Monday, December 7, 2009

மர்மங்கள் விளக்கும் மாயக்கருவி : கருப்புப்பெட்டி - 1

இப்பதிவை எழுதும் எண்ணத்தை விதைத்த நண்பர் சென்ஷி அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

சில மாதங்களுக்கு முன்பு கொடியில் போட்டிருந்த பாவாடையைக் காணோம் என்பதைப் போல, விரைவில் வல்லரசாக காம்ப்ளான் குடித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் ஒரு ஹெலிகாப்டரைக் காணோம் என்று ஊடகங்களில் அலறியதை மறந்திருக்க மாட்டீர்கள். விமானப்படையும் தரைப்படையும் சேர்ந்து தேடுகிறார்கள், விரைவில் படம் பிடித்து போட்டு விடலாம் என்று காத்திருந்து காத்திருந்து காய்ந்து போன செய்தி ஊடகங்கள் அவர்களே படம் வரைந்து பாகம் குறித்து விளையாடிய சம்பவங்கள் யாவும் கண்டிருப்பீர்கள். கடைசியில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் எப்படி விபத்து நடந்திருக்கும் என்பது மர்மமாகவே இருந்தது, யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. காரணம் பயணிகள், விமானிகள் யாரும் உயிர்தப்பவில்லை. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நொடியும் அந்த ஹெலிகாப்டரில் என்ன நடந்தது, எந்தெந்த வரிசைப்படி பாகங்கள் செயலிழந்தன, விபத்து நடக்கும் அந்த நொடி வரை ஹெலிகாப்டருக்குள் என்னென்ன பேசினார்கள் என்பது வரைக்கும் தகவல்கள் வெளிவந்தது. எப்படி இது சாத்தியம் என்று கேள்வி எழுகிறதா, அக்கேள்விக்கு பதில் தான் 'கருப்புப்பெட்டி'.

கருப்புப்பெட்டி (Blackbox) என்பது விமானங்களின் தொழில்நுட்ப நிலைகளைப் பதிவு செய்ய விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு தகவல் சேமிப்பு கருவி. விமானத்தில் கருப்புப்பெட்டி பொருத்துவதென்பது ஓவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக முயற்சிக்கப் பட்டு மேம்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 70 வருடங்களுக்கு முன்னால் பிரான்ஸில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதே இதன் ஆரம்பம். வரலாறு ரொம்ப சொன்னா கொட்டாவி வரும் ஆபத்திருப்பதால், நாம் கருப்புப் பெட்டிக்குள் நுழைவோம்.


கருப்புப்பெட்டி ஒரு சுவாரஸ்யமான கருவி, அதன் குணாதிசயங்கள் ஆச்சர்யமானவை. 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 60 நிமிடங்களுக்கு மேலாகவும், அழுத்தம் மிகுந்த கடல் நீரில் நான்கு வாரம் வரைக்கும், சுமார் முப்பாதாயிரம் அடி உயரத்தில் இருந்து தரையில் வீழ்ந்தாலும், 2000 கிலோ வரையிலான சுமையைத் தாங்கினாலும் எந்த சேதாரமும் இல்லாமல் அமைதியாய் இருக்கும். எப்படி? முதலில் அலுமினியம், பின்னர் உலர் சிலிகா, அதன் பின்னர் டைட்டானியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு மிக மிக உறுதியான கொள்கலனுக்குள் வைக்கப் பட்டிருப்பது தான் எதையும் தாங்கும் இதயமாக கருப்புப்பெட்டி இருக்கக் காரணம். இவ்வளவு பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்டாலும், எல்லா சம்பவங்களிலும் கருப்புப்பெட்டி சேதமின்றி கிடைப்பதில்லை. இந்தக் கருப்புப்பெட்டி கருப்பு வண்ணத்தில இருக்காது, சிவப்பு அல்லது அடர்மஞ்சள் வண்ணத்தில் இரவிலும், பகலிலும், தண்ணீருக்கடியிலும் எளிதில் அடையாளங்காணும் வகையில் இருக்கும். இருந்தாலும் ஏன் கருப்புப்பெட்டி என்று பெயர் வந்தது?, ஆரம்ப காலத்தில் photosensors (தமிழில்?) பயன்படுத்தித் தான் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவந்தது, அதனால் ஒளி ஊடுருவ இயலாத வகையில் பெட்டி வடிவமைக்கப்பட்டதால் blackbox கருப்புப்பெட்டி என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் photosensors நீக்கப்பட்டு மின்காந்த நாடாக்கள் (Electromagnetic tapes) அதன் பின் மெமரி போர்டுகளாக மாற்றம் பெற்றது.

கருப்புபெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும், சில சமயங்களின் மேற்கூரையிலும் பொருத்தப்படுவதுண்டு. காரணம் அந்த பகுதிகளில் தான் விபத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் குறைந்து இருக்கும், மேலும் அனேகமாக கடைசியாக விபத்தினால் பாதிக்கப்பட போகும் இடமாகவும் இருக்கும். கருப்புப்பெட்டியில் இரண்டு பகுதிகள் உண்டு, விமானிகளின் கட்டுப்பாட்டு அறையில் எழும் அனைத்து ஒலிகளையும் பதிவு செய்ய cockpit voice recorder (CVR) மற்றும் விமானத்தின் பறக்கும் உயரம் உட்பட இயந்திர பாகங்களின் செயல்பாட்டு நிலைமை அனைத்தையும் பதிவு செய்ய flight data recorder (FDR). பெருவாரியான விபத்துகள் அத்துவானக் காடுகளிலோ அல்லது கடல்பகுதியிலேயோ தான் நடைபெறுகின்றன. விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன் மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்தாலும் அதைவிட பரபரப்பாக விசாரணை அதிகாரிகளின் கருப்புப்பெட்டித் தேடல் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.


FDR மற்றும் CVR தவிர beacon எனப்படும் ultrasonic ஒலிக்கருவியும் கருப்புப்பெட்டியில் இருக்கும். ஒருவேளை விபத்துகள் கடல்பகுதியில் நடந்தால், தண்ணீரில் மூழ்கிய மறுகணம் ஒவ்வொரு நொடியும் beacon கருவி ultrasonic ஒலியலைகளை சுமார் 14000 அடி வரை பரப்பும். தேடல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் sonar கருவிகள் மூலம் ஒலியலைகளை இனம் கண்டு கடலுக்கடியில் இருக்கும் கருப்புப்பெட்டியைக் கண்டுபிடிப்பார்கள். இந்த beacon கருவி கருப்புப்பெட்டியை மட்டுமின்றி விமான விபத்து நடந்த கடல்பகுதியையும் கண்டுபிடிக்க உதவி செய்து, அதன் மூலம் யாரேனும் தப்பிப்பிழைத்திருந்தால் அவர்களையும் கூடுமானவரை விரைவில் மீட்டெடுக்க உதவி புரிகிறது.

விபத்துக்கான சரியான காரணங்கள் பற்றியும், அதனைத் தவிர்ப்பதற்கான விமானிகளின் கடைசி நிமிட போராட்டங்கள், அவர்கள் கையாண்ட உத்திகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமின்றி எதிர்காலத்தில் அது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க விமானிகளுக்கு சிறப்புப் பயிற்சி அல்லது விமான வடிவமைப்பில் அதிக நவீனப்படுத்தப்பட்ட மாற்றம் ஆகியவற்றின் தேவை குறித்து முடிவெடுக்கவும் கருப்புப்பெட்டியே மூலாதாரம்.

கருப்புப்பெட்டி குறித்து ஓரளவு அறிமுகம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த பகுதியில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்களை எவ்வாறு மீட்டெடுப்பது, மீட்டெடுக்க்ப்படும் பணியில் உள்ள சிக்கல்கள், எந்தெந்த நாடுகளில் கருப்புப்பெட்டித் தகவல்களைப் படிக்கும் வசதி உள்ளது ஆகியவைக் குறித்துப் பார்க்கலாம்.

13 comments:

ஜோதிஜி said...

என்ன போகிற போக்கைப் பார்த்தால் சுஜாதா உயிரோடு வந்து என்னோட இடத்தை பறிச்சுடாதேப்பான்னு சொல்வார் போல. ரொம்ப அற்புதம். முழுமையாக புரிந்து கொண்டேன்.

Vilvaraja Prashanthan said...

நல்ல பதிவு ...
http://prashanthanphotos.blogspot.com/

சென்ஷி said...

புதிய புதிய விவரங்களை சோர்வில்லாமல் படிக்கும் வகையில் எழுதும் சுவாரஸ்யமான எழுத்து உங்களுக்கு எளிதில் கைக்கூடுகிறது.

அடுத்த பாகத்திற்காய் காத்திருப்போர் பட்டியலில் நானும்..

Mohan said...

நல்ல பதிவுங்க! தொடருங்க!! வாழ்த்துக்கள்!!!

Cable சங்கர் said...

நல்லா எழுதியிருக்கீங்க.. சுடு தண்ணி.. தொடரட்டும் உங்கள் பணி..

அறிவிலி said...

அசத்தல். தொடருங்கள்.

ஷாகுல் said...

சுவாரசியமா எழுதுறீங்க. தொடர்ந்து எழுதுங்க.

சுடுதண்ணி said...

உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி ஜோதிஜி. தொடர்ந்து வாருங்கள். (சுஜாதா ரொம்ப்ப ஜாஸ்தி :D).

மிக்க நன்றி பிரசாந்தன்.

பாராட்டுக்கு நன்றி சென்ஷி.. அடுத்த பகுதி விரைவில் :)

சுடுதண்ணி said...

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டங்களுக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும். தொடர்ந்து வாருங்கள் @ மோகன், சங்கர், அறிவிலி, ஷாகுல் :)

சுடுதண்ணி said...

வாக்களித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி! :)

Chitra said...

இந்த மாதிரி எங்க சயின்ஸ் டீச்சர் interesting ஆ சொல்லி கொடுத்து இருந்தா............... நல்லா இருக்குங்க, உங்க அறிவு பூர்வமான தகவல்களும் எழுத்து நடையும்.

Killivalavan said...

எளிதில் புரியும்படியான எழுத்து நடை

சுடுதண்ணி said...

மிக்க நன்றி சித்ரா. தொடர்ந்து வாருங்கள் :)

ஊக்கத்துக்கு மிக்க நன்றி கிள்ளிவளவன் :)