Friday, November 26, 2010

பணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை

பொருளாதாரம் தேயும் சமயங்களில் விரக்தியில் அனேகம் பேர் சொல்லும் வசனம், ' பணம் என்ன மரத்துலயா காய்க்குது'. இதை எப்படியோ உளவுபார்க்கும் செயற்கைக்கோள்கள் மூலம் ஒட்டுக்கேட்ட வெள்ளைகாரன் கண்டுபிடிச்சது தான் ATM (Automatic Teller/Banking Machine) என்கிற தானியங்கி இயந்திரம். உண்மையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்து நெம்பி விட்டது காசு போட்டால் மிட்டாய் கொடுக்கும் இயந்திரங்கள். ATM என்றால் தூரத்தில் நின்று என்னவோ, ஏதோ என்று பார்த்து விட்டு நம்பிக்கையில்லாமல் நகர்ந்து சென்ற காலங்கள் மலையேறி, இன்று உபயோகிக்காதவர்கள் மிக மிகக் குறைவெனும் விதத்தில் மக்களின் நம்பிக்கையை காலத்தால் வென்ற சாதனை நாயகன்.என்ன தான் இருந்தாலும் இதன் வெற்றியில், வாடிக்கையாளர்களைப் பல மணி நேரம் வரிசையில் நிற்க விட்டு வெறியேற்றி அனுப்பும் வங்கிகள் முக்கியப் பங்காற்றி, புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை செவ்வனே செய்து முடித்ததை நாம் மறுக்க முடியாது :). நேரே ATM சென்று அட்டையை உள்ளிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் அவசர யுகத்தில் அது எப்படி செயல்படுகிறது, எவ்வளவு தூரம் பாதுகாப்பானது, அதன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தான அறிமுகமே இப்பதிவு.முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ATM என்பது ஒரு வெற்றுக் கணினி மட்டுமே (dumb system). உங்கள் அட்டையினை உள்வாங்கிக் கொண்டதும், அட்டையின் தகவல்களைப் படித்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய வலையமைப்பின் வழங்கியினைத் தொடர்பு கொண்டு உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் ஆகியவை சரிதானா என்று உறுதி செய்யும். பின்னர் நம் பணப்பறிமாற்றத்தினை உங்கள் வங்கிக்கணக்கின் பண இருப்பினை வைத்து உறுதி செய்து பணத்தினை வழங்கும். இந்த மொத்த நடவடிக்கைகளும் முடியும் வரை மட்டுமே உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் தற்காலிகமாக ATM கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். அதன்பின் அவை அழிக்கப்பட்டு விடும். பணத்தாள்களை வெளியிடும் போது அவற்றின் தடிமனை வைத்தே கணக்கிடப்படும், தடிமன் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவை தனியே ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பரமாரிப்பு மற்றும் பணத்தாள்களை வைப்பதற்காக வரும் அதிகாரிகள் அவ்வாறு ஒதுக்கப்பட்ட தாள்களை சேகரித்து மறுஆய்வுக்கு எடுத்துச் செல்வர்.மின்னஞ்சல், கணினி மற்றும் இதர இணைய வசதிகளுக்கே கடவுச்சொலை அப்படி வை, இப்படி வை என்று ஏகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் கணினியுலகம், ஒருவரது வங்கிக்கணக்கினை கையாளும் ATM இயந்திரங்களுக்கு வெறும் நான்கு இலக்கங்கள் மட்டுமே வைத்திருப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?. நான்கு இலக்கங்கள் பாதுகாப்பானைவையே அல்ல, மொத்தம் பத்தாயிரம் கடவுச்சொற்களே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் பாவிக்கப்படுகிறது. அதனால் தான் முதல் மூன்று முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படுகிறது. அப்படியும் முதல் மூன்று முறைக்குள்ளேயே உங்கள் கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு எடுக்கப்படும் பணத்திற்கென்று அளவுமுறை வைத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பணம் கொஞ்சம், கொஞ்சமாக மட்டும் நிதானமாகக் களவாடப்படும். அதற்குள் விழிப்படைந்து வங்கியில் முறையிட்டு பணத்தைக் காப்பாற்றிக் கொள்வது நம் திறமை.


ஒவ்வொரு வங்கியும் அவர்களுக்கென்று ஒரு ஆரம்பக் கடவுச்சொல் வைத்திருப்பார்கள் (0000, 1234), முதல் முறை உங்களிடம் அட்டை வழங்கப்படும் போது அந்த கடவுச்சொல் தான் இருக்கும், பின்பு நாம் அதனை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி நாம் மாற்றும் எண்ணுக்கும், ஆரம்பக் கடவுச்சொல் எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் (offset value), உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ள வழங்கியில் சேமிக்கப்படும். ஒவ்வொரும் முறை நீங்கள் ATM உபயோகிக்கும் போதும் உங்கள் கடவுச்சொல் மற்றும் வங்கியின் ஆரம்பக் கடவுச்சொல் ஆகிய இரண்டும் இடையே உள்ள வித்தியாசம் தான் சரிபார்க்கப் படுகிறதே தவிர நேரடியாக உங்கள் கடவுச்சொல் சரிபார்க்கப்படுவதில்லை என்பது உபரித் தகவல். சர்வதேச தரக்கோட்ப்பாட்டின் படி 4 முதல் 12 இலக்கங்கள் வரை கடவுச்சொல்லாக பயன்படுத்தலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இருந்தாலும் இத்தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஷெப்பர்ட் பரன், தன் சோதனை முயற்சிகளின் போது தன் மனைவியின் உதவியினை நாடினார். ஷெப்பர்டின் மனைவியோ 'என்னால 4 தான் ஞாபகத்துல வச்சுக்க முடியும்' என்று வெட்டு ஒன்று துண்டு நான்காக சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி தலையாட்டிய ஷெப்பர்டின் சம்சார விசுவாசத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு இன்றும் நான்கு இலக்கங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதிவிலக்காக ஸ்விஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலக்கங்கள் கொண்ட கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவதாகக் கேள்வி. நீங்கள் அதுபோன்ற இடங்களில் இருந்து வாசிப்பவராக இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச் சென்றால் சிறப்பு, சொல்லாமல் சென்றால் அதனினும் சிறப்பு :). மேலும் திரைகடலோடும் காலங்களில் நாணய மாற்றுக்கு ATM பயன்படுத்துவது லாபகரமானதென்றாலும் அதற்கு வங்கி உங்கள் மீது வி(மி)திக்கும் சேவைக் கட்டணத்தைப் பொறுத்துப் பயன்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறது.


தொழில்நுட்ப விவரங்களையும் தாண்டி சில பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவது சாலவும் நன்று. உங்கள் வங்கி அட்டையின் பின்பக்கத்திலேயே மிகத் தெளிவாக, அழகான கையெழுத்தில் கடவுச் சொல்லை எழுதி வைப்பது, ATM இயந்திரத்தின் அருகே சென்று நின்று கொண்டு, வில்லங்கமானவர்கள் தாக்குவதற்கு வசதியாக தலை முழுவதையும் உங்கள் பர்ஸுக்குள் நுழைத்து அட்டையைத் தேடி கொண்டிருப்பது, விளக்கு வெளிச்சம் அதிகமில்லாத ATM இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்றவை 'தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட தானைத் தலைவன்' என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்பட ஏதுவாயிருக்கச் செய்யும் செயல்கள். போலி அட்டைகள் உருவாக்குவதில் நாம் இளம் விஞ்ஞானிகள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதால், அடிக்கடி ATMல் புழங்கும் அன்பர்கள், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கின் பணப்பறிமாற்றத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலதிக பாதுகாப்பு அறிவுரைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்து கொள்ளும் வாசர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள் அதிரடிப் பரிசாக வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இப்பதிவு நிறைவடைகிறது.அடுத்த முறை ATM இயந்திரத்தின் அருகில் சென்றதும் சுடுதண்ணி நினைவுக்கு வந்தால் உடனே தொடர்பு கொண்டு, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் :). நன்றி.

36 comments:

ஜோதிஜி said...

முதலில் வணக்கத்த வச்சுக்கிறேன்.

ஜோதிஜி said...

என்னமோ இதுக்கு முன்னாடி இந்த தானியிங்கி அட்டை சேவை பற்றி பல பதிவுகள் எழுதிய போல இத்துடன் நிறைவு பெறுகிறது என்று எழுதியிருக்கீங்க.

என்னவொரு தெனாவெட்டு? (?)

முதலில் இந்த பதிவு தனிப்பட்ட முறையில் எனக்கு பிரயோஜனமானது. காரணம் கண்டுபிடித்த பகவான் பொஞ்சாதிக்கிட்ட கேட்ட மாதிரி இது மாதிரி விசயங்களை வீட்டில் இருக்கும் உள்துறை அமைச்சரிடம் கடந்து 6 மாதங்களாக கொடுத்தாகி விட்டது. ஆனால் உள்ளே நுழையும் போது அவர் பயப்படும் விதத்தை பார்க்கும் பொண்ணு பார்க்க வரும் போது கூட தெனாவட்டா தானே நின்னே. ஏன் இங்க மட்டும் இத்தனை பயமென்று? கலாய்த்தாலும் பயந்து நடுங்கி போகாமல் தவிர்த்துக் கொண்டுருக்கிறார். இதுக்கு ஏதாவது "மனநலம்" ஆலோசனை உண்டா நண்பா?

அடுத்து?

ஜோதிஜி said...

இங்குள்ள அரசாங்க வங்கிகளில் ஆடு மாடுகள் கூட எளிதாக நுழைந்து விடும் அளவிற்கு ரொம்பவே இந்த அறையை பாதுகாக்குறாங்க. உள்ளே அந்த சிறிய தாளை கசக்கி தூக்கி எறிந்து விட்டு குப்பைகூளமாக மாற்றி வைப்பதற்கு அடுத்த மனநலம் (?) கேள்விக்கு பதில் கொடுங்க.

தனியார் அரசாங்க வங்கி இரண்டிலும் ஒரே ஒற்றுமை இருக்கு.

கொடுக்க வேண்டிய பணத்தை இந்த எந்திரம் துப்பாவிட்டாலும் எடுத்தது போல டக்கென்று வரவு வைத்து விடுகிறது. அப்புறம் கதறிக்கொண்டு அவர்களிடம் கேட்கும் போது அந்த பஞ்சாயத்து முடிய பகல்பொழுது ஆகிவிடுகின்றது.

எடுக்காத பணத்தை அந்த முட்டாள் எந்திரத்திற்கு எந்த மாதிரியான எழுத்தின் மூலம் புரிய வைப்பார்கள்?????

எந்திரம் கூட கை வைத்தாலே எடுத்தது போல வரவில் வைத்து விடுமோ?

இதில் பயன்படுத்தும் புரோகிராம் பற்றி எழுதுங்களேன்.

எஸ்.கே said...

அப்பாடி! இவ்வளவு தகவல்களா! அருமை சார்! ஏடிஎம் எல்லோரும் பயன்படுத்துவது என்றாலும் எல்லோருக்கும் நிறைய விஷயங்கள் தெரிவதில்லை! பயனுள்ள தகவல்கள்!

ஜில்தண்ணி said...

vanakkam thala :)

romba naaaaaaaaaaalukkapuram padikkum unga l pathivu

evlo naalukappuram ezhuthureeenga apdiyum enna flow'la varuthu sooperu

unga pathivai ellathayum pdf la eduthu, enga pasangalukku kodukalaaamnu irukken, athukku neenga anumathi kodukanum

innum niraya ezhuthunga naanga padichite irukkom :)

Prabu M said...

நல்ல தகவல் நண்பா..
நான் மலேசியாவில் பணிபுரிந்த போது அங்குள்ள மே பேங்கில் (May Bank) என்னுடைய வங்கிக்கணக்குக்கு ஆறு இலக்க எண்ணையே கடவுச்சொல்லாக வைத்திருந்தேன்.....

iRFAN said...

மலேசியாவில் ஆறு எண்மம் கொண்ட கடவு இலக்கங்கள் பாவிக்கப்படுகின்றன. மற்றும் இங்கு பணம் வைப்பிலிடுவதற்கும் (Deposit) மற்றும் Prepaid reload, bill payments , money transfter போன்றவற்றிற்கும் ATM கள் உபயோகிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளிலும் இவை இருக்கக்கூடும்.

ராஜ நடராஜன் said...

//பொருளாதாரம் தேயும் சமயங்களில் விரக்தியில் அனேகம் பேர் சொல்லும் வசனம், ' பணம் என்ன மரத்துலயா காய்க்குது'. இதை எப்படியோ உளவுபார்க்கும் செயற்கைக்கோள்கள் மூலம் ஒட்டுக்கேட்ட வெள்ளைகாரன் கண்டுபிடிச்சது தான் ATM (Automatic Teller/Banking Machine) என்கிற தானியங்கி இயந்திரம். உண்மையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்து நெம்பி விட்டது காசு போட்டால் மிட்டாய் கொடுக்கும் இயந்திரங்கள். //

அடைப்பானுக்கு ஆஹா!இடுகை வழக்கம் போல் மகுடம்.

ராஜ நடராஜன் said...

//மலேசியாவில் ஆறு எண்மம் கொண்ட கடவு இலக்கங்கள் பாவிக்கப்படுகின்றன. மற்றும் இங்கு பணம் வைப்பிலிடுவதற்கும் (Deposit) மற்றும் Prepaid reload, bill payments , money transfter போன்றவற்றிற்கும் ATM கள் உபயோகிக்கப்படுகின்றன. மற்ற நாடுகளிலும் இவை இருக்கக்கூடும். //

பதிவருக்கு வக்காலத்தா நானே இருக்கிறது போட்டுக்கறேன்:)ஆனா அரேபியர்கள் எண்களை சீக்கிரம் மறந்துடுவாங்கன்னு நான்கே இலக்கம்தான்.

ராஜ நடராஜன் said...

//அடுத்த முறை ATM இயந்திரத்தின் அருகில் சென்றதும் சுடுதண்ணி நினைவுக்கு வந்தால் உடனே தொடர்பு கொண்டு, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் :). நன்றி.//

ஸ்பெட்ரம் காசு எந்த ATM ல இருந்து எடுக்குறாங்கன்னு பார்க்க ஏதாவது வழி சொன்னீங்கன்னா தொடர்பு கொள்வது என்ன, டெல்லிக்கே விமான டிக்கட் எடுத்து நாற்காலியில் உட்கார வச்சிடறோம்:)

Thomas Ruban said...

உபோயோகமான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே..

Thomas Ruban said...

// ஸ்பெட்ரம் காசு எந்த ATM ல இருந்து எடுக்குறாங்கன்னு பார்க்க ஏதாவது வழி சொன்னீங்கன்னா தொடர்பு கொள்வது என்ன, டெல்லிக்கே விமான டிக்கட் எடுத்து நாற்காலியில் உட்கார வச்சிடறோம்:)//
அது ஆஸ்திரேலியா அருகில் இருக்கும் தீவில் இருப்பதாக தகவல் முடிந்தால் இங்கிருந்து அந்த தீவு வரை சுரங்கம் அமைத்து ஸ்பெட்ரம் காசை எடுத்து கொள்ளலாம் நண்பரே...

உமர் | Umar said...

//அது ஆஸ்திரேலியா அருகில் இருக்கும் தீவில் இருப்பதாக தகவல் முடிந்தால் இங்கிருந்து அந்த தீவு வரை சுரங்கம் அமைத்து ஸ்பெட்ரம் காசை எடுத்து கொள்ளலாம் நண்பரே...//

சுரங்கம் அமைக்க ஐடியா தேவையெனில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல பூமியில் சுரங்கம் அமைக்க ஐடியா கொடுத்த, எங்கள் பகுதி விஞ்ஞானி, தஞ்சாவூர் ’குடை மாமாவை’ தொடர்பு கொள்ளவும்.

உமர் | Umar said...

//கொடுக்க வேண்டிய பணத்தை இந்த எந்திரம் துப்பாவிட்டாலும் எடுத்தது போல டக்கென்று வரவு வைத்து விடுகிறது. அப்புறம் கதறிக்கொண்டு அவர்களிடம் கேட்கும் போது அந்த பஞ்சாயத்து முடிய பகல்பொழுது ஆகிவிடுகின்றது. //

அதுவே வேறு வங்கி ATM என்றால் இரண்டு நாட்களுக்கு மேலாகிவிடும். :-)

வங்கியின் வழங்கி பணம் கொடுக்கலாம் என்று தகவல் அனுப்பும்போதே, கணக்கில் வரவு வைத்துவிடும். தகவல் எந்திரத்திற்கு வந்து சேராவிட்டாலோ, அல்லது எந்திரத்தில் குறிப்பிட்ட denomination -ல் பணம் இல்லாவிட்டாலோ இத்தகைய தவறுகள் நேரும்.

--
நான் ATM தொழில்நுட்பம் சார்ந்த துறையில் இல்லை. அடிக்கடி எனது கணக்கு இருக்கும் வங்கிக்கும், நான் பணம் எடுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் நடைபெறும் அக்கப்போரால் பாதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளேன்.

பிரகாசம் said...

இங்கும் பல ATMகளில் Money Transfer,Mobile Recharge,Cheque Book ordering,மற்றும் Mutual fund வாங்கும் வசதியும் உள்ளது. உண்மையிலேயே இது மிகவும் பயனுள்ள ஒரு கண்டுபபிடிப்பாகும். வெளியூர் சுற்றுலா செல்லும்போது அதிகத்தொகை கையில் எடுத்துச்செல்லாமல் செல்லும் வழியில் தேவைப்படும்போது தேவைப்படும் நேரத்தில் எடுக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

சுடுதண்ணி said...

வணக்கம்ம்ம்ம் :D. கணினி நாம் சொல்வதைச் செய்யும் ஒரு இயந்திரம் மட்டுமே, அதற்கு நாம் சரியான/தவறான உத்தரவு தருகிறோமா என்றெல்லாம் தெரியாது, நாம் கொடுக்கும் உத்தரவுகள் எல்லாமே கணினியைப் பொறுத்தமட்டிலும் சரிதான்..இன்னொரு முக்கியமான விஷயம் எந்த ஒரு உயிரும் எதையும் கற்றுக் கொண்டு இந்த பூமிக்கு வருவதில்லை. வந்த நாள் முதல் போகும் நாள் வரை ஏதாவது ஒரு விஷயம், யார் மூலமாகவாவது நமக்குக் கற்றுத் தரப்பட்டுக் கொண்டே தான் இருக்கப்படுகிறது. எனவே அதில் தயக்கமோ, கூச்சமோ தேவையில்லை. எவ்வளவோ பண்ணிட்டோம், இதப் பண்ண மாட்டோமா என்ற மனதோடு செயல்பட வேண்டியது தான் :).நிச்சயம் விரைவில் எழுதுகிறேன் @ ஜோதிஜி.

சுடுதண்ணி said...

அன்புக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ ராஜ நடராஜன் :)

பகிர்தலுக்கு நன்றி பிரகாசம், இர்பான், தாமஸ் & கும்மி. தொடர்ந்து வாங்க :).

அன்புக்கு மிக்க நன்றி @ ஜில்தண்ணி. தாரளமாக கொடுங்க :).

சுடுதண்ணி said...

வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் @ பிரபு. தொடர்ந்து வாங்க :).

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி @ எஸ்.கே :)

guru said...

ATM-ஐ பற்றி புரிந்து கொள்ள நல்லதொரு பதிவு..

ஏதேனும் ஆபத்து காலங்களில் ATMன் pin code-ஐ ரிவர்ஸில் எண்டர் செய்தால் அது தற்காலிகமாக செயலிழந்துவிடும் என்று சொல்கின்றனரே,..? அது உண்மையா...?

ராஜ நடராஜன் said...

//சுரங்கம் அமைக்க ஐடியா தேவையெனில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல பூமியில் சுரங்கம் அமைக்க ஐடியா கொடுத்த, எங்கள் பகுதி விஞ்ஞானி, தஞ்சாவூர் ’குடை மாமாவை’ தொடர்பு கொள்ளவும். //

கும்மி!இது யாரு குடை மாமா?ரூபன்!உங்களுக்கு தெரியுமா குடை மாமாவை?

யாரோ கால் வச்சதால தஞ்சாவூர் கோபுர குடை(கலசம்) உடைஞ்சு போச்சாமே!

உமர் | Umar said...

//கும்மி!இது யாரு குடை மாமா?//

அவர் பேர நான் முழுசா டைப் பண்ணி முடிக்கிறதுக்குள்ள, என் விரல் என்கிட்டே கோவிச்சிக்கிட்டு போயிரும். அதுனால, அவர சுருக்கமா "சோழ மன்னர் குடை மாமா" என்று கூப்பிடுவார்கள்.

அவர் சோழ மன்னர்களின் வாரிசாம். அதனால் சோழ மன்னர் என்று பெயர். அவருடைய TVS-50 ல் குடை ஒன்றைக் கட்டியிருப்பார். அதனால், குடை மாமா என்று அழைக்கப்படுவார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிடுவார். ஒரு முறை 10000 வாக்குகள் வாங்கினார்.

அவர் தன்னை விஞ்ஞானி என்றும் கூறிக்கொள்வார். அவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்றுதான், இந்தியாவிலிருந்து அமெரிக்க செல்ல எளிய வழி, பூமியில் துளை போட்டு செல்லும் நேர் வழி.

தன்னுடைய Bio-data வை 40 பக்க புத்தகமாக அச்சடித்து அனைவரிடமும் கொடுத்தார். அந்த புத்தகத்தில் ஒன்று எனக்கும் வந்தது. அவரது மற்ற கண்டுபிடிப்புகள் மறந்துவிட்டாலும், அமெரிக்கா செல்லும் வழி மட்டும் மறக்கவில்லை. மற்ற நாடுகளுக்கு செல்வதற்கும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஏதேனும் நிகழ்த்துவார் என்னும் நம்பிக்கையில் நான் பாஸ்போர்ட் கூட எடுக்காமல் காத்திருக்கின்றேன்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி. ..

puduvaisiva said...

ATM-ஐ பற்றி விரிவான தகவலுக்கு நன்றி சுடுதண்ணி அண்ணே !

:-)

Thomas Ruban said...

//கும்மி said... அவர் தன்னை விஞ்ஞானி என்றும் கூறிக்கொள்வார். அவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்றுதான், இந்தியாவிலிருந்து அமெரிக்க செல்ல எளிய வழி, பூமியில் துளை போட்டு செல்லும் நேர் வழி.//

நீரா ராடியாக்கு ரூ 60 கோடியை ஆலோசனைத் தொகையாகப் கொடுத்த ராசா உங்களுக்கும் பெருசா தரப்போறார்!!!!என்ஜாய்...

அகல்விளக்கு said...

ரொம்ப ரொம்ப உபயோகமான பதிவு தல...

சாமக்கோடங்கி said...

//மின்னஞ்சல், கணினி மற்றும் இதர இணைய வசதிகளுக்கே கடவுச்சொலை அப்படி வை, இப்படி வை என்று ஏகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் கணினியுலகம், ஒருவரது வங்கிக்கணக்கினை கையாளும் ATM இயந்திரங்களுக்கு வெறும் நான்கு இலக்கங்கள் மட்டுமே வைத்திருப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?.//

ஆமா இல்ல...????

இத நா யோசிக்கவே இல்லையே..

நல்ல பயனுள்ள தகவல்கள்.. மீண்டும் வருகிறேன்..

Balakumar Vijayaraman said...

தகவல்களுக்கு மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

சிங்கப்பூரிலும் ஆறு இலக்க எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நிறையத் தெரிந்துகொண்டேன் சுடுதண்ணி. உங்களின் அறிவுசார்ந்த அனைத்துப் பதிவுகளுக்கும் மிக்க நன்றி.

kaja said...

I am working in singapore. Here also using 6 digit password

சுடுதண்ணி said...

உங்கள் வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே :).

தகவல் பகிர்விற்கு மிக்க நன்றி ரோஸ்விக், கஜா :). தொடர்ந்து வாங்க.

Shankar said...

Hi,
First visit to your site. First impression is a lasting impression. Good useful article. After reading a lot of "mokkais" this is welcome relief.
Continue the good job

"தாரிஸன் " said...

nalla seithi sir......
thodarattum ungal payanam..!!!

Elavarasi said...

kotak bank gives 6 digit pin number for its debit/ATM card.

ngnswamy said...

ellaa mechine kalum ore maathiyaakavum ellaa bank cardkalum ore maathiyaakavum thayaar patuththi vittu micro fingerprint moolam attaiyaip payan patuththalaam/

ngnswamy said...

ellaa mechine kalum ore maathiyaakavum ellaa bank cardkalum ore maathiyaakavum thayaar patuththi vittu micro fingerprint moolam attaiyaip payan patuththalaam/

srinivasan said...

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதையும், நாம் தேர்வு செய்யும் ஆறு இலக்க எண்கள் தான் கடவு சொற்களாக பதிவு செய்யப்படுகிறது .