் உண்டு. எனவே அடுத்தவர்களைப் பற்றி இணையத்துல் எழுதும் பொழுது அடக்கி வாசிப்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.
HootSuite போன்ற மென்பொருட்களில் மூலம் நீங்கள் கண்காணிக்க விரும்பும் குறிப்பிட்ட வார்த்தைகளை உள்ளிட்டால் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களில் பொதுவில் பேசுகிறார்கள் என்று கண்காணிக்க முடியும். உதாரணத்திற்கு இன்று ஒரு திரைப்படம் வெளியாகிறது, அது குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் படத்தின் பெயரை வைத்து பேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ யாரெல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று கண்காணிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தினைப் பற்றித் திரும்பத் திரும்ப இணையத்தில் பதிவிடும் போது அது தேடுபொறிகளில் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும் என்பதனைப் புரிந்து கொள்ளவும். சொற்போர் விவாதங்கள், பட்டி மன்றங்கள் முதல் டீக்கடை அரட்டை, குழாயடிச் சண்டை வரை மிக ஆழமான மரபணுப் படிமங்களைக் கொண்ட தமிழினம், கடைசி வரை சத்தமாக பேசுகிறவரே வெற்றி பெற்றவர் என்னும் சித்தாந்தத்தினை இணையத்திலும் கொண்டாடி கும்மாளமிட்டு கொண்டிருக்கிறது. இணையத்தளங்களில் தகவல் பதிவுகளை விட அவற்றுக்கு வரும் விவாதப் பதிவுகளைப் பார்த்தால் நம் தரம் எளிதில் விளங்கும். இணையத்தில் விவாதிப்பதின் மூலம் உடனடியாக நாத்திகனை ஆத்திகனாகவோ, ஆத்திகனை நாத்திகனாகவோ மாற்றி விடத்துடிக்கும் ஜல்லிக்கட்டுகள் இங்கே ஏராளம். உங்களைப் பற்றி யாரும் அவதூறாகப் பேசினால்,  முடியும் பட்சத்தில் ஒரு முறை மறுப்பு சொல்லிவிட்டுப் புறந்தள்ளுங்கள். தொந்திரவு தொடர்ந்தால் சட்டத்தின் உதவியினை நாடுங்கள். அதை விடுத்து உங்கள் வீரத்தினை இணையத்தில் விவாதக் களமாடுவதில் காண்பிக்க நினைத்து, எதிராளி ஒரு முறை செய்த அவதூறு பதிவினை நீங்களே பலமுறை உங்களையறியாமல் பதிவு செய்யும் தவறினைத் தவிர்ப்பது நன்று.

சல்லிசாக சீனத்தயாரிப்புகளும், இணைய இணைப்பும், இலவச பயனாளர்க் கணக்கும் கிடைக்கிறதென்ற ஒரே காரணத்திற்காக சரியான தொழில்நுட்பப் புரிதலின்று இணைய ஜோதியில் கலக்கத் துடிக்கும் அன்பர்களுக்கும், விளக்கின் வெளிச்சத்தில் மாய்ந்து போகும் விட்டில் பூச்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. உணர்ச்சிவயப்பட்ட தமிழ்ச்சமூகம் பேஸ்புக் அல்லது டிவிட்டர் பதிவுகளுக்காக அடிதடி, கத்திக்குத்து என்று களமிறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதைத் தவிர்க்க ஒரே வழி, இணையம் குறித்தான சரியானப் புரிதலை சாமனியருக்கும் உருவாக்குவது தான். எந்தவொரு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் போதும் சமூகம் இது போன்ற சிக்கல்களை சந்திதிருந்த்தாலும், இணையம் அனைத்து மக்களுக்கும் பரவலாகும் வேகத்தினைக் கணக்கில் கொள்ளும் போது மிக முக்கியத்துவம் பெறுகிறது.

நாங்கள் விக்கிலீக்ஸ் ஜூலியன்,  ஸ்நோடன், பர்னபி, ஆரொன் ஸ்வார்ட்ஸ் போன்று இணையத்தில் மூலம் சமூக மாற்றங்கள் வேண்டி பயணிக்கப் போவதில்லை, ஒரு சாதாரண சக மனிதனாக இணையத்தினை இனிய அனுபவமாக, அடிப்படைத் தொழில்நுட்பப் புரிதலோடு பிரச்சினைகளின்றி கடந்து சென்றால் போதும், அதற்கென்ன வழிமுறைகள் ஆலோசனைகள்?.

தொடர்வோம்……

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

4 comments:

srinivasan said...

சமூக வலைத்தளங்களில் திரைப்பட துறை சார்ந்த சொற்களப்போர் தான் அதிகம் இவற்றை தள்ளி பார்தால் பலருக்கு ஒன்றுமில்லாத வெற்றிடமாகவே இருக்கும். வழக்கமான நகைச்சுவை தோரணையுடன் வந்திருக்கிறது தொடர்கிறேன் ...

Anonymous said...

//தன் வீட்டு கட்டிலுக்கடியில் படுத்துக் கொண்டு “...................” என்று பதிவிட்டு முடிக்கும் முன்பே உங்கள் வீட்டு கதவினை வால்டர் தேவாரம்களும்,//

Your humorous way of narrating the article is excellent.

Nice as usual.

சக்தி வேல் said...

என் பெயர் சக்திவேல் .நான் தொடர்ந்து உங்களின் எழுத்துகளை படித்து வருகிறேன்; உங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்னுடைய எண் 9043463323
email: sakthi.movie@gmail.com

jsksathiya said...

Miga sirappana pathuivu!!!!