Tuesday, January 19, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 1


மனதுக்கு இதமாக இரவு நேரங்களில் மொட்டை மாடியில் விண்மீன்களும், நிலாச்சோறும் ரசித்திருப்பீர்கள். பகலில் 'நீலவான ஓடையிலோ' அல்லது 'வானம் எனக்கு போதிமரமோ' முணுமுணுத்துக் கொண்டு மேகங்களை வெறித்திருப்பீர்கள். இது போன்ற சுகமான விஷயங்களை மறந்து 24 மணி நேரமும் ஆபத்தை எதிர்பார்த்து ஒரு கூட்டம் கொட்டாவி விடக் கூட மறந்து வானத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும். அவர்கள் யார்?, பயன்படுத்தும் தொழிநுட்பம் என்ன? அதில் உள்ள சவால்கள் குறித்து ஒரு பார்வை.

வான் பாதுகாப்பு என்பது ரேடார் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை வாடகை மிதிவண்டியில் ஊர்சுற்றுவதைப் போல போர் விமானங்களில் பறந்து திரிவது மூலமாகவே நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விமானத்தாக்குதல்கள் தந்த அனுபவத்தினாலும், தனது ஏவுகணைத் தொழில்நுட்பங்களால் தூக்கத்தைக் கெடுத்த ஜெர்மனியாலும் ரேடார் தொழில்நுட்பம் துரிதமாக மேம்படுத்தப்பட்டது. வான் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ரேடார்கள் தேடுவது அதிவேகமாக பயணிக்கும் ஆபத்தான ஏவுகணைகளை. ஏவுகணைகள் என்பது ராக்கெட் தொழிநுட்பத்தின் மூலம் வெடிகுண்டுகளை குறிப்பட்ட இடத்தை நோக்கி ஏவி விடுவது. செயற்கைக்கோள் ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கும் இதற்கும் மிகச்சில வித்தியாசங்கள் மட்டுமே. முன்னது புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்லும் (escape velocity), பின்னது செல்லாது. அந்த வெடிகுண்டுகள் என்பது பச்சைச் சணலில் சுற்றிய மான் மார்க் பட்டாசுகள் முதல் ஆயிரம் கிலோ உள்ள நிஜ அணுகுண்டாகவும் இருக்கலாம். ஏவுகணைகள் தாங்கிச் செல்லும் எடை, பயணிக்கும் தூரம், வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பலவகைப் படும். அவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்தது தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM - Inter continental Ballistic Missile).

இந்த வகை ஏவுகணைகள் தொடுவானப் பகுதியிலிருந்து (horizon) மேலுழும்பிய பிறகு தான் ரேடார் கண்களுக்குத் தட்டுப்படும். அதன் பிறகு நமக்குக் கொடுக்கப்படும் நேரம் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்குள் தாக்குதல் நடக்கும் நாட்டிற்குப் பதில் தாக்குதல் நடத்துவதும், அதனை முறியடிக்கும் எதிர்-ஏவுகணைகளை ஏவுவதும் அல்லது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் சொல்லுவதும் நேயர் விருப்பம். மேற்கண்ட சமாச்சாரங்கள் நடக்கும் இடம் தான் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் (air defense early warning system). முன்னெச்சரிக்கை மையத்தில் 24 மணி நேரமும் ரேடார் வல்லுநர்கள், கட்டுப்பாடு அறை அதிகாரிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலையில் இருப்பார்கள். ரேடார் மூலம் பெறப்படும் வானலைகளைக் காட்சிப் படுத்தும் கணினிகளும், உயர் அலைவரிசை ரேடியோக்களும், நாட்டின் தலைவரோ அல்லது ராணுவத் தளபதியோ எவருக்கு தாக்குதல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறதோ அவருக்கு ஒரு நேரடி இணைப்புக் கொண்ட தொலைபேசியும், மற்ற விமானப்படை மையங்களுக்கு தொடர்புகொள்ளும் வசதிகளும் இருக்கும். பணக்கார நாடுகள் அல்லது எதிரிகள் அதிகமுள்ள நாடுகள் (உ.தா. அமெரிக்கா) ரேடார்களோடு செயற்கைக்கோள்கள் மூலம் மொத்த பூமியையும் எங்காவது வெடி வைக்கிறார்களா என்று உற்றுப் பார்த்து கொண்டிருப்பார்கள்.

இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும்.இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (போர் விமானங்கள்/ஏவுகணைகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது, இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இவற்றை ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்தித் தருவது கணினிகள் மற்றும் மென்பொருட்களின் வேலை.

சரி, ஏவுகணை வருகிறது என்ன செய்வது?. எதிர்-ஏவுகணை (anti ballistic missile) தொழில்நுட்பம் கைவசம் இருந்தால் (உதா. பேட்ரியாட், பிரித்வி) அவற்றை உபயோகப்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பம் கைவரப்பெற்ற நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சைனா, இந்தியா) உலகில் ஐந்து மட்டுமே. மற்றவர்கள் வசதிக்கேற்ப விலைக்கு வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. தாக்க வரும் ஏவுகணையின் அகலாங்கு, நெட்டாங்கு கிடைத்தவுடன், எதிர்-ஏவுகணை ஏவுதளங்களின் அகலாங்கு நெட்டாங்கு மூலம் இரண்டுக்கும் இடையேயான தொலைவு வான்மைல்களில் (nautical miles) கணக்கிடப்பட்டு அவற்றின் பயணப்பாதையில் குறுக்கிடுவதற்கேற்ப எதிர்-ஏவுகணைகள் ஏவப்படவேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, மேற்படி வேலைகள் அனைத்தையும் மிகச் சொற்ப நிமிடங்களில் செய்து முடித்தாக வேண்டும். இத்தகைய தாக்குதலுக்கு இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று தாக்கப்பட்டதற்குப் பின் பதில் தாக்குதல் நடத்துவது அல்லது முன்னெச்சரிக்கைத் தகவல் கிடைத்தவும் தாக்கத் தொடங்குவது (launch on warning and launch on attack).

அணுஆயுதங்கள் இருக்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் முன்னெச்சரிக்கை தகவல் மையங்கள் மிகமிக விழிப்புடன் இருக்கும். அவற்றுக்கு இடையே தாக்குதல் மூண்டால் எதிரியின் ஏவுகணை நம் வீட்டில் இறங்கும் முன் நமது ஏவுகணைப் புறப்படும் வண்ணம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். நாமில்லா விட்டால் எதிரியும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த ஏற்பாடு (Mutual Assured Destruction - MAD).

எந்தெந்த நாடுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கைத் தகவல் மையம் தேவைப்படுகிறது?. கூடவே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு முக்கிய நகரங்களுக்குள் உல்லாச படகுச் சவாரியில் ஆயுததாரிகளை அனுப்பி வைக்கும் அண்டை நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தோடு இருந்தால் அவசியம் தேவை. அவர்கள் அணுஆயுத பலம் பெற்றிருப்பின் கூடுதல் சிறப்பு. இவ்வளவு வசதிகளும் செய்து கண்காணித்தாலும், வான்பகுதி உண்மையாகவே பாதுகாப்பாக இருக்கிறதா ?. இந்த தொழில்நுட்ப வசதிகளின் நம்பகத்தன்மை என்ன? இவை குறித்து அடுத்த பகுதியில்.

13 comments:

Raja Subramaniam said...

interesting

சுடுதண்ணி said...

thx raja :). keep visiting.

சைவகொத்துப்பரோட்டா said...

அன்கேம்பேர் எழுதாத வித்தியாசமான தளம், தொடருங்கள்.

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா :)

பரணீ said...

Excellent..!!

தம்பி.... said...

Super this is what we want

sathishsangkavi.blogspot.com said...

பயனுள்ள பதிவு... இது மாதிரி வித்தியாசமான பகிர்வா கொடுங்க...

வடுவூர் குமார் said...

அங்க‌ங்கு "ந‌க்க‌ல்" தெரிந்தாலும் தெரிந்துகொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் நிறைய‌ கொடுத்திருக்கீங்க‌.

ஜோதிஜி said...

நக்கல் இல்லாவிட்டால் படிப்பவர்களுக்கு விக்கலும் தொடர்ச்சியாக கொட்டாவியும் வந்து விடும்.

கடுமையான உழைப்பு. கிட்டத்தட்ட தாவூ தீர்ந்து போயிருக்கும் உண்மைதானே தமிழாக்க உழைப்பில் தெரியும் அக்கறை. வாழ்த்துகள்.

நீளம் அகலம் என்பதால் சற்று மேலோட்டமாய் தெரிகிறது. ஒரு வேளை தொடரும் என்பதால் இன்னும் நிறைய சரக்கு உண்டு என்று நிணைக்கின்றேன்.

சரித்திர ஆர்வலர்களை விட இங்கு இவருக்கு ஓட்டும் போட்டு விட்டு நகரணும்ன்னு கட்டிப்பிடி வித்ததையை கற்றுவைத்துள்ள உங்கள் விரல்களுக்கு சிந்தனைகளுக்கு லேசா கன்னத்த காட்டுங்க.

இச் இச் இச்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-50-40/5114-2010-01-20-13-25-41

பாராட்டுக்கள் சுடுதண்ணி.. :)

puduvaisiva said...

வணக்கம் சுடுதண்ணி அண்ணே

"ஊனாகி உயிராகி உண்மையுமாய்இன்மையுமாய். கோனாகி யான்எனது என்று அவரவரைக்கூத்தாட்டு. வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. ... - திருவருட்பிரகாச வள்ளலார்."

"வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே" - பாதுகாப்பு உணர்வை அந்த காலத்திலேயே வள்ளலார் பதிவு செய்து உள்ளாரா?

சுடுதண்ணி said...

நன்றி கைப்புள்ள :)

நன்றி பரணீ :)

ஊக்கத்துக்கு மிக்க நன்றி சங்-கவி :)

நன்றி வடுவூர்குமார், தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்கள் பின்னூட்டங்கள் மகிழ்ச்சியைத் தருகிறது :)

ஜோதிஜி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றி :).

மிகவும் மகிழ்ச்சி முத்துலெட்சுமி. தெரிவித்தமைக்கு மிக்க நன்றி :). தொடர்ந்து வாருங்கள்

புதுவை சிவா, பாட்டெல்லாம் கலக்குறீங்க. சித்தர் பாட்டெல்லாம் சுடுதண்ணிக்கு ரொம்ம்ம்ப தூர்ர்ரம். அப்படியும் இருக்கலாம் :D.. தொடர்ந்து வாங்க..

natarajan said...

nice post..
vaitheetheboss