Monday, May 2, 2011

இணையத்தில் தப்பிப் பிழைக்கும் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் - 2


நிதி மேலாண்மையில் Offshore Asset Protection என்று ஒரு சங்கதி இருக்கிறது. அதாவது உங்கள் சொத்துக்களைப் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டில் முதலீடு செய்து வைப்பது. அவ்வாறு முதலீடு செய்யும் நாட்டில் தரமிக்க சட்டப் பாதுகாப்பு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்வது இதன் முக்கிய சாராம்சம். அன்னிய நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக செசல்ஸ், மொரீஷியஸ், ஸ்விஸ் போன்ற பல நாடுகள் இதற்கெனத் தனி சட்ட வரைவினை செயல்படுத்தி வைத்திருக்கின்றன. அதனால் இவர்களிடம் போய்ச் சேர்வதில் பெரும் பகுதி உள்நாட்டில் சேமிக்க முடியாத அளவுக்கு நிர்ப்பந்தத்தில் இருக்கும், மக்கள் சேவையே மகேசன் சேவையெனக் கருதி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அனுதினமும் பாடுபடும் அரசியல்வாதிகள் என்பது கடுப்பேற்றும் உண்மை. இதன் காரணமாகத் தான் அடிக்கடி இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் செசல்ஸ், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு விசாரணைக்காக செல்வது குறித்தும் அல்லது அவர்களின் விசாரணையில் இந்த நாடுகள் குறித்தான சொல்லாடல்கள் கலந்திருப்பதையும் இன்னமும் இது போன்ற செய்திகளைக் கடைசி வரி வரை பொறுமையுடன் படிக்கும் அன்பர்கள் அறிந்திருப்பீர்கள்.


உங்களிடம் முறைப்படியோ அல்லது முறைதவறியோ அல்லது பொதுச்சேவை காரணமாக எப்படியென்றே தெரியாமல் திடீரென பல கோடி பணம் சேர்ந்து விட்டால், அதனை நேரடியாக உங்கள் பெயரில் சேமிக்காமல், சட்டரீதியான பாதுகாப்பினைத் தரும் ஏதாவது ஒரு நாட்டில் ஒரு 'பால்பாண்டி அன் கம்பேனி' என்ற ஒன்றை பதிவு செய்து அந்த நிறுவனத்தின் பெயரால் உங்கள் பணத்தை முதலீடு செய்வதே பெரும்பாலும் கையாளப்படும் வழிமுறை. இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், எவ்வளவு பணம் சேர்த்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு ஆடிட்டர் காலில் விழுந்து தான் ஆக வேண்டும்.  அந்த ஆடிட்டர்களின் அறிவுரைப்படி தான் இது போன்ற முதலீடுகள் உலகின் பல மூலைகளில் இருந்தும் எங்கோ ஒரு குட்டி நாட்டில் கொண்டு குவிக்கப்படுகின்றன. உலக அளவில் இது வெகுகாலமாக நடந்து கொண்டிருந்தாலும், லேட்டாக ஆனால் லேட்டஸ்டாக வந்த பாரத மாமணிகள் 1947க்குப் பிறகு ஓட ஆரம்பித்து, வெறும் 65 ஆண்டுகளில் உலகில் முதலிடம் வந்திருக்கிறார்கள் என்றால், இவர்களின் அயராத உழைப்பு பிரமிக்க வைக்கிறது. 

தலைப்புக்குச் சம்பந்தமேயில்லாமல் இதெல்லாம் ஏன் சொல்லபடுகிறதென்றால், பெரும்பான்மையான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் எல்லாமே இது போன்ற வெளிநாட்டு முதலீடுகள் தான். இன்றைய அவசர உலகில், உலகமெங்கும் பரந்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களின் சிறப்பு வசதிக்காக இணையத்தில் மூலம் வங்கிக் கணக்குகளை கையாள அனுமதிப்பது தவிர்க்க முடியாது என்பதாலும், இது போன்ற கணக்குகள் வைத்திருப்பவர்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குப் பயணிப்பதை விரும்புவதில்லையென்பதாலும் ஸ்விஸ் வங்கிகள் இணையத்தில் மிக எச்சரிக்கையாகக் காலடியெடுத்து வைத்தன. இருப்பினும் முன்னெச்சரிக்கையில் மூக்கு வேர்க்கும் வியாதி பலருக்கு இருப்பதால் இன்றளவிலும் சில வங்கிகளும், பல வங்கிகளின் சிறப்பு ரகசியக் கணக்குகளும் இணைய வசதியின்றியே செயல்படுகின்றன என்பது சிறப்பு.


முதலில் ஸ்விஸ் வங்கிகள் மட்டுமின்றி இணையத்தில் உலகை வலம் வரும் உலகின் அதி ரகசியத் தகவல் பறிமாற்றங்களைக் கையாளும் இணைய வழங்கிகள் அனைத்துமே சிறப்பு அதிநவீன வசதிகளால் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வழங்கிகள் தீ விபத்துகளால் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு இரும்புப்பெட்டக அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும் (Fire proof Data Center). இந்த அறையினை கைரேகை அல்லது விழித்திரை பதிவுகள் மூலம் மட்டுமே திறக்க முடியும் (Biometric Authentication). அப்படித் திறப்பதற்கு என்று குறைந்த பட்சம் மூன்று பேர் கொண்ட குழு இருக்கும். அந்த மூன்று பேரும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கைரேகை அல்லது விழித்திரைப் பதிவுகளை உள்ளிட்டால் மட்டுமே ஒருசேர அறைக்குள் நுழைய முடியும். இதன் மூலம் நேரடியாக ஒரு தனிநபர் வழங்கி இருக்குமிடத்திற்குச் சென்று தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புத் தடுக்கப்படுகிறது.



இதைத் தவிர பயணிகள் விமான நிலையத்திலும், இராணுவ விமானத் தளங்களிலும் செயல்படும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையினையும் (Air Traffic Control Room), போர்க் காலங்களில் இராணுவத்தலைமை செயல்படும் யுத்தக் கட்டுப்பாட்டு அறையினையும் (War  Control Room) ஒத்த வலையமைப்புப் பாதுகாப்பு மையம் (Network Security Operations Control Room) ஒன்று 24x7 செயல்பாட்டில் இருக்கும். அந்த அறையில் தங்கள் வழங்கிகளின் போக்குவரத்து அடர்த்திற்கேற்ற அளவிலான வலையமைப்பு வல்லுநர்கள், தொடர்ந்து உலகின் பல மூலைகளிலிருந்தும் தங்களின் வழங்கிகளை இணையத்தின் மூலமோ (External Traffic) அல்லது வங்கியிலேயே பணிபுரியும் நபர்கள் உள்வலையமைப்பின் மூலமோ (Internal Traffic) வழங்கிகளைத் தொடர்பு கொள்ளும் இணைப்புகளை கண்ணிமைக்காமல் ஒரு கூட்டமாக கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.


இதற்கென சிறப்பு அதிநவீன உபகரணங்கள் (event collectors) உள்ளன. அவற்றை தங்கள் வலையமைப்பின் பல பகுதிகளில் இணைத்திருப்பார்கள். இந்த உபகரணங்கள் தங்கள் இருக்கும் வலையமைப்பின் பகுதியில் பயணிக்கும் இணைப்பு எந்த கணினியிலிருந்து பயணிக்கிறது என்பது முதல், வழங்கியின் எந்தெந்த கோப்புகளை கையாள்கிறது என்பது வரையிலான தகவல்களை வலையமைப்பு பாதுகாப்பு மையத்திற்கு நேரலையில் தெரிவிக்கும். படிக்கும் வேகத்தில் இது சாதரணமாகத் தோன்றினாலும், மிகப் பரபரப்பாக செயல்படும் வழங்கிகளில் நொடிக்கு ஆயிரக்கணக்கில் இது போன்று தகவல்கள் அள்ளித் தெளிக்கப்படும். அவற்றில் ஒவ்வொன்றையும்  விடாமல் ஆராய்ந்து, போலீஸ் பார்வைப் பார்த்து தெளிவதற்குள் ஒட்டு மொத்தப் படமும் முடிந்து விடும்.


இதுப்போன்ற நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க இவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப வசதிகள் என்ன, எதன் அடிப்படையில் நல்ல இணைப்பையும், கள்ள இணைப்பையும் தரம் பிரிக்கிறார்கள், அதனையும் முறியடித்து எப்படித் தகவல்கள் கசிகின்றன, இவற்றுக்கெல்லாம் மேலாக ஸ்விஸ் வங்கிகள் பயன்படுத்தும் சிறப்பு பாதுகாப்பு வழிமுறை என்ன ஆகியவை அடுத்த பகுதியில்.

20 comments:

joe vimal said...

அடிச்சு ஆடுங்க network engineer ஆனா எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துகளை பார்க்க ,நட்சத்திர வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துக்கள். :)

AjinHari said...

Excellent..happy to see you back in writing

FREIND-நண்பன் said...

Ur descriptions are well organized and easy to understand. wishes to write more and know more.

Annaraj Ponpandi said...

I love your blogs sir. Happy to c you again.

ஜோதிஜி said...

தங்க நாற்கர சாலையில் பயணிப்பது போல தொடர் பறக்கத் தொடங்கி விட்டது,

அகல்விளக்கு said...

சூப்பர் தல....

:-)

க.பாலாசி said...

தொடருங்கள் நண்பா..

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

அண்னா... எப்படி.. இருக்கீங்க..
ரொம்ப நாள் கழிச்சு..நச்சுனு..சூப்பர்.
49ஒ..போட்டவுங்க வீட்டுக்கு போலிச..அனுப்புர..புண்னியவான்க..இருக்குற..நாடு..பார்த்து..இருங்க.

சிநேகிதன் அக்பர் said...

இதுவரை அறிந்திராத தகவல்கள்.

நல்ல பகிர்வு. முந்தைய பதிவுகளை போலவே.

நட்சத்திர வாழ்த்துகள்.

http://rajavani.blogspot.com/ said...

அன்பின் கருத்தை வழிமொழிகிறேன் சுடுதண்ணி.

Thomas Ruban said...

சுவையானத்தகவல்கள் நன்றி சார்.

சேலம் தேவா said...

இதுவரைக்கும் இந்த நெட்வொர்க் சம்பந்தப்பட்ட தகவல்களை படிச்சா தன்னிச்சையா தூக்கம் வரும்.உங்க பதிவு சுவாரஸ்யமா இருக்கு..!! கலக்குங்க..!! :)

ராஜ நடராஜன் said...

//இதன் காரணமாகத் தான் அடிக்கடி இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் செசல்ஸ், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு விசாரணைக்காக செல்வது குறித்தும் அல்லது அவர்களின் விசாரணையில் இந்த நாடுகள் குறித்தான சொல்லாடல்கள் கலந்திருப்பதையும்//

இந்த வரிகளைப் படித்து விட்டும் எஸ்கேப் செய்ய நான் கேப்மாரியா என்ன:)

ராஜ நடராஜன் said...

//எவ்வளவு பணம் சேர்த்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு ஆடிட்டர் காலில் விழுந்து தான் ஆக வேண்டும்.//

இந்தியாவில படிச்ச மொத களவாணிக யாருன்னு கேட்டீங்கன்னா CA படிச்சிட்டு ஆடிட் வேலை செய்பவர்கள் தான்.எப்படி திருடுவது என்று கற்றுக்கொடுப்பவர்களும் இவர்கள்தான்.ரொம்ப நாளா ஆடிட்டர் பற்றி விலாவாரியா சொல்லனுமின்னு நினைச்சிகிட்டே இருக்கேன்.வத்திகுச்சி சரியா உரசமாட்டேங்குது.

ராஜ நடராஜன் said...

//இந்த அறையினை கைரேகை அல்லது விழித்திரை பதிவுகள் மூலம் மட்டுமே திறக்க முடியும்//

இனிமேல் பெண்களை சைட் அடிக்கும் பசங்களை உசாரா கவனிக்கனும்:)

ராஜ நடராஜன் said...

//அப்படித் திறப்பதற்கு என்று குறைந்த பட்சம் மூன்று பேர் கொண்ட குழு இருக்கும்.//

முந்தைய பின்னுட்டத்துக்கு இரண்டு பேர் போதும்தானே!இன்னொரு ஆளு எதுக்கு?

ராஜ நடராஜன் said...

//இதைத் தவிர பயணிகள் விமான நிலையத்திலும், இராணுவ விமானத் தளங்களிலும் செயல்படும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையினையும் //

டச் விட்டுபோச்சோன்னு நினைச்சேன்:)

ராஜ நடராஜன் said...

செசல்ஸ்,மொரிசியஸ் திருடர்களைப் புடிக்கணுமே!வழி ஏதாவது சொல்லுங்களேன்.நான் அசாங்கிகிட்ட கேட்டதுக்கு ஸ்விஸ் கணக்கு மட்டும்தான் இப்போதைக்கு இருக்குதாம்.1.76 ல கட்டிங் கொடுத்தா கண்டு புடிச்சுக் கொடுக்கிறேன்ங்கிறார்.

சுடுதண்ணி said...

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், அன்பும், ஆதரவும் கம்பெனிக்குத் தெம்பூட்டும் விதத்தில் இருப்பதைத் தெரிவித்துக் கொள்வதில் சுடுதண்ணி பெருமகிழ்ச்சியடைகிறது. நேரமின்மை காரணமாக தனித்தனியே பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை பொருத்தருளவும்.

ஆடிட்டர்கள் குறித்தானக் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி @ ராஜ நடராஜன்.

அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி @ ஆல் இன் ஆல், முத்துலெட்சுமி, ஜோ, அஜின்ஹரி, நண்பன், அன்னராஜ், அகல்விளக்கு, சிநேகிதன், தவறு, அக்பர், தாமஸ், சேலம் தேவா :)