Sunday, November 8, 2009

ரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் தீவிரவாதிகள் - ஸ்டெகனோக்ராபி ஒர் அறிமுகம் - 1சராசரியாக ஒரு நாளில் நாம் வலையில் உலாவும் போது எண்ணிலடங்காப் புகைப்படங்களைக் காண்கிறோம். நடிகைகளின் கவர்ச்சிப்படங்கள், வால்பேப்பர்கள், ஓவியங்கள், செய்திப்புகைப்படங்கள் இப்படி எத்தனையோ. அவற்றுள் எதேனும் ஒரு படம் தன்னுள் "நவம்பர் 26, மும்பை, தாக்கு" என்பது போன்ற ரகசியச் செய்தியை மறைத்து வைத்திருக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஸ்டெகனோக்ராபி பற்றித் தெரிந்திருந்தால் உங்களுக்கு இது சாத்தியமே என்று புரியும்.

ஸ்டெகனோக்ராபின்னா என்னம்மா?? ஹமாமா?? இல்லை. ஒரு தகவலுக்குள் இன்னொரு தகவலை மறைத்து வைக்கும் கலைக்குப் பெயர் தான் ஸ்டெக்னோக்ராபி. சுருக்கமாகச் சொன்னால் எழுத்துக்களை புகைப்படத்திலோ, ஒலி-ஒளி கோப்புகளிலோ மறைத்து வைக்கும் முறை. அனேகம் பேருக்கு 'ரோஜா' திரைப்படத்தில் அரவிந்த்சுவாமி எதற்கு காஷ்மீர் செல்வார் என்று தெரிந்திருக்கும். தீவரவாதிகளின் சங்கேதக் குறியீட்டுத் தகவல் (encrypted message) ஒன்றிலிருந்து தகவலைப் பிரித்தறிந்து சொல்வதற்காகச் செல்வார். இப்படி நம்ம் மணிரத்னம் படம் எடுக்குற அளவுக்கு அந்த முறை ஊருக்கு அம்பலமான, ஹைதர் காலத்துத் தொழில்நுட்பம். சம்பந்தமே இல்லாமல் இருவர் 'இன்னைக்கு அமாவாசை', 'எனக்கு நிலா தெரியுது' அப்படின்னு பேசுவதைக் கேட்டால் சின்னப்பிள்ளை கூட் ஏதோ வில்லங்கமான சமாச்சாரம் நடக்கிறது என்பதை ஊகித்துவிடும். திருடன் போலீஸ் விளையாட்டில் எப்போதுமே முன்னோக்கி சிந்திப்பது திருடன் தானே, அப்படி அவர்கள் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்த முறை தான் ஸ்டெகனோக்ராபி.ஸ்டெகனோக்ராபி என்பது ஆதிகாலந் தொட்டே இருந்தி வந்திருக்கிறது. ஐரோப்பிய மன்னன் ஒருவன் மிக நம்பிக்கைக்குரிய தன் அடிமைக்கு மொட்டை அடித்து அதில் ரகசியத்தகவலை பச்சை குத்தி, முடி வளரும் வரைக் காத்திருந்து பின் தகவல் சேர வேண்டிய இடத்திற்கு அவனை அனுப்பியது தான் கிட்டத்தட்ட முதல் நிலை ஸ்டெகனோக்ராபி. அப்புறம் அவனுக்கு மறுபடி மொட்டை அடித்துத் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். இதில் கால விரயம் அதிகம் இருந்தாலும் பாதுகாப்பு அதைவிட அதிகம். பின்னாளில் ஒவ்வொரு படியாக முன்னேறி புகைப்படங்களில் மைக்ரோ அளவில் புள்ளிகள் வைத்து இரண்டாம் உலகப் போரின் போது உளவாளிகளால் ரகசியத்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. காலம் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு பயணித்த போது கணினியும், இணையமும் வந்தது. ஸ்டெகனோக்ராபியும் வளர்ந்தது.

இணையத்தில் உலாவும் புகைப்படங்கள், ஒலி-ஒளி கோப்புகள் அனைத்திலும் ரகசியத் தகவல்கள் மறைத்து அனுப்பி வைக்க ஸ்டெகனோக்ராபி மென்பொருட்கள் கணக்கில்லாமல் கிடைக்கின்றன. இருந்தாலும் புகைப்படங்களே அதிகமாக உபயோகப்படுத்தப் படுகின்றன, காரணம் புகைப்படக் கோப்புகள் அளவில் சிறிது, வலையேற்றம்/தரவிறக்கம் எளிது. மேலும் புகைப்படங்களின் எண்ணிக்கை இணையத்தில் ஒலி-ஒளி கோப்புகளை விட அநியாயத்துக்கு அதிகம். எவ்வளவோ நுணுக்கமான சங்கேதத் தகவல்களையெல்லாம் எல்லாம் கண்டுபிடித்து விடுகிறார்கள், இதைக் கண்டுபிடிக்க முடியாதா? ஸ்டெகனோக்ராபி அப்ப்டி என்ன உசத்தி?. இதன் சூட்சுமம் இவர்கள் உபயோகப்படுத்தும் சங்கேத மொழிக்கான தொழில்நுட்பத்தில் (encrypting algorithm) இல்லை. உபயோகப்படுத்தும் களத்தில் தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தை எடுத்து இதில் ஒரு தகவல் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால் நிபுணர்கள் நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்து விட்டு காபி சாப்பிடச் சென்று விடுவார்கள். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'ன்ற மாதிரி இத்தனை கோடி இணையத்தளங்களில் எத்தனை கோடிப் புகைப்படங்கள், ஒலி-ஒளி கோப்புகள். இவற்றில் எதை விடுவது, எதைத் தொடுவது என்று யோசிக்கும் அந்த கணத்தில் தான் ரகசியங்கள் பத்திரமாகப் பயணமாகிக் கொண்டு இருக்கின்றன.இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்முறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம். முதலில் ஊடகக் கோப்புகள் எனப்படும் புகைப்படங்கள்,ஒலி-ஒளிக் கோப்புகள் வெவ்வேறு முறையில் கட்டமைக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு புகைப்படங்கள் BMP,JPEG போன்ற முறைகளிலும், ஒலி-ஒளிக் கோப்புகள் WAV,MP3, mpeg,avi இப்படி பல வகைகளில் வெவ்வேறு வடிவமைப்பில் சேமிக்கப்படிகின்றது. முதலில் எந்த வகை கோப்புகளை உபயோகிக்கப் போகிறோம் என்று தேர்வு செய்ய வேண்டும், பின் அந்த வகைக் கோப்புகளின் உள் கட்டமைப்பைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு விளக்கத்துக்கு BMP கோப்புகளை எடுத்துக் கொள்வோம். BMP கோப்புகள் File header, Bitmap Information, color palette மற்றும் pixel data போன்ற பகுதிகளை உள்ளடக்கி இருக்கும். இதனை ஒவ்வொரு பைட் (byte) ஆக ஒரு நிரல் கொண்டு வாசித்துக் கோப்பின் தன்மைகள் குறித்து அறிந்து கொண்டு, பின் pixel data பகுதியில் ஒவ்வொரு pixel இன் வண்ண மூலங்கள் சிவப்பு, பச்சை, ஊதா நிறக்கூட்டில் எண்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த எண்களைத் தான் ரகசியத் தகவல்களின் எழுத்துக்களுக்கு ஏற்ப மாற்றப் போகிறோம்.

தொடர்ந்து பல pixelகளை மாற்றினால், இறுதியில் புகைப்படத்தில் அந்த இடம் மட்டும் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்து சந்தேகம் வரலாம் என்பதால் ஆங்காங்கே பரவலாக எழுத்துக்கள் விதைக்கப்படும். ஆகையால் இறுதியில் மொத்தமாக ரகசியச் செய்தி தாங்கியிருக்கும் அந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது கண்களுக்கு ஆங்காங்கே மாறியிருக்கும் pixel வண்ணங்கள் சட்டென புலப்படாது.

ஓரளவுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்பொழுது படத்திலிருந்து திருப்பி செய்தியை மீட்டெடுக்க எந்தெந்த pixelகளில் நீங்கள் எழுத்துக்களை விதைத்து இருக்கிறீர்கள் என்பதை அந்த மென்பொருளில் இருக்கும் நிரல் தீர்மானம் செய்யும். உதாரணத்திற்கு நீங்கள் எந்த செய்தி அனுப்பினாலும், மென்பொருள் புகைப்படத்தில் முதல் pixelலில் ஒரு எண்ணைப் பதிவு செய்யும், 16 என்று வைத்துக் கொள்வோம். இதில் 16 என்பது ஓவ்வொரு 16வது pixelல்லிலும் ஒரு எழுத்து விதைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். உங்களிடம் இருக்கும் அதே மென்பொருள் செய்தி சேரும் இடத்திலும் இருக்க வேண்டும். அந்த மென்பொருள் மூலம் படத்தை திறக்கும் போது ஒவ்வொரு 16வது pixelலில் இருக்கு எழுத்தையும் பிரித்தெடுத்து இணைத்து செய்தியாக வழங்கி விடும்.

மேற்கூறிய முறை ஒரு உதாரணம் மட்டுமே. இந்த எழுத்து விதைக்கும் விதம் (algorithm) ஒவ்வொரு மென்பொருளுக்கும் மாறுபடும். கொஞ்சம் நிரல் எழுதத் தெரிந்தால் நாமே தேவைக்கேற்ப மென்பொருள் தயார் செய்து கொள்ளக் கூட முடியும் :D. இருந்தாலும் இணையத்தில் ஏகப்பட்ட ஸ்டெகனோக்ராபி மென்பொருட்கள் கிடைக்கின்றன.பெரும்பாலும் இது தீவிரவாதச் செயல்களுக்கும், இராணுவ தொடர்புகளுக்கும் பயன்படுத்தப் படுவதாக ஊடகங்களில் பலமுறை சொல்லப்பட்டு வந்தாலும், அல்-குவைதாவின் விருப்ப முறை தகவல் தொடர்பு இது தான் என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை செப்டெம்பர் 11 தாக்குதல் நடந்த பிறகு தெரிவித்த போது ஸ்டெக்னோக்ராபி கூடுதல் கவனம் பெற்றது. நாம் கூட நண்பிகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ புகைப்படத்தின் மூலம் ரக்சியமாய்ப் பேசலாம். பின்னாளில் அப்படங்கள் வேறு யார் பார்வைக்குச் சென்றாலும் அவர்கள் மறைந்திருக்கும் செய்தியை அறிந்து கொள்வது மிக அரிது ;). அவ்வாறு இணையத்தில் கிடைக்கும் மென்பொருள் ஒன்றின் மூலம் மேலே இருக்கும் நமீதாவின் படத்தைப் பயன்படுத்தி எப்படி ரகசிய தகவலைப் பறிமாறிக் கொள்ளலாம் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

8 comments:

அகல்விளக்கு said...

இதற்கும் நமிதாவிற்கும் என்ன சம்பந்தம்.
நமிதாவை தீவிரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடும் நண்பரை வன்மையாக கண்டிக்கிறேன்

- செயலாளர்,
நமீதா முன்னேற்றக் கழகம்,
கேரளா கிளை.

he he he

சுடுதண்ணி said...

மகா 'கனம்' பொருந்திய நமிதா :D 'முன்'னேற்றக் கழகச் செயலாளர் அவர்கள் சமூகத்துக்கு,

பதிவின் வறட்சித் தன்மை காரணமாக, பசுமையாக்கும் முயற்சியின் பொருட்டே நமிதாவின் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் :p.

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா :)

®theep said...

As U indicated in one of ur other Post Im a Leecher. but luckily turned me this post turned me seeder bcos this post having a less comments..

im all the from sri lanka. this is so useful blog and a fabulous way of telling technical matters
keep doing. (I have seen so many blogs only wasting time with useless LOLs)
U r ther with ur loneliness or Exclusiveness

®theep said...

One more thing that many informations those r only available in English are not usually taken to tamil by anyone. it better if anyone do that. bcos a million people hey r very eager to know these type of stuffs who can only understand tamil even they dont know these still available

I hope u do so... my wishes

சுடுதண்ணி said...

®theep, welcome to the seeders' club :)

thx a lot for ur encouragement and support. I will try do my best. keep visiting :)

DR said...

என்னா வில்லத்தனம் ?

சுடுதண்ணி said...

நன்றி தினேஷ் :)

ஜோதிஜி said...

மக்கள் படித்து விட்டு பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடி விடக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு இது போன்ற விசயங்களை மென்மையாக சொல்லும் பாங்கு பாராட்டுக்குரியது.

அகல்விளக்கு உங்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். படித்தவுடன் நான் எழுத நினைத்ததை எப்படி ஐயா புரிந்தும் எழுதினீர்கள்?