Thursday, February 11, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 1

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விருந்தினர் பதிவேடு என்று ஒன்று வைத்திருப்பார்கள். அங்கு வருகைதரும் முக்கியஸ்தர்கள் அதில் இங்கு வந்ததில் பெருமை, இந்த இடம் அருமை, பார்த்ததும் புல்லரித்தது, உடம்பெங்கும் வியர்த்தது என்று எதையாவது எழுதி கையெழுத்திட்டு தங்கள் பெயர்களைப் பதிந்து செல்வார்கள். கிட்டத்தட்ட அப்படி ஒரு பதிவுக்குறிப்பை நீங்கள் செல்லும் இணையத்தளங்கள் உங்கள் நெற்றியிலேயே ஒற்றிவிட்டு அழகு பார்க்கும் விசயம் தான் இந்த குக்கீஸ். அவை குறித்து இப்பதிவில் காண்போம்.

இணையதள வழங்கிகள் (web servers) உங்கள் உலாவியின் மூலம் உங்கள் கணினியில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து வைக்கும் சிறு அளவிலான எழுத்துக் கோப்புகளே குக்கீஸ்கள். இந்த கோப்புகளில் என்ன இருக்கும்?. நீங்கள் இணையத்தளத்திற்கு வருகை தந்த நேரம், படித்த பக்கங்கள், செலவிட்ட நேரம் போன்ற விவரங்கள் இருக்கும்.லொ மொண்டலி இணையத்தின் பயன்பாட்டுக்கு படைத்த சிறப்பான பயன்பாடுகளில் இதுவும் ஒன்று. இணைய வர்த்தகத்திற்காக கண்டுபிடிக்கப் பட்டாலும், பின்னாளில் வருகையாளர்களின் தன்மைக்கேற்ப வலைப்பக்கங்களை மாற்றியமைத்து வழங்குவதற்கும் மற்றும் இணைய விளம்பர உலகத்திற்கும் குக்கீஸ் இன்றியமையாததாகிப் போனது.

லொ மொண்டலி

வர்த்தகத் தளங்களில் வாங்கும் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கொள்கலன் (purchase cart) ஒன்று இருக்கும், நீங்கள் பொருட்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு நிலையையும் பதிவு செய்து அந்த கொள்கலனுக்கு வழங்குவதற்காகவே குக்கீஸ்கள் படைக்கப்பட்டாலும், வழக்கம் போல மற்ற பயன்களால் தான் குக்கீஸ்கள் புகழ்பெற்றன. பல இணையத்தளங்கள் தங்கள் வருகையாளர்களே பிரத்யேகமாக தேவையானத் தகவல்களை முதல் பக்கத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியை வழங்குகின்றன உ.தா. yahoo, google. அவற்றுக்கு உதவுவதும் குக்கீஸ்களே. உங்கள் தேர்வுகளை தளங்களின் வழங்கிகளில் சேமித்து விட்டு அதற்கென்ற ஒரு தனிக்குறியீட்டு எண்ணை உங்கள் கணினியில் பதிந்து விடுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். மீண்டும் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்திற்கு செல்லும் போது உலாவியின் மூலம் உங்கள் குக்கீஸில் இருக்கும் தனிக்குறியீட்டு எண்ணைப் படிக்கும். அந்தக் குறியீட்டு எண்ணுக்குண்டான, வழங்கியில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொகுத்து வழங்கப்படும். இதில் உலாவியின் பங்கு மிகமிக முக்கியமானது, ஏன்?. ஒரு இணையத்தளத்தின் குக்கீஸ்களை மற்றொரு இணையத்தளம் படிக்க முடியாது. அப்படி படிக்க விடாமல் தடுத்து சரியான தளங்களிடம் மட்டுமே குக்கீஸ்களின் தகவல்கள் சேர்வதை உறுதிப்படுத்துவது உலாவிகளே.

இப்படி எல்லாம் இன்பமயமாக இருந்த தருணத்தில் இணைய விளம்பர நிறுவனங்கள் குக்கீஸ்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் தான் உலகம் நிமிர்ந்து கவனிக்கத் துவங்கியது. விளம்பரங்களை உங்கள் இணைய நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து வழங்கும் முறை மிகப் புகழ்பெற்றது. உதாரணத்திற்கு விளம்பரப் பட்டைகள் நிறைந்த தளங்களுக்குச் செல்லும் போது உங்களின் இருப்பிடம் சம்பந்தமான விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அல்லது நீங்கள் அதிகமாக இணையதளங்கள் வடிவமைப்புப் பற்றியப் பக்கங்களைப் படிப்பவராக இருந்தால் 'குறைந்த விலையில் இணைய வழங்கிகள், ஒன்று வாங்கினால் ஒரு சிக் ஷாம்பூ பாக்கெட் இலவசம்' போன்ற விளம்பரங்கள் காணக் கிடைக்கலாம்.
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அது போன்ற பக்கங்களை மாறுபட்ட பயனாளர்கள் இருவரின் கணினிகளில் திறந்து பார்த்தால் இருவருக்கு வெவ்வேறு விளம்பரங்கள் வழங்கப்படுவதைக் காணலாம். நீங்கள் எவற்றையெல்லாம் படிக்கிறீர்கள், எந்தப் பக்கங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் ஆகியத் தகவல்கள் குக்கீஸ்கள் மூலம் படிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விளம்பரங்கள் வழங்குவது வெகுவிமரிசையாக நடைபெற ஆரம்பித்தது. இது பயனாளர்களின் தனியுரிமைக்கும், ரகசியத்தன்மைக்கும் எதிரானது என்று பலர் கூவினாலும், அதனைத் தவிர்ப்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ உலாவியின் மூலம் பயனாளர்கள் தீர்மானிக்க முடியும் என்பதால் எதுவும் எடுபடவில்லை. ஆயினும் இவ்வாறான கண்காணிக்கும் குக்கீஸ்களை தவிர்க்கும் முறைகள் பற்றி அனேக பயனாளர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு இணையத்தளத்தின் குக்கீஸ்களை மற்றவைப் படிக்க முடியாத போது எப்படி பயனாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன?, குக்கீஸ்களை எப்படி தேவைக்கேற்பக் கட்டுப்படுத்துவது?, குக்கீஸ்கள் மூலம் வைரஸ் சாத்தியமா, போன்றவை குறித்து அடுத்தப் பகுதியில்.

அனைவருக்கும் சுடுதண்ணியின் காதலர் தின வாழ்த்துக்கள் :).

10 comments:

ஜோதிஜி said...

மீண்டும் தொடங்கிய ராஜபாட்டைக்கு வாழ்த்துகள். குக் குக்ன்னு கூவிக்கிட்டு திரியிற காதல் வெடலைகளுக்கு இந்த குக்கீஸ் ஏதாவது உள்ளே வச்சுருக்குமா?

கர்நாடாகவுல இருக்ற முத்தலிக்கு, அனுமன் சேனாவுக்கு இந்த இடுகையை அப்படியே அனுப்புகிறேன். உங்க வாழ்த்துக்கு அவுக ஏதாவது கொடுப்பாங்க........

சுடுதண்ணி said...

மிக்க நன்றி ஜோதிஜி உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும். இணையதளங்கள் விதைச்சுட்டுப் போற குக்கீஸ்களும், வேல்விழிகள் மனசுல தைச்சுட்டுபோற கவிதைகளும் கிட்டத்தட்ட ஒன்னு தான்.. (முடியல... :D)... அனுப்புங்க.. அனுப்புங்க :)

சைவகொத்துப்பரோட்டா said...

//வந்ததில் பெருமை, இந்த இடம் அருமை, பார்த்ததும் புல்லரித்தது, உடம்பெங்கும் வியர்த்தது//


இதை படித்ததும் சிரிப்பு வந்து விட்டது. அருமையான இடுகை, உங்களுக்கும் காதலர் தின
வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

welcome,,

சுடுதண்ணி said...

மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)

சுடுதண்ணி said...

மிக்க நன்றி அண்ணாமலையான் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வ்ழக்கம்போலவே அறிமுகப்பதிவு எளிமையாக விளக்கியிருக்கிறீர்கள் .. தொடர்கிறோம்..

கண்ணா.. said...

எழுத்து நடை மிக அருமை...தொழில் நுட்ப விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்..தொடருங்கள்

puduvaisiva said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

குக்கீஸ்கள் பயன்படுத்தி இவ்வளவு வேலைகளை செய்யலாமா???

நன்றி !

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி :)

மிக்க நன்றி கண்ணா. தொடர்ந்து வாங்க :)

வணக்கம் சிவா தம்பி :D..