Sunday, April 11, 2010

வடமில்லா வலையமைப்பு (WiFi) - ஒரு பார்வை : 1


மார்க்கொனி (இடது), முசொலினி (வலது)

மாப்பிள்ளைத் தோழனாக பெனிட்டோ முசொலினி தோள் கொடுத்து நிற்க, இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இத்தாலியின் மார்க்கொனி விதைத்த விதை தந்த பல கனிகளில் ஒன்று வடமில்லா வலையமைப்பு (WiFi - Wireless Fidelity). இந்த தொழில்நுட்பம் பரவலாகி விட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இணையம் கலந்திருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிநுட்பப் பரிச்சயம் இல்லாத எவரும் எளிதில் உபயோகப்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன.


விமான நிலையத்திலிருந்து, முரட்டு விலைக்கு தேநீர் விற்கும் கடைகள் வரை எங்கெங்கும் WiFi மயம். ஏறத்தாழ உலகத்தில் மொத்தம் மூன்று லட்சத்திற்குமதிகமான வடமில்லா வலையமைப்பு மையங்கள் (WiFi Hot spots) இருப்பதாக புள்ளிவிவரங்கள் கோலம் போடுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, அவற்றை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது, அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்கள் ஆகியவை குறித்து இத்தொடரில் காண்போம்.

மைக்கெல் மார்கஸ்

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு அமைச்சர், பல்லாயிரம் கோடி அல்வா, வீட்டு முற்றத்துக்குள் பனித்து, இனித்து ஊத்தி மூடப்பட்ட கதைகள் போன்ற எந்த மசாலாவும் இன்றி 1985ஆம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்பு தவிர்த்து மின்காந்த அலைகளைப் பய்னபடுத்தும் உபகரணங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த, (உ.தா. Microwave Ovens) சில அலைக்கற்றைகளை (900MHz, 2.4GHz, 5.8GHz spectrum :D) பொதுப்பயன்பாட்டுக்கு வழங்கியது. எவரும், எவ்வித முன்னனுமதியின்றி புகுந்து விளையாடிக் கொள்ளலாம் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் பின்னணியிலிருந்தவர் மைக்கேல் மார்கஸ். மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த இம்முடிவால் தொலைதொடர்புத் தொழிலும், தொழில்நுட்பமும் பல பரிமாணங்களைத் தாண்டியிருக்கிறது.


சும்மா கிடைக்கும் அலைக்கற்றைகளை ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சந்தையில் அறிமுகமான பல தொழில்நுட்பங்களில் வடமில்லா வலையமைப்பும் (WiFi) ஒன்று. ஆரம்பத்தில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு, முறுக்கிக் கொண்டு, தங்கள் வழி தனி வழி என்று பிரத்யேக வலையமைப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தினர் (network protocols). விளைவு ஒரு நிறுவனத்தின் உபகரணம் மற்றொரு நிறுவனத்தின் உபகரணத்தோடு தொடர்பு கொள்ள இயலாமல் போனது. இக்காரணத்தால் பொதுமக்களை இத்தொழில்நுட்பம் பெரிதாக ஈர்க்கவில்லை, மாறாக ஒரு சலிப்புணர்வையே ஏற்படுத்தியது. தொழில் மந்தமானதால் மனைமுடைந்து சரக்கடிக்க வந்த இடத்தில், முதலாளிகள் கூட்டுச் சேர்ந்தனர், அனைவருக்கும் பொதுவான ஒரு வலைத்தொடர்பு வழிமுறையை உருவாக்கி அதனைப் பின்பற்றும் வகையில் அவரவர் தங்கள் உபகரணங்களத் தயாரித்து சந்தைப் படுத்துவதென முடிவு செய்தனர்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க பொதுவான வழிமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பு IEEE (Institute of Electrical and Electronics Engineers) வசம் 1988ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் பலமுறை விவாதித்து, சண்டை சச்சரவுகளை அடக்கிக் கட்டப்பஞ்சாயத்துகள் பல செய்யப்பட்டு 1997ல் 802.11 என்ற வடமில்லா வலையமைப்புக்கென பிரத்யேகமான, பொதுவான தொடர்பு வழிமுறை வெளியிடப்பட்டது. இதன் பின்னர் தான் WiFiன் பிரம்மாண்டம் சாமன்யர்களின் வரவேற்பறை வரை ஆக்கிரமித்த அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன.


ஒரே அலைக்கற்றைகளை பல உபகரணங்கள் (WiFi, Microwave ovens) பயன்படுத்தும் போது எவ்வாறு தகவல்கள் சேதாரமில்லாமல் பயணிக்கின்றன என்ற சந்தேகம் இதுவரை எழாத அன்பர்கள் முகத்தை கழுவிவிட்டு மீண்டும் துவக்கத்திலிருந்து படிக்கவும் :). இந்தச் சிக்கலைத் தவிர்க்க இரண்டு விதமான தீர்வுகள் கையாளப்படுகின்றன. ஒன்று குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தகவல் பறிமாற்றம் பாதிக்கப்படும்போதோ தொடர்பு அலைவரிசையை மாற்றித் தருவது (frequency-hopping spread spectrum), மற்றொன்று ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளில் கலந்து கட்டி தகவல்களை அனுப்பவது (direct sequence spread spectrum). ஒன்றுக்கு மேற்பட்ட உபகரணங்களில் மின்காந்த அலைத்தொடர்புகள் மோதிக்கொள்ளும் போது(signal interference), அதனைச் சமாளிக்க மேற்சொன்ன இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உங்கள் செல்பேசியில் அழைப்பு வரும் போது அருகிலிருக்கு தொலைக்காட்சிப்பெட்டியோ அல்லது வானொலிப் பெட்டியோ சீற்றம் கொள்வது ஒரு உதாரணம்.

ஹெடி லமர்

கருப்பு வெள்ளை காலத்து ஹாலிவுட் நமிதாவும், பொறியாளருமான ஹெடி லமர், முக்கியத்துவம் வாய்ந்த spread spectrum தொழில்நுட்பத்தை தன் பக்கத்து வீட்டு நண்பருடன் ஆராய்ச்சி செய்து (தொழில்நுட்பத்தை :D), கண்டுபிடித்ததின் மூலம் கூடுதல் கவர்ச்சி சேர்த்து வடமில்லா வலையமைப்பின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது :D.

பி.கு: ஹெடி லமர் ரசிகர்கள் விருப்பத்தினைப் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தனிப்பதிவு போடப்படும் என்பதை ஜொள்ளிக் கொள்வதில் சுடுதண்ணி பெருமகிழ்ச்சியடைகிறது.

- தொடரும்...

17 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அசத்தல்!!!!!!
இந்த தொடரை பற்றி சொன்னேன்.

ஆமா, அடுத்த தொடர் ஹாலிவுட் நமீதா
பத்தியா :))

- யெஸ்.பாலபாரதி said...

பதிவு ஆர்வத்தை தூண்டுகிறது.

டெக்னிக்கல் புலி@சிங்கம்@கரடி.. ஏதோவொரு காட்டு விலங்குன்னு வச்சுக்கலாம்.. சுடுதண்ணிக்கு ஜெ! :))

- யெஸ்.பாலபாரதி said...

//கருப்பு வெள்ளை காலத்து ஹாலிவுட் நமிதாவும், பொறியாளருமான ஹெடி லமர்//

தல...எங்களுக்கு ஆயாக்கள் பற்றி செய்தி இன்னாத்துக்கு.. புதுசப்பத்தி எதுனாச்சும் எழுதுங்கய்யா..

ஜோதிஜி said...

தன் பக்கத்து வீட்டு நண்பருடன் ஆராய்ச்சி செய்து (தொழில்நுட்பத்தை :D), கண்டுபிடித்ததின் மூலம் கூடுதல் கவர்ச்சி சேர்த்து தடமில்லா வலையமைப்பின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது :D.


ஷங்கர் இயக்கிய படங்களில் உள்ளே ஒரு அர்த்தம் இருக்கும். லஞ்சம், ஜாதிப்பிரச்சனை போன்றவை. ஆனால் அவர் காட்டும் மசாலாவில் மொத்தமும் மறந்து வெளியே வரும் போது மச்சம் பார்க்க வந்தீகளா? என்று முடிந்து விடும்.

ஏறக்குறைய உங்கள் எழுத்து விசயமே தெரியாதவர்கள் கூட புரிநது கொள்ளக்கூடியதாக இருந்தாலும் இந்த ஜொள்ளி திசை திருப்பி விடுமோ? என்று யோசிக்க வேண்டியதாய் உள்ளது?

பார்த்து ஜொள்ளுங்க?

அகல்விளக்கு said...

வாவ்.......

சூப்பர் தல....

அடுத்த மேட்டர ஜொள்ளுங்க தல......

= YoYo = said...

தல
சுடு தண்ணி
கொதிக்குது

அடுத்த
பதிவுல
ஹெடி லமர்
ஃபுல் சைஸ் போட்டோ
இருந்தா போடுங்க தல
நமிதாவயும் ஹெடியயும் ஒப்பிட்டு பார்ப்போம்

= YoYo = said...

தமிழ் நாட்ல
ஸ்பென்சர் தவிர
வேறு எங்கெல்லாம்
இந்த தடமில்லா வலை யை
ஓ.சி யா
கொடுக்குராங்க
தல

puduvaisiva said...

"பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு அமைச்சர், பல்லாயிரம் கோடி அல்வா, வீட்டு முற்றத்துக்குள் பனித்து, இனித்து ஊத்தி மூடப்பட்ட கதைகள்"

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

இதையும் மீறி 2020 இந்தியா வல்லரசாக ஆகும் நம்ப கலாம் அண்ணாச்சி பகல் கனவு கானுங்கனு சரியாதான் சொல்லி இருக்காரு.


ஹெடி லமர் பற்றி எழுதுங்க I.A.S. தேர்வுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

:-))

சென்ஷி said...

:)

உபயோகமான பல தகவல்கள் தலைவரே! காத்திருக்கிறோம் ஹாலிவுட் நமீதாவின் பதிவிற்கும்...

Unknown said...

சுடுதண்ணி சிக்கரம அடுத்த பதிவ போடுப்பா

Balakumar Vijayaraman said...

சுவாரஸ்யமான தகவல். தொடருங்க.

சுடுதண்ணி said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா.. கண்டிப்பா :D.

தங்கள் வருகையும், ஊக்கமும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது பாலபாரதி :). அடிக்கடி வாங்க..

//எங்களுக்கு ஆயாக்கள் பற்றி செய்தி இன்னாத்துக்கு//

குழம்பு ருசியா இருக்குமேன்னு தான்ன்ன்... :D

அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி (நலமா?). ஜொள்ளு கட்டுப்படுத்தப்படும் :).

நன்றி நண்பா @ அகல்விளக்கு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யோகி. கண்டிப்பா போட்டுரலாம். பொதுவாக நட்சத்திர விடுதிகள் மற்றும் விமான நிலையத்தில் இருக்கும். காபி ஷாப்களில் இருக்கும். சென்னையைப் பற்றிய அறிவுக் கம்மி :(.. உங்கள் செல்பேசிய/மடிக்கணினிய விரிச்சி வச்சிகிட்டு ஒரு ரவுண்ட் போனீங்கன்னா கண்டுபிடிச்சிரலாம் ;).

உங்கள் IAS தேர்வுக்கு நிச்சயம் உதவப்படும் சிவா தம்பி :). மிக்க நன்றி.

ஊக்கத்திற்கு மிக்க நன்றி சென்ஷி :)

போட்டாச்சு.. @ தங்கசெயபாரதி. மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க.

மிக்க நன்றி பாலகுமார். மகிழ்ச்சி.

KATHIR = RAY said...

Hello adhu Thadamilla Valai alla
Vadamilla Valai

Sarithaane

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு.
கதிர் ரே சொல்வது போல தடம் இல்லா வலை அமைப்பு அல்ல. தடம் என்றால் அடையாளம் அல்லது பாதை.

வடம் இல்லா வலை அல்லது கம்பி இல்லா வலை என்று சொல்லலாம்.

சுடுதண்ணி said...

சரி தான் கதிர் :). சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

மிக்க நன்றி ராம்ஜி, வடம் தான் சரி. தொடர்ந்து வாங்க.

கிரி said...

Wifi ஒரு அற்புதம்.. அதனை பயன்படுத்தும் போது நமக்கு எவ்வளவு வேலையை எளிதாக்குகிறது என்பது ஆச்சர்யப்படுத்தும்.

Jegan said...

"தொழில் மந்தமானதால் மனைமுடைந்து சரக்கடிக்க வந்த இடத்தில், முதலாளிகள் கூட்டுச் சேர்ந்தனர்."

:-)