Wednesday, May 4, 2011

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - (முற்றும்)

ருடார்ப் எல்மர்

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்விஸ் வங்கிகளில் ஒரு கணக்குப்பிள்ளையாக, அதிகாரியாக பின்னர் மேலாளராக முட்டை வடிவக் கண்ணாடியை மூக்கு நுனியில் ஊஞ்சலாட விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த ருடால்ப் எல்மர் பின்னாளில் இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு பிரபலமடைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல நூற்றாண்டுகளாக ஸ்விஸ் வங்கிகள், 'ரகசியம்' என்ற ஒற்றைச் செங்கலில் கட்டியெழுப்பியிருந்த உலகின் மிகப்பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை மிக அமைதியாக, நிதானமாக, அழகாக, அற்புதமாக, சிறுகச் சிறுகச் சிதறடித்துக் கொண்டிருக்கிறார் எல்மர்.


கடைசியாக ஜூலியஸ் பேர் (julius baer) வங்கியின் கேமன்ஸ் தீவுகள் கிளையில்  உயரதிகாரியாக (Chief Operating Officer) பணியாற்றிக் கொண்டிருந்தார் எல்மர். அவர் நினைத்திருந்தால் அழகிய வளைவுகள் நிறைந்த கடற்கரையில் வார இறுதியில் காற்று வாங்கி, அதோடு சேர்த்துக் கொஞ்சம் கவிதையும் வாங்கி ரம்மியாக வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பதவிகளுக்கு முன்னேறிய எல்மருக்கு ஓரளவுக்கு மேல் பதவி உயர்வு பெற்ற பிறகு தான்,  'ரகசியம்' என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தினை பாதுகாக்கும் பூதங்களிடம் தான் பணிபுரிவது உறைத்தது. அப்பாவியான எல்மர் 'டீச்சர், டீச்சர் இவன் என்னை கிள்ளி விட்டுட்டான் டீச்சர்' கணக்காக ஸ்விஸில் இருக்கும் தலைமையகத்துக்கு ஓடினார், நம் வங்கியின் ரகசியத்தன்மையை இவ்வாறு வரி ஏய்ப்பு செய்யும் கறுப்புப் பண முதலைகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆவேசத்துடன் புகார் செய்த எல்மரைப் பார்த்து, தனியாக நிற்கும் கதாநாயகியைக் கண்ட வில்லன் போல் சிரித்தார்கள். 

விளைவு எல்மர் வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்டார், வங்கியின் விதிமுறைகளை மீறியதாகவும், ரகசியத் தகவல்களைத் தரக்கோரி மற்ற ஊழியர்களை மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த எல்மர், ஜூலியஸ் பேர் எனும் ஆக்டோபசிடம் தனியாகப் போராடினால் சில்லுத் தெரித்துவிடும் என்றுணர்ந்து நேரே மொரிஷியஸ் சென்று என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு சில வருடங்கள் யோசித்தார். பின்னர் திடீரென லண்டன் மாநகரில் ஒரு அதிகாலை, சுபவேளையில் கால்பதித்தார். அவர் நேரே சென்று சந்தித்தது நமக்கும் மிகவும் பழக்கமான விக்கிலீக்ஸ் ஜூலியன் அசான்ஞ்.

ஜூலியனுடன், எல்மர் - பத்திரிக்கையாளர் சந்திப்பில்

விக்கிலீக்ஸின் கடந்த கால நடவடிக்கைகளைப் பார்த்த எல்மருக்கு நம்பியார், ரகுவரன் போன்ற ரேஞ்சில் இருக்கும் மிகப்பெரிய வில்லன்களிடம் மோதிக் கொண்டிருக்கும் ஜூலியனுக்கு ஜூலியஸ் பேர் வங்கி ஒரு கொசு என்று தோன்றியதில் ஆச்சர்யமில்லை. ஏற்கனவே ஸ்வீடனில் அல்வா கொடுத்த விஷயத்தில் தன்னை அலைக்கழிக்கும் ஐரோப்பிய யூனியனின் மேல் உஷ்ணப் புகை விட்டுக் கொண்டிருந்த ஜூலியனுக்கு, எல்மர் தேடி வந்த தேவதையாகத் தெரிந்தார். எவ்வளவோ பார்த்து விட்ட ஜூலியனுக்கு இதைப் பார்க்கத் தெரியாதா?. எலமருக்கு ஆரத்தி எடுத்து முறைவாசல் செய்து, பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து அமைதியின் மறு உருவமான எல்மரை உலகை ஏய்த்து கருப்புப் பணம் குவிக்கும் பணக்காரர்களை எதிர்த்து சாமியாட வைத்து, 1997 முதல் 2002 காலகட்டத்தில் முறைகேடாக ஜூலியஸ் பேர் வங்கியில் முதலீடுகள் செய்த சுமார் 2000 வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளை எல்மரிடமிருந்து பெற்றுக் கொண்டார் ஜூலியன். அடுத்த சில நாட்களில் ஸ்விஸ் வந்திறங்கிய எல்மர் கைது செய்யப்பட்டுப் பின் பிணையில் வெளிவந்து தன் மீதான வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

தான் எப்படியும் ஸ்விஸ் அரசாங்கத்தால் தண்டிக்கப்பட போகிறோம் என்று தெரிந்ததும் தன்னிடமிருக்கும் தகவல்கள் மூலம் உலக மக்களுக்கு ஸ்விஸ் வங்கிகளின் மர்மக்குகைகளுக்குள் என்ன நடக்கிறதென்பதை எப்படியாவது தெரிவித்து விட வேண்டுமென்பதுதான் எல்மரின் குறிக்கோள். எந்த பின்விளைவுகள் குறித்தும் ஒரு நொடி கூட அலட்டிக் கொள்ளாமல் எங்களிடம் இதுவரை கிடைத்த ரகசியங்கள் எப்படிக் கையாளப்பட்டதோ அதன்படி எல்மரின் தகவல்களும் சரிபார்க்கப்பட்டு அடுத்த சில வாரங்களில் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்று ஜூலியன் சூளுரைத்து முழுசாக மூன்று மாதங்களாகி விட்டன. இந்நேரம் ஜூலியனுக்குத் தெரிந்திருக்கும் எப்பேர்ப்பட்ட இடியாப்பத் தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம், அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது. எனினும் ஜூலியனும், எல்மரும் அடுத்தடுத்து அளித்த பேட்டிகளில் எந்த நேரமும் விக்கிலீக்ஸ் விளக்கிலிருந்து பூதம் கிளம்பலாம் என்றே தெரிகிறது. எப்படியும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக வந்து விடும் என்று உலகமே விக்கிலீக்ஸ் தளத்தின் முதல்பக்கத்தினை அழுத்தி, அழுத்தி விரலைத் தேய்த்துக் கொண்டிருக்கிறது. 


அதெல்லாம் சரி, இதெல்லாம் தெரிந்து எனக்கென்ன ஆகப்போகிறது என்று யாரும் மனந்தளர வேண்டாம் மகா ஜனங்களே, அந்த இரண்டாயிரம் பேரில் சில/பல இந்தியர்களின் பெயரும் இருப்பதாக ஜூலியன் கூறியிருக்கிறார். அதனால் விரைவில் இந்திய ஊடகங்களில் பெருச்சாளிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கோரசாக 'இதுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, எல்லாமே சும்மா' என்று ஊளையிடுவதைக் காணத் தயாராகுங்கள். உலகத்தில் இவ்வளவு சமாச்சாரம் நடக்கிறதே நம்ம ஊர் பஞ்சாயத்தார் நம் வீட்டுக் கறுப்புப் பணம் குறித்துக் கவலைப் படவில்லையா என்று கேள்வி கேட்பவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். நம்ம ஊர் மண்ணுமுட்டிகள் ஸ்விட்சர்லாந்துக்கும் நமக்கும் ராசாங்க ஒப்பந்தம் இருக்கிறது, இது போன்ற விவரங்கள் மட்டுமல்ல தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட ஸ்விர்சர்லாந்துக்கு கோபம் வந்துவிடும் என்று பாரளுமன்றத்தின் கழிப்பறையிலேயே விவாதத்தினை மு(மூ)டித்து வைத்திருந்தனர். 

இதைக் கேள்விப்பட்ட ஸ்விட்சர்லாந்தோ அப்படி எந்த ஒப்பந்தமும் இந்தியாவிடம் நாங்கள் போடவில்லை, அதுமட்டுமல்ல ஒப்பந்தமிருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களிடம் யார் கேட்டாலும் எங்கள் சட்டத்தின் படி குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே தரமுடியும் என்று திருப்பியடித்தது. சமீபத்தில் ஏதோ ஒரு புண்ணியவான் போட்ட பொதுநல வழக்கில் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து 8 பில்லியன் டாலர்களுக்கும் மேல் ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்து வெளியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹசன் அலி என்பவரை, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மானக்கேடாகத் திட்டிய பிறகு சிறையில் பிரியாணி சாப்பிட ஏற்பாடு செய்திருக்கின்றனர். 


உலக வரலாற்றில் தனிச்சிறப்பும், பாரம்பரியமுமிக்க ஸ்விஸ் வங்கிகளின் பெருமைகள் இரண்டு குறுந்தகடுகளில் ஜூலியனின் மடிக்கணினியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவை வெளியில் உலவ வரும் நேரத்திற்காக கோரப்பசியுடன் ஊடகங்கள் காத்திருக்கின்றன. நாமும் காத்திருப்போம். 

15 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போன்று அரக்க பறக்க அங்கே இங்கே ஓடியாடி ஆய்ந்து ஓய்ந்து போய் சூடு ஆறி வலி தேறி உட்கார்ந்து விட்டது தொடர்... கிளைமாக்ஸ் எபிசொட் மட்டும் இல்லாமலேயே..!

நிறைய அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.சுடுதண்ணி. உங்கள் ஜெட் வேக எழுத்து நடை அருமை.

ஜோதிஜி said...

மலை முகட்டின் மேல் அமர்ந்து கொண்டு கீழே தெரியும் கிராமத்தை பார்த்தது போல இருக்கிறது. ஆனால் கீழே இறங்கி அந்த கிராம சந்துக்குள் நுழைந்து ஒவ்வொரு வீடாக நுழைந்து வந்து இருந்தால் இந்த நட்சத்திர வாரம் முழுக்க போதாது. வேறு வழியில்லை அதைப் பார்க்க தானைத்தலைவர் அசாஞ்சே வெளியிடப்போகும் அந்த குறுந்தகடுக்காக காத்திருக்க வேண்டும்.

ஹசன் அலி அயிரை மீன் மட்டும் தான். இன்னும் கெண்டை, விலர்ங்கு, திமிங்கலம் வரைக்கும் தைரியமாக மகிழ்ச்சியாக துள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறது. இதனால் தான் நாம் பெறற வரத்தினால் விவசாய அமைச்சராகவும் இந்தியாவை வெள்ளாவி போட்டு வெளுத்துக்கொண்டிருக்கும் சரத்பவார் போன்ற கோனவாய்களும் மக்கள் நல சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இதையே தான் பிராணப் முகர்ஜி இப்படி சொல்கிறார்.

'தொழில்' அதிபர்களை கைது செய்யும் போக்கால் நம் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியே மிக விரைவில் பாதிக்கப்படப் போகின்றது. என்னவொரு தீர்க்கதரிசனம்.

ஜோதிஜி said...

அடுத்து மலரும் நினைவுகளா? அல்லது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றோம் என்ற புலம் பெயர் மக்களைப் பற்றியா?

கோட்டைமகா said...

அருமையான பதிவுகள் ..
வாழ்த்துக்கள் ..

அகல்விளக்கு said...

சீக்கிரமா முடிஞ்சிட்ட மாதிரி தோணுது...

ஆனா அட்டகாசம் தல...

:)

Unknown said...

//உலக வரலாற்றில் தனிச்சிறப்பும், பாரம்பரியமுமிக்க ஸ்விஸ் வங்கிகளின் பெருமைகள் இரண்டு குறுந்தகடுகளில் ஜூலியனின் மடிக்கணினியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அவை வெளியில் உலவ வரும் நேரத்திற்காக கோரப்பசியுடன் ஊடகங்கள் காத்திருக்கின்றன. நாமும் காத்திருப்போம்.//
எலைத்தவனுக்கு தானே எள்ளுரண்டை !
ஹா ஹா ஹா

Moni said...

மக்கள் யாவரும் அறிய வேண்டிய அரிய கருத்துக்களை சிறந்த மொழி நடையில் சொல்லி உள்ளீர்கள்... மென்மேலும் உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கிறேன்...

Ashok D said...

நேற்று ஹாலிவுட் படமான ரோனினை பன்னிரெண்டாவது தடவையாக பார்த்தேன்.. அந்த படம் மாதிரி ஒரு நறுக்கான... விறுவிறுப்பான.. சுவையான உரையாடலென அழகாய் எழுதிகிறீர்கள் என்று நான் இங்கே சொன்னால்.... ’எங்கேயும் காதல்’ ஹீரோயின் ரொம்ப அழகா இருக்காங்க என்பது போல இருக்கும் :)

http://rajavani.blogspot.com/ said...

நாப்பது தரமாட்டோம் நாலு தந்தாலும் நறுக்கு தருவோம்மில்ல...

என்னங்க சுடுதண்ணி.

ANaND said...

சீக்கிரமா முடிஞ்சிட்ட மாதிரி தோணுது...

ஆனா அட்டகாசம் தல... இதை நான் வழிமொழிகிறேன்

சிநேகிதன் அக்பர் said...

அத்தியாவசியமான பல தகவல்களை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி.

ரோஸ்விக் said...

என்னமோ தெரியல உங்க கட்டுரைகளில் "முற்றும்" என்பதைப் பார்த்தால் மட்டும் மனசு ஒப்புக்கொள்ளமாட்டேங்கிறது.

:-)

இதில் பல விஷயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தாலும்... உங்களின் எழுத்து நடையில் படிப்பதில் அலாதி ஆனந்தம்.

எஸ் சம்பத் said...

மிக்சா் என்ற தின்பண்டத்தில் ஓமப்பொடி, காராபூந்தி, காராச்சேவு, சீவல் (ரிப்பன் பக்கோடா), பொரிகடலை, பொரித்த அவல், கலா் பட்டாணி, நிலக்கடலை, மைதா பிஸ்கட் (அரை இனிப்பில்) ஆகியவை அதனதன் விகிதாச்சாரத்தில் நன்கு கலக்கப்பட்டதை ஒரு பிடி வாயில் போட்டு அரைபடும் போது மாறுபட்ட சுவைகளுடன் எப்படி சுகமாக இருக்குமோ, அது போல் நண்பர் சுடுதண்ணி கட்டுரைகளில் அரிய தகவல், தொழில் நுட்ப விபரங்கள், நக்கல், நகைச்சுவை ஆகியவை சரிவிகித கலவையில் வாசித்து தெரிந்து கொள்வதே ஒரு சுகம்தான்.
மிக்சர் என்றவுடன் எனது 47 வருட முந்தைய சிறுவயது நினைவு ஒன்று. நான் அப்பா வழி தாத்தாவின் தலைமைப் பேரன் என்ற வகையில் மிகுதியான செல்லத்துடன் ("இவளுக்கு சரியாக பாதுகாப்பாக வளர்க்கத் தெரியாது உங்களிடம் வளரட்டும்" என என் அப்பா திண்டுக்கலில் பணிபுரிந்து வரும் காலத்தில் திருப்பூர் தாத்தாவிடம் விட்டுவிட்டதாக சொல்வார்கள்) வளர்ந்து வருகையில் 3 வயதில் ஒரு நாள் மிகுதியான காய்ச்சலுக்காக திருமூர்த்தி எனும் வயதான டாக்டரிடம் அழைத்துப் போன போது (அவர் சித்தாந்தம் எல்லா வியாதிகளும் இரண்டு, மூன்று திரவ மருந்துகளை கலந்து ஒரு பாட்டிலில் 3 வேளை கொடுத்துவிட்டால் குணமாகிவிடும் என்பதாகும் - அவ்வாறு அன்றைய மருந்துகளின் கலப்படமற்ற தன்மையினால் குணமாகியிருக்கிறது) தொட்டுப் பார்த்துவிட்டு, கம்பவுண்டரிடம் 3 வேளை மிக்சர் வாங்கிச் சென்று கொடு சரியாகிவிடும் என்றார். வீடுவந்த பின் மருந்து கொடுக்க என் சித்தப்பா முயற்சித்தபோது டாக்டர் மிக்சர் கொடுக்கச் சொன்னால் நீ கசப்பு மருந்தை கொடுக்கிறாய் என அழுது அடம்பிடித்து, அமர்க்களம் செய்து இறுதியில் என் தாத்தா கடைக்குச் சென்று மிக்சர் வாங்கி வந்து அதனுடன் சேர்த்துத்தான் மருந்தை கொடுத்தார்களாம் -
(ஜோதி எப்படி நம்ம flash back ம் விமர்சனமும் ?)

தொடர்ந்து அபாரமான தகவல்களுடன் சுடுதண்ணி கொதிக்கட்டும் - வாழ்த்துக்களுடன் ,,

Anonymous said...

//வெளியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹசன் அலி என்பவரை, சிறையில் பிரியாணி சாப்பிட ஏற்பாடு செய்திருக்கின்றனர். //

ஹாஹா.உங்கள் குறும்புக்கு குறைவே இல்லை.

தருமி said...

ரெண்டு வருஷமாச்சே ... இன்னும் ஏதும் வெளியில் வந்தது மாதிரி தெரியலையே!!??