Wednesday, December 2, 2009

மின்னஞ்சல் சொல்லும் ரகசியங்கள் - 1


கிட்டத்தட்ட அஞ்சலகங்களை செயலிழக்க வைக்கும் அளவுக்கு சண்டிகாரைச் சேர்ந்த சபீர் பாட்டியா என்னும் காமென்மேன் தொண்ணூறுகளில் வைத்த சக்திவாய்ந்த வெடிகுண்டு தான் இந்த மின்னஞ்சல். இன்றைக்குக் காலைக்கடன்களைப் போல தினசரி வழக்கங்களில் ஒன்றாகிவிட்ட மின்னஞ்சல் நமக்குத் தெரிவிக்கும் தகவல்கள் என்னென்ன?. அனுப்புநர், பெறுநர் மற்றும் தகவல் என்று உங்கள் மனதிற்குள் பதில் சொன்னால், உங்களுக்காகத் தான் இப்பதிவு.

ஒவ்வொரு மின்னஞ்சலிலும் அத்தகவலின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் சேர்த்தே அனுப்பி வைக்கப்படுகிறது, ஆனால் பொதுப்பயன்பாட்டுக்கு அவை அவசியமல்லாததால் நம் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால் நம்ப முடியாத அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களை மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு ஊர்ஜிதப்படுத்தும் சூழ்நிலைகளில் முறையாக ஆய்வு செய்யாமல் திரைக்காட்சி (screenshot) அல்லது வெறும் மின்ன்ஞ்சல்களைப் படித்து முடிவுக்கு வராமல் இருப்பது மிக்க நன்று. மிக அதிமுக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்பெற்றால் அதையும் சோதித்து உறுதிப்படுத்தி கொண்டால் 'முன் ஜாக்கிரதை முனிசாமி' விருதினை இலகுவாகப் பெறலாம்.

உங்களுக்கு ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய, வடஅமெரிக்க, தென் அமெரிக்க, ஆஸ்திரேலிய சமயத்தில் அண்டார்டிக்க நண்பர்கள் கூட உங்களுக்கு சுக்கிரன் சுத்தி சுத்தி அடித்து விட்டதாகவும் அதை அள்ளிச் சுமக்க மிகவும் சிரமப்படுவதால் கொஞ்சமாக பணம் அனுப்ப சொல்லி வரும் மோசடி மின்னஞ்சல்கள் மிகப் பிரபலம் மற்றும் பழங்கஞ்சியான செய்தியும் கூட. இம்மாதிரி மின்னஞ்சல்களைக் கூர்ந்து நோக்கினால் சமயத்தில் hotmail மற்றும் yahoo ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து கூட உங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு, டவுசர் கிழிஞ்சிருக்கு உடனே தைப்பதற்கு அணுகவும் என்று கூவியிருப்பார்கள். அனுப்புநர் முகவரி மிகவும் நம்பத்தகுந்தது போல இருக்கும். உ.தா: admin@yahoo.com, customerservice@hotmail.com.


சில சமயங்களில் பிரபலங்களுக்கு 'வேட்டு வைக்கப் போறோம்' வகையான மின்னஞ்சல்களை சிலர் சில்மிஷமாக அனுப்பும் சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மறுநாளே இணையக் குற்றவியல் துறையினர் குற்றவாளியைத் தேடி நேமத்தான்பட்டியில் வலைவீசிக் கொண்டிருப்பார்கள். எப்படி மின்னஞ்சலில் நேமத்தான்பட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள்?. மின்னஞ்சல் மாயாஜாலங்களிலிருந்து எப்படி தப்பிப்பது, மின்னஞ்சல்களின் மூலங்களை எப்படி ஆய்வு செய்வது போன்றவை குறித்து, இப்பொழுது உறக்கம் உருமி அடிப்பதால் அடுத்த பகுதியில் விரிவாகக் காண்போம்.
11 comments:

நிகழ்காலத்தில்... said...

தொடருங்கள்

வாழ்த்துகள்

சுடுதண்ணி said...

மிக்க நன்றி நிகழ்காலத்தில்.

அகல்விளக்கு said...

அடடா.... நாளைக்கு தூங்குறதுக்கு முன்னாடி எழுதுங்க தல...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..

சட்டுனு நிப்பாட்டிட்டீங்களே தல...

எம்.எம்.அப்துல்லா said...

//நேமத்தான்பட்டியில் வலைவீசிக் கொண்டிருப்பார்கள் //

அண்ணே நீங்க புதுக்கோட்டையா??

M.G.ரவிக்குமார்™..., said...

உங்கள் நடை அசத்துகிறது பாஸ்!........மேலும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறேன்!......

சுடுதண்ணி said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அப்துல்லா. எந்த புதுக்கோட்டைய சொல்றீங்க?? தொண்டைமான் புதுக்கோட்டையா?? :D.. பக்கத்துல தான் ;).

பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நேசன் :). தொடர்ந்து வாருங்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

புதுக்கோட்டைன்னாலே தொண்டைமான் புதுக்கோட்டைதான் :)

மற்ற புதுக்கோட்டையெல்லாம் நாகமலை புதுக்கோட்டை, ஆர்.புதுக்கோட்டை, டி.புதுக்கோட்டை என அடைமொழியோடு இருக்கும் :)

ஜோதிஜி said...

தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களை இத்தனை குசும்புத்தனமாக சுவாரஸ்மாக படிக்க வைத்தது நீங்க தான். பின்னூட்டத்திலும் இத்தனை அலும்பு ஆகாது.
மிக சிறப்பான நடை. அதுவும் இதை மிகவும் ரசித்து வாய்விட்டு சிரித்தேன். இருக்கும் இடம் சிரிப்பதற்கு பஞ்சமான ஊர்.

உங்களுக்கு லாட்டரி அடிச்சிருக்கு, டவுசர் கிழிஞ்சிருக்கு உடனே தைப்பதற்கு அணுகவும் என்று கூவியிருப்பார்கள்

சுடுதண்ணி said...

மிக்க நன்றி ஜோதிஜி.. உங்கள் ஊக்கமும், பாராட்டும் தெம்பூட்டுகிறது :)

Anonymous said...

///இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.////

தோழர் சுடுதண்ணி அவர்களே நலமா?

கொஞ்சம் சுட சுட அந்த வழிமுறைய சொல்லுங்களேன்.

அபூமுர்ஸிதா said...

உங்கள் நடைமுறை மிகவும் அருமை. தொடருங்கள். ///இணைய மென்பொருள் நிரல்கள் (scripts) எழுதுவது குறித்து அரிச்சுவடி தெரிந்தால் போதும், ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு யார் அனுப்புவது போல் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் பதிவைப் பாராட்டி விகடனோ, குமுதமோ அல்லது யாரேனும் ஒரு பிரபலமோ மின்னஞ்சல் அனுப்புவது போல சும்மாக்காச்சுக்கும் அனுப்புவது மிகமிகச் சுலபம். எப்படி என்று பெஞ்ச் மேல் ஏறி நின்று கேட்பவர்கள் பின்னூட்டங்களில் தெரிவித்தால் தனிப்பதிவாக போட சுடுதண்ணி தயாராக இருப்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//// நீங்கள் சொல்லியது போல் நான் பெஞ் மீது ஏறி நின்று கேட்கவில்லை; உட்கார்ந்து இருந்து தான் கேட்கிறேன். அந்த தகவலைக் கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன். அன்புடன்,தோழன் அபூமுர்ஸிதா.