Saturday, January 2, 2010

இணையமும், பதிவுத் திருட்டுக்களும் - 1


இப்பதிவை எழுதும் எண்ணத்தை விதைத்த நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

பதிவுகள் எந்த வகையினைச் சார்ந்ததாக இருந்தாலும் அதற்கென ஒரு உழைப்புத் தேவைப்படுகிறது, அந்த உழைப்பு தான், தங்கள் பதிவுகள் திருடப்படும்போது துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம் என நம்மைத் துள்ள வைக்கிறது. பரந்து விரிந்த இந்த இணைய உலகில் திருடுவதைத் தடுக்க முடியவே முடியாது. 'ஐயகோ, என் பதிவுகளை அல்லது என் படைப்புகளைத் திருடிவிட்டான்' என்று குமுறுவது கிட்டத்தட்ட கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று நிர்வாணமாய் குளித்துவிட்டு, 'பார்த்துட்டான், பார்த்துட்டான்' என்று கதறுவதற்கு ஒப்பானது. இணையத்தில் உங்கள் படைப்புகளை வெளியிட்ட மறுகணமே அது உங்களுக்குச் சொந்தமில்லை. அவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம், மறுவாரம் உங்கள் மின்னஞ்சலுக்கே 'என்னமா எழுதிருக்கான்யா..' என்று அங்கலாய்த்து பார்வேர்ட் வரலாம். எதையும் தாங்கும் இதயத்துடன் இருப்பது மனதுக்கும், உடலுக்கு நலம்.

அதெல்லாம் முடியாது, 'நான் இணையத்திலும் எழுதுவேன், திருட்டையும் தடுக்கனும்' என்று ஒற்றைக்காலில் அடம்பிடிப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். பதிவுத் திருட்டு இரண்டு வகைப்படும் ஒன்று ஒரு சில மனங்கவர்ந்த இடுகைகளை மட்டும் அள்ளுவது (content theft) அல்லது மொத்தமாக முழுப் பதிவினையும் சுருட்டுவது (site hijacking). திருட்டைத் தடுக்க வழியே இல்லையா?. சில நிரல்கள் மூலம் ctrl c, mouse right click ஆகியவற்றை உங்கள் பதிவைப் பார்வையிடும் போது செயலிழக்க வைக்கலாம், ஆனால் கெட்டிக்காரத் திருடனுக்கு அதெல்லாம் தூசு. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பதிவுகளை உரிய அனுமதியில்லாமலோ அல்லது தளத்தின் உரல் கொடுக்காமலோ பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அறிவிப்புப் பலகையினை வைக்கலாம்.

இப்படி வெறும் அறிவிப்பு வைப்பதற்கு மாற்றாக சில காப்புரிமை சேவை வழங்கும் தளங்கள் உள்ளன. (உதா. www.creativecommons.org, www.copyscape.com, www.www.myfreecopyright.com). அது போன்ற தளங்களில் உங்கள் வசதிற்கேற்ப காப்புரிமை விதிமுறைகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொண்டு, அவற்றின் காப்புரிமைப் படத்தினை உங்கள் பதிவில் வெளியிட்டு, தளத்தின் வருகையாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இது போன்ற சேவைகள் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்புக்கு மட்டுமே. ஒரு வேளைத் திருட்டு நடந்தால், படைப்பின் மீதான உங்கள் உரிமையை நிலைநாட்ட ஒரு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, திருட்டு நடந்தால் யார் பிராது கொடுப்பார்கள்?. நண்பர்கள் வலையில் உலாவும் போது பார்த்துவிட்டு வந்து சொல்லலாம் இல்லையென்றால் நாமாகக் கண்டுபிடித்தாலோ அல்லது அதுவாக கண்ணில்பட்டாலோ தான் உண்டு. www.copyscape.com போன்ற தளங்கள் மூலமும் முயற்சி செய்து பார்க்கலாம்.ஒருவழியாக எங்கேயோ, யாரோ உங்கள் பதிவைத் திருடிவிட்டதைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதிரடி சாகசங்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.

இந்த இடத்தில் தான் பொறுமையாக, அமைதியாக இருக்க வேண்டும். முதலில் பொதுவில் இது குறித்து திருடன், திருடன் என்று சொல்வதைத் தவிர்ப்பது பிரச்சனை மேலும் சிக்கலாவதைத் தடுக்கவும், திருடன் உஷாராகி மறுகணமே திருடப்பட்டப் பதிவை நீக்கிவிட்டு நாம் அவனில்லை என்று நம்மை அம்பேலாக்குவதைத் தடுக்கவும் உதவும். அனேக இணையப் பயனாளர்களுக்கு இவ்வாறு படைப்புகளை வெட்டி, ஒட்டுவது தவறு என்ற விழிப்புணர்வு இருப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

யார் உங்கள் பதிவினைத் தங்களுடையது போன்று வெளியிட்டு இருக்கிறார்களோ அவருடைய தொடர்பு விவரங்களை அறிந்து கொண்டு ஒரு மின்னஞ்சல் மூலம் மிக அமைதியாக சொல்லலாம். பெருவாரியான பதிவுத்திருட்டு சம்பவங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதன் மூலமே தீர்க்கப்பட்டுவிடுகின்றன. அப்படியும் அடங்க மறுக்கும் அஞ்சாநெஞ்சர்களை என்ன செய்வது?. அது குறித்து அடுத்த பகுதியில்....

17 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களின் எளியமையான எழுத்து நடை எனக்கு பிடித்து இருக்கிறது. புரியும்படி இருக்கிறது. நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

தமிழிஷ் ஓட்டுபட்டை இணைக்கவில்லையா நண்பரே.

அண்ணாமலையான் said...

நன்றி....

துளசி கோபால் said...

அருமையான இடுகை.

இதை யாரும் இன்னும் திருடலைன்னு நம்புவோம்:-)

சுடுதண்ணி said...

மிக்க நன்றி சைவகொத்துப்புரோட்டா.. விரைவில் இணைக்கிறேன் :).

நன்றி அண்ணாமலையான் :)

ஊக்கத்துக்கு மிக்க நன்றி துளசி கோபால். நம்பிட்டேன் :D

மகா said...

நன்றி....

சுடுதண்ணி said...

நன்றி மகா. தொடர்ந்து வாருங்கள் :)

ஸ்ரீராம். said...

ஆஹா....இதெல்லாம் வேற நடக்குதாண்ணே... சூதானமா எப்படி அடக்கலாம்னு சொல்லுங்கண்ணே...நல்ல இடத்துல தொடரும் போட்டுடறீங்களே...

mnalin said...

பகுதி -2 எப்போது ?? ஆவலுடன் ....

கண்மணி/kanmani said...

நல்லாச் சொன்னீங்க.நம்ம மொக்கையைத் திருடிப் போட்டு என்ன வாழ்ந்திடப் போறாங்க.
ஏதோ பரிசு போட்டி மேட்டருன்னா பிரச்சனை வரலாம்.
இந்த ரைட் கிளிக் டிசேபில் சுத்த வேஸ்ட்.
காபி ரைட் வாங்கும் அளவு பெரிய சரக்கா நம்மளோடது.
பொழச்சிப் போன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி @ ஸ்ரீராம் :)

விரைவில் நண்பா @ எப்பூடி :)

:))))) @ கண்மணி.. மிக்க நன்றி, தொடர்ந்து வாருங்கள் :)

ஜோதிஜி said...

உங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. சகோதரி கதைத்து உதைத்து விடுவோர்களோ என்று பயமாக இருக்கிறது.

நக்கல் நையாண்டி உண்மை எதார்த்தம் ஆகா......

,,,,,,,,,,,,,, பெருமையை காப்பாற்றிவிட்டீர்கள்?

hayyram said...

gud. continue

regards
ram

www.hayyram.blogspot.com

சுடுதண்ணி said...

உங்க ஆர்வம் ஆபத்துல முடிஞ்சிரப் போகுது :D.. உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி :)

மிக்க நன்றி ஹேராம். தொடர்ந்து வாருங்கள் :)

Muruganandan M.K. said...

பயனுள்ள பதிவு. இணையத்தில் கள்வனை எதிர் கொள்ள மனதிற்கு தெம்பு கொடுக்கிறீர்கள்.

சுடுதண்ணி said...

மிக்க நன்றி மருத்துவரே. தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி :).

கோவை செய்திகள் said...

திரு.சுடுதண்ணி அவர்களுக்கு, தமிழ் மீடியா வில் செய்திகளை பார்த்தேன். அது தங்களுடைய இணையத்தில் இருந்து எடுத்த தகவல் என்று தெரிந்தது கொண்டேன். அந்த செய்திகளை எமது தளத்தில் வெளியிட்டுள்ளோம் (சிறு திருதங்களோடு) தங்களின் வலைப்பூவின் முகவரியோடு. தங்களின் அனுமதி இன்றி வெளியிடுவிட்டோம். தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிருந்தால் உடன் நீக்கி விடுகிறோம். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.