Thursday, January 21, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் -3 (முற்றும்)


வெறும் ரேடார்களை மட்டும் நம்பி இருக்கும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்கள், ஏவுகணைகள் தொடுவானப் பகுதியைத் தாண்டிய பின்னரே தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப் பட்ட மையங்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேடார்களை நிறுவி அனைத்தையும் ஒரு வலையமைப்பில் ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் தவறான எச்சரிக்கைகளை ஒரே நேரத்தில் அனைத்து ரேடார்களையும் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில்அனைத்துத் தகவல்களும் தவறானதாக இருந்தால், அது சரியான தகவலாகிவிடும் :D.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஏவுகணைகளின் பயணிக்கும் தூரம் மற்றும் வேகத்தின் காரணத்தினால் ரேடார்கள் கொடுக்கும் தகவல்கள் சுதாரித்துக் கொள்ள மிகக் குறைந்த கால அவகாசத்தையே கொடுக்கிறது. இதனைச் சமாளிக்கத்தான் செயற்கைக்கோள்கள் மூலமாக பூமியைக் கண்காணிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் எந்நேரமும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்துடன் தொடர்பில் இருக்கும். 'பாதுகாப்புப் பணிகளுக்கு இப்பொழுது நாங்கள் செலுத்தியிருக்கும் செயற்கைக்கோள் மிகவும் உபயோகமாக இருக்கும்' என்று சொல்லப்படுபவற்றில் அனேகம் இந்த வேலையைத் தான் செய்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையின் கீழ் பூமியில் எந்த இடத்தில் பெரிதாக வெடிவெடித்து ஒளிப்பிழம்பு தோன்றினாலும் முன்னெச்சரிக்கைத் தகவல் மையத்திற்கு தெரிவிக்கும்.போகி தினத்தன்று நம்மூரில் இருந்து கூட ஏகப்பட்ட எச்சரிக்கைத்தகவல்கள் செல்ல வாய்ப்புண்டு :D. ஏவுகணைகள் ஏவப்படும் போது தோன்றும் மிகப்பெரும் ஒளிப்பிழம்பின் மூலம், ' அது வந்துட்டு இருக்கு.. எல்லாரும் ஓடுங்க..' என்று கூவுவது இந்த செயற்கைக்கோள்கள் தான்.

இதன் காரணமாகத் தான் ஏவுகணைச் சோதனைகள் நடத்தும் நாடுகள் வெளிப்படையாக இந்த நாள், இந்த நேரத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு செய்கிறார்கள். அறிவிக்காமல் சோதனை செய்யும் பட்சத்தில், 'நம்ம வீட்டுக்கு வெடி வச்சிட்டாங்க' என்று எதிரிகள் பதிலடி தாக்குதலில் குமுறி விட வாய்ப்பிருக்கிறது. மேலும் ரகசியமாக செய்யப்படும் அணுகுண்டுச் சோதனைகளும் இத்தகைய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து தப்பும் பொருட்டே பூமி அல்லது கடலுக்குள் அடியில் வெளிச்சம் வராமல் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு இந்தியாவின் போக்ரான் சோதனை ஓர் உதாரணம்.

ஆண்ட்ரோபோவ்

தவறுவது மனித இயல்பு என்பதைப் போல எத்தனை தான் கவனமாக வடிவமைக்கப்பட்டாலும் தொழில்நுட்பங்கள் சமயத்தில் தவறுவது உண்டு. அதற்கு செயற்கைக்கோள்களும் தப்புவதில்லை. உதாரணத்திற்கு 1983ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா புதிய தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் உதவியுடன் புதிய வான் பாதுகாப்பு மையத்தினை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அப்போது அமெரிக்காவுடனான பனிப்போர் உச்சத்திலிருந்த நேரம். எந்த நொடியும் இரண்டு பக்கங்களுமே போருக்குத் தயாராக இருந்தன, ஆயிரணக்கான அணுகுண்டுகளுடன். அப்போதைய சோவியத் தலைவர் ஆண்ட்ரோபோவ் (andropov) ஒரு சுடுதண்ணி :), அதுவும் அமெரிக்கா என்று காதில் சொன்னாலே உடனடி கொதிநிலைக்கும் வரும் திறனை கைவரப்பெற்றவர்.

புதுமனைவிக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போல, மிகச் சிறந்த, நம்பகமான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து புதிய முன்னெச்சரிக்கை மையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதில் ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவும் (lt. col. stanislov petrov) அடக்கம். 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நள்ளிரவில் முன்னெச்சரிக்கை மையத்தில் பணியிலிருந்தார் பெட்ரொவ். அமெரிக்காவிலிருந்து சியோலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தை, ரஷ்யாவின் வான்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்ததாக 269 பேர்களுடன் சுட்டு வீழ்த்தி, அமெரிக்காவை வெறியேற்றிய சம்பவம் நடந்து மூன்று வாரங்களே ஆகியிருந்தது. பனிப்போரின் உஷ்ணம் வரலாற்றில் அதிகமாக இருந்த தருணங்கள். இரண்டு நாடுகளுமே மொத்த அணுஆயுதங்களுடன், போர் மூண்டால் இரண்டு பேருமே அழியும் வண்ணம் (Mutual Assured Destruction - MAD) தயார் நிலையில் இருந்தன. இரண்டு பேருமே அழிந்து போவோம் என்ற பயமே, கடைசி வரை நேரடிப் போர் நிகழாமல் காத்ததென்பது உபதகவல். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பணியிலிருந்த பெட்ரோவுக்கு வந்தது சோதனை. மொத்த எச்சரிக்கை மையமும் ஏவுகணைத் ஏவப்பட்டு விட்டது என்ற எச்சரிக்கை அலற ஆரம்பித்தது. திரையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகக் காட்டியது. திகைத்துப் போன பெட்ரோவ் என்ன செய்வது என்று யோசித்து முடிப்பதற்குள்ளேயே அடுத்தடுத்து புதிய எச்சரிக்கை ஒலிகள் அலறியது. கணினிக்குள் எட்டிப் பார்த்தால் ஒன்று, இரண்டு, மூன்று என்று அடுத்தடுத்து கூடிக்கொண்டே போய் மொத்தம் ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் காண்பித்தது. பெட்ரோவின் பணி இத்தகவலை மேலதிகாரிகளிடம் தெரிவித்து பதில் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதே. ஆனால் பெட்ரோவ் அது தவறான எச்சரிக்கை என்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார். ஏன்?.

சமபலம் பொருந்திய ஒரு நாட்டுடன் அணுஆயுதப் போர் தொடங்க எந்த புத்திசாலியும் வெறும் ஐந்து ஏவுகணைகள் மட்டும் அனுப்பி வைப்பான் என்று பெட்ரோவுக்குத் தோன்றவில்லை. அவர் எதிர்பார்த்தது நூற்றுக்கணக்கில். மேலும் அந்த வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் முற்றிலும் புதிய தொழில்நுட்பம், அதனால் அதன் நம்பகத்தன்மையின்பால் ஏற்பட்ட சந்தேகம். உண்மையிலேயே ஏவுகணைப் புறப்பட்டதாக இருந்தால், எச்சரிக்கைக்குப் பிறகு சில நிமிடங்களில் தொடுவானப் பகுதியைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனாலும் மற்ற ரேடார்கள் எந்த கூச்சலும் போடாமல் அமைதியாக இருந்தன. இவையனைத்துமே பெட்ரோவ் தவறான எச்சரிக்கை என்று முடிவு செய்து கமுக்கமாகிவிட்டதற்குக் காரணம். அந்த கணம் பெட்ரோவ் அம்முடிவை எடுக்காமலிருந்தால் மூன்றாவது உலகப்போர் தொடங்கியிருக்கும். அணுகுண்டுகளால் அனேக நாடுகள் குளியலாடியிருக்கும். காரணம் அந்த சூழ்நிலையில் போருக்குத் தயாராக இருந்தது மற்றும் ஆண்ட்ரோபோவின் மனநிலை, சட்டதிட்டங்கள் படி பதிலடி குறித்து முடிவெடுக்க அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம், செய்தி கிடைத்த பிறகு 2 நிமிடங்கள் மட்டுமே.

ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவ்

பின்னாளில் இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காததால் கடும் ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெட்ரோவ், மனமுடைந்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். விசாரணையில் சூரியனின் ஒளிக்கற்றைகள் அடர்த்தியான மேகக்கூட்டங்களால் பிரதிபலிக்கப்பட்டதில் செயற்கைக்கோளின் கண்கள் கூசிப்போன விஷயம் தெரியவந்தது. 1990 களில் பெட்ரோவின் மேலதிகாரி ஓய்வு பெற்ற பின், பாரம்பரிய வழக்கப்படி தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்ட பின்னரே வெளியுலகிற்கு இச்சம்பவம் தெரிந்தது. பெட்ரோவை அமெரிக்காவும், ஐரோப்பாவும் கொண்டாடின. ரஷ்யாவுக்குத் தன் தொழிநுட்பத் தவறுகள் குறித்து வெளிக்காட்டிக் கொள்ள முடியாத மானப்பிரச்சினை, முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபையில் விருதளித்து கவுரவிக்கப் பட்டார் பெட்ரோவ். வரலாற்றில் மிகப்பெரிய அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம் தள்ளாடிய தருணமாக இச்சம்பவம் நினைவுகூறப்படுகிறது.

தொழில்நுட்பத் தவறுகளால் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து இருந்தாலும், வான் பாதுகாப்பு மையத்தில் இருக்கும் பிரச்சினைகள், பணிபுரிபவர்களின் வேலைப் பளு மற்றும் மன அழுத்தம் குறித்த புரிதலுக்காகவே இப்பகிர்வு. வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்களை அமைப்பதென்பது தொழில்நுட்பத்துக்கு மட்டுமன்றி, பணப்பைக்குமே கொஞ்சம் சவாலான விஷயம் தான். சட்டைப்பையில் காசில்லை என்றாலும் கடன் வாங்கியாவது பந்தா காட்டும் மைனர்களைப் போல, மக்களுக்கு சாப்பிட ரொட்டியில்லையென்றாலும் நான்கு நாடுகளுடன் முறுக்கிக் கொண்டு 'நானும் ரவுடி தான்' என்று பாதுகாப்புக்கு பொருளாதாரத்தை வாரியிறைப்பது மட்டும் என்றும் மாறாமல் தொடர்கிறது என்ற தகவலுடன் இத்தொடர் நிறைவடைகிறது.

பின்னூட்டங்களாலும், வாக்குகளாலும் ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சுடுதண்ணி விடைபெறுகிறது.20 comments:

வடுவூர் குமார் said...

திரை மறைவில் இவ்வளவு விஷயம் நடக்குதா!!அந்த ரஷ்ய காரருக்கு நிச்சயமாக நன்றி சொல்லவேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெட்ரோவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்..

அழகாக எங்களுக்கு விவரித்த உங்களுக்கும் நன்றி..

அகல்விளக்கு said...

பெட்ரோ சரியான முடிவை எடுத்திருக்கிறார்...

திரைமறைவை காட்டிய சுடுதண்ணிக்கு நன்றிகள் பல....

ராமகிருஷ்ணன் த said...

Well done hotwater! i enjoyed your writing

மணிப்பக்கம் said...

very nice, i love u hot water! ;)

puduvaisiva said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை சுடுதண்ணி தலமையில் வேரோடு சாய்ப்போம் . . .

Raja Subramaniam said...

கலக்கல் சார்.... போக்ரான் சோதனை பத்தி ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்களேன் சார்

சுடுதண்ணி said...

நன்றி @ வடுவூர்குமார்.

நன்றி முத்துலெட்சுமி.

நன்றி நண்பா ! அகல்விளக்கு.

மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி @ ராமகிருஷ்ணன்.

me too ;) @ மணிப்பக்கம் :D.

வணக்கம் தம்பி :). தலையில் வேரோடு சாய்ப்போம்னு படிச்சுட்டேன்:D.

நன்றி ராஜா :)

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் சுடுதண்ணி,

உண்மையில் மிக விறுவிறுப்பான எழுத்து நடை. கூடவே உங்களுக்கு கை வந்த நகைச்சுவையும் இந்த இடுகையை மறக்க இயலாத ஒன்றாக்கி விட்டது. ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவ் உண்மையிலேயே இந்த பூமிப்பந்தை மிக அபாயகரமான நிலையில் இருந்து பாதுகாத்து விட்டார்.அவருடைய அன்றைய தின "நிதானம்" தான் நமக்கு தரப்பட்ட மிகப்பெரிய தானம். கொஞ்சம் அவசரப்பட்டு இருந்திருந்தால் நாம் வாழும் இந்த பூமியில் பாதி அழிந்தே போயிருக்கும். மீதியில் உள்ள உயிர்கள் அனைத்தும் அணுக்கருவீச்சினால் இன்றைய தினம் வரை மடிந்து கொண்டிருந்திருக்கும். இதை கற்பனை பண்ணும்போதே உடல் நடுங்குகிறது. http://en.wikipedia.org/wiki/Stanislav_Petrov - ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவ் பாரட்டப்படவேண்டிய பிறவி. ஆனால் அவருக்கு இங்கே அங்கீகாரம் கிடைத்தது போல் தெரியவில்லை. இறுதித்தீர்ப்பு நாளில் சித்திர குப்த ஏடு alias ஜீவ புத்தகம் (Book of Life) alias லவ்ஹீல் மக்பூலில் இருக்கும் தகவலை வைத்து அனைவருக்கும் கணக்கு தீர்க்கப்படும் போது அவருக்கான பரிசு கிடைக்கும் என நம்புகிறேன்.


எனக்கு இதே போன்ற இன்னொரு நிகழ்வும் நினைவிற்கு வருகிறது. உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில் விவரிக்கப்பட்ட குருஷேத்திரப் போரின் கடைசி நாளில் நிதானம் தவறிய அஸ்வத்தாமன் அனைவரையும் பூண்டோடு அழிக்க பிரமாஸ்திரத்தை ஏவிவிட்டான். அதை தாககி அழிக்க அர்ஜூனரும் பதிலுக்கு தன்னிடம் இருந்த பிரமாஸ்திரத்தை ஏவி விட்டார். கிட்டத்தட்ட அன்று (Mutual Assured Destruction - MAD) நிலை தான். ஆனால் பலரின் வேண்டுகோளை ஏற்று அர்ஜூனர் அதை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆனால் போர்க்கலையை அனைவருக்கும் கற்றுக்கொடுத்த குருவாகிய துரோணாச்சாரியாரின் மகனான இருந்தும் அஸ்வத்தாமனால் அது போல செய்ய இயலவில்லை. ஆகவே அந்த அஸ்திரத்தை ஏதோ ஒரு நிலையினை நோக்கி செலுத்தியாக வேண்டிய நிலை. அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும்.அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி'பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்;' என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். இது நியாயமான போர் முறைகளுக்கு மாறான ஒன்று. ஆனால் கிருஷ்ணரின் முயற்சியால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது. பயங்கரமான பரீட்சையிலிருந்து தப்பிப்பிழைத்ததால் அந்த குழந்தைக்கு 'பரீட்சித்து' என பெயர் வந்தது. அந்த குழந்தையால் தான் மறுபடியும் வம்சம் வளர்ந்தது.


இந்த நிகழ்வு நடந்து பல்லாயிரம் ஆண்டு ஆகிவிட்டதாலும், பலரின் வாய்வழியாக இந்த தகவலும் பரவியதால் இதில் சிலரின் சொந்த சரக்குகள் சேர வாய்ப்பு உண்டு. எப்படியேனில் பெரிய நிறுவனங்களில் இது போன்ற தகவலில் கலப்படத்தை நிருபிக்க "Pass the Truth" என்ற விளையாட்டை மேல் மட்ட நபர்கள் விளையாடுவார்கள்.நானும் பல முறை இதை விளையாண்டு உள்ளேன். அதில் வட்டமாக அனைவரும் அமர்ந்து கொண்டு ஒரு தகவலை மற்ற யாருக்கும் கேட்க வண்ணம், பக்கத்தில் உள்ள நபரின் காதில் சொல்வார்கள். அது அப்படியே வட்டமடித்து முதலில் சொன்னவரை வந்தடையும் போது அந்த தகவலில் கணிசமான மாற்றம் ஏற்ப்பட்டு இருக்கும். இது விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்ட சமாச்சாரம். இதற்கு காரணம் மனிதர்களின் கற்பனா சக்தியே ! அது போல இதிகாசங்களில் பல நிகழ்வுகள் கலப்படமாக இருந்தாலும் அதில் பெரும்பான்மையான நிகழ்வுகள் நடந்த ஒன்று தான். சில 'பகுத்தறிவு வியாதிகள்' உளறித்திரிவதைப்போன்று அவைகள் பொய்யானவைகள் அல்ல. இது தான் உண்மையுங்கூட ... சரியான பகுத்தறிவுவாதி யார் என்றால் நம்பிக்கையான பல தரப்பட்ட தரவுகளில் இருந்து தகவல்களை பெற்று அதை உடனுக்குடன் அலசி ஆராய்ந்து இறுதியாக பகுத்தறிந்து முடிவெடுப்பவரே.


இந்த இடுகையை படிக்கும் வரை எனக்கு சத்தியமாக ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவ் பற்றி ஒன்றும் தெரியாது. அதற்கு பிறகு தான் இவரைப்பற்றி தேடித்தேடி படித்து விவரம் அறிந்தேன்.இந்த அளவு பின்னூட்டம் இடவும் தூண்டப்பட்டேன். உங்களின் இடுகைக்கு மிக்க நன்றி. இறுதியாக ஓர் கேள்வி . ஓர் இஸ்லாமியரிடம் இருந்து ஹிந்து மார்க்கத்தைப்பற்றி இது போன்ற விளக்கம் கிடைக்கும் என யாராவது எதிர்ப்பார்த்தீர்களா?


with care & love,

Muhammad Ismail .H, PHD,

சைவகொத்துப்பரோட்டா said...

இம்பூட்டு விஷயம் நடந்து இருக்கா, நன்றி சுடு தண்ணி விவரமாக கூறியதற்கு.

ஜோதிஜி said...

கழகஉடன்பிறப்பே

பார்த்தாயா? பெயருக்கும் வார்த்தைகளுக்கும் தொடர்பு இல்லாமல் இங்கு ஒருவர் ஆடும் கபடியாட்டத்தை. எழுத அஞ்சுவர். எழுதினால் சிலர் மிஞ்சவர். ஆனால் கொஞ்சல் நடையில் தோகைமயில் ஆட்டம் போல பறக்க வைக்கிறார். என்னவொரு விந்தை. வானில் பறக்க வைக்கிறார். வானைத்தைப்பற்றித் தான் எழுதுகிறார்.

குரு கேது சுக்கிரனை நோக்கி வணங்கிய உன் கைகள் இவரை நோக்கி வணங்காதா? என்னவொரு விந்தை. அண்டத்தை எழுதவந்தவர் வலையில் மார்க்கத்தை கடைபிடிக்கும் காயிதே மில்லத் வழி தோன்றல். அடாடா சிந்தை குளிர்கிறது. இதற்கு தானே அண்ணா அன்று பாடுபட்டார். நானும் "பட்டுக்" கொண்டுருக்கின்றேன்.

இதிகாசத்தை நான் வெறுப்பவன் அல்ல என்று உனக்குத் தெரியும். ஆனால் அவர் பெயரும் வாங்கிய பட்டமும் முன்னால் வந்து உள்ளத்தில் இருந்ததை உரைத்த தைரியமும் அவர் நிச்சயம் உடன்பிறப்புக்கு தகுதியாக இருப்பார் என்று சொல்லி அவருக்கு கொடுக்க வேண்டிய பட்டத்தை வேறு வழியில்லாமல் அறிவாலயத்தில் கொண்டு வந்து காப்பகத்தில் வைக்கின்றேன்.

உனக்குத் தெரியாதா கழகம் காக்கப்படவேண்டும். என்னை வாழவைப்பதும் நீ தான். என்னுடைய வாழ்த்துரையை பெறுவது மட்டும் உனக்குப் போதும் என்பதும் எனக்குப் புரியாதா.

வாழ்க அண்ணா நாமம். வளர்க சுடுதண்ணி.

அன்புடன்
முக

சுடுதண்ணி said...

உங்கள் ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி இஸ்மாயில். நீங்கள் சொல்வது போல பாடப்படாத நாயகர்களில் பெட்ரோவும் ஒருவர். நீங்கள் பகிர்ந்த கொண்ட இதிகாசத் தகவல் எனக்குப் புதிது, அதையும் உங்களிடம் தெரிந்து கொண்டது மிகமிக மகிழ்ச்சி. எதிர்பாராத பகிர்வு தான் :). மிக்க நன்றி தோழரே. தொடர்ந்து வாருங்கள்.


மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)

பின்னூட்டத்தில் பின்னிச் சென்றிருக்கும் அன்பர் ஜோதிஜிக்கு கோடான கோடி நன்றிகள். உங்களுக்கு பின்னூட்ட வேந்தர் என்ற விருது விழங்க கம்பெனி முடிவு செய்திருக்கிறது. அவசியம் விழா நடக்கும் இடத்துக்கு 4 மணி நேரம் உட்கார்ந்து வாங்கிச் செல்லவும். இடமா?? வேறெங்க உங்களுக்கு ராசியான வள்ளுவர் கோட்டத்துல தான் :D. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜோதிஜி :)

யவனராணி said...

மிக அருமையான கட்டுரைங்க... அடுத்து எப்போ போடுவீங்கனு எதிர்பார்த்து காத்திருந்து படிச்சனுங்க...

நிரம்ப நன்றி..

Santhose said...

There are some U.S flights F117 and B2 bombers which cannot be deductible through radars.

There is no radar invented yet to find these 2 flights.

The F117 is the one who bombed during the first Iraq war. Iraq's couldn't deduct the flight in their radar.


One B2 bomber take off from California and bombed Iraq and returned back to its base.

சுடுதண்ணி said...

மிக்க மகிழ்ச்சி யவனராணி. உங்கள் ஊக்கமும், பின்னூட்டமும் மகிழ்ச்சியளிக்கிறது :).

பின்னூட்டத்திற்கும், தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி சந்தோஷ். நேரம் கிடைக்கும் போது அவை குறித்து எழுத முயற்சிக்கிறேன் :).

DR said...

படிச்சிட்டு பின்னூட்டம் போதும் போதே கைகள் நடுங்குகிறது. என்ன பன்றதுன்னே தெரியல...

sreeja said...

முதன் முதலாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி.

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி தினேஷ்.. ஹார்லிக்ஸ் சாப்பிடுங்க :D

மிக்க நன்றி ஸ்ரீஜா. தொடர்ந்து வாங்க :)

அகல்விளக்கு said...

ரொம்ப நாளா ஆளக்காணோமே தல....

அலுவல் அதிகமோ......

சுடுதண்ணி said...

லைட்டா :)