Sunday, February 28, 2010

இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1

உலாவியில் ஒரு இணையத்தளத்தின் முகவரியைத் தட்டிவிட்டதும், அத்தளத்தின் பக்கங்கள் கணினித்திரையை நிரப்பும் அந்த நொடியில் தொழில்நுட்பங்கள் நடத்தும் அதிரடித் திருப்பங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஈஸ்ட்மென் வண்ண திரைக்காவியத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

இணையதள முகவரி என்பது பயனாளர்களின் வசதிக்காக மட்டுமே. உலாவியில் உள்ளிட்ட பிறகு, அது வலையிணைப்பு முகவர் எண்களாக (IP address) மாற்றப்பட்டே அதன் பக்கங்கள் பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட செல்பேசிகளின் தொலைபேசிப் புத்தகம் (phone books) போல, எண்களை நினைவில் நிறுத்தும் சிரமத்தை தவிர்த்துக் கொடுக்கும் எளிய வழிமுறை. இவ்விடத்தில் வலையிணைப்பு முகவர் எண்களின் கட்டமைப்பை நினைவில் கொள்க (xxx.xxx.xxx.xxx). மிக எளிதாகத் தோன்றினாலும், இதற்குப்பின் எவ்வளவு தொழிநுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன, எத்தனை பேரின் மெனக்கெடல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இப்பதிவு. நாம் செல்லும் தளத்தின் முகவர் எண் என்பது தளத்தின் வழங்கியைக் குறிக்கும் (web server), அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது?. அதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நமக்கு நாமே திட்டத்தின் படி start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ping என்ற கட்டளையுடன் தளத்தின் முகவரியை உள்ளிடவும். (பார்க்க படம்).


இரண்டு, பாரம்பரிய வழக்கப்படி நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு தளங்களின் முகவர் எண்ணைக் கண்டுபிடிக்கும் வசதியை ஏராளமான தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. சமயத்தில் முகவர் எண்ணுடன் அதன் இருப்பிடத்தையும் சேர்த்து வழங்குவது கூடுதல் சிறப்பு. உ.தா. http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php . மூன்று, தளத்தை நடத்துபவரை தொடர்பு கொண்டு கேட்பதன் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம் :).இணையம் என்னும் கடலில் கோடிக்கணக்கான தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய இணையத்தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நூறு பெயர்கள் செயலிழக்கின்றன. இவற்றுக்கான முகவர் எண்களை யார் பராமரிக்கிறார்கள், எப்படி பழையன கழிதலையும், புதியன புகுதலையும் அவற்றிற்கேற்ப பிரதிபலிக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தோன்றுவது இயல்பே.


இணைய தள முகவரிகளைப் பதிவு செய்பவர்கள் (domain name registrars), இணைய தள முகவரிகளையும் அவற்றுக்கான முகவர் எண்களை நிர்வகிக்கும் இணையத் தகவல் மையங்கள் (network information centers - nic), இணைய முகவரிகளையும், அவற்றுக்கான முகவர் எண்களையும் சேமித்து வைத்து தேவைக்கேற்ப பயனளார்களுக்கு இணைய பக்கங்களை வழங்கத் துணை புரியும் இணைய முகவரி வழங்கிகள் (domain name system servers - dns servers), மைய வழங்கிகள் மற்றும் இவையனைத்தையும் கட்டி மேய்க்கும் ICANN (internet corporation for assigned names and numbers) இவர்களனைவரின் கூட்டு முயற்சியில் தான் நாம் முதுகுக்கு ஏதுவான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வசதியாக உலாவியில் முகவரியைக் கொடுத்து விட்டு இணையப் பக்கங்களைப் பெறுகிறோம்.

மேற்சொன்ன குழுவினர்களின் தலையாய வேலையே, நாள்தோறும் புத்தம் புதிதாக மலரும் இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் முகவர் எண்களை உலகமெங்கும் உள்ள இணைய முகவரி வழங்கிகளுக்குப் பரப்புவதும் (dns propogation), ஒரு பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதள முகவரிகள் பதியப்படாமல் பார்த்துக் கொள்வதும் தான். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மொத்தமும் அலங்கோலமாக வாய்ப்புகள் அதிகம். ஒரு புதிய இணையதளம் ஆரம்பித்து அது உலகம் முழுவதும் பார்வைக்குக் கிடைக்க அதிக பட்சம் மூன்று நாட்களாகலாம் :). அது பார்வையிடப்படும் பயனாளரின் இணைப்பில் உள்ள் இணைய முகவரி வழங்கிகளின் செயல்பாட்டைப் பொருத்தது.

இப்பிரிவினர் அனைவரும் ஒரு வரையறுக்கப்பட்ட வலையமைப்பில் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர்?, அவர்தம் செயல்பாடுகள் என்னென்ன?, நாம் வலையிணைப்புப் பெறும் நிறுவனங்களின் பங்கு என்ன? இணையதள முகவரியின் வகைகள் என்ன?, போன்ற பல என்ன, என்னக்களைப் பற்றி அடுத்த பகுதியில்...

16 comments:

அண்ணாமலையான் said...

நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா, இவ்ளோ விஷயம் இருக்கா.... தொடருங்கள்.

சென்ஷி said...

ரொம்ப நாள் சந்தேகமாவே இருந்தது. எப்படியும் நீங்க எழுதிடுவீங்கன்னு தெரியும். காத்திருந்தது வீண் போகல :))

அடுத்த பாகத்திற்காக காத்திருப்போரில் சேருகிறேன்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை .........

(Really Fantastic tech post in தமிழ்)

puduvaisiva said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே !

பயனுள்ள தகவல்கள் நன்றி & ஓட்டும் போட்டாச்சு

சுடுதண்ணி said...

நன்றி அண்ணாமலையான் :)

ஊக்கத்துக்கு நன்றி @ சைவகொத்துப்பரோட்டா :)

நம்பிக்கைக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சென்ஷி :)

நன்றி உலவு :)

சிவா தம்பீ :D... மிக்க நன்றி :)

gulf-tamilan said...

நன்றி!!தொடருங்கள்

சுடுதண்ணி said...

நன்றி தமிழன் :). தொடர்ந்து வாங்க..

Robin said...

உபயோகமான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன் அருணா said...

உபயோகமான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.

ராஜ நடராஜன் said...

கண்ணுல மாட்டீனீங்களா இன்னைக்கு!வருகிறேன் மீண்டும்.

நவன் said...

Topics that you are selecting and the the language you are using is makes it!....... I love it. Keep going!

வடுவூர் குமார் said...

இப்ப‌டித்தான் பிங் ப‌ண்ண‌னுமா? ப‌ட‌ம் போட்டிருந்த‌தால் சுல‌ப‌மாக‌ புரிந்த‌து.

சுடுதண்ணி said...

நன்றி ராபின் :)

நன்றி அருணா :)

தொடர்ந்து வாங்க ராஜ நடராஜன் :). ஊக்கத்துக்கு நன்றி..

ஊக்கத்துக்கு மிக்க நன்றி நவன் :). தொடர்ந்து வாங்க..

மிக்க நன்றி குமார் :).

பின்னூட்டங்களினாலும், வாக்குகளாலும் ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள் :)

Dhamu said...

Good Information.

John David said...

இந்த பதிவு நிளவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்